Advertisement

“நீ முதல்ல அவர் அறைகுப் போ.. உன் துணிமணி எல்லாம் செண்பாட்ட கொடுத்து அங்க வச்சுட்டேன்.. வெள்ளனே எழுந்து குளிச்சிரணும் சரியா…” 

“என்ன வெள்ளனே எந்திரிக்கணுமா அதெல்லாம் முடியாது.. அப்படியே எழுந்தாலும் நான் வந்து காபி குடிச்சுட்டுத் தான் குளிக்க போவேன்.”

“முருகா இவளுக்கு என்னத்த புரிய வைக்கிறது.. ” என நினைத்தவர் , “அது பாப்பா புருஷன் வெளிய கிளம்புனதுக்கு அப்புறம் தலைக்கு குளிக்க கூடாது… “அவர் சொல்லி முடிக்கவில்லை.

” என்ன தலைக்கா… இன்னைக்கு நீ தானம்மா தலைய அலசி விட்ட.. நாளைக்குமா… எனக்கு தலைவலி வந்துரும்..” என்றவளிடம் என்ன சொல்லி புரிய வைக்க என குழம்பியவர் ,

“சரிக் எழுந்து வா.. நானே அலசி விடுறேன்…”

“காபி குடிச்சுட்டுத்தான்…” என்றவளிடம்’ சரி ‘ என்றாலும் அவள் தாடையைப் பிடித்து,

“பாப்பா மருமவன் என்ன சொன்னாலும் கேட்டுக்கணும் சரியா.. எங்க கிட்ட வாயக் கொடுக்கிற மாதிரி அவர்கிட்ட கொடுக்காத… ” என்றவரும் மாடியேறப் பார்க்க..

“போம்மா.. கல்யாணம் பண்ணினா இப்படியெல்லாம் இருக்கணுமா… நான் நானாதான் இருப்பேன்.” என்றவள், “ஆமா நீ ஏன் மாடியேறுற .. எனக்குப் போகத் தெரியாதா… அப்புறம் கால் வலிக்குது இடுப்பு வவிக்குதுனு சொல்லி.. என்னைய மருந்து தடவ சொல்லுவ..” என்றவள் அவள் மட்டுமாக ஆதவனறைக்குள் நுழைந்தாள்.

 

சில சமயங்களில் பெரிய மனுஷியாகவும் சில சமயங்களில் சிறு குழந்தையாகவும் நடந்து கொள்ளும் மகளைக் கண்டு தேவகி குழம்பித்தான் போனார்.

 “பொறுமையா கல்யாணத்த வச்சுருந்தா கல்யாணம் ஆன புள்ளைகள வச்சு புரிய வைக்கலாம்… இப்ப என்னத்த செய்ய ..” என்பதாக அவள் மாடியேறி அறைக்குள் செல்லும் வரைப் பார்த்து விட்டுச் சென்றார். அங்கு சென்றவளோ ,

“எம்மாடி அத்தை பார்த்து பார்த்து மகனுக்கு அழகு படுத்தியிருப்பாக போல… இவ்வளவு அழகா வச்சுருக்காங்க … ” என நினைத்தவள் தயாராக இருந்த இரண்டு பயணப் பெட்டிகளைப் பார்த்து விட்டு ,

” இந்த அம்மா சொன்னா எங்க கேட்குது… மாமா எல்லாம் தயாரா தான் வச்சுருப்பாருனு… ” என முணுமுணுத்துக்  கொண்டவள், “செல்விக் கூட இருந்தா ஏதாவது பேசிட்டாவது இருப்பேன்.” என நினைத்துக் கொண்டே மெத்தையில் அமரப் போனவளுக்கு சிறிது தயக்கமாக இருக்க.. அங்கிருந்த ஜன்னலை திறந்து வைத்துக் கொண்டு அமர்ந்துக் கொண்டாள்.

அறையின் இரண்டு ஜன்னல்களில் ஒன்றில் குளிரூட்டி இருக்க , அதை இயக்கத் தெரியாமல் அமர்ந்துக் கொண்டாள்.

