Advertisement

காதல் ஆலாபனை 31
“என்ன சொல்ற ஜித்து..? ஏன் ரிசப்ஷன் வேண்டாங்கிற..?” என்று ஆனந்தன் இளைய மகனிடம் ஆதங்கத்துடன் கேட்டார். 
“ப்ளீஸ்ப்பா.. புரிஞ்சுக்கோங்க, இப்போ எந்த அரேஞ்மெண்ட்ஸும் செய்யாதீங்க.. நிறுத்திடுங்க.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்..”
“அதான் ஏன்னு நானும் கேட்கிறேன் ஜித்து..? இந்த மாசகடைசில ரிசப்ஷன் வைக்கிறதா முன்னாடியே முடிவெடுத்துதானே.. இப்போ ஏன் கேன்சல் செய்ய சொல்ற..?”
“ப்பா.. இப்போ சூழ்நிலை சரியில்லை, கொஞ்சம் கிரிட்டிக்கலா போகுது..”, 
“என்ன ஆச்சு..? ஏதாவது பிரச்சனையா..?”
“ ம்ம்.. ஆமாம்ப்பா..” என்று மேலோட்டமாக சொல்ல, அதிர்ந்த ஆனந்தன், 
“டேய்.. என்னடா நடக்குது..? இவ்வளவு பெரிய விஷயத்தை ஏன் இத்தனை நாளா எங்ககிட்ட சொல்லலை, இப்போ நான் கேட்டதுக்கு அப்பறம் வந்து சர்வ சாதாரணமா சொல்ற..?” என்று கோவத்துடன் பொரிந்தார். 
“ப்பா.. நான் இன்னும் யார்கிட்டேயும் சொல்லலை, பர்ஸ்ட் உங்ககிட்டதான் சொல்லியிருக்கேன்..”
“என்ன..? தீக்ஷிக்கிட்ட கூட  இன்னும் சொல்லலையா..? என்ன செய்ற ஜித்து நீ..? முதல்ல அவளுக்கு தான் தெரியனும், உடனே போய் சொல்ற..” என்று தந்தையாக அதிகாரத்துடன் அதட்டினார். 
“இல்லப்பா.. நான் சொல்லலை, நானே பார்த்துக்க போறேன்”, என்று இந்திரஜித் உறுதியாக மறுத்தான். 
“ஜித்து.. நீ தப்பு செய்றியோன்னு தோணுது, என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுகிறது தீக்ஷியோட உரிமை,  அவளுக்கு தெரியறது தான் சரி, போய் சொல்லு..”
“ ப்பா.. நான் செல்ல மாட்டேன், எனக்கு அவ நிம்மதியா இருக்கனும், இத்தனை வருஷம் நிறைய கஷ்டப்பட்டுட்டா, இனியும் அவ கஷ்டப்பட  நான் விடமாட்டேன்,  என் பொண்டாட்டியை நான் பார்த்துப்பேன்..”
“சரி.. அங்கே இருந்து எப்படி பார்த்துக்க முடியும்..? கிளம்பி வா..” என்று மகனிடம் கெஞ்சவே செய்தார் . 
“இல்லப்பா.. அங்க வந்தா அவளுக்கு தெரியறதோட பிரச்சனையும் பெருசாயிடும், தீக்ஷி இங்க எந்த டென்க்ஷனும் இல்லாமல் நிம்மதியா இருக்கா, இன்னும் கொஞ்ச நாள் இங்கேயே இப்படியே அவ ப்ரீயா இருக்கட்டும்..”  என்று ஜித்து வைத்துவிட, ஆனந்தன் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டார். 
“என்ன ஆச்சுங்க..? ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கீங்க..?”என்று சுபா கணவரின் வாடிய முகத்தில் கவலையுடன் கேட்டார். 
“ஒன்னுமில்லை சுபா,லேசா தலைவலி..” என்று அவர் சொல்லிகொண்டிருக்கும் போதே மனோ அவர் முன் காபி கப்பை நீட்டினான். 
“உங்களை பார்க்கும் போதே  தெரிஞ்சுது, எடுத்துக்கோங்க மாமா..” என்றவனை வாஞ்சையாக பார்த்தவாறே காபியை எடுத்து கொண்டார். 
“மனோ.. உனக்கு எடுத்துட்டு வரலையா..?” என்று அவருக்கு கொடுத்த காபியை எடுத்து கொள்ளாமல் மனோவிடம் கேட்ட சுபா, தானே சென்று இன்னொரு காபியை கொண்டு வந்து மனோக்கு கொடுத்த பிறகே தன்னுடையதை எடுத்து பருக ஆரம்பித்தார். 
