Advertisement

“என்ன..?” என்று  அதிர்ந்த சங்கர், தன்னுடைய ஆட்களுக்கு போன் செய்து கேட்க, அவர்கள் 
“ஆமா சார், அரசு சார் பேமிலியும், அந்த விஷ்வஜித்தோட பேமிலியும்  கார்ல இருக்காங்க..” என்றனர். 
“டேய் எருமைகளா.. இதை முதல்லே சொல்ல மாட்டேங்களா..?” என்று அவர்களிடம் எகிற, 
“பாஸ்.. நீங்க அந்த காரை பலோவ் செய்ய சொன்னீங்க செஞ்சோம், அவ்வளவுதான்..” என்றவர்களை, “உங்களை  வச்சிக்கிறேன் இருங்கடா..” என்று கத்திவிட்டு ஷர்மாவிற்கு அழைத்தான். 
“சொல்லு சங்கர் முடிச்சிட்டியா…?” என்று எதிர்ப்பார்ப்போடு கேட்டவரிடம், 
“ஜி.. கார்ல அரசு சார் பேமிலி, அந்த விஷ்வஜித்தோட பேமிலியும் இருக்காங்க..” என்றான். 
“என்ன..? இதை ஏண்டா முதல்லே சொல்லலை, அவங்களை ஏதும் செஞ்சுடலையே..?” என்று பதட்டமாக கேட்டார். 
“இல்லை ஜி, இன்னும் எதுவும் செய்யல, லாரி ட்ரைவர் போன் செஞ்சு கேட்கவும் தான்  தெரிஞ்சுது..” எனவும், மூச்சுவிட்ட ஷர்மா, 
“எதுவும் செய்ய வேண்டாம்ன்னு சொல்லிடு, பிளான் டிராப்ன்னு முதல்ல அந்த லாரி டிரைவருக்கு போன் செஞ்சு சொல்லு..” என்று அவசரமாக சொல்லவும், சங்கரும் உடனே அந்த லாரி ட்ரைவருக்கு அழைத்தான். 
“என்ன சொன்னா தீக்ஷி..?” என்று அரசு மகளிடம் போன் பேசிமுடித்த ராணியிடம் கேட்க, “படிக்க போறேன்னு சொன்னா..” என்றார். 
“ம்ம்.. என்னமோ இன்னிக்கு தீக்ஷி முகமே சரியில்லை..”, என்று அரசு சொல்லவும், 
“எனக்கும் அப்படித்தான் இருக்குங்க, அவளை தனியா விட்டுட்டு வந்திருக்க கூடாதோன்னு தோணுது..” என்று தானும் வருத்தபட்டார். 
“விடு, இனிமே  இப்படி அவளை தனியா விட்டு எங்கேயும் போக கூடாது..” என்ற அரசுவுடன் ஆமோதிப்பாக தலையாட்டினார் ராணி. 
“ம்மா.. வாமிட் வர்ற மாதிரி இருக்கு..”  என்ற தருணை முறைத்த தர்ஷினி, 
“எத்தனை டைம் சொன்னேன்..?, காலையிலே கேக்கை சாப்பிடாதன்னு, தீக்ஷியோட சண்டை போட்டு அவ்வளவு கேக்கும் சாப்பிட்டா இப்படித்தான்..” என்று கோவமாக திட்டினாள். 
“விடு தர்ஷினி, இதுக்கெல்லாம் பிள்ளையை திட்டுவாங்களா..?” என்ற ராணி,  “மாப்பிள்ளை, காரை  கொஞ்சம் நிறுத்துங்க..”, என்று சொல்லவும், கேட்டு கொண்டிருந்த விஷ்வஜித் காரை நிறுத்தி தருணை இறக்கியவன், 
“நான் பார்த்துகிறேன், வெளியே ரொம்ப வெயிலா இருக்கு..” என்று இறங்க பார்த்த ராணியை, தர்ஷினியை தடுத்து விட்டு தானே ஓரமாக அவனை கூட்டி கொண்டு சென்றான். 
