Advertisement

பார்ட்டி முடியும் நேரம் நெருங்கவும், வீட்டு ஆட்களிடம் வந்த இந்திரஜித், “எல்லோரும் சாப்பிட்டு கிளப்புங்க, பார்ட்டி முடிய டைம் ஆகும்..” என்று அவனும், விஷ்வஜித்தும்  சென்று எல்லோருக்கும் உணவு பரிமாறச்செய்து சாப்பிட  வைத்தவர்கள், வீட்டிற்கு கிளப்பினார்கள். 
அதிதி காரில் ஏறும் சமயம் அவளின் அருகில் சென்ற விஷ்வஜித், “ட்ரஸ் மாத்திடாத, நான் சீக்கிரம் வந்துடுவேன்..” என்று சொல்ல, 
“ம்ம்..” என்று சிவந்த முகத்துடன் அவனை  பார்க்காமல் தலையாட்டியவள் கிளம்பிவிட, விஷ்வஜித் உல்லாசத்துடன் தலையை கோதி கொண்டான். 
“டேய்.. டேய்.. போதும் வாடா, விட்டா பின்னாடியே போயிடுவ போல..” என்று இந்திரஜித் சிரிப்புடன் அண்ணனை இழுத்து கொண்டு சென்றான்.
“சுப்பு.. எல்லோருக்கும் பால் கொடுத்துடுங்க..” என்று தீக்ஷி சொல்லி கொண்டிருக்க, 
“ஐயையோ..” என்று அதிதி அலறிவிட்டாள். 
“ம்ப்ச்.. இப்போ எதுக்கு இப்படி கத்துற அதி..?” என்று தீக்ஷி கேட்க, 
“ஒன்னுமில்லை..” என்று காருக்கு ஓடினாள். “ச்சே.. இவர் பேசுனதுல இதை மறந்துட்டேனே..” என்று தன்னுள் புலம்பியவாறே அந்த பாக்ஸை கொண்டு வந்தவள், யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, சில பல வேலைகளை செய்தாள். 
“சுப்பு.. ராகுலுக்கும், மனோக்கும் இந்த ஐஸ்க்ரீமை கொடுத்துடுங்க, தருணுக்கு இந்த ஐஸ்க்ரீமை கொடுத்துடுங்க.. அவங்க அங்க சாப்பிட முடியலன்னு வீட்டுக்கு கொண்டு வர சொல்லிட்டாங்க..” என்று அவரின் கையில் மூன்று பவுலை திணித்தவள் ஒளிந்து நின்று கொண்டாள். 
சுப்புவும் அவள் சொன்னதை உண்மை என்று  நம்பிகொண்டு டிவி பார்த்து கொண்டிருந்த மனோ,  ராகுல், தருணுக்கு அவள் சொன்னதை போலே கொடுக்க, அவர்களும் ஜாலியாக எடுத்து சாப்பிட ஆரம்பித்தனர். 
இரண்டு வாய் தான் சாப்பிட்டுருப்பார்கள் அதற்குள்ளே “ஹாஹா.. எரியுதே.. எரியுதே..” என்று வாயை திறந்து கொண்டு கத்த, அதிதி சிரிப்புடன் அவர்களின் முன் வந்து நின்றாள். 
“எப்படி எப்படி நான் உங்க பக்கத்துல கூட வரமுடியாதா.. பச்சா பசங்களா.. நான் ஆன்ட்டியா..? இப்போ நீங்க தான்டா கிழவன் மாதிரி வாயை திறந்துட்டு இருக்கீங்க..” என்று சிரிப்புடன் சொல்ல, மூவரும் அவளை கொலைவெறியுடன் முறைத்தனர். 
“என்ன ஆச்சு..? ஏன் இப்படி கத்துறீங்க..?” என்று பெரியவர்கள் வந்துவிட, 
“மாமா… உங்க மருமக தான் எதோ செஞ்சுட்டா, பாருங்க எங்க வாய் எல்லாம் பொத்து போச்சு, எரியுது..” என்று ஐஸ் கியூப்களை எடுத்து உதட்டில், நாக்கில் வைத்து கொண்டே மனோ கோவமாக சொன்னான். 
“ஆமா தாத்தா.. அதிம்மா.. ரொம்ப பேட்..” என்று தருணும் அவர்களுடன் சேர்ந்து குற்ற பத்திரிக்கை வாசித்தான். 
“டேய்.. தருண் குட்டி.. உனக்கு எரியுதா..?” என்று அதிதி கேட்க, 
“எரியல.. பட் வாயெல்லாம் கசக்குது..” என்று முகத்தை சுளித்து சொன்னவன், சர்க்கரையை அள்ளி வாயில் போட்டு கொண்டான். 
