Advertisement

காதல் ஆலாபனை  20 
மூன்று வருடங்களுக்கு முன்பு தங்களின் வாழ்க்கையில் நடந்தவற்றை நினைத்து கொண்டிருந்த தீக்ஷியின்  வீட்டிற்கு வந்த இந்திரஜித்,  அங்கே வெளியே தோட்டத்தில் இருந்த அண்ணனிடம் கோவமாக சென்றான்.
 அருணாசலத்தின் ரிசப்ஷன் பங்க்ஷனிலிருந்து நேரே கிளம்பி இங்கு வந்திருந்தான். அவனுக்கு அங்கு நடந்ததை நினைத்து  மனதே ஆறவில்லை,  நிகில் தீக்ஷியிடம்  ப்ரொபோஸ் செய்தது, அதை தொடர்ந்து அருணாச்சலமும், அவரின் மனைவியும் தீக்ஷியிடம் பேசியது எல்லாம் அவனை கொதி நிலைக்கு கொண்டு சென்றது. அதனாலே, 
“ஏன் விஷூ இப்போ கூட  மனோவை பற்றி  தீக்ஷிக்கிட்ட சொல்ல வேண்டாங்கிற..?”  என்று கோவமாக  கேட்டான். 
“ஏன் சொல்லணும் ஜித்து..?  சொல்ல எல்லாம் வேண்டாம்,  மனோவை நேர்லே தீக்ஷிக்கு காட்டலாம்..” என்று விஷ்வஜித் சிரிப்புடன் சொன்னான். 
“என்ன சொன்ன விஷூ..? அப்போ..? அப்போ மனோ..?” என்று இந்திரஜித் மகிழ்ச்சி கலந்த எதிர்பார்ப்புடன் கேட்டான். 
“ஆமா ஜித்து.. இரண்டு நாளா நல்ல இம்ப்ரூமென்ட் இருக்கு, அதோட நைட் அவன்கிட்ட  லேசான உடல் அசைவும் இருந்திருக்கு, சீக்கிரம் அவன் கோமாவுல இருந்து திரும்பிடுவான்னு டாக்டர்  முழுமையான நம்பிக்கை கொடுத்திருக்கார். அதை சொல்லத்தான் நான் பங்க்ஷன் வந்தேன்..” என்று விஷ்வஜித் சொல்லி முடிக்கவும், அண்ணனை தாவி அணைத்து கொண்டான் இந்திரஜித். 
“சூப்பர் சூப்பர் விஷூ.. ரொம்ப சந்தோஷமா இருக்குடா, தீக்ஷி.. தீக்ஷிகிட்ட சொல்லணும்..” என்ற தம்பியை தடுத்த அண்ணன், 
“இப்போ தானே சொன்னேன், சொல்ல எல்லாம்  வேண்டாம்..” என்றவன்,  தம்பியை அழைத்துகொண்டு வீட்டின் உள்ளே சென்றான். அங்கு தீக்ஷி சுவரில் மாட்டப்பட்டிருந்த அவர்களின் குடும்ப புகை படத்தை வெறித்து பார்த்து  கொண்டிருந்தாள். 
அவளிடம் தெரிந்த  சிறிதும் உணர்ச்சியில்லா மரத்த பாவனையில்    “உனக்கு யாருமில்லை..” என்ற பேச்சு அவளை மிக மிக பாதித்திருப்பது புரிந்த அண்ணன், தம்பி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். 
“ஜித்து.. நீ அவளை காருக்கு கூட்டிட்டு வா, நாம இப்போவே மனோவை பார்க்க போலாம்..” என்ற அண்ணன் வெளியே சென்றுவிட, தீக்ஷியின் அருகில் சென்று அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன், அவளின் கையை பற்றி கொண்டான். 
அவனின் ஸ்பரிசத்தில் அவனை பார்த்தவளின் முகத்தில் தெரிந்த விரக்தியை, வலியை உணர்ந்து கொண்ட இந்திரஜித், “தீக்ஷி.. ஒரு லாங் ட்ரைவ் போலாமா..?” என்று கேட்டான். 
