Advertisement

“உண்மை தான் தீக்ஷி.. அவங்களும், லிங்கமும் சேர்ந்து தான் இந்த இரண்டு வருஷமா கம்பெனி காசு எல்லாம் போட்டி போட்டு எடுத்துட்டு இருக்காங்க..” என்றான் வெறுப்பாக. 
“எனக்குமே இவங்க சொல்லித்தான் தெரியும்..”, என்று பாரதியை கைகாட்டியவன், “தெரிஞ்சதுக்கு அப்பறம் ரகசியமா விசாரிச்சுதுல நிறைய காசு எடுத்து இருக்காங்க.. லிங்கம் கிட்ட பவர் ஆப் அட்டாணி இருக்கிறது அவங்களுக்கு வசதியா போச்சு.. ரொம்ப ஈஸியா எடுத்துகிறாங்க, அவங்களை கேள்வி கேட்கவும் யாருமில்லை..”  என்ற விஷ்வஜித்,
முன் போல் இருந்திருந்தாலாவது  முதல்லே கண்டுபிடித்திருப்பான், ஆனால் அவன் பிசினஸை எல்லாம் முழுவதுமாக விட்டுவிட்டான். இந்திரஜித், ஆனந்தன் உதவி  கேட்டாலோ, இல்லை  சத்தம் போட்டால் மட்டுமே ஏதாவது ஒன்றிரண்டு வேலை செய்வான். 
எல்லாவற்றிலும் இருந்து மனம் விட்டு போயிருந்தது, எனோ தர்ஷினியை அவசர அவசரமாக திருமணம் செய்து அவளுக்கு நல்ல கணவனாக வாழாமல் அவளின் வாழ்க்கையை முடிந்துவிட்டதாக ஒரு குற்ற உணர்ச்சி. அதனாலே எதிலும் மனம் ஈடுபடவில்லை, 
ஏனோ தனோனென்று தருணுக்காக மட்டுமே ஓடி  கொண்டிருத்தவனை சில மாதங்களுக்கு முன்பு பாரதி சந்தித்து விஷயத்தை சொல்லவும், தனக்கு தெரிந்த ஆட்கள் மூலம் விசாரித்து வைத்திருந்தான். 
“இனி தீக்ஷி தான் என்ன செய்ய வேண்டும்..?”  என்று சொல்ல வேண்டும், அவளுக்கு தாங்கள் சப்போர்ட் செய்தால் போதும், அதுவும் தேவையில்லை தான், அவளே அவர்களை பார்த்து கொள்வாள் என்ற நம்பிக்கையும் அவள் மேல் இருந்தது.
“நான் முதல்ல கொஞ்ச நாள் AAR போறேன், அங்க எப்படி..? என்னன்னு தெரிஞ்சுகிட்டு அப்பறம் என்ன செய்றதுன்னு பார்க்கலாம்..”  என்று தீக்ஷி பொறுமையாக யோசித்து சொல்லவும், அவளின் முடிவு விஷ்வஜித்திற்கு மேலும் நம்பிக்கை சேர்த்தது. 
எடுத்தவுடனே அதிரடியாக இறங்காமல், முதலில் அவர்களை.. அவர்களின் ஏமாற்றுத்தனத்தை தெரிந்து கொண்டு பிறகு அவர்களை சந்திப்பது.. இதுதான் பதுங்கி சமயம் பார்த்து பாய்வது.. இந்த அவளின் முடிவை புரிந்து கொண்டவனுக்கு அரசின் ஞாபகம் தான் வந்தது. 
தனக்கு குரு போல் இருந்தவர், தன்னிடம் அவர் இறுதி வரை எதிர்பார்த்ததும் இந்த பொறுமை தானே..!!  பிசினசிற்கும் மிகவும் தேவைப்படும் பொறுமை..!! அது அவரின்  மறுஉருவம், அவரின் பெண்ணிடம்  இருப்பதில் அவள் மேல் அவர் கொண்டிருந்த அந்த அலாதியான நம்பிக்கை எத்தகு உண்மை என்று இந்த நொடி புரிந்தது. 
