Advertisement

காதல் ஆலாபனை 30 1
“கிளம்பலாமா..?” என்று வந்த இந்திரஜித் விஷூ இன்னும் கிளம்பாமல் இருக்கவும், 
“விஷூ ஏன் இன்னும் கிளம்பல.?” என்று கேட்டான்.
“எங்க கிளம்பனும்..?”  என்று அண்ணன் காபியை குடித்தபடி சாதாரணமாக கேட்டான். 
“எங்கேயோ..? இதென்ன கேள்வி விஷூ..? எஸ்டேட்க்கு தான் போகணும், வேலை இருக்குல்ல..” என்று தம்பி சொன்னான். 
“வேலை இருக்கு தான், அதை நாங்க பார்த்துகிறோம், நீ இதை பிடி..” என்று தம்பியின் கையில் ஒரு கவரை திணித்தான் அண்ணன். 
“என்ன இது…?”  என்றவாறே அதை பிரித்து படித்து பார்த்தவனுக்கு புரிந்து போனது,  அது அவனுக்கும் தீக்ஷிக்குமான ஹனிமூன் டிக்கெட் என்று.. 
“டேய்..” என்று மெலிதான வெட்க சிரிப்புடன் பார்த்தவனை எழுந்து தோளோடு அணைத்து கொண்ட விஷ்வஜித், 
“நீயும், தீக்ஷியும் கிளம்புங்க, இங்க நாங்க பார்த்துகிறோம், எத்தனை நாள் வேணும்னா இருந்துட்டு வா..” என்றான். 
“ச்சு.. வேணாம் விஷூ..”  என்று இந்திரஜித் உறுதியாக மறுத்தான். 
“ஏன் வேணாம்..? மனோ, எங்களை  நினைச்சு யோசிக்கிறியா..?” என்று அண்ணன் சரியாக கவனித்து கேட்டான். அவனும் அவர்கள் திருமணம் முடிந்து இந்த நான்கு நாட்களாக பார்த்து கொண்டுதானே இருக்கிறான், சாதாரணமாக பக்கத்தில் உட்கார்ந்து பேசவும் தீக்ஷியும், இந்திரஜித்தும் தடுமாறினர், 
அவர்களின் திருமண வாழ்வை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும் நேரம் இது, அதிலும் இந்திரஜித்தின் காதல், ஏக்கம் நன்றாக தெரிந்தவன், ஆனால் தங்களை நினைத்து இருவரும்  அந்த சந்தோஷத்தை கெடுத்து கொள்வதில் விருப்பம் இல்லாததாலே இந்த ஏற்பாடு.  
“அப்படியெல்லாம் இல்லை விஷூ..”  என்ற தம்பியின் பொய்யை அறியாதவனா..? 
“ஜித்து.. எதுவும் பேசாத,  நீயும், தீஷியும் கிளம்புங்க, மனோ, தருண் எங்களோட இங்கேயே இருக்கட்டும்..  நாங்க பார்த்துகிறோம்..” என்று அண்ணன் முடிவாக சொன்னான்தான், ஆனால் மனோவிற்கு காலேஜ் இருக்கு.. என்று தெரிந்தவுடன் தீக்ஷி வேண்டாம் என்றுவிட்டாள். 
“ஏன் வேண்டாம்..? நானும், அப்பாவும் மனோகூட சென்னை போறோம், இவங்க போய்ட்டு வரட்டும்..”  என்று இரவு உணவு முடிந்து பெரியவர்கள் அமர்ந்து தோட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது  சுபா சொல்ல  எல்லோருக்கும் ஆச்சரியம் என்றால் ஆனந்திற்கு காதில்  புகை வராத குறை, 
“இது எங்களுக்காக பார்க்கிற  மாதிரி  தெரியலையே..? மனோக்காக இல்லை பார்க்கிற மாதிரி இருக்கு..” என்று இந்திரஜித் அப்பாவை பார்த்தவாறே சிரிப்புடன் அம்மாவிடம் கேட்டான். 
“சரியா கண்டுபிடிச்சிட்டியே…? அப்படித்தான்..” என்ற சுபாவின் திட்டம் போலே மனோ, சுபா, ஆனந்தனோடு தருணும் சேர்ந்து கொண்டான். 
