Advertisement

காதல் ஆலாபனை 30 2
“என்ன இவர் ஒன்னும் சொல்ல மாட்டேன்கிறார்..?” என்று அதிதி சாப்பிட்டு கொண்டிருந்த விஷ்வஜித்தையே பதிலுக்காக பார்க்க, அவனோ மனைவியின் கேள்வி காதில் விழுகாதது போல் நிதானமாக சாப்பிட்டு கொண்டிருந்தான். 
எல்லோரும் கிளம்பி மூன்று நாட்களுக்கு மேலாகியும் அவளை கண்டு கொள்ளாமல் தான் மட்டும் வேலைக்கு சென்று கொண்டிருந்தவனிடம் தான் அதிதி கேட்டு கொண்டிருந்தாள்.   
“ஒரு வேளை நான் கேட்டது அவர் காதுல விழுகலையோ..?” என்ற சந்தேகத்துடன் திரும்பவும் கணவனிடம்,  “நானும் உங்களோட எஸ்டேட்டுக்கு  வரவா..?” என்று கேட்டாள் சிறிது சத்தமாகவே. 
“ஏன்..?” என்ற விஷ்வஜித்தின் கேள்வியை புரியாமல் பார்த்தவள், 
“வேலைக்கு தான், சின்ன மாமா சொன்னாங்களே..?” என்றாள் இந்திரஜித் சொல்லி சென்றதை நினைவு படுத்தும் விதமாக, 
“உன் சின்ன மாமன் சொன்னா நான் உன்னை  கூட்டிட்டு போகணுமா..?” என்று அலட்சியமாக கேட்டான். 
“ஏன் இப்படி கேட்கிறீங்க..? எனக்கும் வேலை வேணும்தான்..” என்று அதிதி உதவியாகவே  கேட்டாள். 
“உனக்கெதுக்கு வேலை…?”  என்று வேண்டுமென்றே  கேட்கப்பட்ட விஷ்வஜித்தின் தொடர் கேள்வியில் மெலிதான கோவம் கொண்ட அதி பதில் சொல்லாமல் சென்றுவிட்டாள். 
“என்ன தைரியம் இவளுக்கு..? நான் பேசிட்டே இருக்கும் போதே கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் போறா..?” என்று கொதித்தவன், தோட்டத்தில் நடை பயின்று கொண்டிருந்தவளின் முன் சென்று நின்றான். 
“என்ன பழக்கம் இது..? நான் பேசிட்டு இருக்கும் போதே வர்ற..?” என்று முகம் இறுக கேட்டான். 
“நீங்க பேசல, கேள்விதான் கேட்டுட்டு இருந்தீங்க..?” என்று அதிதி அவனின் கோவத்தில் லேசான அச்சம் கொண்டாலும் துணிந்து பதில் சொன்னாள். 
“சரி.. கேள்வி தான் கேட்டேன், அதுக்கு பதில் சொல்ல மாட்டியா..?”
“உங்களுக்கு பதில் தெரிஞ்சும் நீங்க வேணும்ன்னு தான் என்கிட்ட கேள்வி கேட்குறீங்க..?”
“தெரியுதில்லை, அப்பறம் ஏன் என்கிட்ட வேலைக்கு கேட்டு வர..?”
“நான் ஒன்னும் கேட்கல, சின்ன மாமா சொன்னதால தான் கேட்டேன்..”
 “அவன் சொன்னா நீ கேட்டுடுவியா..?”
“ தப்பு தான் கேட்டிருக்க கூடாது..” என்று அதிதி கணவனின் முகம் பார்க்காமல் சொன்னவள், உள்ளே செல்ல, மீண்டும் வழி மறித்தவன், 
“ஏய்.. உன் மனசுல நீ என்ன நினைச்சிட்டு இருக்க..? நான் பேசிட்டுருக்கும் போதே போற.. இப்போத்தானே சொன்னேன்..” என்று  கோவத்தில் சீறினான். 
“நானும் திரும்பவும் சொல்றேன், நீங்க ஒன்னும் என்கிட்ட பேசல, சண்டைதான் போட்டுட்டு இருக்கீங்க, அதுவும் வம்பா போடுறீங்க..” என்று அவளின் எப்போதுமான தைரியத்தில் கணவனிடம் மோதி கொண்டிருந்தாள். 
“என்ன நீ என்கிட்ட இப்படி வாயடிக்கிற…? இதுவரை யாரும் என்கிட்ட இப்படி பேசினதில்லை..”
