Advertisement

அத்தியாயம் – 6

 

 

மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!!

 

  • திருப்பாவை (ஆண்டாள்)

 

 

“என்ன மாமா விளையாடுறீங்களா… எனக்கு எதுக்கு மாமா இப்போ கல்யாணம்… முதல்ல அர்ஷுவுக்கு கல்யாணம் பண்ணுவோம் மாமா… தங்கச்சியை வைச்சுக்கிட்டு யாராச்சும் முதல்ல அண்ணனுக்கு கல்யாணம் பண்ணுவாங்களா…”

 

 

“நீ சொல்றது சரி தான்… தங்கச்சியை வைச்சுக்கிட்டு முதல்ல அண்ணா கல்யாணம் பண்ணிக்க தான் மாட்டாங்க…”

 

 

“அப்புறம் ஏன் மாமா என் கல்யாணத்த பத்தி பேசுறீங்க…”

 

“உங்கம்மா இருந்திருந்தா முதல்ல உன் தங்கச்சிக்கு தான் கல்யாணம் முடிச்சிருப்போம்…”

 

 

“இப்போ மட்டும் என்ன மாமா… நான் அவளுக்கு அண்ணனா எதுவும் செய்ய மாட்டேன்னு நினைக்கிறீங்களா…”

 

 

“கொஞ்சம் என்ன பேசவிடேன்ப்பா…”

 

 

“சொல்லுங்க மாமா…”

 

 

“உங்கம்மா இருந்திருந்தா நான் உன் கல்யாண பேச்சை முதல்ல எடுத்திருக்க மாட்டேன்… ஆனா இப்போ உன் கல்யாணம் தான் முதல்ல முடிக்க வேண்டி இருக்கு…

 

 

“அதுக்கு தான் இப்போ என்ன அவசியம் வந்திச்சுன்னு கேட்குறேன் மாமா…”

 

 

“உன் ஆசைப்படி உன் தங்கைக்கு முதல்ல கல்யாணம் பண்ணுறதாவே வைச்சுக்குவோம்… கல்யாணம் பண்ணுறதோட எல்லாமே முடிஞ்சிடாது… இன்னும் அவளுக்கு உன் சார்பா செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கு…”

 

 

“ஏன் மாமா அர்ஷுவுக்கு என்னால அதெல்லாம் சரியா செய்ய முடியாதுன்னு நினைக்கிறீங்களா…”

 

 

“உன்னால எல்லாமே செய்ய முடியும்… நான் இல்லைன்னு சொல்லவே இல்லை… இந்த வீட்டில அதையெல்லாம் எடுத்து செய்ய ஒரு பொண்ணு இல்லையே…”

 

 

“மாமா எனக்கு புரியலை… என்ன விஷயம்ன்னு நேராவே சொல்லுங்க…”

 

 

“இந்த வீட்டில நீ மட்டும் தான் இருக்க, உன் தங்கச்சி கல்யாணம் ஆகி போனா அவங்க வீட்டில அவளை இங்க தங்கி வர்றத்துக்கு அனுமதிப்பாங்களா… அதெல்லாம் யோசிச்சியா…”

 

 

“முதல்ல கொஞ்ச நாள் தங்கி வர அனுமதிப்பாங்க… அப்புறம் உங்க அண்ணா தனியா தானே இருக்கார்… அவரை பார்க்கணும்ன்னா ஆபீஸ் போய் பாரேன்னு சொல்லுவாங்க…”

 

 

“பேறுகாலத்துக்கு அனுப்பி வைப்பாங்கன்னு நினைக்கிறியா… ஒத்தையா இருக்கான் இவன் என்ன இருந்து பார்க்க முடியும்ன்னு யோசிக்க மாட்டாங்களா…”

 

 

“ஏன் மாமா இதெல்லாம் கூடவா பார்ப்பாங்க…”

 

 

“உனக்கு கல்யாணம் ஆனா நாங்களும் இதெல்லாம் யோசிப்போம்லப்பா…”

 

 

“அதுக்காக நான் முதல்ல கல்யாணம் பண்ணிக்க முடியுமா மாமா… அதுக்கும் நீங்க சொல்ல வர்றதுக்கும் என்ன சம்மந்தம் மாமா…”

 

 

