Advertisement

அத்தியாயம் 14
“என்ன இது தீக்ஷி..? இன்னும்  ரிஸப்ஷனுக்கு  கிளம்பாம இருக்க..? ஓடு சீக்கிரம், டைம் ஆச்சு பாரு..”  என்று ராணி சொல்லவும், 
“இல்லைம்மா நான் வரல, நீங்க மட்டும் போங்க..”  என்று மறுத்தவளை கோபத்தோடு பார்த்த ராணி, 
“தீக்ஷி.. என்னதான் பிரச்சனை உனக்கு..? நானும் பார்த்துட்டே இருக்கேன், இந்த ரெண்டு நாளா அங்க மேரேஜ்ல நடந்த எந்த பங்க்ஷனுக்கும் வரல, சரி சும்மா வெளியே எங்கேயாவது போலாம்ன்னா அதுக்கும்  வரமாட்டேங்குற, இப்படியே ரூம்ல அடைஞ்சு இருக்கிறதுக்கு தான் சென்னையில இருந்து கோவா வந்தியா..? இதுக்கு நீ அங்கேயே இருந்திருக்கலாம்..” என்று பொரிந்தார். 
“ம்மா.. ஏன் இப்படி கோவப்படறீங்க..? எனக்கு எங்கேயும் வர பிடிக்கல, நான் வரல அவ்வளவுதான், இதுக்கெதுக்கு இவ்வளவு பேசுறீங்க..?” என்று தீக்ஷியும் சிறிது டென்க்ஷனுடன் பதில் சொன்னாள். 
“என்ன வர பிடிக்கல, நீயென்ன நூத்து கிழவியா..? வயசு பிள்ளை இப்படி இருந்தா நாங்க என்ன எதுன்னு கேட்ககூடாதா..?” என்று ராணி விடாமல் பேச, 
“ம்மா..” என்று தீக்ஷி பதிலுக்கு பேச ஆரம்பிக்கும் போதே, “இங்க என்ன சத்தம்..?”  என்றபடி அரசுவும், உடன் விஷ்வஜித்தும், இந்திரஜித்தும் வந்தனர். அவர்களை பார்த்ததும்  வாயை மூடி கொண்டனர்  அம்மாவும், மகளும். 
“என்னடா கிளம்பலையா..?” என்று அரசு தயாராகாமல் இருந்த மகளின் அருகில் அமர்ந்து கேட்டார்.
  
“ப்பா.. ப்ளீஸ்  நீங்களும் அதையே  திரும்பி  கேட்காதீங்க..? இவ்வளவு நேரம் அம்மாவும், அக்காவும் அதுக்கு தான் சண்டை போட்டுட்டு இருந்தாங்க,  இவங்க கத்துனதுல என் காதே பஞ்சர் ஆகிடுச்சு..” என்று காதில் விரல் விட்டு குடைந்தபடி மனோஜ் சலிப்புடன் சொல்ல, பெண்களின் பார்வை அவன் மேல் முறைப்பாய் படிந்தது. 
அந்த இளஞ்சிங்கம் அதை எல்லாம்  கணக்கில் கொள்ளாமல்,  “முறைச்சா முறைச்சுக்கோங்க.. எனக்கென்ன..?” என்று தெனாவட்டாக பார்த்தான்.  
“ஏண்டா..? எங்களோட வரலியா..?  நீயும் இங்க வந்ததிலிருந்து ரூம்லே தான் இருக்க, நீ கேட்டேன்னு தானே இங்க வந்தோம், ஆனா இங்க வந்தும்  இப்படி இருந்தா எப்படி சொல்லு..?”  என்று அரசு மகளிடம் கனிவாக கேட்டார். 
“இல்லப்பா.. “ என்று என்ன சொல்வது என்று தடுமாறிய மகளின் ஓரக்கண் பார்வை இந்திரஜித்தின்  மேல் படிய, அவனோ எதையும் கண்டு கொள்ளாமல்  மொபைலை பார்த்து கொண்டிருந்தான். 
“கிளம்புடா.. போலாம்..” என்று மகளை உள்ளே அனுப்ப, மறுக்க முடியாமல் உள்ளே சென்ற தீக்ஷியின் பின் ராணி சென்றவர், அவளுக்கு உடுத்த புடவையை கொடுக்க அரண்டு போனவள், 
“ம்மா.. என்ன இது..?  புடவை எல்லாம் நான் கட்டமாட்டேன்..” என்று பதட்டத்துடன் சிறிது சத்தமாகவே  சொல்லிவிட்டவளின் பேச்சு வெளியே இருந்தவர்களின் காதில் விழ, இந்திரஜித்தின் கை மொபைலை இறுக பற்றியது.