“நீங்களும் யார்கிட்டேயும் இப்படி பேசினதில்லை, என்கிட்ட மட்டும் தானே இப்படி நடந்துக்கிறீங்க..?” என்று சரியாக கணவனின் குணத்தை கணித்து சொன்னவளுக்கு பதில் சொல்ல முடியாமல் விஷ்வஜித் திணறவே செய்தான். 
“அவள் சொல்றதும் சரிதானே.. நான் யார்கிட்டேயும் இப்படி இல்லையே..?”என்று தனக்குள் குழம்பியவன், மனைவியை தவிர்த்து அங்கிருந்து செல்ல, 
“இவர் மட்டும் நான் பேசும்போதே போலாமா..?” என்று சத்தமாகவே முணுமுணுத்தாள். 
“இவளை.. என்கிட்டே வம்பை வளக்குறா.. திமிரு..” என்று திரும்பி மனைவியை முறைத்தவன், “என்னடி வாய் ரொம்ப நீளுது..? கொழுப்பா..?” என்று முறைத்து கேட்டான். 
“என் புருஷன் தான் சொல்லியிருக்கார், பேசும் போதே போறது ரொம்ப தப்பு, மரியாதை இல்லத்தனம்ன்னு.. அதைத்தான் சொன்னேன்..” என்று உதடு சுளித்து சொல்ல, 
“உன்னை..” என்று பல்லை கடித்தவன், உள்ளே சென்றுவிட,  அதுவரை அவனிடம் சரிக்கு சரியாக வாயடித்து கொண்டிருந்தவள் அவன் இறுதியில் திணறி சென்றதில் “யாருகிட்ட..? பேசுறதிலே நாங்க Phd ஆக்கும்..” என்று மனதில் குதூகலமாக நினைத்து பொங்கி சிரித்தாள்.
“மனோ.. காலேஜ் கிளம்பிட்டியா..? சாப்பிட்டியா..?” என்று ஹனிமூனிலிருந்து தீக்ஷி தம்பியிடம் போன் செய்து பேசிக்கொண்டே  கணவனை பார்க்க, அவன் முகம் இறுக எதோ தீவிர சிந்தனையில்  கண் மூடி படுத்திருந்தான்.   
“தருண்.. நம்ம ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்ல நீ கொடுத்திருந்த சில  கேம்ஸ் யூஸ்  செஞ்சுட்டு இருக்காங்க, நீ தாத்தா பாட்டியோட போய் பார்த்துட்டு வா.. உனக்கும், அவங்களுக்கும் டைம் போகும்..” என்று பேசி வைத்தவள் தானகவே கணவனின் மீது படுத்து கொண்டு அவன் முகம் பார்த்தவள், 
“என்ன ஆச்சு..? ஏதாவது பிரச்சனையா..?” என்று கவலையாக கேட்டாள். 
“பெருசா ஒன்னுமில்லை, பார்த்துக்கலாம்..” என்றவனின் முகத்தில் சிறிதும் தெளிவில்லை. எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும்  அசராமல் கையாளும் கணவனிடம் இந்த முறை எனோ அந்த நிதானம் இல்லையோ என்றே தீக்ஷிக்கு தோன்றியது, 
ஹனிமூன் வந்து முதல் இரண்டு நாட்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் தான் கழிந்தது, ஆனால் நேற்றிரவில் வேலுவின் போன் வந்ததுக்கு பிறகான இந்திரஜித்தின் இறுக்கம் குறைந்தபாடில்லை, இருக்க இருக்க அதிகம் தான் ஆகியது, இதில் தொடர்ந்து போன் வேறு.. 
ஏதோ பெரிய விஷயம் என்று புரிந்தது, ஆனால் என்னவென்று கணவனிடம் வற்புறுத்தி கேட்கவும் முடியவில்லை, இருவருக்குமே அந்த பழக்கம் இல்லை, சொன்னால் கேட்டு கொள்வார்களே தவிர போட்டு குடைவதில்லை. அந்த பழக்கத்தாலே தடுமாறிய தீக்ஷி, தன் இயல்பையும் விட்டு இன்னும் ஒரு முறை இந்திரஜித்திடம் கேட்கவே செய்தாள். 
