Advertisement

அத்தியாயம் –7

 

வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து 
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர் 
பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும் 
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்

 

  • நாலாயிர திவ்யப்பிரபந்தம் (ஆண்டாள்)

 

ஏனோ குந்தவைக்கு உறக்கம் வர மறுத்தது… காரணம் புரியாத பயமொன்று அவள் அடிவயிற்றில் தோன்றியது… அது மெல்ல மெல்ல முன்னேறி இப்போது அவள் நெஞ்சுக்குழிக்குள் வந்து சிக்கிக் கொண்டது போன்ற உணர்வு…

 

 

உறக்கம் மொத்தமாய்  தொலைந்து போய் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள். அருகில் படுத்திருந்த வானதி விழித்து விடாமல் எழுந்தவள் மெதுவாக நடந்து சென்று பலகணியில் நின்றாள்…

 

 

காலையில் அவள் அன்னையும் தந்தையும் அவளிடம் பேச வேண்டும் என்று கூறியவர்கள் அவள் திருமணப் பேச்சை ஆரம்பித்தனர்.

 

 

“அம்மா குந்தவை உனக்கு கல்யாணம் பண்ணிடலாம்ன்னு நானும் அப்பாவும் யோசிக்கறோம்… உனக்கு முடிச்சிட்டா அடுத்து கொஞ்சம் வருஷம் கழிச்சு வானதிக்கும் பார்க்க சரியா இருக்கும்ன்னு நாங்க நினைக்கிறோம்மா…” என்று ஆரம்பித்தார் அவளின் அன்னை மணிமேகலை…

 

 

“நீ என்னம்மா சொல்ற…” என்றார் இளங்கோவன்.

 

 

“அப்பா என் கல்யாணத்துக்கு அப்படி என்னப்பா இப்போ அவசரம்…” என்று கையை பிசைந்தாள் மகள்.

 

 

“அவசம் தானேம்மா, உனக்கும் வயசாகுதே…”

 

 

“அப்பா இருபத்தி மூணு வயசு ஒரு வயசாப்பா…”

 

 

“அதுகில்லைம்மா குந்தவை, உனக்கு இப்போ பார்த்தா தான் சரியா இருக்கும்டா… உனக்கு பிறகு உன் தம்பி தங்கை எல்லாம் இருக்காங்க… எல்லாருக்கும் அடுத்தடுத்து முடிக்க வேணாமாடா… எங்களுக்கும் வயசாகுதுலடா…”

 

 

“அப்பா நீங்க இன்னும் ரிடையர் கூட ஆகலை… அதுக்குள்ள உங்களுக்கு வயசாகிடுச்சுன்னு சொன்னா எப்படிப்பா…”

 

 

“ஏன்மா அப்பா இன்னும் இரண்டு வருஷத்துல ரிடையர் ஆகப்போறேன்… உனக்கு முடிச்சா அடுத்தடுத்து முடிக்க எனக்கும் சரியா இருக்கும்டா…”

 

 

“ஏன்டி இவ்வளவு கேள்வி கேட்குற… உனக்கு இப்போ கல்யாணம் பண்ணாம எப்போ கல்யாணம் பண்ணுறதாம்… அறுபது வயசுலயா கல்யாணம் பண்ண முடியும்…”

 

 

“உனக்கு இருபத்தி மூணு முடிஞ்சு இருபத்தி நாலு தொடங்கிருச்சு… ஞாபகம் இருக்கட்டும்… உன் வயசுல நானெல்லாம் இரண்டு பிள்ளை பெத்திட்டேன்…”

 

 

“மேகலை நம்ம கதையெல்லாம் எதுக்கு இப்போ… குந்தவை நீ என்னம்மா நினைக்கிற… உனக்கு வேற யாரு மேலயும் விருப்பம் எதுவும் இருக்கா…”

 

 

“அப்படி எதுவும் இருந்தா சொல்லிடும்மா… பேசிடுவோம்…” என்ற இளங்கோவனை வானவன் அவன் அறையில் இருந்து திட்டிக் கொண்டிருந்தான். ‘நான் என்ன சொன்னேன் இந்த அப்பா என்ன செய்யறார்…’

 

 

