Advertisement

காதல் ஆலாபனை  23
“வேலு.. நீ மனோவை வீட்டில் விட்டுட்டு  ஏர்போர்ட் போயிடு, நான் நேரா ஏர்போர்ட் வந்துடுறேன்.. “ என்று வேலுவிடம் சொன்னவன், தீக்ஷியை தன்னுடன் காரில் அழைத்து கொண்டு  கிளம்பியவன், ட்ரைவ் இன் ரெஸ்டாரண்ட் சென்றான். 
“எனக்கு  பசிக்குது.. ஏதாவது ஆர்டர்  செய்..” என்று  தீக்ஷியிடம் சொல்லிவிட்டு ரெஸ்ட் ரூம் சென்று முகம் கழுவி வந்தான். அவன் வரவும் உணவு கொண்டு வந்து கொடுக்க,  காரில் அமர்ந்தபடியே சாப்பிட்டவன், 
“உனக்கு ஏதும் சொல்லலையா..?” என்று தீக்ஷியிடம் கேட்டான். 
“ம்ஹூம்.. எனக்கு வேண்டாம், நீங்க சாப்பிடுங்க..” என்றவளுக்கு  அவனின் பசி தெரிய  மேலும் சில உணவு வகைகளை சொல்ல, வேண்டாம் என்று மறுக்காமல் அதையும் உண்டான்.  இறுதியாக காபி வரவும்   எடுத்து கொண்டவன்,  தீக்ஷிக்கு மில்க் ஷேக்  ஆர்டர் கொடுத்தான். 
“என்ன ஆச்சு..? காலையிலிருந்து சாப்பிடலையா..?” என்று தீக்ஷி கேட்கவும், 
“ இல்லை,  காலையிலே ஒரு மீட்டிங் இருந்துச்சு, அதை முடிச்சிட்டு நேரா AAR வந்துட்டேன், அடுத்து டெல்லி கிளம்பனும்..” என்று  எதோ போல் சொன்னவனை கவலையாக பார்த்தாள்.   
“ஏன் இப்படி இருக்கீங்க..? ஏதாவது பிரச்சனையா..?”
“ ம்ப்ச்.. வீட்ல  அம்மா எனக்கும், விஷூக்கும் ரொம்ப பிரஷர் கொடுக்கிறாங்க, வர வர அவங்களை  சமாளிக்கவே முடியல..” என்று சலிப்பாக சொன்னான். 
“ஏன்..?” என்று தீக்ஷி புரிந்தும் புரியாமலும் கேட்டாள். 
“வேறென்ன எல்லாம் எங்க மேரேஜ் பற்றித்தான்..” என்றவன், தீக்ஷியின் பக்கம் திரும்பி நன்றாக அமர்ந்து, அவளின் முகம் பார்த்தான். 
“சொல்லு தீக்ஷி.. இதுக்கு என்ன செய்யலாம்..?”  என்று அவளிடமே கேட்டவன், அவளின் அமைதியில் பொறுமை இழக்க ஆரம்பித்தான். 
“கல்யாணத்தை  பற்றி பேசுனவுடனே  இப்படி தான் நீ  அமைதியாடுவன்னு  எனக்கு  தெரியும்..” என்றவன் கோபத்துடன் தலையை கோதி கொண்டு வெளிப்புறம் திரும்பி அமர்ந்தான். சில நிமிடங்கள் இருவரிடத்திலும் மவுனம்.. பின் தீக்ஷியே,  
“விஷூ அண்ணா விஷயத்துல  ஏன் நீங்க  அதிக்கு சப்போர்ட் செய்றீங்க..?” என்று நேற்று அவன் கோவத்தில் பேசியதை குறித்து வைத்திருந்தவள் கேட்க, அவளை திரும்பி முறைத்தவன், 
“நான் நம்மை பற்றி தான் கேட்டேன்..? அதுக்கு முதல்ல பதில் சொல்லு..?” என்றான். 
“நம்மை பற்றி பேச என்ன இருக்கு..?” என்று தீக்ஷி முணுமுணுப்பாக கேட்க, 
“நிறைய இருக்கு, நாம இன்னும் நிறைய விஷயங்களை பேசிக்கவே இல்லை, எங்க அம்மா ஆரம்பிச்சு, இப்போ கல்யாணம் வரைக்கும் நிறைய இருக்கு..” என்றவன், 
“இங்க பாரு தீக்ஷி அம்மா உன்கிட்ட என்னென்ன பேசினாங்கன்னு எனக்கு தெரியாது, அவங்க எதோ கொஞ்சம் சொன்னதுக்கே எனக்கு கோவம் வந்து கத்திட்டேன், அந்தளவு அவங்க உன்கிட்ட பேசுவாங்கன்னு நான் நினைக்கல, ஏன் தர்ஷினி அண்ணிகிட்ட கூட விலகி தான் இருந்தாங்களே தவிர, இப்படி உன்கிட்ட பேசின மாதிரி எதுவும் பேசல..  நீ வெறுக்கிற அளவுக்கு அவங்க பேசியிருக்காங்கன்னு தெரியுது, என்ன பேசினாங்க சொல்லு..?” என்று கேட்டான்.
