Advertisement

காதல் ஆலாபனை  17
“ப்பா.. என்னை மட்டும் விட்டுட்டு  நீங்க எல்லாம் போறீங்க..?” என்று ,மனோஜின் பிறந்த நாளிற்காக அனைவரும் அவர்களின் ECR கெஸ்ட் அவுஸ் செல்லவும், தீக்ஷிதா  மன சுணக்கத்துடன்  தந்தையிடம் கேட்டாள். 
“எங்க போறோம்டா..? இங்க பக்கத்துல இருக்கிற நம்ம கெஸ்ட் அவுஸ்க்கு தானே போறோம், இன்னிக்கு ஈவினிங்கே  வந்துட போறோம், தம்பி ஆசைப்படறான் இல்லை..”, என்று அரசு  மகளின் தலையை தடவி சொன்னார். 
“போங்கப்பா, இன்னிக்குன்னு பார்த்து எனக்கு ஆன்லைன் எக்ஸாம் வந்துடுச்சு.. நீங்க எல்லோரும் மட்டும் போய் நல்லா என்ஜாய் செய்ய போறீங்க..?” என்று வருத்ததுடன் புலம்பியவளை பார்த்து மனோஜும், தருணும் சிரிக்க, மேலும் கடுப்பான தீக்ஷி, அவர்களை முறைத்தவள், 
“என்னங்கடா ரொம்ப தான் சிரிக்குறீங்க..? இந்த எண்ட்ரன்ஸ் எக்ஸாம் மட்டும் முடியட்டும், நானும் அப்பாவும் தனியா ஒரு லாங் ட்ரைவ் போக போறோம், அதுவும் அப்பாவோட முன்னாடி சீட்ல உட்கார்ந்து, வழியில ஐஸ்க்ரீம் கூட சாப்பிடுவோம், என்னப்பா..?” என்று அரசுவிடம் சலுகையாக கேட்டாள் தீக்ஷி. 
“கண்டிப்பாடா.. நாம மட்டுமே போலாம், இந்த பொடி பசங்க  எல்லாம் கிடையாது..”, என்று மகளுடன் கூட்டணி  போட்டு சொன்னவரை பிள்ளைகள் கோவமாக பார்க்க, மகள் அணைத்து கொண்டாள். 
“போதும்டி.. டைம் ஆச்சு, நாங்க கிளம்புறோம், நீ ஒழுங்கா எக்ஸாம் அட்டென்ட் பண்ணு..”, என்று ராணி கடிந்து கொண்டார். 
“என்னை தனியா விட்டு போறதுக்கு அவ்வளவு அவசரம்..?”  என்று சஞ்சலத்துடன் கேட்ட தீக்ஷியின் பேச்சு ராணிக்கும் மனசங்கடத்தை கொடுக்க, 
“என்னடி பேச்சு இது..? உன்னை தனியா விட்டு போறோம், அது இதுன்னு..” என்று அதட்டியவர், மகளின் சுருங்கிய முகம் கண்டு அணைத்து கொண்டார். 
“தீக்ஷி.. என்ன இது..? ஏன் இவ்வளவு கஷ்டப்படுற..?” என்ற மனோஜ் அக்காவின் சுருங்கிய முகம் பார்த்தவன், “சரி விடு, நாங்க போகல..” என்று சொன்னான். 
“எனக்காக யாரும் ஒன்னும் அவங்க பர்த்டே அவுட்டிங் கேன்சல் செய்ய தேவையில்லை,  வரும் போது எனக்கு பிடிச்ச கேக்ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வந்தா போதும்..” என்று தம்பியின் ஆசையை கெடுக்க மனமில்லாமல் சொன்னாள். 
“எனக்கு விஷ் செய்யாதவங்களுக்கு எல்லாம் கேக் கொடுக்கிறதில்லை..” என்று தம்பி  பிகு செய்ய, அவன் முன் ஒரு கிப்ட் பாக்ஸை  நீட்டியவள், 
“கேக் கொடுத்துட்டு விஷ் வாங்கிக்கோ..”  என்று தானும் பிகு செய்தாள் அக்கா. “அஃது..”  என்று மகிழ்வுடன் பிரிக்க போனவனை தடுத்தவள், “கார்ல போய் பிரிச்சிக்கோ..” என்றவள், தன்னையே முறைத்த படி நின்றிருந்த தருணை அடக்கபட்ட சிரிப்புடன் பார்த்தாள். 