“ஷ்ஷ்… ஏண்டி இப்படி கத்துற..?” என்று கண்டிப்புடன் மகளை அதட்டிய ராணி, “புடவை கட்டினா அழகா இருப்ப தீக்ஷி, கட்டேன் ப்ளீஸ்..” என்று பொறுமையாகவே கேட்டார். 
“நோம்மா.. என்னால புடைவை எல்லாம் கட்ட முடியாது, நான் இந்த ட்ரெஸ்ஸை போட்டுகிறேன்..” என்று க்ளோஸ்ட் நெக் சுடியை காட்டினாள். 
“தீக்ஷி.. இந்த கலர் போடமுடியாது, இது தீம் வெட்டிங் ஞாபகம் இருக்குல்ல, இன்னிக்கு டிரஸ் கலர் சிவப்பு”, என்று முறைப்புடன் சொல்ல, “அச்சோ..” என்றான தீக்ஷி, சிவப்பு கலரில் என்ன உடை இருக்கிறது என்று பார்த்தால், அந்த புடவையை தவிர வேறு ஒன்றும் இல்லை.  
இந்த பிளவுசை போட்டால் இந்திரஜித்தின் கடி நன்றாக தெரியுமே..? என்று அச்சம் கொண்டவளிடம் நெருங்கிய ராணி, “இன்னிக்கு அம்மா உன்னை கிளப்புறேன்..” என்று அவள் கழுத்தை சுற்றி போட்டிருந்த ஷாலை உருவ போகவும், 
“ம்மா.. நான் பார்த்துகிறேன், நீ கிளம்பு..” என்று அவரை வெளியே அனுப்பி வைத்தவள், அதே புடவையை கட்டி கொண்டவள், முடியை ஒரே பக்கமாக வாரி பிண்ணியவள், கன்றி போயிருந்த தடத்தை மறைத்தவாறே பின்னலை அந்த பக்கமாக தொங்க விட்டாள். 
ஓரளவிற்கு அவளின் பின்னல் அந்த தடத்தை மறைக்க, திருப்தியில்லாமல் பார்த்தவள், மல்லி பூவை பார்க்கவும், அதை வைத்து பின்னலில் சுற்றி விடவும்,  அந்த இடம் முழுவதுமாக மறைந்துவிட்டது. “ப்பா..” என்று பெருமூச்சு விட்டவள், வெளியே வர, “ரொம்பா அழகா இருக்க தீக்ஷி..”, என்று ராணி மகளை திருஷ்டி வழிக்க, அரசு மகளை வாஞ்சையாக  பார்த்தார். 
அதுவரை  மெலிதான பதட்டத்தில் இருந்தவள் அவர்களுக்கு எதுவும் வித்தியாசமாக தெரியவில்லை என்றான பிறகே முழுவதும் ஆசுவாசமடைந்து இந்திரஜித்தை பார்த்தாள். 
அவனும் அவளை தான் பார்த்து கொண்டிருந்தான், என்ன அவனின்  பார்வை அவளின் கழுத்தில் தான் இருந்தது. “கிளம்பலாமா..?” என்று எல்லோரும் கிளம்பியவர்கள், நடக்கும் தூரத்தில் பீச்சில் ஏற்பாடு செய்ய பட்டிருந்த ரிசப்ஷனுக்கு வந்தடைந்தனர்.
“மாப்பிள்ளை.. தம்பி, அந்த ஷர்மா கேங் இங்கதான் வராங்க, அவங்க பார்வையே சரியில்லை, பொறுமையா இருங்க, முக்கியமா மாப்பிள்ளை நீங்க..”  என்று விஷ்வஜித்தின் குணம் உணர்ந்து எச்சரிக்கை செய்தார் அரசு. 
“சரி மாமா..” என்று விஷ்வஜித் சொல்ல, இந்திரஜித்தோ அவர்களை சிறிதும் கண்டு கொள்ளாமல் இருந்தான். 
“ஹெலோ.. Mr. அரசு.. எப்படி இருக்கீங்க..?” என்று கை கொடுத்து அவரின் நலம் விசாரித்த ஷர்மா, “அப்பறம் புது பிஸ்னஸ் மேன்ஸ், நீங்க எப்படி இருக்கீங்க..?” என்று ஷர்மா ஆரம்பிக்கும் போதே நக்கலாக ஆரம்பித்தார்.  
