Advertisement

“சாரி மாமா.. சாரிப்பா.. சாரிண்ணா..” என்று மூன்று ஆண்களும் மன்னிப்பு கேட்க, அதிதிக்கு என்ன சொல்லி சாரி கேட்பது என்று குழப்பம். அவள் புறம் திரும்பிய விஷ்வஜித்தை பாவமாக பார்த்தவள், “சாரி..” என்று சத்தமாக சொன்னவள், “மாமா..”  என்பதை முணுமுணுத்தாள்.
“அவங்க தான் சின்ன பசங்க, உனக்கென்ன..?” என்று அவளின் முணுமுணுப்பு மாமாவில் கோவம் கொண்டு  எகிறிய விஷ்வஜித்திடம்,
“ நானும் சின்ன பொண்ணுன்னு தான் ஒருத்தர் சொல்லியிருக்கார்..” என்று முகம் பாவமாக வைத்து சொன்னாள்.   அவள் திருமணம் செய்ய விஷ்வஜித்திடம் கேட்ட பொழுது, “நீ சின்ன பொண்ணு, அதான் உனக்கு இதெல்லாம் விளையாட்டா இருக்கு..” என்று மறுத்த அவனின் பேச்சை இப்போது ஜாடையாக சொன்னாள் அதிதி. 
“இவளை..” என்று பல்லை கடித்து முறைத்த  விஷ்வஜித், தருணை கூட்டி கொண்டு உள்ளே சென்றுவிட்டான். “க்கும்.. இதுக்கு மட்டும் பதில் வராதே..” என்று முணுமுணுத்தவள், தானும் உள்ளே செல்ல, மேலிருந்து எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருந்த தீக்ஷிக்கு குழப்பம் அதிகமாகியது. 
அதனாலே அன்று மாலை அதிதியை அழைத்து கொண்டு தோட்டத்திற்கு வந்தவள்,  என்ன காரணம் என்று கேட்டாள்.  “விடு தீக்ஷி..” என்று அதி சொல்லாமல் விட பார்க்க, 
“அதி..  நீ சொல்லித்தான் ஆகணும்.. ஏன்  அண்ணாவை கல்யாணம் செஞ்சுக்க நினைக்கிற..?” என்று கேட்டாள்.
“ நான் மாமாவை கல்யாணம் செஞ்சுக்க நினைக்கல, தருணோட அப்பாவைதான் கல்யாணம் செஞ்சுக்க நினைக்கிறேன்..” என்றாள். அவளின் பதிலில் மேலும் குழப்பமான தீக்ஷி, 
“அதி ப்ளீஸ் எனக்கு  தெளிவா சொல்லு..”  என்று கண்டிப்புடன் கேட்டாள். 
“அது.. அது.. எனக்கு தருணுக்கு அம்மாவா இருக்கனும்.. அதான்..” என்றவளின் பேச்சு புரியாத  தீக்ஷியின் சுருங்கிய முகத்தில், மூச்சை நன்றாக இழுத்து விட்டவள், “என்னால  குழந்தை பெத்துக்கவே முடியாது..” என்று மெல்லிய குரலில் அடைத்த தொண்டையுடன் சொல்ல, கேட்டிருந்த தீக்ஷி 
“என்ன என்னமோ பேசுற நீ..?” என்று நம்பமுடியாமல்  சத்தமாகவே கத்திவிட்டாள். 
“உண்மைதான் தீக்ஷி..  இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு இன்சிடென்ட்ல  என்னோட கர்ப்ப.. கர்ப்பபையை  எடுத்துட்டாங்க..” என்று முகம் மூடி குலுங்கி அழுதவளை அணைத்து கொண்ட தீக்ஷி, 
“எப்படி..? எப்போ..?” என்று  அடைத்த குரலுடன் கேட்டாள். 
“நான் கோயம்பத்தூர்ல  Msc  படிச்சிட்டு இருக்கும் போது, காலேஜ்ல பிரண்ட்ஸோடு சேர்ந்து ஷாப்பிங் போயிருந்தேன். அப்போ அப்போ..  நாங்க போன வண்டியை ஒன் வே ரோட்ல வேகமா வந்த கார் இடிச்சிருச்சு, அதுல  பின்னாடி உட்காந்திருந்த நான் தூக்கி எரிஞ்சுதுல என்னோட அடிவயிறு அங்க இருந்த  ரோட் டிவைடிங் கம்பியில குத்திருச்சு”, 
“அதுல என்னோட கர்பப்பை அடிபட்டு நிறைய ரத்தம் போனதால கர்ப்பபை எடுத்தா தான் நான் உயிர் பிழைக்க முடியும்  டாக்டர் சொல்லிட்டார்..” என்று  இழக்க கூடாததை இழந்ததில் தாங்கமுடியாமல் கதறி அழுதவளை மடிதாங்கி கொண்டாள் தீக்ஷி. 
