Advertisement

“இவ விளையாட்டா பேசுறாளா..? இல்லை உண்மையாவே பேசுறாளான்னே தெரியலையே..?”  என்றவனின் குழப்பம் புரிய உள்ளுக்குள் சிரித்த அதிதி. 
“இங்க பாருங்க.. இனி இதை பத்தி என்கிட்ட எதுவும் நீங்க கேட்க கூடாது,  நீங்களாச்சு.. உங்க விசிறியாச்சு.. பார்த்துக்கோங்க..” என்று கறாராக சொன்னாள். 
“அப்படி சொன்னா எப்படி..? சரி.. நாளையிலிருந்து நீ ஆபிஸ் வந்துடு..” என, 
“ஏன்..? இல்லை எதுக்குங்கிற..? என்னோட லீவ் முடிஞ்சாதான் நான் வருவேன்..” என்று பிடிவாதமாக சொன்னாள். 
“ஏய்.. படுத்தாதடி, அந்த பொண்ணு சும்மா சும்மா என் கேபின்ல  வந்து நிக்குது..” என்று சொல்லியேவிட, அதிதிக்கு பொசுங்கியது. 
“என்னை இவ்வளவு பேசுறவரு.. அந்த பொண்ணுக்கு புத்தி சொல்ல வேண்டியது தானே..?”
“ம்ப்ச்.. அது விவரம் இல்லாம செய்து, சின்ன பொண்ணு, முதிர்ச்சி இல்லை, எதோ ஒரு இமேஜ் என்மேல, மத்தபடி எதுவும் தப்பா இல்லை..” என்று கவனித்ததை சொன்னான். 
“ம்ம்.. ஏங்க ஒன்னு செய்யலாமா..? அவ முன்னாடி நானும் நீங்களும் கொஞ்சம் நெருக்கமா..”
“ஏய்.. ஏய்.. என்ன..? என்னென்னமோ சொல்ற..? இந்த ஆட்டத்துக்கு எல்லாம்  நான் வரல..”  என்று உஷாராக சொன்னான்.
“க்கும்.., படத்துல, கதையில எல்லாம் இப்படித்தான் வரும், அதைத்தான் சொன்னேன், உங்களுக்கு தான் நஷ்டம்.. எனக்கென்ன..?” என்று முகம் திருப்பினாள். 
“யாருக்கு நஷ்டம்ன்னு எனக்கு நல்லா தெரியும்.. போடி..” என்று விஷூ சொல்லவும், அவனின் முகம் பார்த்து உதடு வளைத்தவள், 
“எனக்கு ஒரு சந்தேகம்..?  அந்த பொண்ணுக்கு அப்படி உங்ககிட்ட என்ன புடிச்சதுன்னு  உங்களை போய் ஹீரோவா நினைக்கிறா..?” என்று ஆச்சரியமாக சொல்வது போல் சொன்னாள். 
“ஒய்.. என்னடி நக்கலா..? ஏன் என்னை பார்த்தா ஹீரோ மாதிரி தெரியலையா..?” என்று விஷூ பொங்க, 
“ம்ம்.. இருங்க நல்லா பார்த்து சொல்றேன்..”  என்று அவனின் அருகில் வந்து நன்றாக மேலிருந்து கீழாக உத்து உத்து பார்க்க ஆரம்பித்துவிட்டாள். 
“என்ன செய்ற நீ..? எதுக்கு இப்படி பார்க்கிற..? தள்ளி போ..” என்று லேசாக சிவந்துவிட்ட முகத்துடன் படபடத்தவனின் முகசிவப்பை ஆச்சரியமாக பார்த்தாள். 
“ஏங்க.. உங்க முகம் சிவக்குதுங்க..” என்று அவனின் கன்னத்தில் கை வைத்து லேசாக வருட, விஷூவிற்கு வேர்க்க ஆரம்பித்துவிட்டது. 
“என்னங்க.. இப்படி வேர்க்குது..?” என்றவள், அவனின் நெற்றியில் இருந்த வேர்வையை ஒரு விரலால் துடைக்க வேறு செய்ய, விஷூவிற்கு நிற்கவே முடியவில்லை. 