“ம்ப்ச்..” என்று முகத்தை திருப்பி கொண்டவளின் கன்னத்தை பிடித்து தன்னை பார்க்க செய்தவன், “போலாம்டா ப்ளீஸ்.. உனக்காக..” என்று கேட்டான். 
“வேண்டாம்..” என்றுவிட்டவளை கனிவாக பார்த்த இந்திரஜித், “தீக்ஷி.. ப்ளீஸ்,  வா..” என்று மறுபடியும் கேட்டவனை வெறித்து பார்த்தவள், 
“என்ன திடீர்ன்னு என் மேல அக்கறை..? நீதானே உனக்கும் எனக்கும் ஒன்னுமில்லைன்னு சொன்ன, இப்போ மட்டும் என்ன..?” என்று அன்று சொன்னதையே அடிக்கடி சொல்லி காட்டும் அவளின் காயத்தை புரிந்து கொண்டான். 
அன்று திருமணம் செய்ய கேட்டு அவள் மறுத்தில் கோவம் கொண்டு, “உனக்கும் எனக்கும் ஒன்னுமில்லை..” என்று சொல்லவிட்ட தன் வார்த்தைகள் அவளை மிகவும் காயப்படுத்தியிருந்ததை அவள் அவனை விலக்கி வைப்பதிலே புரிந்து கொண்டான். 
அதை தொடர்ந்த நாட்களில் அவள் AAR  சென்று அபிஷியலாக பொறுப்பேற்ற கொண்ட பிறகும் எந்த உதவிக்கும் விஷூவையே கேட்டவள், அவளுக்கு ஒரு நல்ல PA வேண்டும் என்றும் விஷூவிடம் தான் சொல்லயிருந்தாள். 
அதை தெரிந்து கொண்ட இந்திரஜித் மிகவும் திறமைசாலியான தன் PA பாலாவை அவளுக்கு அனுப்பி வைத்தான். இந்திரஜித் அனுப்பிய ஆள் என்று தெரிந்து கொண்ட தீக்ஷி, “வேண்டாம்..” என்று பாலாவை திருப்பி அனுப்பிவைத்துவிட, கோவம் கொண்டவன் பாலாவை அழைத்து கொண்டு தீக்ஷியின் ஆபிஸ்  வந்தான். 
“நீ உன் மனசுல என்ன நினைச்சிட்டிருக்க..?” என்று அவளின் கேபின் கதவை சாத்திவிட்டு கோவமாக கேட்டான். அவனின் கோவம் எதனால் என்று புரிந்தவள், கண்டு கொள்ளாமல் தன் வேலையை பார்க்க, கொதித்த இந்திரஜித், அவளின் சேரை இழுத்து கை பிடித்து எழுப்பி விட்டான். அவனின் கைபிடி அழுத்தத்திலே அவனின் கோவம் புரிந்தாலும், அதை புறக்கணித்து சாதாரணமாக தான் நின்றாள். 
“ராட்சஸி..”  என்று பல்லை கடித்தவன், “எதுக்கு பாலாவை திருப்பி அனுப்பின..?” என்று கேட்டான். 
“வேண்டாம்.. நானே ஆள் பார்த்துகிறேன்..” என்று யாரோ போல் சொன்னாள். 
“ஏன் பாலா வேண்டாம்..? நான் அனுப்பினதாலா..?”  
“ஆமாம்..” என்று நொடியும் தயங்காமல் ஒப்புக்கொண்டவளை முறைத்தவன், “உனக்கு ரொம்ப திமிரு கூடி போச்சுடி, என்கிட்டேயே சொல்ற..” என்று வார்த்தைகளை கடித்து மென்றவனின் கோவம் அவளை பாதித்தாகவே தெரியவில்லை. 
