Advertisement

காதல் ஆலாபனை  24 
தன் நெஞ்சில் முகம் புதைந்திருந்த தீக்ஷியின் நெருக்கமும், அவளின் சுவாச காற்றும் கூட இந்திரஜித்தை சிறிதும் இளக்காமல் விறைத்தே  நிற்க வைக்க, அதிலே அவனின் கோவத்தின் அளவை  புரிந்து கொண்ட தீக்ஷிக்கு  நெஞ்சம் குறுகுறுத்தது.   
இருவரும்  காதலிக்க ஆரம்பித்து பல வருடங்கள் கடந்துவிட்டன,  ஆனால் இருவரும் சேர்ந்து இருந்த நிமிடங்களை மொத்தமாக கணக்கிட்டு  சொல்லி விடலாம். இதில் இடையில் தீக்ஷிக்கு நேர்ந்த  துயரம், அவர்களின் பிரிவு, விஷூ, தருணின் நிலை..  தனியாகவே பிஸினஸை சமாளிக்கும்  டென்க்ஷன் என எல்லாம் சேர்ந்து நாளாக நாளாக ஒரு  விதமான  வெறுமையும், அழுத்தமும் இந்திரஜித்திற்கு  கொடுத்திருக்க,  தாங்க முடியாமல் தீக்ஷியிடமே  சண்டையிட ஆரம்பித்திருந்தான். 
ஆனால் அதுவுமே அவனுக்கு வருத்தத்தை கொடுக்க, “என்ன தான் செய்வது..?” என்ற இயலாமையும் சேர்ந்து அவனை ஒரு வழியாக்கியிருந்தது. இதில் அந்த மினிஸ்ட்டரின் தொடர் தொல்லை, சுபாவின் திருமண  வற்புறுத்தல்.. என்று அவன் அவனாகவே இல்லாமல் போனான். 
“இதற்கு மேல்  முடியாது…?    இதிலிருந்து தன்னை காப்பாற்ற தீக்ஷியால் மட்டுமே முடியும்..!!”  என்று தோன்றிவிட இறுதியில் தீக்ஷியிடமே வந்து நின்றவனுக்கு அவளின் அமைதியும், தயக்கமும் மேலும் அழுத்தத்தை கொடுக்க தாங்க முடியாமல்  வெடித்து விடும் நிலைக்கே சென்றுவிட்டான்.
அதனாலே தீக்ஷியிடம் தன்னை அணைக்கும் படி கேட்டுக்கொண்டவனின் நிலை புரிந்த தீக்ஷிக்குமே தான் அவனை மிகவும் படுத்துகிறோம் என்று புரிய காதலாக ஆறுதல்படுத்த நினைத்தவள், அவனை இன்னும் இன்னும் நெருக்கி அணைத்து கொண்டாள். 
சில நொடிகளிலே அவளின் அளவுக்கு அதிகமான நெருக்கத்தை உடலின் ஒவ்வொரு அணுவிலும் உணர்ந்த  இந்திரஜித்திற்கு கோவம் மறைந்து சுக இம்சைகள் உண்டாக, “ராட்சஸி..!!”   என்று முணுமுணுத்து தானும் அவளை  அணைத்து கொண்டான்.  
அவனின் பதில் அணைப்பும், உடல் இளக்கமும் தீக்ஷிக்கு ஆறுதல் கொடுக்க, லேசாக தன் இறுக்கிய அணைப்பை தளர்த்த முயன்றவளுக்கு இடம் கொடுக்கா இந்திரஜித் “ம்ப்ச்..”  என்று அணைப்பை இன்னும்  அதிகப்படுத்தினான். 
இதோ சிறிது நேரம் முன்பு வரை  வெடித்து விடும் அளவு கோவத்தில் கொதித்து கொண்டிருந்தவனை தீக்ஷியின் சில நிமிட அணைப்பு சமன்படுத்திவிட்டது. இதை தானே..? அவன் அவளிடம் எதிர்பார்ப்பதும்..!!  அவளுக்கு கொடுக்க நினைப்பதும்..!!  
