Advertisement

அத்தியாயம்-8

 

 

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்று ஊத 
முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ் 
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக் 
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்

 

  • நாலாயிர திவ்யப்பிரபந்தம் (ஆண்டாள்)

 

நடந்தது எல்லாம் கனவா இல்லை நிஜமா என்ற எண்ணம் அந்த புதுமணத்தம்பதிகள் இருவருக்குமே இருந்தது.இப்படி ஒரு தருணம் வரும் என்று அவர்கள் எண்ணியிருக்கவேயில்லை.

 

 

முன்தினம் வந்ததிலிருந்து நடந்த நிகழ்வுகளை இருவர் மனமும் திரும்பி பார்த்தது. வாசலில் இருந்த போர்ட்டை ஒரு பெருமூச்சுடன் பார்த்துவிட்டு அவள் உள்ளே அவளறைக்கு சென்றுவிட்டாள்.

 

 

அவள் சென்ற சற்று நேரத்தில் உள்ளே வந்த மாப்பிள்ளையும் வரவேற்ப்பில் இருந்த அந்த போர்ட்டை தான் பார்த்தான். பார்த்திபனின் மகன் விக்கிரமனும் குந்தவையும் தான் அவன் நினைவிற்கு வந்தனர்.

 

 

அவர்கள் காதலித்து மணந்தவர்கள் இப்போது நடக்கப் போவதோ பெரியவர்கள் பார்த்து பேசி முடிவு செய்த திருமணம் என்ற எண்ணம் மனதிற்குள் வந்து போனது. எது எப்படி இருந்த போதும் அந்த பெயர் பொருத்தத்தை அவனுமே ரசிக்கத் தான் செய்தான்.

 

 

அவன் அன்னையால் செல்லமாக விக்கிரமா என்று அழைக்கப்படும் அந்த விக்கரமாதித்தன். அன்னைக்கு பிடிக்கும் என்பதாலேயே பத்திரிக்கையில் அந்த பெயரையே போடச்சொல்லி அவன் தாய் மாமனிடம் கூறிவிட்டான்.

 

 

இன்னும் சிறிது நேரத்தில் பரிசம் போட ஆரம்பித்துவிடுவார்கள். பெண்ணையும் அழைத்து வந்து அவன் முன் நிறுத்தப் போகிறார்கள் எப்படி அவளை பார்க்கப் போகிறோம் என்று பதைபதைப்பு அவளுக்குள் இருந்தது.

 

 

அவனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்து இதோ ஒரு மாதத்தில் திருமணம் என்றது போய் விடிந்தால் அவனுக்கு திருமணம் இன்னமும் அவன் பெண்ணை பார்க்கவில்லை…

 

 

யாராவது கேட்டால் சிரிப்பார்கள், ஜோதிஷ் அப்போதே சொன்னான் பொண்ணை பார்த்துவிட்டு என்று ஏனோ அவனுக்கு அதில் பெரிதாக ஈடுபாடே வரவில்லை. இன்னமும் அவன் பெண்ணை பார்க்கத்தான் இல்லை…

 

 

ஜோதிஷ் சொன்னானே என்று போனிலாவது பேசி வைப்போம் என்று தான் முயற்சித்தான். அவன் நல்ல நேரமா இல்லை கெட்ட நேரமோ மணப்பெண் குந்தவை அவன் அழைப்பை எடுத்து பேசியிருக்கவில்லை…

 

 

தெரியாத எண்ணின் அழைப்பை அவள் ஏற்காததுகூட அவனுக்கு வருத்தமில்லை, ஆனால் யார் நீ என்ற குறுந்தகவலாவது வரும் என்று எதிர்பார்த்திருந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

 

 

ஒரு வேளை நம்மை போலவே அவளும் இப்போது திருமணம் செய்வதில் விருப்பமில்லாமல் இருப்பாளோ என்று கண்டதையும் எண்ணிக் குழம்பிக் கொண்டிருந்தவனை அர்ஷிதா வந்து அழைத்தாள்.

 

 

“அண்ணா… மாமா உன்னை கூட்டிட்டு வரச்சொன்னாங்க… பொண்ணு வீட்டில இருந்து எல்லாரும் வந்தாச்சு… பரிசம் போடணுமாம், நீ சட்டுபுட்டுன்னு புது துணியை மாத்திட்டு வந்திடு… நான் ஜோ அண்ணாவை மேல அனுப்பறேன்…” என்று சொல்லிவிட்டு இறங்கிச் சென்று விட்டாள்.

 

 

அவள் செல்லவும் ஜோதிஷ் மேலே வந்தான். “என்னடா இன்னும் என்ன யோசனை பண்ணிட்டு இருக்க, டிரஸ் மாத்து கீழே போவோம்… அங்க மாமா உன்னை தேடிட்டு இருக்கார்… உங்க பாட்டியையும் உங்க வீட்டில இருந்து கூட்டிட்டு வந்தாச்சு…”

 

 

“என்னது பாட்டி வந்திருக்காங்களா!!!”

