Advertisement

“இவளை..!!” என்று பல்லை கடித்த விஷ்வஜித், “உஷ்..” என்று வாயில் ஒற்றை விரல் வைத்து எச்சரிக்கை செய்ய, “க்கும்..  ரொம்பதான்..” என்று நொடித்து கொண்டவள் விஷ்வஜித்தின் கோவத்திற்கு பயந்து வாயை மூடி கொண்டாள். 
“என்ன தீக்ஷி இது..? அதி ஏன் இப்படி பேசுறா..?” என்று மனோ அக்காவிடம் சந்தேகமாக  கேட்டான். 
“ம்ம்.. அவளுக்கு கிறுக்கு பிடிச்சிருக்கு..”  என்று விஷ்வஜித் எரிச்சலோடு பதில் அளித்தவன், “இங்க பாரு மனோ, இனி இது போல நீ  எப்போவும் பேச கூடாது, அதே போல தீக்ஷி நீ இதுதான் கடைசி முறை.. பார்த்துக்கோங்க..” என்று இருவரையும் பார்த்து கண்டிப்புடன் சொன்ன விஷ்வஜித்தின் வார்த்தையை ஏற்கும் பொருட்டு அக்கா, தம்பி இருவரும் தலையாட்டினர்.
“தீக்ஷி.. இங்க என்ன நடக்குது..? அதி மேல ஏன் பெரிய மாமா அவ்வளவு கோவப்படுறார்..?”  என்று மனோ தனியாக அக்காவிடம் கேட்டான். 
“அதுக்கு பதில் நீ அதிகிட்ட தான் கேட்கணும், எனக்கு அவ சொல்ற பதில் புரியாது..” என்றவள், “அதி.. இங்க வா..” என்று கூப்பிட்டு தம்பியின் சந்தேகத்தை சொன்னாள். 
“அதுடா மனோ பையா.. நான் அவரை கட்டிக்க கேட்டேனா அதுக்கு கோவம் என் மேல..”  என்றாள். 
“என்ன..? உனக்கு ஏதாவது அறிவு இருக்கா..?” என்று மனோஜும் கோவமாக கேட்டான். 
“ஏண்டா..? என் அறிவுக்கு என்ன குறைச்சல்..?” என்று சிலிர்த்து சண்டைக்கு  நின்றாள். 
“பின்ன அவரை நீ எப்படி கட்டிக்க முடியும்..? அவர் தர்ஷி அக்கா ஹஸ்பண்ட்..” என்று முகம் சுளித்து சொன்னான். 
“ஆமா.. அவர் அக்கா ஹஸ்பண்ட் தான், இல்லைங்கல, ஆனா.. அக்கா  இப்படி அவரையும், தருணையும் தனியா தவிக்க விட்டு போயிட்டா இல்லை, அவருக்கும் தருணுக்கும் துணை வேண்டாமா..? அதான் அந்த துணையா நானே இருக்கலாம்ன்னு தான் கேட்டேன்..” என்று சொன்னவளை சந்தேகமாக பார்த்த மனோ, 
“ஏன் அதி நீ மாமாவை  லவ் ஏதும்..?” என்று கேட்க, 
“ச்சீ..ச்சீ.. என்ன பேசுற நீ..? மாமாவை நான் எப்படிடா..?” என்று  வேகமாக மறுத்தவளை மனோ குழப்பத்தோடு பார்க்க, தீக்ஷி சிரிப்புடன் பார்த்தாள். 
அதி முதலில் இதை பற்றி தீக்ஷியிடம் தான் பேசினாள், அன்று அவளும்  மனோ போல் கோவப்பட்டு இதே கேள்விகளை தான் கேட்டாள். அன்று அதி அவளுக்கு சொன்ன பதிலை தான் இன்று மனோவிற்கும் சொல்லி கொண்டிருந்தாள். 