‘அய்யோ அப்பா அவளே குழம்பிப் போய் சுத்திட்டு இருக்கா… இதுல இவரு வேற லவ் இருக்கா இல்லையான்னு கேள்வி கேட்குறார்…’

 

 

‘அவர் கேட்டதுலயும் தப்பில்லை, இதுக்கு அக்கா என்ன பதில் சொல்லப் போறான்னு பார்ப்போம்…’ என்று யோசித்த வானவன் அவன் தமக்கையின் பதிலை கேட்க ஆவலோடு கதவிடுக்கின் வழியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

குந்தவை சற்றே யோசிக்க ஆரம்பித்தாள், அவளின் நினைவு ரவியை நோக்கிச் சென்றது… அவளிடம் பேச வேண்டும் என்று சொன்னவன் ஒரு திடீர் வேலையாக பெங்களூர் சென்றுவிட்டான்.

 

 

ஒரு வேளை அவன் காதல் சொல்லியிருந்தால் அதை தான் எப்படி எடுத்துக் கொண்டிருப்போம்… இந்நேரம் இதை பற்றி வீட்டில் சொல்லியிருப்போமா… என்று யோசித்தாள்.

 

 

அவளுக்கு ரவியை பிடித்தாலும் அவனிடம் காதல் என்ற உணர்வை அவள் உணரவில்லை… வேறு யாரையும் அவள் விரும்பியிருக்கவுமில்லை… அவளுக்கென்று தனிப்பட்ட விருப்பம் எதுவுமில்லை என்றே தோன்றியது.

 

 

அவளுக்கே தெரியாமல் அவள் மனது நல்லவிதமாக யோசித்ததை அவள் அறியாள்… அவள் தந்தையிடம் “இல்லைப்பா அப்படி எதுவும் இல்லைப்பா…”

 

 

“அப்புறம் ஏன்டா யோசிக்கிற…”

 

 

“தெரியலைப்பா…”

 

 

“என்னடி தெரியும் உனக்கு அப்போ… அப்பா கேட்டா சரின்னு சொல்ல வேண்டியது தானே… அந்த மனுஷன் எவ்வளவு தூரம் இறங்கி வந்து பொறுமையா கேட்குறாரு…”

 

 

“உனக்கு பிடிச்சவனா சொல்லு பேசிடலாம்ன்னு ஒரு அப்பன் சொல்லியாச்சு… ஊர் உலகத்துல எந்த அப்பா இப்படி கேட்பாரு பொண்ணை பக்கத்துல உட்கார வைச்சு…”

 

 

“நீ தான் அப்படி எதுவும் இல்லைன்னு சொல்றயே… அப்புறம் என்னடி யோசனை உனக்கு… எல்லாரும் சந்தோசப்படுற மாதிரி சட்டுன்னு சரின்னு சொல்றதுக்கு என்னவாம் உனக்கு…” என்று கடிந்தார் மணிமேகலை.

 

அவளுக்கும் தான் ஏன் மறுக்கிறோம் என்று மட்டும் புரியவில்லை… ஆனால் இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்பது மட்டும் உள்ளே தோன்றிக் கொண்டே இருந்தது.

 

 

“மேகலை கொஞ்ச நேரம் பேசாம இரு… கிச்சன்ல எதுவும் வேலை இருந்தா போய் பாரு… நமக்காக அவ எதுவும் செய்ய வேண்டாம், அவளுக்கா சரின்னு தோணிச்சுன்னா சரின்னு சொல்லட்டும்… நீ யோசிடா…” என்றவர் எழப் போனார்.

 

 

“அப்பா… உங்க இஷ்டம்ப்பா… உங்க விருப்பப்படியே செய்ங்க…”

 

 

“நீ எங்களுக்காக சொல்லாதடா… உங்கம்மா திட்டிட்டாளேன்னு சரின்னு சொல்லாத… உனக்கு சரின்னு பட்டா மட்டும் சொல்லுடா அதான் அப்பா உன்னை யோசிக்க சொல்லிட்டேன்ல…”

 

 

“ஆமாம் உங்க பொண்ணை நான் திட்டிட்டேன் அவ கரைஞ்சு போய்ட்டா… அவளே சரின்னு சொல்லிட்டா நீங்க எதுக்கு இப்போ குட்டையை குழப்புறீங்க… ஜோசியர் சொன்னது எல்லாம் மறந்து போச்சா உங்களுக்கு…”

