Advertisement

காதல் ஆலாபனை 21
“என்னய்யா சொல்ற..? உனக்கு நல்லா தெரியுமா..?” என்று தீக்ஷியின் பார்ட்னர்கள் ராமலிங்கத்திடம் அதிர்ச்சியுடன் கேட்க, 
“நான் என் கண்ணாலே அந்த பையனை பார்த்துட்டு தான் வரேன், அவன் உயிரோட தான் இருக்கான்..”, என்று மனோ உயிர் பிழைத்து வந்ததை சொன்ன  ராமலிங்கம், 
“அந்த மனோ பையன் இத்தனை வருஷமா கோமாவுல இருந்திருக்கான், அந்த விஷ்வஜித் தான் அவங்க அப்பாட்ட சொல்லி ஆக்சிடென்ட் ஆன அன்னிக்கு நைட்டே கண்டுபிடிச்சிருக்கான். ஆனா பையன் ரொம்ப சீரியஸா இருந்ததால வெளியே சொல்லலை”, 
“அவங்களுக்கு நடந்த ஆக்சிடென்ட் மேல சந்தேகம் இருந்திருக்கு, அதான்  மனோவை ரகசியமா மறைச்சி  ட்ரீட்மென்ட் பார்த்திருக்காங்க.. அவனும் இத்தனை வருஷ கோமாவிலிருந்து போனவாரம் தான் தெளிஞ்சிருக்கான், இப்போ வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டாங்க..”  என்று முழுவதையும் சொன்னார். 
“என்னப்பா  இப்படி ஆகிப்போச்சு, அந்த தீக்ஷிதா வேற மூணு வருஷத்து கணக்கு கொடுக்க சொல்லி  கொடுத்திருந்த கெடு வேற முடிஞ்சு போச்சு, அவ தம்பியை பார்த்ததுல இதை விடுவச்சி இருக்கா, அடுத்து நம்மகிட்ட தான் வருவா.. என்ன செய்ய..?” என்று ஒருவர் பயத்தில் புலம்பவே செய்தார்.   
“ஏய் என்னப்பா இப்படி அந்த பொண்ணுக்கு எல்லாம் பயப்படுற, கணக்கு எல்லாம் கொடுக்க முடியாதுன்னு கட் அண்ட் ரைட்டா சொல்லலாம், என்ன செஞ்சிட போறா…? இல்லை செய்யத்தான் அவளால முடியுமா..?” என்று மற்றவர் திமிராக நக்கல் பேசினார்.  
“அவ செய்வாளா இல்லையான்னு எனக்கு தெரியாது, ஆனா அந்த அண்ணன், தம்பி கண்டிப்பா செய்வாங்க..” என்று இந்திரஜித்தையும், விஷ்வஜித்தையும்  ராமலிங்கம் சொல்ல, 
“அவங்க எப்படி இதுல தலையிட முடியும்..? இது நம்ம பிஸ்னஸ், இதுக்குள்ள வர அவங்களுக்கு எந்த ரைட்ஸும் கிடையாது..” என்று இன்னொருவர் கோபத்தோடு சொன்னார். 
“பிசினசுக்குள்ள வர்ற அவங்களுக்கு ரைட்ஸ் கிடையாது, ஆனா அவங்க வீட்டு பையன்  என்  பேரன் தருண் கார்ல இருக்கும் போதே தீக்ஷிதாவை ஆக்சிடென்ட் செய்ய பார்த்தீங்க இல்லை, அதுக்கு உங்களுக்கு சன்மானம் கொடுக்காம விடமாட்டாங்க”, 
“அதோட அந்த  இந்திரஜித் தீக்ஷியை  விரும்புறான், பிஸ்னஸ்ல யாராவது சீண்டினாலே உண்டு இல்லைன்னு செய்ற ஆளு அவன், அவன் விரும்புற பொண்ணு மேல  கை வச்சா  உங்களை சும்மா விட்டுடுவானா..?”
