Advertisement

அத்தியாயம்-9

 

 

தண்ணமு துடன்பிறந்தாய் வெண்ணிலாவே அந்தத்
தண்ணளியை ஏன்மறந்தாய் வெண்ணிலாவே
பெண்ணுடன் பிறந்ததுண்டே வெண்ணிலாவே என்றன்

பெண்மைகண்டும் காயலாமோ வெண்ணிலாவே.

விண்ணிலே பிறந்ததற்கோ வெண்ணிலாவே எரு

விட்டுநா னெறிந்ததற்கோ வெண்ணிலாவே
கண்ணில்விழி யாதவர்போல் வெண்ணிலாவே மெத்தக்

காந்தியாட்ட மாடுகிறாய் வெண்ணிலாவே

 

  • திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல், வெண்ணிலாவை பழித்தல்)

 

“சார் இங்க வாங்க சார்… கொஞ்சம் கேசுவல் போட்டோஸ் எல்லாம் எடுத்திடலாம்… என்று அழைத்த புகைப்படக்காரனை எரிப்பது போல் பார்த்தான் அவன்.

 

 

“என்ன சார்?? ஏன் அப்படி பார்க்கறீங்க… வாங்க… வாங்க… மேடம் நீங்களும் தான் என்றவன் அவர்கள் இருவரையும் தனியே அழைத்துச் சென்றான்.

 

 

“இவ்வளோ நேரம் தான் புகையா இருந்துச்சு, கூட்டமா இருந்துச்சு… சிரிக்காம இருந்தீங்க… இப்போவாச்சும் கொஞ்சம் சிரிச்ச மாதிரி போஸ் கொடுங்க… என்றவன் அவர்களை ட்ரில் வாங்கிக் கொண்டிருந்தான்.

 

 

இப்படி நில்லுங்க அப்படி நில்லுங்க என்று அவன் சொன்னதில் ஆதிக்கு பயங்கர கடுப்பாக இருந்தது. “சார்… நீங்க இன்னும் கொஞ்சம் க்ளோசா வாங்க சார்… ஹான் ஓகே சார்… இப்போ ஓகே…

 

 

“இப்போ நீங்க என்ன பண்றீங்கன்னா மேடமை அணைச்சாப் போல நில்லுங்க சார்…அவங்க தோள் மேல கை போடுங்க சார்… என்ன சார் நீங்க இதுக்கு போய் வெக்கப்பட்டுக்கிட்டு…

 

 

‘மவனே நீ என் கையில தனியா மாட்டின செத்தடா… இவ தெரியாம மேல இடிச்சதுக்கே அந்த ஆட்டம் ஆடினா… நீ வேற தெரிஞ்சே அவ மேல கைய வைக்க சொல்ற…

 

 

‘யாருன்னு தெரியாதவங்க முன்னாடி அடிச்சா, அதாச்சும் பரவாயில்லை… இப்போ அடிச்சா நான் அவ்வளவு தான் சுத்தி இருக்கவன் பூரா பேரும் என் சொந்தக்காரனுங்க என் மானமே போய்டும்… என்று மனதிற்குள் புலம்பினான்.

 

 

எது எப்படி இருந்த போதும் ஆதிக்கு கொஞ்சம் உள்ளுக்குள் சந்தோசமாகத் தான் இருந்தது. தெரியாமல் அவள் மேல் சாய்ந்ததற்கே அப்படி அடித்தாள், இன்றோ ஊரறிய அவளை தொட்டு தாலி கட்டியிருக்கிறேன்.

 

 

இதோ இப்போது அவளருகில் நெருங்கி நிற்கிறேன், அவளால் என்னை எதுவும் செய்ய முடியவில்லையே என்று எண்ணிக் களித்தான் அவன்… இதை தான் யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்ன்னு சொல்லுறாங்களோ… என்று எண்ணிக் கொண்டான்.

 

 

அவளோ மரக்கட்டை போல் நின்றிருந்தாள், அவனுக்கோ என்ன செய்வதென்றே புரியவில்லை. “சார் நேரமாவுது கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுங்க… அப்போ தான் என்னோட வேலை முடியும்… என்றான் புகைப்படம் எடுப்பவன்.