 

 

“இந்த வருஷம் அவளுக்கு கல்யாணம் நடக்கலைன்னா அப்புறம் இன்னும் நாலு வருஷம் ஆகும்ன்னு சொல்றார்… இப்போ இவளுக்கு லேட் பண்ணி இன்னும் நாலு வருஷம் கழிச்சு வானதிக்கும் இவளுக்கும் ஒண்ணா சேர்த்து வைச்சு பார்க்கறதா…”

 

 

“புரியாம பேசாதீங்க நீங்க… அவ சரின்னு சொல்லிட்டால ஆக வேண்டிய வேலையை பாருங்க…”

 

 

“அம்மா அப்பாவை எதுக்கு சத்தம் போடுறீங்க…” என்றவள் தந்தையிடம் திரும்பி “அப்பா எனக்கு முழு சம்மதம்… நீங்க உங்க இஷ்டப்படி செய்ங்கப்பா…” என்றுவிட்டு அப்போது எழுந்து சென்றுவிட்டாள்.

 

 

இரண்டு நாட்களில் மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெரியவர்கள் அனைவரும் வந்து பார்த்துவிட்டு சென்றனர்… ஏனோ அவர்களுடன் மாப்பிள்ளை வரவில்லை.

 

 

பெரியவர்கள் பார்த்து முடித்தால் போதும் என்று சொல்லிவிட்டானாம்… அவர்கள் வந்து சென்ற மறுநாள் அவள் வீட்டினர் அனைவரும் வானதியை அவளுக்கு துணை வைத்துவிட்டு மாப்பிள்ளை வீடு பார்க்க சென்றனர்.

ஊருக்கு சென்று மாப்பிள்ளை வீட்டை பார்த்தவர்கள் எல்லோருக்கும் பிடித்து போய்விட அங்கேயே தட்டை மாற்றிக் கொண்டு ஊர் திரும்பினர் அவள் பெற்றோர்.

 

____________________

 

 

 

“டேய் ஜோ இதென்னடா கூத்து மாப்பிள்ளை பத்தி விசாரிக்க பொண்ணு வீட்ல இருந்து ஆபீஸ்க்கேவா வருவாங்க…”

 

 

“என்னடா சொல்ற ஒண்ணும் புரியலை…”

 

 

“ஜோ காலையில மாமா போன் பண்ணார்… பொண்ணு வீட்டில இருந்து என்னையும் ஆபீஸையும் பார்க்க வர்றாங்களாம்… என்னடா இதெல்லாம்…”

 

 

“டேய் மாப்பிள்ளை வேலை எல்லாம் எப்படி?? என்ன?? ஏதுன்னு தெரிய வேண்டாமா அதுக்கு தான் வர்றாங்க இதுல என்னடா குத்தம் குறை கண்டே…”

 

 

“அதான் அன்னைக்கு அவங்க வீட்டில இருந்து வந்திருக்கும் போதே எல்லாம் விசாரிச்சுட்டாங்களே…”

 

 

“அதுலயும் பொண்ணோட மாமன்னு ஒருத்தன் வந்தான் பாரு, குடைஞ்சு குடைஞ்சு கேள்வி கேட்குறான்டா… நைசா என்ன வெளிய கூட்டிட்டு போய் தண்ணி அடிப்பியா தம் அடிப்பியான்னு டெஸ்ட்டு வேற பண்ணுறான்…”

 

 

“என்ன கர்மமோ… ஏன்டா என்னை பார்த்து பொண்ணு குடுக்க மாட்டாங்களா அவங்க… நான் என்ன பண்ணுறேன் ஏது பண்ணுறேன்னு என்ன விசாரணை வேண்டி கிடக்கு அவங்களுக்கு…”

 

 

“இப்படி வளைச்சு வளைச்சு விசாரிக்கறதுக்கு பொண்ணை அவங்க வீட்டிலேயே வைச்சுக்க வேண்டியது தானே…” என்று பொருமினான்.