“ஹெலோ..  பழைய பிஸ்னஸ் மேன், நாங்க நல்லாவே இருக்கோம்..” என்று விஷ்வஜித் அதே பாணியில் பேசவும், முகம் கருத்த ஷர்மாவை கவனித்த அரசு, 
“ஷர்மா.. உங்க பேமிலி வரலியா..?” என்று பேச்சு கொடுத்து தன் பக்கம் திருப்பிவிட,  “வந்திருக்காங்க..” என்றவரின் பார்வையோ விஷ்வஜித்தின் மேலே வன்மையாக படிந்தது. அதை கண்டு கொண்ட அரசு, 
“வாங்க..”  என்று நடந்தபடியே ஷர்மாவிடம் பேச செய்ய, அவரும், அவரின் கேங்கும் வேறு வழி இல்லாமல் அவருடன் பேசியபடியே அவ்விடத்தை விட்டு அகன்றனர். 
“இந்த ஷர்மா  ரொம்ப டேஞ்சரான ஆளா இருக்கான்..” என்று அவனின் பார்வையில் இருந்த  வன்மத்தை கண்டு கொண்டிருந்த விஷ்வஜித் தம்பியிடம் சொன்னவன், அவன் எங்கோ வெறித்து கொண்டிருக்கவும், 
“டேய்.. நான் உன்கிட்ட தானே பேசிட்டு இருக்கேன்..” என்று கோவமாக அதட்ட, “ச்சு.. விடு விஷூ, அவன் எல்லாம் ஒரு ஆளா..?”என்று முடித்துவிட்டான் தம்பிக்காரன்.  
“தீக்ஷி.. பசிக்குது, சாப்பிட போலாமா..?” என்று மனோஜ், அக்காவிடம் கேட்க,  “இப்போதானே ஸ்டார்டர் அவ்வளவு சாப்பிட்ட, அதுக்குள்ளே எப்படிடா பசிக்கும் உனக்கு..?” என்று தீக்ஷி கண்ணை விரித்து  கேட்டாள். 
“எது நான் சாப்பிட்டது உனக்கு அவ்வளுவா..? அதெல்லாம் எந்த மூலைக்கு, தொண்டையிலிருந்து வயிறுக்குள்ள போறதுக்குள்ளே கரைஞ்சு போயிருக்கும்..”, என்று அசால்ட்டாக ஊதிவிட்டவனை கடுப்பாக பார்த்த அக்காவிடம், 
“தீக்ஷி.. சும்மா கொறிக்கிற உனக்கு இதெல்லாம் புரியாது, ஒரு முழு ஆவி இட்லியயே  எங்களுக்கு பத்தியும், பத்தாமலும்  தான் இருக்கும், எங்க வயசு அப்படி..”  என்று முழக்கமிட்டவனிடம் வந்த ராணி, 
“மனோ.. உனக்கு பசிக்குமே, சாப்பிட்டுக்கிறியா..?” என்று கேட்க, அம்மாவை பார்த்து மலர்ந்து சிரித்தவன், “போலாம்மா..”  என்று அவருடன் செல்ல, தீக்ஷியின் முகத்திலும் சிரிப்பு. 
“மாப்பிள்ளை, தம்பி சாப்பிட போலாமா..?” என்று அரசு இவர்களிடம் கேட்க, போலாம் என்றவர்கள், சாப்பிட செல்ல, அரசு மகளுக்கும் குரல் கொடுத்து அவளையும் தங்களுடன் அழைத்து கொண்டார். அரசுவுடன் சென்ற தீக்ஷி, நடையை மெதுவாக்கி, பின்னால் வந்து கொண்டிருந்த இந்திரஜித்தின் அருகில் வந்தவள், 
“ஏன் இப்படி   முகத்தை உர்ருன்னே  வச்சிருக்கீங்க, கொஞ்சம் சிரிங்களேன்..” என்று குரல் தழைத்து கிசுகிசுப்பாக சொன்னாள். “ம்ப்ச்..” என்றுவிட்டு அமைதியாகவே வந்தவனை பார்த்து சலிப்பாக தலை அசைத்தவள், 
“சாப்பிட்டு நான் பீச்சுக்கு போறேன், நீங்களும் வந்துடுங்க..” என்றவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல், “உங்க அம்மா பார்க்குறாங்க, நீ போ..”  என்றவன் முன்னால் சென்றுவிட, தீக்ஷி ராணியிடம் சென்றுவிட்டாள். 
