Advertisement

காதல் ஆலாபனை FINAL 
“என்னை மன்னிச்சிருங்க.. உங்களுக்குள்ள இவ்வளவு கஷ்டம் இருக்கும்ன்னு தெரியாம, நானும் உங்களை ரொம்ப படுத்திட்டேன்..” என்று ரூமில்  அமர்ந்திருந்த விஷ்வஜித்திடம் சென்று அதிதி  மன்னிப்பு கேட்க, 
“ம்ப்ச்.. இப்போ நீ எதுக்கு என்கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்கிற.. வேண்டாம், உன்மேல எந்த தப்பும் இல்லை, நான்தான் தப்பு, நிறைய இடத்துல தப்பு.. என்னால யாருக்கும் சரியா இருக்க முடியல, எந்த உறவுக்கும் நியாயம் செய்யாத மாதிரி ஒரு குற்ற உணர்ச்சி..” என்றவனின் பார்வை தோட்டத்தில்  அமர்ந்து கண்ணீர் வடித்து கொண்டிருந்த சுபாவின் மேல் படிந்தது. 
தான் கேட்டது அவர்களை மிகவும் பாதித்திருப்பது புரிந்தது, அவனின் எண்ணம் அவர்களை வருத்துவது இல்லை, தன்னுடைய இத்தனை வருட வேதனை, குற்ற உணர்ச்சி, மனஅழுத்தம் வெடித்து வெளியே வந்துவிட்டது அவ்வளவுதான், 
அவனுக்குமே தெரியும் முடிந்து போனதை நினைத்து இருப்பவர்களை வருந்தவைப்பதில் எந்த பயனும் இல்லை என்று, அதிலும் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்டுபவர்களை சொல்லி காட்டுவது என்பது மிகப்பெரிய தவறே தான், 
ஆனாலும் தர்ஷினி..  அவளுக்கு இவர்கள் செய்த அநியாயத்தை நினைக்கும் போது கோவம், ஆற்றாமை, ஆதங்கம் அடங்குவதாக இல்லை, இவர்களின் இந்த  காலங்கடந்த மன்னிப்பால் என்ன பயன்..? என்ற விரக்தி தான் அவனை மேலும் வெடிக்க வைத்தது. 
“மாமா.. உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும்.. பேசலாமா..?”  என்ற அதிதியின் குரலில் சுபாவின் மேல் இருந்த தன் பார்வையை திருப்பியவனிடம், 
“நான் இப்போ பேசறதை நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு எனக்கு தெரியல, ஆனா ப்ளீஸ் அக்காகாக நான் பேசுறதை புரிஞ்சுக்க முயற்சி செய்ங்க..” என்றவள், 
“தர்ஷினி அக்கா.. ம்ம்.. நான் இதுவரை யார்கிட்டேயும் அக்கா பத்தி பேசனதே இல்லை..” என்றவளின் பேச்சில் இருந்த உண்மை அப்போதுதான் விஷ்வஜித்துக்குமே புரிந்தது. 
“ஆமாம்.. இவள் இதுவரை தர்ஷினியை பற்றி எங்கேயேயும் பேசியதே இல்லையே.. ஏன்..?”  என்று மனைவியை கேள்வியாக பார்த்தான்.   
“முதல்ல எல்லாம் நாங்களும் மத்த அக்கா, தங்கைகள் போல்தான் இருந்தோம், ஆனா உங்க கல்யாணத்துக்கு அப்பறம் எல்லாம் எனக்கு அவ ஒரு அக்காவா இருந்ததை விட குருவாகதான் இருந்திருக்கா..”
“எங்க அப்பா இப்படின்னு அக்காக்கு தெரிஞ்சது அவளோட அந்த கல்யாண ஏற்பாட்டுல தான், அந்த சமயத்துல அப்பாவை நினைச்சு நிறைய கஷ்டபட்டிருக்கா, அவருக்கு புரியவைக்கவும் முயற்சி செஞ்சிருக்கா, ஆனா அவர் எல்லாம் நான் பார்த்துகிறேன்.. நீ பேசாதன்னு  அவ வாயை அடைச்சுட்டாரு..”
“அவளுக்கு நல்லா தெரியும் இந்த கல்யாணம் நடக்காதுன்னு. அதுக்கு மனசை தயாரப்படுத்துகிட்டு தான் அன்னிக்கு மணமேடைக்கே வந்தா.. என்ற அதிதியின் வார்த்தைகள் முன்னமே தர்ஷினியும் விஷூவிடம் சொல்லியது தான்..”
