Advertisement

அத்தியாயம் – 5

 

 

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!

 

  • திருநாவுக்கரசர்

 

“டைம் ஆகிடுச்சு சந்துரு… அம்மா தேடுவாங்க… நாம இன்னொரு நாள் பேசுவோம்… நான் வேற இன்னைக்கு பஸ்ல தான் வந்தேன்… வண்டி கூட எடுத்து வரலை… இப்போ கிளம்பினா தான் பஸ் கிடைக்கும்” என்றவள் அவன் கையில் இருந்து அவள் கையை மெதுவாக உருவினாள்.

 

 

ஒரு பெருமூச்சுடன் அவள் கையை பிரிந்தவன் “ஹ்ம்ம் சரி தேவி கிளம்பு… நான் வேணுமின்னா உன்னை ட்ராப் பண்ணவா??”

 

 

“அதெல்லாம் வேணாம்… நானே போய்க்குவேன்… பை சா… சந்துரு…” என்றாள்.

 

 

“இந்த ‘சா’ மட்டும் விட்டுட்டு சந்துருன்னு கூப்பிடு… சரி கிளம்பு தேவி… இன்னைக்கு என்கிட்ட இருந்து தப்பிச்சிட்ட, எப்படியும் நீ எனக்கு தான்…”

 

 

“சந்துரு…”

“இல்லை எப்படியும் நீ என்கிட்ட தான் வரணும், அதை தான் அப்படி சொன்னேன்… அதாவது எப்படியும் நீ ஆபீஸ்க்கு வருவல… அப்போ பேசிக்கலாம்ன்னு சொன்னேன்…”

 

 

அவனிடம் விடைபெற்று அவள் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றாள். வெகு நேரமாக பேருந்து வரவில்லை போலும், அவள் சென்று நின்றதும் வந்த பேருந்தில் ஏறிக் கொண்டாள்.

 

 

கூட்ட நெரிசலில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து ஒருவாறு நடுவில் சென்று நின்றுக் கொண்டாள். ஆங்காங்கே ஓரிருவர் இடித்துக் கொண்டே சென்றனர். அவஸ்தையுடன் நின்றிருந்தவள் ‘ஏன் தான் பஸ்ஸில் வந்தோமோ’ என்று எண்ணிக் கொண்டாள்.

 

 

பேருந்து நான்கு நிறுத்தம் சென்றிருக்க திபுதிபுவென்று ஒரு கூட்டம் உள்ளே ஏறியது. யாருடைய கெட்ட நேரமோ ஆதித்யாவும் குந்தவையும் ஒரே பேருந்தில் ஏறியிருந்தனர்.

 

 

இருவரில் ஒருவர் பார்த்திருந்தாலும் அப்பேருந்தில் ஏறியிருக்க மாட்டார்கள்… கூட்டத்தில் உள்ளே நகர்ந்த ஆதி அவளுக்கு பின்னே வந்து நின்றிருந்தான். வெகு நேரமாக அவன் பக்கத்தில் இருந்த ஒருவன் முன்னில் நின்றிருந்த பெண்களை இடிப்பதும் ஒரு பெண் மாற்றி மற்றொருவர் என்று சீண்டுவதுமாய் இருந்ததை கவனித்தான் அவன்.

 

 

அவனை திரும்பி முறைத்தவன் மரியாதையாக உள்ளே செல்லுமாறு சைகையிலே மிரட்ட அவனும் பயந்து உள்ளே செல்வது போல் நடித்தான். அடுத்த வந்த திருப்பத்தில் பேருந்து வளைய எதேச்சையாக நடந்ததோ என்னவோ ஆதி முழுவதுமாக முன்னில் இருந்தவள் மேல் சாய்ந்துவிட்டான்.

 

 

சட்டென்று அவள் திரும்பி பார்க்க பின்னால் நின்றிருந்தது ஆதி என்பதை உணர்ந்த குந்தவை சற்றும் யோசிக்காமல் அவனை அறைந்துவிட்டாள்.

 

 

“உனக்கெல்லாம் அறிவில்லை… இதுக்குன்னு தான் பஸ்ல வர்றியா… நானும் அப்போல இருந்து பார்த்திட்டு இருக்கேன்… காலை மிதிச்சும் பார்த்திட்டேன்… நீயெல்லாம் திருந்தவே மாட்டியா…

 

 

“வேணுமின்னே இப்படி பண்ணுறியே உன்னை எல்லாம் என்ன தான்டா செய்ய… உங்க வீட்டில பொம்பிளைங்க இல்லை… என்று அவள் பேச கையை உயர்த்தி நிறுத்தினான்.