சாப்பிட்டு முடிக்கவுமே சொன்னது போல் கிளம்பிவிட்ட தீக்ஷி, அவர்கள் தங்கியிருக்கும் காட்டேஜிற்கு அருகில்  இருந்த பீச்சில் சென்று அமர்ந்து கொண்டாள்.  சில நிமிடங்கள் கழித்தே வந்த இந்திரஜித் மவுனமாக அவளின் அருகில் அமர்ந்து கோள்ள, அவனின் தோளில் தலை சாய்த்து கையோடு கை கோர்த்து கொண்டாள். 
ஆவேசமாக பொங்கி வரும் அலைகள் கரையை தொட்டு சீண்டிவிட்டு செல்வதையே பார்த்திருந்த இந்திரஜித், “இந்த அலையையும், கரையையும்  போலத்தான் நாமும் தீக்ஷி..” என, புரியாமல் அவனின் முகம் பார்த்தவளிடம்,
“உன்னோட  காதல் அலையால என்னை தொட்டு சீண்டிவிட்டு மட்டும் போயிடுற, என்கிட்டேயே நிலையா நிக்கறதில்லை, உனக்கான கடலுக்குள்ளே நீ இருந்துகிற, உன்னை எதிர்பார்த்து எதிர்பார்த்து நான் தான் வறண்டு போயிடுறேன்..”  என்றான் வெறுமையாக.  
சுபாவின் பேச்சால் அவனை விட்டு விலகவும் முடியமால், நெருங்கவும் முடியாமல் தடுமாறும் தன் நிலையை சொல்லும் அவனின் பேச்சை புரிந்து கொண்டவள், பதில் சொல்லாமல் இருக்க, 
“இப்பவாவது சொல்லு தீக்ஷி, அடிக்கடி ஏன் அப்படி என்னை விட்டு விலக பாக்குற..? நான் பக்கத்துலே இருந்தா நீ நல்லா தான இருக்க, நான் கொஞ்சம் தூரமா போயிட்டா, உனக்குள்ளே நீ சுருங்கிக்குற, என்னோட ஒழுங்கா பேசமாட்டேங்கிற, பார்க்க வரமாட்டேங்கிற, சில சமயம் தேவையில்லாம உன் இயல்பையும் மீறி கத்தவே செய்ற, ஏன் இதெல்லாம் சொல்லு தீக்ஷி..?” என்று சுபாவை பற்றி சொல்வாளா என்ற அரைகுறை நம்பிக்கையில் தான் கேட்டான்.
“ம்ஹூம்.. பதில் இல்லை, வரவும் வராது..”  என்று புரிந்து பெரு மூச்சு விட்டான். “நாளைக்கு நான் ஊட்டி கிளம்புறேன்..” என்று சொல்லவும், “ஓஹ்..” என்றவள் குரலில் தெரிந்த தவிப்பை புரிந்து கொண்டவனுக்கு ஆதங்கம் பொங்கியது. அவளை தன்னிடம் இருந்து பிரித்து அவளின் முகம் பார்த்தவன், 
“நாளைக்கு நான் ஊருக்கு  கிளம்பினதுக்கு அப்பறமா என்கிட்டே ஒழுங்கா பேசுவியா..? இல்லை எப்பவும் போல  என்னை அவாய்ட் செய்வியா..?” என்று தீவிரமாக கேட்டான். அவனின் கேள்விக்கு பதில் சொல்ல திணறியவளை பார்த்து வருத்தம் கொண்டவன், 
“உனக்கு புரியலையா தீக்ஷி..? நீ இப்படி என்னை அவாய்ட் செய்யும் போது நான் என்ன நினைக்கட்டும்..? உனக்கு என்னை பிடிக்கலையா..? அதனால தான் என்னை அவாய்ட் செய்றியான்னு கூட சில சமயம் தோணுது..”, எனும் போது அவளின் அதிர்ந்த பார்வையில், 
“நான் வேறென்ன நினைக்கட்டும்..? இத்தனை நாளா யோசிச்சு யோசிச்சு என்னால முடியல..” என்றவன், 
“அம்மா.. உன்கிட்ட ஏதாவது பேசுனாங்களா..?” என்று நேரடியாகவே கேட்டான். அவனின் திடீர் கேள்வியில் அதிர்ச்சியாகி அவனை பார்த்தவளை தோளோடு அணைத்து ஆறுதல் படுத்தியவன், 
“சொல்லு தீக்ஷி..? அம்மா பேசினாங்களா..?” என்று திரும்பவும் கேட்டவன், அவளின் எப்போதுமான மவுனத்தில்  “நீ சொல்லப்போறதில்லை..” என்றான்  ஆற்றாமையாக.