“அது மட்டும் இல்லாம உங்களால  அவங்ககிட்ட போய் பிஸ்னஸ் ரைட்ஸ் பத்தி எல்லாம் பேசவேமுடியாது, அதிலும் அந்த விஷ்வஜித் எடுத்தவுடனே படக்குன்னு கையை நீட்டினா, தம்பி பொறுமையா வச்சி செய்ற ஆளு, அந்த ஷர்மா கதை தெரியுமில்லை, நம்பர் ஒன் பிஸ்னஸ் மேனா இருந்தவரை மொத்தமா மூடவச்சிட்டான்”, 
“இதுல என்னைய வேற மிரட்டி இருக்கான்.. என்ன செய்ய போறானோ..? அதை நினைச்சே என் தூக்கம், நிம்மதி எல்லாம் போச்சு,  போதாக்குறைக்கு அந்த மனோ வேற வந்துட்டான், எல்லாம் போச்சு, நாம மொத்தமா காலி தான்..” என்று ராமலிங்கம் பயத்தோடு சொன்னார். 
“உன்னை எதுக்கு அந்த இந்திரஜித் மிரட்டினான்..?” என்று இன்னொருவர் கேட்க, 
“எல்லாம் உங்களால தான், நான் தான் முதல்லே சொன்னேன் இல்லை, அந்த தீக்ஷிதா மேல கை வைக்காதீங்கன்னு,  கேட்டீங்களா..? இப்போ அந்த இந்திரஜித் உள்ளே வந்துட்டான்”, 
“இதுவரைக்கும் அந்த தீக்ஷி பொண்ணு யாரையும் உள்ள விடாம அவளே எல்லாம்  பார்த்துட்டு இருந்தா, இனி தீக்ஷிதா சொன்னாலும் அவன்  கேட்கமாட்டான்,  நம்மளை எல்லாம் ஒரு வழி செய்ய போறான், யாருக்கு தெரியும்..? இந்நேரத்துக்கு ஆரம்பிச்சிருப்பான்..” என்று ராமலிங்கம் சொல்ல சொல்ல மற்றவர்களுக்கும் பயம் தோன்றாமல் இல்லை.
“மனோ உன்கிட்ட  கொஞ்சம்  பேசணும்.. பேசலாமா..?” என்று தீக்ஷி  தம்பியிடம் கேட்டாள். 
“சொல்லு தீக்ஷி..” என்றவனின் அருகில் அமர்ந்து அவனின்  கையை பற்றிகொண்டாள்,  இத்தனை வருடம் தான் இல்லாமல் போனதில், இப்போதிருக்கும் நிஜத்தை உணர விரும்பும் தமக்கையின் கையை தானும் பாசத்துடன் பற்றி கொண்டான் தம்பி. 
“இது உன்னோட ட்வெல்த் மார்க் ஷீட்..”, என்று தீக்ஷி  கொடுத்த மார்க் ஷீட்டை வாங்கி பார்த்து பெருமூச்சு விட்டவன், 
“சொல்லு தீக்ஷி, என்ன செய்யலாம்..?” என்று அக்காவிடம் கேட்டான். 
“உனக்கு என்ஜினீயரிங் படிக்க தானே ஆசை, அதை பார்க்கலாமா..?” என்று கேட்டாள். 
“ம்ப்ச்.. இல்லை தீக்ஷி, எனக்கு வேண்டாம், நான் பிஸ்னஸ் சம்மந்தமா ஏதாவது  படிக்கிறேன்..” என்று மறுத்தவனின் கையை ஆறுதலாக தடவி கொடுத்தவள், 
“உனக்கு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் ரொம்ப பிடிக்கும் தானே..? ஏன்  வேண்டாம்  சொல்ற..?” என்று கேட்டாள். 
“இப்போ இருக்கிற நிலையில நம்ம பிடித்ததுக்கு எல்லாம் எங்க இடம் இருக்கு தீக்ஷி..?” என்றவனிடம் தெரிந்த விரக்தியில் வேதனை  கொண்டாள். 
“ஏன் மனோ  இப்படி எல்லாம் பேசுற..? நான் உனக்கு  செய்ய மாட்டேனா..?” என்று கேட்டாள். 
