Advertisement

“ஹேய்.. இப்போ எதுக்கு இவ்வளவு பதட்டப்படுற..? நான் நல்லா இருக்கேன்..” என்ற இந்திரஜித் ஸ்க்ரீனில் தெரிந்த காதலியின் நிம்மதியை பார்த்தவாறே  பேசினான். 
“இல்லை, நீங்களா கால் செய்யவும் தான்..” என்றவளின் பதட்டம் எதனால் என்று புரிந்து கொண்டான். அன்று கோவாவில் வைத்து அவளிடம் சொன்னது போல அவன் அவளுக்கு அழைப்பதே இல்லை, தீக்ஷிதாவே போன் செய்து பேசினால் மட்டுமே உண்டு, அவளும் வாரத்திற்கு ஒரு முறை, இருமுறை மட்டுமே அழைப்பாள். அதனாலே அவன் திடீரென அழைக்கவும், அதுவும் பாரினில் இருந்து அழைக்கவும் பதட்டம் கொண்டுவிட்டாள். 
“சொல்லுங்க..” என்று முன் அமர்ந்திருந்த தர்ஷினியை கருத்தில் கொண்டு எழ பார்த்தவளை, “ஏய் அங்கிருந்து எழாத, அப்படியே உட்காரு..” என்று இந்திரஜித் அவசரமாக சொன்னான். அவன் சொல்வது இவளுக்கு புரியாமல் விழித்தாள். 
“உனக்கு முன்னாடி இருக்க  சோபா டீபாயில் பாரு..” என்று சொன்னவனின் பேச்சை கேட்டு எக்கி பார்த்தவளுக்கு தெரிந்தான்  ஸ்க்ரீனில் இருந்த இந்திரஜித். இவள் பார்க்கவும் கண்ணடித்தவன், “அங்கேயே உட்காரு, நான் உன்னை பார்க்கணும்..” என்றவனின் ஏக்கம் புரிய அமர்ந்தவளுக்கு அவனின் முகம் மேலோட்டமாக தெரிந்தது.
“என்ன மேடம் இன்னிக்கு சேரி எல்லாம் கட்டிக்கிட்டு பயங்கரமா ஜொலிக்கிறீங்க..?” என்று அவளையே வெறித்தவனின் பார்வையில் வெட்கம் உண்டாக, “இன்னிக்கு டிரிடிஷனல் டே..”  என்றாள். 
“ம்ம்.. இன்னிக்கு நைட்  பேசலாமா..? நான் கால் செய்யவா..?” என்று அவளையே ஏக்கத்தோடு பார்த்தபடி கேட்டவனுக்கு பதில் சொல்ல தயங்கினாள். “என்ன..? செய்யவா..?” என்று அவளின் முகத்தில் தெரிந்த மறுப்பு புரிந்தும் மீண்டும்  கேட்டான். 
“ஜித்து.. இந்த டாகுமெண்ட் தான்..” என்று வந்த விஷ்வஜித் தம்பியின் பார்வையையும், மொபைலையும் வைத்து தீக்ஷியை திரும்பி பார்த்தவன், “க்கும்..” என்று தொண்டையை பெரிதாக செருமி இருவரையும் மறைத்து அமர்ந்தான். விஷ்வஜித்திற்கு தெரியும் என்று இந்திரஜித் முன்னமே சொல்லியிருந்ததால் தீக்ஷி வெட்கத்துடன் போனை வைத்துவிட, 
“டேய்.. ஏண்டா..? படுத்தாத, தள்ளி உட்காரு, இல்லை கொஞ்ச நேரத்துக்கு எழுந்து எங்கேயாவது போய் தொலை..”  என்று அண்ணனை  கோவமாக கத்திய இந்திரஜித் வீடியோவை மியூட்டில் போட்டுவிட்டு திரும்பவும் தீக்ஷிக்கு அழைத்தான். 
“சொல்லுங்க..” என்றவள் விஷ்வஜித் எழுந்து செல்லவும், இந்திரஜித்தை பார்த்தவாறே கேட்டாள். “இன்னிக்கு பேசலாமா..? கால் செய்யவா..?” என்று பேசித்தான் ஆகணும் என்ற மிரட்டலோடு கேட்டான். 
