Advertisement

காதல் ஆலாபனை  25 1
“இது எல்லாம் நீ பார்த்த வேலை தான்னு எனக்கு நல்லா தெரியும்..?” என்று சுபா  இளைய மகனை பார்த்து கோவத்தோடு பொரிய, அவனோ  யாரோ யாரையோ சொல்கிறார் என்பது போலே கண்டு கொள்ளாமல் நின்றிருந்தான். 
“ஜித்து.. நான் உன்கிட்ட தான்  கேட்கிறேன்..? என்ன இதெல்லாம்..?” என்று நான்  இதை விட மாட்டேன் என்ற முடிவோடு நின்ற சுபாவை பார்க்காமல் ஆனந்தை  பார்த்த இந்திரஜித், 
“இப்போ என்ன  தெரியணுமாம் உங்க பொண்டாட்டிக்கு..?” என்று மூன்றாம் மனிதரை பார்த்து கேட்பது போல் கேட்க, சுபாவிற்கு கண்கள் கலங்கும் போல் இருந்தது. “இவர்கள் முன் அழுவதா..?” என்ற வைராக்கியம் உண்டாக, கண்ணீரை நொடியில் கட்டுக்குள் கொண்டு வந்தவர், 
“என் பசங்களுக்கு பொண்ணு  பார்த்து கல்யாணம் செய்ற உரிமை எனக்கு இந்த ஜென்மத்துல கிடையவே கிடையாதான்னு தெரியணும்..” என்றார் மிகவும் ஆற்றாமையுடன். 
அவரின் கேள்வியின் பின் ஒளிந்திருந்த அவரின் காயம் புரிந்த அனைவருக்குமே அவரின் மேல் இரக்கம் சுரந்தது. அவர்களின் இரக்க பார்வையை அடியோடு வெறுத்த சுபா, அங்கு நிற்க முடியாமல்  முகம் திருப்பி கொண்டு சென்றுவிட, “நீங்க பார்த்துக்கோங்க, நான் அம்மாவோட போறேன், நாம அப்பறமா பேசலாம்..” என்று ஆனந்தன் மனைவியின் பின்னே சென்றார்.
“விஷூ.. இப்போ என்ன நடந்துச்சுனு  நீ இவ்வளவு கோவப்படுற..?” என்று பெற்றவர்கள் சென்றுவிடவும், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றிருந்த அண்ணனின் தோள் மேல் கை வைத்து இந்திரஜித் மிகவும் சாதாரணமாக கேட்க, வெடித்த அண்ணன்காரன், அவன் தோள் தொட்ட கையை பிடித்து ஒரே திருப்பாக திருப்பியவன், 
“என்ன கேட்ட..? எதுக்கு இவ்வளவு கோவப்படுறேனா..? ஆங்..” என்று தம்பியின் கையை விடாமல் முறுக்க, வலியில் குதித்த தம்பி, “டேய்.. டேய் வலிக்குது, விடுடா, விடுடா..” என்று கத்தவே செய்தான். அவனின் நிலையை பார்த்த தீக்ஷிக்கு சிரிப்பு  வந்துவிட சிறிது சத்தமாகவே சிரித்துவிட்டாள். அவளின் சிரிப்பு சத்தத்தில் அவளை பார்த்த  இந்திரஜித், 
“ராட்சஸி..  ஓடி வந்து காப்பாத்தாம சிரிக்கவா செய்ற..? இருடி.. உனக்கு இருக்கு இன்னைக்கு..?” என்று மனதில் குறித்து வைத்து கொண்டிருந்தவனின் கையை அண்ணன்காரன் இன்னும் வேகமாக முறுக்க, வலியை தாங்க முடியாத தம்பி, அண்ணனின் காலை ஒரே தட்டு தட்டி தள்ளிவிட்டவன், முறுக்கிய கையை நீவி விட்டு கொண்டான். 