அதற்கு தடையில்லா நிலை வேண்டுமெனில் அது அவர்களின் திருமணத்தால் மட்டுமே சாத்தியம்..!!    என்று எதார்த்தம் புரிந்து தானே அவளை திருமணத்திற்கு கேட்டான். அதை புரிந்து கொள்ளா அவளின் தொடர் மறுப்பு அவனை கோவத்தின் உச்சிக்கு சென்று  நிறுத்தியிருந்தது.  
ஆனால் அவனின் அதிகப்படியான  கோவத்திற்கு காரணமானவளே  அவனின் கோவத்தையும்  குறைத்துவிட, மூச்சை நன்றாக இழுத்துவிட்டு  மேலும் தன்னை சமன்படுத்தியவன்,    “இப்போ சொல்லு தீக்ஷி..? ஏன் நம்ம கல்யாணத்துக்கு இவ்வளவு யோசிக்கிற..?” என்று பொறுமையாக கேட்டான். 
“யோசிக்க எல்லாம் இல்லை..”  என்று தீக்ஷி சொல்லவும்,
“வேறென்ன..? பிஸினஸை பற்றி கவலைபடுறியா..?” என்று கேட்டான். 
“ம்ஹூம்.. எனக்கு இப்போ அந்த டென்க்ஷன் இல்லை, அதான் நீங்க இருக்கீங்களே..!!”  என்று முன்னொரு முறை இதே  காரணத்தால் திருமணத்தை தள்ளி போட்ட தன் மடமையை நினைத்து தடுமாற்றத்துடன் சொன்னாள். 
அவளின் தடுமாற்றத்திற்கான காரணத்தை கண்டு கொண்டவனுக்கு, இப்போதான அவளின் நம்பிக்கையும் புரிய மனம் நிறைந்த உணர்வு. தன்னை அவள் நம்பவேண்டும் என்றே  எதிர்பார்த்திருந்தவனக்கு இப்போதைய அவளின் நம்பிக்கை ஓர் நிறைவை கொடுத்தது. 
“இதை தவிர வேறென்ன..?” என்று லேசான சிரிப்புடனே கேட்டான். “ஒருவேளை திருமண வாழ்க்கையை நினைத்து  தயங்குகிறாளோ..?” என்று நினைத்தே அவனின் குரலில் சிரிப்பு. அதை கவனிக்கா தீக்ஷி, மனோவை நினைத்து கவலை கொண்டிருந்தாள். 
“சொல்லு தீக்ஷி.. என்ன..?” என்று அவளின் உச்சி தலையில் இதழ் பதித்து காதலாக கேட்டான். 
“மனோ..” என்று  தீக்ஷி சொல்லவும், 
“மனோ.. மனோக்கு என்ன..?” என்று இந்திரஜித் புரியாமல் தான் கேட்டான். 
“மனோக்கு என்னவா..?”  என்று தீக்ஷி நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தாள். 
“மனோக்கு என்ன..?” என்று இந்திரஜித் மறுபடியும் கேட்க, 
“இல்லை அவனை தனியா விட்டு  நான் எப்படி கல்யாணம்..? அவனுக்கு நான் இருக்கனும் தானே..” என்று தீக்ஷி சொல்லும் போதே அவள் சொல்ல வருவது புரிந்த இந்திரஜித்திற்கு  இறங்கிய கோவம் மீண்டும் பலமடங்கு ஏறியது.  
“அதானே பார்த்தேன்..?”  என்று உள்ளுக்குள் கொதித்தவன், “அதாவது நான் சுயநலமா  என்னை பத்தி மட்டுமே யோசிச்சு,  உன்னை கல்யாணம் செஞ்சு என்கூடவே கூட்டிட்டு போயிடுவேன்.. உன் தம்பிய தனியா தவிக்க விட்டுடுவேன், அவனை பார்த்துக்க மாட்டேன்.. அவனுக்கு எதுவும் செய்ய மாட்டேன்.. அவனை கவனிச்சுக்க மாட்டேன்…  இதை தானே நீ சொல்ல வர..? என்று கண்களில் கனலுடன் கூர்மையாக கேட்டவனின் கை தீக்ஷியின் தோளில் இருந்து இறங்கியதோடு கால்களும் அவளை விட்டு தள்ளி நின்றது. 