“ஏசி வாங்கித் தான்னு சொன்னா புருஷன் வீட்டுக்கு போறப்ப வாங்கித் தாரேன்னு அம்மா சொல்லிச்சு.. இங்க இருக்கே.. பரவால்ல தந்தா செல்வி ரூம்ல மாட்டிக்க வேண்டியது தான்.” என நினைத்தவள் , அந்த குளிரூட்டியை ஆராய்ந்துக் கொண்டிருந்தாள்.

தில்லையைப் பொறுத்தவரை தோழிக்காக இந்த திருமணம் .. மீனாட்சியின் உடல்நிலையைக் காரணம் காட்டி தாமரைக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்களோ என்ற அச்சமே. இப்போதும் தோழிக்காக மட்டுமே ஆதவனறைக்கு வந்தது. அங்கும் தாமரையின் நினைவு மட்டுமே. இப்படி யோசித்துக் கொண்டே அந்த இயந்திரத்தின் பாகங்களை குனிந்து ஆராய்ந்துக் கொண்டிருந்தவள் , கதவு திறக்கும் சப்தத்தில் நிமிர்ந்து திரும்பிப் பார்த்தாள்.

அத்தனை நேரம் இருந்த குழந்தைத்தனம், குறும்புத்தனம்.. ஏன் தாமரையும் அவள் நினைவில் இருந்து காணாமல் போனாள். சொக்கலிங்கம் அவள் பெரியவளான நாளிலிருந்து அவள் அறைப் பக்கமே வந்தது கிடையாது. தேவராஜனோ கதவைத் தட்டி வாசலோடு நின்றுப் பேசிவிட்டுச் செல்வான். இது போன்று வளர்ந்த இடத்தில் திடீரென ஆதவனோடு தனியறையில் நிற்கிறாள் என்றதும் ஒரு பயம் பதற்றம் இரண்டும் வந்து தொற்றிக் கொள்ள மிரண்டு விழித்தாள்.

ஆதவனிற்கோ அவளது அருகாமையும் பார்வையும் ஈர்ப்பைக் கொடுக்க… அருகில் இயல்பாக வந்தவன் ,

“எப்பவும் என்னையப் பார்த்தா முறைச்சுட்டே இருப்ப… இன்னைக்கு என்ன இப்படி பயந்து போய் பார்க்கிற … ” என்றதும் இயல்புக்கு வந்தவள்,

“பயமா உங்களப் பார்த்து எனக்கு எதுக்கு பயம் வருது.. கதவ தட்டாம திடீர்னு உள்ளவந்தா…” என்றவளுக்கு உடல் நடுங்கத்தான் செய்தது. ஆனால் அதனை காண்பிக்காது சற்று தள்ளி நின்றுக் கொண்டவள் ,

“ஊருக்குப் போக எல்லாம் எடுத்து வச்சுட்டீங்களா…” எனக் கேட்டாள். அவனும் “ம்… எல்லாம் தயாரா இருக்கு…” என்றவாறு கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டான். டேபிளில் வைத்திருந்த பாலை எடுத்தவள் ,

“அம்மா கொடுக்க சொன்னாங்க..” என அவன் கையில் கொடுத்தாள். அவன் வாங்கி விட்டு… “நீ குடிச்சுட்டியா..” எனக் கேட்க…

“இல்ல.. ஒன்னு தான் அம்மா கொடுத்தாங்க..” என்றதும் ,” ஓ… அப்ப நீ குடி…” என அவளிடம் கொடுக்க …

“இல்ல நீங்களே குடிங்க…” என்றதும் , “அப்ப பாதி பாதி குடிக்கலாம்..” என்ற ஆதவனிடம் ,

“மாமா… எனக்கு வேண்டாம் சொல்றன்ல.. நீங்களே குடிச்சுட்டு தூங்குங்க..” என்றவள் நடுவில் போடப்பட்டிருந்த கட்டிலின் மறுபுறமாக வந்து அமர்ந்து ,

“மாமா நீங்க எப்ப எந்திரிப்பீங்களோ அப்பவே என்னையும் எழுப்பி விட்டுருங்க சரியா..” என்றவள் , புடவையை தோள் சுற்றிப் போட்டு உடலை மறைத்தவாறு கொண்டு வந்து இடுப்பில் செருகிக் கொண்டு மறுபுறம் திரும்பி போர்வை போர்த்திப் படுத்துக் கொண்டாள்.