“கண்டிப்பா செய்வ, செஞ்சுட்டும் இருக்க, ஆனா நீ..?  உன்னோட சந்தோசம்.. அதை நான் பார்க்கணும் இல்லை..” என்று பொறுப்பான தம்பியாக பேசினான். 
“நீ என்னை கண்டிப்பாவே பார்த்துக்கணும், எனக்கும் அது ரொம்ப வேணும் மனோ, நீங்க எல்லாம் இல்லாம இந்த கொஞ்ச வருஷத்திலே நான் ரொம்ப பட்டுட்டேன், ஆனா.. அதுக்காக எல்லாம் உனக்கு பிடிச்சதை நீ  ஏன் செய்யாம போணும்..?”என்று கேட்டாள். 
“ஏன் தீக்ஷி ஒரு மகனா எனக்கும் அப்பா பிஸ்னஸ் பார்த்துகிற கடமை இருக்கு தானே..? எல்லா பொறுப்பையும் உன் தலையில கட்டிட்டு நான் மட்டும் எனக்கு பிடிச்சதை செஞ்சுகிட்டு சுயநலமா இருக்க முடியுமா..? சொல்லு..?” என்று அக்காவை பார்த்து கேட்டான். 
“கண்டிப்பா உன்னோட கடமையை நீ செய், ஆனா அது அவரோட சொத்தை பாதுகாக்குறது மட்டும் இல்லை, அவரோட விருப்பத்தை நிறைவேத்துறதும்  ஒருவகை  கடமை தான் மனோ..” என்றவள் அவனின் கையில் ஒரு பைலை கொடுத்தாள். 
அதில் அரசு  தீக்ஷிக்கு MBA படிக்க பார்த்து வைத்திருந்தது போல், மனோக்கும் மெக்கானிக்கல் படிக்க பெஸ்ட் காலேஜ் லிஸ்ட் எடுத்து வைத்திருந்தார். 
“இது எல்லாம் அப்பா உனக்காக  தேடி பார்த்து வச்சிருந்த காலேஜஸ், ஆனா என்ன..?  எல்லாமே சென்னை மட்டும் தான்..” என்று சிரிப்புடன் சொன்னாள்.
 ஏனெனில் மனோ வீட்டை விட்டு இருக்க மாட்டான், அதிலும் முக்கியமாக ராணி இல்லாமல் இருக்கவே  மாட்டான் என்று நன்றாக தெரிந்து வைத்திருந்தார். அம்மாவின் மிகவும் செல்ல பிள்ளை.. அதை நினைத்த தீக்ஷிக்கு கண்ணில் கண்ணீர் பெருகவும், தம்பியை நினைவில் கொண்டு தன் கண்ணீரை அடக்கினாள். 
“அப்பாக்கு நான் அம்மா இல்லாமல் இருக்க மாட்டேன்னு நல்லா தெரியும் தானே தீக்ஷி, அப்போ என்னையும் அவங்களோட கூட்டிட்டு போயிருக்கலாம் இல்லை..” என்று  துக்கத்தில் சொல்லிவிட்டவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டாள் தீக்ஷிதா. அக்காவின் அறையில்  அதிர்ந்து பார்த்தவனை முகம் சிவக்க முறைத்தவள், 
“அப்போ.. அப்போ உனக்கு நான் வேண்டாமா..? என்ன பேசுற நீ..?” என்று கத்தவே செய்துவிட்டாள்.  
“தீக்ஷி.. தீக்ஷி.. ப்ளீஸ். நான் அதை மீன் செய்யல, அம்மா.. அம்மா..” என்று திணறியவனை ஆதங்கத்தோடு பார்த்தாள். 
“எனக்கும் அம்மா, அப்பா வேணும் தான், ஆனா இல்லை என்ன செய்ய..? சொல்லு, நாமும் ஏதாவது செஞ்சுகிட்டு அவங்ககிட்ட போயிடலாமா..?” என்று  குமுறலோடு கத்தினாள். 