“விஷூ.. இது கொஞ்சம் கூட சரியில்லை பார்த்துக்கோ..” என்று வலியில் முகம் சுழித்து சொன்னவனை கொலை வெறியோடு முறைத்த அண்ணனின் எண்ணத்தை கண்டு கொண்டவன், 
“விஷூ.. நீ நம்ம  தலைவர் பேன்.. அவர் என்ன சொல்லியிருக்கார், பேச்சு.. பேச்சா தான் இருக்கனும்ன்னு சொல்யிருக்கார்.. அவர்  வார்த்தையை மீறாத.. அப்பறம்  நீயே  உன் தலைவனுக்கு துரோகம் செஞ்ச மாதிரி ஆகிடும் பார்த்துக்கோ..” என்று உஷாராக சொன்னவனை ஆத்திரத்துடன் பார்த்த அண்ணன், 
“ஜித்து.. இது ஒன்னும் விளையாட்டு கிடையாது, என்ன செஞ்சு வச்சிருக்க நீ..? இது எல்லாம் ரொம்ப தப்பு..” என்று சீரியசாக சொன்னான். 
“விஷூ.. நீ இவ்வளவு கோவப்படுற அளவு எதுவும் தப்பா செஞ்சுடல..” என்று தம்பியும் விளையாட்டை கைவிட்டு உறுதியாக பேசினான். 
“இதுல என்ன தப்பு இல்லைங்கிற நீ..? இது சரியா வராதுடா.. எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல..” என்று சொல்ல, அதிதிக்கு தலையை தூக்க முடியவில்லை. மகளின் நிலையை பார்த்து கண்ணீர் விட்ட பாரதி, 
“தம்பி.. அவங்க அப்பாவை நினைச்சு என் பொண்ணை கட்டிக்க மாட்டேங்கிறீங்களா..?” என்று கேட்டார். 
“அப்படி நான் நினைச்சிருந்தா தர்ஷினியைவே கல்யாணம் செஞ்சிருந்திருக்க மாட்டேன், அவர் யார் எனக்கு..?” என்று  ராமலிங்கத்தை  எந்தளவு தள்ளி நிறுத்த முடியுமோ அந்தளவு தள்ளி வைத்து பேசினான். 
“அப்பறம் ஏன் தம்பி உங்களுக்கு அதிதியை பிடிக்கல, ஒரு வேளை அவளுக்கு பிள்ளை..” என்று அவர் சொல்ல வரும் போதே, 
“நிறுத்துங்க.. எங்க வச்சு என்ன  பேசுறீங்க நீங்க..?” என்று பாரதியை பார்த்து கடிந்தவன், அங்கிருந்த  தருணை உள்ளே அழைத்து போக சொல்லி மனோவிடம் சொல்லியவன், “இந்த விஷயம் எல்லோருக்கும் தெரியணும்ங்கிறது இல்லை..” என்று கண்டிப்புடன் சொன்னான். 
“இல்லை தம்பி.. ராணி இருந்தவரை அவதான் எங்களுக்கு  ஒட்டு மொத்த சொந்தமாவே  இருந்தா, இப்போ அவளுக்கு அப்பறம்  நீங்க எல்லாம் தான், உங்களை தவிர  வேற யாரையும் நாங்க சொந்தமா நினைச்சதும் இல்லை, எதுனாலும் உங்ககிட்ட தான் வந்து நிற்கிறோம்.. “
“ஏன் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அதிக்கு ஆக்சிடென்ட் ஆகி ஹாஸ்பிடல்ல இருக்கான்னு தெரிஞ்சப்போ கூட  நான் உதவி கேட்டு உங்ககிட்ட தான் வந்தேன், நீங்களும், சின்ன தம்பியும் சேர்ந்து தான் அவளுக்கு எல்லாம் பார்த்தீங்க, இப்போவும் உங்ககிட்ட வந்து நிக்கிறேன்.. என் பொண்ணுக்கும், அம்மா இல்லாத என் பேரனுக்கும் ஒரு நல்ல வழியை காட்டுங்க தம்பி..” என்று  கண்ணீர் மல்க கேட்க, விஷூக்கு மிகவும் அசைவுகரியமான நிலை. 
