Advertisement

காதல் ஆலாபனை 18
தீக்ஷியின் வீட்டினுள் நுழைந்த இந்திரஜித்திற்கு  சோபாவில் அமர்ந்திருந்த தீக்ஷியின் நிலையை காண காண அளவில்லா  துக்கம் பொங்கியது, இந்த ஒரே வாரத்தில் முற்றிலும் ஒடிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவு மாறி போயிருந்தாள். 
ஏழு நாட்களில் உடல் இவ்வளவு இளைக்குமா..?  எனுமளவு எலும்பை  போர்த்திய சதை மட்டுமே இருந்தது. முகத்தில் ஜீவனே இல்லை, பார்வையில் இம்மியளவு ஒளி இல்லை, உதடு இரண்டும் வறண்டு போய், பார்க்கவே மிக மிக பரிதாபமாக  இருந்தவளை கண்ட இந்திரஜித்தின் கண்ணில் கண்ணீர் பெருக, அதுவரை இருந்த தயக்கம் மறைந்து வேகமாக அவளிடம் சென்றான். 
உள்ளே நுழைந்ததில் இருந்து அவனையே இமைக்காமல் பார்த்திருந்த தீக்ஷி, அவன் தன்னருகே வர வர கலங்கும் கண்களுடன் அவனையே வெறித்தவள், கையை நீட்டி “கிட்ட வராதே..”  என்று காட்டினாள். அவளின்  நீட்டிய கைகள் மிக மோசமாக  நடுங்கி கொண்டிருக்க, உதடு துடிக்க, தொண்டை அடைத்து, கண்ணில் நிற்காமல் பொங்கும் நீருடன் அவனை பார்த்தாள். 
“தீ.. தீக்ஷி.. ப்ளீஸ்டா..” என்று நீட்டிய அவளின் கைகளை மீறும் துணிவில்லாமல் கண்ணீர் வழிய தவித்தவன், “நான்.. நான்.. ஒரே.. ஒரே முறை.. உன்கிட்ட.. உன்கிட்ட வரணும்டா, ப்ளீஸ். ப்ளீஸ்..” என்றவனின் கெஞ்சல், தீக்ஷியின் முகத்தில் ரௌத்திரத்தை கொண்டு வந்தது. 
மூச்சு வாங்க பக்கத்தில் இருக்கும் பொருட்களை எல்லாம் அவன் மேல் விட்டெறிய ஆரம்பித்தவளின் கோவம் புரிந்தவன் சிறிதும் விலகாமல் அவள் எறிந்த பொருட்களை தன் மேல் வாங்கி கொண்டான். சத்தம் கேட்டு ஓடிவந்த சுப்பு, பாரதி, அதிதி எல்லோரும் பதறியபடி தீக்ஷியை தடுக்க முயன்றனர். 
“ம்ஹூம்..” யார் சொல்வதும் அவளின் காதுக்கு கேட்கவேயில்லை, அவளின் எண்ணம் முழுவதும் இந்திரஜித்தின் மேல் மட்டுமே இருந்தது. அவனும் அவளின் உணர்வுகளை புரிந்து அமைதியாகவே நிற்க, அது மேலும் தீக்ஷிக்கு வெறியை கொடுக்க, என்ன செய்கிறோம் என்றே புரியாமல் டீபாய் மேல் இருந்த கிளாஸ் வெயிட்டை தூக்கி அடித்துவிட்டாள். 
“ஐயோ.. தீக்ஷி.. தம்பி..”  என்று பெண்கள் கத்தியவாறே  ரத்தம் ஒழுக ஒழுக நின்ற இந்திரஜித்திடம் ஓடி வர, தீக்ஷிக்கோ  நிற்காமல் வரும் அவனின் ரத்தத்தை காணவும், மோசமான நினைவுகள் அவளுள்  மிக பெரிய ஆழிப்பேரலையை உருவாக்க அப்படியே மயங்கி சரிந்தாள். 
“தீக்ஷி..” என்று தன்னுடைய ரத்தத்தை துடைத்து கொண்டிருந்த பெண்களை உதறி விட்டு தீக்ஷியிடம் ஓடினான். “என்ன ஆச்சு..? தீக்ஷிக்கு என்ன..?” என்று பெண்களும் மயக்கமைடைந்தவளை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். சில நிமிடங்கள் கழித்தே நினைவு திரும்பியவளின்  கண்கள் தன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த இந்திரஜித்தின் மேல் படிந்தது. 