 

 

“இதெல்லாம் சகஜம்டா பொண்ணு வீட்டில இப்படி தான் விசாரிப்பாங்க…”

 

 

“அதுக்குன்னு இப்படியா…”

 

 

“அவங்க பொண்ணு வந்து எப்படி வாழும்ன்னு அவங்களுக்கு தெரிய வேணாமா… அதுக்கு தான் இப்படி…”

“அப்போ பேசாம அவங்க வீட்டு பொண்ணை ஒரு மாசம் அனுப்பி வைக்க சொல்லு… எப்படி வாழுதுன்னு பார்த்திட்டு அப்புறம் பொண்ணு கொடுக்க சொல்லு…” என்று இடக்காக பேசினான் ஆதித்யா…

 

 

“நல்ல ஐடியா மச்சி… ஆமா அர்ஷுவை இப்படி தான் ஒரு மாசம் வேற வீட்டுக்கு அனுப்பி வைப்பியா…” என்று அவனை விட அதிக இடக்காக ஜோதி கேட்க ஆதி வாயை மூடிக் கொண்டான்.

 

 

“பேசறதுக்கு முன்னாடி யோசிடா… உனக்கு கல்யாணம் வேணாம்ன்னு நீ நினைச்சா அதை மாமாகிட்ட சொல்லு… அதைவிட்டு பொண்ணு வீட்டுக்காரங்களை தப்பா பேசாதே…” என்றான் ஜோதிஷ்.

 

 

ஆதிக்கும் நிதர்சனம் புரிய அமைதியானான்… பெண்ணின் தகப்பனும் அன்று வீட்டிற்கு வந்த பெண்ணின் மாமனும் வந்திருந்தனர்.

 

 

அவர்கள் அலுவலகத்தை சுற்றி பார்த்துவிட்டு அவனிடம் சிறிது நேரம் திருமண விஷயமாக பேசிவிட்டு அவர்கள் கிளம்பினர்.

 

 

அவர்கள் அப்புறம் சென்றதும் ஜோதிஷ் சற்றே ஆசுவாசமானான். “என்னடா பெருமூச்சு விடற…” என்றான் ஆதி.

 

 

“டேய் எங்கடா புடிச்சீங்க அந்த மாமனை, உன்னை குடைஞ்சான் அதுல ஒரு நியாயம் இருக்கு… உன் கூட நண்பனா இந்த கம்பெனில ஒரு பார்ட்னரா இருக்க பாவத்துக்கு எல்லாமா அவன் என்னை விசாரிப்பான்…”

 

 

“காபி சொல்ல சொன்னியேன்னு எழுந்து போனேன்… கூடவே நானும் வர்றேன்னு வந்தான்… சரி தான் பேச்சு துணைக்காச்சுன்னு மெதுவா நடந்தே போனோம்டா…”

 

 

“கடைக்கு போனதும் ஒரு சிகரெட் சொல்லுங்கன்னு சொன்னான்… சரின்னு சொன்னேன்… ஏன் தம்பி உங்களுக்கு சொல்லலையான்னு கேட்டான்… அப்போ தான்டா நான் உஷாரானேன்…”

 

 

“எனக்கு பழக்கமில்லைங்கன்னு சொன்னேன்… சரி தம்பி அப்போ தண்ணி அடிப்பீங்களான்னு அடுத்த கேள்வி கேட்டான்… பிடிக்காதுன்னு சொன்னேன்…”

 

 

“ஏன் பிடிக்காதுன்னு அடுத்த கேள்வியை ரெடியா வைச்சிருக்கான் மச்சி அவன்…”

“அதுக்கு நீ என்ன சொன்ன??”

 

 

“ஒரு முறை அடிச்சேன்… வாடை பிடிக்காம விட்டுட்டேன்னு சொன்னேன்…”

 

 

“அதுக்கு அவனென்ன சொன்னான்…”

 

 

“யாரெல்லாம் சேர்ந்து அடிச்சீங்கன்னு அடுத்த கேள்வி கேக்குறான்டா… எப்பா சாமி அவன்கிட்ட இருந்து தப்பிக்கறதுக்குள்ள நான் பட்டப்பாடு இருக்கே… அந்த தெருமுனை பைவ் ஸ்டார் கடைக்காரனுக்கு மட்டும் தான் தெரியும்…”

 

 

“நிஜமாவே உன்னை பார்த்தா எனக்கு பாவமா தான்டா இருக்கு… இவங்களே இவ்வளவு பேசுறாங்கன்னா, அந்த பொண்ணு எப்படி பேசுமோ…”

 

 

“பொண்ணை பத்தி தெரியலைடா… ஆனா அவங்க அப்பா நல்ல டீசன்ட்டா தான் பேசினார்… பொண்ணு தப்பா எல்லாம் இருக்காது…” என்றான் ஆதி.