“நீங்க எல்லாம் ஏன் நான் சொல்றதையே  புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்க..? எனக்கு இதெல்லாம் செட் ஆகாது, எனக்கு கல்யாண வாழ்க்கையே வேண்டாம்,  என்னால ஒரு நல்ல கணவனா கண்டிப்பாவே இருக்க முடியாது..”, என்று விஷ்வஜித் உணர்ந்து உறுதியாக சொல்ல, இந்திரஜித் கோபத்துடன் தலையை ஆட்டிக்கொண்டவன். 
“அப்போ அதிக்கு என்ன சொல்ல போற..?” என்று  அண்ணனிடம் பல்லை கடித்து கேட்டான். 
“அதிதிக்கு  சொல்ல என்ன இருக்கு..? அவளுக்கு இருக்கிறது எல்லாம் ஒரு பெரிய குறையே இல்லை, நாமளே யாராவது ஒரு  நல்ல மாப்பிள்ளையா பார்த்து அவளுக்கு கல்யாணம் செஞ்சு வைப்போம், கண்டிப்பா அவளை புரிஞ்சு, ஏத்துகிற  மாப்பிள்ளையா தேடி நானே அவளுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கிறேன், என்னை நம்புங்க, இதெல்லாம் ஒரு காரணமா வச்சிக்கிட்டு என்னை மாதிரி ஆளை ஏன் அவளுக்கு கட்டிக்க வைக்க நினைக்கிறீங்க..? இந்த பேச்சை இதோட  விடுங்க..” என்று தொடர்ந்து மறுப்பவனை ஓர் முடிவோடு பார்த்த  அதிதி, 
“நீங்க என்ன சொன்னாலும் எனக்கு இருக்கிறது எவ்வளவு பெரிய குறைன்னு எனக்கு நல்லா தெரியும், அதுக்காக இப்போ நான் வருத்தப்படவும் இல்லை, எனக்கு  தான் தருண் இருக்கானே..!! அவன் போதும் எனக்கு.. எனக்காக இவ்வளவு கவலைபடற நீங்க தருணை மட்டும் எனக்கு தத்து கொடுத்துருங்க போதும், வேறெதுவும் வேண்டாம்..”, என்று விஷூவை  பார்த்து  நேரடியாக கேட்டாள். 
“நான் தான் முதல்லே இந்த பேச்சு வேண்டாம்ன்னு சொல்லிட்டேன் இல்ல, அவன் தான் என் வாழ்க்கையே..!!, அவனை உனக்கு கொடுத்துட்டு நான் என்ன செய்ய..?” என்று விஷ்வஜித் எரிச்சலுடன் சொல்ல, 
“அப்போ நீங்க வேற யாரையாவது கல்யாணம் செஞ்சு, தருணுக்கு ஒரு நல்ல அம்மாவை கொண்டு வாங்க.. நான் உங்க பக்கமே திரும்பறதில்லை..” என்று அதி இன்று ஒரு முடிவோடு பேசினாள். 
“ஏய்.. என்ன பேசுற நீ..? நான் கல்யாணம் செஞ்சா உனக்கென்ன..? செய்யாம போனா உனக்கென்ன..? நீ உன் வாழ்க்கையை மட்டும் பாரு..” என்று ஆத்திரத்துடன் கொதித்தவனை நிதானமாக பார்த்த அதிதி, 
“நான் உங்ககிட்ட என்ன கேட்கிறேன்..?  ஒன்னு  தருணுக்கு  ஒரு அம்மாவை கொண்டு வாங்க, இல்லை நான் அவனோட அம்மாவா இருக்க உங்க கையால  ஒரு அங்கீகாரம் கொடுங்க.. இதுல ஏதாவது ஒன்னு செய்ங்கன்னு தானே கேட்கிறேன்..? ஆனா நீங்க எதுக்கும் ஒத்துவர மாட்டேன்னு சொன்னா இதுக்கு என்னதான் முடிவு..?”  என்று கேட்ட அதிதியை உறுத்து பார்த்த விஷ்வஜித், 
“என்ன என்னை கார்னர் செய்ய பார்க்கிறியா..?” என்று கேட்டான். 
