Advertisement

“இங்க பாரு மனோ, அவங்க ரெண்டு பேர் விஷயத்துல தலையிட்ட நீதான் பல்பு வாங்கணும், எப்போ எப்படி சேருவாங்கனே தெரியாது, அனுபவபட்டவ சொல்றேன், கேட்டுக்கோ.. நீ சாப்பிடு..” என்று  பொறும, தீக்ஷியும் மனோவை சாப்பிடும்படி வற்புறுத்தவே சாப்பிட்டான். 
“விஷூ.. அவன் எங்கிருக்கான்னு பாரு, எவ்வளவு நேரம் ஆச்சு..?” என்று  தீக்ஷி சாப்பிடாமலே இருப்பதில் மெலிதான வருத்தம் கொண்ட சுபா சொல்லவும், 
“ஹோட்டல்ல இல்லைம்மா.. எங்க போயிருக்கன்னு கண்டு பிடிக்க முடியல.. இந்த  வேலுவும் போன் எடுக்கல..” என்றவர்களின் காத்திருப்பு அன்று மதியம் வரை நீடித்தது. அதுவரை தீக்ஷி சாப்பிடவும் இல்லை, ரெஸ்ட் எடுக்கவும் செல்லவில்லை,  ஹாலிலே கணவனுக்காக காத்திருந்தாள். 
“விஷூ.. என்னடா இது..? அப்படி எங்கதான் போயிருக்கான் உன் தம்பி..?  இப்படி இருந்தா எப்படிடா..? வீட்ல சொல்லணும்னு பொறுப்பு வேணாம், ரெண்டு பிள்ளை பெத்து ஒன்னு கூட சரியில்லை, எல்லாம் நான் வாங்கி வந்த வரம்..” என்று சுபா பொறுமை குறைந்து கோவத்தில் திட்டவே ஆரம்பித்துவிட்டார். 
“ம்மா..” என்று அவர் சமயம் கிடைத்ததில் மொத்தமாக திட்ட கடுப்பான விஷூவின் பார்வை கண்கள் சிரிக்க நின்றிருந்த அதிதி மேல் கோவமாக படிந்தது. 
“என்னை திட்டறதை எப்படி ரசிக்கிறா பாரு..? திமிர் பிடிச்சவ..” என்று மனைவியை உள்ளுக்குள் வறுத்து கொண்டிருந்தவன் அவளை கண்களாலே மிரட்ட, அவளோ சுபாவின் தொடர் திட்டை மிகவும் ரசித்து சிரித்து  கொண்டிருந்தாள். 
“என்னடா இவ்வளவு நடந்திருக்கே, வீட்ல இருக்கனும்ன்னு கொஞ்சமாவது நினைப்பு  இருக்கா உன் தம்பிக்கு,  இவனை யாரு அந்த மினிஸ்டர்  கூட உரண்டை இழுக்க சொன்னா..?, அதனாலதான்  இவ்வளவு பிரச்சனையும், நீங்க எல்லாம் பிஸ்னஸ் செய்ய போறீங்களா…? இல்லை, வம்பை வளர்க்க போறீங்களான்னே தெரியல”, 
“இதோ என் புருஷன் கூட தான் இருக்காரே, எத்தனை வருஷமா பிஸ்னஸ் செய்றாரு, உங்களை மாதிரியா..? என்ன சொல்ல வீட்ல மூத்தது ஒழுங்கா இருந்தா தானே இளையது சரியா இருக்கும், இங்கதான் எதுவுமே சரியில்லையே..” என்று விடாது கரைத்து குடிக்க, கடுப்பான விஷ்வஜித், 
“ம்மா.. என்னை திட்டினது போதும், எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, நானும், தீக்ஷியும்  எத்தனை முறை கேட்டும்  உன் சின்ன மகன் சொல்லவே இல்லை, ஆனா இதோ இங்க நிக்கிறாளோ இவளுக்கு எல்லாம் தெரியும், ரெண்டு பேரும் சேர்ந்து நிறைய திருட்டு வேலை எல்லாம் பார்க்கிறாங்க, நான் கூட இவதான் மாட்டுவான்னு பார்த்தேன்..” என்று அதிதியை போட்டு கொடுக்க, அதிதிக்கு திக்கென்றானது. 