“தீக்ஷி.. என்ன பேசுற நீ..?” என்று அதுவரை அவர்களின் பேச்சில்  தலையிடாமல் நின்றிருந்த அதிதி கோபமாக கேட்க, தருண் இருவரையும் அழுகையோடு பார்த்திருந்தான். அவனின் அழுகையில் தங்களின் தவறு புரிந்த அக்கா,  தம்பி இருவரும் அவனை அணைத்து கொள்ள, தானும் அவர்களை அணைத்து கொண்ட  தருண், 
“நீங்களும் என்னை விட்டு போக போறீங்களா..? அப்பா என்னையும் கூட்டிட்டு போங்க, எனக்கும் அம்மா பார்க்கணும், ராணிம்மா, அரசுப்பா எல்லாம் பார்க்கணும்..” என்று அழுகையோடு கேட்க, எல்லோரும் அதிர்ந்துவிட்டனர். 
“இப்போ உங்களுக்கு சந்தோஷமா..? என்ன பேசுறோம்ன்னு யோசிச்சு பேசமாட்டிங்களா..?” என்று விஷ்வஜித் எல்லையில்லா கோபத்தோடு கேட்டபடி வீட்டிற்குள் வர, இந்திரஜித் இறுகிய முகத்தோடு வந்தான்.
“தீக்ஷி என்ன இதெல்லாம்..? அவன்தான் எதோ சின்ன பிள்ளை துக்கத்துல பேசுறான்னா நீயும்  இப்படி பேசலாமா..? உன்கிட்ட இருந்து நாங்க இதை எதிர்பார்க்கல..” என்று விஷூ அதிர்ப்தியாக சொல்ல, தீக்ஷி மன்னிப்பாக இந்திரஜித்தின் இறுகிய முகத்தை பார்த்தாள். 
“இல்லை.. மனோ சொல்லவும்  ஆத்திரத்துல..”  என்று தீக்ஷி தான் பேசியதற்கு நியாயம் கற்பிக்க  முடியமால் தடுமாறினாள். 
“நீங்க ரெண்டு பேரும் ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோங்க, உங்களுக்கு நாங்க எப்படின்னு  தெரியாது..? ஆனா எங்க  எல்லோருக்கும் நீங்க ரொம்ப முக்கியம் தான், உங்களை சுத்தி தான் நாங்களும் இருக்கோம்.. என்ன தீக்ஷி அப்படித்தானே..?” என்று இந்திரஜித்தை கண் காட்டி கேட்க, பதில் சொல்ல முடியா தீக்ஷி  தடுமாற, அவர்களின் அணைப்பில் இருந்த தருணை அணைத்து கொண்ட விஷ்வஜித், 
“இதோ என் மகன் தருண், அவனுக்கு நீங்க கண்டிப்பா வேணும், எனக்கு அவன் வேணும்..  அவன் இல்லாம நான் இல்லை..” என்று விஷ்வஜித் சொல்லி கொண்டிருக்கும் போதே, 
“ஆமாமாம்.. இவங்க அப்பா, மகன் இல்லாம நானும் இல்லை..”  என்று அதிதி சொல்லிவிட, மனோ புரியாமல் பார்த்தான் என்றால் மற்றவர்கள் அவளை கடுப்பாக முறைத்து பார்த்தனர்.  
அதிலும் விஷ்வஜித் அவளை பார்வையாலே எரிக்க, அவனின் அதீத கோவத்தில் அதிதியின் கால்கள் நடுக்கம் காண, முகம் மட்டும் எப்போதும் போல் கெத்தாக தான் வைத்திருந்தாள்.  
“நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டிருக்கேன்..? குறுக்கால பூந்து காமெடி செஞ்சுட்டு இருக்கா..” என்று முணுமுணுத்தவனின் சத்தம் கேட்ட அதிதி, 
“என்ன..? நான் காமெடி செஞ்சிட்டு இருக்கேனா..? ரொம்ப சீரியஸா சொல்லிட்டிருக்கேன் ஆமா..”  என்று  முகத்தை உர்ரென்று வைத்து கொண்டு விஷ்வஜித்திடம் சொன்னாள். 

Advertisement