“தீக்ஷி.. என்ன இது..? என்னதான் சொல்றா..? எனக்கு ஒன்னும் புரியல..” என்று மனோ அக்காவிடம் கேட்க, நன்றாக சிரித்த தீக்ஷி, 
“இதை தான் நான் முதல்லே சொன்னேன், அவ சொல்றது எனக்கு புரியாதுன்னு..” என, அவளை முறைத்த அதிதி, 
“இப்போ உங்க ரெண்டு பேருக்கும் நான் சொல்றது என்ன புரியல..?” என்று மறுப்படியும் ஆரம்பித்தாள். 
“அக்கா இவங்களை தனியா விட்டுட்டு போயிட்டா  இல்லை, இவங்களுக்கு துணை வேணும் தானே, அதான் நான் மாமாவை கட்டிக்கிறேன் சொன்னேன், இதுல என்ன தப்பு இருக்கு..?  இது போல நிறைய குடும்பங்கள்ல நடக்கிறது தான்.. என்னோட ப்ரண்ட் ரிலேட்டிவ் வீட்ல கூட இதுபோல் செஞ்சிருக்காங்க..” என்று சொல்ல அவளின் எண்ணங்களை புரிந்தது கொண்ட தீக்ஷி, 
“அதிதி.. இது தான் உன் எண்ணம்ன்னா நாமளே  மாமாக்கு ஒரு  நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் செஞ்சு வைக்கலாம், இதுக்காக இப்படி விருப்பமே இல்லாத நீங்க ரெண்டு பேரும் ஏன் கல்யாணம் செஞ்சுக்கணும்..?”  என்று கேட்டாள். 
“ஏன் நான் அந்த நல்லா பொண்ணு இல்லையா..?” என்று ஆதங்கத்தோடு கேட்டவளை முறைத்த தீக்ஷி, “அதி நான் ரொம்ப சீரியஸா பேசிட்டிருக்கேன்..” என்றாள். 
“நானும் சீரியஸா தான்  பேசிட்டிருக்கேன், என்றவள், அவர் என்னைன்னு இல்லை வேற  யாரையும் அவர்  கல்யாணம் செஞ்சுகிற ஐடியாவிலே இல்லை, அவங்க அம்மா ஒரு வருஷமா பொண்ணு பார்த்து முடிவு செஞ்சு அவரோட போராடிட்டு இருக்காங்க, இவர் முடியவே முடியாதுன்னு  சாதிக்கிறார்..” என்று சொல்ல, தீக்ஷிக்கு இது புது செய்தி. 
“ஆமா தீக்ஷி.. இது ரொம்ப நாளா ஓடிட்டு இருக்கு..” என்ற அதிதி, “அவருக்கு ரெண்டாவது கல்யாணம் செஞ்சுகிறதுல விருப்பம் இல்லை, எனக்கு கல்யாணம் செஞ்சுகிறதுல விருப்பம் இல்லை..”, 
“அதான் இப்படியே  தருணோட அம்மாவா இருந்துட்டு போயிரலாம்ன்னு ஒரு எண்ணம், அதுக்கு  மாமா எனக்கு லைசென்ஸ் மட்டும்  கொடுத்துட்டா  போதும், அதுக்கு அப்பறம் அவர் எப்போதும் போல அவரோட அடிதடி வேலையை பார்க்கட்டும், நானும், தருணும் உங்களோட இப்படியே இருந்துக்குறோம்..” என்று முடிக்க, தீக்ஷியும், மனோவும் தான் என்ன சொல்வது என்று புரியாமல் முழித்தனர்.
“தீக்ஷி.. நான் இந்த காலேஜிலே சேர்ந்துகிறேன்..” என்று அக்காவின்   சுமையை நினைத்து தான் விருப்பப்பட்ட படிப்பை படிக்க தயங்கிய தம்பியை அக்கா போராடி  சமாதானம் செய்ய,  மனோவும் ஏற்று கொண்டு மெக்கானிக்கல் படிக்க காலேஜ் பார்த்து அக்காவிடம் சொன்னான்.  