“சரி தீக்ஷி.. அப்படியே செய்யலாம், உனக்கு எதாவது ஹெல்ப் தேவைப்பட்டால் கேளு..” என்று முடித்து கொண்டான் விஷ்வஜித். 
“அங்கிள்.. இன்னிக்கு நானும் AAR வரேன்..” என்று காலையில் அவளிடம் சம்பளத்திற்காக பணத்தை எடுப்பது பற்றி பேச வந்தவரிடம் சொல்ல, பதட்டப்பட்ட அவர், 
“ஏன்ம்மா இவ்வளவு அவசரம்..? இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு வா..”  என்றார். 
“பராவயில்லை அங்கிள், வீட்லே இருக்க எப்படியோ இருக்கு, ஒரு சேஞ்சுக்காக  சும்மா கொஞ்ச நேரம் தான் வரேன்..”, என்றவள், அவர்களுக்கு சந்தேகம் வராதது போல்  முதல் சில வாரங்கள் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் மட்டும் சென்று வருவாள். 
அங்கு யாரிடமும் எதுவும் கேட்க மாட்டாள், எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பது போல் தான் பார்ப்பாள். கடைகளுக்கும் சாதாரணமாக சுற்றி வருவது போல் போய்விட்டு வந்துவிடுவாள். 
மீதி நேரம் எல்லாம் தருணுடன், அதிதியுடன்  தான் அவளின் பொழுது நகரும், இந்திரஜித் முடிந்த வரை சென்னையில்  இருப்பது போல் பார்த்து கொள்பவன், ஏதாவது அவசரம் என்றால் மட்டுமே தான் மற்ற ஹோட்டல்களுக்கும், ஊட்டிக்கும் கிளம்புவான். அதற்கும் தீக்ஷி தான் வற்புறுத்தி அனுப்ப வேண்டியிருக்கும். 
“தீக்ஷி.. உங்களோட பார்ட்னர்ஸ் உள்ளுக்குள் எதோ கூட்டணி போட்டு பேசி உன்னை பார்க்க வந்துட்டு இருக்காங்க, மே பி பிசினஸை அவங்களுக்கே கொடுக்க சொல்லி கேட்பாங்கன்னு நினைக்கிறேன்..” என்று விஷ்வஜித் தீக்ஷியை சந்தித்து சொல்ல, அதை பற்றி முன்பே கணித்து வைத்திருந்த தீக்ஷி, 
“ஆமாம்.. பிஸினஸை அவங்களுக்கு விக்க சொல்லி கேட்க ஏற்பாடு செஞ்சுட்டு இருக்காங்க..” என்று சொன்னாள். 
“நீ என்ன முடிவெடுத்திருக்க..?” என்று விஷ்வஜித் கேட்டான். 
“நீங்க என்ன சொல்றீங்க..?” என்று விஷ்வஜித்திடமே கேட்டாள். 
“ம்ம்.. என்னை கேட்டா நீயே பாருன்னு தான் சொல்வேன், ஆனா ஜித்து..” என்று தம்பியை நினைத்து தயங்கினான். அவன்  ஆனந்தனிடமும், சுபாவிடமும் அவனின், தீக்ஷியின் திருமணம் பற்றி பேசி முடிவெடுத்துவிட்டான்  என்று தெரியும். 
இரண்டு வருடங்களுக்கு முன்பே திருமணம் செய்ய யோசித்திருந்தவன், இப்பொது முடிக்காமல் விடமாட்டான் என்று புரிந்திருந்த விஷ்வஜித்,  பிசினஸை பற்றி மேற்கொண்டு பேச தயங்கினான். இது தீக்ஷி, இந்திரஜித் சமந்தபட்டது, அவர்கள் இருவரும் தான் முடிவெடுக்க வேண்டும். 
ஆனாலும் அரசு.. அவரின் ஆசை, கனவு.. அதை மறக்க முடியாதே.. மறுக்கவும் கூடாதே.. ஒரு மகளாக அவளின் கடமை என்று ஒன்றும் உள்ளதே..!! அதை பற்றி யோசித்து கொண்டிருந்தவனிடம்,
 “உங்க தம்பி என்ன..?” என்று அவன் சொல்ல வருவது புரியாமல் கேட்டாள்.  
