Advertisement

காதல் ஆலாபனை  26
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்ண்ணா..” என்று வந்து நின்ற தீக்ஷியை சலிப்பாக பார்த்த விஷ்வஜித், 
“தீக்ஷி ப்ளீஸ்.. நீ என்ன பேசப்போறேன்னு எனக்கு நல்லா தெரியும், அது எனக்கு பிடிக்காததும் கூட, சோ வேண்டாமே..” என்றவனை வேதனையுடன் பார்த்தாள் தீக்ஷிதா. 
அதிதியுடன் உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து அவன் படும் துன்பங்களை கண்ணால் கண்டு கொண்டுதானே இருக்கிறாள். இதில் அவனை பார்த்து அதிதியும் வேதனைபட, பொறுக்க முடியாமல் விஷ்வஜிதிடம் வெளிப்படையாக பேச வந்துவிட்டாள். 
இதற்கு முன்பும் இந்திரஜித் சொன்னான் என்று சுபாவுடன் பேசி முடித்த அந்த வாரத்திலே இவனுடனும் பேசினாள் தான். ஆனால் விஷ்வஜித் இவள் பேசுவதையே காதில் போட்டுக்கொள்ளாமல் இருந்தவன், எந்த பதிலும் சொல்லாமல் சென்றும் விட்டான்.  
இதில் இரு ஜோடிகளுக்காக நிச்சயிக்கபட்டிருந்த திருமண நாள் வேறு நெருங்கி கொண்டிருக்க, இன்னும்  விஷ்வஜித் முடியாது என்ற பிடிவாதத்துடன் அப்படியேதான் இருந்தான். யார் சொல்லியும் ஒத்து கொள்ளாதவனை என்ன தான் செய்வது..? என்று எல்லோரும் தடுமாறி கொண்டிருக்க, அவனோ யாரையும் கண்டு கொள்ளாமல் தீக்ஷி, இந்திரஜித் திருமண வேலைகள் மட்டும் செய்து கொண்டிருந்தான்.  
அவனுக்கும், அதிக்கும்  நிச்சயிக்கபட்டிருந்த கல்யாண வேலைகளை தொடகூட விடாமல் வலுக்கட்டாயமாக நிப்பாட்டியே வைத்திருந்தான். இந்திரஜித்தும் பலவழிகளில் முயன்று பார்த்துவிட்டான். ஆனால் இளகவே மாட்டேன் என்று இரும்பாய் நிற்பவனை சிறிதும் வளைக்க முடியாமல் மொத்த குடும்பமும் தத்தளித்து தான் போயினர். 
“அவர் மனதில் என்னதான் இருக்கிறது..? பேசி பார்த்துவிட வேண்டும்..”  என்று இறுதி முயற்சியாக அவனிடம்  வந்த தீக்ஷி, விஷ்வஜித் மறுத்தும் வம்படியாக அவனுடன் அமர்ந்துவிட்டாள்.
“இல்லங்கண்ணா.. இன்னிக்கு உங்க மனசுல என்ன இருக்குன்னு நாம பேசியே ஆகணும்..” என்றவள், “சொல்லுங்கண்ணா.. ஏன் கல்யாணமே வேண்டாங்கிறீங்க..?” என்று  கேட்க, லேசாக சிரித்தவன், 
“கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்லலை..  ரெண்டாவது கல்யாணம் தான் வேண்டாங்கிறேன்  தீக்ஷி..” என்றான். 
“ண்ணா.. அது கூட ஏன் வேண்டாங்கிறீங்க..? உங்க வயசு  இன்னும் 35ஐ கூட நெருங்கல, இன்னும் உங்க லைப்  ரொம்ப நீண்டு இருக்கு, கடைசி வரை துணையே இல்லாமல் எப்படி அதை கடப்பீங்க..?”  என்று ஆதங்கத்துடன் கேட்டாள்.  
“நீங்க எல்லாம் என்கூட இருக்கும்போது  நான் ஏன் அதை தனியா கடக்க போறேன்..?”
“ண்ணா.. நான் எந்த துணையை சொல்றேன்னு  உங்களுக்கு நல்லா புரியும், ஏன் இந்த  பிடிவாதம் அதை மட்டும் சொல்லுங்க..” என்று கறாராக கேட்டாள்.  
