Advertisement

காதல் ஆலாபனை  25 2 
“மேம்.. உங்களை பார்க்க தீக்ஷிதா மேம் வந்திருக்காங்க..” என்று ஹோட்டல் அலுவலக அறையில் இருக்கும் சுபாவிடம் ரிஷப்ஷன் பெண்மணி போன் செய்து  சொல்லவும், ஆனந்தை திரும்பி பார்த்த சுபாவின் முகம் யோசனையை காட்டியது. 
“வரச்சொல்லுங்க..” என்று வைத்த  சுபா, “தீக்ஷி  ஏன் என்னை பார்க்க வந்திருக்கா..?”  என்று கணவனிடம் கேட்டார். 
“எதுக்கு வந்திருக்கான்னு தெரியல, ஆனா அவ  உன் மருமகங்கிறதை மனசுல வச்சிக்கிட்டு பொறுமையா பேசு, இது முடிஞ்சுபோற உறவு கிடையாது..”  என்று மனைவியின் கோவம் புரிந்து தணிவாகவே சொன்னார் ஆனந்தன். 
“ம்ம்..”  என்று முணுமுணுத்த சுபா, தீக்ஷி ரூமிற்குள் வரவும், “வா.. உட்காரு..” என்று சேரை காட்டியவர், அவளுக்கு காபி வரவைத்தார். ஆனந்தன் மருமகளிடம் பொதுவாக பேச, அவரிடம் பேசி கொண்டிருந்த தீக்ஷியின் பார்வை லேசான தயக்கத்துடன் சுபாவை தொட்டு தொட்டு மீண்டது. 
“என்னடா இது..? இவ எப்போவும்  என்னை கெத்தா நேருக்கு நேர்  தானே பார்ப்பா, இப்போ என்ன புதுசா கண்ணு டேன்ஸ் ஆடுது..”  என்று மாமியார், மிக சரியாக மருமகளின் நாடியை பிடித்துவிட்டார். 
ஆனந்தனும் சில நிமிடங்கள் பொதுவாக பேசியவாறே இருந்தவர், தீக்ஷியின் வித்தியாசமான தடுமாற்றத்தில் பேச்சை நிறுத்திவிட்டு மாமியாரையும், மருமகளையும் புரியாமல் பார்த்தவர், “நீங்க பாருங்க.. நான் இதோ வந்துடுறேன்..” என்று இருவரையும் தனியாக விட்டு கிளம்பியவர், வெளியே வந்து சின்ன மகனுக்கு போன் அடித்தார். 
“ஜித்து.. தீக்ஷி அம்மாவை பார்க்க வந்திருக்காடா, ஏதாவது பிரச்சனையா என்ன..?” என்று கேட்டார். 
“என்ன..? உண்மையாவா..? என்று ஜித் ஆச்சரியமான சிரிப்புடன் கேட்க, 
“டேய்.. நான் என்ன பொய்யா சொல்லிட்டிருக்கேன்..?, இப்போதான் வந்தா, ரெண்டு பேரும் ஆபிஸ் ரூம்ல இருக்காங்க, தீக்ஷி எதோ ரொம்ப ஸ்ட்ரெஸா தெரியறா..” என்று ஆனந்தனும் மருமகளை கவனித்து சொன்னார்.  
“ஓஹ்..  சரி, நீங்க வெளியவே இருங்க, நான் கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்..” என்று போனை வைத்தவன், ஹோட்டலுக்கு கிளம்பிவிட்டான். 
“சொல்லு.. என்ன விஷ்யம்..?” என்று சுபா முகத்தை தூக்கி வைத்து திமிராக கேட்க,
“அது.. விஷூ அண்ணா பத்தி கொஞ்சம் பேசணும்..”  என்று தீக்ஷி  சொல்லவும்,  
“என்ன..? என்ன சொன்ன நீ..?” என்று சுபா கோவமாக  அதட்டினார்.
“நாம இன்னும் பேசவே ஆரம்பிக்கலையே..? அதுக்குள்ள எதுக்கு கோவப்படுறாங்க..?” என்று தீக்ஷி அவரின் திடீர் கோவத்தில் புரியாமல்  பார்த்தாள். 
