Advertisement

காதல் ஆலாபனை 19
“நான் நாளைக்கு இந்தியா வரேன்..” என்று தீக்ஷி போன் செய்து இந்திரஜித்திடம் சொல்ல, 
“வந்துக்கோ.. அதை ஏன் என்கிட்ட சொல்ற..?” என்ற அவனின் கோவம் கண்டு லேசாக சிரித்தவள், 
“சரி, சொல்லலை.. விடுங்க..” என்றாள். 
“ராட்சஸி.. என்னை பாடப்படுத்துறதே உன் வேலை, ஏன் என்னை சமாதானம் செய்ய மாட்டியா..? விடுங்க சொல்ற.. திமிரு..” என்று கொதித்தவன், போனை வைத்துவிட, அடுத்து தருணிற்கு அழைத்தவள் இதையே சொல்லவும், அவனோ, 
“வா.. எனக்கென்ன..?”  என்று முறுக்கி கொண்டு சொன்னான்.  
“உனக்கென்னவா..? ஓய் என்னடா கொழுப்பா..?” என, 
“உன்னை விட எல்லாம் ஒன்னும் கிடையாது..” என்று அவனும் பேச, இருவரும் எப்போதும் போல சில  பல நிமிடங்கள் சண்டை போட இறுதியில், 
“போனா போகுதுன்னு நாளைக்கு ஏர்போர்ட் வரலாம்னு இருந்தேன், ஆனா நீ என்கிட்ட சண்டை போடுற இல்லை நான்   வரமாட்டேன்..” என்று தருண் பிகு செய்தான். 
“போ வராத.. நான் ஒன்னும் உன்னை பார்க்க ஏங்கிட்டு இல்லை..” என்று தீக்ஷியும் பதிலுக்கு பேசியே போனை வைத்தனர். 
இவள் US சென்ற இந்த இரண்டு வருடம் சில மாதங்களில்  மட்டும் குறைந்தது பத்து முறையாவது  இந்திரஜித் US வந்திருப்பான். தருணும் அந்த லீவ் இந்த லீவ் என்று இந்திரஜித்துடன் வந்துடுவான். பொங்கல் லீவிற்கு கூட இருவரும்  US தான் வந்திருந்தார்கள்.  
சொன்னாலும் கேட்பதில்லை, “நான் வருவேன்.. நீ எதுவும் சொல்லாதா..” என்ற இந்திரஜித்தின்  பிடிவாத பதில் தான் கிடைக்கும். முதல் ஒரு வருடம் இப்படியே கழிய அங்கு அந்த கவர்மெண்ட் ப்ராஜெக்ட்டிற்காக அவர்கள் கொடுத்த கெடு முடியும் நாளும் நெருங்கியது. ஆனால் இன்னும் ஐம்பது சதவீத வேலைகள் முடியாமலே இருக்க, அதை பற்றி இவன் கவலைபட்டது போலவும் தெரியவில்லை.. 
இவள் அதை பற்றி பேசினாலும் “பார்த்துக்கலாம் விடு..” என்று சில சமயம் பொறுமையாக சொல்பவன், “நீ ஏன் அதை பத்தி பேசுற..? அதான் என்னை விட்டுட்டு US கிளம்பி வந்துட்ட  இல்லை..” என்று கோவப்பட்டு சண்டையும் போடுவான். இதில் அவனுடன் தருணும் அடிக்கடி  கிளம்பி இங்கு வந்துவிட, இவளுக்கு தான் “நான் US வந்திருக்கவே கூடாது..” என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. 