“போதும் நிறுத்து, உனக்கு எந்த விளக்கமும் நான் சொல்லலை… நான் சொன்னாலும் நீ காது கொடுத்து கேட்க போறதில்லை… என்ன இப்போ நான் வேணுமின்னு இடிச்சேன்னு சொல்ல வர்ற அவ்வளோ தானே…

 

 

“ஆமா அப்படி தான் இப்ப என்ன செய்யப் போறே…

 

 

“சீய்… இவனே ஒத்துக்கறான் பாரு ஆமா அப்படி தான்னு… உன்னையெல்லாம் என்ன செஞ்சா தகும்…

 

 

“அதான் அடிச்சிட்டியே அப்புறம் என்ன… என்றவன் மறுபேச்சு எதுவும் பேசாமல் பஸ்சில் இருந்து இறங்கிச் சென்று விட்டான்.

 

 

ஒரு ஆட்டோ பிடித்து அலுவலகம் வந்து சேர்ந்தவன் பெரும் அவமானமாக உணர்ந்தான். அவனுக்கு நன்றாக தெரிந்தது பேருந்தில் யாரை அவன் மிரட்டினானோ அவன் தான் தன்னை அவள் மேல் தள்ளிவிட்டு மாட்டி வைத்திருக்கிறான் என்று…

 

 

‘ஆனால் அந்த ராட்சசி அத்தனை பேர் முன்னிலையிலும் அடித்து விட்டாளே, என்னை பார்த்தால் பொம்பிளை பொறுக்கி போல் அவளுக்கு தெரிகிறதா… என்று நினைத்து நினைத்து நொந்து போனான் அவன்.

 

 

வெகு நேரமாக ஆதித்யா தனித்து அமர்ந்து கொண்டு யோசனையில் உழல்வதை கவனித்த ஜோதிஷ் அவனருகில் வந்தான்.

 

 

“என்னடா என்னாச்சு?? ஏன் இப்படி உம்முன்னு வந்து உட்கார்ந்திருக்க… என்றதும் என்ன தோன்றியதோ அவன் கண்களில் நீர் துளிர்த்துவிட்டது.

 

 

அவள் அடித்தது அத்தனை பேர் முன்னிலையிலும் அடித்தது அவனுக்கு மிகுந்த மரியாதை குறைவாக இருந்தது… “டேய் ஆதி என்னடா எதுக்கு உன் கண்ணு கலங்குது… என்றவனுக்கு பதட்டமாக இருந்தது.

 

 

“ஒண்ணும்மில்லைடா நீ வேற கற்பனை பண்ணிக்காதே… என்றவன் இருக்கையை விட்டு எழுந்தான்.

 

 

பின்னோடே வந்த ஜோதியோ “இல்லை நிச்சயம் ஏதோ இருக்கு என்னன்னு சொல்லுடா… என்று கேட்க அதற்கு மேல் தாங்க முடியாதவனாக நடந்ததை கூறினான் நண்பனிடம்.

 

“அவ என்ன லூசாடா, எதுக்குடா இப்படி எல்லாம் செய்யறா… ஆனா ஒரு பக்கம் யோசிச்சா அவளை பொறுத்தவரை நீ தான் அவ பின்னாடி இருந்திருக்க நீ வேணுமின்னு வந்து தான் விழுந்தேன்னு நினைச்சு அப்படி செஞ்சிட்டா போல...” என்றான் ஜோதிஷ்.

 

 

“அதுக்காக அடிக்கலாமாடா?? வேற யாரும் இருந்திருந்தா இப்படி செஞ்சிருப்பாளான்னு எனக்கு தெரியலை… அங்க நான் இருந்ததுனால தான் அப்படி செஞ்சான்னு தோணுதுடா??

 

 

“ரொம்ப அசிங்கமா இருக்குடா… உங்க வீட்டில பொம்பிளைங்க இல்லையா?? அப்படின்னு எல்லாம் பேசுறாடா??? மனசுக்கு என்னமோ மாதிரி இருக்குடா?? நான் என்னடா அப்படி தப்பு செஞ்சேன்… என்றவன் வெகுவாக உடைந்து போயிருந்தான்.