தருண் வாமிட் எடுத்து முடிக்கவும், மனோஜிடம் வாட்டர் பாட்டிலை கொடுத்த ராணி, அவனை இறங்க சொல்ல, அவனும் காரின் கதவை திறந்து இறங்கும் நேரம், எதிர் புறத்தில் இருந்து கட்டுப்படில்லாமல் வந்த ஒரு பெரிய கண்டைனர் லாரி, வந்த வேகத்தில் இவர்களின் காரை நசுக்கி தூக்கி வீசியது. 
ஏய்.. ஏய்..    லாரி.. ஐயோ..      கடவுளே.. ஒடுங்க..   ஆம்புலன்ஸ்.. காப்பாத்துங்க.. என்ற சத்தம் அவ்விடத்தை நிரப்ப, விஷ்வஜித்தும்,  தருணும் தாங்கள் கண்ட காட்சியை நம்பமுடியாமல் சிலை போலே நின்றனர். 
“தம்பி.. தம்பி..” என்று சிலர் விஷ்வஜித்தை பலமுறை வலுவாக உலுக்கிய பிறகே, “ஆ.. ஆங்..” என்று சிறிதும் உணர்வில்லாமல் பார்த்தான். 
“கீழ பாருங்க, பையன் மயங்கி இருக்கான்..” என்று சொல்லவும், குனிந்து பார்த்த விஷ்வஜித்திற்கு தருண் அதிர்ச்சியில்  மயங்கி இருப்பது கண்டு சிறிது உணர்வு வர, மகனை வாரி அணைத்து கொண்டவனின் கண்ணில் நிற்காமல்  நீர் வர, கண்கள் நசுங்கியிருந்த கார் மேல் நிலைத்தது. 
“அவங்க எல்லாம் உங்களோட வந்தவங்க தானே..?” என்று பலர் கேட்க, 
“ஆ.. ஆமாம்..” என்று தலையாட்டியவனின் கைகள் மகனை தூக்கி கோள்ள, கால்கள் காரை நோக்கி சென்றது. கார் மொத்தமும் நசுக்கியிருக்க, ஆம்புலன்ஸ்சில் வந்தவர்கள், போலீஸின் உதவியோடு காரை உடைத்து, எல்லோரையும் வெளியே எடுத்து  ஆம்புலன்சில் ஏற்றி கொண்டிருக்க, தானும்  தருணுடன் ஆம்புலன்சில் ஏறி கொண்டான். 
“தீக்ஷிம்மா.. ஆள் வந்திருக்காங்க..”  என்று சுப்பு அழுகையுடன் படபடவென கதவை தட்டவும், எக்ஸாம் முடியும் தருவாயில் இருந்த தீக்ஷி, ஆன்செர் ஷீட்டை அனுப்பி விட்டு கதவை திறந்தாள். 
“என்ன ஆச்சு சுப்பு..? ஏன் அழறீங்க..?” என்று பதட்டதுடன் கேட்டவளின் கை பிடித்து கீழே அழைத்து வந்தார். “நீங்க கொஞ்சம் ஹாஸ்பிடல் வரணும்..” என்ற போலீஸுடன் நடுங்கியவாறே சென்றாள் தீக்ஷி. 
“சார்.. நான் எதுவும் செய்யல, ஆனா வேற ஒரு லாரி அவங்க கார் மேல் ஏறிடுச்சு..” என்று சங்கர் போன் செய்யவும் அந்த லாரி ட்ரைவர் தன் கண் முன் நொடியில் நிகழ்ந்து விட்ட பயங்கரத்தை பார்த்தவாறே பயத்துடன் சொன்னான். 