“எனக்கு இதெல்லாம் அக்கா தருண் பிறந்த பின்னாடி தான் என்கிட்ட சொன்னா, ஏன் தெரியுமா..? நீ அப்பாவை நம்பாத, நல்லா படி, உன் கால்ல நிக்கிற வழியை பாரு,  நமக்கு அப்பா சரியில்லை, நம்ம லைபை நாமதான் பார்த்துக்கணுங்கிறதுக்காக சொன்னா..”
“எனக்குமே அப்பா பத்தி கொஞ்சம் தெரியும் தான், ஆனா அக்கா சொல்லவும் நமக்கு மட்டும் இப்படி  ஒரு அப்பா ஏன்..? அரசுப்பா  மாதிரி அப்பா ஏன் இல்லைன்னு அவகிட்ட அழுதேன், அதுக்கு அப்பறம் நானும் இதுதான் நம்ம நிலைமைன்னு புரிஞ்சு எதார்த்தை ஏத்துக்கிட்டேன்..”, 
“நல்லா படிக்கவும் செஞ்சேன், அப்படியும் நான் மனசு கஷ்டப்படுற சமயங்கள்ல எல்லாம் ஒரு நல்ல வழிகாட்டியா இருந்தா என்னை வழி நடத்தியிருக்கா, நாங்க நிறைய போன்ல தான் பேசுவோம், உங்களுக்கு எங்களை பிடிக்காதுன்னு தெரிஞ்சதால நானும், அம்மாவும்  உங்க வீட்டுக்கு வரமாட்டோம்..”, 
“இல்லை.. நான்..” என்று விஷூ இடைமறித்து பேச, 
“ப்ளீஸ் மாமா.. நான் இன்னிக்கு என் மனசுல இருக்கிறதை பேசணும், எங்க அக்கக்காக பேசணும், நான் இப்போ பேசுறது உங்க மனைவியா இல்லை, எங்க அக்காக்கு தங்கச்சியா பேசுறேன், நீங்க நான் சொல்றதை புரிஞ்சுக்கணும்.. ப்ளீஸ்..” என்று அவன் பேசுவதை தடை போட்டவள், 
“எனக்கும் சரி, அம்மாக்கும் சரி அதுல எந்த வருத்தமும் இல்லை, எங்க அக்கா நல்லா இருந்தா போதும், அவ சந்தோஷமா இருக்கணும்ன்னு விலகிட்டோம், இதுல நான் உங்களை தப்பு சொல்லலை, எங்க அப்பா இப்படினு தெரிஞ்சும் நீங்க அக்காவை ஒரு சொல்லு கூட சொல்லாமல் ரொம்ப சந்தோஷமா வச்சிட்டு இருந்தீங்க”, 
“அதுவே எங்களுக்கு உங்க மேல ரொம்ப பெரிய மரியாதை, எங்க அக்காக்கு ரொம்ப பொருத்தமான புருஷன் கிடைச்சிருக்கார், அவ லைப் நல்லா இருக்கும்னு ஒரு திருப்தி..”
“ அக்காவும்.. அப்படித்தான் உங்களை நினைச்சு ரொம்ப பெருமை, என் புருஷனை போல உண்டான்னு என்கிட்ட, தீக்ஷிகிட்ட நிறைய சண்டை போடுவா, யாராவது உங்களை பத்தி ஏதாவது விளையாட்டுக்கு சொல்லிட்டா கூட அவளுக்கு  அப்படி கோவம் வரும்..”  
“உங்களோடான வாழ்க்கையை ரொம்ப திருப்தியா தான் வாழ்ந்தா, நீங்க இந்தளவு அவளை நினைச்சு வருத்தப்படுற அளவு அவ எந்த கஷ்டமும்படல, அவளுக்கு இருந்த ஒரே குறை.. நம்ம பேமிலியோடு சேர்ந்து இருக்க முடியல, உங்களை உங்க குடும்பதுல இருந்து பிரிச்சிட்டோமான்னு ஒரு தவிப்பு, வருத்தம்..”