அவர்கள் இங்கு வந்த நாள் முதலாக மனோ வீட்டு ஆளாய் அவர்களை பார்த்து பார்த்து தான் கவனித்தான். அதில் ஆனந்தனுக்குமே அவன் மேல் மனநிறைவு தான், உணவு முறையும் அவர்களின் வயதுக்கேற்றார் போலே இருக்கும், 
காலை, மாலை அவர்களுடன் நேரம்  செலவிடுவதாகட்டும், விடுமுறை நாட்களில் அவர்களுடன் கோவிலுக்கு செல்வதாகட்டும்,  தருணுக்கு ஒரு நல்ல அண்ணனாக இருப்பதாகட்டும்.. என  எல்லாமே சுபா, ஆனந்தன் தம்பதியை எந்தவிதமான மனசங்கடமும் இல்லாமல் பார்த்து கொண்டான். ஆனாலும் சில சமயங்களில் சுபா, மனோவின்  பாசப்பிணைப்பு ஆனந்தனின் வயிற்றில் நெருப்பை வார்க்காமல் இல்லை. 
“மனோண்ணா.. தீக்ஷி..” என்று தருண், லேப்புடன்  ஓடிவர, வீடியோ காலில் இருக்கும் அக்காவிடம்  மகிழ்வுடன் பேச ஆரம்பித்தான். தீக்ஷியுடன் இந்திரஜித்தும் உற்சாகமாக பேச ஆனந்தனுக்கு தாங்கமுடியவில்லை, 
“எவ்வளவு பெரிய பிரச்சனை போய்ட்டு இருக்கு, இவன் என்னடான்னா ஒன்னுமே நடக்காத மாதிரி எப்படி சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்கான் பாரு.. சரியான அழுத்தம் பிடிச்சவன்..” என்ற பொருமலோடு மகனை பார்க்க, அவனோ அவரின் பார்வையை கண்டு கொள்ளாமல் எல்லோரிடமும் ஜாலியாக பேசிகொண்டிருந்தான். 
“தீக்ஷி.. எப்போம்மா ஊருக்கு வரீங்க..?” என்று ஆனந்தன் பொறுக்க முடியாமல் மருமகளிடம் கேட்டுவிட, அவரின் திடீர் கேள்வியில், முகத்தில் தெரிந்த சுருக்கத்தில் யோசனையானாள் தீக்ஷிதா. 
“என்னப்பா இது..? இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.. வர்றோம், என்ன அவசரம்..?” என்று ஜித்து சிறிது கோபத்துடனே படபடத்தவன், “அப்பறம் பேசுறோம்..” என்று வைத்துவிட்டான். 
“தீக்ஷி வாக்கிங் போலாமா..? உனக்கு தான் இங்க கடலோரமா நடக்க ரொம்ப பிடிக்குமே.. வா போலாம்..” என்று மனைவியின் கை பிடித்து கடலோரமாக நடந்தவாறே இந்திரஜித் பேசிக்கொண்டே வர, தீக்ஷியின் முகத்தில் யோசனைதான். 
“தீக்ஷி.. நான் உன்கிட்ட தான் பேசிட்டிருக்கேன்..” என்று இந்திரஜித் மனைவியின் தோள் தட்டி சிந்தனையை கலைத்தான். 
“ம்ம்.. நாம ஊருக்கு போலாமா..?”  என்று தீக்ஷி கேட்க, எதிர்பார்த்திருந்தவன் 
“போலாம்.. இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு அப்பறம் போலாம்”, 
“நாம இங்க வந்து ரொம்ப நாள் ஆச்சுதானே, போலாம், போதும்..”
“என்ன போதும்..? எனக்கு போதாது.. உன்னோடே இருக்கனுங்கிற என்னோட இத்தனை வருஷ ஆசை இப்போதான் நிறைவேறியிருக்கு, இங்க நீயும், நானும் மட்டும்.. இப்படியே இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்..” என்று இந்திரஜித் உணர்ந்து தான் சொன்னான். 
“இல்லைங்க.. ஏனோ மனசு கொஞ்சம் சங்கடமா இருக்கு, நீங்களும் அடிக்கடி டென்க்ஷனா இருக்கீங்க, கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறீங்க.. ஏதோ  பெரிய பிரச்சனைன்னு தெரியுது, என்னன்னு சொல்ல மாட்டேங்களா..?” என்று கணவனின் முகம் பார்த்து ஆற்றாமையுடன் கேட்டாள். 
