Advertisement

“இதிலென்ன ஜோக் இருக்கு, பிசினஸை பார்த்துகிற எங்களுக்கு தெரியாதா..? பிஸ்னஸ் லாஸ்ல தான் போகுதா இல்லையான்னு..?” என்று ஒருவர் ஆரம்பிக்க, மற்றவர், 
“நாங்கதான் சொன்னோம் இல்லை, பிசினஸ் ரெண்டு வருஷமா லாஸ்ல போகுதுனு, அதை லாபத்துல கொண்டு போக பில்டிங் இடத்தை எல்லாம் அடமானம் வைச்சிருக்கோம், அதனால கடைங்களோட மதிப்பை பத்தி எல்லாம் நீ பேசமுடியாது..”  என்றார் அப்பட்ட பொய்யாக.. 
“ஓஹ்.. ப்ராப்பர்ட்டி  டாகுமெண்ட் இல்லாமலே  அடமானம் வச்சிருக்கீங்களா..?”  என்று டாகுமெண்ட்டை எடுத்துவந்து காட்டி கேட்டாள். 
“அது.. அது  அடமானம்ன்னா அடமானம் இல்லை, அந்த ப்ராப்பர்ட்டி எல்லாம் காட்டி எங்க தொழில் ப்ரண்ட்ஸ்கிட்ட காசு வாங்கியிருக்கோம், அதை கொடுக்கணும் இல்லை..”  என்று மழுப்ப பார்த்தார். 
“சரி.. அவங்களை என்னை வந்து பார்க்க சொல்லுங்க, நான் பேசிக்கிறேன்..” என்று முடித்தவளை வெளிப்படையாகவே கோவமாக பார்த்தவர்கள், 
“இதெல்லாம் உனக்கெதுக்கு..? நாங்க பார்த்துகிறோம், நாங்க சொல்ற இடத்துல மட்டும் கையெழுத்து போட்டு நாங்க கொடுக்கிற காசை வாங்கிட்டு போயிட்டே இரு.. அவ்வளவுதான்..” என்றார் ஆக்ரோஷமாக. 
 
“கையெழுத்து போடலைன்னா..?”  என்று தீக்ஷி நன்றாக நிமிர்ந்து அமர்ந்து கேட்டாள்.
“போட வைப்போம்..”  என்று மிரட்டியவரின் கன்னத்தில் அதி வேகமாக இறங்கியது விஷ்வஜித்தின் கைகள். அதை எதிர்பார்க்காத எல்லோரும் முதலில் அதிர்ச்சியாக பார்த்தவர்கள், பின் ஆத்திரத்துடன் எகிறினர். 
“வேண்டாம்..” என்று மேலும் அடிக்க ஓங்கிய  விஷ்வஜித்தின் கைகளை பிடித்து கொண்ட தீக்ஷிதாவிடம், 
“என்ன ஆள் வச்சி எங்களை அடிக்கிறியா..?  எப்படி நீ எங்களுக்கு பிஸினஸை விக்காம போறேன்னு நாங்களும் பார்க்கிறோம்..” என்று மிரட்டலாக கத்தினார்கள். 
“நான் பிஸினஸை எப்போதும் விக்க போறதில்லை, நானே நடத்த போறேன்..” என்று தீக்ஷி உறுதியாக சொல்ல, மேலும் வெறி கொண்டவர்கள், 
“என்ன நீ பிஸினஸை  நடத்த போறியா..? ஏன்னு கேட்க ஆள் இல்லாத நீ எங்களை எதிர்த்து பிசினஸ் செய்ய போறியா..?” என்று ஒருவர் ஏளனமாக சொல்ல, மற்றவர், 
“அதிலும் ஒரு பொண்ணு நீ..?   நீ எங்களை மீறி பிஸினஸை நடத்திடுவியா..? நாங்க விட்ருவோமா..?”  என்று ஏளனத்துடன் சவாலாக சொல்ல, தீக்ஷியின் கையை உதறி அவர்களின் மீது பாய்ந்துவிட்ட விஷ்வஜித்தை இழுத்து பிடித்து நிறுத்திய தீக்ஷி, 
“உங்க பாஷையில யாருமே இல்லாத  ஒரு பொண்ணு நான்..!!!  உங்களை எதிர்த்து பிஸ்னஸ் செய்ய தான் போறேன், உங்களால முடிஞ்சதை பார்த்துக்கோங்க..”  என்று தீவிரமாக சவால் விட்டவளை குரோதத்துடன் பார்த்து கொண்டே கிளம்பினர், 
இத்தனை களேபரத்திலும் வாயை திறக்காமலே இருந்த ராமலிங்கம், தீக்ஷியின் தீர்க்கமான பார்வையை எதிர் கொள்ள முடியாமல்  அவர்களுடனே வால் பிடித்து கொண்டு ஓடி விட்டார்.