அவனின் படிப்பு, இவனின் பிசினஸ்… இரண்டை பற்றியும் இருவரும் கருத்தில் கொள்ளாமல் இருக்க, இவள் தான் அவர்களை நினைத்து கவலை பட ஆரம்பித்துவிட்டாள். இதை இப்படியே விடக்கூடாது.. என்று மனதில் கங்கணம் கட்டி கொண்டவள், அடுத்த முறை இருவரும் வந்தபோது பார்க்க மறுத்து, சண்டை போட்டவள், 
“இனி நீங்க ரெண்டுபேரும் ஓயாம இங்கு வரத்தேவையில்லை, நான் நல்லாத்தான் இருக்கேன், நீங்க உங்க பிசினஸை பாருங்க..” என்று இந்திரஜித்திடம் சத்தம் போட்டவள், தருணிடமும், 
“ஒழுங்கா படிக்கிற வேலையை மட்டும் பாரு.. இங்க வராத..” என்று கோபமாக மிரட்டிவிட்டாள். அதில் இருவருக்கும் அவள் மேல் எக்கச்சக்க கோபம், 
“நீ என்னை விட்டு வந்தும் நான் உன்னை வரேன் இல்லை, என்னை சொல்லணும், இனி வரமாட்டேன்,  ஐ  ஹேட் யூ..” என்ற தருணும், 
“போடி.. ரொம்பத்தான் பண்ற, இனி உன்னை பார்க்க வந்தா எங்களை என்னன்னு கேளு..?” என்று இந்திரஜித்தும் அவளிடம் சண்டை போட்டுவிட்டு வந்துவிட்டாலும் சில மாதங்கள் கழித்து மறுபடியும்  விஷ்வஜித்துடன் சென்றார்கள். 
“நாங்க ஒன்னும் உன்னை பார்க்க வரல,  டூர் தான் வந்திருக்கோம், இவர்தான் உன்னை பார்க்கணும் சொன்னாரு..” என்று விஷ்வஜித்தை கைகட்டி வீரப்பாக சொன்ன இந்திரஜித்தை நீண்ட நாட்களுக்கு பிறகு காதலாக பார்த்தாள் தீக்ஷிதா. 
“க்கும்.. இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை..”  என்று அவளின் நீண்ட நாட்களுக்கு பிறகான காதல் பார்வையில் சிலிர்த்தவனின் முகம் கடுகடுவென இருந்தாலும் கண்களில்   கொள்ளை காதல் தான். 
இரண்டு வருடங்கள் சில மாதம் கழித்து இந்தியா வந்திறங்கிய தீக்ஷியை வரவேற்க ஒரு கூட்டமே நின்றிருந்தது. விஷ்வஜித், ராமலிங்கத்தின் குடும்பம்,  கணேஷ் குடும்பம், ஆனந்தன், ஏன் சுபாவுமே வந்திருந்தார். இத்தனை பேரை எதிர்ப்பார்க்கமால ஆனந்த அதிர்ச்சியில்  கண்ணில் நீர் தேங்க, அதை அடக்கியவள், எல்லோரிடமும் முறையாக நலம் விசாரித்தாள். 
சுபா, தீக்ஷி இருவரும் ஒட்டி பேசவில்லை என்றாலும் வெட்டியும் பேசவில்லை. இந்திரஜித் எனும் ஒரு மனிதனுக்காக இருவரும் தங்களின் கசப்புகளை தள்ளி தான் வைத்தனர். 
“நம்பளை கொஞ்சமாவது தேடுறாளா பாரு..?” என்று இந்திரஜித், தருணிடம் முணுமுணுக்க, “எஸ்.. சித்தப்பா..” என்ற தருணும் அவளை முறைத்து பார்த்து கொண்டிருந்தான். 
“கிளம்பலாமா..?” என்று அனைவரும் கிளம்ப, தீக்ஷி, நேரே இவர்கள் இருவரிடமும் வந்தவள், “போலாமா..?” என்று சாதாரணமாக கேட்டாள். 
“நீங்க யார்..? எங்ககிட்ட ஏன் போலாமான்னு கேட்கிறீங்க..?”  என்ற இந்திரஜித், முகத்தை திருப்பி கொள்ள, தருணும் சித்தப்பாவை பின்பற்றி இன்னொரு பக்கம் முகம் திருப்பி நின்றான். 
“ஓஹ்.. சாரி..” என்று தோளை குலுக்கிய தீக்ஷி, கிளம்பி விட, இவர்கள் இருவரும்  பேவென்று நின்றனர்.  “இவளுக்கு ரொம்ப திமிரு கூடிப்போச்சு, ராட்சஸி..” என்று பல்லை கடித்த இந்திரஜித், தருணை அழைத்து கொண்டு கார் பார்க்கிங் வர, அங்கு மற்றவர்கள் எல்லாம் அவரவர் காரில் கிளம்பிக்கொண்டிருக்க, தீக்ஷி, விஷ்வஜித்துடன்  இவர்களின் காருக்கருகில் நின்று கொண்டிருந்தாள். 