“இல்லை.. எனக்கும், தருணுக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை கொடுங்கன்னு கெஞ்சி கேட்கிறேன்..” 
 “முடியாதுன்னு சொன்னா என்ன செய்யறதா உத்தேசம்..?” என்று விஷ்வஜித் கண்கள் இடுங்க கேட்க, 
“நீங்க முடியும்ன்னு  சொல்ற வரை காத்திருக்கிறதா உத்தேசம்..!!” என்று அதிதியும்  உறுதியாக சொல்லிவிட, விஷ்வஜித்திற்கு அவளை முறைப்பதை தவிர வேறெதுவும் செய்ய முடியா நிலை. 
அதுவரை இவர்கள் இருவரின் வாக்குவாதத்தை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்த எல்லோருக்கும் அதிதி விஷ்வஜித்திற்கு சரியான பொருத்தம் என்றே தோன்றியது. “சூப்பர் அதி..” என்று இந்திரஜித் கை தட்டி வார்த்தையாகவே சொல்லிவிட்டவன், விஷூவின் நெருப்பு பார்வையில் மேலும் உசுப்பேற்றபட்டது போல்,  
“ஓஹ் சாரி.. சாரி.. அதி சொல்லிட்டேன், அண்ணி தான் சொல்லணும் இல்லை..” என்று அண்ணனை பார்த்து கண்ணடித்து குதூகலமாக  சொல்ல விஷ்வஜித் அங்கு நிற்க பிடிக்காமல் வெளிய சென்று நின்று கொண்டான். 
“அதி.. சேன்ஸே இல்லை, சும்மா பிச்சு உதறிட்ட..” என்று தீக்ஷி சந்தோஷமாக  அவளை கட்டிகொண்டவள், அவளின் கண்ணீரில்,  
“ஏய் அதி.. அண்ணாகிட்ட இவ்வளவு தைரியமா பேசிட்டு இப்போ ஏன் அழுகிற..? அழுகாத..” என்றவாறே  அரவணைப்புடன் அவளின் கண்ணீரை துடைத்துவிட்டாள்.   
“எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு தீக்ஷி, என்னை கல்யாணம் செஞ்சுக்க சொல்லி, நான் என்னோட அக்கா புருஷனை போர்ஸ் பண்றேன்.. நான் நான் எப்படிப்பட்ட பொண்ணு..?” என்று கூனி குறுகி அழுதவளின்  பேச்சை கேட்டு சுற்றி இருந்த எல்லோருமே அதிர்ந்தனர்.. வெளியே நின்றிருந்த விஷ்வஜித்  உட்பட.. 
“அதி என்ன பேச்சு இது..?  நீ  அவரை கல்யாணம் செஞ்சுக்க ஒன்னும் போர்ஸ் செய்யல, அவரோட மகனுக்கு அம்மாவா இருக்கிற  உரிமையை, அங்கீகாரத்தை தான் அவர்கிட்ட கேட்கிற.. இதுல  உன் கேரக்டர் எல்லாம் எங்கிருந்து வந்தது..?,  இப்படி ஏதாவது தப்பு தப்பா யோசிச்சு உன்னை நீயே கஷ்டபடுத்திக்காத..”  என்று தீக்ஷி கோபத்துடன் கண்டித்தாள்.