“இதைதவிர அவ ரொம்ப சந்தோஷமா, மனசார நல்லா தான் வாழ்ந்தா, ஆனா நீங்க அவ இருந்தவரை ஒரு நல்ல ஹஸ்பண்டா இருந்துட்டு, இப்போ அவளுக்காக சண்டை போடுறேன், நியாயம் கேட்கிறேங்கிற பேர்ல அவளுக்கு அநியாயம் செய்றீங்க..” என்று  உறுதியாக அவனின் கண் பார்த்து சொன்னாள். 
“என்ன இப்படி சொல்ற..? நான் அவளுக்கு அநியாயம் செய்றேனா..?” என்று விஷ்வஜித் மெலிதான கோபத்துடன்  கேட்டான். 
“நிச்சயமா.. அவ அத்தனை வருஷம் ரொம்ப மெச்சூரிட்டியோட, பொறுப்பா, திருப்தியா வாழ்ந்த ஒரு வாழ்க்கையை நீங்க இப்படி சண்டை போட்டு ஒன்னுமில்லாம செய்றீங்க..”, 
“நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கையில உங்களுக்கு குறையா தெரிஞ்சது எல்லாம் அவளுக்கு வாழ்க்கையோட எதார்த்தமா தான் தெரிஞ்சது, இதுல உங்க தப்பு எதுவும் இல்லை, ஏன்னா அப்போ இருந்த உங்க வயசு அப்படி..”, 
“அந்த வயசுக்கெல்லாம் எங்களுக்கு ஒரு குடும்பத்தையே தூக்கி சுமக்கிற அளவு பொறுப்பு, மனமுதிர்ச்சி, கடமை, சகிப்புதன்மை, விட்டுகொடுத்தல்.. இப்படி எல்லா தானாகவே வந்துடும், ஆனா உங்களுக்கு எல்லாம் அந்த வயசுல இதுல ஒரு பத்து பர்சன்ட் கூட இருக்காது..”
“அதனாலதான் உங்களோட  கல்யாண வயசுக்கு நீங்க கல்யாணம் செய்யணுங்கிறது, அன்னிக்கு நீங்க எங்க அக்காவை கல்யாணம் செஞ்சு அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுத்தீங்க, ஆனா உங்களால அந்த வாழ்க்கையை அனுபவிச்சு, சந்தோஷமா வாழமுடியல..”, 
“உங்களோட பொறுப்பும் கடமையும் அந்த வயசுல வேற, அதை நோக்கி ஓட வேண்டிய கட்டாயம், இதுல அக்காவை சந்தோஷமா வச்சுக்க முடியலங்கிற ஓரு வருத்தம், இப்படி உங்களுக்குள்ளே நீங்க போராட ஆரம்பிச்சுட்டிங்க, இதுல அக்கா இல்லாம போகவும் அது குற்ற உணர்ச்சியா மாறிடுச்சு..”, 
“அதனாலே ஏதோ நீங்க பெரிய தப்பு செஞ்சுட்டது போல உங்களை நீங்களே தண்டிச்சுக்கிறீங்க, இதனால நீங்க என்ன ப்ரூப் செய்றீங்க  தெரியுமா..? எங்க அக்கா வாழ்ந்த வாழ்க்கை ஒன்னுமே இல்லைன்னு இந்த உலகத்துக்கு காட்டுறீங்க.. அவ்வளுதான், வேறெந்த பயனும் இல்லை..”, என்று மிக மிக உறுதியாக சொன்னவள் சென்றுவிட, 
என்ன..? என்ன நீ..?  என்னென்னமோ சொல்லிட்டு போற..? என்று விஷூவின் கேள்விக்கு, 
“அதி சொல்லிட்டு போனது எல்லாம்  ரொம்ப ரொம்ப சரி விஷூ..” என்ற இந்திரஜித்தோடு, தீக்ஷியும் உள்ளே வந்தனர். 
“ஆமா விஷூ, அதி சொன்னது எல்லாம் ரொம்ப சரிதான்..” என்ற தம்பியின் பேச்சில் கோவம் கொண்ட விஷ்வஜித்,
“அப்போ நான் தான் தப்புன்னு சொல்றியா..?” என்று கேட்டான். 
“இங்கதான் விஷூ நீ தப்பு செய்ற, எதையும் பொறுமையா யோசிக்க டைம் எடுத்துக்க மாட்டேங்கிற, மனசுலபட்டதை உடனே செய்ற, பேசுற, இது வேண்டாம்..”
“ இப்போ நீ என்னதான் சொல்ல வர்ற ஜித்து..?”