“என்னமா அதி இதெல்லாம்..? என்ன செஞ்ச நீ..?” என்று ஆனந்தன் சந்தேகமாக  மருமகளிடம் கேட்டார். 
“மாமா.. நான் ஒன்னும் செய்யல, அவங்களுக்கு பிடிக்கும்னு ஐஸ்க்ரீம்ல ஸ்ட்ராபெரி  தான் கலந்தேன், அது ஏன் எரியுதுன்னு எனக்கு தெரியல..” என்று முகத்தை பாவமாக வைத்து கொண்டு சொல்ல, அங்கிருந்த யாரும் அவளை  நம்பவில்லை. 
“எது.. நீ ஸ்ட்ராபெரி கலந்தியா..? பிராடு..” என்று ராகுல் கோவமாக கேட்டான். 
“பிராமிஸ்டா ராகுல்.. என்னை நீ நம்பலையா..?” என்று  அவ்னின் தலையில் சத்தியம் வைக்க வந்தவளை பார்த்து கையெடுத்து கும்பிட்டவன், 
“போதும்.. இதுவரைக்கும் நீ செஞ்சதே போதும், இதுக்கு மேல என்னை மொத்தமா  மேல அனுப்ப பிளான் போடாதா.. தாங்கமாட்டேன்..”  என்று கொதித்தான். 
பெரியவர்கள்.. சிறியவர்களுக்கு உதவி செய்து தூங்க சென்றுவிட, “அதி.. உண்மையை சொல்லு, என்ன கலந்த..?” என்று தீக்ஷி கேட்டாள். 
“ம்ம்.. ஒரு பத்து இருபது ஸ்பூன் சில்லி சாஸும், பாகற்காய் ஜுஸும் சேர்த்தேன்.. அவ்வளவுதான்..” என்று தோளை குலுக்கி அசால்ட்டாக சொல்ல,  இளையவர்கள் மூவரும் அவளை துரத்தி  கொண்டு ஓடினர். 
இப்படியாக  விஷ்வஜித்தும், இந்திரஜித்தும் வரும்வரை சண்டை போட்டு கொண்டே முழித்திருந்தவர்கள், அவர்கள் வந்து சத்தம் போடவும் தான் தூங்க சென்றனர். எல்லோரும் அவரவர் ரூமிற்கு சென்றுவிட, அதிதி மட்டும் அங்கேயே சோபாவில் அமர்ந்து கொண்டாள். 
என்னதான் இவர்களிடம் சண்டை போட்டு வம்பு வளர்த்து கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் மிகுந்த படபடப்புடன் தான் இருந்தாள். கணவனின் பார்வை, அவனின் பாடல், செயல்.. எல்லாம் இன்று நடக்கவிருக்கும் நிகழ்வை சொல்ல, உள்ளங்கை வேர்த்தது. 
இருவரும் மனது விட்டு பேசியபிறகு எந்தவிதமான உறுத்தலும் இல்லாமல் இருந்தாலும், இதுவரை தாம்பத்தியம் எனும் உறவு  மலராமல் தான் இருந்தது. நாளாக நாளாக இருவரும் மனதளவில் நெருங்க விஷ்வஜித்தின் பார்வையில் வெளிப்படையாகவே  மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தது. 
அதிலும்  சமீப நாட்களாக அவனிடம் காணப்பட்ட  உரிமையான தீண்டல்கள், அழுத்தமான இதழ் முத்தங்கள், பார்வையின் செய்திகள் எல்லாம் அதிக்கு அவனின் எண்ணத்தை புரிய வைத்திருந்தது. 
அவனுடைய இத்தனை மாத பொறுமைக்கான முடிவு இன்று என்பது அவனின் பேச்சில் உறுதியாக புரிய மேலே செல்ல கால் வராமல் கீழேயே அமர்ந்திருந்தாள். 
“என்ன மேடத்துக்கு ரூமுக்கு  வர்ற ஐடியா இல்லை போலையே..?” என்ற கணவனின் பேச்சில் பதறி போய் எழுந்தவளை, நெருங்கி வந்தான். 
“என்ன..? வரமாட்டியா..? வேண்டாமா..?” என்ற கணவனின் குரலில் தெரிந்த ஏக்கம், ஏமாற்றம் புரிய நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தாள். 
“ஓஹ்.. நீ ஆசைப்பட்டது போல உன்னை தள்ளிட்டு தான் போகணும்.. என்ன..?” என்று அவள்  சொன்ன வார்த்தைகளை குறும்பாக சொல்லி சிரிக்க, அதிக்கு முகம் சிவந்து போனது. 