“தருணுக்கு ஸ்கூல்..?” என்று அதிதி கவலையாக கேட்டாள். 
“ஸ்கூல் திறக்க  இன்னும் கொஞ்ச நாள்  இருக்கும்மா..” என்று ஆனந்தன் சொல்லவும், 
“அப்போ நானும் பேசாம இவங்களோட போயிடலாம்.. இங்க இவரோட தனியா எப்படி..?”  என்றவளின் யோசனையை கண்டு கொண்ட இந்திரஜித், 
“அப்போசரி.. நாம எல்லாம் நாளைக்கே சென்னை கிளம்பிடலாம், அங்கிருந்து நானும், தீக்ஷியும்  கிளம்பிக்கிறோம், இங்க விஷூ அதி இருக்கட்டும்..” என்று அவசரமாக முடித்தான். 
“அது..  நானும் உங்களோட சென்னை  வரேன்..” என்று அதிதி வாய் திறந்தே கேட்டேவிட, விஷ்வஜித்துக்கும் அதுதான் சரி என்று தோன்றியது. 
“நீ சென்னை வந்துட்டா  இங்க விஷூவை யாரு பார்த்துகிறதாம்..? அவன் தனியா இருப்பானா..?”  என்று இந்திரஜித் மறுக்க, 
“நானும் சென்னைக்கே வரேன், எல்லாம் போலாம்..” என்று விஷ்வஜித் சொல்லவும், அண்ணனை கடுப்பாக பார்த்த தம்பி, 
“சரியா போச்சு, எல்லோரும் கிளம்பிட்டா  இங்க இருக்கிற வேலையை யாரு பார்க்கிறதாம்..? நானும், தீக்ஷியும் தான் இங்கே இருந்து  பார்த்துக்கணும் போல..” என்று பெருமூச்சோடு சொல்வது போல சொல்ல, அவனின் எண்ணத்தை கண்டு கொண்ட அண்ணன், 
“இருக்கேன், இங்கேயே இருந்து தொலையறேன்..” என்று கடுப்பாக  ஒத்துக்கொண்டான். 
“அது..” என்ற ரகசிய சிரிப்போடு தீக்ஷியை பார்த்து கண்ணடிக்க, தீக்ஷிக்கு கணவனை கட்டி கொண்டு முத்தம் கொடுக்க வேண்டும் போல இருந்தது. 
“இதுக்குதான் என் புருஷன் வேணும்ங்கிறது..!!” என்று காதலோடு பார்த்தவளின் பார்வையை புரிந்து கொண்ட இந்திரஜித்திற்கு இன்றிரவு  மனைவியின் ஸ்பெஷல்  கவனிப்பு உண்டு என்பதில்  முகம் படுபயங்கரமாக பிரகாசித்தது. 
“அப்போ சரி.. பிளான் பைனல், எல்லாம் தூங்க போலாம்..” என்ற வேகமாக எழுந்த இந்திரஜித்திடம், 
“ஜித்து.. அந்த டெல்லி ஹோட்டல் வேலை எந்த ஸ்டேஜில்ல இருக்கு..? எப்போ முடியும்..?” என்று  தம்பியின் அவசரம்  புரிந்தே வேண்டுமென்றே அவன் மீதான கடுப்பில் அவனை சீண்டினான் விஷ்வஜித். 
“அது.. இன்னும் ஒரு மாசத்துல முடிஞ்சிடும்,  கடைசி கட்ட வேலை நடந்துட்டு இருக்கு..” என்று அண்ணனின் சீண்டலை புரிந்து கொள்ளாமல் வேகமாக சொன்னான். 
“நீங்க பேசுங்க, நாங்க தூங்க போறோம்..” என்று பெற்றவர்கள் பொதுவாக சொல்லிவிட்டு தூங்க சென்றிட, அதிதியும், தீக்ஷியும் பேசியபடி தோட்டத்திலே நடக்க ஆரம்பித்தனர். 