 

 

“என் தப்பு தான்டா, ரெண்டு பேரும் ஒண்ணா போன இடத்துல அவசரமா அம்மா வரச் சொன்னாங்கன்னு உன்னை அந்த கிளையன்ட் ஆபீஸ்ல விட்டுட்டு வந்திட்டேன். டேய் நாம வேணும்னா க… கடைக்கு போவோமாடா?? எல்லாம் என்றான் ஜோதிஷ்.

 

 

“ச்சே வேணாம்டா… அம்மா அவ்வளவு தூரம் சொல்லி திரும்ப செஞ்சா அது ரொம்ப தப்புடா… நீ எந்த கவலையும் படாதே… உன் மேல எந்த தப்புமில்லை… நான் தப்பு செய்யாதப்பவே என்னை தப்பா நினைச்சு ஒருத்தி அடிச்சுட்டா…

 

 

“நான் தண்ணி அடிச்சு அதை அவ பார்த்தான்னு வை, அவளோட நினைப்பு எல்லாமே ரொம்ப சரின்னு முடிவே பண்ணிடுவா… கண்டிப்பா ஒரு நாள் அவளுக்கு புரியும் நான் தப்பு பண்ணலைன்னு… அவளுக்கு நான் யாருன்னு புரிய வைக்கிறேன்…

 

 

“டேய் நீ பேசுறது எல்லாம் பார்த்தா எனக்கு பயமா இருக்குடா…

 

 

“எதுக்குடா அவகிட்ட போய் வம்பு பண்ணுவேன்னு பயப்படுறியா… அதெல்லாம் பண்ண மாட்டேன்… அப்படி பண்ணனும்னு நினைச்சிருந்தா அவ என்னை அடிச்சப்பவே அவளுக்கு திருப்பி கொடுத்திருப்பேன்…

 

 

“ஒண்ணுமில்லைல… நீ இப்போ நார்மல் ஆகிட்ட தானே… என்றவனிடம் “ஒண்ணுமில்லைடா நான் நல்லா தான் இருக்கேன், நீ கவலைப்படாதே என்று நண்பனுக்கு சொன்னவன் நெஞ்சில் இன்னமும் அந்த அவமானம் கொடுத்த வலி இருக்கத்தான் செய்தது.

 

உள்ளே உள்ளதை மறைத்துக் கொண்டு சிரித்து பேசி வீட்டிற்கு கிளம்பினான்.

குந்தவைக்கோ அவனை அடித்ததை பற்றி எந்த கவலையும் தோன்றவே இல்லை. மாறாக அவனை போலீசில் ஒப்படைத்திருக்க வேண்டும் என்றே தோன்றியது.

 

 

வெகு நேரமாக பின்னால் ஒருவன் இடிப்பதும் சாய்வதும் என்றிருக்க முதலில் அவன் காலை நன்றாக மிதித்து வைத்தாள். எதற்கும் அடங்காதவன் மேலேயே வந்து மொத்தமாக விழுந்ததால் அவள் கோபம் அதிகமாகியது.

 

 

மேலே விழுந்தவனை பின்னால் திரும்பி பார்க்க அங்கு ஆதியை கண்டதும் அவள் ரௌத்திரமானாள். அதற்கு பின் வந்த கோபத்திற்கு அவனை அடித்துவிட பதிலுக்கு அவனும் பேசிவிட்டு இறங்கி சென்றதும் இப்போது நடந்தது போல் அவள் கண்முன் வந்து போனது.

 

 

அவளின் நல்ல எண்ணத்தை கலைப்பதற்காகவே அவன் வந்து தொலைகிறான் என்று அவளுக்கு ஆத்திரம். ஏனெனில் அவளுக்கு ரவியை பற்றி யோசிக்க வேண்டி இருந்தது.

 

 

மொட்டைமாடியில் தனியே வந்து அமர்ந்தவளின் எண்ணத்தில் முதலில் ஆதி வந்தது தான் அவளுக்கு கடுப்பை கொடுத்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவனை பற்றிய எண்ணத்தை ஒதுக்கியவள் ரவியை பற்றி யோசித்தாள்.

 

 

கல்லூரியில் கொஞ்சம் கூட யோசிக்காமல் அவனை தப்பாக நினைத்து அடித்ததையும் மறந்து அவளுடன் நன்றாக பேசும் அவனை பற்றி அவளால் தப்பாக எண்ண முடியவில்லை.