 

 

“ஆமாடா அவங்க வராம எப்படிடா… நீ அவங்களோட ஒரே பேரன் உன்னோட கல்யாணத்துக்கு அவங்க வராம எப்படி…”

 

 

“ஓ!!! அவங்களுக்கு பேரன் ஞாபகம் இப்போ தான் வருதா… அவ்வளவு அக்கறை இருக்கவங்க எங்கப்பா போனப்பவே எங்க கூட வந்து இருந்திருக்கணும்… அட்லீஸ்ட் எங்கம்மா இறந்த பிறகாச்சும் வந்திருக்கணும்…”

 

 

“டேய் நீ வேற ஏன்டா புரியாதவன் மாதிரியே பேசற, பாட்டியால நடக்க முடியாதுடா… உங்க கூட இருந்தா உங்களுக்கு தொந்திரவா இருக்கும்ன்னு நினைச்சு தானே இதே ஊர்ல உங்க வீட்டில இருக்காங்க…”

 

 

“நீயே யோசி… பாவம்டா அவங்க… இங்கனாச்சும் உங்க அத்தை ஒருத்தர் கூட இருந்து அவங்களை பார்த்துக்கறாங்க… உங்களோட வந்தா அர்ஷுவால எப்படி கவனிச்சுக்க முடியும்… அவளும் சின்ன பொண்ணு தானே…”

 

 

“ஜோ நீ அவங்களுக்கு சப்பைக்கட்டு கட்டாதே, நீ சொல்ற கதையெல்லாம் இப்போ… எங்கப்பா போனப்பவே அவங்க வந்திருக்க வேண்டியது தானே…”

 

 

“உங்க பாட்டி அப்போல இருந்தே இப்படி தானே நடக்க முடியாம இருக்காங்க… உங்கம்மா மட்டும் எப்படி கவனிக்க முடியும் அவங்களுக்கும் அடிக்கடி உடம்பு முடியாம தானே போச்சு…”

 

 

“அதுவும் இல்லாம அவங்க பிறந்து வளர்ந்து உங்க தாத்தாவோட நல்லா வாழ்ந்த ஊருடா இது, இதை எப்படி அவங்களுக்கு பிரிய மனசு வரும்… நீ தேவையில்லாத கதையை பேசுறதை விட்டு முதல்ல கிளம்பு…” என்று ஜோதிஷ் அதட்டல் போட அவனும் கிளம்பிச் சென்றான்.

 

 

புது உடை உடுத்து மாப்பிள்ளையாக வந்தவனை அழைத்து சபை நடுவில் உட்கார வைக்க அவனோ நெளிந்து கொண்டிருந்தான். அவ்வப்போது ஜோதிஷிடம் சிணுங்கிக் கொண்டிருந்தான்…

 

‘இவனுக்கு கல்யாணம் வைச்சாலும் வைச்சாங்க, இவன் என்னை படுத்துற பாடு இருக்கே… இதுக்கே நான் பத்து பீரு சாப்பிடணும் போல…’ என்று மனதிற்குள் அங்கலாய்த்துக் கொண்டான் ஜோதி.

 

 

பெண்ணின் தாய் மாமனும் மணமகனின் தாய்மாமனும் முன்னிருக்க அவர்கள் பரிசம் போட்டு முடித்தனர். பெண்ணுக்கு புடவையை கொடுக்க வேண்டும் என்று சொல்லி பெண்ணை அழைத்து வரச் சொல்ல இங்கே விக்கிரமன் என்ற ஆதித்யாவுக்கு அடிவயிற்றில் ஏதோ பிசைந்தது.

 

 

பெண்ணை பார்க்க போகிறோம் என்ற எதிர்பார்ப்பா அல்லது பெண் எப்படி இருப்பாளோ என்ற பயமா எதையும் பிரித்தறிய முடியாதவன் வழக்கம் போல் அருகிருந்த ஜோதிஷின் கையை பற்றினான்.

 

 

‘இவனொருத்தன் நான் என்னமோ இவன் பொண்டாட்டி மாதிரி பொசுக்கு பொசுக்குன்னு என் கையை பிடிச்சு அழுத்தி வைக்கிறான்…’ என்று அவன் மீண்டும் புலம்பினான்.

 

 

ஆதி ஜோதிஷிடம் எதையோ குனிந்து கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில் மணப்பெண் வந்து புடவையை வாங்கி சென்றிருக்க ஜோதிஷோ அவனை நன்றாக முறைத்தான்.

 

 

“டேய் நீ வேணும்ன்னு பண்றியா இல்லை வேணாம்ன்னு பண்றியான்னு எனக்கு தெரியலை… ஆனா நீ பண்ணுறது எதுவும் சரியில்லை அவ்வளவு தான் சொல்லிட்டேன்…” என்று அருகில் இருந்த ஜோதிஷ் அவனிடம் இருந்து தள்ளிச் (தப்பித்து) சென்றான்…

 

 

புடவையை மாற்றிக் கொண்டு மணப்பெண்ணை மீண்டும் அழைத்து வரச்சொல்லி பெரியவர்கள் பரபரத்தனர். அர்ஷு அவனருகில் வந்தவள் “அண்ணா இந்தா இந்த மோதிரத்தை பிடி, இப்போ அண்ணி வருவாங்க… வந்ததும் அவங்க கையில போடு…” என்றாள்.