“ஓஹ்.. அந்த மினிஸ்டர் என்ன சொல்றார்..? இன்னும் உங்கிட்ட வம்பு வளத்துட்டுதான் இருக்காரா..?” என்று அடுத்தடுத்து கேள்விகள் கேட்க, “இவனை..”  என்று பல்லை கடித்து கொண்டு தீக்ஷியை பார்த்து பெருமூச்சு விட்டவாறே அவசவசரமாக பதில் சொல்லிக்கொண்டிருந்தவனிடம், அண்ணனும் சலிக்காமல் தொடர்ந்து கேள்விகள் கேட்டான். 
“டேய்.. இதெல்லாம் நாளைக்கு கேட்க மாட்டியா..? இதான்  நேரமா..?” என்று கோவத்தோடு அண்ணனை பார்த்தவனுக்கு, அவனின் முக சிரிப்பிலே அவனின்  சீண்டலை புரிந்து கொண்டவன்,  
“டேய்..  உன்னை என்ன செய்றேன் பாரு..?” என்று கத்தி கொண்டே அவன் மேல் பாய்ந்து கும்மா குத்து குத்தி எடுத்துவிட்டான். 
“விட்றா.. டேய்.. என்னை எவ்வளவு கடுப்பேத்துற.. அதான்.. டேய்.. போதும்டா.. வலிக்குது..” என்று விஷ்வஜித் சிரிப்புடன் கத்தி கொண்டிருக்க, அதிதியும், தீக்ஷியும் அவர்களிடம் ஓடி வந்தனர். 
“என்ன செய்றீங்க..? முதல்ல அண்ணா மேலிருந்து இறங்குங்க..” என்று விஷ்வஜித்தின் வயிற்றின் மேல் அமர்ந்துகொண்டிருந்த கணவனின் டிஷர்ட்டை தீக்ஷி  பிடித்து இழுக்க, 
“விடுடி.. இன்னிக்கு  இவனை கைமா போட்டுடுறேன்.. பெரிய அண்ணன், நொண்ணன்..” என்று மேலும் குத்தியவனிடம் இருந்து தன் முகம் மறைத்தவாறே சிரிப்புடன் கத்தி கொண்டிருந்த  விஷ்வஜித்தை அதிதி கண் விரித்து எதோ அதிசயத்தை பார்ப்பது போல் பார்த்தாள். 
இத்தனை வருடத்தில் ஒரு  முறை கூட  விஷ்வஜித் இப்படி சிரித்து, விளையாடி அவள் பார்த்ததே இல்லை, “இவருக்கு இப்படி கூட சிரிக்க தெரியுமா..? இந்த வயசுக்கு ரெண்டு பேரும் எப்படி அடிச்சுக்கிறாங்க..?” என்று அவர்களின் விளையாட்டில் அவர்களையே பார்த்து கொண்டிருந்தவளின் பார்வையை முகம் திருப்பும் போது விஷ்வஜித்தும் பார்த்துவிட்டான்.
“இப்போ அண்ணா மேலிருந்து எழுந்திருக்க போறீங்களா..? இல்லையா..? எப்படி குத்துறீங்க..? அவருக்கு வலிக்காதா..?”  என்று தீக்ஷி கோவத்தோடு கணவனின் தோளில் அடித்து இழுக்க, மனைவியின் கையோடு வந்தவன், எழுந்து நின்று கோவம் தீராமல்,
“இனி இப்படி  என்னை சீண்டுன நீ காலி..” என்று அண்ணனை மிரட்டினான். ஆனால் அண்ணனின் பார்வையோ அதிதியின் மேல் இருப்பது கண்டு “ஓஹ்ஹோ கதை அப்படி போகுதா..?” என்று சந்தோஷமாக விசிலடித்தான். அவனின் விசில் சத்தத்தில் அதிதியின் மீதான பார்வையை திருப்பி தம்பியை பார்த்தவனுக்கு அவனின் குறும்பு சிரிப்பு கோவத்தையே கொடுத்தது. 
“டேய்..”  என்று  டிஷர்ட்டை இழுத்து விட்டு எழுந்து நின்றவன், தன் கோவத்தை மனைவியின் மீதே காட்டினான்.  