“நான் அவங்ககிட்ட பேசிட்டேன், இனி அவங்க உன்னை எந்தவிதத்திலும்  தொந்தரவு செய்ய மாட்டாங்க, உன்கிட்டே எதை பத்தியும் பேசமாட்டாங்க..” 
“ப்ளீஸ்.. நீ முன்ன போல நார்மலா இரு, யாருக்காகவும், எதுக்காகவும் உன்னை நீயே  வருத்திக்காத, நல்லா படி, நல்லா சாப்பிடு, நிம்மதியா இரு.. அப்போதான் நானும் நிம்மதியா இருக்க முடியும், நான் மட்டுமில்லை, உன்னை சுத்தி இருக்கிற எல்லோருமே நிம்மதியா இருப்பாங்க..” என்றவனின் பேச்சில் தெரிந்த விலகளில்  கலக்கம் கொண்டு அவனின் முகம் பார்த்தாள். அவனோ தொடர்ந்து, 
“மற்ற ஸ்டேட்லயும் ஹோட்டல்ஸ் திறக்க ஏற்பாடு செய்ய போறேன், அங்க ஊட்டில இருக்கிற பிஸினஸை அப்பாவும், அண்ணாவும் பார்த்துக்க போறாங்க, நான் எனக்கு பிடிச்ச  கன்ஸ்ட்ரக்ஷ்ன் வேலையை ஆரம்பிக்க போறேன், ஒரு பெரிய கவர்மெண்ட் ப்ராஜெக்ட் கிடைக்கும் போல இருக்கு, அது கிடைச்சுட்டா குறைஞ்சது ஒரு வருஷத்துக்கு பிஸி ஆகிடுவேன்..”, என்று பொங்கும் அலைகளை பார்த்தவாறே அவனின் வருங்காலத்தை பற்றி சொன்னான். 
“இதை எல்லாம் ஏன் இப்போவே  என்கிட்ட சொல்றீங்க..?”என்று கலங்கிய குரலில் கேட்டவளை திரும்பி பார்த்தவன், 
“எனக்கு வேற வழி இல்லை தீக்ஷி..? நான் என்ன  செய்யட்டும்..? நான் போன் செஞ்சாலும்  மோஸ்ட்லி நீ எடுக்க போறதில்லை, நேர்ல பார்க்கவும் வரமாட்ட, அதான் இப்போவே சொல்லிடுறேன்..” என்றவன்,  
“எங்க அம்மவோட பேச்சால  உன்னால என்னோட ப்ரீயா பேச முடியல,  உறுத்தல் இல்லாம பார்க்க முடியல, புரியுது, விட்டுடு பார்த்துக்கலாம்..”, என்று முடித்துவிட்டவன், எழுந்து நிற்க, தானும் எழுந்து நின்றவள், அவனை நெருங்கி எப்போதும் போல் அவனின் கையோடு தன் கை  கோர்த்து கொள்ள, வேகமாக மூச்சு விட்டவன், 
“என்னை நெருங்காத தீக்ஷி.. தள்ளியே இரு, என்னோட ஆதங்கம், கோவம், எல்லாத்தையும் விட இயலாமை   ரொம்ப அதிகம், அதோட விளைவு தான் இது..” என்று அவளின் பின்னலை தூக்கி போட்டு கன்றி போயிருந்த இடத்தை விரலால் காட்டியவனின் முகம் மிகவும் கசங்கி போனது.
 “இவ்வளவு தானா  நான்..?” என்ற சுயபரிட்சையே அவனை மிகவும் குற்ற உணர்ச்சி கொள்ள வைத்திருந்தது. அவனின் கோவத்தை கண்டு கொள்ளாதவள், இடையோடு அவனை அணைத்தே கொண்டாள். 
“தீக்ஷி.. என்னோட இயலாமையை நான் உன்கிட்டே காட்டியிருக்கேன், அது என்னை ரொம்ப டிஸ்டர்ப் செய்யுது, ப்ளீஸ்.. என்னை விட்டு தள்ளி நில்லு..” என்று அவளை பதிலுக்கு அணைக்காமல் காதலன் சொல்ல, காதலியோ அவன் சொல்வதை  காதில் போட்டு கொள்ளாமல் இன்னும்  நெருக்கி அணைத்து கொண்டாள்.
