Advertisement

“என்கிட்ட எந்த டிப்ஸ் கேட்கணுமோ அதை கேட்டு தெரிஞ்சுக்காதா..? இதெல்லாம் கேளு, அப்பறம் பர்ஸ்ட் நைட்ல ஒன்னுமே தெரியாம மக்கா முழிக்க போற பார்த்துக்கோ..” என்று விரல் நீட்டி குறும்பாக மிரட்டியவனின் விரலை ஸ்க்ரீனில் அடித்தவள், 
“எனக்கு ஒன்னும் தெரியலைன்னா போகுது, என்னோட அவருதான் இருக்காரே..? அவர் எல்லாம் பார்த்துப்பார்..” என்று தீக்ஷியும் குறும்புடன் சீண்டினாள். 
“உன்னோட அவருக்கு  எல்லாமெல்லாம் தெரியாது, கேள்வி ஞானம் தான், பிராக்டிலா வரும் போது தான் எப்படின்னு என்ன பார்த்து  அவருமே  கத்துக்கணும்..” என்று சிரிப்பு மின்ன அழுத்தி  சொன்னவனின் முகம் பார்க்க முடியாமல் தவித்தவள், 
“உங்களை..!!   நான் கட் பண்றேன், போங்க..” என்று கட் செய்ய போகவும், 
“ஏய்.. ஏய் கட் செய்யாத..”, என்று தடுத்தவன், “இப்போ என்ன உனக்கு டிப்ஸ் தானே வேணும்..” என்று எப்படி பிரிபேர் செய்வது, எதை எல்லாம் படிப்பது..? என்று சொல்லி கொடுக்க, தீக்ஷியும் கவனமாக கேட்டு தெரிந்து கொண்டவள், அன்றிலிருந்து எண்ட்ரன்ஸ் எக்ஸாமிற்கு ப்ரிபேர் செய்ய ஆரம்பித்துவிட்டாள்.  
இந்திரஜித்திற்குமே சென்ற இடத்தில வேலை இழுக்க அவனாலும் ஒரு மாதம் கடந்த பிறகும் ஊர் திரும்ப முடியா நிலை, 
“அரசு.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்று ராமலிங்கம் காலையிலே வீட்டிற்கு வர, ஆபிஸ் ரூம் அழைத்து சென்ற அரசு,  “என்ன லிங்கம்..?” என்று கேட்டார். 
“இல்லை, அந்த ஷர்மா மாப்பிள்ளை மேல ரொம்ப கோவமா இருக்கிறதா கேள்விப்பட்டேன்..” என்று இழுக்க, போன வாரம் நடந்ததை பற்றி பேசுகிறார் என்று புரிந்து கொண்டார் அரசு, 
ஒரு வாரம் முன்பு விஷ்வஜித் ஹோட்டலுக்கு சென்றிருந்த ஷர்மா வேண்டுமென்றே அங்கு அது சரியில்லை, இது சரியில்லை என்று பிரச்சனை செய்ய, விஷயம் கேள்விப்பட்டு அங்கு சென்ற விஷ்வஜித், முதலில் பொறுமையாகவே, 
“என்ன ஆச்சு ஷர்மா ஜி..? ஏதாவது பிரச்சனையா..?” என்று மரியாதையாகவே கேட்டான். 
“ஏதாவது பிரச்சனையா இல்லை..? இங்க எல்லாமே பிரச்சனை தான், என்ன ஹோட்டல் நடத்துறீங்க..?” என்று வேண்டுமென்றே கத்தி பேச, முயன்று தன் பொறுமையை இழுத்து பிடித்த விஷ்வஜித், 
“உங்களுக்கு என்ன சரியில்லைன்னு சொல்லுங்க, நாங்க மாத்த முயற்சி செய்றோம்..” என்று கேட்டான். 