“என்ன..? என்னடா சொல்ற..?” என்று பதறிய சங்கர், 
“நீ.. நீ அங்க இருக்காத, கிளம்பிடு..” என்று சொல்ல, “இதோ சார்..”  என்று அந்த லாரி ட்ரைவர் அங்கிருந்து கிளம்பிவிட்டான். 
“ஜி.. வேற ஒரு லாரி அவங்க கார் மேல ஏறிடுச்சு போல..” என்று சங்கர் போன் செய்து ஷர்மாவிடம் சொல்ல, “என்ன சொல்ற சங்கர்..?” என்ற ஷர்மாவுக்கும் ஏகப்பட்ட அதிர்ச்சி. 
“ம்மா.. ம்மா..” என்று ICUவில் நினைவு இல்லாமல் படுத்திருந்த ராணியின் கை பிடித்து அரற்றி கொண்டிருந்த தீக்ஷியின் கண்ணில் இருந்த நீர் எல்லாம் இந்த மூன்று நாட்களில் வற்றியிருக்க, மரத்து போன நிலையில், ஒரு ஜடம் போலே ராணியின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். 
ஆக்சிடென்ட் ஆன அன்றே அரசு, தர்ஷினி இல்லாமல் போயிருக்க, மனோஜ் தூக்கி வீசப்பட்டிருந்ததால் அவனை தேடி கொண்டிருந்தனர். மிச்சமிருக்கும் ஒரே உயிரான ராணி மூன்று நாட்களாக உயிருக்கு போராடி கொண்டிருந்தார். 
“என்னை விட்டு நீங்க போக கூடாது..”  என்பதே தீக்ஷியின் மூச்சாக இருந்தது, அவள் கருத்தில், நினைவில் எதுவும் இல்லை..  ராணியின் உயிரை தவிர, யார் பேசினார்கள், என்ன பேசினார்கள்..? யார் வந்தார்கள்..? என்று எதுவும் தெரியாது. 
இப்போதிருக்கும் ஒரே பற்றான  ராணியின் கையை பிடித்துகொண்டிருந்தவள், “ம்மா.. ம்மா.. நீங்க என்கிட்டே  வந்துருங்க, அப்பா வேண்டாம், அவர் என்னை விட்டு போயிட்டார், நீயும்  அவர்கிட்ட போயிடாத, நான் தனியா என்ன செய்வேன்..?”
“எனக்கு நீங்க இல்லாம வாழ தெரியாது, இனி நீங்க சொல்றதை எல்லாம் கேட்கிறேன், டைம்க்கு  சாப்பிடுறேன், நேரத்துக்கு வீட்டுக்கு வந்துடுறேன், போனை தொடவே மாட்டேன்.. அப்பறம், அப்பறம்.. நீ சொன்னாலும் கேட்கிறேன், என்னை விட்டு போகாதாம்மா, நான் உன்னோட செல்ல பொண்ணுதானே, ஆமா தானே, வாம்மா, வந்துடும்மா..”  என்று உயிருக்கு போராடி கொண்டிருந்த  ராணியிடம் கெஞ்சி கொண்டிருந்தாள். 
டாக்டர்ஸ் வாய்ப்பு மிகவும் குறைவு.. என்று சொல்லிவிட, “எங்க அம்மா வருவாங்க.. எனக்காக வருவாங்க, கண்டிப்பா வருவாங்க..” என்று இந்த மூன்று  நாளாக அம்மாவின் உயிரை தன்னிடமே தக்க வைத்து கொள்ள போராடி கொண்டிருந்தாள். 
“ம்மா.. எல்லோரும் வாய்ப்பு ரொம்ப கம்மின்னு சொல்ராங்க, ஆனா நான் சொல்லிட்டேன், எங்க அம்மா எனக்காக வருவாங்கன்னு, ஆமாதானேம்மா, நீங்க உங்க பொண்ணுக்காக வருவீங்க தானே..?” என்று அவரிடமே கேள்வி  கேட்டு கொண்டிருந்தாள். 
