Advertisement

“உங்களை.. கொஞ்ச நேரத்துல என்னை டென்க்ஷன் செஞ்சுட்டீங்க..?” என்று சிவந்துவிட்ட முகத்துடன் கோபத்துடன் பொரிந்தவளை ரசனையாக பார்த்தவன், 
“செமையா இருக்கடி.. அப்படியே உன்னை எங்கேயாவது அள்ளிக்கிட்டு போயிடலாம்ன்னு இருக்கு..”  என்று கையை தூக்கி கொண்டு வர, தீக்ஷி அரண்டே போனாள். 
“ஜித்து.. ஜித்து.. கதவை திற..”, என்று சுப கோவத்தோடு கதவை தட்ட, “சரி விடு தாலி கட்டி முடிச்ச கையோடு கிளம்பிடலாம், இன்னும் கொஞ்ச நேரம் தானே.. அப்பறம் யாரும் நம்மை எதுவும் கேட்க முடியாது..” என்று அவளின் கன்னத்தை தட்டி சொன்னவன், அதில் முத்தம் வைத்துவிட்டே கதவை திறந்தான். 
“உன்னை..” என்று சுபா மகனின்  காதை திருகியபடி  இழுத்து கொண்டு செல்ல, அதுவரை இருந்த துயரம் மறைந்து வெட்கத்துடன் நின்றிருந்த  தீக்ஷியை  திரும்பி பார்த்து  காதலாக  கண்ணடித்தே சென்றான். 
முகூர்த்த நேரம் நெருங்கவும், மணமகன்கள் மனையில் அமரவைக்கபட்டு சடங்குகள் செய்ய, சில நிமிடங்களில் மணப்பெண்கள் அழைத்து வரப்பட்டு மணமகன்களின் பக்கத்தில் அமரவைக்கபட்டனர். 
இதில் அதிதியும், விஷ்வஜித்தும் எவ்வளவு தள்ளி அமர முடியுமோ அவ்வளவு தள்ளி அமர்ந்திருக்க, இந்திரஜித்தோ தீக்ஷியுடன் எவ்வளவு நெருக்கமாக அமர முடியுமோ அவ்வளவு நெருக்கமாக அமர்ந்திருந்தான். 
சடங்குகள் முடிக்கபட்டு மணமகன்கள் கையில் தாலி  கொடுக்கபட, இந்திரஜித் திரும்பி தன் அண்ணனை பார்த்தான். அவனும் தாலியை பட்டும் படாமலும் பிடித்து கொண்டு தம்பியை கண்ணாலே எரித்து கொண்டிருந்தான். 
“விஷூ கட்டு..” என்று ஆனந்தன் சொல்ல, கண்களை இறுக்கமாக மூடி கொண்டே அதிதியின் கழுத்தில் மிக வேகமாக   கட்டிவிட்டவன், கண் திறந்து தம்பியை பார்க்க, அவன் சிரிப்புடன் அண்ணனை பார்த்து கண்ணடித்தான். அதிலே எல்லாம் புரிந்துவிட விஷ்வஜித் அதிர்ச்சியாகி தன் தந்தையை பார்க்க, அவர் அவசரமாக சின்ன மகனின் அருகில் நின்று கொண்டார். 
“தம்பி.. நீங்களும் கட்டுங்க..”  என்று ஐயர் இந்திரஜித்திடம் சொல்ல, 
“கட்டுறேன்.. கட்டுறேன்.. அதுக்குத்தானே இத்தனை வருஷமா காத்திட்டிருக்கேன்.. என்ன தீக்ஷி..?” என்று சிரிப்புடன் சீண்டியவன், அவள் நிமிர்ந்து பார்க்கவும், “என்ன கட்டிடட்டா..?” என்று வேறு கேட்டு வைத்தான். 
“டேய்.. இப்போவும் ரவுசு பண்ணாதடா.. தாலியை கட்டுடுடா முதல்ல..” என்று ஆனந்தன் தலையில் அடித்து கொண்டு சொன்னார். 
