Advertisement

அலை 10

                   உறவினர்கள் அனைவரையும் வழியனுப்பிய தேவகி உதவியாளர்கள் கொண்டு வீட்டையும் ஒதுக்கி விட்டு , தனது கணவர் மகன் , அருணாச்சலம் என அனைவருக்கும் தேவையானவற்றை செய்து விட்டு ,  மகளும் மருமகளும் மீனாட்சியின் அறையிலயே இருந்துப் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தவர் அவர்களுக்கும் குடிப்பதற்கு பால் எடுத்து வந்தார்.

ஆவுடையாச்சி மறுநாள் தான் அவர்கள் வீட்டிற்கு செல்ல இருந்ததால் , அவரும் தன் பேத்திகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த ஆச்சி ,

“தேவி எம் பேரன் நாளைக்கு சீமைக்கு போவுது… பேத்தி கைல பால கொடுத்துவுடு ஆத்தா…” என்றார். இளையவர்கள் கண்டுகொள்ளாமல் பேசிக் கொண்டு இருக்க… தேவகி தன் சின்னம்மாவின் எண்ணம் புரிந்தவர் ,

” பாப்பா மருமவனுக்கு இந்த பால எடுத்துட்டுப் போ சாமி … தாமரை இங்கன படுக்கட்டும்..” எனவும் ,

” ம்மா அப்ப நானும் இங்கேயே படுத்துக்கிறேன்.. இவ கிட்ட நிறைய பேச வேண்டியிருக்கு…” என்றதும், ஆவுடையாச்சி..

“இதென்ன உன் மவ கூறில்லாம பேசிட்டு இருக்கா.. போசகட்ட புள்ளையா இருந்தா எப்பூடி.. பேரன் நாளைக்கு போயிட்டு ஆறேழு மாசம் கழிச்சி தான் வரப்போறன். புருஷனுக்கு என்ன வேணும் ஒரு வேணும்னு கேட்டு கூட இருக்க வேண்டாமா..” என்றதும் தில்லைக்கு கோபம் வந்துவிட்டது

“ஆச்சி… எனக்கா கூறு இல்ல.. இரு உன் வெத்தலப் பொட்டிய கூறுபோட்டு என்ன செய்யறேன் பார்..” என்றவள் அதனை தூக்கி… அதிலிருந்த பாக்கு சுண்ணாம்பு போன்றவற்றை எடுத்து அவர் கையெட்டாத உயரத்தில் வைக்க … அவரோ தேவகியின் கையைப் பிடித்துக் கொண்டு அறைக்கு வெளியே வந்தவர்.

“தேவி … என் மகன்  பொட்ட புள்ளைகளா பெத்து வச்சுருக்கான்.. இந்தக் குடும்பத்துலயே அருணாச்சலம் மட்டும் தான் பையன பெத்துருக்கான். அவனுக்கு வாரிச பெத்து தரணும்… உன் மக இப்படி விளையாட்டுப் புள்ளையா இருந்தா எப்படி… ” என வருந்த…

” சின்னம்மா படிச்சுட்டே இருந்துட்டா.. இனி தான் எல்லாம் சொல்லிக் கொடுக்கணும்… ” என்ற தேவகியிடம் ,

” அடி … போடி .. நானெல்லாம் வயசுக்கு வந்ததுமே கல்யாணம் கட்டி வந்துட்டேன் .. ஆணும் பொண்ணு மா அஞ்சு பெத்துக்களை யா…” அன்று புதிதாக மாலை அணிவித்து சுவரில் மாட்டப்பட்டிருந்த மீனாட்சியின் பெரிய புகைப்படத்தைக் காட்டி ..

“அந்த மகராசி புள்ளைக்கு கல்யாணம் பண்ணியாச்சுங்கிற நிம்மதில போய்ட்டா.. நாம தான் இதுங்களை வாழ வைக்கணும்.. அதுவும் நான் தாலியெடுத்துக் கொடுத்த குலம் தளைச்சு வந்தா தானே எனக்கும் நிம்மதி .. தெய்வமா இருக்கிற அவளுக்கும் நிம்மதி …  அதனால சாமிய கும்புட்டு உன் மகள பேரங்கிட்ட அனுப்பு.. வெள்ளனவே கிளம்பிருவான் வேற… நானும் வந்ததுலருந்து பார்க்கிறேன் ஒன்னு உன் முந்தானைய பிடிச்சிக்கிறா இல்ல சின்ன பாப்பா கையவே பிடிச்சுக்கிறா .. என்னவோ சொல்றத சொல்லிட்டேன்.. “எனவும் தேவகிக்கும் ஆவுடையம்மாள் சொல்வதும் சரியாகவேப் பட அறைக்குள் வந்தவர் முதலில் மகளிடம் பேசலாம் என நினைத்தார்.