“ஏன்ப்பா முதல்ல உனக்கு கல்யாணம் பண்ணா இந்த வீட்டுக்கு ஒரு பொண்ணு வருவா… இந்த வீட்டிலையும் ஒரு பெண் துணை உன் தங்கைக்கு கிடைக்கும்…”

 

 

“நாளைக்கு அவ கல்யாணம் ஆகி போனா கூட நம்ம அண்ணி இருக்காங்க அண்ணனை பார்த்துக்கன்னு அவளும் நிம்மதியா குடித்தனம் பண்ணுவா… இல்லன்னா உன்னை நினைச்சு அவளும் வருத்தப்பட்டுட்டே தான் இருப்பா…”

 

 

“இது தான் வேணும்ன்னு நீ எதிர்பார்க்கறியா?? அதுவே உனக்கும் ஒரு வாழ்க்கை அமைஞ்சா அவளும் உரிமையா எங்கண்ணன் அண்ணி வீடுன்னு வந்து தங்கிப் போவா…”

 

 

“நான் இதெல்லாம் யோசிச்சு தான் இந்த முடிவெடுத்தேன்… அதுக்கு மேல உன்னிஷ்ட்டம் உன் தங்கச்சியை நீ நினைச்ச மாதிரி பார்த்துக்கணும்ன்னு நினைச்சா நான் சொன்ன மாதிரி செய்…”

 

 

“ஏன் மாமா நீங்க அத்தை எல்லாம் இருக்கீங்களே… பெரியவங்க நீங்க பார்த்துக்க மாட்டீங்களா…”

 

 

“தாயா பிள்ளையா இருந்தாலும் வாயும் வயிறும் வேறன்னு சும்மாவா சொன்னாங்க… உங்கம்மாவை என் வீட்டில நான் தங்க வைச்சுக்க முடியாதா… நான் ஏன் வைக்கலைன்னு நீ யோசிக்கவே இல்லையா…”

 

 

“உன்னை போல எனக்கும் என் தங்கையை பார்த்துக்கணும்ன்னு ஆசை தான்… ஆனா உங்கத்தை பத்தி உனக்கு முழுசா தெரியாதுப்பா… அதுனால தான் நான் என்னோட தங்கச்சியை தனியா ஒரு வீடு பார்த்து குடித்தனம் வைச்சேன்…”

 

“நான் எட்ட இருக்கப்போய் தான் உங்க அத்தை எதுவும் சொல்லாம இருந்தா… இல்லன்னா அவளோட சுயரூபம் வெளிய வந்திருக்கும்…”

 

 

“மாமா இப்போ நீங்க சொல்றதை பார்த்தா எனக்கு கல்யாணம் பண்ணிக்கவே தோணலை மாமா… நான் கல்யாணம் பண்ணி எனக்கும் அத்தை மாதிரி ஒரு பொண்ணு அமைஞ்சு என் தங்கையை நான் நினைச்ச மாதிரி பார்த்துக்க முடியாதோன்னு எனக்கு கவலையா இருக்கு மாமா…”

 

 

“இங்க பாரு நான் என்ன பத்தி சொன்னது உங்கத்தை பத்தி நீ தெரிஞ்சுக்கறதுக்காக தான்… ஊர்ல இருக்க எல்லா பொண்ணுங்களும் அப்படி தான் இருப்பாங்கன்னு நீ நினைக்கிறது தப்பு…”

 

 

“அதுவும் இல்லாம உங்கம்மாவுக்கு எனக்கு முன்னாடியே கல்யாணம் ஆகி வேற வீட்டுக்கு போய்ட்டா… உங்கம்மாவும் உங்கத்தையும் ஒண்ணா ஒரே வீட்டில இருந்து பழக கிடைச்ச சந்தர்ப்பம் ரொம்ப குறைவு…”

 

 

“நீ பிறந்து அர்ஷுவும் பிறந்த பிறகு தான் நான் கல்யாணமே பண்ணிக்கிட்டேன்… ஒரு வகையில அது கூட காரணமா இருக்கலாம்… ஆனா இப்போ அப்படி நடக்க போறது இல்லையே…”

 

 

“உனக்கு கல்யாணம் ஆகிட்டா உன்னோட தங்கையும் உன் பொண்டாட்டியும் ஒண்ணா ஒரே வீட்டில இருப்பாங்க… ஒருத்தரை ஒருத்தர் அவங்களும் புரிஞ்சுப்பாங்க…”

 

 

“ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சவங்க ஒத்துமையா இருப்பாங்க… அது தானே நமக்கு வேணும்… நீ என்னப்பா சொல்ற…” என்று ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேர்ந்தார்… கொஞ்சம் கொஞ்சமாக அவனை பேசியே கரைத்திருந்தார்.