 

 

“பார்றா, வருங்கால பொண்டாட்டிக்கு இப்போவே சப்போர்ட்டா… நடத்து நடத்து… ஆமா பொண்ணோட போட்டோவை பார்த்தியா…”

 

 

“இல்லைடா பார்க்கலை…”

 

 

“ஏன்டா பார்க்கலை… மணவறையில வேற பொண்ணுக்கு தாலி கட்டிற போறடா…”

 

 

“என்னமோ தெரியலைடா… பொண்ணை பார்க்கவே எனக்கு தோணலை… எனக்கு பொண்ணுங்கன்னாலே கொஞ்சம் வெறுப்பாவே இருக்கு…”

 

 

“என்னடா ஆதி திடிர்னு இப்படி சொல்ற…”

 

 

“அந்த ராட்சசி முகம் தான்டா எனக்கு ஞாபகம் வருது… அவ அவமானப்படுத்தினது தான் கண்ணு முன்னால வந்து நிக்குது… அவளை வைச்சு எல்லா பொண்ணுங்களையும் தப்பா நினைக்க கூடாதுன்னு தெரியுது…”

 

 

“ஆனாலும் என்னால அப்படி நினைக்காம இருக்க முடியலைடா…”

 

 

“அதுக்கும் நீ பொண்ணு போட்டோ பார்க்காம இருக்கறதுக்கும் என்னடா சம்மந்தம்…”

“பார்க்க கூடாதுன்னு எல்லாம் இல்லை… மனசுக்கு இன்னும் அந்த போட்டோவை பார்க்கணும்ன்னு தோணலை… எதாச்சும் ஒரு அதிசயம் நடந்து கல்யாணம் நின்னு போய்டாதான்னு இருக்கு…”

 

 

“ஏன்டா இப்படி அபசகுனமா பேசற?? உனக்கு கல்யாணம் வேணாம்ன்னா மாமாகிட்ட சொல்லி நிறுத்த வேண்டியது தானே… அதைவிட்டு எதுக்கு இப்படி பேசிட்டு திரியற…”

 

 

“பயமா இருக்குடா ஜோ… அடுப்புக்கு பயந்து வாணலில விழற மாதிரின்னு சொல்லுவாங்களே அது மாதிரி இருக்குடா… தங்கச்சிக்காக பார்த்து நான் அவசரப்படுறனோன்னு இருக்கு…”

 

 

“என்னோட வாழ்க்கையை ரிஸ்க் எடுக்கறனோன்னு தோணுதுடா ஜோ… சந்தோசமா இருந்தா நிம்மதி தான்… ஆனா வர்றவளால என்னோட நிம்மதி போயிடுச்சுன்னா என்னடா செய்யறது…”

 

 

“டேய் ஆதி நீ இன்னும் வாழ்க்கைய வாழவே ஆரம்பிக்கலை அதுக்குள்ள உனக்கு இவ்வளவு யோசனை தேவையா…”

 

 

“வர்றவ இப்படி இருப்பாளோ அப்படி இருப்பாளோன்னு பயந்துகிட்டே இருந்தா வாழ்க்கை நிம்மதியா இருக்காது… வர்றவளை நேசி, அது ஒண்ணே எல்லாத்தையும் மாத்தும்…”

 

 

“போய் முதல்ல பொண்ணோட போட்டோவை பாரு… உங்க மாமாகிட்ட பேசி பொண்ணோட போன் நம்பர் வாங்கி பேசப்பாரு… பொண்ணு பார்க்க போன அன்னைக்கு நான் போக முடியாம போச்சு… நீயும் போகாம என்னையும் போக விடாம ஊருக்கு இழுத்துட்டு போயிட்ட” என்றான் ஜோதிஷ்.

