Advertisement

காதல் ஆலாபனை  29 
“இப்படி எல்லாம் கூட செய்வாங்களா..?”  என்று தீக்ஷி அதிர்ந்து  சிலையாக நிற்க, அவர்களின் பின்னால் கேட்ட கேவல் சத்தத்தில் மூவரும் பதட்டத்துடன் திரும்பி பார்த்தனர். அங்கு அதிதி வாயை மூடி கொண்டு கண்ணில் நீர் வழிய அடக்க முடியாமல் கேவி கொண்டிருந்தாள். 
அதிலே  அவள் எல்லாவற்றையும் கேட்டுவிட்டாள் என்று புரிந்த மூவருக்கும் என்ன செய்ய என்று தெரியாமல் திகைக்கும் நிலை. முதலில் தெளிந்த தீக்ஷி அதிதியின் அருகில் சென்று அவளின் கை பிடிக்க, அவளோ தீக்ஷியை அணைத்து கொண்டு அழுக ஆரம்பித்துவிட்டாள். 
“அதி.. ப்ளீஸ் கண்ட்ரோல்.. அழுகாத..”, என்று தீக்ஷி அவளின் முதுகு தடவி ஆறுதல் சொல்லியபடி கணவனை முறைக்க, அவனோ அவனின் அண்ணனையே புரியா பாவனையில் பார்த்து கொண்டிருந்தான். அவனின் பார்வையை தொடர்ந்து தானும் விஷ்வஜித்தை பார்த்தவள், அவன் அதிதியை வருத்தத்துடன் பார்ப்பது புரிந்தது. 
“தீக்ஷி.. என்ன இது..? அதியை விடு, இது அவங்க புருஷன் பொண்டாட்டி விஷயம்,  அதியை பார்த்துக்க அவள் புருஷன் இருக்கான், நாம ஏன் அவங்க விஷயத்துல தலையிடணும், வா.. போலாம்..” என்று அவர்களின் அருகில் சென்று மனைவியின்  கை பிடித்து இழுத்தான். 
அதில் அதி தீக்ஷியை விட்டு பிரிந்து தனியாக பாவமாக முழித்து அழுதாள் என்றால் விஷ்வஜித் தம்பியை கொன்று விடும் வெறியோடு முறைத்து கொண்டிருந்தான். 
“இங்க என்னடா பார்வை..? கல்யாணம் ஆன முதல் நாளே இப்படி பொண்டாட்டியை  அழ வைக்கிறியே நீ எல்லாம் மனுஷனா..? அதுவும் உன்னை ரெண்டாம் தாரமா அதி கல்யாணம் செஞ்சுக்கிட்டதே பெரிய விஷயம், நீ என்னடான்னா அந்த நினைப்பு  கொஞ்சம் கூட இல்லாமல் அவளை அழவைக்கிற”, 
“அண்ணியை அழவச்ச நீயே ஒழுங்கு மரியாதையா அவங்களை சமாதானம் செஞ்சு உள்ள கூட்டிட்டு வர,  இனி அதிக்கு நான் தான் கார்டியன். அவங்களை கண்ணுல இருந்து தண்ணியே வரக்கூடாது, அப்படி ஏதாவது நடந்துச்சு மகனே கழுத்துல ஒரே அழுத்து தான், ஒரு வாரத்துக்கு எந்திரிக்க மாட்ட, பார்த்துக்கோ..”  என்று  மிகவும் சீரியஸாக மிரட்டி மனைவியை இழுத்து கொண்டு சென்றவனை மூவரும் பிரம்மை பிடித்தே பார்த்தனர். 
அதிலும் தீக்ஷி சிறிது தூரம் சென்று கணவனின் கையில் இருந்து தன் கையை விடுவித்து கொண்டவள், “நீங்க எல்லாம் என்ன டிசைன்..? செய்றதை எல்லாம்  செஞ்சுட்டு எப்படி உங்களால இப்படி நடந்துக்க முடியுது..? ஓஹ்.. காட்..” என்று கணவனின் அட்டகாசத்தில் நொந்திருந்தவளை கண்கள் இடுக்கி பார்த்த இந்திரஜித், 
“இப்போ நான் என்ன செஞ்சுட்டேன்னு நீ  இவ்வளவு  நொந்துக்கிற..?” என்று சாதாரணமாக கேட்டான். 
“என்ன..? என்ன செஞ்சிங்களா..? என்ன செய்யல நீங்க..? யாராவது இப்படி சொந்த அண்ணனையே  ஏமாத்தி வலுக்கட்டாயமா கல்யாணம் செஞ்சு வைப்பாங்களா..?”