“ ண்ணா..  நாங்க எதையும் சொல்ல வரல, நீங்களே எல்லாத்தையும் யோசிங்க, புரிஞ்சுக்கோங்க தான்னு சொல்றோம்..”,  
“நான் எதை யோசிக்கல, புரிஞ்சுக்கலன்னு சொல்ற தீக்ஷி..?”
“அதிதியை பத்தி இதுவரை என்ன யோசிச்சு இருக்கீங்க..?” என்ற தீக்ஷியின் நேரடி கேள்வியில் மவுனமான விஷூவிடம்,
“ண்ணா.. நீங்க இப்போ  என்ன தெரியுமா செஞ்சுட்டு இருக்கீங்க..? கடந்த காலத்துல சரியா  வாழலன்னு நினைச்சு நினைச்சு இப்போ இருக்கிற வாழ்க்கையை நரகமாகிட்டு இருக்கீங்க..”
“தர்ஷினி அக்காக்காக கவலைப்படுறேன்னு அதிதியை தண்டிச்சுட்டு இருக்கீங்க.. இது சரியாண்ணா..?” என்ற நேரடி கேள்வியில் இருந்த உண்மை புரிய வேறெங்கோ வெறித்தான். 
“ண்ணா.. அக்காகாக வேதனை பட்டுட்டே   இருக்கிற நீங்க, அதிதிக்காக எப்போ யோசிப்பீங்க..? இல்லை ஒரு பத்து வருஷம் கழிச்சு, அச்சச்சோ தர்ஷினிக்கு மாதிரி அதிதிக்கும்  அநியாயம் செஞ்சுட்டோமேன்னு திரும்பவும்  இதே மாதிரி வேதனைபடுவீங்களா..?” என்று கேட்க, விஷூவிற்கு முகம் இறுகிதான் போனது. 
“விஷூ.. ப்ளீஸ்டா.. முடிஞ்சது.. முடிஞ்சதுதான், அதை மாத்தமுடியாது, அதுக்காக உன்னோடு சேர்த்து எல்லோரையும் தண்டிக்காத,  உனக்கு ஒன்னு தெரியுமா விஷூ..? அதிதி கர்ப்பப்பை விஷயம் அம்மாக்கு தெரிஞ்சும் அவங்க அதிதியை மருமகளா ஏத்துக்கிட்டாங்க..” என்று சொல்ல, விஷூ ஆச்சரியமாக பார்த்தான். 
“உண்மைதான் விஷூ, அன்னிக்கு வீட்ல வச்சி அம்மா பேசுனது அதிதியை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணியிருக்கும் போல, அவங்க பக்கமும் நியாயம் இருக்கு, அவங்க மகன்கிட்ட அவங்க எதிர்பார்க்கிறது ஒன்னு தப்பு இல்லையே..?”
“அப்படி இருந்தும் பிள்ளைகள் வேணும்ன்னு தானே அவங்க ஈகோவை விட்டு இறங்கி வராங்க, இதுல நாமும் அவங்களை ஏமாத்த வேணாம்ன்னு எல்லாத்தையும் சொல்லிட்டா, அப்படியும் அம்மா அவளை மருமகளா ஏத்துக்கிட்டாங்க, மே பி நீ சொல்ற மாதிரி தர்ஷினி அண்ணி குற்ற உணர்ச்சி கூட இருக்கலாம்..”, 
“அப்பறம்.. லிங்கம்.. இப்போ அப்பா சொன்னாரு இல்லை, தங்கம் கடத்தல், அந்த விஷயத்தை வெளியே கொண்டு வந்ததே லிங்கம் தான், தீக்ஷியையும், மனோவையும் கஸ்டம்ஸ்ல அரெஸ்ட் செஞ்சாங்க இல்லை, அதுல அவருக்கு எந்த சம்மந்தமும் இல்லைன்னு சொல்ல அன்னிக்கு  நம்ம வீட்டுக்கு வந்திருக்கார்..”
“அப்போ அதி அவருக்கு எதிரா செஞ்ச வேலையை எல்லாம் நான் சொல்லிட்டிருந்ததை கேட்டுட்டு வந்த வழியே திரும்ப  போயிட்டுருக்கார், கட்டின பொண்டாட்டியும், பெத்த பொண்ணுமே தனக்கு எதிரா இருந்திருக்காங்கிறது அவரை ரொம்ப பாதிச்சிருச்சு போல..”