“தீக்ஷி.. ஏன் இப்படி செய்ற..?” என்று அவளின் ஒதுக்கத்தை உணர்ந்து ஆற்றாமையுடன் கேட்டான். 
“நான் என்ன செய்தேன்..?” என்று அதற்கும் கேள்வி கேட்டவளை வேதனையுடன்  பார்த்தவன், 
“தீக்ஷி.. நீ என்னை ரொம்ப ஹர்ட் பண்ற..?” என்றான்.  
“யாரு நானா..?  இல்லை..   நீங்கதான் உனக்கும் எனக்கும் ஒன்னுமில்லைன்னு சொல்லி என்னை ரொம்ப ரொம்ப ஹர்ட் செஞ்சிங்க..? நான் இல்லை..” என்று தீக்ஷி  தன் காயத்தை மறைக்காமல் சொல்ல, இந்திரஜித்திற்கு குற்ற உணர்ச்சி, 
அன்று தான் திருமணம் செய்ய கேட்டு அவள் மறுத்த கோவத்தையே பிடித்து தொங்கி கொண்டிருந்தவனுக்கு, தீக்ஷி சொல்லவும் தான் அவள்  தன் வார்த்தைகளால்  மிக ஆழமாக காயம் பட்டிருப்பது புரிந்தது. 
“சாரி..  சாரி.. மில்லியன்.. பில்லியன்.. கவுண்ட்லஸ் டைம் சாரி தீக்ஷி..  அது.. அன்னிக்கு இருந்த  கோவத்துல என்ன பேசுறோம்ன்னு தெரியாம பேசினது, உணர்ந்து எல்லாம் இல்லை.. சாரிடி..:”  என்று அவளின் இரு கைகையும் தன் கைகளுக்குள் அடக்கி கொண்டு  கேட்டான். 
“கோவத்துல பேசினாலும் அந்த வார்த்தைகள் எனக்கு வலிக்கும் தானே..!!  அதுவும்.. எனக்கு  இப்போ இருக்கிற ஒரே  உறவு நீங்க மட்டும் தான்..!   நீங்க  அந்த வார்த்தை என்னை பார்த்து சொல்லும் போது அது  எனக்கு எவ்வளவு வலிக்கும்ன்னு உங்களுக்கு ஏன்  தெரியல..?” என்று தன் வேதனையை சொல்லியவளுக்கு எந்த பதிலும் சொல்ல முடியாமல் நின்றவனுக்கு மன்னிப்பு கேட்பதும் அபத்தமாக தோன்ற தவிப்புடன் அவளை பார்த்தான். 
மற்ற நேரங்களாக இருந்தால் அதை தீக்ஷி சிறிதும் பொருட்படுத்தி இருக்க  மாட்டாள். ஆனால் அவள் தற்போதுள்ள சூழ்நிலையில் அந்த வார்த்தை எவ்வளவு கொடுமையானது.. அவளின் பலவீனமான நேரத்தில் பலமாக தான் இல்லாமல் அவளை நோகடித்திருப்பது புரிய இந்திரஜித்திற்குள் குற்ற உணர்ச்சி.
“நீங்க கில்ட்டா பீல் பண்ணனும்னு  நான் இதை  சொல்லலை.. இனியும் அது போல வார்த்தைகளை கோவத்துல கூட என்னை பார்த்து சொல்லிடாதீங்கன்னு தான் சொல்றேன்,  என்னால  அந்த வார்த்தைகளை  தரும் வலியை கடந்து போக முடியல,  அங்கேயே என் மனசு நின்னுடுது..” என்று தீக்ஷி  துயரத்துடன் சொல்ல அவளையே கெஞ்சுதலாக பார்த்தான். 
“விடுங்க..” என்று அவனின் தவிப்பு புரிந்து தானே முடித்துவிட்டவள், அன்றே பாலாவை தன் PA வாக சேர்த்து கொண்டாள் தான். ஆனாலும் அவளின்  கோவம்   சில பல மாதம் கடந்தும் வெளிப்படும் நேரம் எல்லாம்  சரணடைந்து விடும்  இந்திரஜித், இன்றும் அது போலே..  