“விஷூ அண்ணாவா..?  அவன் என்ன  உனக்கு  அண்ணனா..?  அப்போ என் சின்ன மகன் என்ன உனக்கு தம்பியா..?”  என்று  அதட்டவும், அவரை கண்ணை சுருக்கி  பார்த்து தன் அதிருப்தியை காட்டியவள், 
“எனக்கு அவர் அண்ணா போலத்தான்..” எனவும், 
“அண்ணா போலன்னா அண்ணா கூப்பிடணுமா என்ன..?  ஒழுங்கா மாமான்னே கூப்பிடு, தம்பியை கட்டிக்கிட்டு அவனோட அண்ணாவா  நீயும் அண்ணான்னு கூப்பிட்டா  கேட்க சகிக்காது..” என்றவரிடம்,  
“இப்போ வாக்குவாதம் செய்ய வேண்டாம், பின்னாடி பார்த்துக்கலாம்..”  என்று தோன்ற, சரி.. என்று தலையாட்டி விட்டாள். 
“சொல்லு.. விஷூவை பத்தி என்ன பேசணும்..?” என்று கறாராக திரும்ப கேட்டவருக்கு அவள் பேச வந்தது புரிந்தது போல் இருந்தது. 
“விஷூ அண்..   விஷூ மாமா..” என்று சுபாவின் அதிகார முறைப்பில் கடுப்புடன்  முறையை மாத்தியவள், “விஷூ மாமா.. அதி கல்யாணத்தை பத்தி பேசணும்..” என, 
“அதை பத்தி பேச என்ன இருக்கு..? அதான் எல்லாருமா சேர்ந்து திருட்டு தனமா தட்டு மாத்தி உறுதி செஞ்சுட்டிங்க இல்லை, அப்பறம் என்ன..?” என்று சுபா வெறுப்புடன் சொன்னார்.  
“எல்லோர் முன்னாடியும் முறைபடி தான் தட்டை மாத்தியிருக்கு.. இதுல திருட்டு தனம்  எங்க வந்தது..? நீங்க கூட அங்க தான் இருந்தீங்க..” என்று தீக்ஷி  மாமியாருடன் போர் முரசு கொட்ட ஆரம்பித்துவிட்டாள். 
“நான்  அங்க இருந்தா மட்டும் அது நேர் வழி ஆகிடுமா..? என்னை கேட்காம, என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாமல்  உறுதி செஞ்சா அது ஏமாத்து வேலை, திருட்டு தனம்  தான்..” என்று மாமியாரும் “நான் உனக்கு சளைத்தவள் இல்லை..” என்று  மருமகளுடன் மோத  ஆரம்பித்தார். 
“உங்ககிட்ட கேட்டிருக்கணும் தான்.. ஆனா உங்களுக்கு தான் உங்க  மகனோட வாழ்க்கையை பத்தி எந்த அக்கறையும்  இல்லையே, அப்படி இருக்கிறப்போ உங்ககிட்ட கேட்டு மட்டும் என்ன ஆகிட போகுதுன்னு கேட்காம விட்டிருக்கலாம்..” என்று தீக்ஷி  சொல்லவும்,  வீறு கொண்டெழுந்த சுபா, 
“யாரை பார்த்து என்ன பேசுற நீ..? எனக்கு என் மகனோட வாழ்க்கை மேல  அக்கறை இல்லைங்கிற..? என்ன தைரியம்  உனக்கு..?”  என்று சூடாக கேட்டார். 
“இப்போவும் சொல்றேன், உங்களுக்கு உங்க மகன்களோட வாழ்க்கை  மேல  அக்கறை  இல்லை தான்.. உங்களுக்கு இருக்கிறதெல்லாம் உங்க ஈகோ, சுயநலம் தான்..”  என்று  முகத்துக்கு நேரே குற்றம் சொன்னவளை வெறித்து பார்த்த சுபா, 
“நீ என்ன பேசுறேன்னு யோசிச்சுதான் பேசுறியா…? இவ்வளவு நேரம் என் மகனுக்காக மட்டும் தான் உன்னை பொறுத்துகிட்டேன், இனியும் என்கிட்ட அதை எதிர்பார்க்காத, வார்த்தைகளை அளந்து பேசு..” என்று ஆத்திரத்தில் முகம் சிவக்க கொதித்தவரை நிதானமாக பார்த்த தீக்ஷி, 
“நான் என்ன தப்பா சொல்லிட்டேன்..? தர்ஷினி அக்கா மாதிரி ஒரு மருமகள் உங்களுக்கு கிடைச்சும்   நீங்க அவங்களை  கடைசி வரை புரிஞ்சுக்கவும்  இல்லை,  ஏத்துக்கவும் இல்லை, ஏன்..? உங்க ஈகோ.. தான் காரணம்..”