“தீக்ஷி.. நீ கவலைப்படுற  அளவு பெரிய பிரச்சனை எல்லாம் ஒன்னுமில்லை”, 
“அப்போ ஏன் சொல்ல மாட்டேங்கிறீங்க..? நானும் எத்தனை நாளா கேட்கிறேன்..?”
“தீக்ஷி.. என்ன செய்ற நீ..? ஒன்னுமில்லன்னா  விடணும், சும்மா சும்மா கேட்டு நச்சு பண்ண கூடாது..” என்று சொல்ல முடியா கோவத்தில் மனைவியிடம் கத்திவிட்டான். அவனின் திடீர் கோவத்தில் மூக்கு விடைக்க  நின்றிருந்த மனைவியை இயலாமையுடன் பார்த்தவன், 
“தீக்ஷி..” என்று வேகமாக அவளின் கையோடு தன் கை கோர்க்க பார்க்கவும், தள்ளி நின்றவள், வேகமாக திரும்பி  நடக்க ஆரம்பித்துவிட்டாள். அதற்கு பிறகான இரண்டு நாட்கள் தீக்ஷி கணவனிடம் முகம் கொடுத்து பேசவே இல்லை, அவனும் எவ்வளவும் முயன்றும் மனைவியின் மவுனத்தை உடைக்க முடியவில்லை. 
“என்ன சொல்ற ஜித்து..? அவகிட்டேயா..?  நானா..? முடியாது..” என்று விஷூ தம்பியிடம் கோபத்துடன் மறுத்தான். 
“விஷூ சொல்றதை புரிஞ்சுக்க, என்னால அதிதியை கான்டெக்ட் பண்ண முடியல, அவ போன் ஸ்விட்ச் ஆப் வருது, இப்போ நான் சொல்ற வேலை ரொம்ப அவசரம், நான் சொன்னேன் அவளை ஆரம்பிக்க  சொல்லு.. அவளுக்கு  தெரியும்..” என்று இந்திரஜித் எரிச்சலாக சொன்னான். 
“ஏன்..?  அவ ஏன் செய்யணும்..? என்ன வேலை சொல்லு நானே செய்றேன்..”
“விஷூ.. என்னை கோவப்படுத்தாத, நான் சொன்னதை செய், இது ரொம்ப இம்பார்ட்டண்ட் அண்ட் ரொம்ப அவசரமும் கூட.. முதல்ல அவகிட்ட  நான் சொன்ன விஷயத்தை போய் சொல்லு,  நான் உடனே  மெயில் பண்றேன்..” என்று இந்திரஜித் அண்ணனின் பதிலை எதிரிபார்க்காமல் வைத்துவிட்டான். 
“ஏன்  நான் செஞ்சா என்னவாம்..? அப்படியென்ன வேலை, அதை கூட சொல்ல மாட்டேங்கிறான்..” என்று முணுமுணுத்தபடியே  டிவி பார்த்து கொண்டிருக்கும் அதிதியின் முன் சென்று நின்றான். 
“இப்படி டிவி மறைச்சு பனைமரம் கணக்கா நின்னா நான் எப்படி டிவி பார்க்க..?” என்று அவனுக்கு கேட்கும் படி சிடுசிடுத்தவளை கண்ணை சுருக்கி பார்த்தவன், 
“உன் போன் எங்க..?” என்று கேட்டான். 
“இங்க தான் இருக்கு..” என்று பக்கத்தில் இருந்த மொபைலை காட்டினாள். 
“ஏன் ஸ்விட்ச் ஆப் செஞ்சு வச்சிருக்க..? நான்  எங்க ஆப் செஞ்சேன்..? அதுவாத்தான் உயிரை விட்டு படுத்திருக்கு..” என்று நக்கலாக சொல்ல, 
“ஏய்.. ஒழுங்கான  பதிலை சொல்லு..” என்று மூக்கு விடைத்து மிரட்டினான். 
“நான் உண்மையை தான் சொல்றேன், நேத்து நைட் திடீர்ன்னு  ஒரு கரடு முரடான  இடி  இடிச்சதுல பயந்து போய் கீழ விழுந்து உயிரை விட்டுடுச்சு..” என்று அவன் கோவத்தில் கத்தியதில் தவறி போனை கீழே விட்டதை சொல்ல, புரிந்து கொண்ட விஷ்வஜித், 
“இதை இப்படித்தான் சுத்தி வளைச்சு சொல்வியா..? நேரா சொல்ல மாட்டியா..?” என்று சீறினான். 