“தப்பு தான், அன்னிக்கு எதோ கோவத்துல அப்படி  பேசிட்டேன், மன்னிச்சிரு..” என்று  சரண்டர் ஆனான்.  அவன் எப்போதும் போல்  உணர்ந்து மனமார மன்னிப்பு கேட்டுவிட, இவளும் எப்போதும் போல் அதற்கு  மேல் அவனிடம் கோவப்பட முடியாமல் அமைதியாகிவிட்டாள். 
“லாங் ட்ரைவ் போலாமா.. ப்ளீஸ்..” என்று இந்திரஜித் அவளின் கையை ஆறுதலாக தட்டி கொடுத்து கொண்டே கேட்க, மறுக்க தோன்றாமல் “ம்ம்..” என்று இருவரும் வெளியே வர,  விஷ்வஜித் இவர்களுக்காக காரை ஸ்டார்ட் செய்தான். 
“இவருமா..? ஏன்..?”  என்று தீக்ஷி புரியாமல் இந்திரஜித்தை பார்க்க, அவனோ வேறெதுவும் பேசாமல்,  “வா.. போலாம்..”  என்று அவளின் கை பிடித்து பின்னால் ஏற்றியவன், தானும் அவளுடனே அமர்ந்து கொண்டான். 
“எங்க போறோம்..?”  என்று தீக்ஷி பொதுவாக இருவரையும் பார்த்து சந்தேகத்துடன் கேட்டவள், அப்போது தான் இருவரின் முகத்திலும் தெரிந்த  மலர்ச்சியை கண்டு கொண்டாள். 
“என்ன..? என்ன இவ்வளவு ஹாப்பி..?” என்று மிக நீண்ட நாட்களுக்கு பிறகு விஷ்வஜித்தின் முகத்தில் தெரிந்த  மலர்ச்சியில் தானும் மலர்ந்தவள், “என்ன அண்ணா..?”  என்று அவனிடமே கேட்டாள்.  
“ம்ம்.. நீயே பார்த்து தெரிஞ்சுகோயேன்..” என்று விஷ்வஜித் சிரிப்புடன் சொல்ல, இந்திரஜித்தும் “ஆமாம்.. ஆமாம்.. நீயே பார்த்து தெரிஞ்சுக்கோ.. ஆனா அதுக்கு அப்பறம் எங்களை மறந்துடாத..” என்றான். 
“அப்படியென்ன..?” என்று அவர்களின் சந்தோஷ சிரிப்பில் தன் துக்கத்தை மறந்தவளின் முகம் கார் ஹாஸ்பிடலுக்குள் நுழையவும் கறுத்தது. 
“என்ன..? இங்க… இங்க எதுக்கு வந்திருக்கோம்..?” என்று படப்படபோடு கேட்டவளின் கை பிடித்து இறக்கி உள்ளே கூட்டி கொண்ட சென்ற இந்திரஜித், 
“பயப்படற மாதிரி ஒன்னுமில்லை தீக்ஷி, சொல்ல போனா நீ சந்தோஷத்துல வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க போற  விஷயம் தான்..” என்று  சொல்ல, தீக்ஷிக்குள் இன்னும் படபடப்பு அதிகமாகியது. 
“என்ன..? என்ன சொல்றீங்க..?”  என்றவளின் மனதில் மனோவின் முகம் நொடியில் மின்ன,    “மனோ.. மனோ..” என்று வார்த்தைகள் திக்கி திணறி  கேட்டவளின் உள்ளுணர்வை உணர்ந்து  சிலிர்ப்புடன் பார்த்தவன், 
“ஆமாம்..” என்று தலையசைத்த நொடி தீக்ஷியின் உடலும் மனமும் அதிவேகமாக தடத்தடத்தது. “தீக்ஷி.. ரிலாக்ஸ்..” என்று அவளை அரவணைத்து கொண்டவன், ICU விற்குள் அழைத்து சென்றான். 