அவனின் திடீர் விலகளில்  தடுமாறி நின்ற தீக்ஷிக்கு இந்திரஜித்தின் தொடர் கேள்விகள் தான் எதோ தவறாக பேசிவிட்டதை  உணர்த்தியது. என்ன சொன்னோம்..? என்று யோசித்து பார்த்தவளுக்கு அவள் சொல்லியதன் அர்த்தம் புரிய தன்னை தானே நொந்து கொள்ளும் நிலை.  அவள் ஒரு அக்காவாக யோசித்து பேசினாலே ஒழிய இந்திரஜித்தை பற்றி சிறிதும் யோசிக்கவில்லை. அது கண்டிப்பாக தவறு தான். 
அவன் எப்படி மனோவை விட்டுடுவான்..? கண்டிப்பாகவே விடமாட்டான். ஏன் இத்தனை வருடம் போராடி மனோ உயிரை மீட்டு தந்ததே இவர்கள் தானே..!! இதை எல்லாம்  எப்படி யோசிக்காமல் போனேன்..?   என்று அவளுக்குள் அவளே கேள்வி கேட்டு தெளிந்தவளுக்கு தன்னுடைய  பேச்சு பெரிய அபத்தமாக தோன்ற, மன்னிப்புடன் இந்திரஜித்தை பார்த்தாள். 
ம்ஹூம்..  அவளின்  மன்னிப்பு புரிந்தாலும் சிறிதும் இளகாமல்  மரம் போல் நின்றவனை நெருங்கி அவனின் இரு கைகளையும் பிடித்து கொண்டவள், “சாரி.. சாரி.. லட்சம்.. மில்லியன்.. பில்லியன் டைம் சாரி..” என்று முன்னொரு நாள்  அவன் கேட்டது போலே சாரி கேட்டவளை வெறித்து தான் பார்த்தான். 
“நான் ஒரு அக்காவா மட்டும் யோசிச்சுட்டேன், உங்க பாய்ண்ட் ஆப்ல யோசிக்கல, ப்ளீஸ்..” என்று கெஞ்சியவளை கூர்ந்து பார்த்தவன், 
“நீ இப்போ மட்டுமில்லை, எப்போவும் என் பக்கத்திலுருந்து யோசிக்கிறதுல, உங்க அப்பா ஆசை.. அவருக்கு மகளா நீ  செய்ற கடமை.. உன் பிஸ்னஸ்.. இப்போ உன் தம்பி.. அவனுக்கு அக்கா.. இதுதான் நீ.. இதுல எப்போவாவது என்னை பற்றி, என் காதலை பற்றி.. என்னோட ஆசை பற்றி.. என் எதிர்பார்ப்பு பற்றி எப்போவாவது யோசிச்சிருக்கியா…? இல்லை.. இல்லவே இல்லை..” என்று ஆற்றாமையுடன் சொன்னவனின் பேச்சில் இருந்த நியாயம் புரிந்து வாயடைத்து போனள்  தீக்ஷி
“நான்.. நான்..” என்று என்ன பதில் சொல்ல முடியாமல், பதில்  இல்லாமல் தவித்து நின்றவளை பார்த்து மேலும்  கொந்தளித்தவன், எப்போதும் போல் கோவத்தில் குறுக்கு மருக்குமாக நடக்க ஆரம்பித்தான். தீக்ஷியின் தவிப்பிலும், இந்திரஜித்தின் கோவத்திலும் சில நிமிடங்கள்  மவுனத்திலே கழிய, ஒர் முடிவோடு அவளின் முன் வந்து நின்றவன், 
“போதும்.. எல்லாமே போதும்.. இத்தனை வருஷம் நான்  உனக்காக யோசிச்சது, பார்த்தது எல்லாம் போதும்.. இனியும் முடியாது.. இனி நான் எடுக்கிறது தான் முடிவு.. அதை தான் நீ செய்யணும்.. செய்ய வைப்பேன்.. என்றவன், அவளையே உறுதியாக பார்த்து, 
“அடுத்த மாசம் நமக்கு கல்யாணம்..”  என்று இறுதி முடிவாக சொன்னான். அவனின் உறுதியை புரிந்த தீக்ஷி அவனை கலங்கிய கண்களுடன் பார்க்க, அவளை சிறிதும் கண்டு கொள்ளாமல்  கோபத்துடன் வீட்டினுள் சென்ற இந்திரஜித்தை தானும் பின் தொடர்ந்து ஓடினாள். அங்கு இந்திரஜித் மனோவின் முன் சென்று நின்றவன். 
