அலை 13 (1)

            மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து அங்கு இருந்து அமெரிக்காவில் ஆதவன் தங்கி இருக்கும் இடத்திற்கும் வர முழுதாக இரண்டரை நாட்கள் ஆகிவிட்டது. நேரடியாக விமானமும் கிடையாது… மிகவும் அலுத்துப் போயிருந்தான். இந்தியாவில் அது இரவு நேரம்.. உறங்குபவர்களை தொந்திரவு செய்ய வேண்டாம் என முடிவெடுத்தவன் அவனும் பயணக் களைப்பு நீங்க ஓய்வு எடுத்த பின் வீட்டிற்கு அழைக்கலாம் என நினைத்துப் படுக்கையில் படுத்துக் கொண்டான்.

அவன் கிளம்புகையில் காரருகே ஓடி வந்து’அண்ணா’ என அழைத்த தங்கையை தோள் சாய்த்து நின்றவனுக்கும் கண்கள் கலங்கி சிவந்து போயிற்று.” அடிக்கடி ஃபோன் பண்ணுணா … ” என தேம்பியவளுக்கு பதில் சொல்லியவன் , மீனாட்சி இருக்கும் போது இப்படி அவன் படிக்க வெளியூர் கிளம்பும்போதும்  அழுபவளை அம்மா கைகளில் பிடித்துக் கொடுத்து வருவான். ‘ ஆனால் இன்று.. ‘ என மீனாட்சியை நினைத்தவனுக்கும் கண்ணோரம் நீர் துளிவந்து விட்டது.

திடீரென தாமரை படியிறங்கி ஓடியதும் திடுக்கிட்ட தில்லை… சுதாரித்து தாமரையின் பின்னால் சென்றாள். இப்போது தில்லைக்கு மற்றதெல்லாம் மறந்து போயிற்று  , தாயை இழந்த வளர்ந்த குழந்தைகளாக தான் அண்ணன் தங்கை இருவரும் அவளுக்குத் தோன்றினர். அருகில் சென்று தாமரையைப் பிடித்துக் கொண்டவள் நிமிர்ந்து ஆதவனைப் பார்க்கும் போது தான் அவனது கண்ணிலும் கண்ணீர் துளிகள்…

எப்போதும் தாமரையை மட்டும் தேற்றுபவளுக்கு அன்று அந்த நொடி ஆதவனைக் கண்டு என்ன தோன்றியதோ, தாமரையைப் பிடித்திருந்த ஆதவனின் வலது கரத்தின் மீது தனது கரத்தை வைத்து ,

” நான் பார்த்துக்கிறேன்..” என்றாள். அவனுக்கு வேண்டியதும் அது தானே… கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் மகிழ்ச்சியில் தன் இடது கரத்தை அவள் கரத்தின் மீது வைத்து தட்டிக் கொடுத்து விட்டவனுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை , காரில் உடனே ஏறி விட்டான். அது  அவன் ஏறியதையேப் பார்த்துக் கொண்டிருந்த தில்லையிடம் ,

“ஆறு மாசம் தானே சிஸ்டர் ஆதவ் வந்துடுவான்… வாரேன்” என வாய் வார்த்தை தில்லையிடமும் கண்களின் வார்த்தையாக தாமரையிடமும் கூறிவிட்டு விஜயும் ஏறிக் கொண்டான். அத்தனைப் பேரின் கண்களும் ஆதவனையும் தாமரையையும் மட்டுமே பார்த்திருந்ததால் விஜய் தாமரையை கண்குளிர பார்த்ததும் யாருக்கும் தவறாகப் படவில்லை. அதனாலயே அவனும் தைரியமாக தன்னவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“பச்சை உடை ..” நினைத்துப் பார்த்தவனின் கண்களுக்குள்ளேயே நின்றாள் அவனின் இதய தேவதை..

உன்னை நான் கண்ட நேரம் ..நெஞ்சில்

மின்னல் உண்டானது..

காணாத அன்பை..நான் இன்று கண்டேன்

காயங்கள் எல்லாம் பூவாக..

 இரவெல்லாம் உறங்காததும் அவன் போட்டுவிட்ட காதல் பாடல்களும் அந்த காலை வேளையில் தாலாட்டுப்பாட எதிர்கால வண்ணக் கனவுகளுடன் கார் இருக்கையில் தலை சாய்த்துக் கொண்டான் விஜய். போக்குவரத்து அதிகமில்லாததால் மதுரை விமான நிலையம் வர ஆன அரை மணி நேரமும் நிம்மதியான உறக்கமே விஜயிற்கு.