“எனக்கு எதுவுமே சரியில்லை, இதெல்லாம் ஒரு செவென் ஸ்டார் ஹோட்டலா..?, என்ன  இன்டீரியர் இது, மகா மட்டம், பெயிண்ட் கலர் பாரு, கண்ணெல்லாம் பொசுங்கி போச்சு, மொத்த ஹோட்டலையும் இடிங்க..”  என்று நக்கலிடித்து சிரிக்க, அவருடன் இருந்தவர்களும் சத்தமாக சிரித்தனர். 
“தட்ஸ் இட்..” என்று கத்திய விஷ்வஜித்,  “என் ஹோட்டலை விட்டு இந்த செகண்டே வெளியே போங்க.. கெட் அவுட்..” என்று விட்டான். 
“என்ன..? எங்களை வெளியே போக சொல்றியா..?” என்று ஷர்மா எகிற, 
“உங்களை தான்.. நீங்களே வெளியே போகலை, கார்ட்ஸ் விட்டு வெளியே தள்ள வேண்டியிருக்கும்..”  என்று கத்த, முகம் அவமானத்தில் சுருங்க அங்கிருந்து வெளியே சென்ற ஷர்மாவின் வன்மம் மேலும் கூடி போனது. 
இந்த ஒரு வாரமாக சுற்று வட்டாரத்தில்  அதே பேச்சாக இருந்ததில், மகளின் வாழக்கையை  நினைத்து கவலை கொண்ட ராமலிங்கம் அரசுவை சந்திக்க வந்துவிட்டார். 
“அந்த ஷர்மா மாப்பிள்ளை மேல ரொம்ப கோவமா இருக்கிறதா கேள்விப்பட்டேன் அரசு, அவரை ஏதாவது..” என்று கவலை பட்டவரின் கவலை புரிந்த அரசு, 
“லிங்கம்.. நம்மளை மீறி மாப்பிள்ளையை யாரும் நெருங்க முடியாது, அதுவும் இல்லாம அவரே அவரை பார்த்துப்பார், நாம்ம மாப்பிள்ளை ரொம்ப தைரியசாலி தான்..”, என்று சொல்ல, 
“ம்ம்.. இன்னைக்கு கூட எதோ அசோசியேஷன் மீட்டிங்ன்னு கேள்விப்பட்டேன்..”, என்று கேட்க, “ஆமா லிங்கம்.. பார்த்துக்கலாம்..”  என்ற அரசுக்குவுமே மனசு சஞ்சலம் தான். 
அவர் நேற்றே விஷ்வஜித்திடம், மறைமுகமாக “இது  அவ்வளவு முக்கிய மீட்டிங் இல்லை, நீங்க வரவேண்டி இருக்காது..” என்று சொல்லி பார்த்தார். ஆனால் விஷ்வஜித் அவரின் எண்ணம் புரிந்தும் அதை பெரிதாக எடுக்க தோன்றாமல் “ பரவாயில்லை நான் வரேன்..” என்றுவிட்டான். 
ஓர் அளவுக்கு மேல் அவனை கட்டுப்படுத்தவும் முடியாத அரசு அமைதியாக இருந்து கொண்டார். இதோ விஷ்வஜித்துடன் மீட்டிங்கும் கிளம்பியாச்சு.. “மாப்பிள்ளை.. நான் கொஞ்சம் சொல்லணும், தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..?” என்று தயக்கத்துடன் கேட்டார். 