அந்த காலேஜ் சென்னையிலே இருக்க மிகவும் மகிழ்ந்து போன தீக்ஷி, “நல்லது மனோ.. நாளைக்கே அட்மிஷன் போட்டுடலாம்..” என்றாள்.  
“எனக்கும் இந்த ஸ்கூல்ல அட்மிஷன் போட்டுடுங்க..” என்று தருணும் சென்னையில் இருக்கும்  ஸ்கூல் பேரை சொன்னான். 
“டேய்.. உனக்கு தான் ஊட்டி ஸ்கூல்ல இருக்கே.. இங்க எதுக்கு..?”  என்று தீக்ஷி தருணிடம் கேட்டாள். 
“ நான் மட்டும் அங்க தனியா ஊட்டி போகணுமா..? முடியாது, நான் அப்போவே முடியாதுன்னு தான்  சொன்னேன், நீதான் பாரின்ல போய் படிக்கணும்ன்னு என்னை துரத்தி விட்டுட்ட, ஆனா இந்த வருஷம் நான் இங்க தான் இருப்பேன், மனோண்ணா, உன்னை  விட்டுட்டு நான் எங்கேயும்  போகமாட்டேன்..”  என்ற தருண் தீக்ஷி மறுக்கவும், மிக மிக அதிகமாக பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்துவிட்டான். 
“என்னடா இது..?” என்று தீக்ஷி கவலையாக தம்பியிடம் கேட்டாள். 
“விடு தீக்ஷி  தருண் இங்க நம்மோடே இருந்துகட்டும், நீ ஏன் வேண்டாம் சொல்ற..?” என்று கேட்டான். 
“ம்ப்ச்.. அவங்க பாட்டி இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க மனோ..” என, 
“என்னது அவங்க பாட்டியா..? அவங்களுக்கு தான் இவங்களை பிடிக்காதே..?” என்று மனோ புரியாமல் கேட்டான். 
“அவங்களுக்கு ராமலிங்கத்தோட பொண்ணை மட்டும் தான் பிடிக்காது, அவங்க தான் இப்போ இல்லையே..? அதனால பேரனை பிடிச்சிருக்குமாக்கும்..”  என்ற தீக்ஷியின்  குரலில் வெளிப்படையான  வெறுப்பு. அதை அப்போதுதான் உள்ளே  வந்த இந்திரஜித் கேட்டுவிட முகம் கோவத்தில் சிவந்து விட்டது. 
“வாங்க மாமா..” என்று இந்திரஜித்தை கண்டுவிட்ட மனோ வரவேற்க,  
“வரேன் மனோ.. உடம்பு எப்படி இருக்கு..?” என்று பொதுவாக பேசியவன், தீக்ஷியின் பக்கம் மறந்தும் திரும்பவில்லை. 
 
“தருண் எதோ அடம் பிடிக்கறான்னு அண்ணா சொன்னான், என்ன ஆச்சு..?” என்று மனோவிடம் கேட்டான். 
“அது.. தருண் ஊட்டி ஸ்கூல் வேண்டாம், இங்க சென்னையிலே  சேர்ந்துக்கறேன்னு சொல்றான்..” என்று தீக்ஷி சொன்னாள்.  
“ம்ம்..”  என்று அவள் புறம் திரும்பாமலே யோசனையுடன் தலையாட்டிய இந்திரஜித், “தருண்.. தருண்..” என்று  உள்நோக்கி குரல் கொடுத்தான். அழுது வீங்கிய முகத்தோடு ரூமிலிருந்து வெளியே வந்த தருணை கார்டன் அழைத்து வர,  தீக்ஷியும் அவர்கள் பின்னாலே வந்தாள். அவளை கண்டு கொள்ளாமல்,  கார்டன் பெஞ்சில் தருணை தன் பக்கத்தில் அமரவைத்து கொண்ட இந்திரஜித், 
“என்னடா ஆச்சி..? ஏன் ஊட்டி வேண்டாம் சொல்ற..? அங்க நான், தாத்தா, பாட்டி, அப்பா எல்லாம் இருக்கோம் தானே..” என்று  கேட்டான். 