 

 

வேறு வழியே இல்லாமல் கையை அவள் தோளில் பட்டும்படாமலும் வைத்தான். “சூப்பர் சார்… என்றவன் அடுத்து சொன்ன போஸில் அவன் விழி பிதுங்கினான்.

 

 

“மேடம் நீங்க சார் தோள் மேல கை வைங்க… சார் நீங்க மேடமை அணைச்சா போல நில்லுங்க… என்றான்.

 

 

“ஏங்க இப்போ இந்த போட்டோ ரொம்ப முக்கியமா… போதுங்க எடுத்த வரைக்கும்… போட்டோ வீடியோன்னு ஏன் சார் இப்படி எங்களை நிக்க வைச்சு படுத்துறீங்க…

 

 

“என்ன சார் நீங்க, நான் போட்டோ சரியா எடுக்கலன்னா உங்க மாமா என்னை சும்மா விடமாட்டார் சார்… இதான் சார் கடைசி, இதோட முடிச்சுக்கறேன்… கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க…

 

 

ஆதியோ சலித்தவனாக “அது எப்படி போஸ் கொடுக்கணும்ன்னு நீங்களே வந்து சொல்லி கொடுங்க என்றான்.

 

 

அவரும் அருகில் வந்தவர் “சார் மேடம் இப்படி உங்க தோள்ல கை வைப்பாங்க… நீங்க என்ன பண்றீங்கன்னா உங்க கையை எடுத்து இப்படி மேடம் இடுப்புல வைக்கணும்… என்றான்.

 

 

‘அடேய் ஏன்டா ஏன்… ஐயோ இந்த ஜோ வேற நல்ல நேரத்துல எஸ்கேப் ஆகிட்டானே… நான் வேற தனியா இவகிட்ட சிக்கிக்கிட்டு முழிக்கறனே… ஆண்டவா என்னை காப்பாத்த யாருமே இல்லையா…

 

 

அவன் குரல் ஆண்டவனுக்கு கேட்டதோ என்னவோ வானதி அவர்களருகில் வந்தாள். “மேடம் சார் தோள்ல கை வைங்க… என்றதும் அவள் எதுவும் யோசியாமல் அவன் மேல் கைவைத்தாள்.

 

 

‘என்னடா நடக்குது இங்க… இவளா கை வைக்குறா…நாம கை வைச்சா தான் அடி விழுகும் போலயே… என்று விழித்தான் அவன் மறுபடியும்.

 

 

அவனுக்கு எப்படி தெரியும் தம்பியுடன் வண்டியில் செல்லும் போது இயல்பாக அவன் தோளில் கை வைத்து போகும் வழக்கில் அவன் மேல் கை வைத்தாள் என்று.

 

 

“என்ன மாமா போட்டோக்காரர் கரடியா கத்திட்டு இருக்கார்… நீங்க பேசாம இருக்கீங்க… கையை போடுங்க மாமா… என்று வானதி கொடுத்த குரலில் கொஞ்சம் தைரியம் வந்தவனாக நடுங்கும் கையை பட்டும்படாமலும் வைத்தான்.

 

 

பட்டும்படாமலும் வைத்தும் அவள் இடையின் ஈரத்தை அவன் கைகள் உணரவே செய்தது. அவனுக்கு குளிர் ஜுரம் வருவது போல் இருந்தது… போட்டோ எடுத்தும் அடுத்து வீடியோவிற்காய் மேலும் சில நொடிகள் அந்த தருணம் நீடிக்க ஆதி அவஸ்தையாகி போனான்.

 

 

ஆதி வானதியிடம் சொல்லி ஜோவை அழைத்து வரச்சொல்ல “டேய் அம்மா அப்பா எங்கடா… என்றான் அவன்.

 

 

“இருடா இதோ கூட்டிட்டு வர்றேன்… என்றவன் திரும்பி வரும் போது அவன் பெற்றோரையும் அழைத்து வர “இவங்க எனக்கும் அப்பா அம்மா மாதிரி தான்… என்று மொட்டையாக அவன் சொல்ல அவளிடம் எந்த பதிலும் இல்லை.