“என்ன மாமா இப்படியெல்லாம் கேட்கிறீங்க..? ஏதா இருந்தாலும் சொல்லுங்க..” என்று விஷ்வஜித் சொல்லவும், 
“இல்லை மாப்பிள்ளை.. எனக்கு உங்க கேரக்டெர் புரியுது, உங்களுக்கு தப்பு, சரின்னு படறதை அந்த நிமிஷமே செஞ்சுடுறீங்க, அதுல என்ன என்ன பாதகம் வரும்னு யோசிக்க மாட்டேங்குறீங்க, தர்ஷினியை கல்யாணம் செஞ்சதும் அப்படித்தான்..”, 
“அதுல என் தப்பும் இருக்கு, உங்க வயசுல, உங்க அப்பா, அம்மா இல்லாம நான் உங்களுக்கு கல்யாணம் செஞ்சு வச்சிருக்க கூடாது, அதுக்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை, ஆனால் அப்போ அன்னிக்கு இருந்த சூழ்நிலையில எனக்கு அது தப்பா தெரியல, உங்க அம்மா கோவப்பட்டபோ தான் எனக்கு என்னோட தப்பு புரிஞ்சது, அதோட விளைவு தான் இப்படி உங்க குடும்பத்தை விட்டு தனியா இருக்கீங்க..”, என்று வருத்தத்துடன் சொன்னவர், 
“இப்போ அந்த ஷர்மா கூடவும், உங்களுக்கு பிரச்சனை ரொம்ப பெருசா போய்ட்டு இருக்கு, உங்களை பத்தி நல்லா தெரிஞ்சு தான் அவன் உங்களை பார்க்கும் போதெல்லாம் வம்பிழுக்கிறான், அவன் செய்றது ரொம்ப தப்பு தான், அதுக்கான உங்க கோவமும் சரிதான்..”, 
“ஆனா.. எங்கெங்கே கோவம் படணும், எங்கெங்கே அமைதியா போகணும்ன்னு நீங்க புரிஞ்சுக்கணும், இந்த வயசுல  அந்த பக்குவம் இருக்காது தான், நாள் போக போக உங்களுக்கே அது தெரிஞ்சுடும்..”, 
“அதுவரைக்கும் அந்த ஷர்மா விஷயத்துல கொஞ்சம் பொறுமையா போனீங்கன்னா நல்லா இருக்கும், அவனோட வழி கொஞ்சம் சரியில்லாத வழி.. நம்ம குடும்பத்தை நாம்தானே பார்த்துக்கணும்..” என்று சொல்லி முடித்தவர், விஷ்வஜித்தை பார்த்தார். 
அவன் அவர் சொன்னதை யோசித்து கொண்டிருந்தவனின் முகம் திடிரென கோவத்தை காட்ட, அடுத்த நொடி காரை நிறுத்தி இறங்கியும் இருந்தான். அவன் இவ்வளவு  கோவமாக எங்கு செல்கிறான் என்று பார்த்தவருக்கு அந்த பன்முக வளாகத்தின் கார் நுழையும் இடத்தில், ஒரு நடுத்தர வயதுடையவரை இரண்டு ஆட்டோ ஓட்டுனர்கள் அடித்து கொண்டிருக்க, எல்லோரும் அதை வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருந்தனர். 
புரிந்து கொண்டு “ம்ப்ச்..” என்று அதிருப்தி கொண்ட அரசு, தானும் காரை விட்டு இறங்கியவர், போன் செய்தபடி அந்த இடத்திற்கு சென்றார். அங்கு  விஷ்வஜித் அந்த ஆட்டோ ஓட்டுனர்களை வெளுத்து கொண்டிருந்தான்.  
“விஷ்வா.. விஷ்வா அவங்களை விடுங்க..”, என்று அவனை பிரிக்க பார்க்க, மற்ற ஆட்டோ ஓட்டுனர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து விஷ்வஜித்திற்கு எதிராக  தாக்க ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் பத்து பேர் கொண்ட கார்ட்ஸ் வேகமாக வந்தவர்கள் விஷ்வஜித்தை பிரித்து, ஆட்டோ ஓட்டுனர்களிடம் என்னவென்று விசாரித்தனர். 
அடித்து கொண்டிருந்த இரண்டு ஆட்டோ ஓட்டுனர்களும், “இந்தாளு ஆட்டோல வந்துட்டு காசு கொடுக்காம எங்களை ஏமாத்த பார்த்தான், அதான் அடிச்சோம், நடுவுல இவன் என்னமோ பெரிய ஹீரோ மாதிரி வந்து எங்களை அடிக்கிறான்..” என்று விஷ்வஜித்தை பார்த்து கத்தினர். 
