Advertisement

“இல்லை இது எதுவுமே நீ  சொல்லவும் கூடாது, எதிர்பார்க்க கூடாது, ஏன்னா நீ அம்மா.. பிள்ளைங்க என்ன செஞ்சாலும் ஏத்துக்கிட்டு போயிடனும், கோவம் படக்கூடாது, கேள்வி கேட்க கூடாது.. அப்படி இருந்தா தான் நீ உண்மையான அம்மான்னு நீங்களும் சொல்றீங்களா சொல்லுங்க,  அதையும் தாங்கிக்குறேன்..”  என்று சுபா முதல் முறையாக கண்ணீர் சிந்த தீக்ஷிக்கு எதோ போல் ஆனது. 
அவரின் கண்ணீரில் குற்ற உணர்வு கொண்ட இந்திரஜித், எழுந்து அவர் அருகில் அமர்ந்து  அவரை தோளோடு அணைத்து கொண்டான். “விட்றா என்னை.. தொடாத.. இத்தனை நாளா என்கிட்ட பேசாம மூஞ்சை தூக்கி வச்சிட்டு இருந்தவன் தானே நீ..? இப்போ மட்டும் என்னவாம்..?” என்று சுபா மகனின் அணைப்பிலுருந்து திமிற, 
“ம்மா..  சாரிம்மா.. ஒரு விதத்துல உங்க கோவம் நியாயமானது, ஒரு மகனா உங்களோட உரிமையை, கனவை  நானும், விஷூவும்  பறிச்சிக்கிட்டோம், அதுக்கு உண்மையாவே சாரிம்மா.. எங்க கோவமே நீங்க தீக்ஷியை, அரசு மாமாவை, தர்ஷினி அண்ணியை வெறுத்தது தான், மத்தபடி உங்க மேல எங்களுக்கு வேறென்ன கோவம்..?” என்று இந்திரஜித் மனதார அம்மாவிடம்  பேசினான்.  
“போடா.. போடா..” என்ற சுபாவிடம் முன்னிருந்த அந்த திமிர், ஆங்காரம் குறைந்து  போயிருந்ததை நன்றாகவே உணர முடிந்தது. 
“சாரி அத்தை.. அன்னிக்கு நான் பேசுனது உங்களை ரொம்ப ஹர்ட் செஞ்சிருக்குன்னு நினைக்கிறேன், ஒரு அம்மாவா உங்க கோவம்  சரிதான், ஆனா எங்களையும் நீங்க புரிஞ்ச்சுக்கோங்கன்னு தான்  கேட்கிறோம்..” என்று தீக்ஷியும் உணர்ந்து கேட்க, சுபா எந்த பதிலும் சொல்லவில்லை என்றாலும், என்றாலும் முன்பு போல் சண்டை போடவும் இல்லை. 
இதில்  சுபாவின் பேச்சை கேட்டிருந்த அதிதியின் முகம் தான் கசங்கி போக  குனிந்து அமர்ந்திருந்தாள். நிமிர்ந்து அவரை பார்க்கவும், எதுவும் பேசவும் சங்கடமாக, அச்சமாக இருந்தது, எனோ எல்லோரையும் மிகவும் கட்டாயப்படுத்தி விருப்பமில்லா திருமணம் செய்ய போகின்றோம் என்ற தோன்ற தன்னை தானே மிகவும் கீழாக உணர்ந்தாள்.  
விஷ்வஜித் ஓகே சொல்லியிருந்தால் இப்படியெல்லாம் தோன்றியிருக்காதோ என்னமோ..? அவனுக்கும் விருப்பமில்லை, அவனின் அம்மாக்கும் விருப்பமில்லை எனும் போது, என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான்..?  என்று தன்னை தானே வெறுத்தாள்.  