“தீக்ஷி..!!”  என்றவனின் குரலில் தெரிந்த இத்தனை வருட ஏக்கத்தை  புரிந்து கொண்டவளுக்கு அவனின்  மிதமிஞ்சிய காதல் தெரிய   “சரி..”  எனும் விதமாக தலையசைத்தாள். 
அவளின் சம்மதத்தில், பொங்கும் காதலுடன் தன்னுடைய நீண்ட வருட காதலியின்  கண்களை பார்த்து கொண்டே மிகவும் நிதானமாக மூன்று முடிச்சு போட்டு தன்  மனைவியாக கரம் பிடித்தான்.  
கண்ணே கனியே உன்னை கைவிட மாட்டேன்..!! 
சத்தியம்.. சத்தியம்.. இது சாத்தியமே..!! 
மாலை சூடிய காலை கதிரின் மேல..!! 
சத்தியம்.. சத்தியம்.. இது சாத்தியமே..!! 
ஒரு குழந்தை போலே..!!  ஒரு வைரம் போலே..!! 
தூய்மையான என் சத்தியம் புனிதமானது..!!
அடுத்து அவளின் நெற்றியில்  குங்குமம் வைத்த போதும், விரல் பிடித்து வலம் வந்த போதும், காலில் மெட்டி போடும் போதும் அவனின் ஸ்பரிசத்தில் தெரிந்த காதலில், உரிமையில் சிலிர்த்த தீக்ஷியும் கணவனுக்கு குறையாத காதலை கொண்டிருந்தாள்.
காதல் கணவா உன்னை கைவிட மாட்டேன்..!! 
சத்தியம்.. சத்தியம்.. இது சத்தியமே..!!
தாய் வழி வந்த தர்மத்தின் மேலே..!!
சத்தியம்.. சத்தியம்.. இது சத்தியமே..!!
ஒரு குழந்தை போலே..!!  ஒரு வைரம் போலே..!! 
தூய்மையான என் சத்தியம் புனிதமானது..!!
இவர்களின் இருவரிடமும் தெரிந்த  காதலில் உள்ளம் குளிர்ந்த மனோ, கண்ணில் நீருடன் அக்காவையும், மாமாவையும் பாசத்துடன் அணைத்து கொண்டான். 
எல்லா சடங்குகளும்  முடிந்து எல்லோருக்குமான காலை உணவை தீக்ஷியின் வீட்டிலே ஏற்பாடு செய்திருந்தவர்கள், கணேஷ் குடும்பத்தாரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு மணமக்களை  அழைத்து கொண்டு ஊட்டி  கிளம்பிவிட்டனர்.
ஊட்டியில் அவர்களின் பூர்வீக வீட்டில் மணமக்களை ஆரத்தி எடுத்து உள்ளே சென்ற மணப்பெண்கள் விளக்கேற்றி வழிபட, விஷ்வஜித்திற்கு கசந்தது. தர்ஷினிக்கு மறுக்கப்பட்ட இந்த உரிமை அவளின் தங்கைக்கு கிடைத்ததை வெறுமையான கண்களுடன் பார்த்தான். 
பாரதி வராமல் கஸ்தூரி, சுதா மட்டுமே மணமக்கள் உடன் வந்திருந்தனர். தான்  வருவது சுபாக்கு பிடிக்காது என்று நன்றாக புரிந்ததால் அவரே ஒதுங்கி கொண்டு இவர்களை உடன் அனுப்பி வைத்திருந்தார். அவரும் உடன் இல்லாமல், சுபாவும் அவளை ஒதுக்குவதில்  மிகவும் தனிமையாக உணர்ந்த அதிதியின் கையை தருண் பற்றி கொள்ள, அவளின் கண்கள் திரும்பவும் கலங்கியது. 
“ஷ்ஷ்.. என்ன இது அதி..?” என்று மனோ, தீக்ஷி இருவரும் அவளை கவனித்து அதட்ட, முயன்று தன்னை சமாளித்து கொண்டவளை பார்த்த விஷ்வஜித்திற்கு பாவமாகதான் இருந்தது. 
