Advertisement

எப்போது கேட்டாலும் வந்துவிடுவான்.. இதே பதில் தான், இதோ இப்போதும் அதே பதில் தான் என்பது ஆனந்தனின் முகத்திலே தெரிந்தது. லிங்கம் அரெஸ்ட் அன்று கிளம்பியவன், இன்னும் வீடு திரும்பவில்லை. யாரிடமும் போனும் பேசுவதில்லை, 
தருணிடமும் கூடத்தான், “அப்பா எங்க..? எப்போ வருவார்..?” இதேதான் அவனின்  தினசரி கேள்வியாக இருக்கும், அவனை சமாளிப்பதற்குள்  போதும் போதும்ன்று  ஆகிடும்,  ஏதோ இப்போழுது  மனோவுடன்  இருக்கவும் தான் கொஞ்சம் அமைதியா இருக்கிறான். 
“ஏங்க இவன்  இப்படி செய்றான்..?” என்ற சுபாவின் கலங்கிய குரல், அதிதிக்கு வருத்தத்தை கொடுத்தது. 
“ஏன் இப்படி எல்லோரையும் படுத்துறார்..? ஒருவேளை அன்னிக்கு  நான் பேசினது  பிடிக்கலையோ..? கோவிச்சுட்டு போயிட்டாரா..? இனிமேல் திரும்பி வரவே மாட்டாரா..? அப்படி என்ன தப்பு செஞ்சுட்டேன்னு என்னை இப்படி தண்டிக்கிறாரு…?”
“ எனோ நாளாக நாளாக அவர் திரும்பி வரவே மாட்டாருன்னு தோணுது, போகட்டும், இதென்ன அவருக்கு புதுசா..? நாங்க எல்லாம் வேண்டாமா..? அப்படியென்ன கோவம் எங்க மேல..?” என்ற  கோவம், அழுகை. 
“நானா அவரை இப்படி  தேடுறேன்..? எனக்குள்ள அவர் இந்தளவு இருக்காரா..?  ம்ம்…  நான் அவரை தேடி என்ன பிரயோஜனம்..? அவருக்கு என் நினைப்பு கொஞ்சமாவது இருக்குமா..?” என்ற ஏக்கம், தேடல் அதிதியை ஒரு வழி செய்து கொண்டிருந்தது. இப்படியே இவர்களின் காத்திருப்பு மேலும் ஒருவாரம்  கடந்தபிறகே விஷ்வஜித் வந்தான்.
“ப்பா..” என்ற தருணின் சத்தத்தில் எல்லோரும் ஹாலுக்கு ஓடிவர அங்கு நின்றிருந்த விஷ்வஜித்தை இமைக்க மறந்து பார்த்தனர். 
“விஷூ..” என்று சுபா வேகமாக சென்று மகனை அணைத்து கொள்ள, அவனும் அம்மாவை அணைத்து கொண்டான். 
“விஷூ.. இனி இப்படி செய்யாத, எங்களை எவ்வளவு வேணும்னாலும் திட்டிக்கோ, சண்டை போடு, நாங்க தாங்கிப்போம், மனசார ஏத்துகிறோம், ஆனா இப்படி எங்களை விட்டு போகாத..” என்ற சுபாவின் கண்ணீரை துடைத்த விஷ்வஜித், 
“ம்மா.. இனி இதுபோல எங்கேயும் போக மாட்டேன்.. நீங்க அழுகாதீங்க..” என்றவனை அதிதி வெறித்து பார்த்து கொண்டிருந்தாள். 
“ம்மா.. இது எல்லாம் ரொம்ப  அநியாயம், உங்க பெரிய மகனை பார்த்தவுடனே எங்களை எல்லாம் கண்டுக்கல பார்த்தீங்களா..? என்ற இந்திரஜித்தின் சண்டையில் அவர்களை பார்த்த சுபாவிடம் வந்த மனோ, 
“அத்தை.. ஏன் அழுறீங்க, அதான் மாமா வந்துட்டாரில்லை..” என்று தோளோடு அணைத்து ஆறுதல் சொல்ல, 
“நீங்க உங்க அத்தைக்கு ஆறுதல் சொன்னா, நான் எங்க அப்பாக்கு ஆறுதல் சொல்வேன்டா..” என்ற இந்திரஜித் வேகமாக சென்று ஆனந்தனை அணைத்து கொண்டான். 
