Advertisement

அலை 12 ( 2 )

 இரவில் மனைவிக் கொடுத்த அந்த இனிய உணர்வுகளை எண்ணிக் கொண்டே குளித்து உடையணிந்து அனைத்தையும் தயாராக வைத்துக் கொண்டிருக்க… அறைக் கதவு தட்டப்பட்டது. தேவராஜன் தயாராகி வந்தவன்,

“மச்சான் கிளம்பலாமா…” என நின்றுக் கொண்டிருந்தான். ‘தயார்’ என்றவனுக்கு மனைவி கண்ணில் படுவாளா என்றிருந்தது. ஆனாலும் பெட்டிகளை எடுத்துக் கொண்டு கீழே வந்தவனுக்கு தேவகி தான் குடிப்பதற்கு காஃபிக் கொடுத்தார். அனைவரிடமும் விடைப் பெற்று கிளம்பும் வரையும் ஒவ்வொருவரின் பின்னாலும் நின்று முகம் காட்டாமல் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் தில்லை. அது ஆதவனுக்கு ஏமாற்றமாகவே இருந்தது.

இருந்தாலும் அவளிடமும் அருகில் சென்று சொல்லாமல் கிளம்ப மனதில்லை.தங்கைப் பின்னால் நின்றவளைக் கண்டு அருகே வர முகம் தெரியாதவாறு மறைந்துக் கொண்ட தில்லையிடம் ,

” வரேன்…” என்றவன் , தாமரையின் அழுத விழிகளைப் பார்த்து , ” அண்ணன் சீக்கிரம் வந்துருவேன்… எதையும் யோசிக்காம படிக்கணும் பாப்பா… தாமரைக் கண்ணீரை அடக்க முயற்சித்தாலும் முடியாமல் கன்னத்தில் நீர்த்துளி உருண்டோட… அதை துடைத்து விட்ட ஆதவன்.. ரெண்டு பேரும் நல்லா படிங்க… ரெண்டு வாரத்துக்கு ஒரு முறை ஃபோன் பண்றேன். மாசம் ரெண்டு லெட்டர் போடுவேன் சரியா… நீயும் எதுவும் வேணும்னா..” என்றவன் அப்படியே நிறுத்தி முகம் மறைத்திருந்த தில்லையைப் பார்த்து ,

” உன் அண்ணிட்ட சொல்லு…” என்றதும் தான் , “அண்ணியா … யாரது…” என்பது போல தாமரையின் தோளை எட்டி ஆதவனை ஒருநொடி நிமிர்ந்துப் பார்த்து.. அவன் விழிகளைக் காண முடியாமல் நாணம் தடுக்க மறுபடியும் முகம் மறைத்துக் கொண்டாள். அது ஏற்கனவே சிவந்திருக்க அவனது விழிகளைச் சந்தித்ததால் மேலும் சிவக்க.. பாவம் ஆதவனுக்குத் தான் அந்த சிவப்பின் காரணம் புரியவில்லை. தன் மேல் உள்ள கோபத்தில் முகம் சிவக்கிறாளோ என நினைத்தவனுக்கு கிளம்பும் வரை இருந்த இனிமை காணமல் போவது போல் இருந்தது.

அவனது மனைவியாக இங்கு வந்ததிலிருந்து சேலையில் சிறிது பெரிய பெண்ணாக தெரிந்தவள் இப்போது தங்கை அருகில் தங்கையைப் போலவே தாவணியும் அணிந்திருக்க மிகவும் சிறிய பெண்ணாக தெரிந்தாள்.

முதன் முறையாக தான் தவறு செய்து விட்டோமோ… தங்கை வயதுடைய , அவளைப் போலவே கல்லூரிக்கு செல்ல இருக்கும் பெண்ணை சூழ்நிலைக் காரணமாக திருமணம் செய்தாலும் நேற்றைய உறவு.. அவனால் நினைக்கவே முடியவில்லை. என்ன மனிதன் நான்… என எண்ண ஆரம்பித்து விட்டான்.