அவனின் அடைபட்ட நெற்றியில் துணி கட்ட பட்டிருக்க, அதையே பார்த்தவளின் கண்கள் மீண்டும் கண்ணீரை சிந்த, அதை துடைத்தவனின் மடியில் தானே தலை வைத்து படுத்து கொண்டாள். இருவரிடத்திலும் அமைதி, 
எதை பேச..? என்ற  துக்கமான அமைதி..!! 
எதையும் பேசி விட கூடாதே..? என்ற தவிப்பான அமைதி..!!! 
ஏதாவது பேசேன்..? என்ற துடிப்பான அமைதி..!!   
இந்திரஜித்திற்கு அவளிடம்  பேச, சொல்ல கோடி வார்த்தைகள் தொண்டையிலே நிற்க, அதை சொல்ல முடியாமல்,  தீக்ஷியின் அமைதி எல்லாவற்றையும் உள்ளே தள்ளியது.  அவளின் இத்தகைய அமைதி மிக ஆபத்து என்ற டாக்டரின் எச்சரிக்கை அவனை பயங்கொள்ள செய்திருந்தது. அதனாலே  அவளை நேரில் காண மிகவும் தயங்கியவனின்  பயம் , தன் மீதான அவளின் கோவத்தால் சிறிது குறைந்திருந்தது. 
எதோ ஒரு விதத்தில் அவளின் துக்கம் வெளியே வரட்டும்.. என்றே அவனும் அமைதியாக அவளின் அடிகளை வாங்கி கொண்டான். அதோடு அவனுக்குமே அது தேவையாக தான் இருந்தது. அவளின் மிக மிக மோசமான, கொடூரமான  கருப்பு நாட்களில் அவளுடன் இல்லாத தனக்கு இத்தண்டனை மிகவும் குறைவு தான்.. 
சூழ்நிலை எதுவாக இருந்தாலும்,  அவளின் துக்கத்தில் அவளை தனியே விட்ட தன்னுடைய இயலாமையின் மேல் கோவம் கொண்டிருந்தவனும் அவளின் அடியை மிகவும் விரும்பியே ஏற்று கொண்டான். 
உற்றவர்களை இழந்திருக்கும்  நேரத்தில் “அவளுக்கு உற்றவன்..” அவளை மடிதாங்காமல் தனியே அல்லாடவிட்டதற்கு எவ்வித காரணமும் நியாயம் செய்து விட  முடியாது என்பது அவனுக்குமே  நன்றாக தெரியும், அதுவே அவனுள்  மிக பெரிய குற்றஉணர்ச்சியை உருவாக்கியிருந்தது.  
இந்த நொடி அவளை மடிசாய்த்திருக்கும் இந்த நொடி.. இதைத்தானே அவளும் எதிர்பார்த்திருப்பாள்.. என்று நினைத்து நினைத்து தன்னையே வருத்தி கொண்டிருந்தவனின் கை விரல்கள் அவளின் தலையை ஆறுதலாக வருடி கொண்டிருக்க, மடி சாய்ந்திருந்தவளின் கண்ணீர் அவனின் பேண்டை நனைத்து கொண்டிருந்தது. 
“தம்பி..” என்று தீக்ஷியின் ரூமிற்குள்ளே நுழைந்த சுப்புவின் கையில் சாப்பாடு ட்ரே இருக்க, அதை வைத்துவிட்டு போகும் படி சொல்லியவன், அவர் சென்றவுடன், 
“தீக்ஷி.. சாப்பிடலாமா..?” என்று கேட்டான். 
“ம்ஹூம்..” என்று மறுப்பாக தலையாட்டியவளின் முகத்தை நிமிர்த்தியவன், “கொஞ்சம் மட்டும்.. ப்ளீஸ்..”, என்று கெஞ்சியவன், அவளை அப்படியே தூக்கி கட்டிலில் சாய்த்து அமரவைத்தவன், உணவு எடுத்து வந்து ஊட்ட செய்தான். அவள் வாயே திறக்காமல் வெறித்து பார்க்க, 
“ப்ளீஸ் தீக்ஷி, சாப்பிடு..” என்று கையில் உணவோடு கெஞ்சி கொண்டிருந்தவனிடம், 
“நீ ஏன் என் பக்கத்துல இல்லை..?” என்று மிக மெலிவான குரலில் கேட்டாள். அவளின் கேள்வி அவனின் உணவு கையை கீழிறக்க, முகம் மிகவும் கசங்கி போனது. 