“தீக்ஷி.. எதாவது சாப்பிடு, அட்லீஸ்ட் இந்த தண்ணியாவது குடி..” என்ற கஸ்தூரி, உடன் அதிதி, பாரதி மட்டுமில்லாமல் சுபாவுமே அவளை வேதனையுடன் பார்த்து கொண்டிருந்தார். 
இந்த மூன்று நாட்களாக அவளின் அம்மாவின் உயிரை காப்பற்ற போராடும் அவளின் துன்பம் பார்த்து கொண்டிருந்தவருக்கு அவளின் மேல் இரக்கம் பொங்கியது, எல்லோருக்கும் உறுதியாக தெரிந்தது ராணி உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று, 
செயற்கை சுவாசத்தில் மட்டுமே அவரின் உயிர் துடித்து கொண்டிருக்க, அதை ஏற்க மறுத்து தன் அம்மாவின் உயிரை காப்பற்றியே தீருவேன் என்று போராடும் தீக்ஷியை பார்க்க எல்லோருக்குமே அளவில்லா துயரம், 
அதிலும் வீடியோ காலில் அவளை பார்க்கும் இந்திரஜித்திற்கு உயிரே துடித்தது. டிக்கெட் கிடைக்காமல் போராடி கொண்டிருந்தவனுக்கு இன்று தான் டிக்கெட் கிடைத்தது. 
“தீக்ஷி.. இந்த தண்ணியை கொஞ்சமாவது குடி, இப்படி மூணு நாளா தண்ணி கூட குடிக்காம இருந்தா எப்படி..? குடி தீக்ஷி..” என்று கஸ்தூரி அவளை மடி சாய்த்து கேட்டு கொண்டிருக்க, 
“ம்ஹூம் .. அம்மா அவங்க கையால கொடுத்தா தான் குடிப்பேன்..” என்று பிடிவாதமாக இருந்தாள். 
“டாக்டர்.. டாக்டர்..” என்று ICU ல் இருந்த நர்ஸ் சத்தம் போடவும், 
“என்ன..? என்ன ஆச்சு…? அம்மா.. அம்மாவுக்கு என்ன..?” என்று பதறியபடி எழுந்து ஓடிய தீக்ஷியின் கண் முன்னால் ராணியின்  உடல் தூக்கி போட்டு கொண்டிருக்க, அவரின் கண் திறந்து மகளை பார்த்தது. 
“தீக்ஷி..” என்றவரின் வார்த்தை அடுத்த நொடியில் மொத்தமாக  நின்றுவிட்டது.  அந்த நொடியில் தீக்ஷியின் முகத்தில் தெரிந்தது எல்லாம் கோவம்.. கோவம் மட்டுமே.. 
“என்னை வேணாம்ன்னு விட்டு போன நீ எனக்கும் வேணாம்,  வேணாம்..” என்று முடிந்த மட்டும் கத்தியவள், அப்படியே மயங்கி சரிந்தாள். 
எல்லாம் முடிஞ்சிருச்சு.. இனி என்ன..?  என் உயிர் சுவாசிக்கிறது.. என் இதயம் துடிக்கிறது.. என் கை கால்கள் எல்லாம் இயங்குகின்றன.. அவ்வளவுதான், இதை தவிர வேறென்ன நான்..? எதுவும் இல்லை, என்ற உணர்விழந்த நிலையில் தான் தீக்ஷி இருந்தாள். 
இந்த ஒரு வாரத்தில் வாழ்வின் மிக மோசமான நாட்களை கடந்து விட்டாள். அதன் பாதிப்பிலிருந்து, தாக்கத்திலிருந்து, அந்த கொடூரத்திலிருந்து கடக்க முடியவில்லை, கடக்கவும் முடியாது.. ஏன் இப்படி..? இனி நான் என்ன..? என்ற கேள்வி மண்டைக்குள் எந்நேரமும் ஓடி கொண்டிருந்தது. இது தான் நிதர்சனம், மாற்ற முடியாத உண்மை என்பதை மூளை ஏற்று கொண்டது. ஆனால் அதை மனம் ஏற்று கொள்ள தயாராகவே  இல்லை.. 
