Advertisement

“ஆமா மாமா.. என்னோட பாஸ்ஸ்ஸ்..  பலவருஷ கணக்கை ஒரே நாள்ல ரிப்போர்ட்டா ரெடி செய்ய சொன்னாரா..? அதான்..” என்று முடியாமல் சொல்வது போல் சொன்னாள். 
“என்ன விஷூ இதெல்லாம்..? இப்படி கூடவா வேலை கொடுப்பாங்க..? என்ன செஞ்சிட்டு இருக்க நீ..? வேணும்ன்னே அதியை தொந்தரவு செய்றியா நீ..? சரியில்லை பார்த்துக்கோ..”  என்று ஆனந்தன் கோபமாக மகனை அதட்ட, அவனோ அதிதியை சந்தேகத்தோடு பார்த்து கொண்டிருந்தான். 
“ஒரு வேளை நிஜமாவே நான் சொன்ன வேலை செஞ்சிருப்பாளோ..? இவ இந்தளவுக்கு சின்சியரா வேலை பார்க்கிற ஆள் கிடையாதே..? என்னவா இருக்கும்..?” என்ற  குழப்பத்தோடு  அவளின் சோர்ந்த முகத்தை பார்த்து கொண்டிருந்தான். 
“விஷூ.. இதுதான் கடைசி, இனி இந்த மாதிரி செய்யாத..?” என்று மகனுக்கு கோபத்தோடு புத்தி சொல்ல, 
“ப்பா.. சும்மா என்னையே சொல்லாதீங்க..? அவளால செய்ய முடியாதுன்னா சொல்ல வேண்டியது தானே..? அதைவிட்டு..” என்று கடுப்பாக சொன்னான். 
“பாஸ்கிட்ட போய் அப்படி சொல்ல முடியுமா மாமா..? நாமதானே மத்த ஸ்டாப்க்கு முன்னுதாரணமா இருக்கனும்..”  என்று பணிவாக சொன்னாள். 
“கேடி.. எப்படி நடிக்கிறா பாரு, ஆபிஸ்ல வச்சு ஸ்டாப் முன்னாடியே என்னை கத்துனது என்ன..? இங்க வந்து ரொம்ப நல்லவளாட்டம் பேசறது என்ன..?” என்று வாயில் அடித்து கொள்ள குறையாக மனைவியை பார்த்தான். 
“பாரு.. எவ்வளவு பொறுப்பா இருக்கா..?” என்று மருமகளை சிலாகித்தவர், “அதிதி.. இனிமே இவன்  இப்படி ஏதாவது வேலை கொடுத்தா என்கிட்ட சொல்லு, நான் பார்த்துகிறேன், நீ உன்னை வருத்திக்காத…” என்று கரிசனத்தோடு சொன்னார். 
“வேணும்ன்னா நாளைக்கு லீவ் எடுத்துக்கோ..”  என்று சுபாவும் உணவு முடித்து சொல்லி செல்ல, அதிதி  பொங்கிய சிரிப்பை அடக்கி கொண்டு அமர்ந்திருந்தாள். 
“என்னையாவா திட்டுனீங்க..?” என்று மிதப்பாக புருவம் தூக்கி பார்த்தவளிடம் ஓடி வந்த தருண், 
“அதி.. இந்த கேம்ல எப்படி அதுக்குள்ள இத்தனை லெவல் முடிச்ச..? நேத்து நானும் நீயும் விளையாடும் போது நீ எனக்கு கீழதானே இருந்த, ஒரு நாள்ல எப்படி இத்தனை லெவல் தாண்டியிருக்க.. எப்போ விளையாடின..?” என்று தொடர்ந்து கேள்விகள் கேட்க, விஷ்வஜித்திற்கு நெஞ்சே வெடிக்காத குறை தான். 
“அடிப்பாவி.. கேம் விளையாடியா என்னை மாட்டிவிட்ட..?” என்று எல்லையில்லா ஆத்திரத்தோடு முறைத்தவனிடம் இருந்து தப்பிக்க, 
“தருண்.. நீ வா நாம ரூமுக்கு போலாம், இங்க ஏகப்பட்ட டிஸ்டர்பன்ஸ்..” என்று அவசரமாக உள்ளே ஓடிவிட்டாள்.