 அங்கு மிகவும் மெலிந்த நிலையில் ஓர் உருவம் மிசுமிசுப்பாக தெரிய, தன் கண்ணீரை வேக வேகமாக துடைத்தவள், அருகே சென்று அந்த உருவத்தின்  முகம் பார்க்க பயந்து..  தயங்கி..  அழுகையுடன்  தடுமாறி..  நடுக்கத்துடன் நின்றாள். 
“தீக்ஷி..” என்று அவளின் அளவுக்கு அதிகமான நடுக்கத்தில் மேலும்  தன்னோடு  சேர்த்து அணைத்து பிடித்தவாறே பெட்டின் அருகே சென்ற இந்திரஜித்தின் கையணைப்பில் இருந்தே படுத்திருந்த உருவத்தின் முகத்தை மிகவும் சிறிதாக எட்டி பார்த்தவளுக்கு  “அது மனோ தான்..”  என்று கண்டு கொண்ட நொடி  உடல் ஏகத்துக்கும் தூக்கி போட்டதோடு இந்திரஜித் மேலே மயங்கி சரிந்தாள்.  
“மனோ..  மனோ..”   என்று  தீக்ஷியின்  மனம் இந்த இரண்டு நாட்களாக விடாது அரற்றி கொண்டிருக்க கண்கள் முழுதும் ICU வில் தான். அவன் கூடிய விரைவில் கண் விழித்து விடுவான் என்று டாக்டர் உறுதியாக சொல்லியிருக்க, அந்த நேரத்திற்காக தவம் போல் ICU வாசலிலே காத்திருந்தாள். இந்திரஜித் அங்கேயே அவளுடனே இருந்துவிட, விஷ்வஜித் மட்டும் தருணுக்காக வீடு திரும்பினான். 
“தீக்ஷி.. இந்த ஜுஸை குடி..” என்று இந்திரஜித் கொடுக்க, மறுக்காமல் வாங்கி கொண்டவள்,  “மனோ எழுந்திருக்கும் போது அவன் கூட சண்டை போட எனக்கு நிறைய தெம்பு வேணும்..” என்று சொல்லிகொண்டே குடித்தாள். அவளின் அளவில்லா மகிழ்ச்சி அவளின் ஒவ்வொரு அணுவிலும் தெரிய அதை ரசித்து பார்த்திருந்தான் இந்திரஜித். 
முதல் நாள் அவள் மயக்கமடைந்த உடன் மிகவும் பதறிப்போன இந்திரஜித், அதிர்ச்சியில் தான் மயங்கியிருக்கிறாள் என்று டாக்டர் சொல்லவும் தான் நிம்மதியானான். சில மணி நேரங்களில் விழித்தவள், முதலில் மனோவிடம் தான் ஓடினாள். 
மிகவும் மகிழ்ச்சியுடன் அவனின் கை தொட  முயன்றவளை தடுத்த டாக்டர், இன்பெக்ஷன் ஆகும்  என்று சொல்லிவிட சிறிது தூரத்தில் இருந்தே வெகு நேரம் தம்பியின் முகம்  பார்த்து கொண்டிருந்தாள். உள்ளுக்குள் சந்தோஷ ஆறே ஓடி கொண்டிருக்க, முகத்திலும் மிகவும் மலர்ந்த சிரிப்பு. டாக்டர் போக சொல்லும் வரை தம்பியை பார்த்து கொண்டிருந்தவள், வெளியே வர, இந்திரஜித், விஷ்வஜித்  அவளுக்காக காத்திருந்தனர்.  