“மனோ.. உன்னோட பேசணும்..”  என்று தருணுடன், அதியுடன் டிவி பார்த்து கொண்டிருந்தவனிடம் சொன்னான்.
 “என்ன மாமா..? என்றான் மனோவும்  யோசனையாக. 
“எனக்கு தீக்ஷியை பிடிச்சிருக்கு, எனக்கு அவளை கல்யாணம் செஞ்சு தர்றியா..?” என்று நேரடியாக ஆனால் அனுமதியாகவே கேட்டு  விட்ட இந்திரஜித்தின் கேள்வி புரிந்து அதிர்ந்த மனோவிற்கு இந்திரஜித்தின் நேற்றைய மச்சான் அழிப்பு புரிவதாக. 
“என்ன சொல்வது..?” என்று மனோவின் இளம் வயது தடுமாறி அக்காவை பார்க்க, அவளும் அவனின் முகத்தை ஆர்வமாக பார்ப்பது புரிந்தது. அதிலே அக்காவுக்கும் இதில் விருப்பம் என்று புரிந்து கொண்டவவனுக்கு,   பேச தெரியாமல்  கண்கள் கலங்குவது போல்  இருக்கும் தன்  நிலையை மிகவும் வெறுத்தவன், பெற்றோரை கோபத்துடன் நினைத்து கொண்டான். 
“உங்க செல்ல பொண்ணுக்கு கல்யாணம்.. எவ்வளவு பெரிய பொறுப்பு.. எப்படி பேச தெரியல..? என்னன்னு யோசிக்கவும் தெரியல..? எதை பார்க்கணும்னு புரியல..? நான் எப்படி பேச..?  என்ன பேச..?  எதுவுமே தெரியல எனக்கு.. இப்படி எங்களை தனியா நிற்க வச்சிட்டு நீங்க மட்டும் ஜோடியா போயிட்டிங்க..” என்று உள்ளுக்குள் சண்டையிட்டவனின் கண்களில் தானாகவே கண்ணீர் இறங்கியது.
மனோவின் நிலை புரிந்து அழுகையுடன் தம்பியை அணைக்க சென்ற தீக்ஷிக்கு  முன்  வேறொரு கை அவனை அணித்திருந்தது. அணைத்ததோடு  மட்டுமில்லாமல்   “உனக்கு எங்க வீட்டு பொண்ணை தரமுடியாது..” என்று இந்திரஜித்தை பார்த்து அதிகாரத்துடன் மறுக்கவும் செய்தது. 
“மாமா..”  என்ற தன்னை  அணைத்த கைக்கு சொந்தக்காரனான விஷ்வஜித்தை தானும் அணைத்து கொண்டு மனோ ஆசுவாசத்துடன் கண்ணீர் வடித்தான். 
“ஏன்..? ஏன் எனக்கு பொண்ணு தரமாட்டேங்க..?”  என்று இந்திரஜித் சூழலை இலகுவாக்கும் பொருட்டு பேச்சை வளர்க்க, மனோவை ஆறுதல் படுத்தி  தன் கையணைப்பில் வைத்து கொண்ட அண்ணன்,  
“பின்னே வரை முறையே தெரியாத உனக்கு எப்படி பொண்ணு தர்றதாம்..?” என்று தம்பியிடம் நக்கலாக  கேட்டான். 
“அப்படி என்ன வரை முறை தெரியலையாம் எங்களுக்கு..?” என்று தம்பி உதட்டை சுளித்து கேட்க, 
“இந்த வீட்டு  மூத்த மருமகன், இவங்களுக்கு அண்ணா மாதிரி இருக்கிற என்கிட்ட தானே நீங்க பொண்ணு கேட்டிருக்கணும், அதைவிட்டு எங்க வீட்டு சின்ன குட்டியை மிரட்டி பொண்ணு கேட்குறீங்க..? இதுதான் உங்க முறையா..?” என்று அண்ணன் மல்லுக்கு நின்றான். 