“என்னடா சொல்ற..? நீங்க ரெண்டு பேரும்..?” என்று ஊட்டி சென்றிருந்த இந்திரஜித் ஆனந்தனிடமும், சுபாவிடமும் அவனுக்கும், தீக்ஷிக்கும் திருமணம் செய்து வைக்க சொல்லி கேட்க அவனை அதிர்ச்சியாக பார்த்த ஆனந்தன், மனைவியை பார்க்க,அவர்  இது தனக்கு முன்னமே தெரியும் என்பது போல இருந்தார். 
“ஆமா.. எனக்கும், அவளுக்கும் விருப்பம் இருக்கு..”, என்று ஒத்து கொண்ட இந்திரஜித், தங்களுக்கு  திருமணம் செய்து வைக்க சொல்லி  கேட்டான். ஆனந்தனுக்கு மறுக்க எதுவும் இல்லாது போக, மனைவியை பார்த்தார். முதலில் எப்படியோ ஆனால் தீக்ஷி இப்போதிருக்கும் நிலையில் மறுக்க முடியாமல் இருந்துவிட்டவரின் மவுனம் சம்மதமாக ஏற்று கொள்ளபட்டு, அடுத்த மாதம் திருமணம் வைக்க நாள் குறித்துவிட்டு தீக்ஷியை பார்க்க வந்தான். 
“தீக்ஷி.. உன்கிட்ட  ஒரு முக்கியமான  விஷயம் பேசணும்..” என்று சந்தோஷமான மனநிலையில் இருந்த இந்திரஜித், தீக்ஷியின் அமைதியை கவனிக்காமல் விட்டவன், 
“நாம கல்யாணம் செஞ்சுக்கலாமா..?” என்று கேட்டான். அவனின் திடீர்  கேள்வியில் அதிர்ச்சியான தீக்ஷியின் கையை பிடித்து கொண்ட இந்திரஜித், 
“அப்பா, அம்மா கிட்ட பேசிட்டேன் தீக்ஷி,  அவங்களுக்கும்  ஓகே, இப்போ நீ ஓகே சொல்லிட்டா நாம அடுத்த மாசம் கல்யாணம் செஞ்சுக்கலாம்..” என்றான் உற்சாகமாக. 
“இப்போ.. இவ்வளவு சீக்கிரம் ஏன்..?” என்று தீக்ஷி கேட்க, 
“என்ன இது சீக்கிரமா..? நான் இரண்டு வருஷத்துக்கு முன்னாடியே நாம கல்யாணம் செஞ்சுக்க நாள் எல்லாம் குறிச்சுட்டேன், ஆனா நீ படிக்க போறான்னதால அது டிராப் ஆயிடுச்சு, இனி நீ மறுக்க எந்த காரணமும் இல்லை..” என்றவன், அவளை தோளோடு அணைத்து கொண்டு மேலும், 
“உன்னை தனியா விட்டு என்னால இருக்க முடியல, எந்நேரமும் நீ எப்படி இருக்க..?ங்கிற    நினைப்பு    மண்டைக்குள்ள குடைஞ்சிட்டே இருக்கு, இனியும் என்னால தாங்க முடியாது, நீ என்னோட இருந்துரு..”  என்று தன்னை நினைத்து கவலை படுபவனின் கவலை புரிந்தவள், 
“நீங்க  என்னை நினைச்சு ஏன் இவ்வளவு கவலைபடுறீங்க..? நான் நார்மலாதான் இருக்கேன்..” என்றவளை விலக்கி முகம் பார்த்தவன், 
“எது நீ நார்மலா இருக்கியா..?” என்றவனுக்கு USல் இருந்து வந்த அன்று அவள் அழுத அழுகை, துடித்த துடிப்பு.. கதறிய கதறல்..  எல்லாம்  இன்னமும்  அவள்  மனதில் அதே ரணத்தோடு தான் இருக்கிறாள் என்று தெளிவாக காட்டியது. 