 

 

ஒருவாறு குழம்பி போயிருந்தவன் “உங்க இஷ்டம் மாமா…” என்று அரைமனதாக சம்மதம் தெரிவித்தான்.

 

 

“அப்பாடா எனக்கு இப்போ தான் சந்தோசம்ப்பா… சரி சொல்லு உனக்கு எப்படி பொண்ணு வேணும்… வேலைக்கு போகணுமா… வீட்டில இருக்க மாதிரி வேணுமா…” என்று அவர் அடுக்கினார்.

 

 

“மாமா… அதெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது மாமா… எனக்கு நீங்களும் அர்ஷுவும் பார்த்து எந்த பொண்ணை சொல்றீங்களோ அந்த பொண்ணை நான் கட்டிக்கறேன்… எனக்குன்னு தனியா எந்த விருப்பமும் இல்லை மாமா… எங்களுக்கு நீங்க தான் அப்பா மாதிரி நீங்களே பாருங்க மாமா…”

 

 

“சரிப்பா ரொம்ப சந்தோசம்… அர்ஷும்மா இந்தா இதுல பொண்ணு போட்டோ இருக்கு… நல்ல பொண்ணு… நல்ல சம்மந்தம் நான் ஏற்கனவே எல்லாம் பேசிட்டேன்…”

 

 

“உங்க அண்ணாவை ஒரு வார்த்தை கேட்டுட்டு அப்புறம் அவங்ககிட்ட சொல்லலாம்ன்னு இருந்தேன்… இப்போ அவங்ககிட்ட ஓகே சொல்லிடறேன்…”

 

 

“மாமா என்ன நீங்க இவ்வளவு அவசரப்படுறீங்க… நான் ஓகே சொன்னா நீங்க அப்படி இப்படின்னு ஒரு ஆறு மாசம் ஒரு வருஷம் ஆக்கிடுவீங்கன்னு பார்த்தா… நீங்க என்ன பொண்ணு போட்டோவோட வந்து நிக்கறீங்க…”

 

 

“உன்னோட கல்யாணம் இன்னும் ஒரு மாசத்துல நடக்கணும்ப்பா… அப்போ தான் சரியா இருக்கும்… சரி பொண்ணு பார்க்க எப்போ போகலாம்னு சொல்லு…”

 

 

“பொண்ணோட போட்டோ அர்ஷுக்கிட்ட கொடுத்திருக்கேன்… பார்த்துக்கோ… நான் வந்த வேலை முடிஞ்சுது… மனசு நிறைஞ்சு போச்சு… நான் இப்போவே ஊருக்கு கிளம்பறேன்… பொண்ணு வீட்டுக்கு வேற தகவல் சொல்லணும்…”

 

 

“மாமா நீங்க இருந்து சாப்பிட்டு போறேன்னு சொன்னீங்க…” என்றாள் அர்ஷு…

 

 

“வர்றேம்மா இன்னொரு நாளைக்கு வர்றேன்… எனக்கு ஊர்ல எவ்வளோ வேலை இருக்கு… உன் அண்ணன் கல்யாணம்ன்னா சும்மாவா…” என்றவர் மருமகளை பார்த்து கண்சிமிட்டினார்.

 

 

ஆதியோ இருந்த இடத்தில் அப்படியே அமர்ந்திருந்தான்… அவன் மாமா விடைபெறும் சமயத்தில் கூட தலையை மட்டும் ஆட்டினானே தவிர எழுந்து வழியனுப்ப கூடவில்லை…

 

 

அர்ஷு ராஜராஜனை வழியனுப்ப வெளியே வர “என்னம்மா உன் ஆசைப்படி உங்கண்ணன்கிட்ட பேசிட்டேன்… சந்தோசம் தானேம்மா…”

 

 

“ஏன் மாமா நான் சொன்னதுக்காக மட்டும் தான் நீங்க பேசினீங்களா… நீங்க பேசினதை பார்த்தா உங்க மனசிலையும் அது தான் இருக்குன்னு தெரிஞ்சுது மாமா…”