ஆனால் நொடியில் அந்த எண்ணத்தைக் கைவிட்டு , தாமரையின் அருகில் சென்றவர் ,

“சாமி.. இந்த அத்தை சொல்றத தப்பா எடுத்துக்கிடாத தங்கம்… உங்க அண்ண வெள்ளனவே ஊருக்கு கெளம்புதாரு… முன்ன மதினிகூட இருந்து பொட்டி கட்டுவாக … இப்ப அவரு பொண்டாட்டி தானசெய்யணும்… இன்னைக்கு மட்டும் கொஞ்சம் கூடமாட ஒத்தாச பண்ணச் சொல்லு சாமி … உனக்கு துணைக்கு நானும்.. உன் சின்னாத்தாவும் கூடவே இருப்போம்.. இன்னைக்கு ஒரு ராவுதான்.. நாளையிலருந்து உன் மதினி உன் கூடவே தான் இருப்பா” என தாமரையின் தாடையைப் பிடித்து கெஞ்சுவது போல் கேட்டு .நீ தான் சாமி உன் மதினிக்கு செல்லணும்.” என்றதும் தாமரைக்கு மனது என்னவோ போல் ஆகிவிட்டது.

தில்லையோ..”ம்மா… என்ன சொல்ற.. நான் ஒத்தாசை பண்ண போகணுமா அதெல்லாம் முடியாது.. ஆமா… அதென்ன மதினி..கிதினினு.. அவ எனக்கு செல்வி தான். அவளுக்கு நான் திலோ தான் .. இந்த புது புது உறவெல்லாம் உங்க காலத்தோட வச்சுக்கோங்க.. அதோட என்னையப் பார்த்து பேசாம எல்லாத்தையும் அவளப் பார்த்துக் கேட்டுட்டு இருக்க.. .” என தேவகியிடம் சண்டைக்குப் போக… மகளிடம் ,

“நான் உன்கிட்ட பேசல ஆத்தா.. என் மருமககிட்ட தான் பேசினேன். அதோட ஒரே வயசா இருந்தாலும்… இல்ல வயசுல சின்னவளாவே இருந்தாலும் அண்ணன் பொண்டாட்டிய மதினினுதான் சொல்லணும்…” என்றவர் தாமரையிடம் திரும்பி ,

” சாமி … நீ பேர் சொல்லி கூப்புடுறியோ , முறை சொல்லி கூப்புடுறியோ அது உன்னிஷ்டம்… இன்னைக்கு ராவுல மட்டும் அவள அங்க இருக்க சொல்லு கண்ணு… நான் போய் அவருக்கும் பால் எடுத்துட்டு வாரேன்…” எனக் கூறியவர் ,

“கல்யாணம்னா என்னனு சொல்லி புரிய வைக்கிறது… முருகா…” என தனக்குள் புலம்பிக் கொண்டே அறையை விட்டு வெளியேறினார்.தாமரைக்கோ தேவகி அவளிடம் அவ்வாறு பேசியது என்னவோ செய்ய … தன்னால் தான் தோழி அண்ணனை கவனிக்க மறுக்கிறாளோ என்ற எண்ணம் தோன்ற, தில்லையின் கையினைப் பிடித்து ஜன்னல் திண்டில் அமர வைத்தவள்,

“திலோ… அத்தை சொல்றாங்கங்கிறத விடுடி… எனக்காக போடி… அண்ணன் பாவம்.. அம்மா.. அம்மா… ” என்றவளுக்கு அழுகை வர… தில்லையோ..