“அதிதி.. என்னமா அமைதியாவே இருக்க..? உனக்கு இந்த பிளான் ஓகேவா..?” என்று ஆனந்தன் சத்தமாக கேட்க, 
“ஆஹ்ன்.. என்ன அங்கிள்..?” என்ற அவளின் புரியாத பார்வையில் அவள் தாங்கள் பேசியதை கவனிக்கவே இல்லை என்று புரிந்தது. அதோடு அவளின் கலங்கிய கண்களும், கசங்கிய முகமும் அவளின் நிலையை சொல்ல, எல்லோருக்கும் மிகவும் வருத்தமாகி போனது. 
“அதிதி.. என்ன இது..? இப்போ நீ கல்யாண பொண்ணு, எல்லாத்தையும் நினைச்சு உன்னை  நீயே ஏன் கஷ்டப்படுத்திகிற..? எல்லாம் சரியாகிடும்..” என்ற ஆனந்தனின் ஆறுதலிலும், தீக்ஷியின் கை அழுத்தத்திலும் சற்று தெளிந்தவளிடம், 
“நாளைக்கு நாள் நல்லா இருக்கு.. அதனால நாளைக்கே உங்க அத்தை, பாரதி,  கணேஷ் குடும்பத்தோட  போய்ட்டு முகூர்த்த பட்டு, நகை எல்லாம் எடுத்துடுங்க, தாலி செய்யவும் கொடுத்துடுவோம்.. இன்விடேஷன் அடிக்கிற வேலையை  ஜித்தும், கிரியும்  பார்க்கட்டும்.. நான் கணேஷ்க்கிட்ட போன் செஞ்சு பேசிடுறேன்..”  என்று ஆனந்தன் திரும்பவும் சொல்ல, சரியென்று ஏற்கப்பட்டு அதற்கான வேலையில் அன்றே இறங்கினார்கள். 
“சுபா.. நம்ம ரிலேட்டிவ்ஸ்க்கு எல்லாம் ரிசப்ஷனுக்கு சொல்லிடுவோம், நம்ம வீட்டு பெரியவங்களை மட்டும் கல்யாணத்துக்கு வரச்சொல்லலாம்.. என்ன சொல்ற..?” என்று தீக்ஷியின் வீட்டில் அமர்ந்து மாலை தேனீர் குடித்து கொண்டே ஆனந்தன் மனைவியின் கருத்தை கேட்டு கொண்டிருக்க, “அங்கிள்..” என்று வந்து நின்றான் மனோ. 
“சொல்லு மனோ..” என்ற ஆனந்தனிடம், 
“அது..  கல்யாண் வேலை, தீக்ஷி, அதிக்கு  நான் செய்ய வேண்டிய முறை, அப்பறம் சீர்வரிசை, செலவுக்கு காசு.. இது எல்லாம் என்ன.. எப்படின்னு எனக்கு தெரியாது, நீங்க சொன்னேங்கன்னா அது போல செஞ்சுக்கலாம்..” என்று தயங்கியபடி கேட்டாலும், அக்காக்களுக்கு செய்ய வேண்டும் என்ற உரிமையோடு கேட்டான். அவனின் கேள்வியில் ஆனந்தன், சுபா  இருவருக்கும் சொல்ல முடியா உணர்வு, 
“செய் மனோ.. தாராளமா செய்.. உங்க அக்காகளுக்கு நீ செய்ய போற..?” என்ற ஆனந்தன், “இங்க வா..  வந்து மாமா பக்கத்துல உட்காரு..” என்று அவனின் கை பிடித்து பாசாமாக தன் பக்கத்தில் அமரவைத்து கொண்டவர், 
“உனக்கு தெரியுமில்லை, நாம கல்யாணத்தை கோவில்ல தான் செய்ய போறோம், அதுக்கு பெரிய செலவு எல்லாம் ஒன்னுமில்லை, அப்பறம் இந்த முகூர்த்த பட்டுக்கு, தாலிக்கு நாங்க தான் செய்யணும், வேற உங்க அக்காக்களுக்கு நீ எவ்வளவு சீர் கொடுக்க நினைக்கிறியோ அது உன் விருப்பம், அடுத்து ரிசப்ஷன் வைக்க போறோம், அதுக்கான செலவு  வேணும்ன்னா நாம ஷேர் செஞ்சுக்கலாம்..” என்று முடித்தார். 