 “ச்சு.. பாஸ்ட் ஈஸ் பாஸ்ட், விடுங்க..” என்று தீக்ஷி அதை பற்றி பேச பிடிக்காமல் முடிக்க  பார்த்தாள்.  
“நீ சொல்றது கரெக்ட் தான், ஆனா நீ அப்படி நினைச்ச மாதிரி தெரியலையே..? அவங்க பேசினதை நீ இன்னும் மறக்கலை..  மறக்க மாதிரியும் தெரியலையே..?” என்று நேற்று மனோவிடம் சுபாவை பற்றி பேசும் போது  அவளின் குரலில் தெரிந்த வெறுப்பை புரிந்து கூர்மையாக  கேட்டான்.  
“நான் மறக்கலை தான், ஆனா அதை  தொடவும் பிடிக்கல, அது ஒரு ஓரமா  இருந்துட்டு போகட்டும், அதை  பற்றி பேசி என்னை நானே வருத்திக்க விரும்பல..”  என்று உறுதியாக சொன்னாள். 
முதலில் என்றால் கூட பரவாயில்லை, ஆனால்  இவள் மீதான கொலை முயற்ச்சி தெரிந்தபின் அவர் போன் செய்து  பேசியது  தீக்ஷிக்கு எல்லையில்லா வருத்தத்தை கொடுத்திருந்தது. “உன்னோடு இருந்தால் தருணின் உயிருக்கும் ஆபத்து, அவனை திருப்பி அனுப்பிவிடு..” என்றவரின் உள்ளர்த்தம்  “உனக்கு ஏதாவது  ஆனால் கூட பரவாயில்லை..” என்றே இருக்க, அப்படியென்ன என் மேல் வெறுப்பு..? என்று அவள் கொண்ட வேதனை அவளுக்கு மட்டுமே தெரியும். 
இதை பற்றி எல்லாம் விலாவரியாக பேசி இந்திரஜித்தை இக்கட்டான சூழ்நிலைக்கும் தள்ள விரும்பவில்லை. “வேண்டாம்.. எனக்கு எப்படி இருந்தாலும்  அவருக்கு  நல்ல அம்மா தானே, எனக்கு தான் அப்படி ஒரு உறவே இல்லாமல் போய்விட்டது, அவருக்காவது இருந்துவிட்டு போகட்டும்..” என்றே முடிவெடுத்து இருந்தவள், இந்திரஜித்திடம் சொல்ல  மறுத்தாள். 
“ம்ப்ச்.. இப்படி சொன்னா நான் என்ன தான் செய்ய..?” என்று அவள் சொல்ல மாட்டேன் என்று உறுதியாக நிற்கவும், இயலாமையுடன் முகம் திருப்பி கொண்டான்.
“நான் விஷூ அண்ணா, அதி பற்றி கேட்டேனே..?” என்று தீக்ஷி மறுபடியும் கேட்க,  
“அவங்களை பற்றி என்ன..?” இந்திரஜித் சாதாரணாமாக கேட்டான். 
“நீங்க ஏன் அதிக்கு சப்போர்ட் செய்ற மாதிரி பேசுறீங்க..? இது எப்படி சரியா வரும்..?”
“ஏன் சரியா வராது..? அதெல்லாம் சரியா தான் இருக்கும்..”
“என்ன சரியாயிருக்கும்..? ரெண்டு பேருக்கும் இதுல கொஞ்சம் கூட  விருப்பம் இல்லை, அதிலும் அதி சொல்றது சுத்தமாவே சரியில்லை, விஷூ அண்ணாக்கும், தருணுக்கும்  துணை வேணும், அது நானா இருந்துட்டு போறேன்னு சர்வ சாதரணமா சொல்றா.. இதை  எல்லாம் ஒரு காரணமா வச்சி கல்யாணம்  செய்ய முடியுமா..?  அது செக்ஸஸ் ஆகுமா..? ரெண்டு பேரோட லைப்பும் நமக்கு முக்கியம் தானே..?” என்று தீக்ஷி கோவமாக கேட்டாள். 