அது போல் தானாக வந்து தனக்கு ஆறுதலளித்த மனையாள் தான் ஆதவனின் கண்களுக்குள் வந்தாள். தயாரான நேரத்திலிருந்து முகம் பார்க்கவே மறுத்தவள் கிளம்பும்போது முகம் காட்டியதே அவனுக்கு ஒரு நிம்மதியைக் கொடுத்தது. கூடவே ,

” தங்கச்சிக்காக மட்டும் தான் இந்தக் கல்யாணம்னு சொன்னவ கிட்ட நான் இப்படி நடந்துக்கிட்டது எங்வளவு பெரிய தப்பு … அதுவும் எப்படி ஆதவா .. உன்னால உணர்வக் கட்டுப்படுத்த முடியாம போனது… அதுவும் அம்மா இந்த உலகத்த விட்டுப் போன கொஞ்ச நாள்ல …ச்சீ எவ்வளவு மோசமானவன் நீ… அந்தப் பொண்ணும் என்ன நினைப்பா… காய்ந்த மாடு கம்பங் கொல்லையில் பாய்ஞ்ச மாதிரி..ச்சை … ” என நினைத்தவன் தலையிலும் கையினை வைத்தான். ஆனால் அவன் மனசாட்சிக்கு நன்கு தெரியும் அவன் அப்படிப்பட்டவனல்ல..

கூடவே , படிக்க வெளிநாடு சென்ற புதிதில் அவனுடன் படிக்கும் அடாலின் என்கிற பெண்ணுடன் படிப்பு விஷயமாக அருகில் உள்ள நகரத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. காலை முதல் இரவு வரை தங்களுக்கு தேவையான அனைத்தையும் திரட்டி தொகுத்து விட்டு மறுபடி அவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு செல்ல வேண்டிய  விமானம் வானிலை சரியில்லாத காரணத்தால் மறுநாள் காலையில் கிளம்ப இருக்க பயணிகளுக்கு அன்றிரவு தங்கிச் செல்ல வசதிகள் செய்யப்பட்டது.

ஓட்டல் அறை வரை ஒன்றாக வந்த இருவருக்கும் ஒரே அறையைக் கொடுக்கவா என அங்கிருந்த ஊழியர்கள் கேட்க.. ஆதவனோ “இல்லை வேண்டாம்” என உடனேயே பதிலளித்தவன் அவர்களிடம் பேசி தனக்கு தனியறை வாங்கிக் கொண்டு அடாலினிடம் விடைப் பெற்றுச் சென்று விட்டான்.

மறுநாள் காலை கிளம்பி வந்தவனிடம் எப்போதும் அதிகம் பேசும் அடாலின் அன்று அமைதியாகவே வந்தாள். பயணத்திலும் அப்படியே… கேட்ட கேள்விகளுக்கும் ஒன்றிரண்டு வார்த்தையில் மட்டுமே பதில் அளித்தாள். களைப்பில் இருப்பாள் என ஆதவனும் கண்டுகொள்ளாமல் பயணத்தை தொடர்ந்தான். இருவரும் அவரவர் இடத்திற்கு செல்ல பிரிந்து செல்லும் போது அடாலின் அவனிடம் கேட்ட கேள்வி அவனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

ஆம் அவள் கேட்ட கேள்வி அப்படி..ஆதவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் கிராமத்தில் ஒரு சில ஆண்கள் அதுவும் ஓரளவு மட்டுமே படித்த … சிலபல பாரம்பரிய பெருமைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்த ஆதவனுக்கு அந்த கேள்வி திடுக்கிடத்தான் வைத்தது. அது என்னவென்றால் ,