 

 

“நீங்க ரெண்டு பேரும் எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க… என்று சொன்னவன் அவள் விழுவாளோ இல்லையோ என்ற எண்ணத்தில் அவள் கையை பிடித்து இழுக்க இருவரும் அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றனர்.

 

 

ஒருவழியாக எல்லாம் முடிந்ததும் அடுத்த பிரச்சனை தொடங்கியது உணவருந்தும் இடத்தில். மாப்பிள்ளையை பெண்ணுக்கும் பெண்ணை மாப்பிள்ளைக்கு ஊட்டி விடுமாறு கூறினர்.

 

 

மற்றவர்கள் தான் அப்படி சொல்கிறார்கள் என்றால் ஜோ ஒரு படி மேலே போய் “டேய் ஆதி முதல்ல ஸ்வீட் தான்டா ஊட்டணும்… எங்க முதல்ல ஸ்வீட் எடு பார்ப்போம்… என்றான்.

 

 

நண்பனை திரும்பி முறைத்தவன் இனிப்பை எடுத்து அவளுக்கு ஊட்டிவிட பதிலுக்கு அவளும் ஊட்டிவிட அவனுக்கு தொண்டையில் இருந்து வயிற்றுக்குள் உணவு இறங்குவேனா என்றிருந்தது.

 

 

எல்லா சம்பிரதாயமும் முடிந்து அவர்கள் ஆதியின் பூர்விக வீட்டை வந்தடையும் போது நேரம் மதியத்தை தொட்டிருந்தது. ஆரத்தி எடுத்து மாப்பிள்ளையும் பெண்ணும் அழைக்கப்பட்டனர்.

 

 

வீட்டின் பெரிய பெண்மணி ஆதியின் பாட்டி சின்னமணியின் காலில் விழுந்து வணங்குமாறு அவனின் மாமா ராஜராஜன் சொல்ல ஆதியும் குந்தவையும் அவர் அறைக்கு சென்றனர்.

 

 

திருமணத்திற்கு வந்திருந்த அப்பெரிய பெண்மணி வெகு நேரம் அமர்ந்திருக்க முடியாதென்பதால் தாலி கட்டி முடித்ததுமே வீட்டிற்கு கிளம்பி விட்டிருந்தார். அவருடைய அறையில் ஓய்வாக படுத்திருந்தவர் முன் இருவரும் சென்று நின்றனர்.

 

 

அவர் காலில் விழுந்து இருவரும் எழுந்து கொள்ள “நல்லாயிருங்கய்யா… நீங்க ரெண்டு பேரும் நல்லாயிருப்பீங்க… உங்க பேரு மட்டும் இல்லை நீங்களும் ரொம்ப பொருத்தமான ஜோடி… என்றார் அவர்.

 

 

அவர் அப்படி கூறி முடித்ததும் இருவரின் பார்வையும் ஒரு கணம் ஒன்றாய் சந்தித்துக் கொண்டது… “ஏன்ப்பா ஆதி இன்னும் உனக்கு என் மேல கோபமா இருக்காய்யா…

 

 

உண்மையிலேயே அவனுக்கு எதுவும் சொல்லத் தோணவேயில்லை… அவன் கோபம் பாட்டியை பார்த்ததும் குறைந்துவிட்டதா, இல்லை அவர் பேச்சில் அமைதியடைந்து விட்டானா… இல்லை பெரியவர் என்பதினால் பொறுமையாய் இருந்தானா என்று அவனுக்கே தெரியவில்லை…

 

 

“ஒண்ணுமில்லை… நீங்க ஓய்வெடுங்க… என்றவன் அங்கிருந்து வேகமாக நகர்ந்தான் குந்தவையை தனியாய் விட்டு. குந்தவையோ நடுக்காட்டில் விட்டவள் போல் தெற்கெது வடக்கெது என்பது போல் விழித்தாள்.