“அது என்னோட ஈகோ இல்லை, அவ அந்த ஏமாத்துக்கற ராமலிங்கத்தோட மகள், அவளை நம்பி எப்படி  என்னோட வீட்டுக்குள்ள விடுவேன்..? அவளுக்கும்  அவங்க அப்பா புத்தி அவளுக்கு  கொஞ்சம் கூட இல்லாமல போயிடும்..” 
“ம்ஹூம்..  தப்பு.. அவங்க அப்பாவை வச்சி தர்ஷினி அக்காவை நீங்க ஒதுக்கி வச்சது ரொம்ப பெரிய தப்பு.. அவங்க உங்க மருமகளா இருந்த அத்தனை வருஷத்துல உங்களை எவ்வளவு ஏமாத்தியிருக்காங்கலாம்..? சொல்லுங்க பார்ப்போம்..?”  என்றவளின் கேள்விக்கு பதில் இல்லாமல் திணறியவரை ஓர் முடிவோடு பார்த்தவள், 
“நீங்க அக்கா மேல  வச்சிருக்கிற உயர்ந்த  அபிப்ராயத்தால அவங்க மனசார வீட்டு செலவுக்கு கூட விஷூ அண்ணாகிட்ட காசு  கேட்க மாட்டங்க, அவரா கொடுத்தா தான் உண்டு, அப்படி இருக்கிறப்போ மத்த செலவு எல்லாம் அவங்க செஞ்சு நான் பார்த்ததே இல்லை..”, 
“எனக்கு தெரிஞ்சே துணி கூட ரொம்ப எடுத்துக்க மாட்டாங்க, அம்மாதான் எங்களுக்கு எடுக்கிறப்போ அவங்களுக்கும், தருணுக்கும் எடுத்து கொடுப்பாங்க, இது எல்லாம் விஷூ அண்ணாக்கு தெரியவும் தெரியாது,  அவர்கிட்ட தன்னுடைய வருத்தத்தை சொல்லி, அவரை சங்கடபடுத்தவும் மாட்டாங்க..”
“விஷூ அண்ணா  எப்போவாவது வற்புறுத்தி நகை எடுத்துக்கொடுப்பாங்க, ஆனா அதுகூட  மொத்தமே ஒரு பத்து பவுன் நகை தான் இருக்கும், அதையும் அவங்க போட்டுக்கவே இல்லை,  நாங்க எடுத்து கொடுத்த நகை தான் அவங்க கடைசி வரை போட்டுட்டு  இருந்தது..”
“தர்ஷினி அக்கா  ஆசைபட்டது எல்லாம் நீங்க  அவங்களை ஏத்துக்கணும், உங்க  மகனை, பேரனை ஏத்துக்கணுங்கிறது மட்டும் தான், ஏன் அவங்க  இல்லாம போற கடைசி நிமிஷம் வரை அவங்க ஆசை அதுதான் தவிர, உங்க சொத்து,  காசு கிடையாது.. ஆனா  நீங்க  கடைசி வரை அவங்களை ஏத்துக்காமலே  தண்டிச்சுட்டேங்க..”
 “இப்போ நான் சொன்னதை எல்லா   நீங்க  ஒரு நிமிஷம் உட்கார்ந்து யோசிச்சிருந்தாலே உங்களுக்கே புரிஞ்சிருக்கும். ஆனா நீங்க  யோசிக்கவே  ரெடி இல்லை,  என்னை கேட்காம எப்படி  அவன்  கல்யாணம் செஞ்சுக்கலாம், எங்க அப்பா எப்படி கல்யாணம் செஞ்சு வைக்கலாம்ங்கிற கண்மூடி தனமான கோவம்..”