“இது பிடிவாதம் இல்லை தீக்ஷி, இது சரியா வராதுன்னு நல்லா தெரிஞ்சதால வந்த என்னோட மறுப்பு..”
“இன்னும் வாழவே ஆரம்பிக்காத போது எதைவச்சு சரியா வராதுன்னு நீங்களே  முடிவு எடுக்குறீங்க..?”
“ஏற்கனவே ஒரு வாழ்க்கை வாழ்ந்ததால சொல்றேன் தீக்ஷி.. நான் எல்லாம் இந்த கல்யாண  வாழ்க்கைக்கு சரிப்பட்டு வரமாட்டேன், என்னால  என்னை நம்பி வர்ற பொண்ணை ஒழுங்கா பார்த்துக்க முடியாது, அவளோட சந்தோஷமா குடும்பம் நடத்த முடியாது..”
“தர்ஷினி.. அவளை அவசரவசரமா  கல்யாணம் செஞ்சு அவ வாழ்க்கையை  கெடுத்தது தான் மிச்சம்.. என்னை கட்டிக்கிட்டு அவ  கடைசி வரை   எந்த சந்தோஷமும் அனுபவிக்கல..” என்று தன்னை நினைத்து தானே வெறுப்புடன் சொன்னான். 
“நீங்க தான் அப்படி சொல்றீங்க, ஆனா தர்ஷினி அக்கா ‘உங்களை போல ஒரு ஹஸ்பண்ட் உண்டான்னு’  எவ்வளவு பெருமையா சொல்லுவாங்க..” என்றாள். அதுதான் உண்மையும் கூட, தர்ஷினி இருந்தவரை ஒரு முறைகூட விஷ்வஜித்தை குறை சொன்னதில்லை. 
“ம்ஹ்ம்.. அவ சொல்லியிருக்க மாட்டா, அதுதான் என்னை இன்னும் கொல்லுது, ஏன் இப்படி இருக்கீங்கன்னு அவ என்னோட சண்டை போட்டு இருந்தா கூட எனக்கு இவ்வளவு வேதனையா இருந்திருக்காது, ஆனா அவ  கடைசி வரை என்னை எனக்காகவே ஏத்துக்கிட்டு  ஒரு நல்ல மனைவியா இருந்துட்டு போயிட்டா,  நாந்தான் அவளுக்கு ஒரு நல்ல  புருஷனா இல்லாம போயிட்டேன்..” என்று குற்ற உணர்ச்சியுடன்  சொன்னான். 
“ண்ணா.. நீங்க ஏன் இந்தளவு வேதனைபடுறீங்க..? அக்கா ரொம்ப சந்தோஷமா தான்  இருந்தாங்க, அவங்க முகத்துல கடைசிவரை சிரிப்பு தான் இருந்துச்சு, நீங்க பீல் பண்றது போல எந்த விதமான வருத்தமோ, வேதனையும் இல்லை..”  என்று தீக்ஷி தர்ஷினியுடனான  கடந்த காலத்தை யோசித்து சொன்னாள். 
“ம்ப்ச்.. தீக்ஷி நான் எப்படி இருந்தேன்னு எனக்கு தெரியாதா..? முதல்லயாவது பரவாயில்லை, கடைசி கடைசில எல்லாம் வாரத்துல ரெண்டு நாள் அவளோட இருந்தாலே பெரிய விஷயம் தெரியுமா..?”
“பிஸ்னஸ் பிஸ்னஸ்ன்னு அது பின்னாடியே போயிட்டேன், இப்போ அதை நினைச்சா ஆத்திரமா வருது, அதான் எல்லாத்தையும் ஜித்துக்கிட்ட கொடுத்துட்டு விலகிட்டேன்..”  என்று பிஸினஸை விட்டு மொத்தமா விலகிவிட்டதன் காரணத்தை சொன்னவனின் முகத்தில் இன்னும் வேறெதுவும் இருக்க, கண்டு கொண்ட தீக்ஷி, 
“இன்னும் எதோ இருக்கு, அதையும்  சொல்லிடுங்கண்ணா..” என்றாள். 