மூன்று வருடங்களுக்கு முன்பு தன் குடும்பத்தை இழந்து தான் கதறிய பொழுது தன்னை மடிதாங்கிய அதிதியை இன்று  தான்  மடிதாங்கி கண்ணீர் வடித்தாள் தீக்ஷிதா. அழுது ஓய்ந்த அதிதியின் கை பிடித்து அமர்ந்திருந்த  தீக்ஷிக்கு மனம் இன்னும் சமன் படவில்லை,  “எனக்கும் கல்யாணம் செஞ்சுக்க விருப்பம் இல்லை..” என்ற அதியின்  பேச்சுக்கும் காரணம் புரிவதாய் இருந்தது. 
“இதை எல்லாம் ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லலை அதி..?” என்று  வருத்தத்துடன்  கேட்டாள். 
“உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு இல்லை,  நீயே வேதனையில இருக்கும் போது இதை சொல்லி எதுக்கு இன்னும் உன்னை வருத்தபட வைக்கணும்ன்னு தான் சொல்லலை..”என்றவள்,  
“நான்   இதுக்காக எல்லாம்  விஷூ மாமாவை கல்யாணம் செஞ்சுக்க நினைக்கல தீக்ஷி,  அவரோட அம்மா அவருக்கு ரெண்டாவது கல்யாணம் செய்ய பொண்ணு பார்த்து முடிவு செஞ்சுட்டாங்கன்னு தெரியவும், நான் அவர்கிட்ட  தருணை எனக்கு தத்து கொடுத்துருங்கன்னு தான் கேட்டேன்..”
“ஆனா அவர் தருண் தான் என்னோட வாழ்க்கையே, அவனை யாருக்கும் தர முடியாதுன்னு மறுத்துட்டார். என்கிட்ட மட்டும் இல்லை, அவங்க அம்மாகிட்டேயும் ரெண்டாவது  கல்யாணம் செஞ்சுக்க முடியாதுன்னு பெரிய சண்டையே நடக்குது”, 
 “சின்ன மாமா தான், பேசாம நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுக்கோங்க, தருணும் உனக்கு மகனா இருப்பான், விஷூக்கு இதனால கஷ்டம் இருக்காதுன்னு சொன்னார், நானும் யோசிச்சு பார்த்து சரின்னு தோணுச்சு”, 
“அதான் நானே விஷூ மாமாகிட்டே கேட்டுட்டேன், ஆனா அவர் ரொம்ப கோவமா திட்டிட்டார், எனக்கு தருண் மகனா வேணும் தீக்ஷி, அதுக்கு அவர் கொடுக்கிற அங்கீகாரம் மட்டும் போதும், ஆனா இன்னிக்கு வரைக்கும் முடியாதுன்னு உறுதியா நிற்கிறார்..”  என்று துயரத்துடன் சொன்ன அதிதிக்கு என்ன சமாதானம் சொல்ல என்று தெரியாமல் குழம்பிய மனதுடன் அமைதியாகவே இருந்தாள் தீக்ஷி.
மறுநாள் இரவு போல வந்த இந்திரஜித், இரவு உணவை அங்கேயே அவர்களுடன் முடித்தவன், தீக்ஷியுடன் தோட்டத்திற்க்கு  வந்தான். “நீங்க போன வேலை முடிஞ்சுதா..? ஆர்டரை ரிலீஸ் செஞ்சுட்டாங்களா..?” என்று கேட்ட தீக்ஷியின் கை பிடித்து தன்னோடு அமரவைத்தவன், 
“ம்ம்.. செஞ்சுட்டாங்க,  அந்த மினிஸ்டர் முடியாதுன்னு தான் சொல்லிட்டான்,  அவனை விட கட்சியில பெரிய ஆளை பிடிச்சு நிறைய  காசை இறைச்சுதான்  ரீலிஸ் செய்ய முடிஞ்சது, கிட்ட தட்ட அந்த ஆர்டர்ல பாதி அமண்ட், நமக்கு நிறைய லாஸ் தான், ஆனா நான் இதை செய்யாம விட்டா அந்த மினிஸ்டர் ஜெயிச்ச மாதிரி ஆகிடும், அதனாலே செஞ்சுட்டு வந்திருக்கேன்..” என்றவன், 
“நீ அதிகிட்ட பேசிட்டியா..?” என்று கேட்டான். 