“அவன்..” என்று விஷ்வஜித் சொல்ல ஆரம்பிக்கும் போது, 
“தீக்ஷி.. உன்னை பார்க்க உங்க பார்ட்னர்ஸ் எல்லாம் வந்திருக்காங்க..” என்று பாரதி படபடப்போடு சொன்னார். அவரின் டென்சன் புரிந்தவள், “ஆண்ட்டி பார்த்துக்கலாம், இருங்க..” என்று சொல்லிவிட்டே, விஷ்வஜித்துடன் அவர்களை சந்திக்க சென்றாள். 
அங்கு விஷ்வஜித்தை எதிர்ப்பார்க்காமல் ராமலிங்கத்தின் முகம் மட்டுமில்லாமல் மற்றவர்களின்  முகமும்  திகைப்பை காட்ட, அதை கண்டு கொள்ளாத தீக்ஷி, “வாங்க, உட்காருங்க.. சுப்பு.. இவங்களுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வாங்க..” என்று உள்நோக்கி குரல் கொடுத்தாள். 
விருந்தினர் உபசரிப்பு முடிந்ததும், “சொல்லுங்க.. என்ன விஷயம்..?” என்று கேட்டாள். “அது.. அது..” என்று  ஒரு பார்ட்னர் இழுக்க, மற்றவர், 
“அது ஒன்னுமில்லம்மா.. நம்ம பிஸினஸை பற்றி கொஞ்சம் பேசனும்..” என்றார். 
“சொல்லுங்க..” என்று சாதாரணமாக கேட்ட தீக்ஷியை குறைத்து எடை போட்டவர்கள், 
“நம்ம பிஸ்னஸ் கொஞ்ச நாளா ஆட்டம் காணுது, லாபம்ன்னு பார்த்தா ஒன்னுமே  இல்லை, லாஸ் தான் நிறைய ஆகுது, அதனால் எங்களுக்கு எல்லாம் ஒரு  பிரச்சனையும் இல்லை,  எங்க எல்லோருக்கும்  இதைத்தவிர மத்த பிசினஸ் இருக்கு, ஆனா.. உனக்கு அப்படியில்லையே, அதுவும் இப்போ நீ இருக்கிற நிலைமையில..”  என்று பாவமாக சொல்வது போல சொல்ல, தீக்ஷி உள்ளங்கையை இறுக்கி மூடி தன் உணர்ச்சியை அடக்கி கொண்டு அவர் சொல்ல வருவதை கவனிக்க செய்தாள். 
“அதான் உனக்காக நாங்க எல்லோரும் யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்திருக்கோம்..” என்று ஒருவர் முடிக்க, மற்றவர், “அது என்ன முடிவுன்னா..?  பிசினஸை க்ளோஸ் செஞ்சுடலாம்ங்கிற முடிவு தான்..”  என்று வருத்தமாக சொல்வது போல  சொல்ல, மற்றவரோ, 
“எனக்கு இதுல உடன்பாடு இல்லைப்பா, நம்ம அரசு பொண்ணுக்கு நாம எதாவது செய்யணும் இல்லை, அதை விட்டு இப்படி மொத்தமா  பிஸினஸை  மூடிட்டா இந்த பொண்ணு என்ன செய்யும்..?” என்று தீக்ஷிக்காக பேசுவது போல சொல்ல, இன்னொருவரும்,  “ஆமாம்ப்பா.. தீக்ஷிதாக்கு நாம ஏதாவது செய்யணும்..” என்று சப்போர்ட் செய்தார். 
“எங்களுக்கும் அரசு பொண்ணுக்கு செய்யணும்ன்னு ஆசைதான், ஆனா எப்படி செய்யறது..? இங்க பிஸ்னஸ் ரெண்டு வருஷமா லாஸ்ல தானே போய்ட்டு இருக்கு, எதைவச்சி  செய்ய..?” என்று மற்றவர் கேட்டார். 