 

 

“அர்ஷும்மா இதென்ன புது பழக்கம் நம்மள்ள இந்த மாதிரி பழக்கமில்லையே…”

 

 

“அண்ணா இதெல்லாம் மாமா ஏற்பாடு தான் எது கேட்கிறதா இருந்தாலும் நீ அவங்ககிட்டயே கேட்டுக்கோ…” என்று அவள் மாமனின் மீது பழியை தூக்கிப் போட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.

 

 

கைகால் எல்லாம் அவனுக்கு சில்லென்று இருந்தது போல் இருந்தது… திடிரென்று சுரம் வேறு அடிப்பதாக தோன்றியது, திரும்பி அருகில் இருந்த நண்பனை தேட அவனோ தூரத்தில் நின்றுக் கொண்டு அவனுக்கு பழிப்பு காட்டினான்.

 

 

பல்லைக் கடித்தவன் ஒன்றும் செய்ய முடியாமல் அமர்ந்திருக்க குந்தவை பரிசப்புடவையை அணிந்துக் கொண்டு வந்தாள். கீழ் நோக்கி பார்வையை பதித்திருந்தவன் கண்கள் அவள் நடந்து வரும் சுவடை கண்டிருந்தது…

 

 

மெல்ல கீழிருந்து மேலாக சென்றவனின் பார்வை அவள் முகத்தை பார்த்ததும் ‘அய்யோ இவளா, இவ எப்படி இங்க… அச்சோ இவ தான் எனக்கு பார்த்த பொண்ணா…’

 

 

‘டேய் உனக்கு இப்படியா சோதனை வரணும், ஜோ அப்போவே சொன்னானே பொண்ணை பார்க்க சொல்லி… ஒரு முறை பார்த்திருந்தாலும் தப்பிச்சிருப்பேனே…’ என்று எண்ணியவனுக்கு ஏதோ தோன்ற ஜோதிஷை தேடினான்.

 

 

‘நான் தான் பொண்ணை பார்க்கலை சரி, இவன் பார்த்திருப்பானே… இவன் ஏன் என்கிட்ட சொல்லலை…’ என்று யோசித்தவன் கண்கள் ஜோதிஷை தேடி அலைய அவன் கண்கள் பூத்தது தான் மிச்சம்.

 

 

ஜோதிஷ் அங்கிருந்தால் தானே, அதற்குள் அவன் மாமா அருகில் வந்தார். “ஆதி என்ன பார்த்திட்டு மசமசன்னு நின்னுட்டு இருக்க, பொண்ணு எவ்வளவு நேரமா நிக்குது… போய் மோதிரத்தை போட்டு விடு…” என்றார்.

 

 

“ஏம்மா குந்தவை நீயும் பக்கத்துல வாம்மா…” என்று கூற “சரிங்க சித்தப்பா…” என்றவள் குனிந்த தலை நிமிராது தள்ளி நின்றாள்.

 

 

‘அட அட அட என்ன நடக்குது இங்க, இந்த பூனையும் பால் குடிக்குமான்னு என்னமா நடிக்கிறா… இதுக்கு பேரு வெட்கம், இதை நாங்க நம்பணும்…’ அவளை திட்டிக் கொண்டிருந்தான் ஆதித்யா…

 

 

‘அடடா இதை எப்படி மறந்தேன்… இவ எப்படி என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சா…’ என்று யோசிக்க “ஆதி…” என்று ஆறாவது முறையாக அழைத்துவிட்டார் ராஜராஜன்…

 

 

“ஆதி என்னப்பா நீ அப்பப்போ கனவுக்கு போய்டறே… உன் கனவை எல்லாம் நாளைக்கு கல்யாணம் முடிஞ்ச பிறகு கண்டுக்கோ… இப்போ பொண்ணு கையில மோதிரத்தை போடு…” என்று அதட்டினார்.

 

 

சற்று நேரம் அவன் சிந்தனைகளை ஒதுக்கியவன் அவளருகில் வந்து நிற்க “என்னப்பா கையை பிடிச்சு மோதிரத்தை போட உனக்கென்ன யோசனை… நாளைக்கு கையை பிடிச்சு கூட்டிட்டு போகப் போறவன் நீ தானே…” என்று ஒரு பெரிசு சொல்ல அவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது.

 

 

‘யோவ் சும்மா இருக்க மாட்ட…’ என்று மனதிற்குள் திட்டிக் கொண்டவன் ‘அய்யோ இவ கையை நான் பிடிக்கணுமா’ என்று கதறியது.