“ஆனா அங்க மனோவும், தீக்ஷியும் இல்லையே..?” என்று தருண் ஏக்கத்தோடு சொல்ல, 
“நீ சொல்றது சரிதான் தருண், ஆனா அவங்க அவங்க வீட்ல இருக்காங்க, அதே மாதிரி நீயும்  உன் வீட்ல தானே இருக்கணும்..” என்று சொல்ல, கேட்டிருந்த தீக்ஷிக்கு கோபம்  பொங்கியது. 
“என்ன என்ன பேசுறீங்க நீங்க..? இதுவும் அவன் வீடு தான்..” என்று கோவத்தோடு படப்படத்தவளை கண்டு கொள்ளாத இந்திரஜித்,  
“தருண்.. நீ குட் பாயா நம்மளோட வீட்டுக்கு வருவியாம், லீவ் வரும் போதெல்லாம் சித்தப்பா உன்னை இவங்க வீட்ல கூட்டிட்டு வந்து விடுவேனாம்.. அப்பா பாவம் இல்லை, நீ இல்லாம ரொம்ப கஷ்டப்படுவான் தானே..” என்று பொறுமையாகவே பேசி தருணை ஒத்துக்க வைத்த  இந்திரஜித் கிளம்பும் நேரம்,  அவனை வழி மறித்த தீக்ஷி, 
“ஏன்  இப்படி எல்லாம் பேசுறீங்க..?” என்று கேட்டாள். 
“என்ன தப்பா பேசிட்டேன்..?” என்று இந்திரஜித் அலட்டி கொள்ளாமல் கேட்டான். 
“உங்களுக்கு என் மேல என்ன கோவம்..?” என்று நேரடியாக கேட்டவளை கூர்மையாக பார்த்த இந்திரஜித், 
“எனக்கு உன்மேல் என்ன கோவம்..? நான் எதுக்கு  உன்மேல் கோவப்படணும்..?” என்று மூன்றாம் மனிதனாக விலகி பேசினான். 
“ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க..?” என்று அவனின் விலகளில் கலக்கத்தோடு கேட்டாள். 
“நான் என்ன பேசினேன்..? நீதான் நிறைய பேசுற..?” என்றவனின் பேச்சு புரியாமல் பார்த்தவளிடம்,  
“அதிதிகிட்ட விஷூவை ஏன் கல்யாணம் செய்ற..? வேண்டாம்ன்னு பேசியிருக்க, அம்மாவை பத்தி உன் தம்பிகிட்ட தப்பா பேசுற..” எனவும் அதிர்ந்தாள். 
“தப்பா என்ன பேசினேன்..?” என்று தீக்ஷி கேட்க,  
“அப்போ நீ பேசினது ரொம்ப சரியோ..? தர்ஷினி அண்ணி போனதால தான் அம்மாக்கு தருணை பிடிச்சிருக்கு சொல்ற, இத்தனை வருஷத்துல எப்போவாவது அம்மா, அண்ணியை தப்பா பேசி, சண்டை போட்டு பார்த்திருக்கிறியா..? அவங்களை பிடிக்கலன்னு விலகி தான் போவாங்க..” என்று ஆத்திரமாக பேச, 
“என்கிட்ட பேசுனாங்களே..?” என்று தீக்ஷி சொன்னாள். 
“ஓஹ்.. அதனால தான் நான் கல்யாணம் செஞ்சுக்க கேட்டா முடியாதுன்னு பழி வாங்கிறியா..?” என்று  ஆத்திரத்துடன் கேட்டவனை தீர்க்கமாக பார்த்த தீக்ஷி, 
“ஆமாம் அப்படித்தான், போங்க….!!”  என்று கோவத்தில்  கத்திவிட்டு வந்துவிட்டாள்.

Advertisement