 

 

அவனின் பெருந்தன்மை ஆதிக்கு இல்லை என்று அப்போதும் ஆதியுடனே அவனை சேர்த்து யோசித்துக் கொண்டிருந்தாள்.

 

 

மற்ற எல்லா ஊழியர்களையும் விட அவளின் மேல் அவன் தனி கரிசனமாக இருந்தது முதலில் சங்கடமாகவே உணர்ந்திருந்தவளுக்கு நாளாக அந்த கரிசனம் அவளுக்கு பிடித்திருந்தது.

 

 

சற்று கர்வமாகவும் இருந்தது, மற்ற பெண்களை ஏறெடுத்தும் பார்க்காதவன் தன்னை பார்ப்பதால் வந்த கர்வமாக கூட அது இருக்கலாம்.அவள் அதிகம் யாரிடமும் பழகியதில்லை, எப்போதும் அவளுடன் வானவனோ, வானதியோ உடனிருந்ததால் அவளுக்கும் அது பெரிதாக தோன்றியதில்லை.

கல்லூரியில் கூட அவளிடம் மற்றவர்கள் நெருங்க தயங்கினர், காரணம் முதல் நாளே அவள் பேராசிரியருக்கும், சீனியர் மாணவனுக்கும் கொடுத்த அறை மற்றவர்களை அவளிடம் நெருங்க விடாமல் செய்தது.

 

 

அப்போதெல்லாம் அதை பற்றி அவள் பெரிதும் கவலை கொண்டதில்லை. உடனிருந்த ஒரு தோழி மட்டுமே அவளை புரிந்தவள். சீனியர் மாணவன் ஒருவனும் அவள் தோழியும் காதலிப்பதால் அவன் எப்போதும் அப்பெண்ணை சுற்றிக் கொண்டு அலைவான்.

 

 

அப்போதெல்லாம் தன்னையும் ஒருவன் இப்படி சுற்றி வருவானா என்ற எண்ணம் அவளுக்கு தோன்றியதுண்டு… அவளுக்கு காதல் மேல் பெரிதாக நம்பிக்கை இல்லை என்றாலும், தன்னை யாரும் பார்க்கவில்லை தனக்கென்று யாருமில்லை என்ற எண்ணம் அவளுக்கு இல்லாமலில்லை.

 

 

அதனால் தானோ என்னவோ ரவி அவளை செல்லமாக அழைத்ததை கண்டிக்காதவள் மனதிற்குள் அதை ரசித்துக் கொண்டாள். இன்று கோவிலில் கூட ஏதோ சொல்ல வந்தானே நாம் தான் தடுத்துவிட்டோம் என்று அதை பற்றிய சிந்தனை ஓடியது அவளுக்கு.

 

 

ரவியை தனக்கு பிடித்திருக்கிறதா, பிடிக்கிறது என்றால் ஏன் என்று தன்னையே பலமுறை கேட்டுக் கொண்டாள். அதற்கு பதில் தான் எதுவுமே கிட்டவேயில்லை.

 

 

ரவியை அவளுக்கு பிடிக்காமலில்லை, ஆனால் அது காதல் என்று அவள் மனமே ஒத்துக்கொள்ளவில்லை… ரவி தன்னிடம் காதல் சொன்னால் என்ன செய்வது என்ன பதில் சொல்வது என்ற குழப்பம் அவளுக்கு வந்திருந்தது.

 

 

ஆனால் அவன் தன்னுடன் பேசுவது தனக்கு பிடித்திருக்கிறது, ஒரு வேளை அவன் அவளை சுற்றி வருவதால் அப்படி தோன்றுகிறதோ… லேசாக தலையை வலிப்பது போல் தோன்றியது.

 

 

எந்த முடிவும் எடுக்க முடியாமல் அவளே கீழே இறங்கி செல்ல மாடியில் இருந்து குழப்பத்துடன் வருபவளை யோசனையுடன் பார்த்தான் வானவன். அவன் தந்தை இளங்கோவனிடம் ஏற்கனவே அவன் சில விஷயங்களை பகிர்ந்திருந்தான்.

 

 

அவரும் இதோ அதோ என்று தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறாரே என்று யோசித்தவன் அவரின் அறையை நாடிச் சென்றான்.