“நீ இப்படி அழறப்போ… உன்னைய தனியா எப்படி விடுவேன்… அதெல்லாம் உங்க அண்ணன் எல்லாம் எடுத்து வச்சத நான் நேத்தே பார்த்தேன். நீ சும்மாயிரு…” என்ற தோழியின் முன் கண்களை துடைத்துக் கொண்ட தாமரை …

“நான் அழல..அழமாட்டேன் .. நீ எனக்கு துணைக்கு இருக்கப் போய் தானே எங்கண்ணன் ஊருக்கே கிளம்புறாங்க… எங்கம்மா இருந்தா அண்ணன் கிளம்புற வரைக்கும் அவங்கள விட்டு நகரவே மாட்டாங்க… என்னைய மட்டுமில்ல எங்கண்ணனையும் நல்லா பார்த்துக்கோடி … கொஞ்சம் யோசிச்சுப் பாரு…

இந்த பத்து நாளும் நீ என் பக்கத்துலயே இருந்து என்னைய கவனிச்சுக்கிட்டனு எல்லாரும் சொன்னாங்க.. ஆனா எங்கண்ணன யாரும் கவனிச்ச மாதிரி தெரியல … ஆளே ரொம்ப மாறிட்டாங்கடி … இப்பக்கூட எல்லாரையும் கவனிச்சு சாப்பிட வச்சவங்க அவங்க சாப்பிட்டாங்களானு தெரியல.. ” என தாமரை வேதனையோடு கூறவும் , தில்லைக்கும் மனம் கலங்கி…

“அதானே மாமா சாப்பிட்டத பார்க்கலயே… இவ சொன்னது போல ஆளு கொஞ்சம் டல்லாதான் இருக்காங்களோ … ” என சிந்தனைகள் ஓடும் போதே..

“அம்மாவுக்கு அவங்க சீக்கிரம் போறாங்கனு முதல்லயே தெரிஞ்சுருக்கு.. அப்படி அவங்க இல்லாம நான் பைத்தியக்காரி ஆவேன்… பையனயும் யாரவது கவனிச்சுக்கணும்னு தெரியப் போய் தான் உனக்கும் அண்ணனுக்கும் அம்மா அவசரமா கல்யாணம் பண்ணி வச்சாங்களோ…” என முகம்மூடி அழுதவளை தோளில் சாய்த்தவளின் கைகளைப் பிடித்துக் கொண்ட தாமரை..

“திலோ இன்னைக்கு நீ எனக்கு செய்றது போல அப்பாவுக்கும் மாத்திரை கொடுக்கிறது , இடை இடையே சாப்பிட கொடுக்கிறதுனு பார்த்து பார்த்து கவனிச்சத நான் கவனிச்சுட்டுத்தான் இருந்தேன். ஆனா அண்ணா…ப்ளீஸ் டி என்னைய மட்டுமில்ல எங்கண்ணாவையும் நீதான் பார்த்துக்கணும் … அம்மான்னா எங்கண்ணாவுக்கும் உயிர் … இப்ப அவங்களும் என்னையப் போல தான் வருத்தப்பட்டுட்டு இருப்பாங்க.. நீ தான் அவங்களுக்கும் ஆறுதல் சொல்லணும்.. அதுவும் நாளைக்கே கிளம்பிடப்போறாரு… ” என்றவாறு அழுக.. தில்லைக்கு மனது சங்கடமாகி விட்டது.

“இவ என்ன அண்ணன் அண்ணன்ங்கிறா…”ஆதவனை நினைத்தவள் ,

“மணி பாரதி இவளுக்கும் மேலபாசத்தை பொழியுறத இந்த பத்து நாளும் கவனிச்சுட்டுத் தானே இருக்கேன்.. ” என நினைத்தவள் ,

“என்ன இந்த ஒரு நைட்டு தான.. அதுவும் வெள்ளனவே கிளம்பிரும் … சமாளிச்சு வைப்போம்…” என்பதாக எண்ணம் சென்று ..தாமரையிடம் இருந்து கைகளை உருவி … அவள் கண்களை துடைத்தவள்,

“ஏன்டி இப்ப என்ன உங்க அண்ணன் கிளம்புற வரை கூட இருக்கணும் அம்புட்டுதானே… இதோ இப்பவே கிளம்புறேன். நீ அழறத நிறுத்து…இந்தா இந்த பாலக் குடிச்சுட்டு தூங்கி ரெஸ்ட் எடுடி.. அடுத்த வாரத்துல காலேஜ் போகணும்.. நியாபகத்துல இருக்கட்டும்.” என்ற தோழியிடம் ,