“அடபாவி.. நான் மாட்டுவேன்னு இல்லை எதிர்பார்த்திருக்கார், வேண்டி வேண்டி  உன் கையால தாலி வாங்கிட்டதுக்கு எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்..” என்று கணவனை மனதில் அர்ச்சித்து கொண்டிருந்தாள் 
“என்ன..? என்ன சொல்ற விஷூ..? அதிதி இதுல  எங்கிருந்து வந்தா..? சும்மா அவளை எதுக்கு இழுக்குற..?” என்று ஆனந்தன் அதட்டினார்.  
“ப்பா.. நான் உண்மையை தான் சொல்றேன், எங்க அவளை அப்படி எதுவும் இல்லன்னு சொல்ல சொல்லுங்க பார்ப்போம்..” என்று சவால்விட, 
அதிதியோ  கூலாக, “அப்படி எதுவும் இல்லை மாமா..”  என்று அப்பாவியாக விழித்து சொன்னாள். 
“ஏய்.. பொய் சொல்லாதடி, ஒழுங்கா உண்மையை சொல்லு..” என்று மிரட்ட, 
“எந்த உண்மையை கேட்கிற நீ..?” என்றவாறே வந்தான் இந்திரஜித். 
“வாடா வா உன்னைத்தான் எதிர்பார்த்திருந்தோம்.. எங்கடா போயிருந்த இவ்வளவு நேரம்..?” என்று விஷூ தம்பியிடம் கேட்டான். 
“ம்ப்ச்.. சொல்றேன், முதல்ல சாப்பிடணும்..” என்றவன், மனைவியின் கை பிடித்து  சாப்பிட இழுத்து சென்றான். அதிதி பரிமாற இருவரும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லாமல் அமைதியாகவே சாப்பிட்டனர். முழுதாக ஒரு நாள் சாப்பிடாமல் இருந்த பசி அவர்களை பேசவிடவும் இல்லை.  
“ஜித்து.. என்ன இதெல்லாம்..?” என்று எல்லோரும் ஹாலில் அமர்ந்தபின் ஆனந்தன் ஆரம்பிக்க, 
“ப்பா.. நானா எந்த பிரச்சனையும் ஆரம்பிக்கல, அந்த மினிஸ்டர் ஆரம்பிச்சது தான், ஆனா இனி இது போல நடக்காது..” என்று முடிக்க பார்த்தான். 
“அது எங்களுக்கும் தெரியும் ஜித்து, நாங்க கேட்கிறது என்னன்னா..? உனக்கும், அந்த மினிஸ்டருக்குமான பிரச்சனை  திடீர்னு ஏன் இவ்வளவு சீரியஸ் ஆச்சுனுதான்..”
“திடீர்ன்னு எல்லாம் இல்லை, அவர் என்னை தொடர்ந்து சீண்டிட்டு தான் இருந்தார், நான் பொறுமையா சமாளிச்சிட்டு தான் இருந்தேன்..”
“பொறுமையா  சமாளிச்சிட்டே  இருந்த நீங்க ஏன்  அவரை எதிர்க்க ஆரம்பிச்சேங்க..?” என்று தீக்ஷி நிதானமாக கேட்டாள். 
“அவர் இந்த முறை கொஞ்சம் பெருசா எதிர்பார்த்தார், நம்ம எஸ்டேட் அவருக்கு ரொம்ப பிடிச்சிருக்காம், அதை அவருக்கே விக்க சொன்னார், அது எங்க பரம்பரை சொத்து, விக்க முடியாதுன்னு சொல்லிட்டேன், இதை எல்லாம்  மனசுல வச்சி பழிவாங்க  நம்ம எல்லா ஹோட்டலுக்குள்ள டிரக்ஸ்ஸை கொண்டு வந்து நம்மளை மொத்தமா முடிக்க பார்த்தார்”. 