 

 

இதற்கு மேல் அமைதியாக இருந்தால் நன்றாக இருக்காது என்று அவன் நினைக்க நல்லவேளையாக குந்தவையே கையை நீட்டினாள். கையில் வைத்திருந்த மோதிரத்தை அவள் விரல்களில் அணிவிக்க அது சிக்கென்று பொருந்திக் கொண்டது.

 

 

“நீயும் போட்டு விடும்மா…” என்று யாரோ கூற அவனும் கையை நீட்ட அவன் விரல்களில் அந்த மோதிரம் பொருந்தியது. ‘எனக்கு தெரியாம மோதிரம் அளவெல்லாம் எப்போ எடுத்தாங்க…’ என்று மீண்டும் நினைவுக்கு போனான் அவன்.

 

 

அவன் கையில் மோதிரத்தை போட்டுவிட்டவள் அப்போது தான் நிமிர்ந்து அவனை பார்க்க ஆதியை விட அவள் அதிகம் அதிர்ந்தாள். ‘இவனா… அய்யோ இவனா எனக்கு மாப்பிள்ளை…’ என்று மனம் ஓலமிட்டது…

 

 

குந்தவையின் கண்கள் வெளிப்படுத்திய அதிர்ச்சியை கண்டுகொண்டவனுக்கு குழப்பம் வந்து சேர்ந்தது… நான் தான் இவளை பார்க்கலை, இவ அதிர்ச்சியாகறதை பார்த்தா இவளும் என்னை பார்க்கலை போல இருக்கே…’

 

 

“ரெண்டு பேரும் ஜோடியா நில்லுங்க…” என்று அருகில் வந்தார் புகைப்படம் எடுப்பவர். ‘இந்த ஆளு வேறயா…’ என்று நொந்துக் கொண்டான் அவன்.

 

 

நல்லவேளையாக அவர் அன்று ஓரிரு புகைப்படம் எடுப்பதோடு நிறுத்திக் கொண்டார்… இல்லையேல் கண்டிப்பாக ஆதி அவரிடம் முகத்தை காட்டியிருப்பான்.

 

 

அன்று இரவு இருவருமே நித்திரையை துறந்திருந்தனர். ஆதியோ பெரும் குழப்பத்தில் இருந்தான் இந்த ஜோதிஷ் எப்போதடா அவன் கையில் மாட்டுவான் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

 

 

அவனுக்கு நெறைய கேள்விகள் இருந்தது அதை ஜோதிஷிடம் தானே கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ள முடியும், ஆனால் ஜோதிஷோ ஆதியின் அறையை எட்டிக் கூட பார்க்கவில்லை.

 

 

சிறிது நேரம் பொறுத்து பார்த்தவன் ஜோதிஷ் இனிமேலும் வருவான் என்று தோன்றாததால் அவன் கைபேசிக்கே அழைத்தான். “சொல்லுடா…” என்றான் அவன் மறுமுனையில்.

 

 

“நீ இன்னும் ஐஞ்சு நிமிஷத்துல என்னோட ரூமுக்கு வர்றே…’ என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான் ஆதி. ஒரு புறம் ஆதியின் நிலை இப்படியிருக்க மறுபுறம் குந்தவையும் அதையே யோசித்துக் கொண்டிருந்தாள்.

 

 

மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்து பார்த்த போது கூட மாப்பிள்ளை உடன் வந்திருக்கவில்லை. மாப்பிள்ளையின் பெயர் விக்கிரமன் என்றே அவளுக்கு சொல்லப்பட்டிருந்தது.

 

 

‘எப்படி எனக்கு ஒரு முறை கூட மாப்பிள்ளையை பார்க்க வேண்டும் என்று தோன்றவேயில்லை… இல்லையே அன்று வானதி கூட மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று வந்த போது எடுத்திருந்த போட்டோ என்று கைபேசியில் காண்பித்தாளே…’

 

 

‘ஏன் குந்தவை அந்த புகைப்படத்தை நீ நன்றாக தான் பார்த்தாயா…’ என்று அவள் மனசாட்சி அவளிடம் இடித்துரைத்தது. ‘ச்சே தப்பு என் பேரில் தான் போட்டோவை நான் சரியாக பார்க்கவில்லை போலிருக்கிறதே…’

 

 

‘ஆனால் இவன் ச்சே இவர் எப்படி இங்கு, அதுவும் எனக்கு மாப்பிள்ளையாக…’ என்று அதே யோசனையாக அவளிருக்க அவளுக்கு தலையை வலிப்பது போல் இருந்தது…

 

 

‘இந்த வானவன் எங்கு போனான்… அவனுக்கு எதுவும் தெரிந்திருக்குமா…’ என்று எண்ணி அவனை கையோடு அழைத்து வரச்சொல்லி வானதியிடம் சொல்லி அனுப்பினாள்.

 

 

“என்ன குந்தி, என்னை எதுக்கு வரச்சொன்னே???” என்று வந்து நின்றான் வானவன்.

 

 

“வானதி எங்கே?? கீழ போயிட்டாளா??”