“நீ ரொம்ப புத்திசாலிடா… சரி உங்கண்ணன் ரொம்ப குழம்பி போயிருக்கான்… பொண்ணோட போட்டோவை காட்டு… நான் போயிட்டு உங்க அத்தை விசாகன் எல்லார்கிட்டயும் சொல்லுறேன்…”

 

 

“சீக்கிரமே போய் பொண்ணு வீட்டில பேசுவோம்… உடனே கல்யாணத்தையும் முடிச்சிருவோம்…” என்றுவிட்டு அவர் கிளம்பி சென்றுவிட்டார்.

 

 

“அண்ணா… என்ன ஒரே யோசனையா இருக்கே… என்ன விஷயம், மாமா இப்படி சொல்லிட்டாரேன்னு கவலையா இருக்கா அண்ணா… இல்லை நீ வேற பொண்ணு யாரையும் லவ் பண்ணுறியா…”

 

 

“அர்ஷிம்மா எனக்கு யார் மேலயும் லவ் எல்லாம் இல்லைடா… அப்படி இருந்தா உன்கிட்டயோ மாமாகிட்டயோ சொல்ல எனக்கு என்ன தயக்கம் இருக்கப் போகுது…”

 

 

“இல்லை…” என்று ஆரம்பித்தவன் “ஒண்ணுமில்லைடா நீ எதுவும் கவலைப்படாதே… நான் பார்த்துக்கறேன்…” என்றவன் வெளியே கிளம்பினான்.

 

 

“அண்ணா இன்னைக்கும் எங்க கிளம்பிட்ட, ஞாயிற்றுக்கிழமை தானே…”

 

 

“எங்க தொழில்ல ஞாயிறு திங்கள் அப்படி எல்லாம் கணக்கில்லைடா… ஒரு கிளையன்ட் பார்க்க போகணும்… பார்த்திட்டு மதியமே வந்திடறேன் சரியா…” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

 

 

வெளியே வந்தவன் ஜோதிஷுக்கு போன் செய்தான்… “ஹலோ… சொல்லுடா… அந்த ராகவனை பார்த்திட்டியா… அக்கௌன்ட்ஸ் எல்லாம் ஓகே தானே…” என்றான் அவன் மறுமுனையில்…

 

 

“அதெல்லாம் அவரை பார்த்த பிறகு சொல்றேன்… இப்போ நீ உடனே வா…”

 

 

“என்னடா விளையாடுறியா… நான் இன்னும் படுக்கையை விட்டே எழலை… நீ வேற போடா…” என்று சலிக்க “இங்க பாரு இப்போ நீ வர்ற…”

 

 

‘ஆமா நான் இவன் லவ்வரு பாரு… உடனே வான்னு சொல்லி அதிகாரம் பண்ணுறான்…’ என்று புலம்பியவன் “டேய் எனக்கு தூக்கம் தூக்கமா வருதுடா…” என்றான்.

 

 

“எனக்கு துக்கம் துக்கமா வருது… சும்மா கிளம்பி வாடா…”

 

 

“என்னடா என்னாச்சு??? அதெல்லாம் போகும் போது பேசிக்கலாம்… நான் கொஞ்ச நேரத்துல அங்க வருவேன்… அதுக்குள்ளே ரெடியா இரு…” என்று சொல்லி போனை வைத்துவிட்டான்…

 

 

‘இந்த சண்டேக்கு அப்படி என்ன கஞ்சத்தனம்… வாரத்துல ஒரு ரெண்டு நாளோ மூணு நாளோ வரக் கூடாதா… ச்சே… இன்னைக்கு இவன் வேற கூப்பிடுறானே… இந்த சண்டேவும் போச்சா…’

 

 

‘போன வாரம் தான் ரிடர்ன்ஸ் பைல் பண்ணணும்ன்னு சொல்லி ஆபீஸ் போனேன்… இன்னைக்கு இவனோட, டேய் ஜோதி உன் நிலைமை இப்படியாடா ஆகணும்…’ என்று அதிகமாக சலித்துக் கொண்டே குளிக்க சென்றான்.