ஆனால் இதில் அவனை மிகவும் பாதித்தது, அவள் அவளின் ரணத்தை வெளியே காட்டாமல் தனக்குள்ளே வைத்து மருகுவது, அதை எப்படி தன்னால் அனுமதிக்க முடியும்..? அவளின் உயிராய் நான் இருக்க, அவள் ஏன் தனியே அழுது துடிக்க வேண்டும்..? என்ற முடிவாலே திருமண நாளை குறித்துவிட்டான். 
“இங்க பாரு தீக்ஷி..? உன்னோட இந்த வேதனைக்கு, வலிக்கு, அழுகைக்கு  முடிவே கிடையாது,  ஆனா உன்னோட வேதனையை குறைக்க என்னோட தோள் இருக்கு, நீ சாய்ஞ்சு அழுக என் நெஞ்சு இருக்கு,  உன்னோட வலியை குறைக்க என்னோட காதல் இருக்கு.. அப்பறம் நீ ஏன் தனியா உனக்குள்ள வச்சி மருகனும் சொல்லு, அதனால நீ என்னோடவே இருக்க  முதல்ல நீயும் நானும் கல்யாணம் செஞ்சுக்கலாம்..”  என்று மிக நீளமாக தன் முடிவை சொன்னவனின் காதலில் தீக்ஷிக்கு அவன் சொல்வது போல் திருமணம் செய்து கொண்டால் தான் என்ன..? என்றே தோன்றியது. 
ஆனால் அரசு.. அவரின் ஆசை, கனவு, தன்  மேல் அவர் கொண்ட நம்பிக்கை.. இவற்றை எல்லாம் விட அவரின் பிஸினஸை, அவரின் வாழ்நாள் அடையாளத்தை கைப்பற்ற நினைக்கும் நம்பிக்கை துரோகிகளிடம் இருந்து அதை காப்பாற்றாமல் போனால் அவருக்கு மகளாய் பிறந்து என்ன பயன்..? 
தனக்கு உயிர் கொடுத்து இருக்கும் வரை தன்னை பாராட்டி சீராட்டி வளர்த்த தன் பெற்றவர்களுக்கு மகளாய் செய்யும் கடமையும் உண்டு தானே.. அதற்கு பிறகு தானே காதல், கல்யாணம் எல்லாம்..  என்று நினைத்தவள் இந்திரஜித்திடம் இருந்து விலகி அமர்ந்தாள். அவளின்  விலகளிலே அவளின் மறுப்பை கண்டு கொண்ட இந்திரஜித் அவளையே கூர்மையாக பார்த்தான். 
“இன்னிக்கு நம்ம கம்பெனி பார்ட்னர்ஸ் என்னை பார்க்க வந்திருந்தாங்க..” என்று சொல்லவும்,   “சரி.. என்ன சொன்னாங்க..?”  என்று கேட்டான். 
“பிஸினஸை அவங்களுக்கே விக்க சொல்லி கேட்கிறாங்க.. அதுவும் இந்த மதிப்புக்கு..”  என்று அவர்கள் சொன்ன மதிப்பை கேட்ட இந்திரஜித், 
“வாட்..? என்ன தைரியம் அவங்களுக்கு..?” என்று ஆத்திரத்தோடு கொதித்தவன், “நீ என்ன சொன்ன..?” என்று கேட்டான். 
“நான் விக்க போறதில்லை.. நானே பிசினஸ் எடுத்து நடத்த போறேன்னு சொல்லிட்டேன்..” என்றாள். 
“குட், நல்ல விஷயம் தான் தீக்ஷி, நாமளே  ஆள் போட்டு அதையும் பார்த்துக்கலாம், விடு..” என்றவனிடம், 
 “நான்.. நானே தான் பார்க்கணும்..” என்றாள் உறுதியாக. 
“ஓஹ்.. அப்போ  நான் வேண்டாமா..?”  என்று இந்திரஜித்தின் கோவமான கேள்விக்கு, 
“ நீங்க வேண்டாம்ன்னு நான் எப்போ சொன்னேன்..? பிஸ்னஸ் நான் பார்த்துகிறேன்னு தான் சொன்னேன்..”  என்றாள். 
