Advertisement

காதல்  ஆலாபனை 28 
“எல்லா ஏற்பாடும் முடிஞ்சிருச்சு அத்தை, நீங்க ஒரு முறை செக் செஞ்சுக்கோங்க..”  என்று மனோ, சுபாவிடம் சொல்ல, தானும் மனோவுடனே சென்று எல்லாவற்றையும் சரி பார்த்தவர், 
“எல்லாம் கரெக்ட்டா இருக்கு மனோ.. இன்னும் கொஞ்ச உதிரி பூ மட்டும் எடுத்துட்டு வரச்சொல்லு..” என்று இன்னும் சற்று நேரத்தில் நடக்கவிருக்கும் திருமணத்திற்கான ஏற்பாட்டில் சுபா, ஆனந்தனுடன் இணைந்து எல்லா வேலைகளையும் சந்தோஷத்துடன் ஓடியாடி பார்த்து கொண்டிருந்தான் மனோ. 
இந்த ஒரு வாரத்தில் இவர்கள் இருவரும் தான் மிகவும் உறவாகி போயினர். மனோ எதுவாக இருந்தாலும் சுபாவை கேட்டே, அவரை முன்னிறுத்தியே எல்லாம்  செய்தான். ராணி இருக்கும் வரை  அம்மா எனும் உறவின் பொறுப்பை, பாசத்தை அனுபவித்து வளந்திருந்தவனுக்கு சுபாவின் உணர்வுகளை ஈசியாக புரிந்து கொள்ள முடிந்தது, 
அதிலும் அன்று வீட்டில் திருமணம் பற்றி பேசும் போது அவர் பேசியிருந்தது எனோ அவனுக்கு வருத்தத்தை  கொடுத்திருந்தது, அவர் எதிர்பார்ப்பதில் தவறு இல்லையே..? ராணி இருந்திருந்தால் அவரும் இதைத்தானே தன்னிடம் எதிர்பார்த்திருப்பார், 
என்ன ஒன்று சுபா அவரின் வெறுப்பால் அதிகமாக பேசி மற்றவர்களின் முன் கீழிறங்கி போனார். ஆனால் இன்று அவரே  மகன்கள் வேண்டும் என்று அவரின் ஈகோவை விட்டு வந்திருப்பது மனோவை ஈர்த்தது. எத்தனை பேர் இறுதி வரை ஈகோவோடே வாழ்ந்து விட்டே போய்விடுகின்றனர், அந்த வகையில் சுபா பரவாயில்லை.. என்றே தோன்ற அவருடன் மனதார பழகினான். 
ராகுல், கிரி இருவரும் உதவிக்கென இங்கு இருக்க, அவர்களுக்கு காபி கொடுத்த மனோ, “அத்தை, மாமா  காபி எடுத்துக்கோங்க..” என்று சுபாக்கும், ஆனந்தனுக்கும் கொடுத்தவன், தானும் அவர்களோடே குடித்தான், 
“நாம  வீட்டுக்கு போய்ட்டு  அவங்களை கூட்டிட்டு வந்துடலாம்..” என்று சுபா  மணமக்களை  அழைத்து வர ஆனந்தனை  கிளம்ப சொல்லவும், 
“நான்.. நான் வரல, நீ மட்டும் போய்ட்டு வந்துரு, நான் இங்கே ராகுல், கிரியோட ஏற்பாடு எல்லாம் பார்த்துகிறேன்..” என்று ஆனந்தன் வேகமாக சொன்னார். 
“சரி..” என்று சுபா கிளம்ப, “நானும் வரேன் அத்தை..”  என்றான் மனோ. 