ஏர்போர்ட்டை விட்டு கிளம்பிய இவர்கள் கார் வீட்டை நோக்கி செல்ல, “எனக்கு அங்க.. அங்க.. வீட்டுக்கு போகணும்..”  என்ற தீக்ஷியின் பேச்சில் அதிர்ந்த அண்ணன்,தம்பி இருவரும் அவளை வேண்டாம்.. என்பது போல் பார்க்க, 
“போகணும்.. ப்ளீஸ்..”  என்றவளிடம் மறுக்க தோன்றாமல், தருணை அதிதியிடம் விட்டுவிட்டு அவர்களின் வீட்டிற்கு சென்றனர்.  கார்  கேட்டிற்குள்  நுழையவும் வீட்டின் வாசலில் அவளை எப்போதும் எதிர்பார்த்து நிற்கும் ராணியின் உருவம் தெரிய, தீக்ஷியின்  உடல் அளவுக்கு அதிகமான உணர்வுகளின் கொந்தளிப்பால் நடுங்கியது. 
அவளின் நடுக்கத்தை கண்டு கொண்ட இந்திரஜித், அவளை தோளோடு அணைத்து கொண்டு வீட்டினுள் அழைத்து சென்றான். எந்த மாற்றமும் இல்லாமல் முன்பு போலே இருந்த வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் ராணி, அரசு, மனோவின் உருவமே கண் முன் நிற்க, அழ கூட முடியாமல் நெஞ்சை அடைத்த துக்கத்தில் துடித்தவளை  இறுக்கி அணைத்து கொண்டான் இந்திரஜித். 
அவனின் அணைப்பிலிருந்தே வீட்டை சுற்றி பார்வையை ஒட்டிய தீக்ஷிக்கு டைனிங் டேபிளில் உணவை எடுத்து வைத்து கொண்டிருக்கும் ராணி இவளை பார்த்து “சாப்பிட வா தீக்ஷி..”  என்று கூப்பிடுவது போல் இருக்கவும், இந்திரஜித்தின் அணைப்பிலிருந்து  விலக பார்த்தவள் அவனிடம்,
 “ம்மா.. ம்மா.. என்னை சாப்பிட கூப்பிடுறாங்க, விடுங்க,  நான் போகணும்.. என்னை விடுங்க..”  என்று வலுவாக திமிறவே ஆரம்பித்துவிட, இந்திரஜித் அணைப்பை இறுக்கி கொண்டான். 
“அங்க.. அங்க பாருங்க.. அப்பா.. ப்பா… ப்பா.. என்னை செஸ் விளையாட கூப்பிடுறார்,  நான் போகணும்,  இல்லை அந்த மனோ போயிடுவான், என்னை விடுங்க.. விடுங்க..” என்று கத்தியவள், 
“டேய் மனோ அங்க எங்கடா போற..?, அது என்னோட ஐஸ்க்ரீம், அதை தொடாதா.. என்னை விடுங்க, நான் போகணும் இல்லை அவன் எடுத்துப்பான்.. என்னை விடுங்க..” என்று இந்திரஜித்தின் அணைப்பிலிருந்து திமிறி விலகி ஒவ்வொரு இடமாக  பார்த்து பேசும் அவளின் நிலையில்லா மனதை புரிந்து கொண்ட இந்திரஜித், அவளை விடாமல் இறுக்கி தன் நெஞ்சில் முகம் புதைத்து கொண்டான்.  
“விடு.. விடு.. என்னை விடுன்னு சொல்றேன் இல்லை..” என்று அவனை அடித்து, கத்தியவள் முடியாமல் அவனின் நெஞ்சிலே முகம் புதைத்து கதற ஆரம்பித்துவிட்டாள்.  
அவளின் கண்ணீர் அவனின் நெஞ்சை சுட, கலங்கும் கண்களுடன் அவளை அணைத்து கொண்டவனுக்கு “இந்த ரணம் என்றும் அவளை நிம்மதியாக வாழவிடப்போவதில்லை..” என்று புரிய மேலும் வேதனை கொண்டான். 
தீக்ஷியின் கதறல் வெளியேவே நின்றுவிட்ட விஷ்வஜித்தின் காதில் விழ, அவனின் கண்கள் மேல்  நோக்கி வானத்தை விரக்தியாக பார்த்தது. “அவளின் வேதனைக்கு விடிவே கிடையாதா..? குறைந்த பட்சம் மனோவையாவது காப்பற்றி அவளிடம் கொடுங்களேன்..” என்று இன்னமும் ஒரு முன்னேற்றமும் இல்லாமல் கோமாவில் இருக்கும்  மனோஜை நினைத்து துக்கம் கொண்டு கேட்ட விஷ்வஜித்தின் மேல் ஓர் துளி நீர் விழுந்தது.