“என்ன..? என்ன செய்ற நீ..? கையை எடு முதல்ல..” என்று வேகமாக அவளின் கையை தள்ளிவிட்டான். 
“என்ன செஞ்சுட்டேன்..? வேர்வையை தானே துடைச்சேன்.. அதுக்கு போய்  சிலுத்துகிறீங்க.. ரொம்பத்தான்..” என்றவள், 
“எனக்கு ரொம்ப நாளா  ஒரு சந்தேகம்..? உங்களுக்கு ஏன் இப்படி அடிக்கடி வேர்க்குது..? பாருங்க நான் இன்னிக்கு சாரீ கூட கட்டல..”  
“ஏய்.. என் வாயை கிளறாதடி.. ஓடிப்போயிடு..”
“ஏனாம்..? என் புருஷர்ங்கிற அக்கறையில தானே கேட்டேன், ஏன் உங்க பொண்டாட்டிக்கு அந்த உரிமை இல்லையா..?” என்று போர்க்கொடி தூக்கினாள். 
“ஐயோ.. படுத்துறாளே.. இப்போ உனக்கு என்னதான் வேணும்..? ஏன் இப்படி..?”
“நான் என்ன படுத்தினேன்..? நீங்கதானே உங்களை ஹீரோன்னு சொன்னேங்க, அது உண்மையான்னு பார்த்தேன், அவ்வளவுதான்..”
“நான் ஹீரோவே இல்லடி.. ஜீரோ.. போதுமா..?”
“அதெப்படி நீங்க என் புருஷனை ஜீரோன்னு சொல்லலாம்..? அவர் ஹீரோவாக்கும்..”
“கடவுளே.. உன்னை கட்டிக்கிட்டு என் உயிர் போகுதுடி..” என்று புலம்பியவனிடம், 
“அச்சச்சோ.. அப்படி சொல்லதீங்க.. தப்பு.. என்னை கட்டிக்கிட்டுன்னு சொன்னா உங்க பொண்டாட்டி முறைவருது.. அது தப்பு.. தப்பு.. நம்ம உறவு எதனால..? எப்படி..? யாரால..?ன்னு மறந்துடாதீங்க..” என்று அவன் சொன்னதையே சொல்ல, அவளையே தீர்க்கமாக பார்த்தவன், 
“ம்ம்.. இப்போ என்ன..? நான் சொன்னது தப்புன்னு ஒத்துக்கணுமா..?”
“எனக்கே தெரியுமே.. அது தப்பு இல்லன்னு.. நீங்க என்ன ஒத்துகிறது..?” என்று விடாமல் கேட்க, கடுப்பானவன், 
“ஏய்.. இப்போ மட்டும் நீ உன் வாயை மூடல.. நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..”
“நீங்க போய் என்ன செய்வீங்க..?  பாவம், நீங்க எல்லாம் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க..” என்று கிண்டலாக சொல்லி செல்ல, விஷூ பல்லை கடித்து நின்றான்.
“அப்பறம் விஷூ.. என்ன தான் முடிவாச்சு..?” என்று வந்து நின்றான்  தம்பி. 
“ஆனா உன்னை மாதிரி ஒரு தம்பி இருந்தா போதும்டா, அவன் அவ்வளவுதான்..” என்று அண்ணன் ஆத்திரத்துடன் சொல்ல, 
“ஏன் நான் என்ன செஞ்சேன்..? எப்போ பார்த்தாலும் இப்படியே சொல்ற..?” 
“என்ன செய்ல நீ..? எல்லாம் உன்னாலதான்.. எனக்குள்ளே ரொம்ப போராடுற நிலையில நிற்கிறேன்..” என்று காய்ந்தான். 
“விஷூ.. உன்னோட இந்த மனப்போராட்டத்துக்கு காரணம் நீதான். ரொம்ப யோசிச்சு உன்னை நீயே குழப்பிக்கிற, வாழ்க்கை உன்னை எப்படி கூட்டிட்டு போகுதோ அப்படி போ.. அதைவிட்டு அதுக்கு எதிர்திசையில் போகணும்னு ஏன் நினைக்கிற..?”