“ஏன் மனோ..? எல்லோரும் இன்னும் கொஞ்ச நேரத்துல இங்கதான் வருவாங்க..” என்று ராகுல்   சொல்லவும், 
“இல்லைண்ணா   அக்கா என்னை எதிர்பார்ப்பா, இன்னிக்கு அவளோட வாழ்க்கையில ரொம்ப முக்கியமான நாள், நான் கண்டிப்பா அவளோட இருக்கனும்..” என்று சொன்னவன், சுபாவுடன் சீக்கிரமே தீக்ஷியிடம் வந்து சேர்ந்தான். 
“வந்துட்டியா மனோ வா வா..  உன்னை தான் தீக்ஷி ரொம்ப நேரமா எதிர்பார்த்து காத்திட்டிருக்கா..” என்று சுதா மனோவையும், சுபாவையும்  தீக்ஷியின்  ரூமிற்கு கூட்டி சென்றாள். அங்கு தீக்ஷி பரிபூரண மணப்பெண் அலங்காரத்தில் ஜொலித்து கொண்டிருக்க, மனோவிற்கு கண்கள் கலங்கியது. 
இந்த அலங்காரத்தில் மகளை காண ராணி ஏங்கிய நாட்களை நினைத்து உள்ளுக்குள் துடித்தவன், “அக்கா..” என்று திக்கினான். “மனோ..” என்ற தீக்ஷியின் முகத்தில் தெரிந்த துயரத்தில் தன்னை நிதானித்து கொண்டவன், 
“தீக்ஷி.. இன்னிக்கு முழுசும்  நீ அழவே மாட்டேன்னு  எனக்கு ப்ராமிஸ் செஞ்சிருக்க..”, என்று கண்டிப்போடு சொல்ல, “ம்ம்..” என்று பொங்கும் கண்ணீரை உள்ளிழுத்து தம்பியை பார்த்து மெலிதாக சிரித்தாள். 
கல்யாண நாள் நெருங்க நெருங்க தீக்ஷிக்கு பெற்றவர்களின் ஞாபகம் மிக மிக அதிகமாகவே இருக்க, சிறிதும் கல்யாண களை இல்லாமல் எந்நேரமும் தனிமையில் அழுது கரைந்தவளிடம் நேற்றிரவு தான் மனோ சத்தியம் வாங்கியிருந்தான். அதை ஞாபகப்படுத்தி மிரட்டிய தம்பியை அணைத்து கொண்டவள், 
“மனோ..ஒரு பைவ் மினிட்ஸ் மட்டும் அழுதுக்கறேன், என்னால முடியல, நெஞ்சை அடைக்குது..” என்று தம்பியிடம் கெஞ்சவே செய்தாள். 
“ம்ஹூம்.. இந்த தண்ணியை குடி, எல்லாம் சரியா போயிரும், ஆனா அழமட்டும் விடமாட்டேன்..” என்று உறுதியாக தம்பி சொல்லிவிட, அவனையே பார்த்தவளுக்கு அந்த நொடி தோன்றியது, தன்னுடைய அப்பா, அம்மா எல்லாம் இவன்தான் என்று..
“மனோ..” என்று தம்பியின் கையை இறுக பற்றிக்கொண்டாள். அவனும்  தன் அக்காவிற்கு எல்லாமுமாக மாறிப்போனான். அவர்களையே கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்த சுபாவிற்கு தன் பிள்ளைங்களின் ஞாபகம் வர, அங்கேயே தயாராகி  கொண்டிருந்த பிள்ளைகளின் ரூம் சென்றார். 
அங்கு அவரின் பிள்ளைகள் கொலை வெறியுடன் உருண்டு புரண்டு  சண்டை போட்டு கொண்டிருந்தனர். விஷ்வஜித் இன்று காலை தான வந்திருந்தான். வந்ததிலிருந்து  இருவரும் ரூமிலே அடைபட்டு கிடந்தனர். இவர் சென்று கதவை தட்டவும் திறந்த மகன்கள் இருவரின் தலை கலைந்து, முகம் சிவந்து ஒருவரை ஒருவர் முறைத்து நின்றிருந்தனர். 