“அவனுக்கு கிஃப்ட் கொடுக்கும் போதெல்லாம் உனக்கும் கொடுக்கணுமா பால் டப்பா..”  என்று கிண்டலாக கேட்டபடி அவனுக்கும் ஒரு கிஃப்ட் பார்சலை நீட்டியவள், அவனை சீண்டும் விதமாக தலையை கலைக்க, “டோன்ட் டச் மீ தீக்ஷி..”  என்று சிலுப்பி கொண்டே கிஃப்ட்டை வாங்கி கொண்டான். 
“நீங்களும் எங்களோட அவுட்டிங் வரீங்களா..?” என்று தர்ஷினி விஷ்வஜித்திடம் கேட்க, 
“இல்லை தர்ஷி, நீங்க மட்டும் போங்க, இன்னிக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு..” என்று பைலை பார்த்தபடி மறுத்தவனிடம், 
“ஓஹ்.. ஒரு ஹால்ப் டே மட்டும்..” என்று ஆசையாக கேட்டவளிடம், 
“வாய்ப்பே  இல்லை தர்ஷி, நீங்க மட்டும் கிளம்புங்க..” என்றவனை நிராசையாக பார்த்தவள், “சரி..” என்று அரசுவின் வீட்டிற்கு வந்தாள். 
“கிளம்பலாமா தர்ஷினி..?” என்று எல்லோரும் வெளியே காரிடம் வந்தனர். “பார்த்துக்கோ தீக்ஷி பத்திரம், டைம்க்கு சாப்பிடு, போன்லே ரொம்ப நேரம் இருக்காத, பார்த்து இருந்துக்கோ..”  என்று ராணி மகளுக்கு தொடர்ந்து அறிவுரை சொன்னவர், அவளை அணைத்து காரில் ஏறினார்.  
“தீக்ஷி பத்திரம்டா..” என்று அரசு மகளை அணைத்து நெற்றியில் இதழ் பதித்தவர், காரில் ஏறி ஸ்டார்ட் செய்தார். முதலில் ஸ்டார்ட் ஆன கார் சில  நொடியிலே தானே ஆப் ஆகிவிட, மீண்டும் ஆன் செய்தார். ஸ்டார்ட் ஆகாமல் போக மீண்டும் முயற்சித்தார். 
“ம்ஹூம்.. ஸ்டார் ஆகலையே, என்ன ஆச்சு..?” என்று இறங்கி பேனட்டை திறந்து பார்த்தார்.  
“ப்பா.. என்ன ஆச்சு..?” என்று தீக்ஷி அவரிடம் சென்று கேட்க, 
“தெரியலைடா..”  என்றவர் ட்ரைவரை பார்க்க, அவரும் வந்து பார்த்தவர், 
“சார்.. என்ன ஆச்சுன்னு தெரியல..” என்று கைவிரித்தார். 
“இன்னும் கிளம்பலையா நீங்க..?” என்றபடி அவனின் காரில் இருந்து இறங்கி வந்த விஸ்வஜித் கேட்டான். 
“என்னன்னு தெரியல விஷ்வா கார் ஸ்டார்ட்  ஆகல..”, என்று அரசு சொல்லவும், தானும் முயற்சித்து பார்த்தான். 
“ஸ்டார்ட் ஆகல மாமா..  மெக்கானிக் வரச்சொல்லி தான் பார்க்கணும் மாமா, உள்ள எதாவது அடைப்பா இருக்கும்..”  என்று விஷ்வஜித் மனைவியை பார்க்க, அவள் அவன் பார்த்ததும் உதடு சுழித்து முகம் திருப்பி கொண்டாள். 
“என்னடி..? ரொம்ப சுழிக்கிற..?” என்று அவளை நெருங்கி கேட்டவனிடம், 
“பின்னே..? என்னடா பொண்டாட்டி ஆசையா கூப்பிட்றாலே அவளோட போவோம்ன்னு இல்லாம மீட்டிங் அட்டென்ட் பண்ண போனா எப்படியாம்..?” என்று மனைவி லேசான கோவம் வெளிப்பட கேட்டாள். 
“எனக்கும் வரணும்ன்னு தான் ஆசை, ஆனா என்ன செய்ய..?”  என்று  மனைவியின் வாடிய முகம் பார்த்து யோசித்தவன், “சரி விடு, மீட்டிங் நாளைக்கு போஸ்ட்போன்ட் செஞ்சுக்கிறேன்..”  என்றுவிட்டான். 