 

ஒரு மாதத்திற்கு மேல் சென்றிருக்க ஆதி இப்போது தான் கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தான். அன்று இன்கம்டாக்ஸ் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய வேலை இருந்ததால் அவன் கிளம்பிக் கொண்டிருந்தான்.

 

 

அவனருகில் வந்த ஜோதிஷ் தனக்கும் அங்கு வேலையிருப்பதால் தானும் உடன் வருவதாக கூற நண்பனை வண்டியில் ஏற்றிக் கொண்டு அவனும் அங்கு சென்றான்.

 

 

ஏனோ ஜோதிஷுக்கு அந்த பெண்ணை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அவனுக்கு அவளை சரியாக ஞாபகமில்லை. கல்லூரில் அவள் பாட்டுக்கு வந்தாள், ஆதியை அடித்துவிட்டு மாயமாக சென்று விட்டாள்.

 

 

அவன் அவளை சரியாக பார்த்ததில்லை என்பதால் அவளை பார்க்க நினைத்தான், அவளிடம் உண்மையை சொல்லி புரிய வைக்க நினைத்தான். நினைப்பது எல்லாம் நடந்துவிடுமா என்ன???

 

 

இருவருமாக அங்கு சென்று சேரவும் ஆதி யாருக்கு ரிவைஸ்டு ரிடர்ன் பைல் பண்ண வேண்டியிருந்ததால் அதை பற்றி விசாரித்துக் கொண்டு அந்த வேலையை முடித்துவிட்டு வர ஜோதிஷும் அவனுடன் இணைந்துக் கொண்டான்.

 

 

“என்னடா இங்கயே இருக்க, நீ ஏதோ வேலையிருக்குன்னு தானே வந்தே… வந்த வேலையை பார்க்காம என் கூட என்ன பண்ணிட்டு இருக்க… என்று கேட்ட ஆதிக்கு பதில் சொல்ல முடியாமல் திருதிருவென விழித்தான் ஜோதி.

 

 

“இல்லைடா அது வந்து அந்த மேடம்க்கு இப்போ தான் போன் பண்ணேன், அவங்க வெளிய ஒரு வேலையா கிளம்பி போய்ட்டாங்களாம், இன்னொரு நாள் வந்து பார்க்க சொல்றாங்க… என்று ஏதேதோ சொல்லி சமாளித்தான்.

 

 

“எந்த கிளையன்ட்க்காக பார்க்க வந்தேடா?? என்று அடுத்து ஒரு கேள்வியை அவன் வைக்க ‘அடேய் ஏன்டா இப்படி கேள்வி கேட்டு என்னை சிக்க வைக்குற…அவ்வ்வ்வவ்வ்வ் என்று கூறாத குறையாக வடிவேல் போல் தன் மனசுக்குள் கவுன்ட்டர் கொடுத்துக் கொண்டிருந்தான் ஜோதிஷ்.

 

 

நல்லவேளையாக அப்போது ஜோதிக்கு தெரிந்த ஒருவர் வர ஆதியிக்கு பதில் சொல்லாமல் தப்பித்தான் அவன். என்ன பதில் சொல்வது அவன் தான் யாரையும் பார்க்க வரவில்லை…

 

 

‘அவனை அடித்த பெண்ணை தான் பார்க்க வருகிறேன் என்று சொன்னால் நண்பன் உடன் வர விட்டிருப்பானா என்ன… என்று யோசித்துக் கொண்டான்.

 

 

வந்த வேலை முடிந்து போக இருவருமாக அந்த ப்ளாக்கை கடந்து வந்துக் கொண்டிருக்க ஆதி சட்டென்று “ஜோ நீ இப்படி போ, நான் அந்த கேட் வழியா வர்றேன்…நீ மெயின் ரோட்ல நில்லு… என்றுவிட்டு போய்விட்டான்.

 

 

‘இவன் என்ன லூசா, என்னை இப்படி பாதியில அத்துவிட்டு போறான்… ஒருவேளை அந்த பொண்ணு வந்திருப்பாளோ… என்று யோசித்துக் கொண்டே அவன் திரும்ப அவனை கடந்து மூன்று பெண்கள் சென்றார்கள்.

 

 

‘ஒரு வேளை இந்த பொண்ணுங்கள்ள அவ இருப்பாளோ… அதான் இவன் தலைதெறிக்க ஓடுறானோ… அவ பேரு என்னமோ சொன்னானே… ஹான் தேவி… கூப்பிட்டு பார்ப்போம்… என்று எண்ணியவன் “தேவி… என்றழைத்தான்.