“இவளுக்கு ஏன் இந்த வேதனை..? இதெல்லாம் வேண்டாம் என்று தானே நான் மறுத்தேன். தருண் என்ற ஒரு  உறவு வேண்டும் என்பதற்காக காலம் முழுவதும் கண்ணீர் வடிக்க போகிறாள்..” என்று அவளை இரக்கத்துடன் பார்த்தான். எனோ அவளை வெறுக்க தோன்றவில்லை, தர்ஷினியின் தங்கை என்ற காரணமாக கூட இருக்கலாம். 
“இந்த ரூம்ல நீங்க ரெண்டு பேரும் ரெஸ்ட் எடுங்க..” என்று சுபா மருமகள்களை  மேலிருக்கும் அறையில் விட்டு பட்டும் படாமலும் சொல்லிவிட்டு செல்ல, தீக்ஷியும், அதிதியும் ஒருவரை ஒருவர் சிரிப்புடன் பார்த்து கொண்டனர். 
“மாமியார் பாவம் இல்லை அதி, ரெண்டு மருமகள்களும் அவங்களுக்கு பிடிக்காத மருமகள்கள்..”   என்று தீக்ஷி உணர்ந்து சொல்ல, 
“ம்ம்.. அவங்க அன்னிக்கு பேசுனதை சரிதான் இல்லை..” என்றாள் அதிதி. 
“ஒரு அம்மாவா சரிதான்.. ஆனா..” என்று இழுத்தவளுக்கு அவர் அவளை பேசியதில் நியாயம் இல்லை என்றே தோன்றியது. 
“என்ன ஆச்சு தீக்ஷி..?” என்று அதிதி கேட்க, 
“ம்ப்ச்.. ஒன்னுமில்லை அதிதி.. நீ முதல்ல பிரஷ் செஞ்சுக்கோ, அப்பறம் நான் போறேன்..” என்று  பால்கனியில் நின்று கொண்டவளுக்கு கீழே தோட்டத்தில் நின்று பேசி கொண்டிருந்த இந்திரஜித், மனோ தெரிய  அவர்களையே  பார்த்து கொண்டிருந்தாள். 
தன் வாழ்வின் மிக முக்கியமான ஆண்கள்.. இவர்கள் இருவரும் இன்று  தன் வாழ்வில் இல்லை என்றால் தான் என்னவாகியிருப்போம் என்ற உண்மை புரிய அவர்களையே பாசத்துடனும், காதலுடனும் பார்த்து கொண்டிருந்தாள். அப்போது அவர்களிடன் வந்த விஷ்வஜித் மனோவிடம் எதோ சொல்ல, அவன் உள்ளே செல்லவும், விஷ்வஜித் நொடியில் தம்பியின் கழுத்தை பிடித்து மேலே தூக்கி விட்டான்.
அவர்களையே பார்த்து கொண்டிருந்த தீக்ஷி விஷ்வஜித்தின் செயலில் பதறி போனவள், வேகமாக இறங்கி தோட்டத்திற்கு ஓடினாள். அங்கு விஷ்வஜித் தம்பியை தூக்கி மரத்தில் சாய்த்திருந்தவன், அவனின் வயிற்றிலே குத்தியதோடு, 
“தம்பியாடா நீ..? துரோகி, ஏமாத்துக்காரன், பிராடு, போர் ட்வென்டி.. உன்னை மாதிரி ஒரு தம்பி கூட  இருந்தா போதும்டா அவன் ஒழிஞ்சான்..”  என்று இடைவிடாமல் திட்டி கொண்டே இருக்க, 
“இப்போ நீ என்னவாகிட்டியாம்..?  ஜம்ன்னு தான் இருக்க..!!”  என்று தம்பி அந்நிலையிலும் நக்கல் பேச காண்டான அண்ணன், 
“ஓஹ்.. உனக்கு அதுவேற குறையா இருக்கா..?” என்றவனின்  கோவம்  அவனின் கை வழியே தம்பியின் வயிற்றுக்குள் இறங்கியது, “ஹாஹா..”  என்று அவனின் வலிமையான  குத்தில் கத்திய தம்பி, அவனின் காலை மரத்தில் ஊன்றி அண்ணனை தள்ளிவிட்டவன், 
“டேய்.. என்னடா செய்ற..? இன்னிக்குதான் அய்யாக்கு கல்யாணம் ஆகியிருக்கு, நான் புது மாப்பிள்ளை, உன்னை மாதிரியா..?” என்று அண்ணனை வம்புக்கு இழுத்தான். 