 

 

“அம்மா ஒரு வேலையா வரச்சொன்னாங்க… அதான் அங்க போயிட்டா… நீ எதுக்கு என்னை வரச்சொன்னே??” என்று ஆரம்பித்த இடத்திற்கு வந்து சேர்ந்தான் அவன்.

 

 

அவன் தமக்கை அவனிடம் என்ன கேட்பாள் என்பதை ஏற்கனவே அறிந்தவன் தானே, இருந்தும் அவள் வாயால் கேட்கட்டும் என்று அமைதி காத்தான்.

 

 

“வானு…” என்று ஆரம்பித்தவள் ஆதி யாரென்று கூற உடன்பிறந்தானோ “என்னக்கா சொல்ற, இவர் தான் நீ சொன்னவரா… எனக்கு இவரை தெரியவே தெரியாதே…”

 

 

“என்னக்கா சொல்ற நீ?? அன்னைக்கு கூட மாப்பிள்ளை போட்டோ பார்த்தியான்னு கேட்டப்ப பார்த்தேன்னு சொன்னியே… இப்போ வந்து இப்படி சொல்றியே…”

 

 

“டேய் வானு… உண்மையை சொல்றேன்டா… அன்னைக்கு வானதி போட்டோ காமிச்சா தான்… ஆனா எனக்கு தான் எதுவுமே மனசுல பதியலை… இப்போ எதுக்கு எனக்கு கல்யாணம்ன்னு அதே யோசனையிலேயே நானும் சரியா கவனிக்கலைடா…”

 

 

“எனக்கு அவரை பார்த்தா ரொம்ப பயமா இருக்குடா… எப்படி ரியாக்ட் பண்ணுவார்ன்னு தெரியலை… எனக்கு இன்னொரு டவுட்டு வேற நான் தான் அவரை சரியா பார்க்கலை அவருமா என்னை பார்க்காம இருந்தார்…”

 

 

“அப்படி என்னை பார்த்திருந்தா அப்போவே வேணாம்ன்னு சொல்லிட்டு போயிருப்பாரே… ஒரு வேளை என்னை பார்த்ததும் பழிவாங்க முடிவு பண்ணிட்டாரோன்னு பயமாயிருக்குடா வானு…” என்றவள் உண்மையிலேயே கலங்கித்தான் போயிருந்தாள்.

 

 

“ஏன்கா நீ வேற, பேசாம இரு… அப்படி எல்லாம் நிச்சயம் இருக்காது… அவரை பார்த்தா அப்படி தெரியலைக்கா… ரொம்ப நல்ல மனுஷனா தெரியார்…”

 

 

“அதெல்லாம் நடிப்புடா…” என்று அவள் அவசரமாக மறுக்க “அக்கா ப்ளீஸ்… நீ ஒரு முறை இவர் இப்படி தான்னு முடிவு பண்ணிட்டே, அதான் நான் சொல்றது உனக்கு புரிய மாட்டேங்குது…”

 

 

“உன்னோட பார்வையில அவர் உனக்கு தப்பா தெரியறார்… சோ நான் என்ன சொன்னாலும் நீ நம்பப் போறதில்லை… உனக்கு ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்றேன்…”

 

 

“நீ நினைக்கிற மாதிரி அவரும் நினைச்சா??” என்று சொல்லி நிறுத்தினான் அவன்.

 

 

“என்ன நினைச்சா???”

 

 

“அதாவது நீ அவரை பழிவாங்க தான் கல்யாணம் பண்ணிக்கறன்னு அவருக்கு தோணியிருந்தா???”

 

 

“அதெப்படிடா நான் பழிவாங்க போறேன்… அவர் தான் மாப்பிள்ளைன்னு தெரிஞ்சிருந்தா நான் தான் வேணாம்ன்னு சொல்லியிருப்பேனே…”

 

 

“அதே போல நீ தான் பொண்ணுன்னு தெரிஞ்சிருந்தா அவரும் வேணாம்ன்னு சொல்லியிருப்பாரோ என்னவோ… அதை விடு நான் விஷயத்துக்கு வர்றேன்… நீ போட்டோ பார்க்கலைங்கறது எனக்கு தெரியும்…”

 

 

“அவருக்கு எப்படி தெரியும்… அவரும் நீ நினைக்கிற மாதிரி அவரை பழிவாங்க தான் நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதா கூட நினைச்சிருக்கலாம்…” என்று சொல்ல அவள் சற்றே அமைதியானாள்.

 

 

“ஆனா வானு… நான் அன்னைக்கு கூட அந்த வீட்டை காமிச்சு அவன் இந்த வீட்டில இருக்கான் அவன் பேரு ஆதின்னு எல்லாம் சொன்னேனே… உனக்கு அவங்க வீட்டுக்கு போகும் போது இதெல்லாம் ஞாபகம் வரலையா…”

 

 

“அக்கா நாங்க மாப்பிள்ளை வீடுன்னு போனது அவரோட சொந்த ஊருக்கு… இங்க சென்னை வீட்டுக்கும் போனோம் தான்… ஆனா நீ தூரத்துல கை காமிச்ச வீடு அது தான்னு எனக்கு எப்படி தெரியும் சொல்லு…”

 

 

“அதோட மாப்பிள்ளை பேரு விக்கிரமாதித்தன்னு தான் சொல்லியிருந்தாங்க… அதுனால எனக்கு எந்த சந்தேகமும் வரலை…” என்ற வானவனின் பதில் அவளை அப்போதைக்கு அமைதியாக இருக்க வைத்தது.