“அதான் இனியும் பொறுக்க முடியாதுன்னு அவரோட பினாமிங்களையும், அக்கவுண்ட் எல்லாம் நம்ம கண்ட்ரோலுக்கு கொண்டு வந்துட்டேன்..” என, விஷூவும், தீக்ஷியும் அதிதியை பார்த்தனர். 
“உனக்கெப்படி இந்த வேலை எல்லாம் தெரியும் அதி..? மாட்டினா என்ன ஆகும்ன்னு தெரியும் இல்லை..” என்று தீக்ஷி கோவத்தோடு கேட்டாள். 
“இதுல எனக்கு எதுவும் தெரியாதுன்னு பொய் வேற, பிராடு.. உண்மையை சொல்லு..”  என்று விஷூ மிரட்டினான். 
“அதிதியை எதுவும் கேட்காதீங்க..?” என்று இந்திரஜித் சொல்ல, 
“விஷூ அண்ணா அவரோட பொண்டாட்டியை கேட்கிறார்.. உங்களுக்கென்ன..? நீங்க கேளுங்கண்ணா..?” என்று தீக்ஷி சொல்ல, விஷூக்கு இப்போ நாம கேட்கணுமா..? வேண்டாமாங்கிற குழப்பம், 
“கேட்டா பொண்டாட்டி ஆகிடும், கேட்காம போனா எப்படி இவளை வாயை திறக்க வைக்கிறது..? இந்த ஜித்து பையன் வேற  இவளுக்கு ஓவரா சப்போர்ட் செய்றான்.. என்னவா இருக்கும்..?” என்றவன் யோசித்து கொண்டே இருந்தவனிடம், 
“டேய்.. இங்க என்னடா நடக்குது..?”  என்று சுபா அதிதியை கேட்டதில்  குழப்பமாக  கேட்டார். 
“உன்னை தான் கேட்கிறாங்க சொல்லு..?” என்று விஷூ அதிதியை அதட்ட, 
“நீ முதல்ல சொல்லுடா..? இதுல இவ எங்கிருந்து வந்தா..?” என்று மகனை அதட்டினார். 
“அதைத்தான் நானும் கேட்கிறேன். சொல்ல மாட்டேங்கிறா..” என்ற விஷூ, “அதி.. சொல்லு..” என்று திரும்பவும் கேட்டான். 
“ம்ப்ச்.. போதும் நிறுத்துங்க,  இப்போ என்ன..?  நானே சொல்றேன்..” என்ற இந்திரஜித், “எனக்கு ராமலிங்கத்து விஷயத்தை சொன்னது எல்லாம் அதிதான்..” என்றான். 
“என்ன..?” என்று அதிர்ந்தவர்கள், “என்னடா சொல்ற..? விளக்கமா தான் சொல்லேன்..” என்று விஷூ எரிச்சல்பட்டான்.  
“ தீக்ஷி ராமலிங்கத்துக்கிட்ட பொறுப்பை கொடுத்துட்டு படிக்க போனதுக்கு அப்பறம், அவரும், அவர் கூட்டாளிங்களும் காசு எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க, நான் அவங்களை கண்காணிக்க ஆளு ஏற்பாடு செஞ்சிருந்தேன் தான்”, 
“ஆனா உள்ளே போய் என்னால கணக்கை எடுக்க முடியல, எல்லாம் அவங்க கண்ட்ரோல்லே இருந்தது. அப்போ தான் அதிதி எனக்கு எல்லாம் எடுத்து அனுப்பியிருந்தா, உன்னால எப்படி முடிஞ்சதுன்னு  கேட்டப்போதான், அவளுக்கு இந்த ஹேக்கிங் வேலை கொஞ்சம் தெரியும்ன்னு சொன்னா”, 
“அவளோட டிகிரி கம்ப்யூட்டர் சயின்ஸ் தானே, அங்க அவ ப்ரண்ட் ஒரு பையன் இந்த வேலை எல்லாம் பார்ப்பானாம், அவன்கிட்ட இருந்து இவ கத்துக்கிட்டா, அதை வச்சிதான் அவங்கப்போவோட மெயில், அக்கவுண்ட், சொத்து  டீடெயில்ஸ் எல்லாம் ஈஸியா கண்டுபிடிக்க முடிஞ்சது, அதோட அவரோட கான்டெக்ட்ல இருந்த அவங்க பார்ட்னர் டீடெயில்ஸ், AAR அக்கவுண்ட், மத்த எல்லா டீடைல்ஸ்க்கும் எடுக்க முடிஞ்சது..” என்று சொல்ல, எல்லோருக்கும் அதிர்ச்சி. 