“ம்ம்.. பேசிட்டேன்..”, என்று வருத்தத்துடன் சொன்னவளின் கையை ஆறுதலாக தடவி கொடுத்தவன், “என்ன குழப்பம்..?” என்று கேட்டான். 
“இல்லை, அதிக்கு தருண் மட்டும் தான் தெரியுறான், விஷூ மாமா.. அவரோட லைப், இவளோட லைப்.. அதான் யோசனையா இருக்கு..” என்றாள். 
“ம்ம்.. புரியுது தீக்ஷி, எனக்கும் அந்த கவலை இருக்கு, ஆனா எதோ ஒரு நம்புக்கையும் இருக்கு.. இவங்க ரெண்டு பேரோட மேரேஜ் லைப் கண்டிப்பா நல்லா இருக்கும்ன்னு உள்மனசு சொல்லுது, விஷூவோட  கேரக்டருக்கு அதியோட குணம் ஆப்போசிட் தான், ஆனா அதுவே ஒரு  நாள் இல்லை ஒரு  நாள் ரெண்டு பேரையும்  கண்டிப்பா ஈர்க்கும்ன்னு  தோணுது”, 
“அதோட நம்ம பெரியவங்க சொல்லயிருக்கிற மாதிரி  தாலி மகிமை மேல நிறைய நம்பிக்கை இருக்கு தீக்ஷி..”, என்றவன், 
“இதுல  தருண்.. அவனை பற்றி யோசிக்கணும், எப்படியும் நாம விஷூவை இப்படியே விடமுடியாது, அவன் லைப் லாங் தனியாவே இருக்கிறதும் சாத்தியபடாது, அவனுக்குன்னு ஒரு துணை வேணும், அது வேறொரு பொண்ணா இருந்தா,அவ தருணை எப்படி பார்ப்பான்னு நமக்கு தெரியாது, இதுவே அதியா இருந்தா அந்த கவலையும் நமக்கு இல்லை”, 
“என்னதான் நாம  தருணை பார்த்துக்குவோம்ன்னாலும் அவனுக்குனு ஒரு அம்மா, ஒரு குடும்பம்  இருக்கிறது வேறதான் தீக்ஷி..”,  
“அப்பறம் அதி.. எனக்கு தெரிஞ்சு அவ கண்டிப்பா யாரையும்  கல்யாணம் செஞ்சுக்க மாட்டா, அதுக்கு அவ விஷூவை கல்யாணம் செஞ்சுக்கிறது மேல், இப்படி  தருண், அதிதி, விஷூ மூணு பேருக்குமே எல்லாவிதத்திலும்  இந்த முடிவு நல்லது தான்..”, 
“அதனாலே ரொம்ப யோசிச்சுதான் அதிகிட்ட பேசுனேன், அவளும் புரிஞ்சிகிட்டா, அடுத்து எப்படியாவது விஷூவை  ஒத்துக்க வைக்கணும்..”, என்று முடிக்க, தீக்ஷிக்குமே இதில் நன்மை இருப்பதாக தான் தோன்ற அதே சிந்தனையில் இருந்தவளிடம், 
“என்ன முடிவெடுத்திருக்க..?” என்று சில நிமிடம் அமைதிக்கு பிறகு  இந்திரஜித் கேட்க, முதலில் புரியாமல் விழித்தவள், புரிந்தபின் முழு மவுனம். 
“நீ என்ன நினைக்கிற..? ஏன் கல்யாணம் வேண்டாம்ங்கிற..? என்ன எதிர்பார்க்கிற..? இதெல்லாம்  என்கிட்ட சொல்லலாம், தப்பில்லை, நீயும் நானும் தான் வாழ்க்கையே..!!!”   என்று  நிறுத்தி நிதானமாக கேள்வி கேட்டவனிடம் தெரிந்த  பொறுமை வரவைத்து கொண்ட ஒன்று என்று புரிந்தது. 
“எனக்கு உன்னோட இருக்கனும்,  என்னோட துணை உனக்கு வேணும்ன்னு நான் நினைக்கிறேன்.. உன்னை தனியா விட எனக்கு பிடிக்கல..  இந்த மூணு வருஷம் உன்னை தனியா விட்டது எனக்கு  ரொம்ப கில்ட்டை கொடுக்குது, எதோ உன்னை நான் கவனிக்காம விட்டது போல  இருக்கு..”, 
“உனக்கு என்னோட இருக்கணுமா  இல்லையான்னு எனக்கு தெரியல, ஆனா எனக்கு கண்டிப்பா உன்னோட இருக்கனும்.. இதுக்கு மேல் எனக்கு சொல்ல தெரியல..?” என்றவன் நிலையில்லாமல்   எழுந்து குறுக்கும் மருக்குமாக நடக்க ஆரம்பித்தான். 