 

 

அவனை கடந்து சென்ற பெண்களில் ஒருத்தி நின்று அவனை திரும்பி பார்த்தாள்… அவனை முறைத்துக் கொண்டே அவனருகில் வந்தாள். “நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா??”

 

 

“நான் போற வழியில எல்லாம் வந்து ஏன் இப்படி தொந்திரவு பண்ணறீங்க… எங்க அவன் எனக்கு பயந்து ஓடி ஒளிஞ்சுகிட்டானா… இல்லை உன்னை வைச்சு எனக்கு டார்ச்சர் கொடுக்க பார்க்கிறானா…”

 

 

“நான் என்ன பண்ணிட்டேன்னு இப்படி அவன் என்னை துரத்தி துரத்தி தொந்திரவு கொடுக்கறான்… அன்னைக்கு என்னடான்னான்னு என்னை இடிச்சு தள்ளிட்டு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம போறான்… பஸ்ல போனா கூட அவனால எனக்கு நிம்மதி இல்லை…”

 

 

“அவன் என்ன மிருகமா, ஒரு மனுஷனுக்கு இப்படி எல்லாம் பழிவாங்குற வெறி இருக்குமா??”

 

 

“டேய் இங்க என்னடா இவ கூட பேசிட்டு இருக்க, வா போகலாம்…” என்று வேகமாக ஜோதிஷின் அருகில் வந்த ஆதித்யா அவனை இழுத்துக் கொண்டு போனான்.

 

 

“ஏய் என்ன நான் கேட்டுட்டே இருக்கேன், நீ பாட்டுக்கு வந்த… அவனை இழுத்துட்டு போற…” என்று ஏகவசனத்தில் அவள் ஆரம்பிக்க அவளருகில் கோபமாக வந்தவன் “இங்க பாரு, இது கவர்மென்ட் ஆபீசா போச்சு…”

“அதுனால உன்னை விட்டுட்டு போறேன்… அன்னைக்கு நீ செஞ்ச காரியத்துக்கு நீ மட்டும் தனியா சிக்கியிருந்த உன்னை என்ன செஞ்சிருப்பேன்னு எனக்கே தெரியாது…”

 

 

“என்னடி சொன்ன நான் மிருகமா??? என்னை நீ தான் மிருகமா மாத்திட்டு இருக்க… போனா போகுதுன்னு பொறுத்து போயிட்டு இருக்கேன்… எப்போமே இப்படி இருக்க மாட்டேன்…”

 

 

“உன் சங்காத்தமே வேணாம்ன்னு தானே நான் பாட்டுக்கு போயிட்டு இருக்கேன்… இனி என் வழிக்கு வந்த அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்… டேய் வாடா போகலாம்” என்று அவளிடம் உறுமிவிட்டு சென்றுவிட்டான்.

 

 

‘இவளால என் நிம்மதியே போச்சு…’ என்று அங்கலாய்த்துக் கொண்டு வண்டியில் ஏறி அமர்ந்தான். “நீ ஏன்டா அவகிட்ட போய் பேச்சு கொடுத்த, அவளெல்லாம் நாம சொல்றதை காது கொடுத்து கேட்கிற ஆளா…”

 

 

“என்னை கண்டாலே எண்ணெய்ல போட்ட கடுகு மாதிரி தையத்தக்க தையத்தக்கன்னு குதிப்பா… இவளுக்கு என்ன தான்டா பிரச்சனை, இவளை ஏன் திரும்ப திரும்ப நான் பார்க்கணும்…”

 

 

“இவளை நினைச்சாலே எனக்கு எரியுது… என்னையவே எதுக்கு டார்கெட் பண்ணுறான்னு தெரியலையே…” என்று வழியெல்லாம் புலம்பி கொண்டு வந்தவனின் நிலை ஜோதிஷுக்கும் புரிந்தது.

 

 

நண்பன் இதுவரை புலம்பியதில் எந்த தப்புமில்லை என்று. என்னையே பேசவிடாமல் அவள் தன்பாட்டுக்கு பேசி கொண்டிருந்தவள் ஆதியை மட்டும் சும்மா விட்டிருப்பாளா என்ன என்று அவனும் அதையே தான் யோசித்துக் கொண்டு வந்தான்.