 

 

அவன் குளித்துவிட்டு வரவும் வாசலில் பைக்கை கொண்டு வந்து நிறுத்தினான் ஆதித்யா. ‘அடப்பாவி அதுக்குள்ள வந்திட்டானா… நான் இன்னும் சாப்பிட கூட இல்லையே…’ என்று நினைத்துக் கொண்டு உடைமாற்றிக் கொண்டு வந்தான்.

 

 

“சரிடா கிளம்புவோமா…” என்று நண்பனின் முன்னால் நிற்க “சாப்பிட்டு வாடா…” என்றான் ஆதி.

 

 

அவன் சாப்பிட்டு முடிக்கவும் ஆதி மங்களம் கொடுத்த காபியை குடித்து முடித்திருந்தான். இருவருமாக கிளம்ப “டேய் எங்கடா கூட்டிட்டு போற, அந்த ராகவனை பார்க்கவா…”

 

 

“டேய் நீ மட்டும் போய் பார்க்க வேண்டியது தானேடா… அவர் கொஞ்சம் பேசியே கொல்லுவாரே… எனக்கு உன்னளவுக்கு இந்த விஷயத்துல பொறுமை இல்லைடா…” என்று அவன் பாட்டுக்கு பேசிக் கொண்டே இருக்க ஆதி எந்த பதிலும் சொல்லாமல் அவன் பாட்டுக்கு வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான்.

 

 

பீச்சில் வண்டியை நிறுத்தி பார்க் செய்தவன் அப்போதும் ஏதும் பேசாமலே நடக்க “டேய் நான் எவ்வளவு நேரமா கேட்டுட்டே இருக்கேன், நீ பாட்டுக்கு பதில் சொல்லாம இருந்தா என்னடா அர்த்தம்…”

 

 

“இந்த மொட்டை வெயில்ல பீச்சுக்கு வந்தவன் நீயா தான்டா இருப்ப…” என்று சொல்லிக்கொண்டே நண்பனின் பின்னாலேயே சென்றான் ஜோதிஷ்.

 

 

ஆதி ஒரு படகின் மறைவில் விழுந்திருந்த நிழலில் சென்று அமர “டேய் நான் என்ன உன் லவ்வரா இப்படி படகு மறைவுக்கு கூட்டிட்டு வர்றியேடா…”

 

 

“எதுக்குடா இப்படி பேசிட்டே வர்ற… வந்து இப்படி உட்காரு… உன்கிட்ட சொல்ல தானே கூட்டிட்டு வந்திருக்கேன்…”

 

 

“இதை ஒரு நிழலான இடத்தில வைச்சு சொல்லக் கூடாதா… இப்படி வெயில்ல தான் கூட்டிட்டு வரணுமா…”

 

 

“எனக்கு எதுவும் தோணலைடா… சரி நீ அதை விடு… இப்படி உட்காரு…” என்று அவன் காட்டிய இடத்தில் உட்கார்ந்தவன் மணலின் சூடு பொறுக்காமல் எழுந்து விட்டான்…

 

 

“டேய் சும்மா உட்காருடா…” என்று நண்பன் அதட்ட அவன் கைக்குட்டையை எடுத்து விரித்துக் கொண்டு அமர்ந்தான் ஜோதிஷ்.

 

 

“ஹ்ம்ம் சொல்லுடா அப்படி என்ன தலையே போற முக்கிய விஷயம்ன்னு என்ன இங்க கூட்டிட்டு வந்த…” என்றான் ஜோதிஷ்.

 

 

“டேய் இன்னைக்கு காலையில மாமா வீட்டுக்கு வந்திருந்தார்டா…”

 

 

“உங்க மாமா வர்றது எப்பவும் நடக்கறது தானேடா…”

 

 

“டேய் கொஞ்சம் குறுக்க பேசாம கேளுடா… அவர் வந்தது என் கல்யாண விஷயத்தை பத்தி பேச…”

 

 

“என்னது உனக்கு கல்யாணமா, அப்போ இது ரொம்ப முக்கியமான விஷயம் தான்டா… மச்சி எனக்கு எவ்வளோ சந்தோசமா இருக்கு தெரியுமா… சரி பொண்ணு எல்லாம் பார்த்தாச்சா… இல்லை இனிமே தானா…”

 

 

“அவர் கல்யாண விஷயம் மட்டும் தான் பேச வந்தார்ன்னு நினைச்சேன்…” என்றவன் காலையில் நடந்ததை ஒன்றுவிடாமல் கூறி முடித்தான்.