“வானு… இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாதாடா…” என்று அவள் கேட்டதும் அவனுக்கு வந்ததே கோபம் சட்டென்று எழுந்துவிட்டான்…

 

 

“நீ என்ன முட்டாளா, நீ ஏன் இப்படி இருக்க, நம்ம வீட்டில எப்படி எல்லாம் பார்த்து பார்த்து இந்த கல்யாண வேலை எல்லாம் செய்யறாங்க… நீ நிறுத்த முடியுமான்னு கூலா கேட்குற…”

 

 

“தப்பு பண்ணது நீ… எனக்கு மாமா மேல எந்த தப்பும் இருக்கும்ன்னு தோணலை… நீ விதைச்சதை நீயே அறுவடை பண்ணு… என்ன புரியலியா… நீ தானே அடிச்சு ஆரம்பிச்சு வைச்ச இந்த பிரச்சனைய…”

 

 

“நீயே அதை சுமுகமா தீர்க்க பாரு… சொன்னா புரிஞ்சுக்க கூடிய மனுஷனா இருக்கார்… முரண்டு பிடிச்சி, முன்கோபம் காட்டி தேவையில்லாம உன் வாழ்க்கையை பிரச்சனை ஆக்கிக்காதே…”

 

 

“அவ்வளோ தான் சொல்லுவேன்… கடைசியா ஒண்ணு சொல்றேன், எந்த பிரச்சனையா இருந்தாலும் அவங்க கேட்பாங்கன்னு காத்திட்டு இருக்காதே… வாய்விட்டு சொல்லு…”

 

 

“அப்போ தான் அவங்களுக்கு புரியும்… நீயா என்னைக்கு எதையும் என்கிட்ட சொன்னதில்லை… ஆனா நம்ம வீட்ல உன்னோட முகத்தை பார்த்தே நான் புரிஞ்சுக்குவேன்… என்னன்னு கேட்டு தெரிஞ்சுக்குவேன்…”

 

 

“அது போலவே எப்பவும் நடக்கும்ன்னு நினைக்காதே… மறுபடியும் சொல்றேன் எதுவா இருந்தாலும் மனசுவிட்டு பேசு, அப்போ தான் எதையும் உணர முடியும், மத்தவங்களையும் புரிஞ்சுக்க முடியும்…”

 

 

“நீயா கற்பனை மேல கற்பனை பண்ணி இப்படியிருக்குமா, அப்படியிருக்குமான்னு யோசிச்சு தப்பு தப்பா முடிவெடுக்காதே… அது உனக்கு நல்லது இல்லை… உன் வாழ்க்கையில சிக்கல்ல கொண்டு போய் விட்டிரும்…” என்றவன் அதற்கு மேல் அங்கிருக்கவில்லை கிளம்பிச் சென்று விட்டான்.

 

 

வானவன் சொன்னதை காதில் வாங்கியவள் மனதில் வாங்கியிருந்தால் புத்தியில் ஏற்றியிருந்தால் பின்னால் நடக்க போவதை தவிர்த்திருப்பாள் அவன் சென்றதும் ஒரு மூச்சு அழுது தீர்த்தாள் அவள்.

 

 

ஏனோ அவளுக்கு ஆதி அவளை பழிவாங்கவே திருமணம் செய்கிறான் என்றே தோன்றியது. பயமாகவும் இருந்தது, இனி எதையும் மாற்ற முடியாது என்று உணர்ந்தவள் உறங்க முயற்சி செய்தாள்.

 

 

ஆதியோ அவன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.அவனுக்கு அப்போது தான் குந்தவை அவன் மாமாவை சித்தப்பா என்று அழைத்தது நினைவுக்கு வந்தது. ஆதியின் மாமாவின் வீட்டில் தான் இப்போது குந்தவையின் வீட்டினர் வாசம் செய்கின்றனர்.

 

 

ஆதியின் மாமா முன்பு சென்னையில் தான் இருந்தார், தங்கையின் கணவர் இறந்ததும் அதே தெருவில் தங்கையை கொண்டு வந்து குடித்தனம் வைத்தவர் அவ்வப்போது வந்து செல்வார், வேண்டியது செய்வார்.

 

 

ஆதி தன் காலில் ஓரளவு நிற்க ஆரம்பித்ததும் அவர் விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு ஓரிரு வருடங்களுக்கு முன்பு தான் சொந்த ஊருக்கே குடித்தனம் பெயர்ந்தார்.