“அதி.. தீக்ஷி சொல்றது சரி, இதுல போர்ஸ் எங்கிருந்து வந்தது..?, உங்க மூணு பேரோட  நல்ல  எதிர்காலத்துக்காக விஷூகிட்ட சண்டை போடுறோம்  அவ்வளவுதான்.. இதுல நீ இந்தளவு யோசிச்சி உன்னை  நீயே வருத்திக்காத..” என்று இந்திரஜித்தும் அவளை  சமாதானம் செய்ய, அதியின் கண்ணீர் ஓரளவு கட்டுக்குள் வந்தது. 
“ஜித்து..  பந்தி முடிஞ்சது, எல்லோரும் கிளம்புறாங்க பாரு..”  என்று அதுவரை பந்தி கவனித்து கொண்ட கணேஷின் குடும்பத்தார் வர, வந்தவர்களுக்கு  தாம்பூலம் கொடுத்து வழியனுப்பும் வேலையில் ஈடுபட்டனர்.
“ரொம்ப நன்றி சார்..” என்று பங்க்ஷனை முன்னின்று சிறப்பாக முடித்து கொடுத்த  கணேஷின்  கையை பிடித்து விஷ்வஜித் மனதார நன்றி சொல்ல, 
“என் பொண்ணுக்கு செஞ்சதுக்கு நீ ஏன்பா நன்றி சொல்ற..?, அரசு பொண்ணு.. என் பொண்ணு தெரிஞ்சுக்கோ..” என்று செல்லமாக மிரட்டி தன் பாசத்தை காட்டியவர், 
“நீயும் ஒரு நல்ல முடிவா எடுப்பா, இவ்வளவு சின்ன வயசுல தனியா இருக்கிறது எல்லாம் ரொம்ப கஷ்டம், தருணுக்கும் அம்மா கண்டிப்பா வேணும்.., உன் குரு..  அரசு இருந்திருந்தாலும் இதை தான் சொல்லியிருப்பான், அவன் சொல்றதா நினைச்சு யோசிப்பா..” என்று கணேஷ் குடும்பத்தார் அறிவுரையோடு   கிளம்பிவிட, விஷ்வஜித் எதிலோ மாட்டிக்கொண்ட உணர்வுடன் தோட்டத்திற்கு சென்றான். 
தளர்வாக செல்லும் அவனையே கவலையுடன்  பார்த்திருந்த தீக்ஷியின்  முன் வந்து நின்ற இந்திரஜித், “என்ன  அண்ணனுக்காக ரொம்ப கவலைபடுற போல..?” என்று கிண்டலாக கேட்டான். 
“ஏன் கவலை படமாட்டேனா..?” என்று அவனின் கிண்டலான பேச்சில் தீக்ஷி ரோஷத்துடன்  கேட்டாள். 
“பார்த்தா அப்படி  தெரியலையே..?”  என்று உதட்டை பிதுக்கியவனிடம்,
“இப்போ என்ன வேணும் உங்களுக்கு..?” என்று நேருக்கு நேராக பார்த்து  கேட்டாள். “இதை எல்லாம் உடனே கண்டுபிடிச்சுடு..” என்று முணுமுணுத்தவன், 
“எனக்கு என்ன வேணும்..? இதுவரைக்கும் தான் மேடம் பிஸ்னஸ்..  பிஸ்னஸ்ன்னு ஓடியாச்சு, இனியாவது கொஞ்சம் நம்ம குடும்பத்தை கவனிக்கணும்.. என்ன கவனிப்போமா..?” என்று கேட்டான். 
“நான் என்ன கவனிக்கல..?”  என்று அவனின் குற்ற சாட்டில் வருத்தத்துடன் கேட்டாள்.

“என்ன கவனிச்ச நீ..? ஒன்னும் கிடையாது..” என்றவன், “இங்க பாரு அதை பத்தி  எல்லாம் பேசி என்னை  நானே டென்க்ஷன் செஞ்சுக்க விருப்பம் இல்லை..” 