“இல்லை.. பைனல் இயர் செமஸ்டர் இந்த வாரத்துல இருந்து  ஸ்டார்ட் ஆகுது..” என்று இழுக்க, புரிந்து கொண்டவன், “போடி..” என்றுவிட்டு எதிர்பார்ப்பு தந்த ஏமாற்றத்தில் மொபைலை வைத்துவிட்டான். 
“என்னடா..? என்ன ஆச்சு..?” என்று தீக்ஷி எழுந்து அவளின் வீட்டிற்கு சென்றதில் ஸ்க்ரீனிற்கு வந்தமர்ந்த அண்ணன் கேட்டான். “ம்ப்ச்..” என்றவனின் முகத்தில் தெரிந்த கோவத்தில், 
“டேய்.. அவளுக்கு எக்ஸாம்ஸ் ஸ்டார்ட் ஆகப்போகுது, இந்த நேரத்துல அவகிட்ட சண்டை போடாத..” என்று அட்வைஸ் செய்ய, காண்டான தம்பிக்காரன். 
“டேய்.. நீயெல்லாம் எனக்கு அட்வைஸே செய்ய முடியாது, என் வயசுல எல்லாம் நீ பிள்ளையே பெத்துட்ட..” என்று கிண்டலாக சீறினான். 
“ஆமா.. போடா, அது மட்டும் தான் கண்டேன்..”, என்று சலித்தவன்,  “ஒரு வாரம் கூட தர்ஷினியோட, தருணோட சேர்ந்து இருக்க முடிய மாட்டேங்குது, அங்க..  அங்க ஓட வேண்டியதா இருக்கு, இதோ நேத்து தான் ஊட்டில இருந்து வந்தேன், அடுத்து பெங்களூர் போகணும்.. பிஸ்னஸ்.. பிஸ்னஸ்ன்னு ஓடி பேமிலியை ரொம்ப மிஸ் செய்றேன், தர்ஷினியா இருக்க போய் ரொம்ப மெச்சூர்டா நடந்துகிறா, மத்தவங்கலா இருந்தா அவ்வளவுதான்..” என்றவன், 
“நீ வந்ததுக்கு அப்பறம் தான் உன்கிட்ட எல்லாம் ஒப்படிச்சிட்டு எங்கேயாவது போய் ஒரு ஒரு மாசம் பேமிலியோட  இருந்துட்டு வரணும்..” என்றான் விஷ்வஜித் ஏக்கத்துடன். 
“சாரி விஷூ..”  என்று இந்திரஜித் வருத்தத்துடன் மன்னிப்பு கேட்க, “விடுடா.. இது ஓட வேண்டிய வயசு, ஓடி தான் ஆகணும், பார்த்துக்கலாம்..” என்றவன், அடுத்து பேச ஆரம்பித்துவிட்டான். 
“ம்மா.. நான் ரூமுக்கு போறேன், சாப்பாடு வேண்டாம்..” என்று ராணியிடம் சொல்லிவிட்டு ரூமிற்கு வந்த தீக்ஷிக்கு இந்திரஜித்தின் ஏமாற்ற முகம் மனம் நமச்சலை கொடுக்க, வெகு நேரம் தாக்கு பிடித்தவள், ஒரு கட்டத்தில் அவனுக்கு அழைத்து விட்டாள். 
அப்போது தான் விஷூவிடம் பேசிவிட்டு வைத்திருந்த இந்திரஜித், தீக்ஷி அழைக்கவும், மூச்சு எடுத்து தன்னை சமன்படுத்தி “சொல்லு தீக்ஷி..”  என்று சாதாரணமாக பேசினான். 
“சாரி.. நான் உங்களை ரொம்ப படுத்துறேன் இல்லை..” என்ற தீக்ஷியிடம் தெரிந்த வருத்தத்தை உணர்ந்தவன், 
“அதெல்லாம் ஒன்னும் இல்லை, யார் சொன்னா நீ என்னை படுத்துறேன்னு.?’, என்றவனிடம், 
“எனக்கே தெரியும்..” என்றாள். அவன் பாரின் செல்லும்  நாள் அன்று தன்னை பார்க்க கேட்ட போதும் அவள் அவனை பார்க்க செல்லவில்லை. அந்த குற்ற உணர்ச்சி இன்னும் உண்டு. ஆனால் அவளின் பயமே எங்கே அவனை நேரில் பார்த்துவிட்டால் தன் உறுதி எல்லாம் கரைந்து விடுமோ என்பதே..!!