            தேவகியும் அப்போது கொல்லைப்புறம் சென்ற மகளின் பின்னால் செல்ல.. தில்லைக்கு உமட்டிக் கொண்டு இருந்தாலும் வாந்தி வரவில்லை என்றதும் ,

” சரியா தூங்காம தலை சுத்துது மா…” என சோர்வுடன் சொல்ல , அவள் முகம் பார்த்து விட்டு, குடிக்க கொடுத்தவர் , “பாப்பா இந்த நேரத்துல சுடு தண்ணில தான குளிச்ச… மருமகன் அறைல சுடு தண்ணி பெட்டி இருந்தது.. அப்படியே சேலையும் கட்டியிருக்கலாமே பாப்பா… நீ தான் நல்லா கட்டப் பழகிட்டியே…” என்றவர் அவள் கூந்தலை உலர்த்த ஆரம்பித்தார். யோசனையில் இருந்த தில்லையும் ,

“தாமரை ரூம்ல குளிச்சேன்.. அங்க புடவையே இல்லமா…” என்று விட.. உலர்த்துவதை நிறுத்தியவர் , தில்லையின் முன் வந்து அவள் தாடையைப் பிடித்து ,

“என்ன அங்க குளிச்சியா..” என்றவரிடம் , கோபமாக ..

“ஏம்மா காலையிலயே குளிச்சுட்டுத் தான்   வரணும்னு சொன்ன … அதான் வரும் போதே குளிச்சிட்டேன்ல… இப்ப அது லொட்டு இது லொசுக்குனு சொல்லிட்டு இருக்க… ஒரு கத புக்கு படிக்க விட மாட்ட.. டிவில ஒளியும் ஒலியும் கூட பார்க்க விட மாட்ட.. திடீர்னு கல்யாணம் பண்ணி என்ன ஏதுன்னு புரியறதுக்குள்ள எல்லாம்…” என்றவளுக்கு என்ன பேசிக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் தோன்ற , தலையிலடித்துக் கொண்டவள் ,

“போம்மா இன்னும் தூங்கவே இல்ல… நான் போய் படுக்கறேன்..” என்றவாறு மாடியேறப் போனவளிடம் ,

“மருமவனுக்கும் காஃபி எடுத்துட்டு போ சாமி… கிளம்பற நேரம் ” என்றதும் திரும்பி கீழே இருந்த அறைக்குச் சென்றுக் கொண்டே ..

“அதெல்லாம் நான் எடுத்துட்டுப் போகமாட்டேன் .. ” என முகம் சிவந்தவாறு அங்கு தாமரை படுத்திருந்த கட்டிலில் சென்றுப் படுத்துக் கொண்டாள். அவளுக்கும் கோபம் எல்லாம் இல்லை … ஆதவனின் பேச்சும் அவன் நடந்துக் கொண்ட விதமும் நினைத்துப் பார்த்தாலே இனிமையை ஒரு வித சுகத்தைக் கொடுக்க.. விடுமுறையில் அவள் கண்டுகளித்த காதல் படங்கள் பாடல்கள் எல்லாம் கண்ணிலும் காதிலும் வந்து போக வெட்கத்தோடு தலையணையில் முகம் புதைத்துக் கொண்டாள். 

அர்த்த ஜாமம் நான் சூடும்

ஆடை என்றும் நீயாகும்

அங்கம் யாவும் நீ மூட

ஆசை தந்த நோய் போகும்

 நடக்கும் தினமும்

ஆனந்த யாகம்…

 சிலிர்க்கும் அடடா

ஸ்ரீதேவி பூந்தேகம்..

தாமரை ஆதவனோடு கீழே வந்து அழைத்ததும் தான்  தில்லை வெளியே வந்ததே… அப்போதும் ஆதவனது முகம் பார்க்கத் தயங்கியவள் யார் பின்னாலாவது நின்று முகத்தை மறைத்துக் கொண்டிருந்தாள்.தேவகிக்குத் தான் சங்கடமாக இருந்தது.. மகளது முகமும் செய்கைகளும் ஒன்றைச் சொல்ல.. பேச்சும்.. கணவன் வெளிநாடு செல்கையில் இப்படி மறைந்து கொள்வதும் ஒன்றைச் சொல்ல… ஆதவனைப் போல அவளது தாயும் கூட தில்லையைப் புரியாமல் தவித்துக் கொண்டு இருந்தார்.

இப்படி தேவகியை ஒரு குழப்பத்திலும் , ஆதவனை ஒரு குழப்பத்திலும் ஆழ்த்திய தில்லை… ஆதவன் விடை பெற்றுக் கிளம்பியதும் , “ஹப்பா கிளம்பிட்டாங்கா ” என்ற நிலையில் தான் நின்றுக் கொண்டிருந்தாள்.