ஆதவனுக்கு அவளது செய்கைகளும் பேச்சும் புன்னகையை வரவழைக்க அந்த பாலை அவனும் குடிக்காமல் மூடி வைத்தவன் , அவளிடம் சில நாட்களாக சொல்ல நினைத்ததை கூறி விட எண்ணி ,

“தேங்க்ஸ் ” என்றான். பட்டென்று எழுந்துக் கொண்டவள், “எதுக்கு தேங்க்ஸ் … ” என நெற்றிச் சுருக்கி கேள்வி கேட்க . . .

“பாப்பாவ நீ ரொம்ப நல்லா பார்த்துக்கிற… நீ இருக்கிற தைரியத்துலதான் நான் ஊருக்கே கிளம்புறேன்…”

“உங்க தேங்க்ஸ நீங்களே வச்சுக்கங்க… தாமரை எனக்கு ஃபிரான்ட்க்கும் மேல… அவள பார்த்துக்க நீங்க தேங்க்ஸ் சொல்லுவீங்களா.. இப்ப அவ என் ஃபிரன்ட் மட்டுமில்ல என் பொண்ணு மாதிரி தான் … எங்கம்மா சொல்லும் அண்ணன் பொண்டாட்டி தாய்க்கு சமானம்னு .. அதனால என் பிள்ளைய நான் பார்த்துக்கிறேன். தேங்க்ஸாமே தேங்க்ஸ் … ” என்றவள் மீண்டும் படுக்கப் போக … ஆதவன் “ஒரு நிமிஷம் ” என்றான்.

 

“அவள் தங்கையைக் குறித்துக் கூற கூற மனதில் விவரிக்க இயலாத நிம்மதியும் மகிழ்ச்சியும் பரவ… அவள் மீது ஈர்ப்பு ம்ஹூம்.. காதல் என்று தான் சொல்ல வேண்டும் காதல் பெருகியது. அது காதல் தான் என்று உணர்ந்த தருணம் அவளிடம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என ஆசை மிக …

“என்ன ” என்பது போல் ஓரக்கண்ணால் பார்த்தவளிடம், “ஓகே சாரி… நான் தேங்க்ஸ் சொன்னது தப்புதான் … அப்ப என்னைய அடிக்கடி முறைச்சுப் பார்த்ததுக்கான காரணம் இதுதானா.. நான் கூடமுறைப் பொண்ணுங்கிறதால முறைக்கிறனு நினைச்சேன்.” என்றவனை தலையணையை எடுத்து அடிப்பது போல் செய்தவள் ,

” பின்ன… எனக்கு உங்களை விட பத்து மடங்கு பாசம் அவ மேல உண்டு… எங்கிட்ட வந்து தங்கச்சிய பார்த்துக்கோ.. பார்த்துக்கோ பார்த்துக்கிட்டத்துக்கு தேங்க்ஸ்… உங்களுக்குத் தெரியுமா நானும் படிச்சு முடிக்கிற வரை கல்யாணத்த பத்தியே பேசாதீங்கனு எங்க வீட்ல சொல்லியிருந்தேன்.. அவர்களும் சரினு சொல்லியிருந்தாங்க… ஆனா அத்தை அவங்க இருக்க மாட்டாங்கனு தெரிஞ்சோ என்னவோ உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டாங்க…

என்னைய விடுங்க எப்படியாவது கல்யாணம் வேண்டாம்னு சமாளிச்சுருவேன்.. ஆனா செல்வி.. வாயில்லா பூச்சி…அத்தை என்னெ கன்னாலும் செய்வா… அவ கனவு எனக்குத் தான் தெரியும்.. அவள எங்கண்ணனுக்கு உடனே கட்டி வச்சு அவ படிப்பு கனவ முடக்கிடக் கூடாதுனு தான்… முதல்ல என் கல்யாணத்த நடத்த சொன்னேன்.. ஒரு மருமகளா இங்க வந்து செல்வியப் பார்த்துக்கலாம்னு தான்.. அப்படி அவளுக்காகவே.. அவளுக்காக மட்டுமே உங்கள கல்யாணம் பண்ணி வந்த என் கிட்ட இப்படியெல்லாம் சொன்னா கோபம் வராதா…” என மூச்சு வாங்க உரைத்தவளின் மீது காதல் அளவுக்கதிமாகிக் கொண்டே போனது.