“ ம்ப்ச்.. உனக்கு இதெல்லாம் புரியாது, விடு..” என்றவனின் முகத்தில் தெரிந்த இறுக்கத்தில், 
“விஷூ.. உனக்கு  என்ன பிரச்சனை..? எது உன் மனசை உறுத்துது..?” என்று அண்ணனின் உணர்வை படிக்க முயன்றான். 

“தெரியல..” என்று நொடியும் தாமதிக்காமல் சொன்னான். 
“ஓஹ்.. அப்போ எதுவோ இருக்கு..?” என்ற விஷூவின் உறுத்தல் மறுநாளே  படுமோசமாக வெளியே வந்தது. 
“ஜித்து.. நியூஸ் கேள்விப்பட்டியா..?” என்று ஆனந்தன் எல்லோரும் அமர்ந்து காலை உணவுண்ணும் போது பரபரப்பாக வந்தார். 
“என்ன நியூஸ்ப்பா..?” என்று புரியாமல் கேட்ட மகனிடம், 
“இந்த லிங்கம் இருக்காரில்லை, அவரும், தீக்ஷியோட அந்த அஞ்சு பார்ட்னர்ஸும் சேர்ந்து எக்ஸ்போர்ட் பிஸ்னஸ்ங்கிற பேர்ல தங்கத்தை கடத்தியிருக்காங்க, அது இப்போ எப்படியோ வெளியே வந்துடுச்சு, எல்லோரையும் போலீஸ் அரெஸ்ட் செஞ்சிருக்காங்க..” என்று சொன்னார். 
“வேணும்.. இன்னும் நல்லா வேணும், எனக்கு வர்ற கோவத்துக்கு அந்த லிங்கத்தை அப்போவே ஒரு வழியாக்கிருப்பேன், இதோ இவன்தான் வேண்டாம், நான் பார்த்துகிறேன்னு சொல்லிட்டான், இல்லை இன்னிக்கு அவர் இல்லை..”  என்று விஷ்வஜித் கோவத்தோடு கத்த, 
“விஷூ.. இப்போ எதுக்கு இவ்வளவு கோபப்படுற..? விடு, முடிஞ்சது..” என்று இந்திரஜித் சொன்னான். 
“என்னடா முடிஞ்சது..? தர்ஷினிக்காக தான் அந்த மனுஷனை விட்டு வச்சேன், இல்லை அவரையும் அந்த பார்ட்னர்களையும் மொத்தமா முடிச்சிருப்பேன்.. என்ன செய்ய..?” என்று தன்னால் செய்ய முடியாத இயலாமையில் பேசினான். 
“விஷூ.. நான்தான் விடுன்னு சொல்றேன் இல்லை, இப்போ எதுக்கு அவரை பத்தி திரும்ப திரும்ப பேசுற..?” என்று அதிதியை பார்த்து சொல்ல, 
“ஏன்.. இவ இருக்கான்னு பார்க்கிறியா..? நான் என்ன பொய்யா சொல்றேன்..? ஏன் இவங்க அப்பா எப்படினு இவளுக்கு தெரியாதா..? சரியான பணப்பிசாசு.. பணத்துக்காக சொந்த பொண்ணு  வாழ்க்கையையே கெடுத்தவர்.. அப்படிப்பட்ட ஆளை பத்திதான் பேசுறேன்.. மனுஷனா அவர், யாருக்கும் உண்மையா இல்லை..” என்று தொடர்ந்து கத்தி கொண்டிருந்தவனை, தீர்க்கமாக பார்த்த அதிதி, 
“போதும்.. இனியும் அவரை பத்தி பேசாதீங்க..” என்றாள் சத்தமாகவே.. 
“என்ன..? அவரைபத்தி பேசக்கூடாதா..? ஏன்..? அப்பா பாசம் பொங்குதா..?” என்று நக்கலாக கேட்டான். 
“விஷூ.. என்ன பேசிட்டிருக்க நீ..? இதைவிடு..” என்று ஆனந்தன் சொல்ல, 
“என்னப்பா இது..? இப்போ வந்த உங்க மருமகளுக்காக அந்த மனுஷனை பத்தி பேச கூடாதுன்னு சொல்றீங்க, ஆனா அதே மனுஷனுக்காக தானே அன்னிக்கு தர்ஷினியை ஏத்துக்காம தள்ளி வச்சேங்க..”