“ம்ம்.. எனக்கு பொழுது போகணும் இல்லை..” என்று உதட்டை சுளித்தவளை முறைத்தவன், 
“உன் லேப் எங்க..?” என்று கேட்டான். 
“அது..”  என்று அவள் ஆரம்பிக்கும் போதே, 
“இதுக்கும் ஊரை சுத்தி வந்தேன்னு வை, உன்னை தொலைச்சிடுவேன்..” என்று விரல் நீட்டி கடுமையாக மிரட்ட, 
“க்கும்.. உள்ளதான் இருக்கு..” என்றாள். 
“குட்.. சீக்கிரம் போய் எடுத்து வா, உனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..” என்றான். 
“எனக்கு வேலையா..? அதுவும் நீங்க கொடுக்கிறீங்களா..? உங்க எஸ்டேட்ல வேலை செய்ற அளவு  எனக்கு தான் எந்த வேலையும்  தெரியாதே..?” என்று உதட்டை பிதுக்கினாள். 
“என்ன சொல்லி காண்பிக்கிறீயா..? என்னை கடுப்பேத்தாம ஒழுங்கா லேப்பை எடுத்துட்டு வா,  ஜித்து உனக்கு ஏதோ மெயில் அனுப்பறானாம், அந்த வேலையை பார்ப்பியாம்..”  என்றான். 
“எந்த மெயில்..? என்ன வேலை..? நான் ஏன் செய்யணும்..?” என்று அசால்ட்டாக சொன்னவள், சற்று தள்ளி அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பித்துவிட்டாள். 
“என்ன..? ஏன் செய்யணுமா..? ஜித்து சொன்னான்ன்னு சொல்றேன் இல்லை..” 
“உங்க தம்பி  சொன்னா நான் செய்யணுமா..?”  என்று அவன் கேட்ட கேள்வியையே திருப்பி கேட்டாள். 
“இவளை..”  என்று வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பவளை  புரிந்து கடுப்பானவன், “உன் சின்ன மாமன் தானே சொன்னான்,  செஞ்சா செய், இல்லாட்டி போ, எனக்கென்ன..?” என்றவனின் போன் ஒலிக்க பார்த்தால் ஜித்து. 
“சொல்றா..” என்று தம்பியின் அழைப்பை ஏற்று பேச, 
“என்ன சொல்றா..? நான் சொன்ன வேலை என்ன ஆச்சு..? அதி வேலையை ஸ்டார்ட் செஞ்சுட்டாளா..?” என்று வேகமாக கேட்டான். 
“அது.. இன்னும் இல்லை..” என்று அவனின் பதட்டத்தில் என்னவோ ஏதொன்று யோசனையாக சொன்னான். 
“என்ன இன்னும் இல்லையா..? நான் உன்கிட்ட சொன்னேன் இல்லை, அது ரொம்ப முக்கியம், அவசரம்ன்னு, செய்யாம என்ன விளையாண்டிட்டு இருக்கீங்களா..? எனக்கு இன்னும் ஒரு மணி நேரத்துல நான் கேட்டது வந்திருக்கணும், இல்லை உங்க ரெண்டு பேரையும் ஊட்டி மலையிலுருந்து ஜோடியா உருட்டி  விட்டுருவேன்.. பார்த்துக்கோங்க.. கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் தெரியாம..” என்று கத்திவிட்டு வைத்த தம்பியின் பேச்சில் குழம்பியவன், 
“அதி.. கொஞ்சம் சீக்கிரம் அவன் என்ன மெயில் அனுப்பியிருக்கான்னு பாரு, எதோ ரொம்ப டென்ஷான பேசுறான்..” என்று சுருங்கிய முகத்துடன் சொன்னவன், அவளை பார்க்க அவள்  அங்கேயே இல்லை, 
“எங்க போனா..?” என்று தேடியவனுக்கு அவள் அவர்களின் ரூமில் இருக்க, அங்கு சென்றான். 
“எனக்கு நெட் வேணும், பாஸ்வோர்ட் சொல்லுங்க..” என்றவளின் அவசர பேச்சில், விஷூவும் எதுவும் கேட்காமல் சொன்னவன், அவளின் அருகில் சென்று அவள் செய்யும் வேலையை பார்த்தவனுக்கு தலை சுற்றி போனது. 