“டேய்.. போதும் விட்றா, மூச்சு முட்டுது.. விட்றா..” என்று இவன் கட்டிபிடித்ததில் தவித்த ஆனந்தனின் சத்தத்தில் எல்லோரும் சிரிக்க, 
“உங்களை போய் கட்டிப்பிடிச்சு ஆறுதல் சொன்னேன் பாருங்க  என்னை சொல்லணும்..” என்று பொறுமியபடி வந்தவனை பார்த்து சுபாவும், மனோவும் கிண்டலாக சிரித்தனர். 
“ம்மா.. போதும்,  போங்க.. உங்க மனோவும், உங்க பெரிய மகனும் எங்கேயும் ஓடிட மாட்டங்க, அவங்களை விட்டுட்டு போய் சாப்பாடு எடுத்து வைங்க, பசிக்குது..” என, 
“அவங்க ஓடுறாங்களோ இல்லையோ..? நீ எங்கேயும் ஓடமாட்டாடா.. அதுமட்டும் எனக்கு நல்லா தெரியும்..” என்று சுபா கிண்டலாக சொன்னார். 
“ஏங்கிறேன்..? இல்லை எதுக்குங்கிறேன்..? நான் ஏன்  ஓடணுங்கிறேன்..? எனக்கு எல்லாம் இது சரிப்பட்டு வராது, அப்படியே ஓடணும்ன்னாலும் என் தீக்ஷி தங்கத்தோட தான் ஓடுவேன், நான் இல்லைன்னா அவ ரொம்ப தவிச்சு போயிடுவா.. என்ன தீக்ஷி சரிதானே..?” என்று மனைவியிடம் காதலாக கேட்டான். 
“அப்படியெல்லாம் ஒன்னுமில்லை, எங்க போறீங்கன்னு மட்டும்  சொல்லுங்க, நானே டிக்கெட் எல்லாம் எடுத்து தரேன்..” என்று தீக்ஷி குறும்பாக சொன்னாள்.
“நீயா பேசியது..? என் அன்பே நீயா பேசியது..?” என்று நெஞ்சில் கைவைத்து பாடி கொண்டிருந்த, இந்திரஜித்தை கண்டு கொள்ளாமல்  எல்லோரும் உணவுண்ண அமர்ந்துவிட்டனர். 
“வரேன்.. நானும் வரேன். எனக்கு அந்த பெரிய பிளேட்டை எடுத்து வைங்க, நல்லா சாப்பிட்டு உங்களை எல்லாம் தெம்பா கவனிச்சுக்கிறேன்..” என்று தானும் உணவுண்ண அமர்ந்தவனை பார்த்து தீக்ஷி சிரிக்க, 
“போடி… ரொம்பத்தான்..” என்று நொடித்து கொண்டான்.
“அதிதி.. நீ ஏன் அங்கேயே நிக்கிற..? வா சாப்பிடு..” என்ற தீக்ஷியின் குரலுக்கு, 
“க்கும்..” என்ற அடைத்த தொண்டையை செறுமியவள், 
“நான்.. நான் அப்பறமா சாப்பிடுறேன் தீக்ஷி, நீங்க.. நீங்க சாப்பிடுங்க..” என்றவள், வேகமாக மேலேறிவிட்டாள். அவளின் சிவந்த முகமும், கலங்கிய கண்களுமே அவளின் நிலையை சொல்லியது. 

“நீங்க சாப்பிடுங்க.. நான் வந்துடுறேன்..” என்ற விஷ்வஜித்தும் மேலேறிவிட, பார்த்திருந்த எல்லோருக்கும் முகம் தானகவே மலர்ந்தது. 
“கடவுளே.. இனியாவது எல்லாம் நல்லதே நடக்கணும்..” என்ற சுபாவின் வேண்டுதல் தான் எல்லோரின் மனதிலும். 
அங்கு ரூமில் அதிதி பெட்டில் கவிழ்ந்து படுத்து அழுது கொண்டிருக்க, உள்ளே நுழைந்த விஷ்வஜித் அவளின் அருகில் சென்று “அதி..” என்று கூப்பிட்டான். கணவனின் சத்தத்தில் மேலும் தலையணைக்குள் முகம் புதைத்தவளின் அழுகை நின்று உடல் இறுகி போனது.  
“அதி.. எழுந்திரு.. அதி..” என்ற விஷ்வஜித் தொடர்ந்து கூப்பிடட்டும் நிமிராமல் இருந்த மனைவியின் கோவம் புரிய, முதல் முறையாக அவளின் பக்கத்தில் அமர்ந்து, அவளின் தோள் தொட்டு திருப்பினான். 
