Advertisement

காதல் ஆலாபனை 34
“சண்முகம்.. இந்த பைலை எல்லாம் அதிதி மேடம்கிட்ட கொடுத்து, இன்னிக்கு ஈவினிங்குள்ள ரிப்போர்ட் ரெடியா இருக்கணும்ன்னு சொல்லிடுங்க..”  என்று விஷூ கொடுத்தனுப்பிய பைல்களை திரும்பி எடுத்து கொண்டு தானே கணவனின் அறைக்குள் நுழைந்த அதிதி. 
“இது எல்லாம் என்னங்க..?” என்று கேட்க, 
அவனோ மிக சாதாரணமாக “பைல்..” என்றான். 
“அது எனக்கும் தெரியுது..? நான் கேட்டது நீங்க எனக்கு கொடுத்திருக்கிற வேலையை பற்றி..” என்று கேட்டாள். 
“ஏன்..? செய்யமுடியாதா..?” என்று கிண்டலாக கேட்டான். 
“முடியவே முடியாதுன்னு உங்களுக்கும் நல்லா தெரியும், பல வருஷ கணக்கை ஒரே நாள்ல பார்த்து ரிப்போர்ட் கொடுத்துற முடியுமா..?” என்று முறைப்புடன் கேட்டாள். 
“செய்மா.. பின்ன GM போஸ்ட்ன்னா சும்மாவா..?” என்று அவள்  மேலான தன் கடுப்பை இது போல் தான் இந்த வாரம் முழுதும் தீர்த்து கொண்டிருந்தான். 
“நீங்க வேணும்ன்னே என்னை சீண்ட்டிட்டே இருக்கீங்க..? நல்லதுக்கில்லை பார்த்துக்கோங்க..” என்று மிரட்டலாக சொன்னாள். 
“ஒய்.. என்னடி என்னையே மிரட்டிறியா..? உனக்கு இங்க நான்தான் பாஸ் தெரியுமில்லை, நான் சொல்ற வேலையை செய்றததுன்னு உன் வேலை.. போடி, போய் சீக்கிரம் முடிச்சுட்டு வா..” என்று அதிகாரத்தோடு மிரட்ட, அவனை கண்ணை சுருக்கி முறைத்து போனாள். 
“இவரை என்ன செய்ய..? ஓவரா என்னை படுத்துறாரே..? ஏதாவது செஞ்சே ஆகணும்..” என்று நகத்தை கடித்து யோசித்து கொண்டிருந்தவளை மேலும் டென்க்ஷன் செய்வது போல வந்து சேர்ந்தாள் மீனு.
“மேம்.. இந்தாங்க நீங்க கேட்ட பைல்..” என்று முகத்தை தூக்கி வைத்து கொடுத்தவளை கடுப்புடன் பார்த்தாள் அதிதி. 
மீனுவிற்கு வயது என்று பார்த்தால் இருபது தான் ஆகும், அவளின் அப்பா இங்கு மேனேஜர் என்பதால் டிகிரி முடித்தவுடன் இங்கே வேலைக்கு சேர்ந்துவிட்டாள். அவள் தான் அதிதிக்கு அசிஸ்டண்ட், ஆனால் அவளின் முகத்தில் அந்த பணிவே இருக்காது”, 
“எதோ விரோதியை பார்ப்பது போலே தான் அதிதியை பார்ப்பாள். முதல் சில நாட்கள் ஏன் இப்படி என்று குழம்பியவளுக்கு இரண்டு நாள் முன்தான் பதில் கிடைத்திருந்தது. அது மீனுவிற்கு நம் விஷூ மேல் ஒரு கிரஷ்..”