 

 

“இப்போ என்னடான்னா பொண்ணு போட்டோவை அர்ஷிகிட்ட கொடுத்து எனக்கு ஓகேவான்னு கேட்க சொல்லிட்டு போறார்டா… அந்த மனுஷன் ஆல்ரெடி எல்லாம் பிளான் பண்ணிட்டு தான் இங்க வந்திருப்பார் போல… நான் ஓகேன்னு சொன்னதுமே பொண்ணு போட்டோவை நீட்டுறார்…”

“பொண்ணு எப்படிடா ரொம்ப அழகா…” என்று ஏற்யும் கொள்ளியில் எண்ணெய் வார்த்தான் ஜோதிஷ்.

 

 

“டேய் நீ வேற ஏன்டா… எனக்கு கல்யாணமே பண்ணிக்க விருப்பம் இல்லை… இதுல நான் பொண்ணு எப்படின்னு எப்படி பார்ப்பேன்…”

 

 

“ஏன்டா நீ என்ன கடைசி வரை கல்யாணமே பண்ணிக்காம இருக்க போறியா என்ன??? எப்படியும் பண்ணிக்க தானே போறே…”

 

 

“பண்ணிக்கணும்டா ஆனா இப்போ நான் அதுக்கு தயாரா ஆகலைடா… எனக்கு எதை பத்தியும் யோசிக்க கூட முடியலைடா…”

 

 

“எனக்கு கல்யாணம்ன்னு சந்தோசம் கூட வரலையே… மென்டலா நான் அதுக்கு இன்னும் பிரிபேர் ஆகலைடா…”

 

 

“டேய் அதெல்லாம் தன்னால நடக்கும் விடு… மாமா சொன்னது ரொம்பவே சரி… நீ இப்போ கல்யாணம் பண்ணிக்காம வேற எப்போ பண்ணிக்க போற, எப்படி இருந்தாலும் நீ கல்யாணம் பண்ணிக்க தான் போறே… என்ன அது கொஞ்சம் முன்னாடியே நடக்க போகுது…”

 

 

“அதுனால கண்டதையும் நினைச்சு குழம்பாம கல்யாணத்துக்கு ரெடி ஆகு… எனக்கு பொண்ணை பார்க்கணும்… வா வீட்டுக்கு கிளம்புவோம், அர்ஷுகிட்ட இருக்க போட்டோ வாங்கி பார்ப்போம்…” என்று சொல்லி நண்பனை கிளப்பினான்.

 

 

“நான் வரலை நீ வீட்டுக்கு போ… நான் போய் ராகவன் சாரை பார்த்திட்டு அப்புறம் வீட்டுக்கு வர்றேன்…”

 

 

“டேய் அப்போ நான் எப்படி வீட்டுக்கு போறது… உன்னை நம்பி என் வண்டியை கூட எடுக்காம வந்திருக்கேன்…”

 

 

“அன்னைக்கு நீயும் என்னை இப்படி தானே பாதி வழியில விட்டுட்டு போன… சரி சரி போனா போகுது வண்டியில ஏறு…” என்று ஆதி சொன்னதும் “தேங்க்ஸ்டா மச்சி…” என்றான் ஜோதிஷ்.

 

 

“ரொம்ப சந்தோசப்படாதே போற வழியில உன்னை பஸ் ஸ்டாப்ல விட்டுட்டு போறேன்… அப்படியே பஸ் பிடிச்சு வீட்டுக்கு போ… நான் வந்து உன்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்…”

“டேய் ஏன்டா இப்படி பண்ணுற…” என்று புலம்பியவனின் புலம்பலை காதில் வாங்காமல் சொன்னது போலவே அவனை அடுத்து வந்த நிறுத்தத்தில் விட்டுவிட்டு கிளம்பினான் ஆதித்யா…

 

____________________

 

 

“தேவி கொஞ்சம் உள்ள வா… உன்கிட்ட பேசணும்” என்று அழைத்த ரவியின் அழைப்புக்கிணங்க குந்தவை எழுந்து உள்ளே சென்றாள்.