“ஏய்.. ஏய்.. என்ன செய்றடி..? இதெல்லாம் என்ன..?” என்று அதிர்ச்சியில் திக்கி பேசியவனை கண்டு கொள்ளாத அதிதி, மிகவும் தீவிரமாக வேலை பார்த்து கொண்டிருந்தாள். 
“உன்கிட்ட தானே கேட்கிறேன் அதிதி..? இது எல்லாம் என்ன..? மாட்டினா அவ்வளவுதான்..” என்று கத்த, அதிதியோஅவளின் வேலையிலே கண்ணாக இருந்தாள். அவனும் கத்தி கத்தி பார்த்தவன், இறுதியில் தம்பிக்கு போன் அடித்தான். அவன் எடுக்காமலே போக, தீக்ஷிக்கு போன் செய்தான். 
“தீக்ஷி.. என்ன நடக்குது இங்க..? என்ன பிரச்சனை..? ஜித்து ஏன் போனை எடுக்கல..?” என்று வரிசையாக கேள்விகள் அடுக்கியவனை இடை மறித்த தீக்ஷிதா, 
“ண்ணா.. எனக்கும் ஒன்னும் தெரியல, எதோ பெரிய பிரச்சனை போகுது, என்னன்னு சொல்ல மாட்டேன்கிறார்..” என்று தீக்ஷி மனத்தாங்கலோடு சொன்னாள். 
“ஓஹ்.. எப்படி தெரிஞ்சுக்க, தீக்ஷி.. வேலுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும், அவன்கிட்ட கேட்கலாம்..”  என்று விஷ்வஜித் பரபரப்பாக சொன்னான். 
“ம்ம்.. வேலுவுக்கு தெரியும்தான், ஆனா இவர் சொல்லாம  நமக்கு சொல்லுவார்ன்னு நம்பிக்கை இல்லை”, 
“அதெப்படி சொல்லாம போவான்..? என்ன ஏதுன்னு தெரியாம விடமுடியுமா..? இங்க அதிதி வேற ஜித்து சொன்னான்னு  யார் யாரோட அக்கவுண்ட், மெயில்க்குள்ள எல்லாம் போயி  ஏதேதோ செஞ்சுட்டு இருக்கா..” என்று சொல்ல, அதிர்ந்த தீக்ஷி, 
“என்னண்ணா சொல்றீங்க..? அதி ஏன்  இப்படி செய்றா..? இது சைபர் க்ரைம்..” என்று கோவத்தோடு கேட்டாள். 
“தெரியல தீக்ஷி, எவ்வளவு கேட்டாலும் ஒன்னும் சொல்லாமாட்டேன்கிறா.. நாம வேலுகிட்ட கேட்கிறது தான் சரி, நீ இரு..” என்று வேலுவுக்கு போன் செய்து கான்பிரன்ஸ் கால் போட்டவன். 
“வேலு.. என்ன பிரச்சனை..?” என்று நேரடியாக கேட்டான்.  
“இந்தர் சார் சொல்லாம சொல்றதுக்கில்லை சார், என்னை மன்னிச்சுக்கோங்க..” என்று மரியாதையுடன் தன்மையாகவே மறுத்தான். 
“என்ன..? எங்ககிட்ட சொல்ல மாட்டியா..?” என்று விஷூ கோபத்துடன் பலவழிகளில் கேட்டும், மிரட்டியும் வேலுவின் வாய் மட்டும் திறக்கவில்லை. 
“வேலு..” என்று தீக்ஷி அழுத்தி கூப்பிட்டவள், “விஷயம் பெருசா..?” என்று மட்டும் கேட்டாள். 
“கொஞ்சம் பெருசு தான் மேம்.. இந்தர் சார் பார்த்துப்பார்..”என்று முதலாளியின் மீது நம்பிக்கையுடன் சொன்னான். 
“ம்ம்.. ஓகே..”, என்று வைத்துவிட்ட தீக்ஷி, மேலும் சில போன் கால்கள் செய்து   என்ன நடக்கிறது என்று விசாரித்து  தெரிந்து கொண்டுதான் இருந்தாள் 
“என்ன சொல்ற வேலு..? இது எப்படி நடந்துச்சு..?” என்று இந்திரஜித் அளவில்லா கோவத்தில் கொதித்து கொண்டிருந்தான். 
“தெரியல சார்.. நாங்க எவ்வளவுவோ தடுத்து பார்த்தோம், ஆனா முடியல, மனோ தம்பியை விசாரணைக்கு கூப்பிட்டு இருக்காங்க..” என்றான். வேலு.. 