“ஏன் அதி விஷூவை கல்யாணம் செஞ்சுக்கிட்டா அவள் லைப்  நல்லா இருக்காதுன்னு நினைக்கிறியா..?” என்று தீர்க்காமாக கேட்டான். 
“நீங்க என் வார்த்தைகளை வேணும்ன்னே டிவிஸ்ட் செய்றீங்க..? நான் அந்த மீனிங்ல பேசலன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்..” என்று தீக்ஷி நிறுத்தி நிதானமாக அவன் முகம் பார்த்து கேட்க,  
“இப்போ உனக்கு என்ன தெரியணும்..?” என்று கேட்டான். 
“நீங்க ஏன் அதிக்கு சப்போர்ட் செய்றீங்கன்னு தெரியணும்..?”  என்று அவன் காரணம் இல்லாமல் இது போல் விஷயங்களில் சப்போர்ட்  செய்ய மாட்டான், அது என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளவே கேட்டாள். 
“ம்ப்ச்.. நீ இதை பற்றி  அதிகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ.., அவளோட விஷயத்தை நான் சொல்றது சரியா இருக்காது..” என்றவன், தீக்ஷியின் குழப்ப முகத்தில் அவளின் கையை பற்றி தட்டி கொடுத்தான். 
“என்ன என்ன கேட்கணும் அவகிட்ட..?” என்று தீக்ஷி மெலிதான பயத்துடன் கேட்டாள்.  
“நீ  முதல்ல அதிகிட்ட பேசு, அவ சொல்றதை கேளு, அப்படியும் உனக்கு இது சரிவராதுன்னு தோணினா சொல்லு, என்ன செய்றதுன்னு பார்க்கலாம்..?”  என்றவனின் போன் ஒலிக்க எடுத்து பேசினான். 
“சொல்லு வேலு..  என்ன மீட்  செய்ய முடியாதமா..? ஏனாம்..?” என்று  ஆத்திரத்துடன் கேட்டான். 
“முக்கியமான வேலை  இருக்காமா..? ஓஹ் சரி, அப்போ இதை அந்த மினிஸ்ட்டர் PA கிட்ட சொல்லிடு, நைட் அவர் வழக்கமா போற அந்த  நடிகையோட  வீட்டுக்கே வந்து பேசிக்குறோம்ன்னு சொல்லிடு..”   என்று வைத்தவனிடம், 
“என்ன இது..?” என்று தீக்ஷி முகம் சுளித்து கேட்டாள். 
“வேறென்ன செய்ய சொல்ற…? அந்த மினிஸ்டர் ஒவ்வொரு முறையும் பர்சென்டேஜ் கேட்கிறான், இந்த முறை கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டோம், அதனால எந்த அப்ரூவும் தராம வேணும்ன்னே இழுத்தடிக்கிறான்..  இதோ இப்போ கூட எக்ஸ்போர்ட் ஆர்டரை நிப்பாட்டி வச்சிருக்கான், இதை இப்படியே விடமுடியுமா..?” என்றவனின்  முகத்தில்  கோவம் கொப்பளித்தது. 
“சரி இதை  விடு.. பார்த்துக்கலாம், நீ முதல்ல  அதிகிட்ட பேசு, நான் நாளைக்கு வீட்டுக்கு வரேன், நம்ம விஷயத்தை பற்றி பேசணும்..” என்று சொல்ல, தீக்ஷியின் முகத்தில்  தயக்கம். 
“தீக்ஷி.. இனியும் என்னால முடியாது, நாளைக்கு  பேசி ஒரு முடிவு எடுத்தே ஆகணும், ரெடியா இரு..”  என்று முடித்துவிட்டவன், “என்னை ஏர்போர்ட்ல டிராப் செஞ்சுட்டு நீ காரை எடுத்துக்கிட்டு போயிரு..” என்று காரை கிளப்பினான்.
“மனோன்னா, ராகுல்ண்ணா..  படம்  பார்க்க பார்க்க  போலாமா..?” என்று தருண் இருவரிடமும் ஆசையாக  கேட்டான். 
“போலாம்டா, என்ன படம்..?” என்று அதி ஆர்வமாக கேட்க, 
“ஒன்லி பாய்ஸ் மட்டும் தான்..” என்று தருண் முகம் திருப்பி  சொன்னான். 
“அப்போ  நீயும் போக முடியாது தருண் குட்டி..” என்று அதி கிண்டலாக சொல்ல, 
“நான் ஏன் போகமுடியாது..?” என்ற தருணிடம், 
“நீ பாயா..? நீ கிட்.. அதாவது குழந்தை.. குவா குவா குழந்தை..” என்று சிரிப்புடன் சீண்டினாள். 