அவனின் திடீர் தொடுகையில் நடுங்கிய அதிதி அவசரமாக தானே எழுந்து கொண்டாள். “அதி.. என்னை பாரு..”  என்று அவனை  பார்க்க மறுத்து முகம் திருப்பி அமர்ந்திருந்த மனைவியின் பிடிவாதத்தில் சிரித்தவன், 
“ஏய்.. உன்னை இப்படி அமைதியா பார்க்க ரொம்ப நல்லா இருக்கு, பேசாம இப்படியே இருந்துடேன்..” என்றவனின் கிண்டலில் திரும்பி அவனை முறையோ முறை என்று முறைத்தாள்.  
“பார்த்துடி.. நீ என்னை முறைக்கிறதுல கண்ணே வெளியே வந்துட போகுது..” என்று மேலும் சீண்டியவனிடம் பேச விருப்பமில்லாமல் எழுந்து பால்கனிக்கு செல்ல பார்த்தவளை வழி மறித்து நின்றான். 
“அதி..  இப்படி இருக்காத.. உர்ரென்னு இருக்கிற உன் முகத்தை பார்க்கவே சகிக்கல.. எதோ ஒரு விசித்திர ஜந்துவை பார்க்கிறதே போல இருக்கு..” என்றவனை மேல் மூச்சு கீழ் மூச்சு ஆத்திரமாக பார்த்தவள், 
“என்ன..? என்ன நினைச்சுட்டு இருக்கீங்க..? எப்படி என்னை பார்த்து நீங்க விசித்திர ஜந்துன்னு சொல்லலாம்..? ஆஹ்ன்.. என்னை பார்க்க அப்படியா இருக்கு..?”
“என்னடா பொண்டாட்டி கோவமா இருக்காளே..? அவளை விட்டுட்டு நாம ஓடி போயிட்டோமே, அவளை பக்குவமா சமாதானம் செய்யலாம்ன்னு இல்லாம கிண்டலா செய்றீங்க..?”
“உங்களை போய் ஒவ்வொரு நிமிஷமும் தேடி தேடி ஏங்கின பாருங்க என்னை சொல்லணும், உங்களுக்கு எப்போவும் என் மனசு புரிய போறதில்லை, போங்க.. மறுபடியும் எங்கேயாவது காணாம போயிடுங்க.. போங்க..”  என்று கண்ணில் நீர் வழிய பொரிந்தவளின் இரு கையையும் பற்றி கொண்டவன், 
“ ப்ளீஸ் அழாத, உன்னை பேசவைக்கதான் அப்படி பேசுனேன், அதி.. ஏய்.. உன்னை தானே சொல்றேன், அழுகையை நிறுத்துடி..” என்று அதட்டியவன், தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க வாங்கி குடித்தவளை அமரவைத்து தானும் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். 
“அதி.. உன்னை விட்டு நான் எங்கேயும் ஓடி போகல, ஒரு தியான சென்டருக்கு தான் போயிருந்தேன், அரசு மாமா எப்போதும் சொல்லிட்டே இருப்பார், பொறுமை ரொம்ப முக்கியம்ன்னு,  இனியாவது அதை கடைபிடிக்கலாம்ன்னு தோணுச்சு..”
“அதோட எனக்குள்ள இருக்கிற  குழப்பம், குற்ற உணர்ச்சி, மனஅழுத்தம் எல்லாம்  உன்னை, என்னை நம்ம சுத்தியிருக்கிற எல்லோரையும் நார்மலாவே வாழவிடாதுன்னு புரிஞ்சது,  அதனாலதான் சில யோகா, கொஞ்சம் கவுன்சிலிங், தியானம்ன்னு போய் வந்தேன்..”
“ஆனாலும் என்கிட்ட இருக்கிற அந்த கோவம், அவசரம், நிதானம் இல்லாம நடந்துகிறது எல்லாம் முழுசா போயிடுச்சுன்னு என்னால உறுதியா சொல்ல முடியாது, என்னை மாத்திக்க என்னால ஆன ஸ்டெப்பை எடுக்கணும்ன்னு ஒரு உறுதி..”
“ என்னை நம்பி ஒரு சின்ன பொண்ணு, என் மகன்.., எனக்காக  எங்க அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சின்னு ஒரு கூட்டமே இருக்கு, அவங்களுக்காக எல்லாம் என்னை மாத்திக்கறதுல தப்பு இல்லனு தான் போனேன்..”
“அப்போ இருந்த மனநிலையில் உனக்கிட்ட சொல்லிட்டு போக முடியல, அதனாலதான் ஜித்துகிட்ட மட்டும் சொல்லியிருந்தேன்.. அங்க போன் எதுவும் பேசகூடாது, அதனாலதான் யாருக்கும் பேசல, ஜித்து மட்டும் மாசத்துக்கு இரண்டு முறை வந்து என்னை பார்த்திட்டு வந்தான்..”  என்றவனின் முயற்சி புரிய, அதிதி லேசாக முகம் தெளிந்தாள்.