அவளின் சுயமரியாதை, வளர்ப்பு என்று ஒன்று  உள்ளதே..!!!, எப்போது சுபாவே வந்து அவளை பெண் கேட்கிறாரோ அப்போது தான் தங்களின் திருமணம் என்ற வைராக்கியத்தோடு இருப்பதாலே வருடம் கடந்தும்  இந்த பிரிவை கடைபிடித்தாள். 
ஆனாலும் இந்திரஜித்திற்காக, மட்டுமில்லாமல் தனக்காகவும்  வாரத்திற்கு ஒரு முறையோ, இரு முறையோ மட்டுமே போனில் பேசுவாள். அப்படி இருப்பவளிடம் வீடியோ கால் எல்லாம் இந்திரஜித் எதிர்பார்ப்பதே இல்லை, அவனுக்கு அவளை பார்க்க கொள்ளை ஆசை இருந்தாலும், வாய் திறந்து கேட்க மாட்டான். 
அவளை சங்கடபடுத்த விருப்பமில்லாமல் விஷூ வீட்டிற்கும் செல்லுவதில்லை, அவர்களின் ஹொட்டேலிலே தங்கி கொள்கிறான். சில பல மாதங்கள் சென்று இன்று அவளை பார்த்த இந்திரஜித்திற்கு காதல், கோவம், பிரிவு, எதிர்பார்ப்பு என்று எல்லாம் கலந்து கட்டி அடித்து அவனை ஒருவழி செய்துவிடவே கோவபட்டுவிட்டான். 
“இதையெல்லாம் நினைச்சு உன்னை நீயே ரொம்ப வருத்திக்காத, விடு..” என்றவனின் குரலில் இன்னும் தென்பட்ட ஏமாற்றத்தை கண்டு கொண்டவள்,  மொபலை வைத்துவிட்டு லேப்பை எடுத்து அவனுக்கு வீடியோ கால் செய்தாள். 
அவளாக மனம் வந்து வீடியோ கால் செய்ததில் மிகவும் மகிழ்ச்சியுடன் அட்டென்ட் செய்து “என்ன மேடம்க்கு என் மேல திடீர் கருணை..?” என்று வெகு அருகில் தெரிந்த அவளை உரிமையுடன் ரசித்தவாறே கேட்டான். 
“இது கருணை எல்லாம் ஒன்னும் கிடையாது, எனக்கும் தான் உங்களை தேடுது, அதான்..” என்று தீக்ஷியும் எல்லாவற்றையும் விடுத்து நீண்ட மாதங்களுக்கு பிறகு காதலாக பேசினாள். அவளின் பார்வையும் இந்திரஜித்தை ரசிக்கவே செய்தது. 
“இந்த தாடி வளர்ந்த முகத்துல என்ன தெரியுதுன்னு கண்ணை கூட சிமிட்டாம   இப்படி சைட் அடிக்கிற..?”  என்று புருவம் தூக்கி தாடியை தடவியபடி  காதலாக சீண்டினான். 
“எல்லாம் தெரியற வரைக்கும் போதும்..” என்றவளை தானும் நிறுத்தி நிதானமாக பார்த்தவன், “எங்கேடி.. மல்லிகை பூ வைக்கலியா..?” என்று அவளின் ப்ரீ ஹேரை பார்த்து கேட்டான். 
“நான் மல்லி பூ வச்சு எந்த மாமன் மயங்க..?  அவர்தான் இங்க இல்லையே..?” என்று தீக்ஷி  உதடு பிதுக்கி  கிசுகிசு குரலில் மயக்கும் முகத்துடன் சொன்னாள். அவளின் கிசுகிசு பேச்சும், மயக்கும் பார்வையும் இந்திரஜித்திற்குள்  கிளுகிளுப்பை உண்டாக்க, 
“ஏய்.. என்னடி பேச்செல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு, தூரத்துல இருக்கிறேன்னு சீண்டிவிடறியா..? நேர்ல வந்தேன்னு வை நீ காலி..” என்றவனின் பார்வை அவளை மேலிருந்து கீழ் வரை மேய்ந்ததோடு, உதடு எதோ முணுமுணுத்தது, 
“என்ன சொல்றீங்க..?” என்று அவனின் உதட்டசைவை பார்த்து  கேட்டாள். “நான் சொல்லலை, பாடுறேன்..”  என்றவனிடம், 
“கொஞ்சம் சத்தமா தான் பாடுறது, நாங்களும் கேட்போம்  இல்லை..”  என்று கேட்டவளை குறும்பாக பார்த்தவன், “நீயே கேட்கும் போது நான் பாடாம இருப்பேனா..?” என்றவன், 
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்..!!  