“ராஸ்கல்.. நீ அடங்கவே மாட்டியா..? நானாடா   ரெண்டாம் கல்யாணம் செய்றேன்னு சொன்னேன், நீதானடா நான் ஓகே சொன்னேன்னு எல்லோர்கிட்டேயும் பொய் சொல்லி   என்னையும் மிரட்டி, அப்பாக்கு அட்டேக்ன்னு ஏமாத்தி கல்யாணம் செய்ய வச்சிருக்க..” என்று விஷ்வஜித்  ஆத்திரத்தோடு கத்தி கொண்டிருக்க, கேட்டிருந்த தீக்ஷிக்கு தலையே சுற்றியது. 
“என்னண்ணா சொல்றீங்க..?”  என்று தீக்ஷி அதிர்ச்சியில் சத்தமாக கேட்க, அண்ணனும், தம்பியும் பதட்டத்துடன் அவளை திரும்பி பார்த்தனர். அதிலும் இந்திரஜித்திற்கு இன்னிக்கு “பர்ஸ்ட் நைட் கோவிந்தா..” என்ற சத்தம் காதோரம் உச்சகட்ட சத்தத்தில் ஒலித்தது.
“அண்ணா.. எனக்கு என்ன நடந்ததுன்னு உண்மையை சொல்லுங்க..” என்ற தீக்ஷி இந்திரஜித்தை முறைத்து பார்த்து கேட்டாள். 
“ஒன்னுமில்லம்மா.. இது நாங்க எதோ..?”  என்று விஷ்வஜித் தங்கைக்காக பார்க்க, அவர்களின் பாசபிணைப்பில் உதட்டை சுழித்த இந்திரஜித்,  
“என்ன பெருசா நடந்துடுச்சு..? அவன் இன்னும் கொஞ்ச மாசம் கழிச்சு அதிதியை கல்யாணம் செஞ்சுக்கிறேன், நீங்க முதல்ல கல்யாணம் செஞ்சுக்கோங்கன்னு சொன்னான். எனக்கும், அப்பாக்கும்  இவன் மேல் சுத்தமா நம்பிக்கை இல்லை..”, 
“அதான் முக்கியமான வேலையை கையில் கொடுத்து டெல்லிக்கு அனுப்பிட்டோம், அவன் ஓகே சொல்லிட்டான்னு உங்ககிட்ட சொல்லி கல்யாண ஏற்பாடும் செஞ்சுட்டோம், இவன் இன்னிக்கு காலையில தான் வர்ற மாதிரி பார்த்துக்கிட்டோம், எங்க  பிளான் போல வந்தவன், கல்யாணமே செய்ய முடியாதுன்னு ஒத்த கால்ல நின்னு சாதிக்கிறான்”, 
“அதான்.. நானும் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன், இந்த கல்யாணம் மொத்தமா நின்னு போயிடும், உன் குருவோட பொண்ணு, உன் பாசமலர் கல்யாணமும் உன்னால நின்னுடும்ன்னு சொன்னா அதுக்கும் அசையல..”, 
“அப்பாதான் சட்டுன்னு எனக்கு உன்  கவலையாலே  மைல்ட் அட்டேக் வந்துருச்சுன்னு  சொல்லி..  அப்படி இப்படி இவனை கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சோம்..   அதுக்கு போய் பெருசா  கோவப்படுறான்..”  
“இவன் கொஞ்ச மாசம் கழிச்சு செஞ்சுகிறேன்னு சொன்ன கல்யாணத்தை இப்போவே செஞ்சுட்டோம், அவ்வளவுதான்.. இதுக்கேன் இவனுக்கு இவ்வளவு கோவம் வருது..?, ஒரு வேளை எங்களை ஏமாத்த நினைச்சிருந்தானோ என்னமோ..?” என்று  மிக சாதாரணமாக சொல்ல, தீக்ஷி  சிலையாக நின்றாள்.  

Advertisement