“ப்பா.. நீங்க எல்லாம் கிளம்பி சென்னை போயிடுங்க, அங்கிருந்து தீக்ஷி, மனோ, பாரதி ஆண்ட்டி, கணேஷ் அங்கிள் பேமிலியோட  கிளம்பி இங்க டெல்லிக்கு வந்துடுங்க..” என்று இந்திரஜித் போன் செய்து ஆனந்தனிடம் சொல்ல, 
“சரி ஜித்து.. அப்படியே செஞ்சுடலாம், அங்க வேலை எல்லாம் முடிஞ்சுதா..?” என்று கேட்டார். 
“ஸ்விமிங் பூல் வேலை மட்டும் நடந்துட்டு இருக்கு, விஷூ பார்த்துட்டு இருக்கான், மத்தபடி எல்லா வேலையும்  முடிஞ்சதுப்பா..” என, 
“சரி.. பார்த்துக்கோங்க, நாங்க நாளைக்கு வந்துடுவோம்..” என்று வைத்தார். அவர்களின் டெல்லி ஹோட்டல் திறப்பு விழாவிற்க்கு தான் எல்லோரும் கிளம்பி கொண்டிருந்தனர். விஷ்வஜித்தும், இந்திரஜித்தும் மூன்று வாரத்திற்கு முன்பே டெல்லி சென்றுவிட்டதால், அவர்களின் திட்டப்படி முதலில் சென்னை சென்று, அங்கிருந்து எல்லோரையும்  கூட்டி கொண்டு டெல்லி கிளம்பினார்கள். 
மறுநாள் காலையிலே திறப்பு விழா என்பதால் கடைசி கட்ட வேலை எல்லாம் இரவு முழுவதும் நடக்க, எல்லோரும் ஆளுக்கொரு வேலையாக பார்த்தனர். 
“தீக்ஷி.. இந்த பூவை கொண்டு போய் அந்த ரூம்ல வச்சுட்டு வா..” என்று மனைவியை அனுப்பியவன், சில நொடி இடைவெளியில் தானும் பின்னே சென்றான். 
“பூ வச்சுட்டியா..?” என்று வந்து நின்ற கணவனின் எண்ணத்தை புரிந்து சிரித்தவளை அணைத்து கொண்டவன், 
“உன்னை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன் தீக்ஷி..” என்றான். 
“ம்ம்.. நானும்தான்..”  என்றவர்களின் மூன்று வார பிரிவு மற்றவரின் அருகாமையை நாடியது. 
“ஜித்து..” என்று கூப்பிட்டபடி வந்த விஷூவின் சத்தத்தில், மனைவியை விடுவித்தவன், “இவனை..” என்று பல்லை கடித்து வெளியே சென்றான். 
“இங்கதான் இருக்கியா..? வா.. வா..” என்று இழுத்து செல்ல பார்க்க, 
“எங்கடா..?” என்று காலை தரையில் ஊன்றி நின்றான். 
“எங்கேயோ..? என்ன மறந்துட்டியா..? கேட்டரிங் பார்க்க வேணாமா..? நீகூட எதோ மாத்தணும்ன்னு சொன்ன இல்லை..” என்று கேட்டான். 
“அதெல்லாம் எதும் மாத்தவேண்டாம்.. நீ மட்டும் போய் பாரு..” என்றான் எரிச்சலாக. 
“எதுக்குடா இப்போ இப்படி சிடுசிடுன்னு பேசுற..?” என்று கேட்டு கொண்டிருந்த விஷ்வஜித்திடம் வந்த அதிதி, 
“ஏங்க.. உங்களை மாமா கூப்பிட்டாரு  பாருங்க..” என்று கையோடு கணவனை அழைத்து சென்றாள். தீக்ஷியை அனுப்பிவிட்டு இந்திரஜித் பின்னே செல்லும் போதே பார்த்துவிட்ட அதிதி, கணவனை இழுத்து கொண்டு வந்தாள். 
“அப்பா எங்க..?” என்று கேட்டவனை கண்ணை சுருக்கி பார்த்தவள், “இவருக்குத்தான் ஒரு பீலிங்க்ஸும் இல்லன்னா மத்தவங்களுக்கும் இருக்காதா..? எல்லாம் என் நேரம்..?” என்று வெளிப்படையாகவே தலையில் அடித்து கொண்டாள். 