“உண்மையாவா..?”  என்று மகிழ்ந்த மனைவியின் மலர்ந்த முகத்தை  பார்த்து தானும் மலர்ந்து சிரித்தவன், 
“உண்மையாதான், நானும் வரேன்..” என்றவன், காரை பார்த்து கொண்டிருந்த அரசுவிடம் சென்று “மாமா.. நானும் உங்களோட அவுட்டிங் வரேன், நம்ம பார்ட்யூனர்லே  எல்லாம் போலாம்..” என்றான்.  
“உங்க மீட்டிங்..?”  என்று அரசு கேட்க, 
“இருக்கட்டும் மாமா, ஒரு நாள் பேமிலிக்காக கேன்சல் செஞ்சா தப்பில்லை..” என்றவனின் காரில் எல்லோரும் கிளம்ப தயாராகினர். 
“ஏய் தீக்ஷி.. நாங்க எல்லாம் நல்லா என்ஜாய் செய்ய போறோம், உனக்கு போட்டோ அனுப்புறோம், நல்லா பாரு..” என்று தருணும், மனோஜும்  தீக்ஷியை சீண்டிவிட, 
“ஏய் சும்மா இருங்கடா, அவளே ஏற்கனவே  வெந்து போயிருக்கா..” என்ற தர்ஷினி தீக்ஷியின் குறைப்பில்,   “இல்லை நொந்து போய் இருக்கான்னு சொன்னேன்..” என்று மழுப்பினாள். 
“எல்லாம் ரொம்பத்தான் செய்றீங்க, பார்த்துக்கோங்க..”  என்று முகம் சுருக்கி மிரட்டியவளை அணைத்து கொண்ட  தர்ஷினி, 
“விடு தீக்ஷி,  இதெல்லாம் நமக்கு புதுசா என்ன..?  உன்னை மாதிரி தான் அங்க அதிதியும்  கோயம்பத்தூரே கருகி போற அளவுக்கு வயிறு எறிஞ்சிட்டு இருக்கா..”  என்று  சிரிப்புடன் சொன்னாள்.  
“முகத்தை இப்படி உர்ரென்று வச்சிக்காத தீக்ஷி, பார்க்கவே  நல்லா இல்லை, உன் சொந்தகாரங்களை பார்த்த மாதிரி இருக்கு..”  என்ற மனோஜிடம்,
“யார் தீக்ஷி ரிலேட்டிவ்..?”  என்று தருண் புரியாமல் கேட்டான். 
“எல்லாம் நம்ம குரங்கு மாமா, கொரில்லா சித்தப்பா தான்..”  என்றவனோடு தருண்  ஹைபை போட்டு கொண்டான். 
“இன்னும் கூட இருக்காங்க, அவங்களை சொல்ல மறந்திட்டியே மனோ..? என்ற தீக்ஷி, “கிங் காங்க்.. பெரிய தம்பி,   சிம்பான்ஸி  சின்ன தம்பி..”  என்று  கிண்டாலாக சொன்னாள். 
“இன்னிக்கு என் பர்த்டே அதுக்காக கூட விட்டு கொடுக்க மாட்டியா..?” என்று மனோஜ் கடுப்பாக கேட்டான். 
“அது உனக்கு இருந்திருக்கணும்..” என்றவளை காண்டாக பார்த்த மனோஜ், 
“போய் தொலை உனக்கு பிடிச்ச ஐஸ்க்ரீம் கேக் வாங்கிட்டு வரேன்..”, என்றவன், அக்காவின் சிரிப்பில் தானும் சிரித்துவிட்டவன், அவளை தோளோடு அணைத்த கொண்டு, “பை தீக்ஷி.. டேக் கேர்..”  என்றுவிட்டு  காரில் ஏற, தருண் எப்போதும் போல் அவளை உர்ரென்று பார்த்தவாறே தான் காரில் ஏறினான். 
“போடா பால் டப்பா, திரும்பி என்கிட்ட தான்  வரணும்..”  என்று கிண்டலாக சொன்ன மகளின் தோளில் தட்டிய ராணி, 
“எப்போ பாரு சின்ன பிள்ளைங்க கிட்ட வம்பு வளத்துக்கிட்டே இரு..” என்றவர், இறுதியாக மகளை அணைத்து விடுவிக்க, அரசுவும் மகளை அணைத்து விடுத்தார். 
