Advertisement

ஏறக்குறைய இரண்டு மாதம் முடிந்த நிலையில் எப்போதும் போல தருணை காண வந்திருந்த ஆனந்தனை பொதுவாக வரவேற்றவள், தருணை அவரிடம் விட்டுவிட்டு எழுந்து உள்ளே செல்ல போனாள். 
“தீக்ஷி.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும், உட்காரும்மா..”  என்ற ஆனந்தனை குழப்பமாக பார்த்த தீக்ஷி அமைதியாக அமர்ந்து கொண்டாள். 
“தருண்.. தருண் ஸ்கூல் போறதை பத்தி கொஞ்சம் பேசணும்.. அவனை.. அங்க ஊட்டியில ஸ்கூல் சேர்த்துடலாம்னு பார்க்கிறோம்..” என்றவர், தீக்ஷியின் அதிர்ந்த முகம் கண்டு வருத்தம்  கொண்டாலும் எதார்த்ததை பேசிதானே ஆகவேண்டும் என்பதால், 
“இன்னும் எத்தனை நாளைக்கு நீ அவனை வளர்க்க முடியும்..? நீயும் சின்ன பொண்ணுதானே, உன்னால அவனை தனியா சமாளிக்கிறது கஷ்டம்தான், அங்கன்னா நான், சுபா, விஷூ, ஜித்து எல்லாம் இருப்போம்,  
“ஜித்தும் மாசக்கணக்கா பிஸினஸை எல்லாம் பார்க்காம இங்க தருணோட, விஷூவோட இருக்கான், எல்லாம் அப்படி அப்படியே நிக்குது, அவன் புதுசா எடுத்திருக்கிற அந்த கவர்மெண்ட் ப்ராஜெக்ட்காக நிறைய கோடி கணக்குல இன்வெஸ்ட் செஞ்சிருக்கோம், அதை   டைம்க்கு முடிக்கலைன்னா நாம ஒன்னுமே இல்லாம போக கூட நிறைய வாய்ப்பு இருக்கு”, 
“அது போக நம்மால நிறைய பேமிலியும்  கஷ்டப்படும், இப்போ விஷூ இருக்கிற சூழ்நிலையில அவனால பிசினஸை எல்லாம் கண்டிப்பாவே பார்த்துக்க முடியாது, எல்லாத்தையும் ஜித்து தான் பார்த்துக்கணும், ஆனா அவன் எதையும் செய்யாமல்  இங்க  தருணோட, விஷூவோட உட்கார்திருக்கான்”. 
“அதான் நாங்க தருணையும், விஷூவையும்  எங்களோட  கூட்டிட்டு போயிட்டா, அவங்க கவலை இல்லாமல் ஜித்தும்  ஒழுங்கா பிஸினஸை பார்த்துப்பான், தருணுக்கும், விஷூக்கும்  ஒரு மாற்றமாவும் இருக்கும்.., இப்படி நிறைய  இருக்கு, அதான் உன்கிட்டே சொல்லலாம்னு வந்தேன்..” என்றவரின் பேச்சு அவர்கள் எல்லாம் ஓர் குடும்பம் போல், தான் மட்டும் தனியே என்ற எண்ணம் தோன்ற அடக்கப்பட்ட அழுகையில் நெஞ்சை அடைக்கும் உணர்வு, 
அதை காட்டாமல் அமர்ந்திருந்தவளிடம், “உனக்கும் ஹார்வர்ட்ல சீட் கிடைச்சிருக்கன்னு விஷூ சொன்னான். நீயும் அங்க படிக்க போகணும்..” என்று சொல்லவும், தீக்ஷியின் முகத்தில் ஒரு விரக்தி சிரிப்பு. அதை கண்டு கொண்ட ஆனந்தன்,  
“உன் வாழ்க்கையும் பார்க்கணும் தீக்ஷி, இப்படியே  நீ இன்னும் எத்தனை நாளைக்கு இருக்க முடியும்..? சொல்லு, அங்க படிக்க போனா உனக்கும் ஒரு டைவெர்ஷனா இருக்கும்.. பிசினஸை படிச்ச மாதிரி இருக்கும், உங்க அப்பாவோட பிஸ்னஸ் நீதானே பார்க்கணும்..” என்ற ஆனந்தனின் பேச்சில் இருந்த உண்மை தீக்ஷிக்கு மிகவும் கசந்தது. 