தீக்ஷிக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை, இப்போது திருமணம் வேண்டும்.. வேண்டாம் என்று  யோசிக்கவே  பயமாக இருந்தது. ஒரு புறம் இந்திரஜித்..  மறுபுறம் மனோ.. 
இதில் அவள் கவலையே மனோதான்.. அவனை தனியே விட்டு   எப்படி திருமணம்..? நான் தானே அவனை பார்த்துக்கணும்.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே.. என்று நினைத்து அமைதியாகவே இருந்தாள்.  
அவளின் அமைதியில் கொதித்தவன், ஏதும் பேச விரும்பாமல் வாயை இருக்க மூடி கொண்டு இரும்பாய் இறுகி நின்றான். இது மூன்றாம் முறை.. அவனுடனான திருமணம் வேண்டாம் என்று தீக்ஷி மறுப்பது..   
சுபாவும் இதையே தான்  சொல்லி சொல்லி காட்டுகிறார்.  “அவளுக்கு நீ வேண்டாம் போல, நீதான் அவளையே நினைச்சு கல்யாணம் செஞ்சுக்காம உன் வாழ்க்கையை கெடுத்துகிற..” என்று சொல்லி காட்டுகிறார். 
போதகுறைக்கு “விஷூ இப்படி தனியாக நிற்க, அரசு  தான் காரணம்..  என் மகனுக்கு  அவசரவசரமா கல்யாணம் செஞ்சு வச்சு அவன் வாழ்க்கையை முடிச்சுட்டார்..” என்று குத்தி  பேசுகிறார்.  
இப்படி பேச வேண்டாம் என்று ஆண்கள் சுபாவை அடக்கினால், “நான்  உண்மையை தான் பேசுறேன்..” என்று தொடர்  சண்டை, கோவம், வேதனை.. அதோடு நிறுத்தாமல் மகன்களுக்கு  வரன்கள்  பார்க்க ஆரம்பித்துவிட, விஷூ சண்டை போட்டு சென்னை வந்துவிட்டான் என்றால் இந்திரஜித் அவரிடம் பேசுவதையே நிறுத்தி விட்டான். 
இதில்  அவர் சொல்வது போல தீக்ஷி வேறு தொடர்ந்து திருமணத்தை மறுக்க  இந்திரஜித்திற்கு  மிக அதிகமான  மன அழுத்தம்.  “இதற்கு மேல எப்படி பேசுவது..?” என்றவனின் உள்ளம் கொதித்தது. 
“வேண்டாம்.. எதுவும் பேசிடாத, இருவருக்குமே  வேதனை தான் மிஞ்சும்..” என்று தனக்குள்ளே  உரு போட்டவனுக்கு தாங்க முடியாது என்று தோன்றிவிட, 
“தீக்ஷி.. என்னை டைட்டா  ஹக் செஞ்சுக்கோயேன்..?” என்று கேட்டான். அவனின் கோவத்தை எதிர்பார்த்திருந்தவளுக்கு இந்த கேள்வி ஆச்சரியத்தை கொடுக்க, அவனின் கோவம் அடக்கிய முகம் பார்த்தவளுக்கு அதில் தெரிந்த சிவப்பு நல்லதாக தோன்றவில்லை. 
“தீக்ஷி..” என்று அவளின் தயக்கத்தில் அழுத்தமாக கூப்பிட்டவன், “நீ செஞ்சு தான் ஆகணும்..” என்ற பிடிவாதத்தை  தாங்கி நின்றான். தீக்ஷிக்கு அவனின் பிடிவாதம் புதிதாக தெரிய, தயக்கத்துடன்  அவனின் அருகில் வந்தவள், லேசாக அவனை கட்டி கொண்டாள். 
“ம்ஹூம்.. இன்னும் இன்னும் க்ளோசா ஹக் பண்ணு.. உன்னை நான் எனக்குள்ள உணரணும்..” என்று  பதிலுக்கு அவளை அணைக்காமல் கைகளை பேண்ட் பேக்கெட்டில் விட்டபடி கோவம் வெளிப்பட சொன்னவனின் நிலைய புரிந்து கொண்டவள், அவன் கேட்டது போல்  தன்னால் முடிந்தவரை இறுக்கமாக கட்டி கொண்டாள். 
அவனின் இதயதுடிப்பின் வேகம் அவனின் நிலையில்லா மனதை சொல்ல, அதன் மேல் முகம் புதைத்து  தன் சுவாச காற்றால் அவனின் வேகத்தை கட்டுப்படுத்த முயன்றாள்.

Advertisement