 

 

நல்லவேளையாக அர்ஷிதா வந்து அவளை அழைத்துச் செல்ல அவளுடன் அவள் கூட்டிச் சென்ற வழியில் சென்றாள். ‘நேற்று வரை என் அம்மா, அப்பா, தம்பி, தங்கை என்று எல்லா உறவும் என்னை சுற்றியிருந்ததே

 

 

‘இப்படி மணமுடித்து கொடுத்து என்னை தனியே விட்டு சென்றுவிட்டார்களே…ஒரே நாளில் யாருமில்லாதது அவளுக்கு வெறுமையாய் இருந்தது, அழுகையாய் வந்தது.

 

 

தனியே சென்ற ஆதி பின் மாடியில் அவன் அங்கு வந்தால் தங்கும் அறையில் சென்று புகுந்துக் கொண்டான். சில மணி நேரம் கழித்து ஜோதிஷ் வானவனுடன் அங்கு வந்து சேர்ந்தான்.

 

 

“டேய் இங்க என்னடா பண்ணிட்டு இருக்க தனியா?? என்றான் ஜோ.

 

 

ஆதியோ பதிலேதும் சொல்லாமல் அமைதியாய் பார்த்தான். “மாமா… என்ற குரல் கேட்கவும் ஜோவின் பின்னால் நின்றிருந்த வானவனை பார்த்தான்.

“சொல்லுங்க… என்றான் அவனுக்கு பதிலாய்.

 

 

“என்னை போய் வாங்க போங்கன்னு சொல்லணுமா மாமா… சும்மா என்னை வானவன்னே கூப்பிடுங்க… உங்… உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்… பேசலாமா… என்றான் தயங்கிக் கொண்டே அவன்.

 

 

“ஹ்ம்ம் சொல்லுப்பா…

 

 

“ஆதி நான் கிளம்புறேன், எனக்கு கீழே ஒரு வேலையிருக்கு… அதை முடிச்சுட்டு அப்புறம் வர்றேன்… அப்புறம் ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் நான் இன்னைக்கே ஊருக்கு கிளம்பறேன்… நாளைக்கு அந்த மயிலாப்பூர் கிளையன்ட் கேஸ் ஹியரிங் இருக்குல அதான்… என்றான்.

 

 

“ஜோ ஒரு நிமிஷம் என்ற ஆதி “வானவா… ஜோ இங்க இருக்கறதுனால உனக்கு எதுவும் பிரச்சனையில்லையே… அவன் என்னோட நண்பன் அது உனக்கு தெரிஞ்சிருக்கும் நினைக்கிறேன்…

 

 

“எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை மாமா… ஜோ சாரும் இங்கவே இருக்கட்டும்…

 

 

“வானவா அவனுக்கும் என் வயசு தான்… அவனை என்னை போலவே நீ நினைக்கலாம்… என்றான் சற்றே அழுத்தம் கொடுத்து.

 

 

“புரியுது மாமா…

 

 

“சரி சொல்லுப்பா என்ன விஷயம்??

 

 

“என்னை தப்பா எடுத்துக்காதீங்க மாமா… இதெல்லாம் அப்பாவோ இல்லை அம்மாவோ தான் உங்கக்கிட்ட பேசுவாங்க… அவங்க பேசுறது எல்லாம் இருக்கட்டும்… நான் சில விஷயம் சொல்லணும்…

 

 

“புரியலையே…

 

 

“அப்பா அம்மாவுக்கு அக்கா எப்பவும் செல்லப்பொண்ணு தான் அவளை விட்டுக் கொடுக்காம தான் பேசுவாங்க…

 

 

‘இவன் என்ன சொல்ல வர்றான்… என்று ஆதி ஒரு பக்கம் யோசிக்க ஜோவும் அவன் அடுத்து என்ன சொல்லப் போகிறான் என்று பார்த்தான்.

 

 

“உங்களுக்கு எங்க அக்காவை பிடிச்சிருக்கா???