பின்னே அவளும் தான் என்ன செய்வாள்..? மூன்று வார பிரிவுக்கு பின் கணவனை பார்ப்பதால் ஆசையோடு பார்க்க, அவனோ மிக சாதாரணமாக கல்லையோ, மண்ணையோ பார்ப்பது போல் அவளை பார்த்தால் கோவம் வராதா..? 
என்னதான் எதையும்  யோசிக்க கூடாது என்று தன் மனதை அடக்கி கொண்டாலும், கணவன் பால் சாயும் தன் மனது தெரியாமல் இருக்குமா..? 
“இப்போ எதுக்கு தலையில் அடிச்சுக்கிற..?” என்று விஷ்வஜித் கேட்க, 
“ம்ம்.. உங்களுக்கு   பொண்டாட்டியா வாக்கபட்டிருக்கிறேன் இல்லை.. அதான்..” என்று முதல்  முறையாக தங்களின் உறவு சொல்லி உரிமையாக பேசும் அதிதியை  தீவிரமாக பார்த்தான். 
“என்ன..? என்ன..? எதுக்கு இப்படி பார்க்கறீங்க..?” என்று அவனின் ஊடுருவும் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் திணறியவளின் மாற்றம் விஷ்வஜித்திற்கு லேசாக புரிய, அதிர்ப்தியாக தலையை ஆட்டினான். 
“என்ன இது அதிதி..?” என்று நேரடியாகவே கேட்டுவிட, அதிதிக்கு குளிரெடுக்க ஆரம்பித்தது. 
“என்ன..? எதை கேட்கிறீங்க..?”
“ ஏன் நான் எதை கேட்கிறேன்னு உனக்கு தெரியாதா..?” என்று கூர்மையாக பார்த்து கேட்டவன், அவளின் ஷாலை சுற்றும் விரலின் பதட்டத்தை கண் காட்டினான். அவன் தன்னை கண்டு கொண்டான்.. என்று புரிய முகம் திருப்பி நின்றவளிடம், 
“எனக்கு கொஞ்ச நாளாவே சந்தேகம்தான், நீ அடிக்கடி போன் செய்றது, உரிமையா பேசுறது.. எல்லாம்.. இப்போ உன்னை நேர்ல பார்க்கவும், என்னோட சந்தேகம் சரின்னு தோணுது..”
“உனக்கும்.. எனக்குமான இந்த  உறவு.. எதனால்..? எப்படி..? யாருக்காக..?ன்னு மறந்துடாத அதிதி.. இது ரொம்ப தப்பு..”  என்று ஏதோ குற்றம் போல்  சொல்ல, திரும்பி அவன் முகம் பார்த்த அதிதி, 
“எதை தப்புன்னு சொல்றீங்க..?” என்று அவன் கண் பார்த்து தீவிரமாக கேட்டாள். 
“உன்ன மனசு போற போக்கை தான் தப்புன்னு சொல்றேன்..”
“அதிலென்ன தப்பு இருக்கு..?  அதுக்கு உரிமையான இடத்துக்குதானே  அது போகுது,  இல்லன்னு சொல்ல முடியுமா உங்களால..?”
“அதிதி.. இதுல உரிமை பேச்சு எங்கிருந்து வந்தது..? அதைப்பற்றி பேசாத..”
“ஏன் பேசக்கூடாது, ஊரறிய தாலி கட்டின என் புருஷன் மேல என் மனசு  போறது தப்புன்னு சொன்னா.. அதுவும் என் புருஷனே சொன்னா எனக்கு எப்படி இருக்கும்ன்னு கொஞ்சமாவது நினைச்சு பார்த்தீங்களா..? என்று ஆதங்கமாக சீறினாள். 
“அதிதி..”  என்று எதுவும் பேசமுடியாமல் மவுனமாகி விட்டவனை வெறித்தவள் அங்கிருந்து சென்றுவிட, விஷூ தலை பிடித்து அமர்ந்துவிட்டான்.
“எல்லாம் ரெடியா..? இன்னும் கொஞ்ச நேரத்துல சீப் கெஸ்ட் வந்துருவாரு..” என்று வந்த சுபா, அதிதியின் உடையை பார்த்து, 
“என்ன ட்ரஸ் இது..? நான் எடுத்து கொடுத்த சாரீ எங்க..?”  என்று கேட்டார். 