“நான் செஞ்சு வைப்பேன், எனக்கு என் அண்ணனோட லைப் ரொம்ப முக்கியம்..”, 
“அப்போ அதி..? அவ சந்தோஷம்..? விஷூ அண்ணா அவளை ஏத்துக்கலன்னா அவளோட நிலைமை..?” 
“அதெப்படி விஷூ அதியை ஏத்துக்கமா போயிடுவான்..? அதெல்லாம் ஏத்துப்பான், அவங்க லைப் கண்டிப்பா நல்லாதான் இருக்கும்,  எப்போதும் நெகட்டிவ்வா நினைக்காத.. திங் பாசிட்டிவ்..”
“இந்த வியக்கான பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை, நீங்க பாசிட்டிவ்வா திங் செய்ய அவங்க லைப் தான் கிடைச்சுதா..?”
“தீக்ஷி.. முதல்ல ரிலாக்ஸாகு.. ஏன் இவ்வளவு டென்க்ஷன் எடுத்துகிற..?” என்று மனைவியின் மேல் மூச்சு கீழ் மூச்சு கோவத்தில் அவளை தோளோடு அணைத்து கொண்டவன், 
“உனக்கு அவங்க லைப் மேல இருக்கிற அக்கறை எனக்கிருக்காதா என்ன..? எனக்கு விஷூ எந்தளவு முக்கியமோ அதே அளவு தருண், அதியும் முக்கியம், அவங்க மூணு பேரும் ஒரு குடும்பமா நல்லா வாழ்வாங்க, என்னை நம்பு..” என்று பொறுமையாகவே சொன்னவன், மனைவியின் முகம் தெளியாமல் இருக்க, 
“நான் சொல்றதை நம்பல இல்லை, வா என்னோட..” என்று மனைவியின் கை பிடித்து அதி, விஷூ இருக்குமிடம் கூட்டி சென்று அவர்களின் பார்வைக்கு மறைந்து நின்றான். அங்கு அதி கண்ணில் வழியும் நீரை புடவை தலைப்பால் துடைத்து கொண்டிருக்க, விஷூ அவளை பார்ப்பதும், தலையை கோதி கொண்டு தோட்டத்தை பார்ப்பதுமாக தடுமாறி கொண்டிருந்தான். 
“அங்க பார்த்தியா..?  அதி  விஷூவை விட்டு போகமா அங்கேதான் நின்னு அழுதுட்டு இருக்கா,  விஷூவும் இவ்வளவு கோவத்துல கூட அழற அதியை தனியா விட்டு போகாம அங்கேயே நின்னு தடுமாறிட்டு இருக்கான், அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல எந்த வெறுப்பும், ஒவ்வாத தன்மையும் இல்லை”, 
“அதிக்கு தருண் வேணும்.. ஆனா விஷூ வேண்டாம்ன்னு எல்லாம் இல்லை. ஒருவேளை அவ இங்கே  தர்ஷினி அண்ணியோட இருந்திருந்தாலாவது விஷூ அண்ணியோட வாழ்ந்த வாழ்க்கை அவளுக்கு பெரிய உறுத்தலா, தடங்களா இருந்திருக்கும்”, 
“அந்த சங்கடம் தான் ரெண்டு பேருக்குமே இல்லையே..? சோ.. பார்க்கலாம், லெட்ஸ் ஹோப் பாசிட்டிவ்..”  என்று முடித்தவன், மனைவியை அழைத்து கொண்டு சென்றுவிட, விஷூ அழும் அதிதியை என்ன சொல்லி தேற்றுவது என்று புரியாமல் பார்த்து கொண்டிருந்தான். 
அதிதிக்கு முகமே நிமிரத்த முடியவில்லை, தருணுக்காக தான் தங்கள் திருமணம் நடந்தது என்றே நினைத்திருந்தவளுக்கு அதுவும் இல்லை, வலுக்கட்டாயமாக, மிரட்டி, விஷூவை ஏமாற்றிதான் தன் கழுத்தில் தாலி கட்ட வைத்திருக்கிறார்கள்.  என்ற உண்மை தெரிய பொங்கும் கண்ணீர் நின்றபாடில்லை. 
தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தவளை பார்த்து, “ஷ்ஷ்..” என்று கண்ணை மூடி திறந்து தலையை கோதி கொண்ட விஷ்வஜித், “அழுகையை நிறுத்து, யாராவது வந்தா என்ன நினைப்பாங்க..?” என்று மனைவியின் முகம் பார்க்காமல் வேறெங்கோ பார்த்து சொன்னவனின் சத்தம் அதிதியை சென்றடைந்ததாகவே தெரியவில்லை, 
அவள்தான் தனக்குள்ளே மருகி கொண்டிருக்கிறாளே..!!   “உன்னைத்தான்… அழுகையை நிப்பாட்டு, எவ்வளவு நேரம் தான் அழுவ..?” என்று சிறிது எரிச்சலாக சொன்னவன், அவள் நிறுத்தாமல் அழுது கொண்டே இருக்கவும், 
“ஏய்.. உன்கிட்ட தானே சொல்லிட்டிருக்கேன், அழுகையை நிறுத்துன்னு.. காது கேட்கல..” என்று கடுப்பில் கத்தியே விட, அதிதியின் உடல் தூக்கி போட்டதோடு, அவனையே பயத்துடன் பார்த்தாள். 
“இப்போ எதுக்கு இப்படி என்னை பார்க்கிற..? ஆஹ்ன்..” என்று அவளின் பயபார்வையில் எகிறியவனிடம் என்ன சொல்ல என்றே தெரியாமல் முழித்தவளின் கண்ணீர் முற்றிலும் நின்றுவிட்டது. அதை உணர்ந்து கொண்ட விஷ்வஜித்,  
“நல்லா கண்ணை துடை.. இனி இப்படி ஊஊஊன்னு அழுத அந்த கண்ணையே நோண்டிருவேன் பார்த்துக்கோ..” என்று சிறுபிள்ளையை மிரட்டுவது போல் முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டு மிரட்ட, அதிதி மலங்க மலங்க விழித்தபடி சரி எனும் விதமாக தலையாட்டினாள். 
“ம்ம்.. குட், நல்லா முகத்தை கழுவிகிட்டு உள்ள போ பார்க்கலாம்..” என்று முறைப்பை குறைக்காமல் சொல்ல, தலையாட்டியவள், அவன் சொல்லியது போல் வெளியே  இருக்கும் டேப்பில் முகம் கழுவிகொண்டு உள்ளே சென்றுவிட, விஷ்வஜித்திற்கு  அப்பாடா என்றிருந்தது. 
“மனோ.. உனக்கு இடியாப்பம் பிடிக்குமில்லை, இந்தா  இன்னும் ஒன்னு வச்சுக்கோ.. இட்லிக்கு காரச்சட்னி நல்லா இருக்கு பாரு, சாப்பிடு..”  என்று எல்லோரும் அமர்ந்து இரவு உணவு சாப்பிடும் போது சுபா மனோவின் தட்டை பார்த்து பார்த்து  பரிமாற, தீக்ஷி, ஆனந்தனை தவிர மற்ற எல்லோருக்கும் ஆச்சரியம்!! 
“என்னடா நடக்குது இங்க..?”  என்று சுபாவையும், மனோவையும் பார்க்க, அவர்கள்  இருவரும் எதோ பேசி சிரித்தபடி சாப்பிட்டு கொண்டிருந்தனர். 
“ப்பா.. இது எப்போலிருந்து..?” என்று இந்திரஜித் தந்தையிடம் கிசுகிசுக்க, 
“இந்த ஒரு வாரமாதான் மகனே.. ரெண்டு பேருக்குமே ரொம்ப பாசம் பொங்கி ஆறா ஓடிட்டு இருக்குடா, சில சமயம் உங்க அம்மா என்னை கூட கண்டுக்கிறதில்லை, இந்த மனோ பையனை மட்டும்  விழுந்து விழுந்து கவனிக்கிறா..”

“இதோ இப்போ கூட பாரு எனக்கும் தான் இடியாப்பம் பிடிக்கும், ஆனா உங்கம்மா  அவனுக்கு மட்டும் வேண்டி வேண்டி வச்சிட்டு இருக்கா, எல்லாம் என் நேரம்..? இந்த வயசுல எனக்கு வாய்சிருக்கிற வில்லனை பார்த்தியாடா மகனே..!!” என்று ஆனந்தன் மனோவை பார்த்து பொறாமையோடு பெருமூச்சு விட, இந்திரஜித் சத்தமாக சிரித்துவிட்டான். 
அவனின் சிரிப்பில் எல்லோரும் அவனையே கேள்வியாக பார்க்க, “சாரி.. நீங்க சாப்பிடுங்க..” என்றுவிட்டவன், “ஏன்பா..? பேசாம அம்மாவை கூப்பிட்டு கேட்டுடுட்டா..?” என்றான்  வீரமாக. 
“வேண்டாம்டா மகனே!   அப்பறம் கிடைக்கிற இந்த ரெண்டு இடியாப்பம் கூட கிடைக்காம போயிடும்..” என்று பதறி பி[போய் அவசரமாக மறுத்தவரிடம், 

Advertisement