 

____________________

 

 

குந்தவை அலுவலகத்தில் யாரிடமும் அவளை பற்றி பேசியிருக்கவில்லை… எல்லோரிடமும் பொத்தாம்பொதுவாகவே பழகுவாள், யாரிடமும் மனம்விட்டு அவள் பழகியதில்லை.

 

 

ஊருக்கு சென்ற ரவி இன்னமும் திரும்பியிருக்கவில்லை… அவன் விடுமுறையை இன்னமும் ஒரு மாதத்திற்கு நீட்டித்திருப்பதாக மற்றவர்கள் கூறியிருந்தனர்.

 

 

குந்தவைக்கு அவன் தன்னிடம் என்ன பேச வந்திருப்பான் என்பதை பற்றியே எண்ணம் சுழன்று கொண்டிருந்தது. தன் தலையில் தானே குட்டிக் கொண்டு இதை பற்றி இனி என்ன ஆராய்ச்சி என்று நினைத்தவள் அந்த நினைப்பை ஒதுக்க முயன்றாள்.

 

 

வானவன் மாப்பிள்ளையிடம் அவளின் கைபேசி எண்ணை அவள் தந்தை கொடுத்திருப்பதாகவும் அவர் பேசுவார் என்றும் கூறியிருந்தான். ஆயிற்று அவன் சொல்லி இன்றோடு ஒரு வாரம் சென்றிருந்தது.

 

 

அவளை அவன் அழைத்து பேசியிருக்கவில்லை, அதுவும் நல்லது தான் என்று நினைத்துக் கொண்டாள். ஆனால் உண்மையிலேயே மாப்பிள்ளை அவள் எண்ணுக்கு போன் செய்திருந்தார்.

 

 

நம் குந்தவைக்கு மிக நல்ல பழக்கம் ஒன்று உண்டு… தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு ஏதும் வந்தால் எடுப்பதில்லை என்பது தான் அது…

 

 

ஒரு முறை அப்படி ஒரு எண்ணில் இருந்து வந்த அழைப்பை எடுத்துவிட்டு அவன் தொடர்ந்து அவளுக்கு டார்ச்சர் கொடுத்தான். பிறகு வேறு எண்ணை மாற்றியவள் தான், தெரியாத எண்ணின் அழைப்பை எடுப்பதேயில்லை.

 

 

அப்படி தான் மாப்பிள்ளை போன் செய்திருந்ததையும் அவள் அலட்சியம் செய்திருந்தாள். அவர் அவள் வேலை நேரத்திலேயே பெரும்பாலும் அழைத்திருந்ததால் அவள் ஏதோ தெரியாத எண்ணென்று எடுக்கவேயில்லை.

 

 

ஒரு வேளை அவள் வீட்டில் இருந்த நேரத்தில் அழைத்திருந்தால் எடுத்திருப்பாளோ என்னவோ… திருமணத்திற்க்காக அன்று இரவு அவர்கள் ஊருக்கு கிளம்ப வேண்டும்.

 

 

குந்தவை அலுவலகத்தில் ஒரு மாதத்திற்கு விடுமுறை எடுத்திருந்தாள். வீட்டில் அவளின் ஒவ்வொரு உடைமைகளை எடுத்து வைக்கும் போது உள்ளுக்குள் எதுவோ பிசைந்தது அவளுக்கு.

 

 

‘இனி இந்த வீடு எனக்கில்லையா… நான் உரிமையாக இங்கே இருக்க முடியாதா…’ என்ற எண்ணங்கள் மனதினில் வந்து சூழ கண்கள் கரித்தது அவளுக்கு.

 

 

“என்னக்கா என்ன யோசனை… எல்லாம் எடுத்து வைச்சிட்டியா…” என்று வானதி அக்கறையாக கேட்கவும்…

அவள் தங்கையை கட்டிக் கொண்டு ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டாள். “அக்கா என்னாச்சுக்கா எதுக்குக்கா அழற, அழாதேக்கா… நாங்க எல்லாம் எங்க போய்ட போறோம்…”

 

 

“எப்பவும் உன் கூட தான்க்கா இருப்போம்… நீ நினைச்சா ஒரு எட்டு எங்களை வந்து பார்த்திட்டு போலாம்க்கா… அழாதேக்கா… டேய் வாலு இங்க கொஞ்சம் வாடா… அக்கா அழறா…” என்று அழைத்தவள் தானும் அழுதுக் கொண்டே வானவனை அழைத்தாள்.