“இப்போ எதுக்கு என்னை இப்படி பார்த்துட்டு இருக்க..? தூங்க போ..”  என்று அதிதியிடம் அதிகாரமாக அதட்டினான். 
“இதென்ன கேள்வி விஷூ..? அவ புருஷருக்காக அவ வெய்ட் செஞ்சிட்டு இருக்கா, நீ தூங்க போனாத்தானே அண்ணியும் தூங்க போக முடியும்..?” என்று புருவத்தை தூக்கி கிண்டலாக கேட்ட தம்பிகாரன்,  
“தீக்ஷி.. எனக்கு இப்போதான் ஒருவிஷயம் புரியுது, என்னடா இவன் திடீர்ன்னு நமக்கு ஹனிமூன் ஏற்பாடு எல்லாம் செஞ்சு நம்ம மேல பாசத்தை பொழியிரானேன்னு பார்த்தேன், அதுக்கு காரணம் இப்போத்தானே  தெரியுது..”

“இவன் நம்ம எல்லாரையும் பேக் செஞ்சு அனுப்பிட்டு இவன் மட்டும்  தனியா பொண்டாட்டியோட ஊட்டியிலே இருக்க பிளான் போட்டிருக்கான்னு, என்ன இருந்தாலும் நீ அண்ணன்னு காட்டிட்டடா, நானும் உன்கிட்ட இருந்து இது போல சில பல .. அமுக்கு டுமுக்கு டமால் டுமீல்  வேலை எல்லாம் கத்துக்கணும் போலே..” என்று அண்ணனை தொடர்ந்து சீண்டினான்  தம்பி. 
“டேய்.. உன்னை.. ஏண்டா இப்படி..? ராஸ்கல்..” என்று தம்பியின் பேச்சில் பொங்கிய அண்ணனின்  பார்வை தீக்ஷியை சங்கடத்துடனும், மனைவியை கோவத்தோடும்  பார்த்தது. 
“இவளை யாரு இப்படி என்னை காணாததை கண்டது போல  பார்க்க சொன்னா..?  அதை வச்சே என்னை சாவடிக்கிறான் பாரு இவன்..” என்று தம்பியை மனதில் தாளித்தவன், மனைவியை எரித்து பார்த்தான். 
“அண்ணியை ஏண்டா இப்படி முறைக்கிற..? அவங்க உனக்காக தானே வெய்ட் செய்றாங்க.. போ.. போ அண்ணியை கூட்டிட்டு தூங்க போ..” என்று “உன்னை விட்டேனா பார்..” என்று கங்கணம் கட்டி கொண்டு பேசும் இந்திரஜித்தின்  சீண்டலிலும், விஷூவின் நெருப்பு பார்வையிலும் 
“இல்லை.. இல்லை.. அப்படி எல்லாம் இல்லை.. நான் அவங்களுக்காக வெய்ட் செய்யல.. தீக்ஷிக்கிட்ட பேசிட்டிருந்தேன், இதோ தூங்க போறேன்..” என்று அதிதி ஓட்டமாக உள்ளே ஓடிட, இந்திரஜித் சத்தமாக சிரிக்க, தீக்ஷி முகம் திருப்பி சிரித்து கொண்டிருந்தாள். 
“உங்களை..” என்று இருவரின் சிரிப்பில் ஏதும் பேச முடியாமல் திணறிய விஷ்வஜித், முகம் திருப்பி கொண்டு தோட்டத்தின் மறுபக்கம் சென்றுவிட்டான்.
“ஹப்பா.. என்ன வாய் உங்களுக்கு..? இப்படி பேசுறீங்க..?” என்று தீக்ஷி கணவனை செல்லமாக சலித்தாள். 
“எப்படி பேசிட்டேனாம்..?”என்று மனைவியின்  இடையோடு அணைத்தவாறே ரூமிற்கு சென்ற கணவன்,  
“நீ இப்படி  சலிச்சுக்கிற அளவு  அப்படி என்ன பேசிட்டேன்..? இதெல்லாம் ஒரு பேச்சா..? இன்னும்  நானும் நீயும் பேச வேண்டிய பேச்சு எவ்ளோ இருக்கு, அதை பார்ப்போமா..?” என்றவனின் கைகள் பேசிய பேச்சில்  மயங்கிய தீக்ஷியும் பதிலுக்கு பேச ஆரம்பித்தாள்.