“இது எல்லாம்கூட பரவாயில்லை.. தருண்.. உங்க பேரன்  தருண்.. அவனை பார்க்க கூட  நீங்க வரவேஇல்லை..  உங்க கண்ணுக்கு அவன் தர்ஷினியோட மகனா மட்டும் தான் தெரிஞ்சான்,  உங்க மகனோட மகனா.. உங்க பேரனா ஏன் தெரியல..? ஏன்னா ஈகோ, வீண் பிடிவாதம்..”  என்று சுபாவின் முகத்திற்கு நேரே சொல்லிய  தீக்ஷி, 
“இப்போ சொல்லுங்க.. இதுல உங்க மகன் மேல நீங்க வச்சிருக்கிறதா  சொன்ன அக்கறை எங்க இருக்கு..? இத்தனை வருஷத்துல உங்க மகனுக்கு நீங்க என்ன செஞ்சு இருக்கீங்க..?   உங்க மகன்  வேணும்ன்னு எந்த இடத்துல விட்டு கொடுத்தீங்க..? எங்கேயும் இல்லை…”
 “நீங்க உங்க பிள்ளைகளுக்காக பார்க்க மாட்டீங்க, விட்டு கொடுக்க மாட்டீங்க.. ஆனா அவங்க மட்டும் உங்களுக்காக பார்க்கணும்.. விட்டு கொடுக்கணும்.. அப்படித்தானே..?  இதுக்கு பேர் என்ன தெரியுமா..?  சுயநலம்..!!”  என்று  இறுதி வார்த்தையை மிகவும் நிதானமாக உச்சரித்தவளை அசைவில்லாமல் பார்த்து கொண்டிருந்தார் சுபா.
“இதுவரைக்கும் கூட பரவாயில்லை, ஆனா இப்போவும்  நீங்க  அதிதியையும் மருமகளா ஏத்துக்க முடியாதுன்னு ஆரம்பிக்குறீங்க..? ஏன்..? அவ நீங்க பார்த்த பொண்ணு இல்லை.. ராமலிங்கத்தோட பொண்ணு.. உங்க முதல் மருமக தர்ஷினியோட தங்கச்சி.. இதுதானே..? மறுப்படியும் அதே தப்பை செய்றீங்க..”
“பத்து வருஷத்துக்கு முன்னாடி இருந்த விஷூ அண்ணா பிஸ்னஸ்.. பிஸ்னஸ்ன்னு ஓடிட்டே இருந்தவர், அவரோட அந்த ஓட்டத்துக்கு தர்ஷினி அக்கா எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல் அவரை புரிஞ்சு அனுசரிச்சு நடந்துக்கிற பொறுப்பானவங்க..”
“ஆனா  இப்போ இருக்கிற விஷூ  அண்ணா அப்படி இல்லை, அவருக்கு இப்போ தேவை எல்லாம்  அதி போல ஒரு துணை.. அவரை பத்தி  எல்லாம் தெரிஞ்சவ, தருணுக்கு அம்மாவா இருக்க ரொம்ப சரியானவ.. அவரோட வேதனையிலிருந்து அவரை வெளியே எடுத்துட்டு வரக்கூடியவ.. அவரோட அந்த முரட்டு குணத்தை, அவசரதனத்தை முழுசும் புரிஞ்சு அவரை அப்படியே ஏத்துக்க கூடியவ..”
“இதெல்லாம் நீங்க பார்த்திருக்கிற  பொண்ணுகிட்ட இருக்கா..? அவளால தருணுக்கு ஒரு நல்ல  அம்மாவா இருக்க முடியுமா..? இல்லை விஷூ அண்ணா கேரக்டரைதான் ஏத்துக்க கூடியவளா இருக்காளா..? சொல்லுங்க.. இப்போவே அதி சம்மந்தத்தை நிப்பாட்டிருவோம்..” என்று மூச்சு விடாமல்  சவாலாகவே கேட்க, சுபாவிற்கு வாயடைத்தநிலை.. 
அவரின் நிலையை  பார்த்த தீக்ஷிக்கு ஆதங்கமே மிஞ்சியது. இவர் மட்டும் சரியாக  இருந்திருந்தால் தர்ஷினி அக்காவாவது உயிரோடு  வாழ்ந்திருப்பார்.. தருணும் அம்மா எனும் உறவு இல்லாமல் துடிக்கமாட்டான்.. என்ற ஆற்றாமை உண்டாக அடைத்த தொண்டையுடன் தவித்தவளின் முன் தண்ணீர்  டம்ளர் நீட்டபட்டது.  நிமிர்ந்து பார்த்தவளுக்கு இந்திரஜித் தெரிய, கலங்கும் கண்களுடன், அவன் கொடுத்த தண்ணீரை வாங்கி ஒரே மூச்சாக குடித்தாள். 
“சுபா..”  என்ற ஆனந்தன், சிலையாக  அமர்ந்திருந்த மனைவியை தோள் தட்டி கூப்பிட, “ம்ம்..”  என்று உணர்வில்லாமல் பார்த்தவரை வயிற்றோடு அணைத்து கொண்டார். அவரின் அந்நிலை தீக்ஷிக்கு எவ்விதமான உணர்வையும் கொடுக்கவில்லை. 