அந்த கசப்பை பாடுபட்டு விழுங்கியவள், “நீங்க தருணை அங்க ஸ்கூல் சேர்க்க ஏற்பாடு செய்ங்க..” என்றதோடு முடித்து கொண்டவளுக்கு  தனியான உணர்வு, “நான் மட்டும் தான் எனக்கு..” என்ற எண்ணம் அவரின் பேச்சில் இருந்த எதார்தத்தில் புரிய சிறிது நாட்களாக  ஓய்ந்திருந்த கண்ணீர் கட்டுப்பாடு இல்லாமல் பெருகியது, 
அதனாலே தன்னை காண வந்திருந்த இந்திரஜித்திடம் தலைவலி என்று சொல்லிவிட்டு ரூமில் முடங்கி கொண்டாள்.  மனம் முழுக்க ரணமாய் இருக்க, தன்னை தானே சமாளிக்க முடியமால் திணறி போனவள், வெளியே தோட்டத்திற்கு சென்றாள். 
“ஏன் இப்படி..? இப்போ நீங்க எல்லாம் நிம்மதியா இருக்கீங்களா..? நீங்க எல்லாம் இல்லாம நான் இப்படி தனியா  கஷ்டப்படனும்னு தான் என்னை  விட்டு போனீங்களா..?”  என்று கோவத்தில் வானத்தை பார்த்து கேட்டவளுக்கு, முதல் முறையாக தான் “அனாதையா..!!??”  என்ற எண்ணம் தோன்ற, வாய்விட்டு கதறி விட்டாள். 
“ம்மா.. ப்பா.. மனோ..” என்கிட்டே வந்துருங்க, ப்ளீஸ் என்னால முடியல, எனக்கு யாரும் இல்லை..”, என்று சொல்லி சொல்லி சத்தமாக அழுதவளின் சத்தம் வீட்டில் இருந்த அதிதிக்கு, மட்டுமில்லாது தருணை பார்க்க வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்த விஷ்வஜித்திற்கும் கேட்க, இருவரும்  வேகமாக தோட்டத்திற்கு ஓடி வந்தனர். 
“தீக்ஷி.. தீக்ஷி..” என்று கீழே  விழுந்து கதறி கொண்டிருந்தவளின் அழுகை  அதிதிக்கும் அழுகையை கொடுக்க, தானும் அவளுடன் சேர்ந்து கதறினாள். தீக்ஷியின் கதறலை  பார்த்த விஷ்வஜித்தின் கண்ணிலும் கண்ணீர் நிற்காமல் பெருக,  தாங்க முடியாமல் அங்கே இருந்த திண்டில் அமர்ந்து தலை பிடித்து குனிந்து கண்ணீர் விட்டான். 
நெடு நேரம் ஆகியும் பெண்களின் அழுகை நிற்காமல் தொடர, தன்னை சமாளித்து எழுந்த விஷ்வஜித், “தீக்ஷி.. அழுகையை நிப்பாட்டு, ப்ளீஸ், இப்படி அழுகாத..” என்று கேட்டவன், அவள் நிறுத்தாமல் அதிதியை அணைத்து கதறி கொண்டிருக்க, “அதிதி..”  என்று கோவம் கொண்டு கத்தியவனின் சத்தத்தில் அழுகையை நிறுத்திய பெண்கள் அவனை பார்த்தனர். 
“அதிதி.. உள்ளே போய் தீக்ஷிக்கு தண்ணி கொண்டு வா..” என்று கோவமாகவே சொல்ல, வேகமாக உள்ளே ஓடியவள் தண்ணி கொண்டு வர, தீக்ஷியை எழுப்பி திண்டின் மேல் அமரவைத்து  தண்ணீர் கொடுக்க, மறுக்காமல் வாங்கி குடித்தாள். 
“என்ன ஆச்சு தீக்ஷி..? திடீர்ன்னு ஏன் இந்த அழுகை..?” என்று கேட்டவனுக்கு பதில் சொல்லாமல் தேம்பி கொண்டே இருந்தவளை கனிவாக பார்த்த விஷ்வஜித், 
“தீக்ஷி.. சொல்லு, ஏன் இப்படி அழுத..?” என்று  கேட்டான், என்னவென்று சொல்வது..? விஷ்வஜித்திடம் இதுவரை பொதுவாக கூட பேசியதில்லை, அப்படி இருக்கும் அவனிடம் தன்னுடைய வலியை  சொல்லி ஆறுதல் தேட முடியுமா…? என்ற வேதனையில்,  விரக்தியில் பதில் சொல்லாமல் இருந்தவளிடம் மேலும் பலமுறை பொறுமையாகவே கேட்டான். 