“அவள் காலேஜ் படித்து கொண்டிருந்த சமயம், வழியில் இருவர் அவளிடம் வம்பு வளர்க்க பார்த்துவிட்ட விஷூ அவர்களை எப்போதும் போல் அடி வெளுத்துவிட்டான். அதில் இருந்து அம்மணிக்கு விஷூ என்றால் ஹீரோ தான்”
“அதனாலே மீனுவிற்கு விஷூவின் மனைவி என்ற முறையில் அதிதி  பகையாளி.. ஏதோ தன் ஹீரோவை அதிதி தட்டி பறித்துவிட்டது போல் அவள் மேல் சிறுபிள்ளை தனமான கோவம், வயது முதிர்ச்சி இல்லை என்பதால்   அதை மறைக்கவும் முயலவில்லை, இப்போதும் அதுபோலே முறைத்து கொண்டிருந்தவளை தானும் முறைத்து பார்த்தாள் அதிதி”
“எனக்கே போட்டியா..? போடி.. போடி..” என்று அவளை உதட்டை வளைத்து பார்க்க, மீனுவும் அதிதியை ஜென்ம விரோதியாக பார்த்து கொண்டிருந்தாள். சரியாக அந்த நேரம், “அதிதி..”  என்று கதவை திறந்து வந்த விஷூவின் பார்வை இருவரின் முறைப்பையும் கண்டு கொண்டது. 
“என்னடா நடக்குது இங்க..? எதுக்கு ரெண்டும் இப்படி முறைச்சிட்டு இருக்குங்க..?” என்று இருவரையும் ஆராய்ந்தவனை, மீனு பரவசமாக பார்க்க, அதிதி கொலை வெறியோடு பார்த்தாள். 
“இப்போ எதுக்கு இங்க வந்தீங்க..?” என்று கணவனை கடுப்புடன் கேட்டாள். 
“சாப்பிட போக வேண்டாமா..?” என்று மனைவியை பார்த்தவன், “யாரு இவங்க..? புதுசா இருக்காங்களே..?” என்று மீனுவை பார்த்து கேட்டான். 
“ம்ம்.. இது என்னோட அசிஸ்டன்ட் மீனு, நம்ம மேனேஜர் பொண்ணு..” என்று கடுகடு முகத்துடன்  அறிமுகம் செய்ய, 
“ஓஹ்..  நம்ம மேனேஜர் பொண்ணு நீதானா..? ஏம்மா உனக்கு இங்க வேலை செய்ய பிடிச்சிருக்கா..?” என்று சம்பிரதாயமாக கேட்டான். 
“ம்ம்.. ரொம்ப பிடிச்சிருக்கு..” என்று கால்களை தரையில் கோடிழுத்தவாறே, வெட்கபட்டுக்கொண்டு விஷூவை பார்த்து சொல்ல, அதிதிக்கு உள்ளுக்குள் நெருப்பு மூண்டது. 
“வாடி.. வா.. என் வித்தார கள்ளி.. நான் பக்கத்துல இருக்கும் போதே என் புருஷனை பிடிச்சிருக்குன்னு ஜாடையா சொல்ற..? உன்னை இன்னிக்கு பிழிச்சுடுறேன்..” என்று ஆத்திரத்தில் கையை பிசைந்து கொண்டிருந்தவளின் கோவம் புரியா விஷ்வஜித், 
“அதிதி ஏன் இப்படி கையை பிசைஞ்சுட்டு இருக்க..?” என்று கேட்டான். 
“ம்ம்.. வேண்டுதல், முதல்ல நீங்க இங்கிருந்து போங்க, நான் வரேன்..” என்றாள். 
“ம்ப்ச்.. எனக்கு டைம் ஆச்சு, வா போலாம்..” என்று அவசரபடுத்தியவன், அங்கேயே நிற்க, 
“இப்போ நீங்க இங்கிருந்து போக போறீங்களா..? இல்லையா..?”  என்று  கணவன் மீதான மீனுவின் பார்வையை பொறுக்க முடியாமல் கத்தியே விட்டவளுக்கு தன் தவறு புரிய விஷூவை பயத்துடன் பார்த்தாள். 
அவன் மனைவியை கடுமையாக பார்த்தவன், “நீ லஞ்சுக்கு போம்மா..” என்று தானே மீனுவை அனுப்பிவைத்தான். 