அவளிடம் முதலில் ஆரம்பித்து எல்லாவற்றையும் சொன்னான் விஷ்வஜித். ஷர்மாவின் பகை முதல் ஆக்சிடென்ட் திட்டம் வரை முழுவதையும் சொன்னவன்,  
“பிரேக் கண்ட்ரோல் இல்லாம  வேகமா வந்த லாரி இடிச்சதுல அப்போதான் காரை விட்டு இறங்கடிருந்த   மனோ, தூரமாக தூக்கி எரிஞ்சதுல  பக்கத்துல இருந்த சவுக்கு தோப்புல போய் விழுந்திருந்தான். அவங்களையே பார்த்திருந்த எனக்கு ரொம்ப நேரம் கழிச்சு ஹாஸ்பிடல்ல நைட்  தான் மனோ வீசி எரிஞ்சது ஞாபகம் வந்தது”. 
“உடனே,  அப்பா உதவியோட  அன்னிக்கு நைட்டே அந்த சவுக்கு தோப்பு   முழுசும் ஆள் வச்சி அலசி அவனை கண்டு பிடிச்சிட்டோம்.   ரொம்ப கிரிட்டிக்கலா தான் இருந்தான். எப்படியோ காப்பாத்திடலாம்ன்னு நினைக்கிற நேரத்துல கோமாவுக்கு போயிட்டான்”.  
“இவன் உயிரோட இருக்கிறதை சொல்லலாமா..? வேண்டாமான்னு..? தயக்கம்.. ஒரு வேளை இந்த ஆக்சிடென்ட் யாரோட பிளானா இருந்தா என்ன செய்ய..? இவனை சேப் செய்யணும்ன்னு யோசிச்சோம், அந்த நேரத்துல தான் போலீஸ் இவனை கண்டு பிடிக்க முடியாம இறந்துட்டான்னு சொல்லிட்டாங்க..”
“ நாங்களும் அதுவே இருக்கட்டும், அடுத்து என்ன  செய்றது  பார்க்கலாம்ன்னு முடிவெடுத்தோம், நீயும் படிக்க கிளம்புன, சோ படிச்சி முடிக்கட்டும்ன்னு விட்டோம், அப்போ  இவனோட கண்டிஷனும் உறுதியா  தெரியல..” என்று இழுத்த விஷ்வஜித் தயக்கத்தை புரிந்து கொண்ட தீக்ஷிக்கு மனோவின் ஆபத்தான நிலை  புரிய  உள்ளம்  நடுங்கியது. 
“ஷ்ஷ்.. அவன் இப்போ நல்லா இருக்கான்.. அதை மட்டும் நினை..”  என்று இந்திரஜித்,  அவளின் நடுக்கத்தை புரிந்து தோளோடு அணைத்து அதட்டினான்.  
“ம்ம்..” என்று தலையாட்டிய தீக்ஷியை பார்த்த விஷ்வஜித், “மனோவை பத்தி  உன்கிட்ட முன்னாடியே சொல்லலைன்னு எங்க மேல கோவம் இல்லையே..?” என்று கேட்க, அவனின் கையை பிடித்து கொண்ட தீக்ஷி, 
“நான் இருக்க இப்படி என் தம்பி  தனியா உயிருக்கு போராடிட்டு இருந்திருக்கானேன்னு வருத்தம் இருக்கு, இத்தனை மாசம் அவனை கவனிக்காம விட்ட  வேதனை இருக்கு.. இல்லன்னு சொல்லலைண்ணா, ஆனா.. உங்க மேல எந்த கோவமும் இல்லை”, 
“அந்த சூழ்நிலையிலும் என் தம்பியை ஞாபகம்  வச்சி தேடி அவனோட உயிரை காப்பாத்தியிருக்கீங்க, ரொம்ப ரொம்ப நன்றிண்ணா.. இதுக்கு மேல எனக்கு சொல்ல தெரியல.. ஆனா உண்மையில நீங்க எனக்கு அண்ணன்னு ப்ரூப் செஞ்சுட்டிங்க..” என்று அவனின் கையை கண்ணில் ஒற்றி அழுதாள்.