“இப்போ மட்டும் எல்லாம் சரியாபோயிடுச்சா..? தர்ஷினி மட்டும் தான் அவர் பொண்ணா..? அதிதி அவர் பொண்ணு இல்லையா..? இவளை மட்டும் எல்லோரும் ஏத்துக்கிட்டிங்க..? அதேமாதிரி  தர்ஷினியையும் ஏத்துக்கிட்டு இருந்தா குறைஞ்சா போயிருப்பீங்க..?”
“விஷூ.. நாங்க செஞ்சது தப்புதான், எங்களை மன்னிச்சுடு..” என்று சுபா தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுவிட எல்லோருக்கும் அதிர்ச்சி. ஆனால் விஷ்வஜித்திற்கு அது மேலும் கோவத்தை தான் கொடுத்தது, 
“இப்போ வந்து மன்னிப்பு கேட்டா எல்லாம் சரியாகிடுமா..? அவ கடைசி நிமிஷம் வரை வேதனைபட்டே போய் சேர்ந்தா..? இல்லை தெரியாமதான் கேட்கிறேன், அதிதியை விட தர்ஷினி எந்த விதத்துல குறைஞ்சு போயிட்டா..? அவளை ஏன் ஏத்துக்கல நீங்க..?”
“விஷூ.. அவங்க தான் தப்பை உணர்ந்துட்டாங்க இல்லை, திரும்ப திரும்ப ஏன் பேசுற..? விட்றா..?” என்று இந்திரஜித் அண்ணனை அடக்கினான். 
“என்ன உணர்ந்துட்டாங்க..? அன்னிக்கு அந்த ராமலிங்கத்தை மனசுல வச்சுக்கிட்டு தர்ஷினியை தள்ளி வச்சதுக்கு இன்னிக்கு அதிதியை மருமகளா ஏத்துக்கிட்டாங்க, அதனால அவங்க குற்ற உணர்ச்சி போகும்..”
“ஆனா இதுல தர்ஷினிக்கான நியாயம் எங்க இருக்கு..? அவளோட வலிக்கான மருந்து எங்க இருக்கு..? அவ ஏக்கத்துக்கான தீர்வு எங்க இருக்கு..?” என்று இத்தனை வருட அழுத்தத்தை வெடித்து கொண்டிருந்தான். 
“விஷூ.. ப்ளீஸ்டா, நீ இப்போ நிதானத்துல இல்லை, நாம அப்பறம் பேசலாம்..” என்று தம்பி அடக்க பார்த்தான்.
“நீ சும்மா இருடா.. இன்னிக்கு இவளுக்கு எல்லா உரிமையும் கொடுக்கிற இவங்க, அன்னிக்கு தர்ஷினிக்கு ஒரு சின்ன அங்கீகாரத்தை கூட கொடுக்கல.. எதையும் எதிர்பார்க்காம என்னோட வந்தவடா அவ..”
“அப்படிப்பட்ட  அவளுக்கு நான் எந்த நியாயத்தையும் செய்யல. எந்த சந்தோஷத்தையும் கொடுக்கல, அவ ஏக்கத்தை தீர்க்க ஒன்னுமே செய்யல.. இந்த குற்ற உணர்ச்சி என்னை நிம்மதியாவே வாழவிட மாட்டேங்குது”, 
“இதோ இவளை பொண்டாட்டியா ஏத்துக்கிட்டு வாழமுடியல, எதோ தப்பு செய்ற மாதிரி என்னை தினம் தினம் கொல்லுது..”
“என்னை நம்பி வந்தவளுக்கு என்னால  கொடுக்க முடியாத ஒரு சந்தோஷமான நிறைஞ்ச வாழ்க்கையை நான் எப்படிடா வாழமுடியும்..?”  என்றவனின் உணர்வுகளின் குவியல் அதிதிக்கு புரிய, கண்ணில் நீர் நின்றது.

Advertisement