“டேய்.. என்னங்கடா இப்படி இருக்கீங்க..? இன்னும் கிளம்பலையா..? முகூர்த்தத்துக்கு நேரம் ஆச்சு..”, என்று மகன்களின் தோற்றத்தில் அதிர்ந்து கோபத்துடன் சத்தம் போட்டார் சுபா. 
“ம்ம்.. கிளம்புறோம்..” என்று முணுமுணுத்த இந்திரஜித், அவசரமாக குளிக்க செல்ல, “விஷூ.. நீயும் குளிச்சிட்டு கிளம்பு,  நேரம் ஆச்சு..” என்று பெரிய மகனை சொன்னார். 
“ம்மா.. அவன் கிளம்புவான், கிளம்பாம எங்க போயிடுவான்..?” என்று அண்ணனை பார்த்து மிதப்பாக சொன்னவன், “நீங்க போய் மத்த ஏற்பாட்டை கவனிங்க..” என்று அன்னையை அனுப்பி வைத்தான். அவர் அங்கிருந்து செல்லவும், 
“பிரதர்.. சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்.. சீக்கிரமா ரெடியாகுற வழியை பாரு..” என்று மிரட்டலாக சொல்லி செல்ல, விஷூ தாங்கமுடியாத ஆத்திரத்தில் சுவற்றை ஓங்கி குத்தினான்.  “ராஸ்கல்.. உன்னை கவனிச்சுக்கிறேன் இரு..” என்று எரிமலையாய் உள்ளுக்குள் பொங்கியவன், கிளம்ப சென்றான். 
“அதி.. ரெடியா..?”  என்று தீக்ஷி, மனோ இருவரும் தருணை அழைத்து கொண்டு பக்கத்து ரூமில் தயராகி கொண்டிருந்த அதிதியை காணசென்றார்கள்.  தீக்ஷி, இந்திரஜித், மனோ மூவரும்   தருணிடம்  அதிதி, விஷ்வஜித் திருமணத்தை  பற்றி சொல்ல  தருணுக்கு முதலில் எதோ போல் இருந்தது, ஆனால் இவர்கள் தொடர்ந்து புரியவைக்கவும் சிறிது தெளிந்தவன், அதிதியின் ஏக்க பார்வையில் முழு மனதாக ஒத்துக்கொண்டான்.  
“அதி.. ரொம்ப அழகாயிருக்க..” என்ற தீக்ஷி, அவளின் முக கலக்கத்தில், “அதி.. ப்ளீஸ், எதையும் நினைச்சு கஷ்டபட்டுக்காத, பார்த்துக்கலாம்..” என, தருண் தானாகவே சென்று அவளின்  கையை பற்றி கொள்ள அதி அவனை கட்டி கொண்டு கதறவே செய்தாள். 
பாரதி மகளின் அழுகையை வேதனையுடன் பார்த்து கொண்டிருந்தார். ராமலிங்கத்தை யாரும் இத்திருமணத்திற்கு அழைக்கவே இல்லை, ஒரு வீட்டின் குடும்ப தலைவன் சரியில்லை என்றால் அக்குடும்பத்தின் நிலை என்ன என்று பாரதி அனுபவித்து கொண்டிருந்தார். அந்த வெறுப்பிலே அவர் வேண்டாம் என்று உறுதியாக மறுத்ததும் பாரதியே.. 
அதிதியை  சமாதானம் செய்து பெண்கள் இருவரும் கடவுளை வணங்கிவிட்டு கிளம்ப, தீக்ஷியின் கால்கள் பெற்றோரின் புகைப்படத்தை விட்டு நகராமலே நின்றது, அந்நொடி அவள் முகத்தில் தெரிந்த அத்துயரம் மேலிருந்து பார்த்து கொண்டிருந்த இந்திரஜித்திற்கு அளவில்லா வருத்தத்தை கொடுத்தது. 