“ம்… உனக்கு எப்போ ஆரம்பிக்குது திலோ … “

“எனக்கு போன வாரமே ஆரம்பிச்சுட்டு டி.. ஆனா உன் கூட தான் காலேஜ் போவேன்னு இருந்துட்டேன்.. நீ போகாம நான் எப்படி போவேன்.. ரெண்டு பேரும் சேர்ந்து காலேஜ் போகலாம் ஒகே ….” என்ற தில்லை, கட்டை விரலை உயர்த்திக் காட்ட , தானும் அது போல் செய்த தாமரையிடம் , உள்ளே வந்த ஆவுடையாச்சி ,

 “சாமி உன்னைய உங்கம்மா கூப்புடுறா… போ…” எனவும் மனதே இல்லாமல் எழுந்த தில்லை…

“அந்த டேப்லட் இன்னைக்கு ஒரு நாள் போட்டுக்கோ.. நாளைக்கு டாக்டரப் பார்த்துடலாம். எதுவும் யோசிக்காத நான் வெள்ளனவே எந்திருச்சு வந்துடுவேன் சரியா…”

ஏதோ குழந்தையை தனியாக விட்டுச் செல்வது போல் பேசிக் கொண்டே இருந்த தில்லையிடம்,

“உன் புருஷன நீ போய் கவனி , அவள நாங்கப் பார்த்துக்கிறோம்…” என்ற ஆவுடையாளை முறைத்த தில்லையிடம்,

“புருஷன் கூட பொழைக்க சொன்னா இந்த முறைப்பு முறைக்கிறா…” என்றதும் தில்லை முகம் கோபத்தில் . சிவப்பதை உணர்ந்த தாமரை , எங்கே கோபித்துக் கொண்டு இங்கேயே இருந்து விடுவாளோ என அஞ்சி ,

“சின்னாத்தா அவ கிளம்பிட்டா…” என்றதோடு , கண்களை மூடித் திறந்து , “போ’ என்பது போல சைகை செய்த தாமரை சிறு புன்னகையை தோழிக்கு கொடுத்து அனுப்பினாள். அந்த புன்னகை தந்த உற்சாகத்தில் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாலும் அறையை விட்டு வெளியேறினாள்.

தேவகியும் வெளியே தான் நின்றுக் கொண்டு அவர்களது உரையாடல்களைக் கேட்டுக் கொண்டு இருந்தவர் ,மகிழ்வுடன் மகளது கையினைப் பற்றி மீனாட்சி புகைப்படம் அருகே அழைத்துச் சென்றவர் விபூதி குங்குமம் எல்லாம் எடுத்து மகள் நெற்றியில் வைத்தவர் ,

“மதினி ஆசை பட்ட மாதிரி எங்கண்ணன் குடும்பம் செழித்து வளரணும்… இந்தா பாப்பா மருமகனுக்கு எடுத்துட்டுப் போ…” என பால் குவளையை அவளிடம் கொடுக்க…

“ம்மா என்னம்மா வெள்ளி டம்ளர் ல பால் தர்ற… சினிமால ஃபர்ஸ்ட் நைட்டுக்கு கொடுக்கிற மாதிரி… ” என்றாள்.தேவகியோ,

“பஸ்ட் நைட்டா.. அப்படினா …” ,

“ம் முதராத்திரி… ஆமா ஒரு டம்ளர் தான் இருக்கு…” என சாதாரணமாக கேட்டவளின் முன் தேவகியின் முகம்தான் சிவந்து விட்டது. புன்னகையுடன் மகளின் தோளில் தட்டியவாறு,,

“பேச்சைப் பாரு…மருமவன் குடிச்சதும் அதுலயே குடி.” என்றவரிடம் , “ச்சீ எச்சி டம்ளர்லயா  குடிக்க சொல்ற.. ஆமா படத்துல இப்படி பால் டம்ளர் கொண்டு வந்தாலே என்னைய மடியில படுக்க வச்சுக்குவ… இப்ப சிரிக்கிற” என்றவளைக் கண்டு தலையிலடித்துக் கொண்டவர்.

 

                 

                          

                

             

Advertisement