“ஆடவ் … அம் ஐ நாட் யுவர் பெட்வொர்தியா (Adhav… am I not your bedworth..!!??) அதாவது தமிழில் ஆதவ் நான் உன் படுக்கைக்கு தகுதியானவள் இல்லையா என வருத்தத்துடன் கேட்டாள். ஆமாம் வருத்தத்துடன் தான் .. அங்குள்ள கலாச்சாரத்தில் ஒரு ஆணுடன் டேட்டிங் போவது எல்லாம் தவறேக் கிடையாது. அப்படியும் போன இடத்தில் ஒரு ஆண் அதுவும் பெண்களைக் கவரக்கூடிய வசீகரத் தோற்றத்தில் உள்ளவன் தன்னைத் தவிர்த்தது… அவளுக்கு தன்னைத் தாழ்வாக நினைக்கத் தோன்றியது. மேற்கத்திய கலாச்சாரத்தில் வளர்ந்த அப்பெண்ணிற்கு எதுவும் தவறில்லயே… எனவே நன்குப் பேசிப் பழகக் கூடிய ஆதவனிடத்தில் அவ்விரவில் ஒன்றாக இருக்கவே விரும்பி இருந்தாள். ஆனால் அவன் தனியாக அறை எடுக்கவும் குழம்பியே விட்டாள். அது இரவெல்லாம் அவளதுமனதை உறுத்தவே மறுநாள் கேட்டு விட்டாள்.

ஆதவன் முதலில் திகைத்தாலும் அவளுக்கு இந்தியாவையும்  , அதிலும் தமிழ்நாட்டைப் பற்றியும் தெரிவித்தவன் திருமண பந்தத்தையும் எடுத்துக் கூறினான். ஆனால் அவளோ தங்களோடுப் படித்த இந்திய மாணவர்கள் இருவரையும் அவர்களின் பெண்களுடனான நட்பையும் கூற… புன்னகையோடு,

“அடா.. மற்றவங்க எப்படியோ தெரியாது… எனக்கு என் கலாச்சாரம் முக்கியம்.. என் கொள்கைகள் முக்கியம்… அதோட என் அம்மா… தங்கை ரெண்டு பேரும் ரொம்ப ஸ்பெஷல்… அவங்க என்னை இப்படித்தான் வளர்த்திருக்காங்க.. எனக்கா எந்தப் பெண்கள் மேலயும் இதுவரை எந்த ஈடுபாடும் வரல … அப்படியே வந்தாலும் அது எங்கம்மா கை காட்டுற பொண்ணா தான் இருப்பா.. எப்படி என் தங்கைக்கு கணவனா வர்றவன் உள்ளமும் உடலும் தூய்மையா இருக்கணும்னு நினைக்கிறேனோ.. அதையே எனக்கு மனைவியா வர்றவளுக்கும் கொடுக்க நினைக்கிறேன்… சோ நாம ரெண்டு பேரும் எப்பவும் இப்படி நட்போட மட்டும் இருந்துடுவோம்.

அதோட நீ இப்படி உன்னையே தாழ்வா நினைக்க ஒன்னுமில்லை. எல்லா விதத்திலும் நீ தகுதியானவள் … ” என்றொரு விளக்கத்தை அடாலினுக்கு கொடுத்த தான்… எப்படி ஒரே இரவில் ஒரு பெண்ணிடம்  ..” என நினைத்த ஆதவன் ,

“என் மனைவியிடம் தானே… எனக்காக என் அம்மா தேர்வு செய்த எனக்கானவளிடம் மட்டும்தானே… உறவுகள் அத்தனை பேர் முன்னிலையிலும் தானே கணவன் மனைவி என்ற பந்தத்தில் இணைந்தோம் … அடேய் என்ன காரியம் பன்ற.. மனைவியா இருந்தாலும்…  என்ன இப்போது அனுகியது தவறுதான் … முதலில் மனது இணைந்திருக்க வேண்டும்.. எனக்கு அவளைப் பிடித்ததே..ஷ்.. ஆதவா என்ன மனுஷன் டா நீ… உனக்கு அவளப் பிடிச்சா போதுமா… அவளுக்கு உன்னைய பிடிக்க வேண்டாமா.. அப்ப நீயும் சராசரி இந்திய கணவன் தானா … ஏன் அப்படி இருந்தா என்ன … “

இப்படி சரிதான்.. தவறு தான் என தனக்குள்ளேயே வாதிட்டவன் ,சட்.. என்ற சத்தத்துடன் தலையில் கை வைத்தான்.