“என்ன..?  இன்னும் என்ன இருக்கு..? அப்படியெல்லாம் எதுவும் இல்லை..” என்ற விஷ்வஜித்தை நிதானமாக பார்த்த தீக்ஷி, 
“என்னை உங்க தங்கச்சியா நினைச்சு சொல்லாதீங்க.. ஆனா உங்க குரு.. எங்க அப்பாவோட இடத்துல இருந்து கேட்கிறேன், சொல்லுங்கண்ணா.. உங்க ரெண்டு பேருக்கும் இடையில எவ்வளவு நெருக்கம்ன்னு எனக்கு நல்லா தெரியும், அவர்கேட்டிருந்தா   நீங்க கண்டிப்பா சொல்லுவீங்கன்னும் எனக்கு தெரியும், சொல்லுங்க..” என்று ஒவ்வொரு வார்த்தையும்  நிறுத்தி நிதானமாக சொன்னாள். 
“தீக்ஷி.. அது, அது..”  என்று சில நொடிகள் கண் மூடி அமர்ந்தவனின் முகத்தில் அவ்வளவு துயரம்.. அவனுக்கும் தன்னுடைய இத்தனை வருட பாரத்தை இறக்கி வைக்க வேண்டும் போல் தோன்ற தீக்ஷியிடம் சொல்ல செய்தான்.
 “அன்னிக்கு என்னை கொல்ல அந்த ஷர்மா ஏற்பாடு செஞ்சிருந்தான் இல்லை, ஒருவேளை அப்படி நடந்திருந்தா.? அவன் என்னை கொல்ற   ஏற்பாட்டுல என்னோட மொத்த குடும்பத்தையும் நான்  இழந்திருந்தா என்ன செஞ்சிருப்பேன்..?”
“நான் மட்டும் செத்துபோயிருந்தா கூட பரவாயில்லை, ஆனா என்னால எல்லோரும்ன்னு போது என்னை  நானே எப்படி மன்னிப்பேன்..? என்னோட அந்த முரட்டு குணத்துக்கு, அவசரதனத்துக்கு  தண்டனை என்னோட குடும்பத்துக்குன்னு போது  அப்படி ஒரு குடும்பம் எனக்கு வேணுமா..?”
“நான் என்னோட குடும்பத்துக்கு பாதுகாப்பு இல்லை, அச்சுறுத்தல் தான் எனும் போது எனக்கு எதுக்கு குடும்பம்..? வேண்டாம் தீக்ஷி..” என்று மனமுடைந்து பேசியவன்  வெறுப்பான குரலில், “அப்படியிருந்தும் என்னால என்னோட கேரக்ட்டரை மாத்திக்க முடியல, அதுதான் என்னை இன்னமும் கொல்லுது..” என்றவனின் காரணத்தை முழுவதுமாக புரிந்து கொண்ட தீக்ஷி, சில நிமிட மவுனங்களுக்கு பிறகு, 
“ ண்ணா.. நம்ம கண் முன்னாடி தப்பு நடந்தா எல்லோருக்கும்  கோவம், ஆவேசம் பொங்கும், அதை தட்டி கேட்கணும்ன்னு தோணும்  ஆனா எதார்த்த வாழ்க்கையில அது சாத்தியமில்லை, கண்ணை மூடிகிட்டு மனசையும் அடக்கிட்டு கடந்து போயிடுவோம், ஆனா நீங்க அதை  தட்டி கேட்கிறீங்க”,  
“எங்களை போல சாதாரண மனுஷங்க மாதிரி உங்களால அதை கடந்து போக முடியறதில்லை, கடந்து போகவும் வேண்டாம், நில்லுங்க.. தப்பு இல்லை, இதுல உங்களை நினைச்சு வெறுக்கவும்  எதுவும் இல்லை..”  
“இதுல நீங்க தர்ஷினி அக்காவை நினைச்சு ஏன்  சங்கடபட்டுக்குறீங்க..? அக்காவோட உங்க  வாழ்க்கை, அவங்களுக்கு நிச்சயமா சந்தோஷத்தை தான் கொடுத்தது. நீங்க அவங்களோட டைம் ஸ்பென்ட் பண்ணலைன்னு  வருத்தபடுறீங்க, அதுல உங்க தப்பு என்ன இருக்கு..? நீங்க அவங்களோட இல்லாமா ஊர் சுத்தவும், பப்புக்குமா போனீங்க..? இல்லையில்லை, பிஸ்னஸ் பார்க்க தானே போனீங்க..”, 
“அது ஒரு விதத்துல சரியும் கூட.. அந்த வயசு.. உங்களோட கேரியரை  டிசைட் செய்ற வயசு, அந்த சமயத்துல உங்களை நீங்க ப்ரூப் செஞ்சுதான் ஆகணும், அப்படி இல்லாம போனா உங்க பேமிலியை கூட நீங்க காப்பாத்த முடியாதே..?”