 

 

ஒரு நான்கைந்து மாதத்திற்கு முன் தான் வீட்டிற்கு வந்தவர், அவர் மனைவி வழி உறவினரும் நண்பருமான இளங்கோ என்பவர் வீடு தேடிக் கொண்டிருப்பதாகவும் சென்னையில் இருக்கும் அவர் வீட்டை நண்பருக்கு வாடகைக்கு விடப் போவதாகவும் கூறியது ஞாபகம் வந்தது.

 

 

ஆதி கூட அந்த வீட்டிற்கு வெள்ளை அடிக்க சின்ன சின்ன மராமத்து வேலை பார்க்க என்று சென்றது அவன் நினைவிற்கு வந்தது… மாமா அவர்களுக்கு உதவிக்கு ஏற்பாடு செய்யச் சொல்ல அவனும் அதெல்லாம் செய்திருந்தான்.

 

 

அந்த வீட்டிற்கு ஆட்கள் வந்த போது தூரத்தே இருந்து பார்த்தது அவ்வளவு தான் அவன் நினைவுக்கு வந்தது, அன்றே அவளை பார்த்திருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது என்று தோன்றியது.

 

 

பெண் பார்க்க அவன் வராத போதும் ஒரு முறை அவன் மாமா அவனை பெண் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுவிட்டார்… அப்போது பெண் வேலைக்கு சென்றிருப்பதால் அவனால் அவளை பார்க்க முடியவில்லை.

 

 

அவன் பாட்டுக்கு அவன் எண்ணத்தில் உழன்று கொண்டிருந்த வேளை ஜோதிஷ் உள்ளே நுழைந்தான், அவன் உள்ளே வந்ததும் கதவை அடைத்து தாள் போட்டான் ஆதி.

 

 

‘இவனோட இதே தொல்லையா போச்சு, இவன் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ணும் போது செய்ய வேண்டியது எல்லாம் என்கிட்ட செய்யறான்…’ என்று அலுத்த ஜோதிஷ் “என்னடா இப்போ எதுக்கு கதவை அடைக்கிற..” என்றான்.

 

 

“டேய் பொண்ணு யாருன்னு உனக்கு முதல்லயே தெரியுமா…” என்று நேரடியாக விஷயத்திற்கே வந்தான் ஆதி…

 

 

“அ… அது எனக்கு யாருன்னு தெரியாதுடா…”

 

 

“பொய் சொல்லாத ஜோ, உனக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு… அப்புறம் ஏன் என்கிட்ட சொல்லலை… இவகிட்ட நான் ஏற்கனவே பட்ட அவமானம் போதாதா…”

 

 

“இதுல இவளை கல்யாணம் பண்ணி வாழ்நாள் முழுக்க அவமானப்படணுமா?? நீ அதுக்கு தான் இப்படி செஞ்சியா??” என்று நண்பனை குற்றம் சாட்டினான் அவன்.

 

 

“போதும் சும்மா நிறுத்துடா, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசாதே… நீயே பொண்ணை பார்க்கலை, அப்புறம் எதுக்கு நான் பார்க்கணும்ன்னு நான் தான் அர்ஷுகிட்ட சொல்லிட்டேன்…”

 

 

“சத்தியமா சொல்றேன், இவ தான் பொண்ணுன்னு அப்போ எனக்கு தெரியாது… ஒரு நாள் அர்ஷு பொண்ணு வீட்டில எடுத்த போட்டோன்னு சொல்லி அவளோட போன்ல கொஞ்சம் போட்டோஸ் காமிச்சா…”

 

 

“அப்போ கூட எனக்கு தெரியாது இவ தான் பொண்ணுன்னு… நான் அவளோட தங்கச்சியை பார்த்து அவ தான் பொண்ணுன்னு நினைச்சுட்டு இருந்தேன்…”

 

 

“இங்க வந்த பிறகு தான் எனக்கு தெரியும்… தேவி தான் உனக்கு பார்த்த பொண்ணுன்னு… இப்போ இந்த விஷயம் தெரிஞ்சு என்ன பண்ணுறது… நீ முதல்லயே பொண்ணை பார்த்திருக்கணும்…” என்று அவன் நண்பனின் மேல் குற்றத்தை திருப்பி விட்டான்…

 

 

“டேய் இப்போ எதுவுமே செய்ய முடியாதாடா…” என்று ஆதியும் குந்தவையை போலவே கேட்டு வைத்தான்.

 

 

“ஓ!!! செய்யலாமே… போய் கல்யாணத்தை நிறுத்துடா!!!”