“நான் பக்கத்துல இருந்தா மட்டும் தான் இதெல்லாம்..? அப்பறம் என்னை முழுசா அவாய்ட் செஞ்சு படுத்து ராட்சஸி..!!”  என்றவனின் கைகள் அவளை அணைத்து  கொள்ள  தீக்ஷியின் முகத்தில் மலர்ந்த சிரிப்பு. 
“அதான் தெரியுதில்லை, அப்பறம்  ஏன்  என்னை விட்டு போறீங்க..? பக்கத்துலே இருந்துருங்க..”  என்று  கிண்டல் போல் சொன்னாலும் அதில் ஏக்கமும் வெளிப்பட்டது. அதை கண்டு கொண்டவன், 
“சரி அப்போ ஒரே வழி தான் இருக்கு, நாம கல்யாணம் செஞ்சுக்கலாம், ட்வெண்ட்டி போர் அவர்ஸும் சேர்ந்தே இருக்கலாம்.. நாளைக்கு கூட நல்ல முகூர்த்தம் தான்..” என்று சிரிப்புடன் சொல்ல, 
“அய்யோ.. இவ்வளவு சீக்கிரமா..?” என்று அவனை விட்டு தள்ளி நின்றவளை இழுத்து பிடித்து கையில் நிறுத்தி அவளின் முகம் பார்த்தவன், 
“என்ன சீக்கிரம்..? எங்க அப்பா, அண்ணா எல்லாம் இந்த வயசுல கல்யாணம் முடிச்சுட்டாங்க, தெரியுமில்லை..” என்றவன், “சொல்லு.. நாளைக்கே முகூர்த்தம் தான், இடமும் கோவா..  கல்யாணம் முடிஞ்ச பிறகு ரொம்ப தேவைபடும் இடம் தான்..” என்று கண்ணடித்து சொன்னான். 
“என்ன பேசுறீங்க நீங்க..?” என்று முகம் சிவந்து முறைத்தவளை காதலாக பார்த்து  அவளின் நெற்றியில் இதழ் பதித்தவன், அவளின் கழுத்தின் கன்றிய இடத்தை ஒரு விரலால் சுற்றிலும் வருடினான். 
அவனின் வருடலில் சிலிர்த்தவள்,  விரலை பிடித்து தடுக்கவும், அவளின் கையை இன்னொரு கையால் பற்றிகொண்டவன், “ரொம்ப சாரி தீக்ஷி.. எனக்கு அப்போ இருந்த ஒரு கோவத்துல என்ன செய்றோம்ன்னு தெரியாம இப்படி..?” என்று கன்றி போன முகத்துடன் சொன்னான். 
“ச்சு.. விடுங்க, இதுக்காக எவ்வளவு தான் வருத்தப்படுவீங்க..” என்றவளின் கையை இறுக்கமாக பற்றிகொண்டு  அவளின் கன்னத்தில் முத்தம் வைத்தவன், அவளின் உதடுகளை ஏக்கத்தோடு வருடினான். அவனின் எண்ணத்தை புரிந்து கொண்டவள், அவனின் நெஞ்சிலே முகம் புதைத்து கொண்டாள். 
“ச்சு..  எப்போதான் நானும் லிப்லாக் செய்யுறது, போடி..” என்று செல்லமாக சலித்து கொண்டு, அணைத்தவன், “பங்க்ஷன் முடியுது போல, எல்லோரும் வராங்க..”  என, அதுவரை இருந்த காதல் வெண்மை  மறைந்து, தீக்ஷியின் முகம் சுருங்கியது. 
“ம்ப்ச்.. அதுக்குள்ளே ஏன் இப்படி சுருங்குற..?” என்று காதலாக கடிந்தவன், “இனி நான் உனக்கு கால் செஞ்சு சங்கடத்தை தரவிரும்பல, மனசை லைட்டா வச்சுக்கோ,  உனக்கு எப்போ என்கிட்ட பேச தோணினாலும் பேசு, பார்க்க தேடினா கால் செய்,  கண்டிப்பா வரேன்”, 
“எதையும் நினைச்சு உன்னை நீயே  வருத்திக்காத, நமக்கு இன்னும் காலம் இருக்கு, பார்த்துக்கலாம்..” என்றவன் கண்களில் நீர் தேங்க தன்னை பார்த்தவளை பாரமேறிய கனத்த மனதுடன் அணைத்து கொண்டான்.

Advertisement