“நீ என் பக்கத்துல இருந்திருக்கணும் தானே..?” என்று மேலும் கேட்டவள்,  அவனின் பதிலை எதிர்பார்க்காமல், “நான்.. நான் மட்டும் தனியா, அப்பா.. எனக்கு எதுவும் புரியல,  எல்லோரும் அவரை கொண்டு போனாங்க,  என்னை விட்டு எங்க அப்பாவை கொண்டு போகாதீங்கன்னு  எவ்வளவு அழுதேன், கெஞ்சினேன் தெரியுமா..? யாரும் என் பேச்சை கேட்கல, கொண்டு போயிட்டாங்க, அவர் இல்லை.. “, 
“அம்மா.. அம்மாகிட்டே போய் நான் சொன்னேன், அப்பாவை கொண்டு போறாங்க, வேணாம்ன்னு சொல்லுமான்னு, அவங்க என்கிட்டே பேசவே இல்லை, படுத்தே இருந்தாங்க, எல்லோரும் சொன்னாங்க, அவங்களும் என்னை விட்டு போக போறாங்கன்னு, நான் நம்பல”
“ என் அம்மா என்னை விட்டு போக மாட்டாங்கன்னு சொன்னேன், அம்மா.. அம்மாகிட்டேயும் சொன்னேன், இப்படி  எல்லாம் சொல்றாங்க, நீங்க என்னை விட்டு போக மாட்டிங்க தானே..? என்னோட இருப்பீங்க தானே..?ன்னு கெஞ்சினேன், அழுதேன்..”, 
“மூணு நாளா நான்  கெஞ்சறதை எல்லாம் கேட்டுகிட்டே இருந்துட்டு, அவங்களும் என்னை விட்டு போயிட்டாங்க. அவங்க ரொம்ப மோசம், அவங்களுக்கு என்னோட இருக்க வேணாம், அவங்களுக்கு அவங்க மகன், புருஷன் தான் வேணும், நான் வேண்டாம், அதான் என்னை விட்டு போயிட்டாங்க”, என்று சத்தமாக  கத்தியவள், 
“மனோ.. அவன்.. அவன்  பயங்கர சீட் பெல்லோ, அவன்  என்னை ஏமாத்திட்டான்,  என்கிட்ட இருந்து கிப்ட் பாக்ஸை மட்டும் வாங்கிட்டு, எனக்கு கேக்ஐஸ்க்ரீம்மை கொடுக்கவே இல்லை, எங்கே நான் கேட்பேன், சண்டை போடுவேன்னு கடைசி வரை என் கண் முன்னாடி வரவே இல்லை தெரியுமா..?” என்று 
தன் போக்கில்  கண்ணில் கண்ணீர் வழிய இத்தனை நாள் துக்கத்தை எல்லாம் இறக்கி வைத்து கொண்டிருந்தவளின் மன அழுத்தம் புரிந்திருந்த இந்திரஜித், அவள் சொல்வதை முழுவதும் பாரம் ஏறிய கனத்த மனதோடு கண்ணீர் பெருக பெருக கேட்டு கொண்டிருந்தான். அவன் மட்டுமில்லாமல் வெளியே நின்றிருந்த சுப்பு, பாரதி, அதிதி என  எல்லோர் கண்களிலும் கண்ணீர்..
“தீக்ஷி.. இன்னும் கொஞ்சம் மட்டும்..” என்று ஊட்டி கொண்டிருந்த இந்திரஜித், அதிதியின் சைகையை கண்டு என்னவென்று கேட்க, “தருண்..” என்று வாயசைத்து சொல்லவும், இந்திரஜித்தின் முகம் வேதனையை காட்டியது.  
இந்திரஜித் இங்கு வந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது, இன்னமும் அவனால்  தீக்ஷியை சமாளிப்பது பெருங்கஷ்டமாக தான் இருந்தது. சில நேரம் அழுவாள், இல்லை இவனிடம் கோபப்படுவாள், இல்லை மிகவும் அமைதியாகவே இருப்பாள், அந்நேரங்களில் எல்லாம் அவளை அவளின் போக்கிலே சென்று தான் சமாளித்து கொண்டிருந்தான். 
இதில் இடையிடையில் தருணை நெருங்கும் அவனின் முயற்சிகள் தோல்வி தான், எதுவும் பேசாமல் அவர்கள்  வீட்டிலே அமைதியாகவே இருப்பவனிடம், தீக்ஷியின் வீடு வர கேட்டால் மட்டும் ஓஹ்வென்று கத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்பவன், மீதி நேரங்களில் எல்லாம் தர்ஷினியின் படம் வைத்து கொண்டு அமைதியாகவே இருப்பான். 