“ம்ஹூம்..” பதில் இல்லை, அவள் சொல்வது போன்றும் தெரியவில்லை, அவளின் விலகல் புரிய, அவளின் பக்கத்தில் சென்று அவளின் கை பிடித்து தன் கையில் அடக்கியவனை ஆச்சரியமாக பார்த்த தீக்ஷியிடம், 
“தீக்ஷி.. முறையில் தான் நான் உனக்கு மாமா முறை ஆகணும், ஆனா உண்மையிலே நீ எனக்கு ஒரு தங்கை போலத்தான், நான் எப்பவும் உன்னை அப்படித்தான் பார்க்கிறேன்.. உன்னை என்னோட அண்ணனா நினைச்சு சொல்லு ப்ளீஸ்..”  என்று கண்களில் பாசம் பொங்க கேட்டவனின் சகோதர உணர்வு தீக்ஷியை உருக்க, அவனின் கை பிடித்து அழுதவள், 
“நிஜமா நீங்க எனக்கு அண்ணனா தானா..? நான் யாருமில்லாத அனாதை இல்லை தானே..?” என்றவளின் வார்த்தை அதிதியையும், விஷ்வஜித்தையும் உயிர் வரை சென்று உலுக்கியது. 
“தீக்ஷி.. என்ன பேசுற நீ..?” என்று இருவரும் கோவம் கொண்டு ஏககாலத்தில் அதட்டினர். “நாங்க எல்லாம் இருக்கும் போது நீ எப்படி இப்படி பேசலாம்..? உனக்கு என்ன ஆச்சு..? யாராவது ஏதாவது சொன்னாங்களா..? வாயை திறந்து சொல்லு..?”  என்று அதிதி கோவத்தோடு கேட்க, “அதிதி..” என்று அவளை அடக்கிய விஷ்வஜித், 
“தீக்ஷி.. நீ ஏன் இப்படி பேசுறேன்னு எனக்கு தெரியாது, ஆனா.. இனி ஒரு முறை உன் வாயிலிருந்து மட்டுமில்லை மனசுல கூட இது போல நினைக்கக்கூடாது, எந்த சூழ்நிலையிலும் உனக்கு ஒரு அண்ணனா நான் உனக்கு இருக்கேன், அதை மட்டும் மறந்துடாத..”  என்றான் மிக மிக உறுதியாக.  
அதை கேட்டு தலையாட்டிய தீக்ஷியின் முகத்தில் தெரிந்த வலியை கண்டு கொண்டவனுக்கு இந்திரஜித்தின் மேல் கோவம் வர, “உன்னை இப்படி தனியா விட்டு இந்த ஜித்து எங்க போனான்..?” என்று கேட்க, 
“இல்லை.. நான்தான் அவரை அனுப்பிவிட்டேன்..”, என்று வேகமாக சொன்னவளிடம், 
“நீ இப்படி நினைக்கிறது அவனுக்கு தெரியுமா..?” என்று கேட்டான். 
“இல்லை..” என்றவள்,  “அவர்கிட்ட சொல்லாதீங்க, ரொம்ப கஷ்டப்படுவார்..” என்றாள் உணர்ந்து. 
“ம்ம்..” என்றுவிட்டவனுக்கு இந்திரஜித் மேல் கோவம் இருக்க, அவனை தேடி ஹோட்டல் சென்றான். 
“விஷூ.. வா, வா நானே உன்கிட்ட பேசணும்ன்னு நினைச்சேன்..” என்று வரவேற்றவன், 
“மனோ.. இன்னும் அப்படியே தான் இருக்கான், எந்த முன்னேற்றமும் இல்லை,  அவனுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கிற டாக்டர் ஒரு பாரின்  டாக்டரை ரெபர் செஞ்சிருக்கார், அவர் இந்தியா வர எல்லாம் ஏற்பாடும் முடிச்சிட்டேன், பார்க்கலாம்..”, 
“அப்பறம்… அந்த லாரி ட்ரைவரை விட சொல்லிட்டேன், அவன் பிரேக் கண்ட்ரோல் இல்லாமல் தான் காரை ஆக்சிடென்ட் செஞ்சிருக்கான், அப்பறம் உன்னை தூக்க பிளான் போட்ட அந்த ஷர்மாவை தூக்கியாச்சு..”, என்றவன், 
“விஷூ.. அடுத்த மாசம் இந்த தேதி ஓகேயா பாரு..” என்று காண்பித்தான். 
“ஏன்..? எதுக்கு இந்த டேட்..?” என்று விஷ்வஜித் புரியாமல் கேட்க,  “எனக்கும்.. தீக்ஷிக்கும் கல்யாணம் செய்ய தான்..” என்று சாதாரணமாக சொன்னாலும், முடிவாக சொன்னான். 
“என்னடா சொல்ற..?” என்று அதிர்ச்சியாக கேட்ட அண்ணனிடம், 
“இதுவே லேட் விஷூ, என்ன செய்ய..? மூணு மாசம் முடியணும்னு தான் வெய்ட் செஞ்சேன், இனியும் தீக்ஷியை தனியா விடமுடியாதுடா, அவ  எப்படியோ இருக்கா.. இப்படியே  அவளை தனியா விட்டா அவ எனக்கு என்னோட தீக்ஷியா கிடைக்க மாட்டா..”, என்று அவளின் வேதனை  நாளுக்கு நாள் அதிகரிப்பது கண்டு கொண்டிருந்தவன் சொன்னான். 