“ஓஹ்.. அப்போ சரி, உங்க கிட்டேயே கேட்கிறோம், எனக்கு உங்க பொண்ணை கல்யாணம் செஞ்சு தருவீங்களா..?” என்று அண்ணனிடம் பொறுமையாகவே கேட்டான். 
“இப்போவும் உங்களுக்கு  முறை தெரியலயே..? உங்க அப்பா, அம்மா,  அண்ணனை கூட்டிட்டு வந்து முறையா தானே பொண்ணு கேட்கணும்..”, இப்படி தனியா வந்து முறையில்லாம கேட்டா எப்படி தர்றதாம்..?” என்று அண்ணனும் உதட்டை பிதுக்கி கேட்டான். 
“அப்பா, அம்மா கூட்டிட்டு வரலாம், ஆனா அண்ணன் முடியாதுங்க, அவர் எங்களை  எல்லாம்  விட்டுட்டு  மாமியார் குடும்பத்தோடு போயிட்டார். பாசமில்லாத அண்ணன்..”, என்று  நொடித்தான் தம்பி. 
“இது அதை விட சரியில்லையே, உங்க அண்ணனே உங்களை விட்டு போயிட்டான்னா.. நீங்க எப்படின்னு யோசிக்கணும் போலே..? உங்க வீட்டுக்கு எப்படி எங்க  பொண்ணை கொடுக்கிறது..?” என்று சந்தேகமாக கேட்க, கொதித்த தம்பிக்காரன்.  
“டேய்.. துரோகி, எனக்கா பொண்ணு தரமாட்ட..?”  என்று அவன் மேலே பாய்ந்துவிட்ட தம்பியும் அண்ணனும் சில பல நிமிடங்கள் உருண்டு புரண்டு சண்டையிட, அதுவரை இருந்த கனமான துக்கத்தை நொடியில் விரட்டிவிட்ட அண்ணன், தம்பியை விழிகளில் நீர் மிதக்க பார்த்து கொண்டிருந்தாள் தீக்ஷிதா.
இதில் தருணும் ,   “அப்பா.. நானும், சித்தப்பாவை டிஷ்ஷூம்.. டிஷ்ஷூம்..”  என்று அவர்களுடன் இணைந்துவிட,   அந்த நிமிடமே வீட்டில் கல்யாண களை வந்துவிட்டதை உணரமுடிந்தது.
“மனோ.. உனக்கு ஓகே தானே..?” என்று சண்டை எல்லாம் முடிந்து விஷூ மனோவிடம் முறையாக கேட்க, இந்திரஜித்தை பார்த்த மனோ, 
“எனக்கு இதுல டீப்பா எல்லாம் பார்க்க தெரியல, ஆனா உங்க மேலயும், சின்ன மாமா  மேலயும் நம்பிக்கை இருக்கு, தீக்ஷிக்கும் சின்ன மாமா நல்ல பொருத்தம் தான், அக்காக்கும்  மாமாவை பிடிச்சிருக்கு.. எனக்கு இது போதும்”. என்று பொறுப்புள்ள தம்பியாக பேச, தீக்ஷி தம்பியின் கையை நெகிழ்ச்சியுடன் பிடித்து கொண்டாள். 
“தேங்க காட்.. என் மச்சானுக்கு ஓகே..” என்று மகிழ்வுடன் மேல் நோக்கி கையெடுத்து கும்பிட்ட இந்திரஜித்தை தீக்ஷி சிரிப்புடன் பார்க்க, அவனோ அவள் புறமே திரும்பவில்லை. “ரொம்ப கஷ்டம் தான் போல..” என்று புரிந்த தீக்ஷி பெருமூச்சு விட்டாள்.  
“எங்க எல்லோருக்கும்  ஓகே.. நீங்க எப்போ உங்க குடும்பத்தோட வந்து பொண்ணு கேட்குறீங்க..?” என்று விஷூ பொறுப்பாக கேட்க, 
“இந்த வாரத்துல நல்ல நாள் பார்த்து வரோம், அன்னிக்கே சிம்பிளா என்கேஜ்மென்ட் முடிச்சிட்டு, அடுத்த மாசம் முகூர்த்தம் வச்சிக்கலாம்..” என்று தம்பியும் தன் முடிவை சொன்னான். 