அடடா பிரம்மன் கஞ்சனடி..!!   
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன்..!!  
ஆஹா அவனே வள்ளலடி..!! 
என்ற பாடலை ரசனையோடு பாட கேட்டிருந்த தீக்ஷிக்கு உச்சி முதல் பாதம் வரை குப்பென  சிவந்தது. “என்ன..? என்ன இது..?” என்று மேலும் கேட்கமுடியாமல் வெட்கத்திலும், கோவத்திலும் தடுமாறியவளின் கை விரல்கள் அனிச்சையாக சேலையை சரி செய்தது.  
“போடி ரொம்பதான்.. பார்க்க கூட தடாவா..?” என்று காதல் கோவத்தில் கொந்தளித்தவன், “நான் அங்க வந்த முதல் நாளே நாம மீட் பண்றோம், நோ சொல்லக்கூடாது, அன்னிக்கும் இது போல சேலை கட்டுற, மாமனை மயக்க மல்லி பூ வைக்கிற..”  என்று அதிகாரத்தோடு சொன்னவனிடம் பிரிவின் ஏக்கம் தந்த பாதிப்பு தெரிய, உதடு கடித்தாள். அவளின் கடிபடும் உதட்டை பார்த்தவன்,
“எனக்கு இப்போவே என்  உதடும் உன்  உதடும்  பேசணும்..!! என்  கையும், உன் கையும்  சண்டை போடணும்..!!  உன் கண்ணு என்னை மயக்கமா பார்க்கணும், நான் மயங்கி போயி உன் கழுத்துல  என் முகத்தை புதைக்கணும்..” என்றவனிடம் முதல் முறையாக காதல் கலந்த காமம்..!!  அதை உணர்ந்த தீக்ஷிக்குள் ரத்த ஓட்டம் மிக மிக வேகமாக ஓடியது. 
“என்ன..? என்ன இப்படியெல்லாம் பேசுறீங்க..?” என்று ஸ்க்ரீனில் தெரிந்த அவனின் முகம் பார்க்க முடியாமல் தலை  குனிந்து மெல்லிய குரலில் திக்கினாள். 
“என்ன பெருசா பேசிட்டேன்..? போடி..”, என்று தாபமாக வெந்தவன், “விட்டா இந்த ஸ்க்ரீனை ஒடைச்சிட்டு அப்படியே உன்கிட்ட வந்துருவேன்.. என்ன செய்ய முடியாதே..?” என்று இயலாமையில் பொறுமினான்.
நீண்ட நெடிய பிரிவு அவனை மிகவும் பாதித்திருப்பது அவனின் பேச்சிலே புரிந்த தீக்ஷிதா, “இன்னும் கொஞ்ச நாள் தானே.. எல்லா ஒர்க்கையும் முடிச்சிட்டு  வாங்க, எனக்கும் அதுக்குள்ளே எக்ஸாம்ஸ் முடிஞ்சிடும்..”,  என்றாள் சமதானமாக.  
“ம்ம்.. வந்தவுடனே உன்னை பொண்ணு கேட்டு தாலி கட்டி தூக்கிறணும், இதுக்கு மேல எல்லாம் எனக்கு பொறுமை இல்லை, என்னால டம் கட்டவும் முடியாது, இதுவே ரொம்ப அதிகம், அதுவும் உனக்காக மட்டும் தான்..” என்றவன், அடுத்தடுத்து நடக்க போவது தெரியாமல் மேலும் சில நிமிடங்கள் சந்தோஷமாக பேசிவிட்டே வைத்தான்.

Advertisement