Advertisement

காதல் ஆலாபனை 35 { PREFINAL }
“இப்போ என்னம்மா வேணும் உங்களுக்கு..?” என்று விஷூ சலிப்புடன் மீனுவிடம் கேட்டான். 
“சார்.. இந்த அக்கவுண்ட்ல  ஒரு டவுட் சார்..”  என்று கேட்டவளின் பார்வை விஷூ மேலே பரவசத்துடன் படிந்திருக்க, நொந்து போனவன், 
“இங்க பாரும்மா.. இதை  இப்படி டேலி செய்ய   முடியாது, இப்படித்தான் செய்யணும்..”  என்று சொல்லி கொடுக்க, புரிந்தது போல் மண்டையை மண்டையை ஆட்டி சென்றவள், அடுத்த பத்து நிமிடத்தில் மீண்டும் சந்தேகம் கேட்டு வந்து நின்றாள். 
“ம்ஹூம்.. இது வேலைக்காகாது, இப்படியே விட்டா எனக்கு பிபி ஏறி மயக்கம் வந்துடும்..” என்று உள்ளுக்குள் முடிவெடுத்தவன், 
“நீங்க ஒன்னு செய்ங்க, உங்க பாஸ் வந்த பிறகே இதையெல்லாம் பார்த்துக்கோங்க.. இப்போ கிளம்புங்க..” என்று அவளை அனுப்பி வைக்க பார்க்க, அவளோ, 
“ஓகே சார்.. இந்த வேலை அவங்க வந்தபிறகே செஞ்சுக்கிறேன், வேறேதாவது வேலை இருந்தா சொல்லுங்க..” என்று நின்றாள். 
“நீங்க என்ன வேலை செய்யணும்ன்னு  மேனேஜர் சொல்லுவார், அவர்கிட்ட கேட்டுக்கோங்க.. கிளம்புங்க..” என்று கடுப்படித்தான். 
“சார்.. அதிதி மேடம் இல்லாதப்போ நீங்க தானே எனக்கு பாஸ், நான் உங்களுக்கு தானே  ரிப்போர்ட் செய்யணும்..” என்று மீனு சிறுபிள்ளை பிடிவாதத்தை காட்ட, இருந்த கொஞ்ச பொறுமையும் பறந்தது. 
“இங்க பாரும்மா, நீங்க  யாருக்கு ரிப்போர்ட் செய்யணும்ன்னு நாங்க தான் சொல்லுவோம், நீங்க சொல்லக்கூடாது, மேனேஜர்கிட்ட போங்க..  இனி எதுவும் அவரையே கேட்டுக்கோங்க.. என்கிட்ட வரவேண்டியது இல்லை.. கிளம்புங்க..” என்று கோவம் தெரிய பொரிந்தவனின் கோவத்தில் மீனு பாய்ந்த வெளியே வர, அங்கு இந்திரஜித் கதவில் சாய்ந்து நின்றிருந்தான். 
“சார்..” என்று திக்கியவளை கூர்ந்து பார்த்தவன், 
“நீ நம்ம மேனேஜர் பொண்ணுதானே, உங்க அப்பா ரொம்ப நல்ல மனுஷர், அவருக்காக தான் உனக்கு இங்க வேலை, அதை மனசுல  வச்சு நடந்துக்கோ..” என்று அவளை உறுத்து விழித்து சொல்ல, மேலும் பயந்து போன மீனு, கலங்கிய கண்களுடன் “சரி..”  என்று தலையாட்டி ஓடியே போனாள். 
“அப்பறம் விஷூ.. ஆபிஸ் ரொம்ப ஜாலியா போகுது போல..” என்று அண்ணனிடம் சிரிப்புடன் கேட்டவாறே உள்ளே வந்தான். 
“இவன் எதை சொல்றான்னு தெரியலையே..?” என்று உஷாரானாவன், 
“ஆபிஸ்ல போய் என்ன ஜாலி இருக்க போகுது..? நீ வந்த விஷயத்தை சொல்லுடா..” என்றான். 
“ம்ம்.. டைம் பார்த்தியா, லஞ்சுக்கு தான் வந்தேன்,  வா வீட்டுக்கு போலாம்..” என்றான். 
எல்லோரும் லீவிற்கு ஊட்டி வந்திருக்க, அதிதி அதை காரணம் காட்டி லீவ் எடுத்து கொள்ள, விஷூவின் பாடுதான் திண்டாட்டமாகி போனது. மீனு சந்தேகம் கேட்கிறேன் என்ற பேரில் அடிக்கடி இவனை பார்க்க வர, முதலில் வேலை செய்யும் ஆர்வம் என்று நினைத்தவனுக்கு, சில நாட்கள் கழித்தே அவளின் பார்வை வித்தியாசம் புரிய, “இதென்னடா வம்பா போச்சு..” என்றானது. 