 

“அதை தான்டா ஜோ கேட்குறேன்… எப்படிடா நிறுத்துறது…”

 

 

“நேரா உன் மாமாகிட்ட போ, மாமா… மாமா… இப்படி இப்படி அப்படி அப்படின்னு எல்லா விஷயத்தையும் அவர்கிட்ட சொல்லி கல்யாணத்தை நிறுத்து…”

 

 

“டேய் என்ன ஜோ இப்படி சொல்ற, அவர் வருத்தப்பட மாட்டாரா… அதெல்லாம் தப்பு ஜோ… என் மேல அவர் ரொம்ப நம்பிக்கை வைச்சிருக்கார்டா… அதை கெடுக்க என்னால முடியாது… நீ வேற வழி இருந்தா சொல்லுடா…”

 

 

“வேற நல்ல வழி இருக்கே…”

 

 

“என்ன ஜோ அது…”

 

 

“நீ அந்த பொண்ணை கல்யாணம் பண்றது…”

 

 

“அதெப்படிடா முடியும்… அவளை பார்த்தாலே அன்னைக்கு பஸ்ல வைச்சு நடந்தது எல்லாம் தான் எனக்கு ஞாபகம் வருது…”

 

 

“இதென்னடா வம்பா போச்சு… கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைன்னு என் உயிரை எடுக்குற, ஒண்ணு உன் மாமாகிட்ட சொல்லி கல்யாணத்தை நிறுத்து இல்லை அவர் சொல்ற பொண்ணை கட்டு…”

 

 

“வேற வழியே இல்லையாடா… நான் அவளை தான் கல்யாணம் பண்ணியாகணுமா??” என்று பாவமாக கேட்டவனை பார்க்கும் போது ஜோதிஷுக்கும் பாவமாக தான் இருந்தது.

 

 

“இங்க பாரு ஆதி, இதுவரைக்கும் போனது எல்லாம் போகட்டும்… இனி இது தான் நடக்க போகுதுன்னு தெரிஞ்சு போச்சு… பழசு எல்லாம் விட்டுத் தொலை… உன் வாழ்க்கை அவளோட தான்…”

 

 

“அதுக்கு உன்னை தயார்ப்படுத்திக்கோ… பழசை பத்தி எப்பவும் பேசாதே, பேசினா உனக்கும் கஷ்டம் அந்த பொண்ணுக்கும் சங்கடம் தான் வரும்… நீங்க சந்தோசமா வாழ்ந்து தான் ஆகணும்…”

 

 

“நீ ஈசியா சொல்லிட்ட ஜோ, எனக்கு ரொம்ப கவலையா இருக்குடா… என்னோட எதிர்காலத்தை நினைச்சு…  அவளோட நான் எப்படிடா வாழப் போறேன்… என்னால நினைக்க கூட முடியலைடா…”

 

 

“நீ எதுக்கு கவலைப்படுற ஆதி… அந்த பொண்ணு தான் உன்னை நம்பி வருது, அதோட எதிர்காலம் இனி உன் கையில… உங்க ரெண்டு பேரோட எதிர்காலத்தையும் நீ தான் தீர்மானிக்கணும்…”

 

 

“உன் வாழ்க்கை… உன் தங்கச்சி எதிர்காலம் எல்லாம் யோசி… சந்தோசமா வாழ முயற்சி பண்ணு… உனக்கு மன்னிக்கத் தெரியும்ன்னு எனக்கு தெரியும்… அவ தப்பே பண்ணியிருந்தாலும் மன்னிச்சிடு…”

 

 

“ஆண்டவன் கொடுத்த மறதியை உபயோகப்படுத்திக்கோ… நடந்ததை மறந்திடு… நான் கீழ போறேன், தாம்பூல பை எல்லாம் போடணும்… நாளைக்கு அம்மாவும் அப்பாவும் வருவாங்க…”

 

 

“அவங்க கிளம்பிட்டாங்களான்னு தெரியணும்… அவங்களுக்கு போன் போடணும்…” என்று சொல்லிவிட்டு நண்பனை யோசிக்கவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் ஜோதிஷ்…

 

 

‘ரெண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தம், ஆனா எங்களுக்கு பத்து பொருத்தமாம் மாமா சொல்றார்…’

 

 

‘எப்படியோ இனி இது தான் என் வாழ்க்கை அதை வாழ்ந்து தான் பார்க்கணும்’ என்று எண்ணியவனுக்கு நண்பன் கூறுவது புரிந்தது, அவன் வாழ்க்கையை எதிர்நோக்க தன்னை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தான்…

 

 

ஆனால் குந்தவையோ அவள் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிடுமோ என்ற கவலையில் ஆழ்ந்திருந்தாள்… யாருக்கும் காத்திராமல் விடியல் தன் வேலையை செய்ய மளமளவென்று எல்லாம் நடந்தது.

 

 

மணவறையில் ஆதியும் குந்தவையும் ஒன்றாய் அமர்ந்திருக்க கையில் தாலியை வாங்கியவன் சற்றே நிதானித்து அவளை திரும்பி பார்க்க அவள் கண்களும் அவனையே நோக்கிக் கொண்டிருந்தது.

 

 

பார்வை இரண்டும் ஒன்றாய் பயணித்திருக்க குந்தவையின் கழுத்தில் மங்கலநாண் பூட்டினான் விக்கிரமாதித்தன். இருவரும் தங்கள் நினைவில் இருந்து மீண்டுக் கொண்டிருக்க புகைப்படம் எடுப்பவர் அருகில் வந்தார்…..

Advertisement