 

 

“காலம் கடந்த கேள்வி வானவா…

 

 

“ஆனா அவசியமானதுன்னு நான் நினைக்கிறேன் மாமா… உங்க பதில் எனக்கு முக்கியம்…

 

 

“நீ சுத்தி வளைக்காம பேசு வானவா…

 

 

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க மாமா… நீங்க பொண்ணு பார்க்க கூட வரலையே ஏன்???…

 

 

“அக்காவை உங்களுக்கு பிடிச்சு தான் கல்யாணம் பண்ணீங்களான்னு தெரியலையே மாமா… அதுக்கு தான் கேட்கிறேன்…

 

 

“பொண்ணு பார்க்க நான் வரலைங்கறது உண்மை தான், ஏன்னா எனக்கு பின்னாடி தங்கச்சி ஒருத்தி இருக்கும் போது நான் முதல்ல கல்யாணம் பண்ணிக்கறேன்னு ஒரு கவலை….

 

 

“இப்போ கல்யாணம் வேணுமா அவசியமான்னு ஒரு குழப்பம் அவ்வளவு தான்… மத்தப்படி பெரியவங்க பார்த்து செஞ்ச கல்யாணத்தை நான் மதிக்கறேன்…

 

 

“விருப்பமிருக்கா?? பிடிச்சிருக்கா?? இதுக்கெல்லாம் எனக்கு பதில் சொல்லத் தெரியலை… ஆனா உங்க அக்கா தான் எனக்கு மனைவி, என்னோட கடைசி வரைக்கும் அவ என்கூட தான் இருப்பா…

 

 

‘அடடா பயபுள்ளை சிக்ஸ் அடிக்குது… விட்டா நேரா செஞ்சுரி அடிச்சிருவான் போலயே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு நண்பனை பார்த்தான் ஜோதிஷ்.

 

 

“தாங்க்ஸ் மாமா… நான் ரொம்ப பயந்திட்டு இருந்தேன்… ஏன்னா அக்காவும் உங்க நிலைமையில தான் இருக்கா… இப்போ கல்யாணம் பண்ணிக்கற எண்ணம் அவளுக்கும் இல்லை…

 

“வீட்டில அப்பா அம்மாவுக்காக தான் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டா… ஆனா ஒண்ணு முடிவெடுத்திட்டா அதுல இருந்து பின்வாங்க மாட்டா…

 

 

“கொஞ்சம் முன்கோபக்காரி… எல்லாத்துலயும் அவசரம், யோசிக்காம செஞ்சிடுவா… அவளா ஒண்ணை நினைச்சு குழப்பிக்குவா… அவ எதுவும் தப்பு பண்ணா கண்டிங்க மாமா…

 

 

“அவளுக்கு நீங்க எப்பவும் துணையா இருக்கணும்… மனசுல இருக்கறதை சட்டுன்னு வெளிய சொல்லிட மாட்டா… அவளா ஒண்ணை நினைச்சி ஒண்ணை செஞ்சு வைச்சிடுவா…

 

 

‘அடப்பாவி இவன் எதுக்கு வெந்த புண்ணுல வேலை பாய்ச்சிட்டு இருக்கான்… இவங்கக்கா பத்தி எங்களுக்கு தெரிஞ்ச விஷயத்தையே கொஞ்சம் வேற மாதிரி மாடுலேஷன்ல சொல்றானே… என்று யோசித்தான் ஜோ.

 

 

வானவன் பேசிக் கொண்டே போக அவனை இடைமறித்த ஆதி “நீ எதுவும் சொல்ல வேண்டாம் வானவா… இனி எது நடந்தாலும் உன் அக்கா என் பொறுப்பு… அவளை நான் நல்லபடியா பார்த்துப்பேன் போதுமா…

 

 

வானவனுக்கு கண்ணீரே வந்துவிடும் போல் இருந்தது சட்டென்று ஆதியை அணைத்துக் கொண்டான். “சாரி மாமா… உங்களை புரிஞ்சுக்காம நான் இதெல்லாம் சொல்ல வரலை…

 

 

“புரியுது உங்கக்காவை புரிஞ்சதுனால தான் நீ இதை என்கிட்ட சொல்றேன்னு புரியுது… உண்மையிலேயே உங்க அக்கா ரொம்ப கொடுத்து தான் வைச்சிருக்கா உன்னை போல தம்பி கிடைக்க…