“இது சரிவராது, அதிதி லீவ் எடுத்தது போதும், நாளையிலிருந்து ஆபிஸ் வரட்டும்..” என்ற முடிவுடன் தம்பியோடு வீட்டுக்கு சென்றான். அதே சிந்தனையில் இருந்தவன் மூடியிருந்த கதவை திறக்கும் சமயம், 
“விஷூ..”  என்ற தம்பியின் குரலை கவனிக்காமல்  கதவை திறந்துவிட்டவனின் முன், “பேபேபே…”  என்று கத்திகொண்டே பேய் மாஸ்க்  போட்டு குதித்தனர் நம் ராகுல், அதிதி, தருண் மூவரும்.. 
அவர்கள் அப்படி திடீரென குதித்து கத்தவும், அதிர்ச்சியில் நெஞ்சில் கை வைத்து நின்றுவிட்டான்  விஷூ. 
“ஐயையோ அப்பா.. அண்ணா.., மாமா..” என்று மூவரும் ஆளுக்கொரு திசையாக  ஓடியே போனார்கள். 
“ஏய்.. பிசாசுகளா.. ஒழுங்கு மரியாதையா மூணு பேரும் வெளியே  வந்துடுங்க.. இல்லை நானா கண்டுபிடிச்சேன் வைங்க..” என்று விஷூ உச்ச கட்ட கோவத்தில் கத்தி கொண்டிருக்க, வெளியே சென்றிருந்த   தீக்ஷியும், மனோவும்  உள்ளே  வந்தனர். 
“என்ன ஆச்சுங்கண்ணா..? ஏன் இப்படி கத்திட்டு இருக்கீங்க..?” என்று தீக்ஷி புரியாமல் கேட்டாள். 
“அது ஒன்னுமில்லை தீக்ஷி, விஷூக்கு சும்மா ஒரு வெல்கம் சர்ப்ரைஸ் கொடுத்தாங்க, அதுக்கு போய்  கோவிச்சுகிறான்..” என்று இந்திரஜித் சிரிப்புடன் சொல்ல, 
“எது.. அது உனக்கு வெல்கம் சர்ப்ரைஸா..? என்னை ஓரெடியா மேல அனுப்பிவைக்க அவங்க போட்ட பிளான்..” என்று கோவத்தில் கொதிக்கவே, புரிந்து கொண்டனர் தீக்ஷியும், மனோவும். 
“அதிதி, ராகுல், தருண்.. வெளியே வாங்க..” என்ற தீக்ஷியின் சத்தத்தில் வெளியே வந்தவர்களின் கையில் இருந்த மாஸ்க்கை வைத்தே அவர்கள் செய்த்திருப்பதை புரிந்து கொண்ட தீக்ஷி, 
“அதி.. என்ன இது..?” என்று கேட்டாள். 
“தீக்ஷி..  எங்க மேல எந்த தப்பும் இல்லை, நாங்க மனோக்கு போட்ட பிளான்ல உள்ள வந்தது இவருதான்..” என்று சொல்ல, 
“ஆமா.. தப்பு அப்பாது தான், எங்களுது இல்லை..” என்று தருணும் சொல்ல, 
“என்னண்ணா இப்படி செஞ்சுட்டிங்க..? போங்கண்ணா உங்களால எங்க பிளான் போச்சு..” என்று ராகுலும் சொல்ல, விஷூவிற்கு மூவரையும் கொதறிவிடும் கோவம். 
“பிசாசுங்க.. பிசாசுங்க.. என் உயிரை வாங்கவே மூணும் இருக்கு.. இந்த ஒருவாரமா உயிரை கையில பிடிச்சுட்டு சுத்த வேண்டியதா இருக்கு..” என்று கத்தியவனை இந்திரஜித் உள்ளே இழுத்து கொண்டு சென்றான். 
பின்னே இந்த ஒருவாரமாக இவர்களின் சேட்டை தாங்கமுடியவில்லை. பெரியவர்கள் சுத்தமாக கண்டு கொள்ளாமல் போக, இன்னும் அதிகமாகி போனது. அதென்னமோ எல்லா சேட்டையிலும் மாட்டுவது விஷூ தான். மாட்டிதானே ஆகணும்.. பிளான் போடுவது நம் அதிதியாச்சே.. 
“அதி.. உண்மையை சொல்லு, வந்தது அண்ணான்னு உனக்கு தெரியாது..?” என்று தீக்ஷி கண்டிப்புடன் கேட்க, 
“தெரியும்.. தெரியாம போகுமா..?” என்று அதிதி சர்வ சாதாரணமாக ஒப்புக்கொண்டாள். 
“ஏன் அதி..?  எங்க அண்ணாவை இப்படி படுத்துற..? பாவம் அவர்..” என்று பாசமலருக்காக பரிதாபபட்டாள். 
“ம்ம்.. எல்லாம் என் புருஷங்கிற பாசம் தான் தீக்ஷி..”