“நான் ஒன்னும் கிட் இல்லை, ஐயம் 9  இயர்ஸ் பாய்..”  என்று விறைப்பாக சொன்னவனின் தோளில் கை போட்டு அணைத்து  கொண்ட மனோ, 
“விடு தருண், நாம படத்துக்கு கூட்டிட்டு போகலைன்னு  இந்த அதிக்கு பொறாமை.. அதான் பொங்குறா..” என்றவனிடம் ஹை பை போட்டு கொண்ட தருண், “சில்லி சித்தி..” என்று சிரித்தான். 
“டேய் சில்லிகில்லி சொன்ன அவ்வளுதான்..” என்று அதி சண்டைக்கு  தயாராக, 
“தருண் தப்பு உன்மேல தான், அதி சில்லி கிடையாது..” என்ற ராகுலை “நண்பேன்டா..” என்று பெருமையாக பார்த்த அதிதியை, 
“அவ சில்லி கிடையாது,   பல்லி..”  என்று  ராகுல் நக்கலாக சொல்லி  மூவரும் ஹைபை போட்டு கொண்டு சிரித்தனர்.  
“டேய்.. டைனோசர் வாயா..? நீயுமாடா..?” என்று ராகுலை பார்த்து உள்ளுக்குள்  பொங்கிய அதிதிக்கு சட்டென ஐடியா தோன்ற, “என்னையாவா பல்லி சொன்னீங்க, உங்களை என்ன செய்றேன்னு பாருங்க..” என்று படத்திற்கு போக டிக்கெட் புக் செய்து கொண்டிருந்தவர்களை கிண்டலாக பார்த்தவள், நைசாக வெளியே சென்றாள். 
“நல்ல  நேரம் டிக்கெட் கிடைச்சிருச்சு..” என்று மூவரும் வெளியே வந்தவர்கள், காரை எடுக்க பார்த்தவர்கள், அதிர்ந்தனர். நான்கு டையர்களும் பஞ்சர் ஆகியிருந்தது. 
“என்னடா சொன்னீங்க..? நான் சில்லியா..? பல்லியா..? இல்லைடா இல்லை.. உங்க மூணு பேருக்கும் நான்தான்டா வில்லி..!!”  என்று நம்பியார் போல் கைகளை பிசைந்து சிரித்தவளை கொலை வெறியுடன் முறைத்த ஆண்கள், 
“உன்னை என்ன செய்ய போறோம் பாரு..” என்று   அவளை துரத்த, 
“சிங்கம் சிக்காதுடா  சங்கிகளா..”  என்று அதிதி  வேகமாக கார்டனை சுற்றி ஓடினாள்.  
“ஒழுங்கு மரியாதையா நின்னுடு அதி, நாங்களா பிடிச்சோம் நீ கைமா தான்..” என்று கோபத்துடன் அவளை துரத்தியவர்கள் தன்னை நெருங்கிவிடவும், அவளின் கண்ணில் சிக்கியது காரை கழுவும் தண்ணீர்  பைப்..    
“டேய்.. சங்கிகளா, கிட்ட வந்தீங்க டேப்பை ஆன் செஞ்சுடுவேன், அப்பறம் மூணு எலும்பு பாய்ஸும்  தண்ணில பறக்க வேண்டியது தான்..” என்று பைப்பை கையில் பிடித்து மிரட்டினாள்.  
“இதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்..” என்று ஆண்கள் மூவரும் அவளை நெருங்க, டேப்பை ஆன் செய்து தண்ணீரை அடிக்க ஆரம்பித்துவிட, “ஏய் அதி, ஸ்டாப்.. நிறுத்து..” என்றவர்களின் கெஞ்சல் அதிக்கு உற்சாகத்தை கொடுக்க, மேலும் அவர்களை நெருங்கி தண்ணீர் அடித்து விளையாண்டவள், அப்போதுதான் காரை நிறுத்தி இறங்கிய விஷ்வஜித்தின் மேலும் அடித்துவிட்டாள். 
“ஏய்..” என்று கத்திய  விஷ்வஜித்தின் சத்தத்தில் பார்த்தவள், “அய்யோ..” என்று பயத்தில் டேப்பை கீழே போட்டு  வாய் மேல் கை வைத்தாள்.  “என்னடா  இது எல்லாம்..?”   என்று முகத்தில் வழிந்த தண்ணீரை துடைத்து கொண்டே விஷ்வஜித் நால்வரையும் பார்த்து கோவமாக கேட்டான். 

Advertisement