ஒரே நாள் இரவில் பருவப் பெண்ணின் உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் கவர்ந்துக் கொண்டான் என்பது ஆதவனுக்கும் தெரியவில்லை தில்லைக்கும் தெரியவில்லை. அன்றைய நெருக்கம் அவன் முகம் காண நாணத்தைக் கொடுத்ததே தவிர , அவன் அருகிலேயே இருக்க வேண்டும் என்பதெல்லாம் தில்லைக்குத் தோன்றவில்லை. அது ஒரு பருவ மயக்கம் அவ்வளவே.

        ஆதவன் மற்றும் தில்லையின் நிலை இப்படி இருக்க.. அன்றைய இரவில் தாமரை ஜன்னலை விட்டு நகர்கிறாள் என்று தெரிந்த உடனேயே மாடிப்படி வாசல் அருகே சென்று நின்றான் விஜய்.தாமரைக் கண்ணிலே படவில்லை என்றதும் கீழே இறங்கிப் போய் பார்க்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் வீட்டினுள் செல்லும் படியில் அவன் செல்வது நாகரீகமாகாது என்பதை உணர்ந்தவன் மற்றொரு வழியாக இறங்கும் போது தான் செண்பகா முன்புறம் கோலமிட்டுக் கொண்டு இருப்பதைக் கவனித்து , தனக்கு டீ போட்டுத் தரச் சொன்னவன் வீட்டினுள் போக எத்தனிக்கையில் தான், தேவகி புண்ணியத்தில் விளக்கொளியில் தில்லை அருகே அமர்ந்திருந்த அவனவளின் முகத்தைப் பார்த்து அவளின் சோர்வையும் உணர்ந்தவன், செண்பகாவிடம்,

“அக்கா மசால் சாய்… அதாவது மசாலா டீ கிடைக்குமா.. தலை வலிக்குது” என்றதும் தான் சுக்கு காப்பியின் அருமை பெருமைகளை விஜயிடத்தில் சொன்ன செண்பகா அதனைப் போட்டுக் கொண்டு வந்தார். அப்படியே தற்செயலாக தாமரையைப் பார்த்தது போல் விஜய் சொல்லிவிட்டு வர… இதோ அந்த சுக்கு காப்பி தான் இருவரது வருங்கால வாழ்க்கையை தீர்மானிக்கவும் ஒரு காரணமாகியது.

தானும் தயாராகியவன் அறையை விட்டு வெளியே வந்த விஜய் தன்னவள் நிற்கிறாளா என விழிகளால் நாலாபக்கமும் அலச… ம்ஹூம் ஏமாற்றமே… உறவினர்களாக நிற்கும் இடத்தில் தானும் நிற்க முடியாதே… எப்படியும் ஆதவனை வழியனுப்ப வெளியே வருவாள் தான் … ஆனால் தனக்குப் பதில் கிடைக்குமா.. காரில் தன் உடமைகளை வைத்து விட்டு டிரைவர் இருக்கைக்கு அருகில் அமர்ந்துக் கொண்டான்.

தாமரையின் அறை ஜன்னல்கள் திறக்கப்படவில்லை … வீட்டு பால்கனி யாவும் பூக்கள் மட்டுமே சிரித்தன.. பூவையை எதிர்பார்த்து காத்திருக்க பாடல் கேசட்டை போட்டு விட்டான்.

கண் பாரும் தேவி ..

என் உள்ளாடும் ஆவி

பாடாதோ உன் புகழை

உன்னை விட எனக்கு

 யாருமில்லை துணைக்கு

மறுபுறம் ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்த தேவராஜன்..

“அத்தை இப்படி எல்லாரையும் விட்டுப் போவாங்கனு எதிர்பார்க்கல.. ப்ச்  ஆதவனுக்கும் வீட்ட பிரிய கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும் … ” என்பது போல் பேசிக் கொண்டே இருக்க.. விஜயிற்கு அவனது பேச்சு எதுவும் காதில் விழவில்லை. மாறாக பாடல் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.

கண்மணி உனது பார்வை பட

காத்திருக்கும் எனது

நேர்வர வேண்டுமம்மா 

நேர்வர வேண்டுமம்மா..

பாட்டிலேயே லயித்திருந்தவன் அவனது காதலி நேர் வந்ததையும் கவனிக்கவில்லை. ஊஞ்சலாடும் தனது மனதை ஒருநிலைப்படுத்த இயலாமல் தாமரை தனது அறையில் இருந்து வெளியே வரவே தயங்கிக் கொண்டிருக்க, ஆதவனோ தங்கையின் அறை திறந்திருக்க தட்டிவிட்டு , “செல்வி மா…” என்ற அழைப்போடு வந்தான்.