“ஓஹ்..” என்று அவர் சொன்ன எல்லாவற்றையும் மனதில் ஓட்டி பார்த்தவன், “அங்கிள்..” என்று அழைக்க, “மாமா..” என்று திருத்தினார் ஆனந்தன். 
“சாரி மாமா.. அது ரிசப்ஷன் செலவை நாங்களே செய்றோம், ஷேர் வேண்டாம்..” என, ஆனந்தன் யோசிக்கவே செய்தார். இதில் இருபக்கமும் பணத்தை பற்றி பிரச்சனையில்லை, ஆனா மனோ.. இதே அரசு இருந்திருந்தால் பிரச்சனையே இல்லை,  ஆனால் மனோவிடம் எப்படி பேச..? என்று தயங்கியவரின் கை பிடித்த மனோ, 
“மாமா.. அப்பா அக்காக்கு  செய்ய நிறைய கனவே வச்சிருந்தார், ஆனா..?” என்று ஒரு நொடி  கலங்கியவன், அதை சடுதியில் மறைத்து,  “இப்போ அவரிடத்தில் இருந்து அதை எல்லாம் நிறைவேத்துறது என்னோட கடமை மட்டுமில்லை, ஆசையும் படறேன், வேண்டாம்ன்னு மட்டும் சொல்லிடாதீங்க..” என்று அனுமதியாகவே கேட்டான். 
“அதில்லை மனோ.. இது ரெண்டு பக்கமான பெரிய பிசினஸ் சர்க்கிள்,  ரிலேஷன்ஸ், ப்ரண்ட்ஸ், ஸ்டாப்ஸ்ன்னு ரொம்ப பெரிய கூட்டமே வரும், நீ மட்டும் எப்படி..? ஷேரே செஞ்சுக்கலாம்..” என்று ஆனந்தன் சொல்ல, 
“இருக்கட்டும் மாமா.. எல்லாமே  நம்ம ஆளுங்க தானே..? இதுல ரெண்டு பக்கம்ன்னு பிரிச்சு பேச என்ன இருக்கு..? இனி எல்லாமே ஒன்னுதான், சோ நானே நம்ம சார்பா எல்லாம் செஞ்சுக்கறேன், ப்ளீஸ் மாமா..” என்றவன், அவரின் தயக்கத்தில், “நீங்களாவது சொல்லுங்க அத்தை..” என்று சுபாவையும் பார்த்து கேட்க, இருவருக்குமே அவனின் பாசத்தில் உருகி தான் போயிற்று. 
அதிலும் மனோ பேச பேச அவனிடம் தெரிந்த பணிவு, பாசம், உரிமை எல்லாம் சுபாக்கு மிகவும் பிடித்து போனது. அவனையே வாஞ்சையாக பார்த்தவர், “சரி நீயே செய்..” என்றுவிட்டார்.  
“ரொம்ப நன்றி அத்தை..” என்று அவரின் கை பிடித்து நன்றி சொன்னவன், குதித்து கொண்டு செல்ல, அவனையே பார்த்தவர்கள்,  “ரொம்ப நல்ல பையன்..  என்ன இருந்தாலும் ராணியோட வளர்ப்பு சோடை போகுமா..?” என்று ஆனந்தன் சொல்ல, முதல் முறையாக அதை சுபாவும் முழுமனதோடு ஏற்று கொண்டார். 
“தீக்ஷி.. எனக்கு என்னோட எப் டி காசு வேணும்..” என்று லேபில் அமர்ந்து வேலை பார்த்து கொண்டிருந்த அக்காவிடம் போய் நின்றான்.  