“அதுக்கு இதுதான் அர்த்தம், நீயே ஏன் தனியா பார்த்துக்கணும்..? நான் உனக்கு உதவி செய்ய மாட்டேனா..? உன்னால எப்படி தனியா பிஸ்னஸ் பார்க்க முடியும்..?” என்று கேட்டவனை கோவமாக பார்த்த தீக்ஷி, 
“ஏன் என்னால தனியா  பிஸ்னஸ் பார்க்க  முடியாதா..? நீங்களும் அவங்களை போல தான் என்னை நினைக்குறீங்களா..?”  என்று தீர்க்கமாக கேட்டாள். 
“எவங்களை போல..?” என்று புரியாமல் கேட்டவன், “இங்க பாரு தீக்ஷி உன்னால தனியா பிஸ்னஸ் பார்க்க முடியுமா..?  முடியாதான்னு நான் சொல்லலை, நான் இருக்கும் போது நீ  ஏன் தனியா கஷ்டபடணும் தான் சொல்றேன்..”, என்று பொறுமையாக சொன்னவன், 
“முதல்ல நம்ம கல்யாணம் முடிச்சுப்போம், அப்பறம் இதை எல்லாம் நாம ரெண்டு பேரும் சேர்ந்தே பார்த்துப்போம்..”  என்று திருமண பேச்சில் முடித்தான். 
“இல்லை.. எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம், நான் முதல்ல எங்க அப்பாக்கு ஒரு மகளாய் செய்ய வேண்டிய கடமை இருக்கு, அதை முடிச்சிட்டுதான் கல்யாணம் எல்லாம்..”  என்று முடிவாக சொன்னாள். 
“ஏன் கல்யாணம் முடிச்சு என் பொண்டாட்டியா நீ உங்க அப்பாக்கு கடமை செஞ்சா ஆகாதா..?” என்று அவளை உறுத்து விழித்து கேட்டான். 
“ப்ளீஸ்.. இப்போ கல்யாணம் வேண்டாம், கொஞ்ச நாள் போகட்டும்..”, என்றவளை இந்திரஜித் முகம் சிவக்க பார்த்தான். 
“என்னை ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்க..? நீங்க சொல்றபடி நமக்கு  இப்போ கல்யாணம்  நடந்தாலும்  நான் உங்களுக்கு ஒரு நல்ல மனைவியா இருப்பேனான்னு எனக்கு தெரியல..” என்றவளுக்கு 
“பெற்றவர்களின் இழப்பு.. அதில் இருந்து இன்னும் மீளாமல் தவிப்பவளிடம் அவர்களின் பார்ட்னர்ஸ் செய்த ஏமாற்று வேலை..  அதைவிட தன்னை ஏளனமாக பேசி மிரட்டி, அப்பாவின் உழைப்பை, பிஸினஸை மொத்தமாக பறிக்க பார்க்கும் அவர்களின்  நம்பிக்கை துரோகத்திற்கு தக்க பதிலடி கொடுக்காமல்  திருமணம் எப்படி முடியும்..?
“இப்போ என்ன சொல்ல வர்ற நீ..?”  என்று இந்திரஜித் அவளின் உறுதியில் கோவமாக கேட்டான். 
“கொஞ்ச நாள் கழிச்சு செஞ்சுக்கலாம்..” என்றாள். 
“தீக்ஷி நான் சொல்ல வர்றதை புரிஞ்சுக்கோ, உனக்கு இந்த  பிஸ்னஸ் டென்சன் எல்லாம் வேண்டாம், நான் பார்த்துகிறேன்.. நீ என்னோடவே இரு, எனக்கு அது போதும்..”  என்று இறுதியாக  ஒருமுறை கோவத்தை கட்டுப்படுத்தி பொறுமையாக கேட்டான். 
“இல்லை.. நானே செய்றேன், நீங்க என்னோட  இருங்க போதும்..” என்று தீக்ஷி அவளின் முடிவிலே நிற்க, கோவம் கொண்டவன், 
“போடி.. உன் பிஸினஸை நீயே கட்டிக்கிட்டு அழு, நான் ஏன் உன்னோட இருக்கணும்..?, இருக்க மாட்டேன்,    உனக்கு தான் நான் வேணாம் இல்லை, அப்போ எனக்கும்  நீ  வேணாம்.. இனி  நமக்குள்ள ஒன்னும் கிடையாது.. ராட்சஸி..”  என்று கத்தி சொல்லவிட்டு செல்ல, தீக்ஷியின் கண்கள் கலங்கி விட்டாலும் முகம் மிகவும் இறுகி தான் போனது.

Advertisement