“அது.. சும்மா.. உங்களை..” என்று என்ன சொல்ல என்று தெரியாமல் தடுமாறியவளை, சிரிப்புடன் பார்த்தவன், 
“நீ சும்மா சொன்னியோ..? இல்லை நிஜமா சொன்னியோ…? ஆனா உன் ஆசையை நிறைவேத்துறது என் பாக்கியம் இல்லையா..?” என்று அவளை கையில் ஏந்தி கொள்ள, பதறி போனாள்.
“நான்.. நானே..  வரேன்..”   என்று அவனின் கையில் இருந்து இறங்க முயற்சித்தவளை, 
“ம்ஹூம்.. அமைதியா வா..” என்று தன் கையிலே ஏந்தி கொண்டு ரூமிற்கு சென்றவன், அவளை விட்டு கதவை மூடி வந்தான். 
தாவணியின் நுனியை சுற்றி கொண்டு பதட்டத்துடன் நின்றிருந்த மனைவியை நெருங்கி நின்றவனின் இமைக்கா பார்வையில் அதிதிக்கு முகம் சிவந்தது. 
“ஒய்.. என்ன உன் முகம் சிவக்குது..?” என,  அன்று அவள் செய்தது போலே அவளின் கன்னம் தடவ, அவளுக்கு பதட்டத்தில் வேர்க்க செய்தது. 
“ஏய்.. என்னடி என்னை போல உனக்கும்  வேர்க்குது..?” என்று மீண்டும் அவள் செய்தது போலே ஒற்றை விரலால் வேர்வையை துடைக்க, அதிதிக்கு முகத்தை கொண்டு போய் எங்கு வைத்து கொள்ள என்றே தெரியவில்லை. 
முன்னாட்களில்  தான் அவனை சீண்ட செய்தது எல்லாம் இன்று தனக்கு நடக்கும் போது அதிதிக்கு படபடவென வந்தது. 
“நீங்க நான் சும்மா சொன்னதை எல்லாம் வச்சு என்னை கிண்டல் செய்றீங்க..? போங்க.. போங்க..” என்று முகம் திருப்பி நின்றவளை, பின்னோடு அணைத்து கொண்டவன், 
“இது உங்க ஊர்ல கிண்டலா..? என் பொண்டாட்டியை கொஞ்சுறது..” என்று அவளின் கழுத்தில் இதழ் பதித்தான். 
“ஆனாலும் நீ என்னை இப்படி ஏமாத்தியிருக்க  கூடாது..?” என்றவனின் கை விரல்கள் அவளின் முழு இடையையும் அளந்து கொண்டிருந்தது.
“நான் என்ன ஏமாத்தினேன் உங்களை..?”,  என்று எல்லை மீறும் அவனின் கை விரல்களை, தன் கை கொண்டு தடுத்தபடி கேட்டாள். 
“ம்ப்ச்..” என்று அவளின் தடுக்கும் கையை தட்டிவிட்டவன், “பின்னே.. நான் கூட நீ பேசனதை எல்லாம் பார்த்து பயங்கர தைரியசாலின்னுல நினைச்சிருந்தேன்..”
“ஆனா மேடம்   வெறும் வாய் சொல் வீராங்கனை போலயே..? இப்படி இருந்தா என் பாடு ரொம்ப கஷ்டம்தான்..”  என்றவன், அவளை தன் பக்கம் திருப்பி நிற்க வைத்தான். 
“அதி.. என்னை பாரு..” என்று கண் மூடியிருந்த மனைவியிடம் சொல்ல, லேசாக கண் மலர்ந்தவளை சம்மதத்துக்காக  பார்த்தான். அவனின் கேள்வி புரிய, வெட்கத்துடன்  அவனுடன் ஒன்றி கொண்டாள். 
அதிலே அவளின் சம்மதம் புரிய, ஆசையோடு மனைவியை அணைத்தவனின் இதழ்கள் அவளின் நெற்றியில், கன்னத்தில் பதிந்ததோடு அவளின் இதழில் லேசாக ஒற்றி எடுத்தது. 
அவனின் இதழ் முத்தத்தில் கண் மூடியவளை காதலாக பார்த்தவன், மறுபடியும் தன் இதழ்களை அவளின் இதழில் பதித்தான் சிறிது ஆழமாகவே.. 
அடுத்தமுறை அவனின் இதழ் அவளின் இதழோடு மொத்தமாகவே கலந்துவிட, அவர்களின் வாழ்க்கையும் அந்த நொடியில் ஆரம்பமானது.
இனி எந்த தங்கு தடையும் இன்றி அவர்களின் வாழ்க்கை சுபமாகவே இருக்கும்.. 
முற்றும்.. 

Advertisement