விஷ்வஜித்தின் மடி  மேலே அமர்ந்திருப்பான். சாப்பிடுவதும் மிகவும் குறைந்து விட, அதிதிக்கு தான் வருத்தமாக இருந்தது. பாரதியை ஓர் அளவுக்கு மேல் சேர்த்தாதவன், சுபாவை சுத்தமாகவே சேர்க்க மாட்டான். வெகுவாக முயன்று பார்த்த அவரின் முயற்சி தோல்வியில் தான் முடிந்தது. 
இந்த இரண்டு நாட்களாக விஷ்வஜித் வீட்டில் இல்லாமல் போக  தருணை சமாளிக்க முடியாமல் கஷ்டப்பட்ட அதிதி, இந்திரஜித்திடம் சொன்னாள். தீக்ஷிக்கு ஊட்டி முடித்த இந்திரஜித், 
“அதிதி.. தருண் என்ன செய்றான்..?”  என்று சத்தமாக கேட்டவன், கண் ஜாடை காட்டவும், புரிந்து கொண்ட அதிதி, 
“அழுதுட்டே இருக்கான், சாப்பிடல, அவனுக்கு அம்மா வேணுமாம்,  சின்ன குழந்தை தானே.. அம்மா இல்லாமால் ரொம்ப கஷ்டப்டுறான், ராணிம்மா இருந்திருந்தா அவனை சமாளிச்சிருப்பாங்க, அவங்கதானே அவனை வளர்த்தாங்க, இப்போ யாரும் இல்லாமால் ரொம்ப அழுகிறான்..” என்று அதிதி சொல்லவும், தீக்ஷியின் உடல் விறைத்தது. 
“நான் தருணை எத்தனை டைம் கேட்டேன்..?   ஏன் சொல்லலை..?”  என்ற தீக்ஷி தானே எழுந்து தர்ஷினியின் வீடு  சென்றாள். அங்கு நடுஹாலில் மாட்டபட்டிருந்த தர்ஷியின் படம் கண்டு கண்ணீர் உகுத்தவளின் கண்கள் தருணை தேடியது. 
அவன் அங்கு ஓரமாக அமர்ந்து தர்ஷினியின் படத்தை வைத்து பார்த்து கொண்டிருந்தவனின் நிலை, தீக்ஷியின் இதயத்தை நொறுக்க, ஓடி போய் அணைத்து கொண்டாள்.  அவளை உணர்ந்து  கொண்ட தருண், 
“தீக்ஷி.. விடு, என்னை தொடாத, டோன்ட் டச் மீ… தீக்ஷி.. ஐ ஹேட் யூ.. என்னை தொடாத தொடாத..” என்று திமிறியவன், ஒரு கட்டத்தில் அவளை அணைத்து கொண்டு கத்தி கத்தி அழுதான். 
“அம்மா.. அம்மா.. இல்லை தீக்ஷி, ரொம்ப நாளாச்சு அம்மா இன்னும் வரல,  நான் நிறைய தேடுறேன்.. கிடைக்கல, ராணிம்மா.. ராணிம்மா.. அவங்களும் என்னை பார்க்க வரல,  கேட்டா  அவங்களும் இல்லை சொல்றாங்க”, 
“மனோண்ணா.. அவனும் காணோம்,  நான் யாரை கேட்கணும்..?, நீ.. நீயும் வரல,  அப்பா.. அப்பாவையும் காணோம்.. எனக்கு அம்மா வேணும் தீக்ஷி..”, என்று தன்னுடைய இத்தனை நாள் தேடலை சொல்லி சொல்லி அழுதவனின் கண்ணீர் அவன் தூங்கும் வரை நிற்கவே இல்லை.
அவன் தூங்கிய பின் அவனின் பக்கத்திலே அமர்ந்திருந்த தீக்ஷிக்கு தன் தவறு புரிந்தது. ஒரு நாளாவது அவனை வந்து பார்த்திருக்கலாமோ..? தன்னுடைய இழப்பிலே இருந்துவிட்ட எனக்கு இவனுடைய இழப்பு புரியாமல் போய்விட்டது என்று புரிந்தது. 