“என்னடி உன் பிரச்சனை..? இப்போ எதுக்கு இப்படி கத்துன..? கொஞ்சம் கூட சென்ஸே இல்லாம இப்படித்தான் ஸ்டாப் முன்னாடி நடந்துப்பியா..?” என்று தொடர்ந்து திட்டியவன், இறுதியில், “உனக்கு போய் இவ்வளவு பெரிய போஸ்ட் கொடுத்தாங்க பாரு அவங்களை சொல்லணும்..” என்று கத்திவிட்டு செல்ல, அதிதிக்கு கண்ணில் நீர் நின்றுவிட்டது. 
தான் செய்தது தவறு என்று அவளுக்குமே புரிந்து தான் இருந்தது, அதனாலே விஷூ திட்டும் போது அமைதியாக இருந்து கொண்டவளுக்கு “தான் ஏன் இப்படி கட்டுபாடு இல்லாமல் நடந்து கொண்டோம்..?” என்ற சுயஅலசல் தான் மனம் முழுதும். 
“இந்தளவுக்கா என் மனசு  பலவீனமாயுடுச்சு..? நான் ஏன் இப்படி ஓவரா ரியாக்ட் செய்றேன்..? அவரை யார் பார்த்தா எனக்கென்ன..? இல்லை யாரும் பார்க்காம போனா தான் எனக்கென்ன..? நான் தருணுக்காக மட்டும் தானே இந்த உறவை ஏத்துக்கிட்டேன்..”
“ஆனா என் மனசு போற வழியை பார்த்தா எனக்கே பயமா இருக்கே.. இதெல்லாம் அவருக்கு மட்டும் தெரிஞ்சுது என்னை எவ்வளவு சீப்பா நினைப்பார்..? சும்மாவே அவருக்கு என்மேல நல்ல எண்ணம் இல்லை, இப்போ இதுவும் தெரிஞ்சா..?” என்றவளின் சிந்தனையை கலைப்பது போல் மறுபடியும் வந்து நின்றான் விஷ்வஜித். 
“இப்போ நீ வரப்போறியா இல்லையா..? எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்குன்னு சொல்றேன் இல்லை, என் உயிரை வாங்காத, வா போலாம்..” என்று அவளின் கை பிடித்து இழுத்தே செல்ல, அதிதி அமைதியாகவே இருந்தாள்.  
சாப்பிடும்போதும் அவளின் அமைதி தொடர, சுபாவும்,  ஆனந்தனும் அவளை  ஆராய்ச்சியாக பார்க்க, விஷூவிற்கும் அவளின் அமைதி உறுத்தல் தான். 
“ரொம்ப திட்டிடுனோ..? அதனாலதான் இப்படி இருக்காளோ..? இருக்கட்டும், தப்பு செஞ்சா திட்டாம கொஞ்சவா செய்வாங்க..?” என்று அவளின் அமைதியை கண்டுகொள்ளாமல் சாப்பிட்டு அதிதியை கூட்டி சென்று எஸ்டேட்டில் விட்டு கிளம்பிவிட்டான்.
“வேணாம் அதிதி.. நீ இவ்வளவு யோசிக்காத, அப்பறம் இருக்கிற கொஞ்ச மூளையும் கரைஞ்சிடும், அவரை யார் பார்த்தா உனக்கென்ன..? நீ உன் வேலையை பாரு, இப்படியெல்லாம் கண்டதையும் யோசிக்காத..” என்று அவளின் எண்ணம் செல்லும் திசை உணர்ந்து பயந்து அவளுக்கு அவளே தடை போட்டு கொண்டவள், தன்னுடைய எப்போதுமான பழக்கத்தை கையில் எடுத்தாள். 
“கேம் விளையாடுவது..”  இது போலான குழப்பமான, டல்லடுக்கும் நெருங்களில் எல்லாம் தன்னை தானே ரிலாக்ஸ் செய்து கொள்ளும் அவளின் வழி கேம் விளையாடுவதுதான்.  இப்போதும் அலைபாயும் தன் மனதை சமன்படுத்த  விளையாட ஆரம்பித்துவிட்டாள். இரவு நெருங்கும் வரை தொடர்ந்து விளையாடியவளுக்கு சற்று ஓகேவாக இருந்தது. 