 

 

“என்ன கண்மணிகளா??? ஆரம்பிச்சுட்டீங்களா… என்னடா இந்த சீனே வரலையேன்னு நினைச்சேன்… வந்திருச்சா… ஹேய் மந்தி, வானரம் எதுக்கு இப்போ இப்படி அழுது சீன் போடறீங்க…”

 

 

“பேசாம கிளம்புங்க… போங்க… மந்தி இது அழ வேண்டிய நேரமில்லை… சந்தோசமா இருக்க வேண்டிய விஷயத்துக்கு ரெண்டு பேரும் எதுக்கு இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணறீங்க…”

 

 

“அம்மாவும் அப்பாவும் பார்த்தா எவ்வளவு சங்கடப்படுவாங்க… வானரமே அக்காவோட திங்க்ஸ் எல்லாம் எடுத்து வை… குந்தி நீ வா அம்மா சாமி கும்பிட உன்னை கூப்பிட்டாங்க…” என்று சொல்லி அவர்களை அதட்டி உருட்டி விட்டு போனான் வானவன்.

 

 

வானவனுக்கு இப்போது தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இனி குந்தவையை பற்றிய கவலையில்லை, அவள் திருமணம் ஆகிவிட்டால் இனி தன் வீடு, தன் கணவன் என்ற நினைப்பு அவளுக்கு வந்துவிடும்…

 

 

குழந்தை ஒன்று பிறந்துவிட்டால் அவளுக்கு கண்டதையும் யோசித்து குழம்பும் எண்ணம் எல்லாம் வராது என்று எண்ணி சந்தோசமடைந்தான்…

 

 

ரயிலில் ஏறி அவர்கள் அமர வண்டி மெதுவாக தன் பயணத்தை துவங்கியது… குந்தவையின் வாழ்க்கை பயணமும் இந்த ரயிலை போலவே தன் பயணத்தை துவங்கியது…

 

 

அவள் கைபேசி சிணுங்கிய சத்தம் கேட்க அதை எடுத்து பார்த்தவள் எடுப்பதா வேண்டாமா என்று யோசிக்க ஆரம்பித்தாள்… அழைத்தது வேறுயாருமல்ல ரவி தான்… ஒரு முடிவுடன் பொத்தானை அழுத்தி காதுக்கு கொடுத்தவள் “ஹலோ சொல்லுங்க சார்…” என்றாள்.

 

 

“என்ன தேவி திடிர்னு சார்ன்னு கூப்பிடுற… நாம பேசினது போல பேர் சொல்லி கூப்பிடலாமே…”

 

 

“பரவாயில்லை சார் சொல்லுங்க…”

 

 

“என்னாச்சு தேவி?? ஒட்டாம பேசுற, என் மேல கோபமா?? சொல்லாம கொள்ளாம ஊருக்கு போயிட்டனேன்னு கோபமா?? இல்லை உன்கிட்ட பேசுறேன்னு சொன்னவன் பேசாமலே போயிட்டனேன்னு வருத்தமா??”

 

 

“அப்படி எல்லாம் எதுவுமில்லை சார்… சொல்லுங்க சார் இந்த நேரத்துல போன் பண்ணி இருக்கீங்க…” என்று பரபரத்தவளிடம் “ஏன் தேவி நான் இந்நேரத்துல உனக்கு கூப்பிடக் கூடாதா…”

 

 

குந்தவைக்கோ இவன் என்ன தான் சொல்ல வருகிறான் என்று கோபம் வந்தது. சட்டென்று சொல்லி முடித்தால் போனை வைக்கலாம் என்று தோன்றியது.

 

 

“அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை சார்… நான் ஊருக்கு போயிட்டு இருக்கேன், ட்ரைன்ல இருக்கேன்… சிக்னல் வேற விட்டுவிட்டு வருது அதான் என்ன விஷயம்ன்னு கேட்டேன்…”

 

 

“ஓ!!! சாரி தேவி… நான் இன்னும் ஊர்ல தான் இருக்கேன்… நான் சொல்ல வந்த விஷயத்தை போன்லயாச்சும் சொல்லிடலாம்ன்னு தான் கூப்பிட்டேன்…” என்று அவன் சொல்லவும் அவள் அடிவயிற்றில் இருந்து ஒரு பயம் சூழ ஆரம்பித்தது.