தனது தங்கை மீது வைத்திருக்கும் அன்பால் தன் விருப்பங்களைத் துறந்து அவளுக்காக மட்டுமே திருமணம் செய்து வந்தாளா … “

“அதோட எனக்காவது அத்தைய ஆஸ்பத்திரில சேர்த்த அன்னைக்கு பதினெட்டு வயசாவது ஆச்சு.. ஆனா தாமரைக்கு பதினெட்டு அடுத்த மாசம் தான் பிறக்கும்… சின்ன பொண்ணு அவ. எப்படியும் அவள விட நான் தானே பெரியவ… ” என கோபமாக பேசிக் கொண்டே இருந்தாள். உண்மையில் தன் மனதில் உள்ளதை கோப பேச்சாகக் கொட்டிக் கொண்டு இருந்தாள்.

அவள் மீது நாட்டம் அதிகமாகிக் கொண்டே போக …அதுவரை  சின்னப் பெண் தன் தங்கை மீதான நட்புக்காக எவ்வளவு யோசித்திருக்கிறாள் என எண்ணிக் கொண்டிருக்க… தான் பதினெட்டு வயது நிரம்பிய இளம் பெண் என்பதை அவள் வார்த்தைகளாலயே உணர்ந்தவனுக்கு இப்போது மனதோடு உடலும் உற்சாகமாகத் துவங்கி, இவள் என் மனைவி என்ற எண்ணமே மேலோங்க ,அது இருபத்து ஐந்து வயது ஹார்மோன்களை தூண்டிக் கொண்டிருந்தது. … இறுதியில் தான் நாளை வெளிநாடு கிளம்புகிறோம்.

“… ஏதோ டென்ஷன்ல இதெல்லாம் உங்க கிட்ட சொல்லிட்டேன். செல்விக் கிட்ட அவளுக்காக தான் நான் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்னு சொல்லிராதீங்க ரொம்ப வருத்தப்படுவா…” என்றவள் அவனது புன்னகையுடன் கூடிய பார்வையைப் பார்த்து விட்டு ,

“உங்க கிட்ட வாயக் கொடுக்க கூடாதுனு அம்மா சொல்லிச்சு… ஆனா நீங்க தான் இவ்வளவு பேச வச்சுட்டீங்க.. தொண்டையே வறண்டுபோச்சு… ” என்றவள் அவன் புறம் இருந்த தண்ணீரை எடுக்க, அவனருகே சற்று நகர்ந்து வந்தாள்.

ஆதவனது உற்சாகமோ தில்லையை .. தில்லையின் பேச்சை ரசிக்க வைக்க.. அதுவும் அவளின் அவனிடம் வாய் கொடுக்கக் கூடாது என்ற வார்த்தை அவளது இதழ்களை முதலில் பார்க்கத் தூண்ட.. அவனை நெருங்கி அமர்ந்தவளின் முகம் இப்போது பார்க்க மட்டுமல்ல .. மூச்சு வாங்கும் இதழ்களை சுவைக்கவும் தூண்ட… இரு கைகைளயும் அவளது பின்னங்கழுத்தில் கொடுத்து அணைத்து இதழோடு இதழ் பதித்து விட்டான்.

எதிர்பாரா முத்தம் தில்லையை முதலில் திகைக்க செய்ய ..  இளம் பெண்ணின் உடலில் நடைபெற்ற வேதியியல்  மாற்றங்கள் அந்த முத்ததில் லயிக்கச் செய்து விட்டது. இருவருமே முத்தத்தில் மூழ்க ஆரம்பித்தனர்.

ஏதோ மோகம் ஏதோ தாகம்

நேற்று வரை நெனக்கலையே

ஆசை விதை மொளைக்கலையே

சேதி என்ன வனக்கிளியே…

Advertisement