“இதுதான் சரி.. நீ எப்போவும் போல இரு, தேவை இல்லாததை யோசிக்காத, அது உனக்கும் நல்லதில்லை, விஷூ மாமாக்கும் நல்லதில்லை..” என்று காதலின் ஆரம்பகால  உணர்வுகளை அலசி ஆராய பயந்து  தன்னுள்ளே அடக்கி கொண்டவளின் போன் ஒலிக்க பார்த்தால் ஆனந்தன்.
“கிளம்பலையா அதிதி..?”  என்று கேட்டவருக்கு பதில் சொல்லும் முன் நேரம் பார்க்க, நெடுநேரம் ஆகியிருந்தது. 
“அச்சச்சோ..” என்று உதடு கடித்தவள், “இதோ மாமா.. கிளம்பிட்டேன்..” என்றவளிடம், 
“விஷூ வேலை முடிச்சுட்டு அங்கதான் வரான், அவனோடே வந்துடுமா..” என்று வைத்துவிட்டார்.  எஸ்டேட்டில் இருந்து வீடு நடக்கும் தூரம் தான், ஆனால் இரவு நெருங்கிவிட்டதாலே வெளியே வேலை விஷயமாக சென்றிருந்த விஷூ அதி இன்னும்  வீடு வரவில்லை என்று தெரிந்து கொண்டு தானே  அவளை அழைத்து செல்ல வந்துவிட்டான். 
“இவ்வளவு நேரம் என்ன செஞ்சுட்டு இருந்த..? முதல்லே கிளம்பியிருக்க வேணாமா..?” என்றபடி காரை எடுத்தவனுக்கு என்ன பதில் சொல்லாமல் என்று அமைதியாகவே இருந்துவிட்டாள்.  
“ஏன்மா இவ்வளவு நேரம்..? நானே வரலாம்ன்னு கிளம்பிட்டேன்..” என்று ஆனந்தன் வாசலில் வைத்து சொல்ல, 
“கொஞ்ச வேலை மாமா..” என்று அவரின் முகம் பார்க்க முடியாமல் முணுமுணுத்தாள். 
“சரிம்மா.. போய் ரெப்ரெஷ் ஆகிவா, சாப்பிடலாம்..” என, 
“சரி மாமா..” என்று உள்ளே சென்றவள், முதலில் சென்று தருணை பார்த்தாள். அவனுக்கு தினமும் மாலை நேரம் முதலில் ம்யூசிக் கிளாஸும், சிறிது நேர இடைவெளிக்கு பிறகு ஷட்டில் கிளாஸும்  இருக்கும், 
“தருண்.. கிளாஸ் எல்லாம் முடிஞ்சுதா..?” என்று கேட்டவளுக்கு, 
“ம்ம்.. இப்போதான் அதி, பசிக்குது..” என்றான். 
“சரி நீ போய் பாட்டியோட சாப்பிடு, நான் போய் ரிப்ரெஷ் செஞ்சுட்டு டூ மினிட்ஸ்ல வந்துடுறேன்..” என்றவள் சொன்னது போல் சீக்கிரமே வந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டாள். 
தொடர்ந்து கேம் விளையாடியதில் கண் எரிய, கை விரல்கள் லேசாக வலித்தது. “இப்படியா மணிக்கணக்கா கேம் விளையாடி தொலைப்பேன்..” என்று தன்னை தானே திட்டி கொண்டிருந்தவளின் அமைதியும், சோர்ந்த முகமும், விரலை மடக்கிவிட்டவளின் வலியையும் கண்டு கொண்ட சுபா, “என்ன செய்து..?” என்று கேட்டார். 
அவர் திடுமென தன்னிடம் இப்படி கேட்கவும் முழித்தவள், விஷூவை பார்க்க, அவன் தன்னை திட்டியது ஞாபகம் வந்தது, உடனே முகத்தை மேலும் சோர்வாக தொங்க போட்டு கொண்டவள், 
“நிறைய வேலை.. அதான்..” என்று திரும்பவும் கை விரலை நீவிவிட்டு கொண்டே சொன்னாள். 
“நிறையா வேலையா..? என்னமா சொல்ற..?” என்று ஆனந்தன் கேட்க, 

Advertisement