 

 

“நான் கூட இப்படி எல்லாம் என் தங்கச்சியை கட்டிக்க போறவர்கிட்ட பேசுவேனான்னு தெரியலை… நீ கிரேட்… என்று மனமார புகழ்ந்தான் தானும் ஒரு தங்கைக்கு அண்ணன் என்ற முறையில்

 

 

“அடப்பாவிகளா இப்படி மாறி மாறி உண்மையை சொல்லி நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்கன்னு காட்டிக்கிறீங்களா… போதும்டா சாமி ஓவர் சென்டிமென்ட்டா இருக்கு… என்று கலாய்த்தான் ஜோதிஷ்.

 

 

இரவு நெருங்க நெருங்க நெருஞ்சி முள் போல் குந்தவையின் இதயத்தை தைத்தது பயம்… பதட்டமாகவே இருந்தது, என்ன செய்வானோ அவனென்று…

 

 

குந்தவையின் உறவினர் பெண்ணொருத்தி அவளுடன் வந்திருக்க அப்பெண்ணே அவளை அலங்கரித்து அவளுக்கு அறிவுரை வழங்கினாள். குந்தவைக்கு எதுவுமே காதில் விழவேயில்லை…

 

 

தப்பிக்க எதுவும் வழியிருக்கிறதா என்றே யோசனை சென்றது… “என்னம்மா நான் சொன்னது எல்லாம் புரிஞ்சுதா… என்றவருக்கு புரிந்தது போல் தலையை ஆட்டி வைத்தாள்.

 

 

அவரே அவளை அழைத்து சென்று ஆதியின் அறை வாசலில் விட்டுவிட்டு வந்தார். அதுவரை அமைதியாக வந்துவிட்டவளுக்கு அதற்கு மேல் செல்ல கால்கள் வரவில்லை.

 

 

“என்னம்மா இங்கயே நிக்குற… உள்ள போ, தம்பி காத்திட்டு இருப்பார்… என்று அப்பெண்மணி அங்கேயே நின்று பார்க்க வேறுவழியே இல்லாமல் அவள் அந்த அறைக்குள் நுழைந்தாள்.

 

 

ஆதியை இதற்கு முன் எதிர்த்து நின்ற போது அவளுக்கு வராத பயம் இப்போது அவனை தனியே சந்திக்கும் போது அவளுக்கு வந்தது. ஆதியோ முகத்தில் எந்த உணர்வும் காட்டிக் கொள்ளாமல் அலங்கரித்த கட்டிலில் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தான்.

 

 

“கதவை அடைச்சுக்கோம்மா… என்று வெளியில் இருந்து கேட்ட குரலில் அவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது… ‘கடவுளே இந்த பழக்கத்தை எல்லாம் ஏன் தான் கொண்டு வந்தார்களோ தெரியவில்லையே என்று கலக்கத்துடனே நினைத்துக் கொண்டு கதவை தாழிட்டாள்.

 

 

ஆதி சற்று நேரம் அமைதியாக இருக்க அவளும் எதுவும் பேசவேயில்லை. பொறுத்து பொறுத்து பார்த்தவன் “இன்னும் எவ்வளவு நேரம் அங்கேயே நின்னுட்டு இருக்கப் போறதா உத்தேசம்…

 

 

அவன் சொல்லி முடிக்கவும் தான் அவளுக்கு புரிந்தது அவள் வெகு நேரமாக கதவினருகிலேயே நின்றிருப்பது. மெதுவாக நடந்து வந்து அவனருகில் நின்றாள்.

 

 

‘ஆண்டவா என்னை காப்பாத்து, இவர் என்னை கூப்பிடுறதை பார்த்தா ரொம்ப பயமாயிருக்கே… என்று எண்ணியவள் எச்சில் கூட்டி விழுங்கினாள்.

 

 

“உட்காரு… என்றதும் மெதுவாக அமர்ந்தாள்.