இப்போது தான் அதை நேரிலே கண்டு வந்திருந்த விஷ்வஜித்திற்கும் தம்பி சொல்வது  சரியாக இருக்க, “சரி ஜித்து, நீ சொல்றபடியே செஞ்சுக்கலாம், முதல்ல தீக்ஷிக்கிட்ட பேசிடு..” என்று சொல்லவும், “சரி..” என்ற இந்திரஜித் மறுநாள் தீக்ஷியை காண செல்லும் போது,  அவள் அவனிடம்  பிளைட் டிக்கெட்டை காண்பித்தாள். 
“என்ன சொல்ற நீ..? இதென்ன..?”  என்று அதிர்ச்சி மறைந்து கோவம் கொண்டு கேட்டவனிடம், 
“நான் அப்பா ஆசைப்படி MBA படிக்க ஹார்வர்ட் போகப்போறேன்..”  என்றாள். 
“தீக்ஷி..”  என்று அரசு பேரை சொன்ன பிறகு என்ன சொல்லி மறுப்பது என்று தடுமாறியவனின் தவிப்பு புரிந்து துயரம் கொண்டவள், தானே சென்று முதல் முறையாக அவனை அணைத்தாள். அவளின் அணைப்பு இந்திரஜித்திற்கு மேலும் தவிப்பை கொடுக்க,  அவளை விலக்கி நிறுத்தியவன், 
“சரி போ, ஆனா இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு போ, நான்.. நானும் உன்னோட வரேன், நீ தனியா எல்லாம் போகாத.. உன்னை அப்படி தனியா எல்லாம் என்னால விடமுடியாது..”என்றவனின் பேச்சு தீக்ஷிக்கு ஆனந்தனை ஞாபகப்படுத்தியது.  
அவர் சொன்ன பிசினஸ், விஷ்வஜித்தின் நிலை, கவர்மென்ட் ப்ராஜெக்ட் அதற்காக இவர்கள் அதில் போட்டிருந்த பணம், அதை இழந்தால் இவர்களின் நிலை.. என்று இவை எல்லாம் இந்திரஜித்தின் கையில் இருக்க, அவன் அவற்றை எல்லாம் தனக்காக ஒதுக்கி வைத்துவிட்டு,  தன்னுடைய நலன் ஒன்றே குறிக்கோளாக தன்னுடனே இருப்பது  ஆனந்தனின் பேச்சில் புரிந்திருந்தது.
அதோடு.. தருண்.. அவன் ஓர் ஆரோக்கியமான குடும்ப சூழ்நிலையில்  வளராமல் இப்படி தனியாக  தன்னிடம் ஒரு வித அழுத்தத்தோடு,  வளர்வது கண்டிப்பாகவே அவனுக்கு தான் செய்யும் அநியாயம் என்று புரிய  சென்றே ஆக வேண்டும் என்ற உறுதியை எடுத்து விட்டாள்
“ப்ளீஸ் என்னை தடுக்காதீங்க.. இது என்னோட அப்பா ஆசை, அதை நிறைவேத்துறது என்னோட கடமை, நீங்களும் நான் படிக்க ஓத்துக்கிட்டு இருக்கீங்க..” என்று சொல்லவும், 
“அது அப்போ சொன்னேன், ஆனா இப்போ முடியாது,  நான் உன்னை தனியா அனுப்ப மாட்டேன், அப்படி போயே ஆகனும்னா நான் வரேன், சேர்ந்தே போலாம்..” என்று போராடியவனின் போராட்டம்  தீக்ஷியின் உறுதியின் முன் தொல்வியில் தான் முடிந்தது. 
அடுத்து தருண் “நான் உன்னோடுதான் இருப்பேன், ஊட்டி எல்லாம் செல்ல மாட்டேன்..” என்று ரகளை செய்ய, “எந்த உரிமையில் தான் அவனை வளர்ப்பது..? அவனுடைய குடும்பத்தில் நான் இல்லையே..?”
“ஏன் அவனுக்கு ஸ்கூல்  பார்மில் கையெழுத்து போட கூட எந்த  உறவு முறையும் இல்லை..!!, உரிமையும் இல்லை..!!!”  என்று இந்த இடைப்பட்ட நாட்களில்  புரிந்திருந்த தீக்ஷி, 
தருணின் நல்வாழ்விற்காக அளவில்லா துயரத்துடன் அவனை சமாளித்து அவனின் தந்தை, தாத்தா பாட்டியிடம்  ஒப்படைத்தவள்,  பிஸ்னஸை ராமலிங்கத்தின்  பொறுப்பில் விட்டு  யார் தடுத்தும் கேட்காமல், இந்திரஜித்தின் கோவத்தை சுமந்தவாறே US கிளம்பிவிட்டாள்.

Advertisement