“இந்த வாரம் பக்கத்து எஸ்டேட் பொண்ணுக்கு என்கேஜ்மென்ட் இருக்கு, அதுக்கு போய்ட்டு வந்துருங்க, கோவில்ல பூஜையும்  கொடுத்திருக்கு, அதை பார்த்துக்கோங்க, அப்பறம் மன்றத்துல இருந்து வருவாங்க, அவங்களுக்கு தேவையானது பார்த்து செஞ்சுடு, ஏதாவது சந்தேகம் இருந்தா எனக்கு போன் செஞ்சு கேளு..” என்று அதிதிக்கு வரிசையாக வேலைகளை சொல்லி கொண்டிருந்த சுபாவின்  பார்வை என்னமோ அவள் மேல் இல்லை தான். 
ஆனால் அவர் இந்தளவு தன்னிடம் பேசுவதே போதும் என்றிருந்த அதிதிக்கு அவரின் பாராமுகம் வருத்தத்தை கொடுக்கவில்லை, மாறாக  அவர் சொல்வதை கவனத்துடன் கேட்டு கொண்டிருந்தவளை தீக்ஷி கவலையுடன் பார்த்தாள். 
“என்ன இது..? இவ ஏன் இப்படி எதையும் எதிர்பாரக்காம, இதுவே ரொம்ப பெரிய விஷயம் மாதிரி இருக்கா, குடும்ப வாழ்க்கைக்கு இது சரியாக வராதே, எதிர்பார்ப்பு, கோவம், உரிமை போன்ற உணர்வுகள் கண்டிப்பாக வேண்டுமே..”
“இப்போ மட்டுமில்ல கல்யாணம் முடிவான நாளிலிருந்தே அவள் அவளாகவே இல்லை, இப்படித்தான் யாரோபோல் இருக்கிறாள், இதுக்கு என்னதான் செய்வது..?” என்று அவளையே பார்த்து கொண்டிருந்தவளின் பார்வையை கவனித்த இந்திரஜித், 
“தீக்ஷி.. இப்போ எதுக்கு நீ அதிதியை நினைச்சு கவலைப்படுற..? நீ அடுத்த முறை வரும் போது பாரு, அவ இப்படி இருக்க மாட்டா..” என்று உறுதியாக சொன்னான். 
“உண்மையாவா..?” என்ற எதிர்பார்ப்போடு தன்னை பார்த்த மனைவியின் கையை பற்றிகொண்டவன், 
“விஷூ.. என்னை விட ரொம்ப நல்லவன் தீக்ஷி, அவன் கண்டிப்பா அதிதியை சந்தோஷமா வச்சுக்குவான், என்ன அதுக்கு கொஞ்ச நாள் ஆகும், அவனுக்கு தர்ஷினியை அண்ணியை நினைச்சு குற்ற உணர்ச்சி, ஒரு தடுமாற்றம், ஏதேதோ நினைச்சு அவனை அவனே வருத்திக்கிறான்..” என்று அண்ணனை கணித்து சொன்னவன், 
“நீ வேணும்னா பாரேன், அதிதியோட கேரக்டர் விஷூவை கண்டிப்பா பழையபடி மாத்தும், ஒருத்தரோட குறை இன்னொருத்தர்கிட்ட அடிபட்டு காணாம போயிரும், ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா வாழ்வாங்க..” என்று நம்பிக்கையுடன் சொல்ல, தீக்ஷிக்கும் அந்த நம்பிக்கை இருக்க கணவனுடன் கிளம்பினாள். 
“மனோ.. பார்த்துக்கோ, ஏதாவது தேவை இருந்தா போன் செய், தருண்  பத்திரம், சேட்டை செய்யாத..” என்று இளையவர்களுக்கு  விடை கொடுத்த  விஷ்வஜித், தம்பியை மகிழ்ச்சியுடன் அணைத்து கொண்டான். 