“என்ன அதனால உங்க பேமிலி டைம் குறைச்சது, ஒத்துகிறேன், ஆனா நீங்க வீட்ல இருந்த அந்த கொஞ்ச நாள்லயும் தர்ஷினி அக்காவை ரொம்ப சந்தோஷமாதான் வச்சிருத்தீங்க, ஆனா எத்தனை பேர் வீட்ல இருக்க அந்த நேரத்துலயும் பொண்டாட்டிகிட்ட சண்டை போடறது, டிவி பார்க்கறது, மொபைல் பார்க்கறதுன்னே இருக்காங்க, அது எல்லாம் பேமிலி டைம் ஆகிடுமா..?”
 “அதனால நீங்க இதை நினைச்சு உங்களை நீங்களே வருத்திக்காதீங்க, அக்கா கடைசி வரை உங்க விஷயத்துல  ரொம்ப சந்தோஷமாதான் இருந்தா.. அவளுக்கு இருந்த ஒரே குறை, உங்களை உங்க பேமிலிலிருந்து பிரிச்சிட்டோமாங்கிற குற்ற உணர்ச்சி மட்டும் தான், வேறெதுவும் இல்லை”, 
“சோ.. ப்ளீஸ், இனியும் நீங்க அக்காவை  நினைச்சு பீல் செஞ்சு அவளை வருத்தப்படவைக்காதீங்க, அவ எங்கிருந்தாலும் உங்களை பார்த்துட்டே தான் இருப்பா..” என்றவள
“ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோங்கண்ணா.. உங்களால அவங்க  இல்லாம போகல, அவங்க விதி அங்க, அப்படித்தான் இருந்திருக்கு, இதுல ஊகத்தின் அடிப்படையில் உங்களை  நீங்களே ஏன் குற்றம் சாட்டிக்கிறீங்க..?  வேண்டாம்ண்ணா.. இத்தனையும் மனசுல போட்டு உங்களை நீங்களே வெறுக்குறீங்க, விட்டுடுங்க, நம்ம கையில எதுவும் இல்லை..” என்று முடிக்க, விஷ்வஜித் அமைதியாகவே இருந்தான்.  
“ண்ணா.. உங்ககிட்ட ஒரு ரெகுஸ்ட்.. ப்ளீஸ் தருணை பத்தியும், அதியை பத்தியும் கொஞ்சம் யோசிங்க, தருணுக்கு கண்டிப்பா அம்மா வேணும்,  அவனை சுத்தி எத்தனை உறவு இருந்தாலும் அம்மா இருக்கிற மாதிரி  எந்த உறவும் இருக்காதுண்ணா, இதை என்னைவிட யாரும் உணர்ந்து சொல்ல முடியாது”, 
“எனக்கே இப்படி இருக்கும்போது  அவன் சின்ன பையன், அவனுக்குள்ள எவ்வளவு இருக்கும்..?  ஒரு அப்பாவா அவனை சந்தோஷமா  வச்சிக்கிறது உங்க கடமையும் கூட..”  என்றவள், சிறிது தடுமாற்றத்துடன் அதியை பற்றி பேச ஆரம்பித்தாள். என்ன இருந்தாலும் இது அவர்களின் பெர்சனல் விஷயம், ஆனாலும் வேறு வழி இல்லாமல் தான் அதிக்காக பேச செய்தாள். 
“ண்ணா.. அதி.. அவளை பற்றி கொஞ்சம் நினைச்சு பாருங்க.  அவ கண்டிப்பா உங்களுக்கு ஒரு நல்ல துணையா இருப்பா, தருணுக்கும்  நல்ல அம்மாவா இருப்பா, அவ உங்களோடன வாழ்க்கையை எதிர்பார்க்கல, துணையை தான் வேண்டுறா..” 