 தேவராஜனும் வண்டியை ஓரம் கட்டி திரும்பிப் பார்த்தான். ஆதவனருகில் அமர்ந்திருந்த அருணாச்சலம் ,

“என்னப்பா தலை வலிக்குதா… கொஞ்ச நேரம் தூங்கு என்று விட.. பதில் ஏதும் பேசாமல் அவனும் கண்களை மூடிக்கொண்டான். தேவாவிற்கு ஆதவனின் நிலை வருத்தத்தைக் கொடுக்க விமான நிலையம் வந்ததும்  ஆதவனிடம் ,

“விஜயும் நானும் இருக்கிறோம்.. எதுக்கும் கவலைப்படாத மச்சான்… அம்மாவ வாராவாரம் அம்மாச்சி வீட்டுக்கு அழைச்சிட்டு வாறேன்.” என ஆறுதலளிக்கவும்.. இங்குப் பார்த்துக் கொள்வார்கள்.. முதல்ல படிப்ப முடிப்போம்… அப்புறம் பிஸ்னஸ பார்ப்போம்… எப்படியும் அவளைப் பார்க்க ஆறுமாசம் இருக்கு … வந்து யோசிப்போம்..” எண்ணமிட்டவாறு சிறிது நிம்மதியானான். விஜயும் சென்னையில் ஆதவனை விமானம் ஏற்றி விட்டு அவனது வேலைகளைக் கவனிக்கச் சென்று விட்டான்.

காதலி தன் காதலுக்கு பச்சைக் கொடி காட்டிய மகிழ்ச்சியில் ,தனது வாழ்க்கையில் தாமரை இருக்கிறாள் என்ற எண்ணமே விஜயை அனைத்தையும் ஈடுபாடோடு செய்ய வைத்தது.

ஆதவன் கிளம்பியதும் அழுத தாமரையைத் தேற்றிய தில்லை,”அதான் ஆனந்தண்ணா சொன்னாருல்ல… இன்னும் ஆறே மாசம் தான் உங்க அண்ணன் வந்துரப் போறாரு.. நானும் உன் பக்கத்துலயே தான இருக்கப் போறேன்.. இன்னும் நல்லா விடிய ரொம்ப நேரமிருக்கு செல்வி.. கண்ண மூடிக்கோ தூக்கம் வரும்.” என்றவள் உடனேயே உறங்க தயாரானாள்.

விழிகளை மூடிக் கொண்ட தாமரைக்கு “அவங்க சிரிச்சதப் பார்த்தேன்… அப்ப என் பச்சை தாவணிய கவனிச்சுருப்பாங்க தானே.. ” என  எண்ணம் விஜயிடம் தாவியது.

“நல்லவேளை இவ அண்ணன் கிளம்பினாரு… இல்ல கிறுக்கு பிடிச்சவளாட்டம் நான் சுத்த வேண்டியதுதான்… அப்படி என்ன கிறுக்கு பிடிச்சது.. ” என நினைத்தவள்.. மீண்டும் முகத்தை மூடிக் கொள்ள… “அடியே நாயகி வெட்கம்லாம் வருதாடி உனக்கு…போடி … போடி…” என தனியே புன்னகைத்துக் கொண்டதில்லைக்கும் உறக்கம் வர, இருவரும் அருகருகேப் படுத்து தங்கள் நாயகர்களை நினைத்தவாறு உறங்கினர்.

மகளிடம் ஏதோ சொல்ல வந்த தேவகி அவள் நல்ல உறக்கத்தில் இருக்க , அவர்களை தொந்திரவு செய்யாமல் மெல்ல மாடியில் இருந்து கீழே இறங்கினார். கீழேக் காத்துக் கொண்டிருந்த ஆவுடையம்மாள் ,

“என்ன நீ மட்டும் வர்ற.. இந்த வீட்டு மருமவள எங்க.. வந்தவ கள வழியனுப்ப வேண்டாமா” எனக் கேட்க ,

“வெள்ளனே எழுந்திரிச்சதுக சின்னாத்தா… அதான் பிள்ளைங்க தூங்கறாங்க..” என தயங்கிக் கொண்டே கூற… ஆவுடையோ ,

“தேவி என்னப் பேசற..இனி இவ தான் இந்த வீட்டப் பார்த்துக்கணும்.. இன்னும் பொறந்த வீட்ல இருந்த மாதிரியே இருந்தா எப்படி… எல்லாம் சொல்லிக் கொடுத்துட்டு கிளம்பு… நாங்களும் கிளம்பறோம்…” என்ற ஆவுடையம்மாள் அவர் வீட்டாரோடு கிளம்பி விட.. சில உறவினர்களையும் வழியனுப்பிய தேவகி தானும் கிளம்பத் தயாரானார்.

ஆதவனை வழியனுப்பச் சென்ற அருணாச்சலமும் தேவராஜனும் அப்படியே அலுவலகம் சென்று விட , தேவகி தன் கணவருடன் தன் வீட்டிற்கு கிளம்பத் தயாரானார்.