“அதைத்தான் இப்போ அந்த மினிஸ்ட்டர் விஷயத்திலும் யூஸ் சென்சோம்..” என்று முடிக்க, தீக்ஷி கணவனை கோபத்தோடு பார்த்தாள். 
“இங்க பாருங்க இதுதான் கடைசி, இனி இதுபோல வேலை எல்லாம் அதி பார்க்க மாட்டா..” என்று அழுத்தமாக சொல்ல, 
“நானும் கேட்க மாட்டேன், இந்த முறை எனக்கு வேற வழி தெரியல, பட் தப்பு தான் சாரி அதி..” என்று இந்திரஜித் மனதார மன்னிப்பு கேட்டான். 
“ஐயோ என்ன மாமா நீங்க..?” என்று அவனின் மன்னிப்பில் பதறியவள், 
“தீக்ஷி.. இதை செய்றது என்னோட கடமை, எங்க அப்பா உங்களுக்கு துரோகம் செய்யறப்போ என்னால எப்படி பார்த்துட்டு இருக்க முடியும்..? உங்க வீட்ல நான் எத்தனையோ நாள் சாப்பிட்டிருக்கேன், அந்த நன்றி உணர்வு எனக்கு கொஞ்சம் கூட இல்லாமலா போயிடும்”, 
“அதிலும் ராணிம்மாவும், அரசப்பாவும் எங்களை அவங்க பிள்ளைகளாவே பார்த்தாங்க, அவங்களுக்கு துரோகம் செய்ய என்னால முடியாது, எங்க அப்பாவை என்னால மாத்தமுடியாது, ஆனால் அவர் செய்ற துரோகத்தை உடைக்க முடியும்ன்னு தோணினதால தான் நன் இப்படி செஞ்சேன்..” என்று அப்பாவை நினைத்து தலைகுனிவுடன் சொன்னவளை தீக்ஷியும், மனோவும்  அணைத்துகொண்டனர். 
சுபாவிற்கும் இதை கேட்டு ஆச்சரியம் தான், அந்த ராமலிங்கத்தை தவிர மத்தவங்க எல்லாம் நேர்மையானவங்க தான் போல, தர்ஷினியும் இப்படித்தான் இருந்திருப்பாளோ..? இதை தான் தீக்ஷியும் என்கிட்ட சொன்னாளா..? நானும் முதல்லே இவங்களை புரிஞ்சுக்க முயற்சி செஞ்சிருக்கணுமோ..?  என்று பலகேள்விகள் நொடியில் முளைக்க, அதிதியை புதிதாக பார்த்தார். 
“அதேபோல சின்ன மாமாக்கு செய்றது நான் கண்டிப்பா செய்வேன், என்னை இன்னிக்கு வரைக்கும் நம்புற அவரோட நம்பிக்கைக்காகவே நான்  செய்வேன் தீக்ஷி..” என்று உறுதியோடு சொல்ல, இந்திரஜித்தை தான் தீக்ஷி முறைத்தாள்.   
“ஐயையோ.. இவ என்ன செஞ்சிருக்கிறான்னு தெரியாம நாம வேற ஓவரா பேசிட்டோமே.. இப்போ என்ன செய்ய..?” என்று விஷூ அதிதியை பார்க்க, அவளோ மற்றவர்களின் பாசமழையில் நனைந்தவாறே இவனை மிதப்பாக பார்த்தாள். 
“சும்மாவே இவ  வாய் கிழக்குக்கும், மேற்குக்கும் நீளும், இப்போ சொல்லவா வேணும்..” என்ற பொருமலோடு நின்றவனை பார்த்து அதிதி கண்ணடித்து விட, அதிர்ந்து போன விஷூ அவளை பார்வையாலே எரித்தான்.

Advertisement