“என்னன்னு சொல்லுங்க.. என்னால ஏதாவது செய்ய முடியுமான்னு பார்க்கலாம்..” என்று கேட்க, கண் திறந்து மனைவியின் கவலையான முகம் பார்த்தான். 
அவளின் கவலையில் தன் இறுக்கத்தை மறைத்தவன், “நீயா..? செய்யலாமே..?” என்று சிரிப்புடன் சொன்னான். 
“என்ன செய்யணும்  சொல்லுங்க..?” என்று தீக்ஷி உற்சாகத்துடன் கேட்டாள். 
“முதல்ல உன் புருஷனுக்கு இங்க ஒரு முத்தம் கொடுக்கலாம், அடுத்து இங்க கொடுக்கலாம், இங்க கூட கொடுக்கலாம்..” என்று அவனின் உடலில் ஒவ்வொரு பாகமா காட்டி சொல்ல, 
“உங்களை..” என்று கோவத்தோடு அவன் சொன்ன இடத்தில எல்லாம் பெரிதாக அவன் கத்தும்படியே கொடுத்தாள். 
“ஏய்.. இது எல்லாம் கையில கொடுக்க கூடாதுடி, உதட்டாலதான் கொடுக்கணும்..” என்று  அவள் கொடுத்த அடியை வாங்கி கொண்டே சொன்னான். 
“உதட்டால வேணுமா..? பல்லால வேணும்ன்னா தரேன்..” என்று கடிக்க, 
“ஸ்ஸ்.. இது கூட ஒரு மாதிரி கிக்கா தாண்டி இருக்கு.. இதோ இங்க எல்லாம் கூட கடி, இன்னும் கிக்கா இருக்கும்..” என்று கடியை கேட்டு வாங்கி ரசித்தவனை பார்த்த  தீக்ஷி தான் தலையில் அடித்து கொள்ள வேண்டியதாகி போனது.
“சொல்லு ஜித்து..” என்று தம்பியின் போனை எடுத்த விஷ்வஜித்திடம், பொதுவாக நலம் விசாரித்த இந்திரஜித், 
“ஏன் இன்னும் அதியை எஸ்டேட்டுக்கு கூட்டிட்டு போகல விஷூ..?” என்று போன் செய்த காரணத்தை கேட்டான். 
“அதானே பார்த்தேன்..? என்னடா ஹனிமூன்ல இருக்கிற தம்பிக்கு நம்ம ஞாபகம் வந்துருச்சோன்னு..” என்று ராகம் இழுத்தான். 
“ம்ப்ச் விஷூ.. ஏன் அதியை கூட்டிட்டு போகல, அதை மட்டும் சொல்லு..”
“என்ன சொல்ல..? எனக்கு பிடிக்கல..”
“உனக்கேண்டா பிடிக்கல..? நான்தான் சொல்லிட்டு வந்தேன்ல, சொல்றதை புரிஞ்சுக்கோ விஷூ, அவளுக்கு ஓரளவுக்கு எல்லாம் வேலையும் தெரியும், கண்டிப்ப உனக்கு உதவியாதான் இருப்பா..” என்று தம்பி பொறுமையாகவே சொன்னான். 
“அவ எனக்கு உதவியா..? பெரிய உபத்திரம்.. என்ன வாய் பேசுறா தெரியுமா..? உங்க ஊரு வாய், எங்க ஊரு வாய் இல்லை, ஒட்டு மொத்த உலகத்துக்கும் சேர்த்து பேசுறா.. என்னால எல்லாம் நாள் முழுசும் அவ பேச்சை  தாங்கமுடியாது..” என்று விஷ்வஜித் பொரிந்தான்.

“பொண்டாட்டி பேச்சை அடக்க எத்தனை வழி இருக்கு, அதிலும் புது மாப்பிள்ளைக்கு சொல்லவா வேணும்..?” என்று அண்ணனுக்கு கேட்கும் படி முணுமுணுத்தவனின் சத்தம் கேட்ட அண்ணனின் கோவம் உச்சிக்கு சென்றது. 
“டேய்.. நேர்ல வந்தேன்னு வை, என்ன பேசுற நீ..?” என்று காட்டமாக கேட்டான். 
“சரி.. சரி.. முதல் புது மாப்பிள்ளை இல்லை, ரெண்டாம் புது மாப்பிள்ளை.. இப்போ ஓகேவா.. இதுக்கு போய் கோவப்படுற..?”