இத்தனை வருட தன் ஆதங்கத்தை, கோவத்தை,  எல்லாம் அவரிடம் கொட்டிவிட்டாள். அவ்வளவே.. தான் பேசியதில் சுபா மனது மாறுவார் என்ற நம்பிக்கையும் இல்லை,  அவரிடம் கேட்கவேண்டும் என்று தோன்றியது.. கேட்டுவிட்டாள், அதுவும்  விஷூ, அதிக்காக மட்டுமே.. தனக்காக கேட்க வேண்டும்.. பேச வேண்டும்.. என்ற எண்ணம் சிறிதும் இல்லை”. 
தங்களுடைய  அந்த இலை மேல் தண்ணீர் உறவு, தான் இன்று பேசிய பேச்சால் சிதறி கூட போகலாம்..  போகட்டும்.. என்ற முடிவிலே மனம் திறந்து எல்லாவற்றையும் கேட்டுவிட்டவள், 
“எனக்கு  தெரிஞ்சு நான் எதுவும் தப்பா பேசல, உங்களுக்கு அப்படி தோணியிருந்தா சாரி..  இந்த சாரியும் இவருக்காக மட்டுமே..!!”  என்று இந்திரஜித்தை பார்த்து கை காட்டி சொன்னவள், ஆனந்தனை பார்த்து தலையசைப்புடன் கிளம்பிவிட்டாள்.  
“தீக்ஷி.. இவ்வளவு நேரம் எங்க போயிருந்த நீ..? நாங்க எல்லாம் ஷாப்பிங் போக ரெடியாயிட்டோம்.. நீயும் கிளம்பு போலாம்..” என்று வீட்டிற்கு வந்த தீக்ஷியிடம்  மனோஜூம், அதிதியும்  கேட்க, 
“நான் வரல.. நீங்க போங்க.. கொஞ்சம் வேலை இருக்கு..” என்றவளின் சோர்வை உணர்ந்த மனோஜ், 
“என்ன ஆச்சு தீக்ஷி..? ஏதாவது பிரச்சனையா..?” என்று கேட்டான். 
“பிரச்சனை எல்லாம் ஒண்ணுமில்லை, கொஞ்சம் டையார்ட், அவ்வளவுதான், நீங்க கிளம்புங்க, அதி எனக்கு  இதெல்லாம் வாங்கிட்டு வந்துரு..” என்று லேசான சிரிப்புடன்  ஷாப்பிங் லிஸ்ட்  சொல்ல, அவள் சொல்வதை ஏற்று கொண்டவர்கள், கிளம்பிவிட, தீக்ஷி சோபாவிலே கண் மூடி படுத்துவிட்டாள். 
எனோ மனம் மிகவும் லேசாக உணர்ந்தது. இத்தனை வருட தன் கோவத்தை, ஆதங்கத்தை, கேள்வியை உரியவரிடமே கேட்டுவிட்டு வந்துவிட்டாள். இப்போது தான் தர்ஷினிக்கு சிறிது நியாயம் செய்த்து போல் இருந்தது.  
“ஒய்.. என்னடி எங்க அம்மாவை கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்க சொல்லி பேச சொன்னா, நீ என்னடான்னா அவங்ககிட்ட  சண்டை போட்டு வந்து ஜம்ன்னு படுத்திருக்க..”  என்ற இந்திரஜித்தின் குரல் கேட்க, கண் திறந்து பார்த்தவளுக்கு அவளின் எதிரில் தரையில் முட்டி போட்டு அமர்ந்திருந்த இந்திரஜித் தெரிந்தான். 
“க்கும்..” என்று  உதடு  சுழித்தவள், மறுபடியும் கண் மூடி கொள்ள, தன் இருவிரல் கொண்டு அவளின் சுழித்த உதட்டை சேர்த்து பிடித்தவன்,  “என்ன திமிரா..?” என்று அதட்டினான். 
“ம்ம்ம்..” என்று கண்திறந்து உதட்டை இழுக்க பார்த்தவளை குறுஞ்சிறுப்புடன்  பார்த்தவன், 
“எனக்கு ஒரே ஒரே முத்தா மட்டும் கொடுப்பியாம்.. நான் உன் உதட்டை விட்டுடுவேனாம்..” என்று டீல் பேசியவனை முறைத்து பார்த்தவள்,  திரும்பவும் கண்மூடி கொண்டாள். 