 

 

“சொல்லுங்க சார்…” என்று வந்து நின்றவளை அவன் விழிகளால் பருக அதை கவனிக்காதவள் அவன் சொல்லப் போவதை குறிப்பதற்காக எடுத்து வந்திருந்த குறிப்பேடை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

 

“ஆமா இப்போ எதுக்கு அந்த நோட், நீங்க என்ன என்னோட பிஏவா… நீங்க ஒண்ணும் பிரைவேட் கம்பனில வேலை செய்யலை… மறந்துட்டீங்களா…”

 

 

“அதுக்கில்லை சார்… நீங்க சொல்ற வேலையை எழுதி வைச்சுக்கிட்டா ஈசியா இருக்கும்… அதுக்கு தான் கொண்டு வந்தேன் சொல்லுங்க சார்…”

 

 

“நான் சொல்ற குறிப்பை நீங்க இந்த நோட்டுல எழுத வேணாம்… உங்க மனசுல பதிஞ்சு வைங்க…”

 

 

“சார்!!!……..”

 

 

“எதுக்கு இந்த பதட்டம், ஆபீஸ் நேரத்துல எல்லாம் எதுவும் சொல்ல மாட்டேன்… ஆனா நான் உன்கிட்ட பேசணும்… எப்போன்னு சொல்லு???”

 

 

“எதுக்கு சார்?? என்ன விஷயமா பேசணும்?? எதுவா இருந்தாலும் இப்போவே சொல்லுங்க சார்…”

 

 

“அதெல்லாம் இங்க சொல்ற விஷயமில்லை தேவி… வெளிய எங்கயாச்சும் போவோம்… அங்க வைச்சு பேசலாம்…”

 

 

“சார்!!!… நீங்க என்னை தப்பா நினைச்சு ஏதோ பேசறீங்க…”

 

 

“தேவி கொஞ்சம் நிறுத்து… ஏதேதோ கற்பனை எல்லாம் பண்ணிக்காதே… தப்பா எதுவும் பேச மாட்டேன்… அதுக்கு நான் உத்திரவாதம் தர்றேன்… ஒரு நல்ல விஷயம் தான் பேசணும்…”

“எதுவா இருந்தாலும் இங்கயே சொல்லுங்க சார்…” என்றாள் உள்ளுக்குள் தோன்றிய படபடப்பை வெளிகாட்டிக் கொள்ளாமல்…

 

 

“தேவி நான் என்ன சொல்லுவேன்னு உனக்கு தெரிஞ்சிருக்கும்… இருந்தாலும் நான் என் வாயால அதை சொல்லணும்ன்னு நினைக்கிறேன்… அதுக்கு இது இடமில்லை…”

 

 

“ப்ளீஸ் தயவு செய்து புரிஞ்சுக்கோ…” என்று கெஞ்சியவன் தன் மேலதிகாரி என்பதை உணர்ந்தவள், ‘எவ்வளவு பெரிய மனிதர் என்னிடம் எதற்கு கெஞ்சிக் கொண்டு நிற்கிறார்…’

 

 

‘ஆனாலும் இவர் என்ன சொல்லுவாரோ தெரியவில்லையே… என்னை விரும்புவதாக சொல்லிவிட்டால் என்ன செய்வது… என்னிடம் அதற்கு பதில் இல்லையே…’

 

 

‘கடவுளே என்னை இந்த இக்கட்டில் இருந்து காப்பாற்று…’ என்று மனமார வேண்டினாள்.

 

 

“என்ன தேவி வேண்டுதலா?? என்னை இவன்கிட்ட இருந்து காப்பாற்றுன்னு, அப்படிலாம் எந்த வேண்டுதலும் வைக்காதே… அது நடக்காது…”

 

 

“சார்!!!….”

 

 

“ஏன்னா நானும் கடவுள்கிட்ட ஒரு வேண்டுதல் வைச்சிருக்கேன்… அது பலிக்க வேண்டாமா… சரி அதெல்லாம் விடு… நான் கேட்டதுக்கு பதில் சொல்லலையே…”

 

 

“சரி சார் பேசுவோம்…”

 

 

“எப்போன்னு சொல்லு தேவி…”

 

 

“வெள்ளிக்கிழமை சாயங்காலம் சார்… நான் காளிக்காம்பாள் கோவில் போவேன் அங்க பார்ப்போம் சார்…”

 

 

“நான் காத்திட்டு இருப்பேன்… எத்தனை மணிக்குன்னு சொல்லு தேவி…”

 

 

“எட்டு மணிக்கு…”

Advertisement