இறுதியாக காணாமல் போயிருந்த மனோஜ்  மீது நம்பிக்கை கொண்டிருந்தவளின்  நம்பிக்கையும் நேற்று தான் இல்லாமல் போனது. அவனும் இல்லை..!! என்று தம்பிக்காக அழுது கொண்டிருந்தவளின் துயரம் கடவுளையும் பாதித்ததோ..!! 
அவன் உயிர் ஓர் ஹாஸ்பிடலில் துடித்து கொண்டிருந்தது. “ப்பா.. மனோஜ் பத்தி தீக்ஷிக்கு மட்டுமாவது சொல்லலாம்ப்பா, ஒன்னுமே இல்லாமல் ஆயிட்டா, இது கேட்டா கொஞ்சமாவது மீண்டு வருவா..” என்று அன்று தான் இந்தியா திரும்பியிருந்த இந்திரஜித், ஹாஸ்பிடலில் இருந்த மனோஜை காண நேரே வந்து விட்டான். 
“ம்ஹூம்.. ஜித்து, இவன் கோமாவுல இருக்கான், இவன் எப்படின்னு கன்பார்மா சொல்ல முடியாது,  போலீஸ் சொன்னது சொன்னதாவே இருக்கட்டும், இவன் உயிர் பிழைச்சு வந்தா தீக்ஷிக்கு சந்தோஷம் தான், இல்லைனா.. அவ கண்டிப்பா தாங்கமாட்டா”, 
“அதோட இவங்களை யாரு அட்டேக் செய்ய பார்த்ததுன்னு கண்டு பிடிக்கணும்.. மே பி அவங்களால மனோ உயிருக்கு ஆபத்து வந்தா..? இப்போதைக்கு நாம மனோஜை தலைமறைவா பாதுகாக்குறதோடு, தீக்ஷியையும்  பாதுகாக்கணும், இது எதேச்சையா நடந்ததா..? இல்லை பிளான்ட்டா கண்டு பிடிக்கணும்..” என்று சொன்ன ஆனந்த், அங்கு ஓரமாக வெறித்து அமர்ந்திருந்த விஷ்வஜித்தின் மேல் பார்வை பதித்தார்.  
“தருண்..?” என்று கேட்ட இந்திரஜித்திடம், 
“அதிதி தான் பார்த்துகிறா, முதல்ல எல்லாரையும் கேட்டு ரொம்ப கலாட்டா செஞ்சவன், இப்போ எல்லாம்  எப்பவும் இப்படி வெறிச்சு தான் இருக்கான், என்ன செய்யறதென்னே தெரியல..?” என்று மிகவும் வேதனையோடு சொன்னார். 
விஷ்வஜித்தின் கை பிடித்து அமர்ந்திருந்த இந்திரஜித்திற்கு தீக்ஷியை பார்க்க செல்ல  வேண்டும்.. என்ற பயம் அதிகமாக இருந்தது. அவளின் நிலையை சுப்புவின் மூலம் ஒவ்வொரு நொடியும் கேட்டு, பார்த்து அறிந்திருந்தவனுக்கு  ஒரு வார்த்தை கூட யாரிடமும் பேசாத அவளின் அமைதி மிக பெரிய பயத்தை தான் கொடுத்தது. 
அதே பயத்துடன் தீக்ஷி வீடு சென்றவன், நடுங்கிய காலை எடுத்து வைத்து வீட்டினுள் சென்றான், அங்கு சோபாவில் அமர்ந்திருந்த தீக்ஷியின்  இமைக்கா  பார்வை  இவன் மேல் தான்  இருந்தது.

Advertisement