“பாய்டா.. சீக்கிரமே வரணும்ன்னு இல்லை, இங்க எல்லாம் நான் பார்த்துகிறேன், தீக்ஷி உனக்கும் தான், AARஐ பாலாவை வச்சி நான் ஹாண்டில் செஞ்சுக்கிறேன், சரியா..?” என்ற அண்ணனை தானும் அணைத்து கொண்ட  தம்பி, 
“விஷூ.. எல்லாத்துக்கும் ஆள்  போட்டிருக்கேன், நீ  ஜஸ்ட் மேற்பார்வை மட்டும் பார்த்தா போதும், இங்க எஸ்டேட் வேலை தான் நிறைய  சேர்ந்திருச்சு, நீ என்ன செய்றன்னா அதிதியை உன்னோட ஹெல்ப்க்கு வச்சுக்கோ,அவளுக்கும் போர் அடிக்காது..”
“ என்ன அதிதி..? அண்ணாக்கு  ஹெல்ப் செய்வ இல்லை..?” என்று அதிதியை  பார்த்து கேட்க, சரி எனும் விதமாக தலையசைத்தவளை கட்டி கொண்ட தீக்ஷி அவளுடன் நடந்தவாறே, 
“அதி.. அண்ணாவை விட்டு ரொம்ப ஒதுங்கி இருக்காத, அவருக்கு தேவையானதை எல்லாம் பார்த்து செய், இந்த ஒரு வாரத்துல நீயே பார்த்தே இல்லை, சாப்பிட கூட நாம சொல்லணும், இல்லை சாப்பிடாமலே  இருந்துகிறார்..” என்ற தீக்ஷி, அவளின் கை பிடித்து, 
“அதி.. இனி இதுதான் உங்க ரெண்டு பேருக்குமே வாழ்க்கை, அண்ணாவை பத்தி உனக்கு எல்லாம் நல்லாவே தெரியும், ஹஸ்பண்ட்.. வைப் ரிலேஷன்ஷிப் அப்படிங்கிறதை விட நீங்க ரெண்டு பேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா பிரண்டா இருங்க..”, 
“காலத்துக்கும் இப்படியே யாரோ போல இருக்க முடியாது, நமக்கே நமக்குன்னு ஒரு  உறவு கண்டிப்பா எல்லோருக்கும் தேவை, நம்ம கஷ்டத்தை சொல்ல, தோள் சாய, மனசு விட்டு பேச.. இப்படி எல்லாத்துக்கும், அப்படி ஒரு உறவு உனக்கும் அண்ணாக்கும் இடையே மலரணும், பார்த்துக்கோ அதி..” என்றவளின் பேச்சு அதிதியின் முகத்தில் யோசனையை கொடுக்க, தீக்ஷிக்கு திருப்தி. 
“சரிண்ணா.. நாங்க வரோம், அதிதியை பார்த்துக்கோங்க..” என்று விஷ்வஜித்திடம் விடை பெற்றவள், அவனின் கையை பற்றி கொண்டு, 
“அண்ணா.. உங்ககிட்ட ஒன்னு சொல்லணும், நீங்க அக்காவை  நினைச்சு வருத்தப்படுறீங்கன்னு தெரியும், ஆனா அந்த வருத்தம் தேவை இல்லாதது, அவங்க விதி அன்னிக்கு முடியலைன்னா நீங்க அக்காவை இன்னுமே  நல்லாத்தான் வச்சிருந்திருப்பீங்க.. அவங்களும் இருந்தவரை சந்தோஷமாதான் இருந்தாங்க..”,  
“அதனால நீங்க இல்லாம போன அக்காவை நினைச்சு வருத்தப்படுறதை  விட்டுட்டு  இப்போ இருக்கிற உங்க பொண்டாட்டியை சந்தோஷமா வச்சுக்கோங்க..” என்று முடித்துவிட, “பார்த்துக்கோ விஷூ..” தம்பியும் அண்ணனின் தோளோடு அணைத்து கிளம்பினான்.
“பை.. பை.. டேக் கேர்..” எல்லோரும் கிளம்பிவிட தனியாக நின்றிருந்த விஷ்வஜித்தும், அதிதியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளவில்லை  என்றாலும் எண்ணங்கள் மற்றவர்களை சுற்றித்தான் இருந்தது.

Advertisement