“இப்போ உனக்கு ரெண்டு வேலை.. முதல் வேலை என்னன்னா..?  உன்னோட மாமியார்.. அதாவது உன் வருங்கால புருஷனோட அம்மா.. அவங்க  உன் பாசமலர் சம்மந்தம் பிடிக்காம கோவிச்சிக்கிட்டு ஹோட்டல் போயிட்டாங்க.. அவங்களை சமாதானம் செஞ்சு, இந்த சம்மந்தத்துக்கு ஒத்துக்க வைக்கிற..” என்று நிறுத்த, தீக்ஷி “என்ன இது..?” என்று கண்ணை விரித்து முழித்தாள். 
“இரண்டாவது வேலை என்னன்னா..? உன்  பாசமலரை அதிகூட கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்கிற..?”  என்று சொல்லி முடிக்க, தீக்ஷி இந்திரஜித்தை வெறித்து பார்த்தவள், 
“நீங்க வேணும்ன்னே இப்படி செய்றீங்க..? என்னால எப்படி முடியும்..?”  என்று தீக்ஷி கோபத்துடன் கேட்டாள். 
“எனக்கு அதெல்லாம் தெரியாது..  உனக்கு ஒரு வாரம் தான் டைம், அதுக்குள்ள உன்  மாமியாரையும், உன்  பாசமலரையும் ஒத்துக்க வச்சிருக்கணும் பார்த்துக்கோ..” என்று மிகவும் சீரியஸாக சொல்ல, தீக்ஷி அழுவது போலே பார்த்தவள், 
“இதெல்லாம் நடக்கிற விஷயமா..?” என்று பாவமாக கேட்டாள். 
“நடக்கணும்.. நடந்து தான் ஆகணும்.. ரெண்டு பேரும்  நமக்கு முக்கியம்.. அவங்களை இப்படியே விடமுடியாது தானே..!! இது நம்ம பொறுப்பு, நாமதானே செய்யணும்..” என, 
“அப்போ நீங்களும் செய்யணும்தானே.. என்னை மட்டும் ஏன் மாட்டிவிடுறீங்க..?” என்று உர்ரென்ற முகத்துடன் கேட்டாள். 
“ஏன் நம்ம  குடும்பத்துக்காக நீ எதுவும் செய்யமாட்டியா..? செய்டி.. எல்லாமே நானே செய்யறதால தான் உனக்கு பேமிலி கமிட்மென்ட் தெரிய மாட்டேங்குது, இப்போதிலிருந்து நான் எதுவும் செய்ய மாட்டேன்.. எல்லாமே உன் பொறுப்பு தான்.. நீதான் பார்த்துக்கிற.. பிஸினஸுக்காக மட்டும் கண்ணை மூடிஓட தெரியுது இல்லை.. அதையே இங்கேயும்  கொஞ்சம் காட்டு..”  என்று முடித்துவிட்டான்.
“எனக்கு தெரிஞ்சு போச்சு, நீங்க வேணும்ன்னே என்னை பழிவாங்குறீங்க..?” என்றவளை பார்த்து  உதடு வளைத்து கிண்டலாக சிரித்தவன்,  
“ஆமா.. உன்னை இப்படித்தான் பழிவாங்குவேன் பாரு.. அதுக்கெல்லாம்  வேற பல மேட்டர் இருக்கு..”  என்று குதர்க்கமாய் முடித்தவன்,  தீக்ஷியின் தலையில் மாபெரும் மலையயைவே தூக்கி வைத்துவிட்டு  உதடு  குவித்து கூலாக விசிலடித்தபடி செல்ல தீக்ஷி தான் விழி பிதுங்கி நின்றாள். 
அடி கத்ரினா கைஃபே..
நீதான் எனக்கு   வொய்ப்பே..
என்னோட நீ இருந்தா..
நல்லா இருக்கும்  லைஃபே..
மாட்டிக்கிச்சே..!!   மாட்டிக்கிச்சே..!! 
மாட்டிக்கிச்சே..!!    மாட்டிக்கிச்சே..!!

Advertisement