 

 

‘இவன் எதுவும் பேசாமல் இருந்தால் தேவலாம்’ என்று தோன்றியது அவளுக்கு. ‘மேலதிகாரியாய் வேறு போய்விட்டான், எதுவும் சொல்லி போனை வைத்துவிட முடியாதே…’ என்று எண்ணினாள்.

 

 

“என்ன தேவி பேசாம இருக்க?? என்ன விஷயம்ன்னு கேட்க மாட்டியா??”

 

 

“சொல்லுங்க சார் என்ன விஷயம்??” என்றவளிடம் “அந்த சாரை விடேன் தேவி…”

 

 

“சார் அப்போ அது ரொம்ப முக்கியமா, நீங்க என்னன்னு சொல்லுங்க சார்… நான் எதுவும் வேலை முடிக்காம வந்திட்டேனா?? எல்லா டீடைலும் கல்பனா அக்காகிட்ட சொல்லிட்டு தான் சார் வந்திருக்கேன்…”

 

“அது தவிர்த்து எதுவும் வேணும்னா, நீங்க மாலினிகிட்ட கேட்டுக்கலாம் சார்… இல்லைன்னா நான் லீவ் முடிஞ்சு வரும் போது சொல்றேன் சார்…” என்று அவனை கத்தரிக்கும் பொருட்டு சம்மந்தமேயில்லாமல் அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

 

“தேவி கொஞ்சம் பொறு… நான் சொல்ல வந்தது அதில்லை… ஐ லவ் யூ தேவி… ஐ லவ் யூ சோ மச்… எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு தேவி… நாம கல்யாணம் பண்ணிக்கலாமா…”

 

 

“தேவி நான் இதை தான் சொல்ல வந்தேன்… ஹலோ தேவி… தேவி…” என்று அவன் சொன்னது போனை ஐ லவ் யூ என்று அவன் சொன்ன போதே துண்டித்து விட்டிருந்த குந்தவையின் காதில் எப்படி கேட்டிருக்கும்…

 

 

பாத்ரூம் சென்று வருவதாக சொல்லிச் சென்ற குந்தவை இன்னும் வரவில்லையே என்று அவளை தேடி எழுந்த வானவன் அவள் வருவதை பார்த்து அப்படியே அமர்ந்தான்.

 

 

கொஞ்ச நாட்களாக தான் கொஞ்சம் தெளிந்திருந்தது போல் தோன்றிய அவனின் தமக்கையின் முகம் மீண்டும் குழப்பத்தில் இருப்பது கண்டு யோசனையானான் வானவன்.

 

 

விடிந்த பொழுது அவர்கள் ஊரை சென்றடைந்திருந்தனர். அங்கு சென்றதில் இருந்து குந்தவைக்கு யோசிக்க கூட நேரமில்லாமல் பொழுது நகர்ந்தது. மாப்பிள்ளை வீட்டில் இருந்து தினமும் யாராவது ஒருவர் வந்து அவளை பார்த்து விட்டுச் சென்றனர்.

 

 

நலங்கு வைப்பது மருதாணி இடுவது என்று அவள் பொழுதுகளும் விரைந்தோடியது. ரயிலில் வைத்து ரவி பேசிய போது கைபேசியை அணைத்தவள் இன்று வரை அதை அவள் உயிர்பிக்கவே இல்லை.

 

 

அவளை திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்ல கார் வந்திருந்தது. அதில் ஏறி அவள் தங்கை மற்றும் உறவினர்களுடன் பயணப்பட்டவர்கள் சில மணித்துளிகளில் மண்டபத்தை அடைந்திருந்தார்கள்.

 

 

வரவேற்ப்பில்  விக்கிரமன் வெட்ஸ் குந்தவை என்ற போர்ட்டை பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தவளின் எண்ணம் பெயர் எல்லாம் பொருத்தமாக தான் இருக்கிறது… ஆனால் தாங்கள் இருவரும் இந்த வாழ்க்கைக்கு பொருத்தமானவர்கள் தானா என்ற வினா எழுப்பியது…

Advertisement