“என்னடி.. ரொம்பத்தான் ரவுசு காட்டுற, என்ன என்கிட்ட பேசமாட்டியா..?” என்று அவளின் உதட்டை விட்டு கேட்டான். அதற்கும் பதில் சொல்லாமல் முகம்  திருப்பி படுத்து கொண்டவளை கண்ணை சுருக்கி பார்த்தவன், 
“ஓஹ்.. என்மேல கோவம், இருக்கட்டும், எனக்கென்ன..? உன்னை பேசசொல்லி எல்லாம் நான்  கெஞ்சமாட்டேன், பார்த்துக்கோ..” என்று  அலட்சியத்துடன் சொல்ல, அதற்கும் பதில் இல்லை. 
“இங்க பாருடி.. உன்கிட்ட தான் சொல்றேன், நீ பேசலைன்னு நான் ஒன்னும் உன்பின்னாடியே சுத்தமாட்டேன்.. கண்டுக்காம போயிடுவேன், தெரிஞ்சுக்கோ..” என்று கோவம் வெளிப்பட பேசியவனுக்கும் பதில் மவுனமே இருக்க, அவளின் புதிதான ஒதுக்கத்தில் மண்டை காய்ந்த இந்திரஜித், 
“இதுதான் கடைசி.. ஒழுங்கு மரியாதையா என்னோட பேசிடு, இல்லை, நான் போயிட்டே இருப்பேன், உங்கிட்ட எல்லாம் உட்கார்ந்து கெஞ்சிட்டிருக்க மாட்டேன்..”  என்று அதையே திரும்ப திரும்ப பேசியவனிடம், “போலாம்..” என்பது போல் வாசல் புறம் கையை நீட்டிவிட, இந்திரஜித்திற்கு ரத்த அழுத்தம் எகிறியது. 
“நீ என்னடி என்னை போக சொல்றது, இது என் மாமனார் வீடு, எனக்கு இங்க எல்லா உரிமையும் இருக்கு”, என்று பொங்கியவன்,   “சுப்பு..  காபி” என்று உரிமையாக குரல் வேறு கொடுத்தான். அதில் தீக்ஷிக்கு மெலிதான சிரிப்பு அரும்ப, முகம் திருப்பி கண்மூடியே படுத்திருந்தாள். 
“ராட்சஸி..”  என்று அவளை அர்ச்சித்தபடியே சுப்பு கொடுத்த காபியை கஷாயம் போல் முகம் சுருக்கி விழுங்கினான். 
“இப்போ என்னதான் சொல்ல வர  நீ..?”  என்று அவளின் தொடர் மவுனத்தில் கடுப்பாகி கத்தியவன்,  “இது ஹாலா போயிடுச்சு, இல்லை என்கிட்ட  பேசமாட்டேன்னு சொல்ற உன் உதட்டை இழுத்து வச்சி கடிச்சு வச்சிருவேன்.. பார்த்துக்கோ..”  என்று மிரட்டியவன், 
“ஏற்கனவே கழுத்துல கடிச்சது மறந்து போயிடுச்சா..?” என்றவாறே  கிட்சனை நோட்டம் விட்டவனின் கை விரல்கள் தீக்ஷியின்  கழுத்தை ரசனையாக தடவ, தீக்ஷி  கோவம் கொண்டு  அவனின் விரலை தட்டிவிட்டாள். 
“ஏய்.. என்னடி விரலை தட்டிவிடர, அந்தளவுக்கு ஆகி போச்சா.. உன்னை..” என்று கோவம் கொண்டு கத்தியவன், பட்டென அவளின் கழுத்தில் அழுத்தமான முத்தம் பதித்துவிட,  கூசி அதிர்ந்த தீக்ஷி வேகமாக எழுந்து அமர்ந்து  சிவந்த முகத்துடன்  அவனை முறைத்தாள். 
“எப்படி..?”  என்று புருவத்தை தூக்கி மிதப்பாக கேட்டவன், “இனியும் என்கிட்ட பேசமாட்டேன்னு  முகம் திருப்புன நான் என்னோட கோவத்தை காட்ட வேறெடத்தை சூஸ் செய்ய வேண்டியிருக்கும் பார்த்துக்கோ..” என்று அவளின் அவள் உடல் மொத்தத்தையும் பார்த்து  கண்ணடித்து  மிரட்ட, தீக்ஷிக்கு மொத்தமும் சிவந்து போனது. 

Advertisement