“தீக்ஷி.. எங்கேயாவது வெளியே போலாமா..? என்று USலிருந்து வந்து ஒரு மாதம் சென்ற நிலையில் எங்கேயும் செல்லாமல் வீட்டிலே இருக்கும் தீக்ஷியிடம் கேட்டாள் அதிதி.  
“ம்ப்ச்.. நான் வரல..” என்று சலிப்பாக சொன்னவளை கோபமாக பார்த்த அதிதி  
“ஒரு மாசமா இப்படி வீட்லே அடைஞ்சிருந்தா எப்படி தீக்ஷி..?  சின்ன மாமா கூப்பிட்டாலும் எங்கேயும்  போக மாட்டேங்கிற, எங்களோட, தருணோடவும் வர மாட்டேன்கிற, இப்படியே  அடைஞ்சிருக்காத தீக்ஷி, கிளம்பு..  ஷாப்பிங் போலாம்..” என்று  கேட்டு கொண்டிருக்க, அங்கு வந்த பாரதி, 
“தீக்ஷி நான் உன்னோட கொஞ்சம் பேசணும்..” என்றார். அவளும் இந்த ஒரு மாதமாக அவர் தன்னிடம் எதோ சொல்ல முயற்சிப்பதை உணர்ந்திருந்தவள், “சொல்லுங்க ஆண்ட்டி..” என்றாள். 
“நீ அதிதியோட அப்பாக்கு கொடுத்திருக்கிற பவர் ஆப் அட்டாணியை கேன்சல் செஞ்சிடும்மா..” என்றார். 
“ஏன்..?  என்ன ஆச்சு ஆண்ட்டி..?” என்று தீக்ஷி புரியாமல் கேட்டாள். 
“அது.. அது..” என்றவரின் முகம் சொல்ல முடியாமல் மிகவும் கன்றி போக, “சொல்லுங்க ஆண்ட்டி..” என்று ஊக்கினாள் தீக்ஷிதா. 
“அது.. ஷேர்.. உங்க பத்து பெர்சன்ட் ஷேரை தருண் பேருக்கு மாத்திக்கிட்டார்..” என்று சொல்லவும், 
“தெரியும் ஆண்ட்டி.. என்கிட்ட கேட்டுட்டுதான் மாத்தினார், இன்கம் டேக்ஸ் பிரச்சனைன்னு ஆடிட்டர் சொன்னதால மாத்தினோம்..” என்றாள். 
“அதெல்லாம் ஒன்னுமில்லை தீக்ஷி.. முதல்ல தருண் பேருக்கு மாத்திக்கிட்டு அப்பறம் அதை அவர் பேருக்கு மாத்தா பிளான் போட்டு தான் செஞ்சிருக்கார், இப்போ நீ வரவும் அதை அவர் பேருக்கு மாத்த ரகசியமா ரெடி செஞ்சிட்டு இருக்கார்..” என்று வெட்கி போய் சொன்னார் பாரதி. 
அதை கேட்ட அதிதி தந்தையை நினைத்து குறுகி போனவள், தீக்ஷியை பார்க்க முடியாமல் அழுக, புரிந்து கொண்ட தீக்ஷி, தானே அவளை அணைத்து கொண்டாள். 
“விடுங்க ஆண்ட்டி.. என்ன செய்யறதுன்னு பார்க்கலாம்..” என்றவளிடம், 
“அது மட்டுமில்லை தீக்ஷி,  கம்பெனியில் இருந்து நிறைய காசு கூட எடுத்திருக்காங்க..” என்றார். 
“எடுத்திருக்காங்களா..? யார்..?” என்று புரியாமல் கேட்ட தீக்ஷிக்கு, 
“உங்க அப்பாவோட பார்ட்னர்ஸ்..” என்ற பதில் விஷ்வஜித்திடம் இருந்து வந்தது.
“என்ன சொல்றீங்க..?” என்று தீக்ஷி நம்பமுடியாமல் கேட்டாள்.  தொழில் ஆரம்பித்த நாட்களிருந்து உடன் இருப்பவர்கள் இப்படி ஒரு துரோகத்தை செய்வார்களா..? என்று அதிர்ந்து பார்த்தாள். 

Advertisement