“பேசாம ஒன்னு செய்யலாம், பிசினஸை எதுக்கு மூடனும், நாமளே ஆளுக்கு கொஞ்ச காசு தீக்ஷிதாக்கு கொடுத்துட்டு மொத்த பிசினஸையும் நாமளே வாங்கிப்போம்..”  என்றார். 
“என்னப்பா சொல்ற..? லாஸ்ல போற பிஸினஸை வாங்கி நாம என்ன செய்ய..?” என்று முதலாமவர் கேட்க, “அதுக்காக நம்ம அரசு பொண்ணை இப்படி ஒன்னுமே இல்லாம விட்ற முடியுமா…? அவளுக்கு யார் இருக்கா..? நாம்தானே ஏதாவது பார்த்து செய்யணும்..”, என்று மற்றவர் சொன்னார்கள். 
“சரிப்பா.. அரசுக்காக வாங்கிக்கலாம்..” என்று முடிவெடுத்தவர்கள், “என்னமா..? உனக்கு ஓகேதானே..?” என்று தீக்ஷியிடம் கேட்க, அதுவரை இவர்களின் நாடகத்தை எல்லாம் மவுனமாக பார்த்து கொண்டிருந்தவள், 
“உங்க  எல்லோருடைய கருணைக்கு ரொம்ப நன்றி.. நீங்களே சொன்னது போல பிஸினஸை நீங்க  எல்லாருமே எடுத்துக்கோங்க..”  என்றுவிட்டாள்.  அவளின் உடனடி சமந்தத்தில் மிகவும் மகிழ்ந்தவர்கள், 
“உனக்காக தான்மா லாஸ்ல போற பிஸினஸை நாங்க காசு கொடுத்து வாங்குறோம்..” என்று பெருந்தன்மையாக சொன்னவரிடம்,  
“எனக்கு எவ்வளவு தருவீங்க..?” என்று இறுகி போன முகத்துடன் கேட்டாள். அவளின் முகத்தில் தெரிந்த இறுக்கத்தை கண்டு கொண்ட ராமலிங்கத்திற்கு எதோ சரியில்லதாக தோன்ற, வாயை இறுக மூடி கொண்டார். 
“எவ்வளவு தரலாம்ப்பா..?” என்று மற்ற பார்ட்னர்களிடம் கேட்டவர், ஒரு மதிப்பை சொல்ல, அதுவரை சாதாரணமாக அமர்ந்திருந்த தீக்ஷி சத்தம் போட்டு சிரித்துவிட்டாள். அவளின் சிரிப்பை புரியாமல் பார்த்தவர்களை வெறுப்புடன் பார்த்த தீக்ஷி, 
“இப்போ நீங்க எனக்கு கொடுக்கிறதா சொன்ன பணம், AAR பில்டிங்  வேல்வியூ கூட இல்லை..” என்றவளை அதிர்ச்சியாக பார்த்தனர்.
“பிஸினஸை விடுங்க.. நம்ம கடைங்களோட மொத்த இடத்தோட மதிப்பு எவ்வளவு  தெரியுமா உங்களுக்கு..? இல்லை  நம்ம கம்பெனியோட மொத்த சேவிங்ஸ் எவ்வளவு தெரியுமா உங்களுக்கு..? இல்லை எங்க பேமிலியோட ப்ராப்பர்ட்டி என்னனென்ன..? அதோட மதிப்பு எவ்வளவு தெரியுமா உங்களுக்கு.? ம்ம்.. சொல்லுங்க..”  என்று குரலை உயர்த்தாமல் நிறுத்தி நிதானமாக கேட்டவளின் தோரணையை கண்டு கொண்டார்கள். 
“என்ன சொன்னீங்க..? லாஸ்ல போற பிஸ்னஸை எனக்காக நீங்க எல்லாம் காசு போட்டு வாங்குறீங்களா..? குட் ஜோக்..”  என்று நக்கலாக சொல்ல, தங்களை அவள் கண்டு கொண்டாள் என்று புரிந்து கொண்டவர்களும்  தங்களின் வேஷத்தை கலைத்தனர். 

Advertisement