“நமக்குள்ள இதுவரைக்கும் நடந்ததை பத்தி எனக்கு எந்த கவலையுமில்லை… முடிஞ்சது முடிஞ்சு போனதாவே இருக்கட்டும்…

 

 

‘அதை நான் தானே முடிவு பண்ணணும்… என்னமோ நான் தப்பு பண்ண மாதிரி போனாப் போகட்டும்ன்னு இவன் முடிவு பண்றானே… என்று எண்ணினாள்.

 

 

“உனக்காக நான் முடிவு பண்றேன்னு நினைக்காதே… இனி நீ நான்னு பிரிக்க எதுவுமில்லை… பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் நீ தான் எனக்கு மனைவி நான் தான் உனக்கு கணவன்…

 

 

“இதை மாத்த முடியாது… நான் ரொம்ப நல்லவன்னு உன்கிட்ட சொல்லிக்க மாட்டேன்… நிச்சயம் நான் கெட்டவனில்லை, அதை என்னால சொல்லிக்க முடியும்…

 

 

“உன்னோட பார்வைக்கு நான் இதுவரைக்கும் கெட்டவனா தான் தெரிஞ்சிருக்கேன்… இது தான் காரணம் அது தான் காரணம்ன்னு அப்படின்னு நான் எந்த சாக்கும் சொல்லி என்னை உனக்கு நிரூபிக்க விரும்பலை…

 

 

“உனக்கா என் மேல உள்ள அந்த எண்ணம் எப்போ மாறுதோ அதுவரைக்கும் நான் காத்திருப்பேன்… உன்னை எந்த விதத்திலும் தொந்திரவு பண்ண மாட்டேன்…

 

 

‘உலகமகா நடிகனா இருப்பானோ… உண்மையை சொல்லுறானா இல்லை… பொய் சொல்றானா… என்று எண்ணியவளுக்கு சற்றே நம்பிக்கை வர அமைதிப்படை சத்யராஜ் போல் சற்றே உள்ளே ஏறி அமர்ந்தாள்.

 

 

அதுவரையிலும் அவன் பழிவாங்குவானோ, தனியாக இருக்கும் போது என்ன செய்வானோ என்று எண்ணி கலங்கியது எல்லாம் மறந்தவளாக ஏறி மிதிக்கலாம் என்ற எண்ணம் வந்துவிட்டவள் போல் இருந்தது அவள் செயல்.

 

 

“நான் சொல்றதை நீ நம்புறதும் நம்பாததும் உன்னிஷ்ட்டம்… அர்ஷிதா காலேஜ் படிச்சிட்டு இருக்கா, இது அவளுக்கு கடைசி வருஷம்… அவளோட படிப்புக்கு எந்த தொந்திரவும் வராம நீ பார்த்துக்கணும்…

 

 

‘ஏன் இதுவரைக்கும் அவ எப்படி படிச்சிட்டு இருந்தாளாம்… நான் வந்தா அவளுக்கு தொல்லையாகிடுமா… இல்லை இவன் என்னை தொல்லைன்னு சொல்றானா… என்று எண்ணினாள் அவள்.

 

 

“நம்ம வீட்டில நாம மூணு பேரு தான் இனி… இதுவரை என் மனசு கஷ்டப்ப்படும்படியா அவளோ அவ மனசு கஷ்டப்ப்படும்படியா நானோ நடந்தது இல்லை… இது உனக்கும் பொருந்தும்…

 

 

“நான் அமைதியா போறேன்னு ஏறி மிதிக்க நினைச்சா நான் சும்மாவும் இருக்க மாட்டேன்… அர்ஷு என்னோட ஒரே தங்கை அவளை உன் தங்கையை போல நீ பார்த்துக்கணும்ன்னு நான் நினைக்கிறேன்…

 

 

‘என்னை மட்டும் எங்க வீட்டில இருந்து பிரிச்சி கூட்டிட்டு வந்துட்ட, இப்போ உன் தங்கை மட்டும் நான் நல்லா பார்த்துக்கணுமா என்று விதண்டாவாதமாகவே யோசித்து அவள் மனது.

 

 

“நான் என்ன சொல்லணுமோ எல்லாமே சொல்லிட்டேன்… உனக்கு என்கிட்ட எதுவும் சொல்லணுமா???