“அதிதி..  இதுவரைக்கும் உன்கிட்ட நடந்துகிட்ட  என்னோட  செயலுக்கு, பேச்சுக்கு எல்லாம் என்னால நியாயம் சொல்ல முடியாது, அது தப்பும் கூட, உன்னோடன கல்யாணத்தை மறுத்தது, உன்னை தள்ளி வச்சது, தேவை இல்லாம பேசனது.. எல்லாமே தப்பு தான்..”
“அதை தெரிஞ்சே தான் செய்தேன், சோ மன்னிப்பும் கேட்க முடியாது, ஆனா எனக்கு உன்மேல வெறுப்பு எல்லாம் எதுவும் கிடையாது, எனோ ரெண்டாம் கல்யாணங்கிற ஒரு வெறுப்பு, அதுவும் நீ தர்ஷினியோட தங்கச்சிங்கிற ஒரு ஒதுக்கம் தானே தவிர வேறெதுவும் இல்லை..”, 
“உனக்கு ஒன்னு சொல்லணும், அன்னிக்கு ஜித்து என்னை மிரட்டி கல்யாணம் செய்ய வச்சிருந்தாலும் கூட.. எனக்கு உன்னை கல்யாணம் செய்ற எண்ணம் இருந்தது..”, 
“ஆனா அன்னிக்கு செய்ற எண்ணம் இல்லை, கொஞ்ச நாள் கழிச்சு செய்யலாம்ன்னு தான் நினைச்சிருந்தேனே தவிர உன்னை கல்யாணமே செய்ய கூடாதுன்னு நினைக்கல.. உனக்கு நான் சொல்றது  புரியுது தானே..?” என்று  சந்தேகத்துடன் கேட்டான்.  
“ம்ம்.. புரியுது, ஆனா ஏன் அந்த திடீர் மாற்றம்..? நான் கேட்டப்போ முடியாது சொல்லிட்டிங்க..?”
“ம்ம்.. அன்னிக்கு நீ சொன்ன இல்லை, எங்க அக்கா புருஷனை கம்பெல் செஞ்சு கல்யாணம் செய்ய பார்க்கிறேன், நான் என்ன பொண்ணு..?ன்னு அது என்னை ரொம்ப அப்பெக்ட் செஞ்சுடுச்சு.. நீ அப்படியெல்லாம் இல்லை, என்னோட மறுப்பு உன்னை இந்தளவு யோசிக்க வைக்குதான்னு வருத்தமா போயிடுச்சு..” என்று சொல்ல, அதிதிக்கு ஆச்சரியம் தான்.
“ஏய்.. உண்மையாதான் சொல்றேன், என்னை நம்பலையா..?” என்று கேட்டான். 
“இல்லை.. ஒருவேளை எனக்கு இருக்கிற குறையினால..”
“அதிதி..”  என்று  கணவன் கோவமாக அதட்டியவன், “இங்க பாரு, இதுதான் கடைசி, இனி எப்போதுமே உன்ன வாயில அந்த வார்த்தை வரக்கூடாது, மனசுலயும் நினைக்க கூடாது, அது வேண்டாம், எனக்கு அது ஒரு விஷயமே இல்லை, அதை நான் நினைக்கல, நினைக்கவும் மாட்டேன்..” என்று உறுதியாக சொல்ல, அதிதியின்  கண்ணில் கண்ணீர். 
“ஷ்ஷ்.. மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா..?” என்று அவளின் அழுகையை சலித்தவனின்  கையை கண்ணில் ஒற்றி கொள்ள போக, 
“அதிதி.. என்ன செய்ற நீ..?” என்று கண்டிப்புடன் அதட்டியவன்,  “இங்க வா..”  என்று கை விரித்து அழைத்தான். 
அவனின்  விரிந்த  கையில் தன்னுடைய வாழ்நாள் பாதுகாப்பு தெரிய தயக்கமே இல்லாமல் அவனுள் சரணடைந்தாள். 
“அதிதி.. இனி இதுதான் நம்ம வாழ்க்கை, உனக்காக நான்.. எனக்காக நீ.. இது எப்போதும் யாருக்காகவும் மாறாது.. என்னை நம்புற தானே..?”  என்று கேட்டான். 
“நிறைய..” என்ற அதிதியின் நெற்றியில் இதழ் பதித்தான் விஷ்வஜித். 
இவர்களுடைய ஆலாபனை காதல் என்றும் நிலைத்து நிற்கும் என்ற நம்பிக்கையில் நாமும் ஓடுவோமாக..

Advertisement