“ ராஸ்கல்.. இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன  உன்னை பிழிஞ்சுருவேன்..” என்று நறநறத்தவனை, 
“போடா.. ரொம்பத்தான் பண்ற, பின்னாடி ரொம்ப கஷ்டபடுவ, பார்த்துக்கோ..” என்று வைத்துவிட, விஷ்வஜித் அதிதியை குதறும்  ஆத்திரத்தோடு வீட்டுக்கு சென்றான்.
“என்ன உன் சப்போர்டுக்கு ஆள் சேர்க்கிறியா..?” என்று தோட்டத்தில் அமர்ந்து போனை பார்த்து கொண்டிருந்தவளிடம் சென்று கோவத்தோடு கத்தவே செய்தான். இரவு நேரத்தில் திடீரென  கேட்ட அவனின் சத்தத்தில் பயந்து போன அதிதி கையில் இருந்த போனை தவறவே விட்டுவிட்டாள். 
“ஐயோ.. என் போன்..” என்று அலறியவள், வேகமாக போனை எடுத்து ஆராய்ந்தாள். 
“ஏய்.. உன்கிட்ட தானே கேட்கிறேன்..? பதில் சொல்லு, எதுக்கு ஜித்துகிட்ட என்னை பத்தி கம்பளைண்ட் செஞ்ச..?” என்று அவளின் பதட்டத்தை கணக்கில் கொள்ளாமல் மிகவும் கோவமாக கத்தினான். 
“நான்..  நானா போய் சின்ன மாமாகிட்ட சொல்லலை, அவர் கேட்டார், நான் சொன்னேன்..” என்று அவனின் அதிகப்டியான கோவத்தில் பொறுமையாகவே சொன்னாள். 
“அப்படியென்ன வேலைக்கு போயே ஆகணும்ன்னு கட்டாயம் உனக்கு..?” என்று விஷ்வஜித் எரிச்சலாக கேட்டான். 
“என்னோட செலவுக்கு காசு  வேணும்..”
“என்ன..? என்ன பேசுற நீ..? உன்னோட செலவுக்கு நாங்க காசு தரமாட்டோமா..?”  என்று விஷ்வஜித் ஆத்திரத்தோடு கேட்டான். 
“வேண்டாம்.. நீங்க எதுக்கு  தரணும்.?” என்று அதிதி உறுதியாக மறுத்தாள். 
“நாங்க ஏன் தரணுமா..? நீ எங்க பொறுப்பு, உனக்கு செய்ய வேண்டியது எங்க கடமை..” என்று ஏதோ அவர்களை நம்பி வந்தது போல் பேசியவனை வெறுமையாக பார்த்தவள், 
“எனக்கு செய்ய உங்களுக்கு எந்த கடமையும் இல்லை, நம்ம ரெண்டு பேரோட மியூச்சுவல்  தருண் மட்டும்தான், அதுக்காக தான் இந்த  உறவே, இதுல யார் மேலயும், யாருக்கும் எந்த கடமையும்  இல்லை.. என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்..”, என்று விஷ்வஜித்தை தள்ளி வைத்தே பேசினாள். 
அவளின் ஒதுக்கமான பேச்சில் அவளின் தன்மானத்தை புரிந்து  கொள்ளாத விஷ்வஜித், “நீ சொன்னது கரெக்ட்தான், உன்னை பார்த்துக்க எங்களுக்கு என்ன இருக்கு..?” என்று கோவத்தில் நிதானம் இழந்து பேசியவன்,
“எதோ என் தம்பி சொன்னான்னு உனக்கு வேலை தரேன், நாளைக்கு வந்து ஜாயின் செஞ்சுக்கோ, ஆமா உனக்கு என்ன வேலை தெரியும்..?” என்று கிண்டலாக கேட்பது போலே கேட்டவனை நிதானமாக பார்த்தவள், 
“எனக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு நீங்க வேலை தர தேவையில்லை, நான் பார்த்துகிறேன்..” என்று முடித்தவளை முகம் சிவந்து பார்த்தவன், 
“போடி.. எனக்கும்  உனக்கு வேலை கொடுக்கணும்ன்னு ஒன்னும் தவம் இல்லை, எங்க எஸ்டேட்டுக்கு நீ வரவும் தேவையில்லை, திமிர் பிடிச்சவ..” என்று பொரிந்துவிட்ட சென்றவன், மறுநாளே உதவி கேட்டு அவளிடம் வந்து நின்றான்.

Advertisement