“அந்த சமயத்துலதான் அவருக்கு தெரிஞ்சிருக்கு, தீக்ஷியோட அந்த பார்ட்னர்ஸ் தீக்ஷியை மாட்டவைக்க மினிஸ்டருக்கு உதவி செஞ்சது. இதை எல்லாம் சேர்த்து தனக்கு மட்டுமில்லாமல் அவங்களுக்கும் சேர்த்தே தண்டனை வாங்கி கொடுக்க, பிளான் செஞ்சு அவரே காமிச்சு கொடுத்திட்டார்..”
“ நேத்து நைட்  அவரே எனக்கும், தீக்ஷிக்கும் போன் செஞ்சு பேசினார், தீக்ஷிக்கிட்ட ரொம்ப அழுது மன்னிப்பு கேட்டார். அரசுக்கு நான் செஞ்ச துரோகத்துக்கு எனக்கு இந்த தண்டனை  வேணும்ன்னு சொல்லி மனசார ஏத்துக்கிட்டார்..”
“ அதிதிகிட்டகாலையில நாங்க இதை  சொன்னப்போ, அவளும் அவங்க அப்பா முடிவை முழுமனசா ஏத்துக்கிட்டா, அதனாலதான் அவரை பத்தி பேசாதன்னு சொன்னோம்..”  என்று அன்று காலையில் விஷூ  லிங்கத்தை பற்றி பேசும்போது ஏன் தானும், அதிதியும் தடுத்தோம் என்று சொன்னான். 
“விஷூ.. அம்மாவாகட்டும், லிங்கமாகட்டும் அவங்கவங்க தப்பை உணர்ந்து  ரொம்பவே வேதனை படுறாங்க, இதுல நீயும் பேசி அவங்களை இன்னும் வேதனைபடுத்தாத, தப்பை  உணர்ந்தவங்களை தண்டிக்கறது ரொம்ப பெரிய கொடுமைடா.. அதை நீ செய்யாத…”
“அதுவும் தர்ஷினி அண்ணி பேரை வச்சி செய்யாத, அது அவங்களுக்கு நீ செய்ற அநியாயம்தான்..” என்று சொல்ல, விஷூ கண்மூடி அமர்ந்துவிட்டான். 
“மேம்.. மேம்..” என்ற மீனுவின் குரலில் கண் திறந்த அதிதியிடம், 
“மேம்.. டைம் ஆச்சு, நீங்க வீட்டுக்கு போகணும்..” என்று பரிவாக சொல்ல, “ம்ம்..” என்று வெறுமையாக தலையாட்டியவள், நடந்தே வீட்டிற்கு கிளம்பினாள். 
“யாருக்காக  வீட்டுக்கு போகணும்..?” என்ற சலிப்பு அவளிடம் நன்றாகவே தெரிந்தது, தருண்.. லீவிற்காக சென்னை சென்றிருக்க, சுபாவும், ஆனந்தனும் எதோ கடமைக்காக வாழ்ந்து கொண்டிருந்தனர். யாரின் முகத்திலும் சிரிப்பு இல்லை. 
“வாம்மா.. போய் ரெஃப்ரஷ் செஞ்சுட்டு வா, சாப்பிடலாம்..” என்ற ஆனந்தனிடம் தலை ஆட்டி சென்றவள், மெதுவாகவே  கீழிறங்கி வந்தாள். அதுவும் சுபா, ஆனந்தனுக்காகதான், எந்த பேச்சு வார்த்தையும் இல்லாமல் மூவரும் கடமைக்கே உண்டவர்கள், தோட்டத்தில் எப்போதும் போல் அமர, அதிதி நடக்க ஆரம்பித்தாள். 
“ஜித்து.. விஷூ எப்போதான் வருவான்..?” என்ற ஆனந்தனின் கேள்வி காதில் விழ, அதிதிக்கு உடல் விறைத்தது. 
ஆயிற்று விஷூ வீட்டை விட்டு சென்று மூன்று மாதங்கள் ஆகிவிட்டது, எங்கு சென்றான்..? ஏன் சென்றான்..? எந்த பதிலும் இல்லை.. அவன் இருக்குமிடம் ஜித்துவுக்கு மட்டும் தெரியும், அவனும் எவ்வளவு கேட்டும் சொல்வதாக இல்லை, 

Advertisement