“தீக்ஷி..”  என்று அவளின் தோள் மேல் கைவைத்த இந்திரஜித்தை கலங்கும் விழிகளுடன் நிமிர்ந்து பார்த்தவள், “நான் வேணும்ன்னு இவனை கவனிக்காம விடலை, என்னால முடியல, நான் எப்படி இவனை..? அம்மா, அக்கா என்னை பார்த்து  ரொம்ப கஷ்டபாடுவாங்க இல்லை,  நான்.. நான்.. இவன் அப்பா இவனோட இருப்பார்ன்னு நினைச்சேன்..” என்று அழுகையுடன் திக்கியவளின் பக்கத்தில் அமர்ந்து தன் தோள் சாய்த்த இந்திரஜித், 
“விஷூ.. இங்கதான் இருந்தான், ஆனா.. அவனுக்கு.. அவனுக்கு..” என்று அடைத்த தொண்டையை செறுமியவன், “சாப்பிடாம, தூங்காம  இருந்ததால மயக்கமாகிட்டான், ஹாஸ்பிடல்ல வச்சிருக்கோம், அப்பா, அம்மா பக்கத்துல இருக்காங்க, தருண் அவனை ஹாஸ்பிடல்ல பார்த்தா..?” என்று நிறுத்தியவன், 
“அதான் கூட்டிட்டு போல, இன்னிக்கு வீட்டுக்கு வந்துடுவான்..” என்று விளக்கம் சொன்னான். மனைவியை இழந்தவனின் இழப்பு புரிந்த தீக்ஷிக்கு விஷ்வஜித்தை நினைத்து  மேலும் துக்கம் பொங்கியது. 
“ச்சு.. போதும் அழுதது, நிறைய நிறைய அழுதாச்சு, இதை பார்த்துதான் உன் அப்பா, அம்மா எல்லாம் கஷ்டப்படுவாங்க, அதிலும் உன் அப்பா உன்னை ரொம்ப தைரியமா, போல்டா வளர்த்திருக்கேன்னு பெருமை பட்றவர்,  நீ இப்படி ஓயாம அழுதிட்டு இருக்கிறதை பார்த்தா ரொம்ப வருத்தப்படுவார்..” என்றவனின் பேச்சில் இருந்த உண்மை புரிந்த தீக்ஷியின் கண்ணீர் நிற்பதற்கு பதில் மேலும் தான் பெருகியது. 
“இந்த ரணம், இழப்பு, வேதனை, கண்ணீர் எல்லாம் என்றும் மறைய  போவதில்லை, அவள் வாழும்  நாள் முழுமைக்கும் அவளின் நெஞ்சில் ஓர் ஓரமாய் இருந்து கொண்டே தான் இருக்கும்..”, என்ற நிதர்சனம் புரிந்த இந்திரஜித் ஆதரவாக அவளை தன் மடி சாய்த்து கொண்டான். 
“இந்த வீடு வேண்டாம், நாங்க வேற வீட்டுக்கு போறோம்..”  என்று ஒரு மாதம் கடந்திருந்த நிலையில் கேட்ட  தீக்ஷியை, அதிர்வுடன் பார்த்தான்  இந்திரஜித், தருணை அன்றே தன்னோடே கூட்டி கொண்டு வந்துவிட்டாள்  தீக்ஷி. இருவரும் ஒன்றாகதான் இருந்தனர். 
விஷ்வா இருக்கும் நிலையில் அவனால் தருணை கவனித்து கொள்ள முடியாததோடு, தருணும் தீக்ஷியிடம் கொஞ்சம் நார்மலாக இருப்பதாலும் எல்லோரும்  தீக்ஷியின் முடிவுக்கு ஒத்துக்கொண்டனர். 
“ஏன் தீக்ஷி..? இங்க உங்க வீட்லே இருங்க.. வேற வீடு எதுக்கு..?” என்று கேட்ட இந்திரஜித்திடம்,  
“இல்லை.. எனக்கும் தருணுக்கும் இங்க  இருக்க..  இருக்க எல்லோரையும் கண்ணு தேடுது, எங்களால உண்மையை ஏத்துக்க முடியல, அதிலும் தருண் அப்பா ரூமுக்கு, மனோ ரூமுக்கு அடிக்கடி போய் அவங்களை தேடிட்டு  அழுதுட்டே வரான்..”, என்று கண்ணீர் நின்றிருந்தாலும்  அடைத்த குரலுடன் பேசியவளின் வேதனை புரிந்த இந்திரஜித், 
அவர்களுடைய AAR.. டவர் பக்கத்துலே வீடு வாங்கி கொடுத்தவனும், பிசினஸை எல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு இவர்களை கவனித்து கொண்டு சென்னையிலே தான் இருந்தான். 

Advertisement