கட்டிலில் அமர்ந்திருந்தவள் எழுந்து எப்போதும் போல் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.. சகோதரன் வெளிநாடு செல்வது ஒரு பக்கம் அழுகையைக் கொடுத்தாலும் தான் எடுத்திருக்கும் முடிவு தவறோ என்ற எண்ணமும் சேர்ந்து அழுகையைத் தந்தாலும் வேகமாக கண்களைத் துடைத்துக் கொண்டவள்..

“நான் அழமாட்டேண்ணா … காலேஜ் ஆரம்பிச்சதும் படிக்க ஆரம்பிச்சுடுவேன்.. ” என்றவளுக்கு புன்னகையைத் தந்தவன், அவளோடு கீழே வந்தான். அப்போதுதான் விஜய் வெளியே சென்றிருந்தான். சகோதரனின் பின்னால் மெல்ல கீழே இறங்கி வந்த தாமரை.. இப்போது உறவினர் கூட்டத்தில் விஜயைத் தேடினாள். எப்படியும் வெளியே தான் இருப்பான் என்பதை உணர்ந்தவள் ஆதவன் வண்டியில் ஏறப்போகயில் வெளியே செல்ல..தில்லையின் பின் மறைந்து வரப் பார்க்க… தில்லையோ தாமரையின் பின் மறைந்து வரப் பார்த்தாள்.

ஒரு கட்டத்தில் தில்லை , ” அப்படியே நில்லுடி..” எனச் சத்தமாக சொல்லவும் தோழியின் வார்த்தைக்கு மதிப்பு தந்து நின்று விட்டாள்.தில்லையோ..

“நாயகி எப்படி டி… இப்படி… பார்த்தாலே கடுப்பாகிற மூஞ்சப் பார்த்து இப்ப வெட்கம் வெட்கமா வருது… ஐயோ செஞ்ச வேலை அப்படி … ” என தனக்குள்ளேயேப் பேசிக் கொண்டு நாணத்தோடு தன் தாவணி முந்தானையை எடுத்து கண்களை மறைக்க … ஆதவனோ…

“தன்னைப் பார்க்கக் கூட விரும்பவில்லையோ…” என்ற வருத்தத்தில் காரில் சென்று அமர்ந்து விட்டான்.தாமரைக்கோ வண்டி கிளம்ப போகிறது… தன்னை விஜய் பார்த்தானா இல்லையா என பதற்றம் அதிகமாகியது. பார்த்த நாள் முதல் அவளது விழிகளின் வார்த்தைகளைப் புரிந்துக் கொண்டவன்.. இன்று ” எனக்கு நீ மட்டும் தான் என கூறுகிறான்… அது உண்மையோ இல்லையோ… இப்போது அவளுக்கு அவன் மட்டும் தான் என்ற எண்ணம் வேகமெடுக்க , காற்றில் பறந்த தாவணி முந்தானை நுனியை கையில் பிடித்துக்  கொண்டு வாசல்படிகளை கடந்து.. அவர்களது காரருகே மூச்சு வாங்க சென்று நின்றவள் , விஜயிற்கு நேர் பின்னால் அமர்ந்திருந்த ஆதவனை ,

“அண்ணா….” என அழைத்தாள்… அண்ணனை அழைத்தாலும் பார்வை விஜய் மீது தானே.. காத்திருந்தவனாகிற்றே.. அடுத்த நொடி விஜய் பின்னால் பார்க்க…ஆதவன் கதவைத் திறந்து கீழே இறங்கி விட்டான். விஜயின் கண்களில் ஆயிரம் நிலாக்கள் உலா போனதோ……அவனும் புன்னகையுடன் மெல்ல இறங்கி கார் கதவில் சாய்ந்து கைகளைக் கட்டி நின்றான். அவனுக்குப் புரிந்தது அவனுக்காக தான் வந்து நிற்கிறாள் என்று … பின்னே உடுத்தியிருந்தது பச்சை தாவணி அன்றோ …

கண்ணுக்கொரு

வண்ணக்கிளி காதுக்கொரு

கானக் குயில் நெஞ்சுக்கொரு

வஞ்சிக்கொடி நீதானம்மா ..

நொடிகளே என்றாலும் இருவரது விழிகளும் பேசிக் கொண்டதை அவர்கள் மட்டுமே அறிவர்.

நீதானே கண்ணே 

 நான் வாங்கும் மூச்சு..

வாழ்ந்தாக வேண்டும்

 வாவா கண்ணே..

Advertisement