அவர்கள் கிளம்பி செல்லவும், ஆண்களும் வேறொரு காரில் கோவிலை சென்றடைந்தனர். நெருங்கிய சொந்தங்கள் மட்டும் அழைக்க பட்டிருக்க, கஸ்தூரி.. சுபாவுடன் இணைந்து ஐயர் கேட்கும் பொருட்களை எடுத்து கொடுத்து கொண்டிருக்க, பாரதி சுபாவின் அருகில் செல்ல முடியாமல் தள்ளியே இருந்து கொண்டார். 
கோவிலுக்கு வந்த இந்திரஜித்திற்கு தீக்ஷியின் கலங்கிய முகமே நினைவில் இருக்க, “தீக்ஷி எங்க..?” என்று  சுதாவிடம்  கேட்டான். 
“எதுக்கு..?” என்று அவள் இடுப்பில் கைவைத்து முறைத்து கேட்டாள். 
“எதுக்கா..? எனக்கு அவகிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேட்டே ஆகணும், வீட்ல தான் அவளை பார்க்கவிட மாட்டேன்னுடீங்க.. இப்போவாவது அவகிட்ட பேசியே ஆகணும், ரொம்ப முக்கியம்..”  என்று அடத்துடன் நின்றவனை அண்ணன்காரன் கொலை வெறியாக முறைக்க, தம்பி அவன் பக்கமே திரும்பவில்லை. 
“ஜித்து என்னது இது..?” என்று சுபா, இளைய மகனை அதட்ட, 
“ம்மா.. இது எவ்வளவு முக்கியமான விஷயம்  தெரியுமா..? ஒரு ரெண்டு நிமிஷம் தான்..” என்று மிகவும் சீரியஸாக பேசியவன் அவர்களை ஒதுக்கிவிட்டு தீக்ஷி  இருந்த அறைக்குள் நுழைந்து விட்டான். அங்கு தீக்ஷியிடன் அதிதி இருக்கவும் கடுப்பானவன், 
“அதிதி உன்னை வெளியே கூப்பிடுறாங்க பாரு..” என,  “நம்பிட்டேன்..” என்ற நக்கலோடு அதிதி வெளியே வந்துவிட கதவை மூடியவன். 
“உன்கிட்ட வர்றதுக்கு  எத்தனை  தடங்கல்..  என்னால முடியலடி, எதோ போல இருக்கு..”  என்றவாறே வேகமாக அவளை அணைத்து கொண்டான். அவனின் திடீர் அணைப்பில் திணறிய தீக்ஷி, 
“என்ன ஆச்சு..?” என்று புரியாமல் தடுமாறி கேட்டாள். 
“ம்ப்ச்.. ஒரே டெங்ஷனா இருக்கு.. இங்க தொட்டு பாரு, என் ஹார்ட் கூட எவ்வளவு பாஸ்ட்டா துடிக்குதுன்னு..” என்று அவளின் கையை பிடித்து தான் இதயம் இருக்கும் இடத்தில வைத்து அழுத்தி கொண்டவன், அவளின் கழுத்தில் முகம் புதைத்தான். 
அவனின் பேச்சில் கலக்கம் கொண்ட தீக்ஷி, ஆதரவாக அவனை அணைத்து ஆறுதல் படுத்த, இந்திரஜித் குறும்பு சிரிப்புடன் அவளை இன்னும் நன்றாக கட்டிகொண்டு, அவளின் கழுத்தில் தன் சூடான இதழ் முத்தத்தை பதித்தான். 
“என்ன..? என்ன செய்றீங்க நீங்க..?” என்று அவனின் முத்தத்தில் நெளிந்தவள், அவனின் கை இடையை இறுக்கியதில் திமிறவே செய்தவளுக்கு அவனின் நடிப்பு புரிந்துவிட, வலுவாக அவனை தள்ளிவிட்டு தள்ளி நின்று கொண்டாள். 

Advertisement