அது போலே அந்த வாரத்திலே ஆனந்தன், சுபாவுடன், அவர்களின் குடும்ப பெரிய ஆட்களும் தீக்ஷியை பெண் கேட்க வந்தனர். விஷூ தான் பெண் வீட்டு சார்பாக  முன் நின்றான். அவனுடன் கணேஷ் குடும்பம், பாரதி என எல்லோரும் உடன் இருந்தனர். 
கிரியின் மனைவி சுதாவும், அதியும்  தீக்ஷிக்கு அலங்காரம்  செய்ய, கஸ்தூரியும்,  பாரதியும்  இணைந்து வீட்டு பெண்களாய் எல்லா  ஏற்பாடுகளையும் பார்த்து கொண்டனர். 
யாரும் எந்த குறையும் சொல்ல முடியாத படி, விஷ்வஜித்  எல்லா ஏற்பாடும் பக்காவாக செய்திருந்தான். தீக்ஷியின் சொந்தங்களை தானே சென்று கூப்பிட்டவன், அன்றே என்கேஜ்மென்ட் என்பதால் உணவு, மற்ற ஏற்பாட்டையும் கொஞ்சம் கிராண்டாகவே செய்திருந்தான்.
சபையில் மனோவை முன்னிறுத்தி அவனுடன் கணேஷ், விஷ்வஜித், கிரி, எல்லோரும் நிற்க, இந்திரஜித் சார்பாக  ஆனந்தனும், பெரியவர்களும் தீக்ஷியை முறையாக பெண் கேட்டனர்.  கணேஷ், மனோவின் வழியாக ஒப்புதல் அளிக்க,   தீக்ஷியை சபைக்கு வரவைத்து பூ வைத்து உறுதி செய்தனர். 
சுபா எதுவும் பேசாமல் உர்ரென்ற முகத்துடன் அமர்ந்திருந்தவர்,  தீக்ஷிக்கு பூ வைக்கவும் போகவில்லை. இந்திரஜித்தின் பெரியம்மா தான் பூ வைத்து முறை செய்ய,  அவரின் இச்செயலில் குடும்ப உறுப்பினர்களுக்கு வருத்தம் தான். ஆனால் இது தெரிந்தது தானே.. என்பதால்  பெரிதாக காட்டி கொள்ளவில்லை. 
“பந்தி ரெடி.. சாப்பிட்டரலாமா..?” என்று விஷ்வஜித் எல்லோரையும் முறையாக சாப்பிட கூப்பிட, 
“இருப்பா எங்க பக்கம் இன்னொரு சம்மந்தமும் இருக்கு..”  என்று விஷ்வஜித்தின் பெரியப்பா சத்தமாக சொன்னார். 
“இன்னொரு சம்மந்தமா..?” என்று விஷ்வஜித்தும், தீக்ஷியும்,அதிதியும், சுபாவும்  மட்டுமே புரியாமல் விழிக்க, மற்றவர்கள் தெரிந்தது போல் சாதாரணமாக  தான் இருந்தனர். 
அதிலே சுபாவை தவிர மற்ற மூவருக்கும்  எதோ புரிவது போல் இருக்க, வேகமாக  இந்திரஜித்தின் பக்கம் பார்வையை திருப்பினர். ஆனால் அவன் வந்ததிலிருந்து இருந்தது போல் இப்போதும் மொபைலில்  தான் தலை  கவிழ்ந்திருந்தான். 
சுபாவிற்கு தான்  என்ன ஏதென்று புரியாமல் விழித்தவர், “என்ன மாமா சொல்றீங்க..? இன்னொரு சம்மந்தமா..?” என்று  இந்திரஜித்தின் பெரியப்பாவிடம் கேட்டவர், கணவரையும், பிள்ளைகளையும் கேள்வியாக பார்த்தார். 