“என்ன..? அவ்வளவு காசு உனக்கெதுக்குடா..?” என்று தீக்ஷி ஆச்சரியத்துடன் கேட்டாள். 
“ஒரு பெரிய மனுஷனை பார்த்து கேட்கிற கேள்வியா இது..? என்னோட அக்காகளுக்கு கல்யாணம் வருது, எனக்கு எவ்வளவு செலவு இருக்கு தெரியுமா..?” என்று நெஞ்சை நிமிர்த்தி சந்தோஷமாக சொல்ல, கேட்டிருந்த தீக்ஷிக்கு கண்ணில் நீர் தேங்க, 
“இப்போ நீ அழுத நான் போயிடுவேன், உன்கிட்ட பேசவே மாட்டேன்.. பார்த்துக்கோ..”  என்று கோவமாக மிரட்டினான். 
“சரிடா.. நான் அழலை..”, என்று சந்தோஷ சலிப்புடன் கண்களை துடைத்து கொண்டவள், “சொல்லு.. உனக்கு எவ்வளவு காசு வேணும்..?” என்றாள். 
“ம்ப்ச்.. தெரியல, பெரிய மாமாகிட்ட ரிசப்ஷன் செலவை நாமதான் செய்ய போறோம்ன்னு சொல்லிட்டு வந்துட்டேன், அதுக்கு எவ்வளவு ஆகும்..? என்னென்ன செய்யணும்ன்னு பெரிய மாமாகிட்ட கேட்டுட்டு   சொல்றேன். அவர் சொல்ற அமவுண்ட் வேணும்..” என்றான். 
“கண்டிப்பா கொடுத்துடாலம்..”, என்று தீக்ஷியும் பெருமையுடன் ஏற்று கொண்டாள். 
“ஓகே.. அப்பறம், உங்க ரெண்டு பேருக்கும் சீர் வரிசை பார்க்கணும், நாம செய்ய வேண்டிய நகை எடுக்கணும் இல்லை..” என்று அவளிடமே கேட்க, தீக்ஷிக்கு பெற்றவர்களை நினைத்து உள்ளுக்குள் கொதித்து துக்கம் பொங்கியது.  
“டேய்… இது எல்லாம் நீங்களே பார்த்துக்கோங்கடா, என் பொண்ணை ஏன் தொந்தரவு செய்ற..?” என்று கஸ்தூரியை தொடர்ந்து, 
“அதானே என் தங்கச்சியை கல்யாண கனவு விடாம ஏண்டா  இப்படி டிஸ்டர்ப் செய்ற..? இது எல்லாம் நம்மளோட  டியூட்டிடா தம்பி..” என்று கிரியுடன், சுதாவும் வந்தாள்.  
“தீக்ஷி.. என்ன இது..? இனி ஒரு வாரத்துக்கு  எந்த வேலையும் நீ பார்க்க கூடாது, அதை முதல்ல மூடி வை..” என்று லேப்பை மூடி வாய்த்த கஸ்தூரி, 
“சுதா.. தீக்ஷிக்கு பார்லர் அப்பாயிண்ட்மென்ட் போட்டுரு, அப்பறம் நம்ம கடையில் சொல்லி, புது கலெக்ஷன் துணி, நகை செட்  எல்லாம் எடுத்து வைக்க சொல்லு..” என்று ஆரம்பிக்க, தீக்ஷிக்கும், மனோக்கும் பெருத்த ஆறுதலாக இருந்தது. 
அன்றிலிருந்தே  கஸ்தூரி, பாரதி, சுதா குழந்தைகளோடு  தீக்ஷியின் வீட்டிலே தங்கி கொள்ள, விஷ்வஜித்தின் ஒப்புதல் இல்லாமலே கல்யாண கலாட்டா ஆரம்பமானது. 

Advertisement