“சார், சார்.. என் பர்ஸ் எங்கேயோ தொலைஞ்சு போச்சு, நான் ஏமாத்தணும்னு நினைக்கல சார், அதுக்கு இவங்க என் ரெண்டாயிரம் வாட்சை கேட்டாங்க.. நான் தரமாட்டேன்னு சொன்னதுக்கு அடிக்கிறாங்க..” என்று அடிவாங்கியவர் வலியில் அவதிப்பட்டவாறே சொல்ல, அவரை பார்த்தவனுக்கு அவர் சொல்வது உண்மை என்று புரிந்தது. 
“காசு கொடுக்காததுக்கு தான் இந்த அடி அடிச்சீங்களா..?” என்று பல்லை கடித்தவன், பாக்கெட்டில் இருந்து  பணத்தை எடுத்து அந்த ஆட்டோ ஓட்டுனர்களிடம் கொடுத்துவிட்டு, 
“இப்போ காசு கிடைச்சிருச்சு தானே,  இதுக்காக அவரை நீங்க அடிச்ச அடி, அதை திரும்பி வாங்க முடியாது இல்லை,  ஆனா  அதையே  உங்களுக்கு திருப்பி கொடுக்கலாம் இல்லை..”  என்று  யார் தடுத்தும் கேட்காமல் வெளுத்து விட்டே விட்டான். 
“ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க..” என்று அடிபட்டவரை தன் காரிலே டிரைவருடன்  அனுப்பி வைத்தவனை அரசு அதிர்ப்தியாக பார்க்க, 
“சாரி மாமா.. என்னால இது போல விஷயங்களை சாதாரணமா கடந்து போக முடியாது.. நான் இப்படிதான்..!!”  என்றவனின் குணம் புரிந்து பெரு மூச்சு விட்டார் அரசு. 
“சரி.. வாங்க உள்ளே போலாம்..”  என்று அவர்கள் மீட்டிங் அந்த பன்முக வளாகத்திற்குள் என்பதால் இருவரும் உள்ளே சென்றனர். தங்களின் காரை கடந்து செல்லும் இருவரையும் வன்மமான சிரிப்புடன் பார்த்தான் காருக்குள்ளிருந்த ஷர்மா. 
மீட்டிங் ஆரம்பித்து பொதுவான விஷயங்களை பேசி முடிக்கவும், எழுந்த ஷர்மா விஷ்வஜித்தை நக்கலாக பார்த்து சிரித்தபடி பேச ஆரம்பித்தான். முதலில் எல்லோரையும் வரவேற்று பேசியவன், சிறிது சிறிதாக தன் வன்மத்தை கொட்ட ஆரம்பித்தான். 
“ஒரு சிலரால மத்த பிஸ்னஸ் மேன்ஸ்க்கு கெட்ட பேர் வருது, அவங்க ரவுடி மாதிரி போற வர்ற இடத்துல எல்லாம் அடிதடி சண்டை போட ஆரம்பிச்சுடுறாங்க, கொஞ்சம் கூட ஒரு டிஃனிட்டி இல்லை, டிசிப்ளின் இல்லை, மேனர்ஸ் இல்லை, அது போல ஆளுங்க மேல டிசிப்ளினரி ஆக்ஷன் எடுக்கணும்..” என்று தாக்கி பேச அரசு முகம் சிவக்க அமர்ந்திருந்த விஷ்வஜித்தின் கையை இறுக்கி பிடித்து கொண்டிருந்தார். 
“என்ன சொல்ல..? சில சீனியர் பிசினஸ் மேன்ஸும்  அவங்களுக்கு நல்ல புத்தி சொல்றதில்லை,  ஆனா அவங்களை சொல்லி மட்டும் என்ன ஆக போகுது..? அவங்களுக்கும் பொண்ணு கல்யாணம் நின்று போனா அவங்களை கல்யாணம் செஞ்சுக்க வசதியான மாப்பிள்ளை கிடைக்கும் போது கண்டிக்கவா தோணும்..?” 