“இது எனக்கு தெரியும், நான் கேட்டது ஏன் இந்தளவு போச்சுன்னு தான்”, 
“சார்.. மேடத்தை வச்சு உங்களை கார்னர் செய்ய பார்க்கிறாங்க சார், அவங்க வந்தாதான் சரியா இருக்கும், இல்லை அவங்க தலை மறைவாயிட்டாங்கன்னு சொல்லிருவாங்க..”
“சொன்னா சொல்லிட்டு போறாங்க, அதுக்காக எல்லாம் தீக்ஷியை கூட்டிட்டு வரமுடியாது, என்ன செஞ்சிடுவாங்க, மனோவை வெளியே எப்படி கொண்டு வர்றதுன்னு எனக்கு தெரியும்,  பார்த்துடுறேன்..” என்றவன், அடுத்த பிளைட்டில்  தீக்ஷியின் பிடிவாதத்தால் வந்து கொண்டிருந்தான்.
“தீக்ஷி.. என்ன இது..? ஏன் பேக் பண்ற..? நாம போறதில்லை.. வீணா எல்லாம் பேக் செய்யாத..” என்று இந்திரஜித்திற்கு வேலுவும், பாலாவும் தீக்ஷி  போன் செய்து விசாரித்ததையும், ஓரளவுக்கு தெரிந்து கொண்டாள் என்பதையும் சொல்லவிட்டிருந்தனர். 
ஆனால் அதற்குள்  தீக்ஷி  டிக்கெட்டும் புக் செய்துவிட்டிருந்தாள் போல, டிக்கெட்டும் அவர்கள் கையில் வந்து சேர்ந்தது. எல்லாமே தன் கையை மீறி போனதில் தவித்து போனவன், 
“தீக்ஷி இன்னும் கொஞ்ச நாள் மட்டும், எல்லாமே முடிச்சுடுறேன், அப்பறம் போலாம்..” என்று இறுதியாக கெஞ்சியே பார்த்தான். ஆனால் தீக்ஷி சிறிதும் அசையவில்லை, அவன் முகம் பார்த்து பேசவும் இல்லை.
இவர்கள் ஏர்போர்ட் வந்தடையவுமே கஸ்டம்ஸில் இருந்து வந்தவர்கள், AAR க்கான தங்கம் வாங்கிய முறைகேட்டில்  தீக்ஷியை விசாரணைக்கு அழைக்க. இதை எதிர்பார்த்திருந்த தீக்ஷி எந்தவிதமான அதிர்ச்சியையும் காட்டாமல் நின்றாள். 
இந்திரஜித் கோபத்துடன் வேலுவை தேட அவன் வேகமாக அவர்களிடம் வந்தான். “சார்.. நானும் எவ்ளோ முயற்சி செஞ்சேன், ஆனா அந்த மினிஸ்ட்டர்..?” என்று இழுத்தத்திலே புரிந்து கொண்ட இந்திரஜித்  
“நாங்க ஆபிஸ் போறதுக்குள்ள நான் முன்னாடியே சொல்லியிருந்த பிளானை செஞ்சுடு..” என்றான். 
“சார்..” என்று வேலு தயங்க, 
“முடிச்சிட்டு அந்த மினிஸ்டருக்கு போன் செய்.. நம்ம ஆளுங்க அங்கதான் இருக்காங்க, ஆரம்பிக்க சொல்லிடு..” என்றுவிட்டவன், தீக்ஷியிடம் சென்றான். தான் இல்லாததாலே  மனோவை விசாரணைக்கு கூப்பிட்டதை பாலா மூலமாக தெரிந்து கொண்ட தீக்ஷி பிடிவாதமா கிளம்பி வந்திருந்தவள், 
“என்ன நடக்குதுன்னு எனக்கு சொல்றது  அவ்வளவு பெரிய தப்பு ஒன்னும் இல்லை..” என்று கணவனிடம் கேட்டாள் மிக மிக அமைதியாக. 
“இல்லை.. நம்ம ஹோட்டல்ல ட்ரக்ஸ் வச்சி என்னைதான் அந்த மினிஸ்டர் மாட்டிவிட பிளான் போட்டிருந்தான். ஆனா அது முடியலன்னுதும் உன்னை..? எனக்கே இன்னிக்கு காலையில தான் தெரியும்..” என்று சொல்லவும், ஏதும் சொல்லாமல் விசாரணைக்கு  கிளம்பிவிட்டாள்.

Advertisement