“ஆமாம்மா.. இன்னொரு சம்மந்தமும் இன்னிக்கு உறுதி செய்ய போறோம்..” என்றவர், “மனோ.. உங்க  இன்னொரு அக்கா அதிதியை எங்க  வீட்டு பெரிய பிள்ளை விஷ்வஜித்திற்கு  சம்மந்தம் செய்ய  கேட்கிறோம்..” என்று  கேட்க, 
சுபாவிற்கு நெஞ்சு வலி வராதது மட்டும் தான் குறை. மூச்சு கூட முடியாமல் அதிர்ச்சியில் சிலையாக நின்றவரின் கண் முன்னே தட்டை  மாற்றபோகவும், “நிறுத்துங்க..” என்ற விஷ்வஜித்தின் குரலில் தான் மூச்சை விட்டார். 
“எதுக்கு நிறுத்தணும்..?” என்ற பெரியவரின் சாதாரண கேள்வியில் கொதித்த விஷ்வஜித்,  
“என்ன இதெல்லாம்..? என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம நீங்களே எப்படி முடிவெடுக்கலாம்..? எனக்கு இதுல கொஞ்சம் கூட விருப்பமில்லை, முதல்ல இதை நிறுத்துங்க..” என்று விடாமல் காச் மூச் என்று கத்தி கொண்டிருந்தவனை எல்லோரும்  வேடிக்கை பார்ப்பது போலே பார்க்க, அதில் இன்னும் விஸ்வஜித்திற்கு வெறி ஏறியது. 
“இது எல்லாம் உன் வேலைதான..?” என்று மொபைலை பார்த்து கொண்டிருந்த தம்பியின் மொபைலை பிடுங்கி  தூக்கி எறிந்தவன், அவனின் சட்டையை பிடித்து விட்டான். அண்ணனின் கோவத்தில் சிறிதும் கவலை படா தம்பி, நிதானமாக அவனின் கையிலுருந்து தன் சட்டையை விடுவித்தவன், அப்பா.. பெரியப்பாவை பார்த்து கண் காட்டிவிட, அவர்கள் நொடியில் தட்டை மாற்றியதோடு, அதிதியின் தலையில் பூவும் வைத்து விட்டனர். 
“டேய்..” என்று தம்பியை பார்த்து எரிமலை போல் கொதித்தவன், “நீங்க தட்டை மாத்திட்டா நான் ஒதுக்குவேனா..? பார்க்குறேன், நீங்களா..? நானா..?ன்னு பார்த்துடுறேன்..” என்று கர்ஜிக்க, சுபாவும் ஆரம்பித்தார். 
“என்னை ஒரு வார்த்தை கேட்காம என் மகனுக்கு   எப்படி  பொண்ணு உறுதி செய்வீங்க..? அதுவும் போயும் போயும் அந்த குடும்பத்து பொண்ணு தான் உங்களுக்கு கிடைச்சுதா..? இதுக்கு நான்  உயிரே போனாலும் ஒத்துக்க மாட்டேன்.. இந்த உறுதி செல்லாது..” என்று ஆங்காரத்துடன் கத்த, 
“ஷ்ஷ்.. இதுக்கு மேல ஒரு வார்த்தை கூட நீ பேசகூடாது.. நமக்கு கல்யாணமாகி இத்தனை வருஷத்து நான் உன்மேல் கையே  வச்சதில்லை.. இன்னிக்கு அந்த சூழ்நிலையை உருவாக்கிடாத..” என்று ஆனந்தன் மனைவியை கடுமையாக எச்சரிக்க, சுபா கணவனின் கோவத்தில் மிரண்டு வாயடைத்து போனார். 
“வாங்க.. வாங்க.. சாப்பிட போலாம்..” என்று கிரி எல்லோரையும் சாப்பிடவே அழைத்து சென்றுவிட, குடும்பத்து  ஆட்கள் மட்டுமே மிச்சமின்றனர். 
 எல்லோரையும் பார்த்து விஷ்வஜித் பெரிதாக மூச்சு விட்டு கொதித்து கொண்டிருக்க, தீக்ஷியும், அதிதியும் நடந்து விட்ட செயலை  நம்ப முடியாமல் கண்கள் விரித்து நின்றிருந்தனர்.  இதில் இந்திரஜித் மட்டும் மிக கூலாக இருக்க, சுபா இளைய மகனை  பார்வையாலே பொசுக்கி கொண்டிருந்தார்.

Advertisement