“தீக்ஷி என்ன இது..?  ப்ளீஸ் அழுகையை நிப்பாட்டு..” என்று விஷ்வஜித் சங்கடத்துடன் சொல்ல, 
“ண்ணா.. நீங்க செஞ்சிருக்கிறது  ரொம்ப பெரிய உதவி, என் தம்பியை எனக்கு மீட்டு கொடுத்திருகீங்க, அதுவும் அவனும் மனைவியை இழந்து குழந்தையோடு தனியாக நிற்கும்  நேரத்தில், மனோவை தேடி அலைந்திருக்கிறான்..”  என்று புரிய, மேலும் நன்றியுணர்வில் அழுதாள். 
“தீக்ஷி.. போதும் அழுதது, இனியும் அழுகாத..” என்று அவளின் கண்ணீரை துடைத்து அதட்டி ஆறுதல் படுத்தினான்  இந்திரஜித். இப்படியாக தீக்ஷியின் தவம் மூன்று நாள் கழித்து நிறைவேறியது.  
அன்று மாலை  மனோஜ் சுயநினைவிற்கு திரும்ப, வெடித்துவிடும் அளவுக்கு துடித்த இதயத்தை அழுத்தி பிடித்து கொண்டு தம்பியின் பார்வையை எதிர்கொண்டாள் தீக்ஷி. மனோவிற்கு முதல் சில நிமிடங்கள் மங்கலாக தெரிந்த அக்காவின் உருவம், பின் தெளிவாக தெரிய, கண்ணின் ஓரத்தில் கண்ணீர் வழிந்தது. 
“அக்கா..” என்ற மனோவின்  உதட்டசைவு, தீக்ஷிக்கு உடல் அதிர்வை கொடுக்க, சுவாசிக்க மறந்து  கைகளை இறுக்கி மூடி தன் அழுகையை கட்டுப்படுத்தினாள். தம்பியின் முன் அழுது அவனை துன்பபடுத்த விரும்பாமல் மிகவும் முயன்று சிரித்தாள். 
அவளின் முயற்சியிலே நடந்தது எல்லாம் சில நொடிகளில் நினைவடுக்கில் தேடிய  மனோஜிற்கு ஆக்சிடென்ட் நடந்ததின் நினைவு வர, கண்ணாலே அவளுக்கு பின்னால் தன் பெற்றவர்களை தேடினான். அங்கு யாரும் இல்லாமல் போகவே உண்மை புரிந்தவனின் கண்கள் தீக்ஷியை அதிர்ச்சியோடும், துயரத்தோடும் பார்த்தது. 
அவனின் கண்கள் தனக்கு பின்னால் தேடியதிலே அவனின் தேடல் புரிந்து கண்களில் இறங்கி வழிந்தோடும் கண்ணீரை அடக்கும் வழி தெரியாது, வெடித்து  வரும் அழுகையை கை கொண்டு வாய் மூடி கதறினாள். அவளின் கதறலிலே எல்லாவற்றையும் உணர்ந்து கொண்ட மனோஜ், அழ கூட முடியாமல்  கண்களை இறுக்கி மூடி கொண்டான்.
ஹாஸ்பிடலிலே ஒரு வாரம் இருந்த மனோஜ், வீட்டிற்கு கிளம்பவும், “எனக்கு அந்த வீட்டுக்கு போக வேண்டாம், இப்போ  இருக்கிற வீட்டுக்கே போலாம்..” என்று உறுதியாக மறுத்துவிட, தீக்ஷி  தம்பி  சொன்னதை ஏற்று கொண்டாள்.  
வீட்டிற்கு சென்றவுடன்  வாசலிலே வைத்து சுப்பு ஆனந்த அழுகையுடன் ஆரத்தி எடுக்க, அவரை பார்த்து மெலிதாக சிரித்த மனோஜ், வீட்டிற்குள் நுழையவும், “மனோண்னா..”  என்று  எகிறி குதித்து தன்னை  அணைத்து கொண்ட தருணை  தானும் மகிழ்வுடன்  அணைத்து கொண்டான்.

Advertisement