“கிடைச்ச வரைக்கும் போதும்ன்னு அவங்க அப்பா, அம்மா சம்மதம் இல்லாமலே வளைச்சு போடதான் தோணும்.. அவங்க ரவுடியா இருந்தா தான் என்ன..?” என்று  அரசுவை தாக்கி பர்சனல் விஷயங்களை பேச ஆரம்பிக்க, விஷ்வஜித் அரசுவிடம் இருந்து கையை விடுவிக்க போராடி கொண்டிருந்தான்.  
“யாரை சொல்றீங்க ஷர்மா..? நம்ம சர்க்கில்ள இவ்வளவு சீப்பான பர்சன்ஸ் இருக்காங்களா..?” என்று ஆச்சரியபடுவது போல அவரின் கைத்தடி கேட்க, 
“இருக்காங்களே..!! பேருதான் பெத்த பிசினஸ் மேன், ஆனா உள்ளே பார்த்தா அத்தனையும் சொத்தை..” என்று சொல்லி சிரிக்க, அவரின் கைத்தடிகள் சத்தமாக சிரித்தனர். 
“ஷர்மா.. இங்க வந்து பெர்சனல் விஷயங்களை பேச கூடாதுன்னு உங்களுக்கு தெரியாதா..?” என்று அரசுவின் ப்ரண்ட் கணேஷ் கோவமாக கேட்டார். 
“இது பெர்சனல் கிடையாது Mr. கணேஷ், அவங்க  ரவுடி தனத்தால மத்த பிசினஸ் மேன்ஸ்க்கும் கெட்ட பேர்ன்னு சொல்றேன், கொஞ்சம் கூட செல்ப் கண்ட்ரோல் கிடையாது. எல்லா இடத்திலும் சண்டை போட வேண்டியது, ரவுடி மாதிரி நடந்துக்க வேண்டியது, மரியாதைன்னா  என்னன்னு  கொஞ்சம் கூட தெரியறதில்லை”. 
“இவங்களை மாதிரிஆளுங்க மேல டிசிப்ளினரி ஆக்ஷன் எடுக்கணும்ன்னு சொல்றேன், கொஞ்சம் கூட எந்த விஷயத்திலும் சுயகட்டுப்பாடு கிடையாது, அதனால தான் 22, 23 வயசிலே கல்யாணம் செஞ்சிகிட்டு குழந்தை..”  என்று அவர் முடிக்க முன்னமே அவரின் வாயிலிருந்து ரத்தம் போல பொலவென கொட்ட ஆரம்பித்தது. 
“என்னடா சொன்ன ராஸ்கல்..? இப்போ சொல்லு, சொல்லுடா..” என்று அவரின் வாயிலே குத்து விட்டவனை எல்லோரும் சேர்ந்து பாடுபட்டு தான் பிரிக்க வேண்டியதாக இருந்தது. 
“இதுக்கும் சேர்த்து டிசிப்ளினரி ஆக்ஷன் எடுடா பார்க்கலாம்..!!”  என்று சவால் விட்டவனை கணேஷும், அரசும் இழுத்து கொண்டு சென்றனர். 
“ஷர்மாஜி.. ஆர் யூ ஓகே.. வாங்க ஹாஸ்பிடல் போலாம்” என்று அவரை ஹாஸ்பிடல் அழைத்து செல்ல, ஷர்மாவின் மனம் முழுவதும் கொலை வெறி மண்டி கிடந்தது. மொபைல் எடுத்து அவரின் அண்டர் கிரவுண்ட் வேலை செய்யும் சங்கருக்கு மெசேஜ் அனுப்பியவரின்  குரூரமான முகத்தில் கொடூர சிரிப்பு. 

Advertisement