 

 

“இல்லை… என்றாள்

 

 

“எனக்கு கட்டில்ல படுத்தே பழக்கமாகிடுச்சு… என்றான்.

 

 

“எனக்கும் அப்படி தான்… என்றாள்.

 

 

“நான் தனியா தான் படுப்பேன்…

 

 

“எனக்கு கூட ஒரு ஆள் இருந்தா தான் தூக்கமே வரும்… என்றாள் அவள் பதிலுக்கு.

 

 

‘என்னது… இவ என்ன சொல்றா… என்று திகைத்து அவளை பார்த்தான்.

 

 

அவளோ “என்னோட தங்கை கூட படுக்கறதை பத்தி சொன்னேன்…

 

 

“ஓ!!! என்றான்.

 

 

அவனிடத்தில் தோன்றியிருந்த பயம் அவளை கொஞ்சம் கொஞ்சமாக விட்டிருந்தது. “எப்படி நீங்க கீழே படுக்க போறீங்களா… இல்லை… என்று இழுத்தாள் அவள்…

 

 

“இல்லை நான் மேலயே படுத்துக்கறேன்… என்றவன் உள்ளே ஏறிக் கொண்டு அவளுக்கு முதுகுக்காட்டிக் கொண்டு படுத்துவிட்டான்.

 

 

குந்தவையும் ஒரு போர்வையை எடுத்தவள் இழுத்து போர்த்திக் கொண்டு மறுபுறம் படுத்துக் கொண்டாள்.

 

 

இளங்காலைப் பொழுது மெல்ல விடியும் வேளையில் உறக்கம் கலைய ஆரம்பித்தது ஆதிக்கு… மெதுவாக கண் விழித்து பார்த்தவன் லேசாக திரும்பி பார்த்துவிட்டு அதிர்ந்து போனான்.

 

 

அவசரமாக அருகிருந்த அவன் கைபேசியை எடுத்து ஜோதிஷுக்கு போன் செய்தான். சென்னைக்கு சென்று கொண்டிருந்தவன் அழைக்கும் அவன் கைபேசியின் பொத்தானை அழுத்தி காதில் வைத்தான்.

 

 

“சொல்லுடா… என்றான் ஜோதிஷ்.

 

 

“டேய் எங்கடா போனே… என் பக்கத்துல யாரோ படுத்திருக்காங்க… நீ தானேடா படுத்திருந்த… என்று ஆதி மெதுவான குரலில் கேட்க ஜோவுக்கு வந்ததே ஒரு கோபம்.

 

 

“அடேய் நீ என்ன லூசாடா… நீ என் கூட தூங்கினது முந்தா நேத்து… இப்போ உன் பக்கத்துல இருக்கறது நானில்லை… நீ தொட்டு தாலி கட்டின உன் ஆசை பொண்டாட்டி… என்று நக்கலாக பதில் கொடுத்தான் அவன்.

 

 

ஆதிக்கு அப்போது தான் சட்டென்று எல்லாம் ஞாபகம் வர நண்பனிடம் காட்டிக் கொள்ளாமல் “அதெல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கு… நீ எங்க போனன்னு கேட்க தான் போன் பண்ணேன்… ஊருக்கு போயிட்டியா… என்றான் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாதவனாக.

 

 

எதிர்முனையில் அவன் பதில் கொடுத்துவிட்டு போனை வைக்க ஆதி எழுந்து அமர்ந்தான். கழுத்து வரை இழுத்து போர்த்திக் கொண்டு உறங்கியவள் கண்ணில் பட அவன் எண்ணம் முந்தின இரவில் அவன் பேசியதை நினைவு கொணர்ந்தது.

 

 

பதிலுக்கு அவள் பேசாமல் இருந்தது உறுத்தலாக இருந்தாலும் அவனை எதிர்த்து பேசாமல் இருந்தது கொஞ்சம் இதமாகவே இருந்தது. ஒரு பெருமூச்சுடன் கட்டிலில் இருந்து இறங்கி குளியலறை நோக்கிச் சென்றான்….

 

 

Advertisement