“எது இது பாசமா..?”
“பின்ன இல்லையா..? இது வந்து ஒருவகையான தீவிர பாசம் தீக்ஷி..”
“தீவிர பாசம் இல்லை.. தீவிர பழிவாங்கல்..”
“என்ன தீக்ஷி இப்படி சொல்லிட்ட..? நான் போய் அவரை பழிவாங்குவேனா..?” என்று வராத கண்ணீரை  துடைத்து கொண்டாள். 
“ம்ம்.. நீ மட்டும் தான் அவரை பழிவாங்குவ.. என்கிட்டியே நடிக்காத, வா..” என்ற தீக்ஷி  அவளை சாப்பிட அழைத்து சென்றாள். அங்கு விஷ்வஜித் முகத்தை தூக்கி வைத்து கொண்டு சாப்பிட்டு கொண்டிருக்க, உதட்டை சுளித்தவள், சாப்பிட ஆரம்பித்தாள். 
“அப்பா, அம்மா இன்னுமா வரல..?” என்று இந்திரஜித் கேட்க, 
“இல்லை மாமா.. அவங்க ப்ரண்ட்  பங்க்ஷன் முடிய லேட்டாகும் போல, மாமா போன் செஞ்சிருந்தார்..” என்று அதிதி சொல்லவும், 
“ஓஹ்..” என்றவன், “அப்பறம் அதிதி.. ஆபிஸ்ல என்னென்னமோ நடக்குது போலயே..?” என்று ஆரம்பித்தான். 
“டேய்..” என்று பிள்ளைகளை காட்டி விஷூ அதட்ட, அமைதியானவன், திரும்பவும் இரவு இவர்கள் மட்டும் இருக்கும் போது மறுபடியும் ஆரம்பித்தான். 
“அதி.. விஷூக்கு ஆபிஸ்ல ஒரு பெரிய விசிறி  கூட்டமே இருக்கும் போல..” என்றான். 
“ஆமாமாம்.. மாமா.. உங்களுக்கும் தெரிஞ்சுடுச்சா.. என்ன சொல்ல..? அது பயங்கரமா இருக்கு.. ஒன்னும் சொல்றதுக்கில்லை..” என்று அதிதி கிண்டலாக சொல்ல, தீக்ஷி புரியாமல் முழித்தவள், 
“என்ன அதி சொல்ற..? அண்ணாக்கு பேன்ஸா..?” என்று கேட்டாள். 
“தீக்ஷி.. அவங்கதான் எதோ லூசுத்தனமா பேசுறாங்கன்னா நீயும் என்ன எதுன்னு கேட்கிற..? விடு..” என்று விஷ்வஜித் சிடுசிடுத்தான். 
“யாரு.. நாங்க லூசுங்களா.. சரிதான்..” என்று இந்திரஜித் நொடிக்க, 
“நாம எல்லாம் லூசுத்தான், இவரு  ரொம்ப டைட்.. எங்களை சொல்ல  வந்துட்டாங்க..”
“என்னடி.. வாய் ரொம்ப நீளுது..” என்று விஷூ அதட்ட, 
“பின்ன ரொம்ப நாளா ஓடிட்டிருக்கிற ஒரு சீரியலை இப்போதான் கண்டுபிடிச்சி இருக்கீங்க.. இதுல கோவம் வேற..?”
“ஏன் நீதான் இப்படி இப்படின்னு எனக்கு முன்னாடியே சொல்றது..”  
“நான் ஏன் சொல்லணும்..? நமக்குள்ள தான் எதுவும் இல்லையே..  எந்த உரிமையில சொல்ல..?  நான் உங்க பொண்டாட்டின்னு சொன்னாவே உங்களுக்கு பிடிக்கலியே.. தப்பு.. தப்பு.. கன்னத்துல அடின்னு இல்லை பதர்றீங்க..”  என்று வெடித்தாள். 
“ஏய்.. ஏய்.. எங்க வச்சு எதைடி  பேசுற..?”  என்று பதறி பார்த்தவன், தூரத்தில் இந்திரஜித்தும், தீக்ஷியும் சென்றுகொண்டிருக்கவும் தான் நிம்மதியானான். 
“இப்போ எதுக்குடி அதை எல்லாம் பேசுற..? நான் கேட்டது என்ன..? ஏன் அந்த பொண்ணு இப்படினு முன்னாடியே என்கிட்ட  சொல்லலைன்னு தானே..? அதுக்கு போய் எல்லாத்தையும் இழுக்குற..”
“ம்ம்.. நீங்க என்னை இழுத்திருந்தா நான் ஏன் அதை எல்லாம் இழுக்க போறேன்..?” என்று நன்றாக அவனுக்கு கேட்கும்படி முணுமுணுத்தவளின் பேச்சில் எப்போதும் போல் விஷூ தான் வாயை மூடி கொள்ள வேண்டியதாகி போனது. 

Advertisement