“அதை கட்டக்கூடாதுன்னு உங்க மகன் தான் சொல்லிட்டாரு..” என்றாள். 
“என்ன..? விஷூ..  விஷூ..”  என்று கூப்பிட்டு வந்த மகனிடம், 
“நீ அதிதியை சாரீ  கட்டக்கூடாதுன்னு சொன்னியா..?” என்றார் கோவமாக, 
“அது.. அது.. என்ன சொல்வது..?  என்று திணறியவன், மனைவியை முறைத்தான். 
“அவளை ஏண்டா முறைக்கிற..? நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..?” என்று அதட்ட, 
“ம்மா.. அது.. அது எப்பவோ சொன்னது, இப்போ இல்லை..”
“என்னடா குழப்புற..? எதுக்கு அவளை கட்டக்கூடாதுன்னு சொன்ன..? அதை முதல்ல சொல்லு..?” என்று விடாது கேள்வி கேட்க, கடுப்பானவன், 
“ஏய்.. போடி.. போய் கட்டிட்டு வா.. போ..” என்று மனைவியை பார்த்து சொல்ல, “அது..” என்று புருவத்தை தூக்கி விட்டு சென்றாள். 
“என்னடா சங்கதி விஷூ..?” என்று  வந்து நின்றான் இந்திரஜித். 
“என்ன..? எதை கேட்கிற..?” என்று விஷூ தடுமாற்றத்துடன் கேட்க, 
“அதைத்தான் நானும் கேட்கிறேன், அதிதியை ஏன் சாரீ கட்டக்கூடாதுன்னு சொன்ன..?” என்று குறுஞ்சிரிப்புடன் கேட்டான். 
“டேய்… போடா போய் வேலையை பாரு.. வந்திட்டான் என்னை கேள்வி கேட்டுட்டு..” என்று பொரிந்தவனை நெருங்கி நின்ற இந்திரஜித், 
“விஷூ உனக்கு ஒன்னு தெரியுமா..? தீக்ஷி சாரீ கட்டினா எனக்கும் உன்னை மாதிரி தான்  படபடன்னு வரும், கண்ணு எங்கெங்கியோ போகும், வேர்க்கும்..” என்று கிசுகிசுப்பாக சொல்ல, கேட்டிருந்த விஷூவிற்கு அதிர்ச்சி. 
“டேய்.. என்னடா என்னென்னமோ சொல்ற.. எனக்கு அப்படியெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது..”
“அப்படியா சொல்ற..? அப்பறம் ஏன் அதிதியை சாரீ கட்ட வேணாம்னு சொன்ன..?” என்று புரியாது கேட்பது போல் கேட்டான். 
“டேய்.. என்னை படுத்தாத.. இங்கிருந்து போய் தொலைடா முதல்ல  போடா..” என்றவனின் முகம் திருப்பி அதிதியை காட்டியவன்,அங்கிருந்து சென்றுவிட, அதிதி  சாரீ அணிந்து மெலிதான அலங்காரத்தில் விஷூவை பார்த்தவாறே வந்தவள்,  
“இப்போ ஓகேயா..?” என்று கேட்டாள். 
“என்ன ஓகே..? அன்னிக்கு நீ அப்படி இப்படி  காட்டுனேன்னு தானே  சொன்னேன்.. அதை  போய் இப்படி எல்லார் முன்னாடியும் சொல்ற..?” என்று  கடுகடுத்தான். 
“நான் அப்படி இப்படி  காட்டினா உங்களுக்கு ஏன் பார்வை தடுமாறுது..? வேர்க்குது..?” என்று கூர்மையாக பார்த்து கேட்டாள். 
“ஏய்.. என்ன இப்படி கேட்கிற..?” என்று திணறியவனை பார்த்து உதடு சுழித்தவள், 
“யார் அப்படி இப்படி  காட்டினாலும் இப்படி ஆகாது, நம்ம ஆளுன்னு உரிமை உணர்வு  இருந்தா மட்டும்தான் அப்படி ஆகும்..” என்று வேறு சொல்ல, ஏற்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் நின்றான். 
“ஆனாலும் ரொம்ப கஷ்டம்தான்..” என்று அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்து உதடு பிதுக்கி சொல்லி செல்ல, விஷூவிற்கு அவள் எதை சொன்னாள் என்று திகைத்து  திணறும் நிலை.

Advertisement