“தருணுக்காக மட்டும்தான் அவ  உங்களை கல்யாணம் செய்ய கேட்கிறா, இல்லை  அவ கல்யாணமே செஞ்சுக்காம தான் இருந்திருப்பா.. இப்போவும் நீங்க  வேண்டாம்ன்னு சொன்னா இப்படியே தான் இருப்பாளே தவிர, வேற யாரையும் எப்போவும்  கல்யாணம் செஞ்சுக்க மாட்டா, அவளோட வாழ்க்கையையும் கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க”, 
“இப்போ இருக்கிற இந்த உலகத்துல சின்ன குழந்தைகளுக் கு கூட பாதுகாப்பு இல்லை, அப்படி இருக்கிறப்போ அதி போல ஒரு பொண்ணுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்..? அவங்க அப்பா எப்படின்னு நமக்கு நல்லாவே தெரியும், நீங்களும் அந்த வீட்டு மூத்த மருமகன் தான், உங்களுக்கும் அதி வாழ்க்கை மேல கடமை இருக்கு..” என்று சொல்ல, அதுவரை மவுனமாக இருந்த விஷ்வஜித், 
“எனக்கும் அது தெரிஞ்சதால தான் நானே அவளுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறேன் சொல்றேன், நீங்க எல்லாம் ஏன் என்னை நம்ப மாட்டேங்கிறீங்க..?” என்று  ஆற்றாமையுடன் கேட்டான். 
“கண்டிப்பா உங்களை நம்புறோம், ஆனா நீங்களும்  எங்களை நம்பனும் தானே..? உங்களுக்கும், அதிக்கும், தருணுக்கும் இது ஒரு நல்ல வாழ்க்கைன்னு நாங்க சொல்றதை நீங்களும் கேட்டுக்கணும் தானேண்ணா..? உங்களுக்கு அதி மேல இருக்கிற அக்கறை எங்களுக்கும் உங்க மூணு பேர் மேலயும் இருக்கு”, 
“இன்னும் சொல்ல போனால்  உங்க மூணு பேருக்கும் இது  ஒரு மியூச்சுவல்  உறவு தான்..  இங்க  யாராலும் யாரும் பாதிக்கபடல, நீங்க ரெண்டுபேரும் கணவன், மனைவியா  இருக்கிறதும், இல்லாம இருக்கிறதும் உங்க கையிலும், காலத்தின் கையிலும் தான் இருக்கு..”, 
“அதுவரை இந்த உறவை மூணு பேருக்குமான ஒரு குடும்ப அமைப்பை, சந்தோஷத்தை கொடுக்க கூடிய உறவா மட்டுமே கூட பாருங்க, ப்ளீஸ்ண்ணா..”   என்று பேச வந்ததை மொத்தமாக முடித்துவிட்டவள், விஷ்வஜித்தை பார்க்க, அவனின் இறுகி போன முகத்திலிருந்து ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. பார்க்கலாம்.. என்று அவன் யோசிக்க நேரம் கொடுத்து வந்துவிட்டாள்.
“பாரதி..   இங்க என்ன நடக்குது..? என்னை ஒருவார்த்தை கூட கேட்காம நீங்களா எப்படி அதிதியை  விஷ்வஜித்துக்கு உறுதி செய்யலாம்..?” என்று ராமலிங்கம் மனைவியிடம் சண்டைக்கு நிற்க,  அவரை வெறுப்பாக பார்த்தவர், 
“உங்களை எதுக்கு கேட்கணும்..?” என்று கேட்டார். 
“எதுக்கு கேட்கணுமா..? நான் அவளோட அப்பா..? என்னை கேட்க வேண்டாமா..?” என்று சத்தமாக கத்தியவரை புழுவை போல் பார்த்த பாரதி, 
“என் பொண்ணுங்க பிறக்க நீங்க காரணமா இருந்ததை தவிர, வேறென்ன என் பொண்ணுங்களுக்கு நீங்க செஞ்சிங்க..? அப்பாங்கிற உறவுக்கு இதுவரை என்ன நியாயம் செஞ்சுருக்கீங்க..? எப்போ பார்த்தாலும் பணம்.. பணம் மட்டும் தான், அதை  பார்த்து தான் தர்ஷினி வாழ்க்கையை கெடுக்க பார்த்தீங்க..”

Advertisement