“பார்த்துக்கோ தீக்ஷி, பத்திரம்..” என்று மகளின் நெற்றியில் இதழ் பதித்து மகளை பார்த்து கொண்டே காரில் ஏறி கிளம்பினார்கள் அரசுவும்,  ராணியும். அவர்கள் கிளம்பி சென்ற பிறகும் அங்கேயே சில  நிமிடங்கள் நின்றிருந்தாள்  தீக்ஷி, ஏனோ மனம் மிகவும் பாரமாக இருக்க,  என்னவென்று புரியா சஞ்சலத்துடன் உள்ளே வந்தவள், நேரே தன் ரூமிற்கு சென்றாள். 
எக்ஸாமிற்கு இன்னும் நேரம் இருக்க, படிக்க தோன்றாமல் வெறுமனே புக்கை வெறித்து கொண்டிருந்தவளின் மொபைல் ஒலிக்க எடுத்து பார்த்தாள் ராணி தான் அழைத்திருந்தார். “சொல்லுங்கம்மா..” என்றவளிடம், 
“இல்லை தீக்ஷி, சும்மா பேசணும்ன்னு தோணுச்சு..” என்றவரின் குரலில் இருந்த மாற்றம் தீக்ஷிக்குமே புரிய, “எங்க போய்ட்டு இருக்கீங்க..? தருண், மனோ என்ன செய்றாங்க..?” என்று சிறிது நேரம் பேசிவிட்டு வைக்க போகும் நேரம், “பத்திரம்டா,  பார்த்து இரு..”  என, 
“சரிம்மா..”  என்று  போனை வைத்தவளுக்கு இந்திரஜித்திடம் பேச வேண்டும் போல தோன்ற உடனே அவனுக்கு அழைத்து விட்டாள். முழு ரிங் சென்று முடியும் நேரம் எடுத்தவன், “சொல்லு தீக்ஷி..” என்றான். 
“இல்லை சும்மாதான்..” என்றவளின் டல் குரல் கேட்டவன், 
“ஆல் ஓகே..? ஏன் இப்படி டல்லடிக்கிற..?” என்று கேட்டான். 
“எல்லாம் ஓகே தான்..” என்று இழுத்தவளுக்கு எதுவுமே சரியில்லாமல் தான் தோன்றியது. அதை புரிந்து கொண்ட இந்திரஜித், 
“என்னடா..? என்ன ஆச்சு..? எக்ஸாம் டென்க்ஷனா..?” என்று கேட்டான். 
“தெரியல, இருக்கலாம்..” என்றவளுடன் சில நிமிடங்கள்  பொதுவாக பேசியவன், “எக்ஸாம் டைம் நெருங்கிருச்சு பாரு, கொஞ்சம் ரிவைஸ் செஞ்சுக்கோ..” என்று போனை வைக்க, தீக்ஷியும்  அலைபாயும் மனதை கட்டுப்படுத்த முயற்சி செய்து எக்ஸாமிற்கு தயரானாள். 
அதே சமயம் மற்றொரு இடத்தில், “ஜி.. இந்த கார் நம்பர் தானே, பார்ட்யூனர் வொய்ட்..” என்று  விஷ்வஜித்தின் காரை பாலோவ் செய்து கொண்டிருந்த தங்களுடையு ஆட்களின் மூலம் தகவல் தெரிந்த சங்கர்  போன் செய்து ஷர்மாவிடம் கேட்க, 
“அதே கார் தான், விடாத, அடிச்சு தூக்கிட சொல்லு, என் மேலே கை வச்சி என்னை அசிங்கப்படுத்தின அவன் உயிர் வாழவே தகுதி இல்லாதவன்..”  என்று வெறியோடு சொன்ன ஷ்ரமாவின் உத்தரவை ஏற்ற சங்கர், உடனே இன்னொரு நம்பருக்கு அழைத்து, 
“ECR  ரோடுக்குள்ள வண்டி நுழைஞ்சிருச்சு, கார் நம்பர் ஞாபகம் இருக்குல்ல, மிஸ் ஆகக்கூடாது..” என்று தன் முதலாளியின் உத்தரவை சொன்னான்.  
“முடிச்சிட்டு போன் செய்றேன்..” என்ற லாரி ட்ரைவர், சில நிமிடங்களில் அவனின் லாரியை கடந்து சென்ற விஷ்வஜித்தின் காரை தொடர ஆரம்பித்தவனுக்கு சந்தேகம் தோன்ற, சங்கருக்கு அழைத்தான். 
“நீங்க ஒரு ஆள் தான் சொன்னீங்க, ஆனா இங்க காருல ஒரு நாலு, அஞ்சு பேர் இருக்காங்க..” என்று கேட்டான். 

Advertisement