____________________

 

குந்தவையின் தந்தை இளங்கோவன் அவர் அறையில் அமர்ந்திருக்க அவரை நாடி வந்து சேர்ந்தான் வானவன். கண்முன் நிழலாட நிமிர்ந்து பார்த்தார் அவர். “என்ன வானவா என்ன விஷயம் என்கிட்ட எதுவும் பேசணுமா…”

 

 

“என்னப்பா என்ன விஷயம்ன்னு கேட்கறீங்க… அக்கா விஷயமா நான் சொன்னது என்னாச்சுப்பா… அவளுக்கு சீக்கிரம் ஒரு மாப்பிள்ளை பாருங்கப்பா… காலாகாலத்துல அவளுக்கு கல்யாணம் பண்ணிடலாம்ப்பா… நானும் இந்த வருஷத்தோட படிப்பு முடிக்கறேன்…”

“இனி நான் படிச்சுக்கிட்டே என்னோட மேல் படிப்பை தொடர்றேன்ப்பா… நீங்க காசு இல்லைன்னு எதுவும் யோசிக்கறீங்களாப்பா…”

 

 

“டேய் வானவா உங்கக்கா பத்தி நீ இவ்வளவு யோசிக்கும் போது நான் யோசிக்க மாட்டேனாப்பா… எனக்கும் என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ண வைக்கணும்ன்னு தான் ஆசை…”

 

 

“அம்மாகிட்டயும் சொல்லிட்டேன்… நம்ம சொந்த பந்தத்துல எல்லாம் சொல்லி வைச்சிருக்கேன்ப்பா… நல்ல இடமா வந்ததும் முடிச்சிடலாம்ன்னு இருக்கேன்… நீ அவசரப்பட்டா எப்படி…”

 

 

“நாளைக்கேவா மாப்பிள்ளை கிடைச்சு அவளை கட்டிக் கொடுத்திட முடியும்… எல்லாத்துக்கும் கால நேரம் கூடி வரணும்ப்பா…”

 

 

“எல்லா நேரமும் என் பொண்ணுக்கு கூடி வந்திடுச்சு…” என்றவாறே அந்த அறைக்குள் நுழைந்தார் மணிமேகலை…

 

 

“என்னம்மா என்ன சொல்றீங்க, அக்காவுக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சா…” என்றான் வானவன் ஆவலுடன்.

 

 

“டேய் அவ்வளவு அவசரமாடா உனக்கு… ஒரு வேளை அடுத்து உன் ரூட் கிளியர்ன்னு இப்படி தீயா வேலை செய்யுறியா…” என்று மகனை கிண்டலடித்தார் அவர்.

 

 

“என்ன மேகலை என்ன நேரம் கூடி வந்திருச்சு…” என்றார் இளங்கோவன்.

 

 

“நம்ம பொண்ணுக்கு கல்யாண நேரம் கூடி வந்திருக்குங்க… ஜாதகம் பார்த்தேன் அவளுக்கு கல்யாணம் யோகம் வந்திருக்கான்னு தெரிஞ்சுக்க… அவங்களும் இது தான் நல்ல நேரம்ன்னு சொல்லிட்டாங்க…”

 

 

“அவளோட கல்யாணத்தை இந்த வருஷம் முடிக்கலைன்னா இன்னும் நாலு வருஷம் தள்ளிப் போகிடுமாம்… அப்புறம் அவர் இன்னொன்னும் சொன்னார் நம்ம பொண்ணுக்கு மாப்பிள்ளை வீடு தேடி வரும்ன்னு…”

 

 

“நாம தேட தேவையில்லைன்னு சொன்னார்… கடவுளே அவர் வாக்கு பலிக்கட்டும்…” என்று சந்தோஷித்துக் கொண்டிருந்தார் அவர்.

 

 

“அம்மா அவர் சொல்லிட்டார்ன்னு நாம சும்மா இருக்க வேண்டாம்மா நம்ம பங்குக்கு நாமளும் மாப்பிள்ளை தேடுவோம்…” என்றான் வானவன் ஒரு முடிவுடன்.

 

 

“இவனொருத்தன் எதுக்கு இவ்வளவு அவசரம் காட்டுறான் அவ விஷயத்துல…” என்றாவாறே செல்லும் மகனை பார்த்து சொன்னவர் கணவரின் அருகில் அமர்ந்தார்.

 

 

“வீட்டில ஒரு ஆம்பிளை பிள்ளை பொறுப்பா கூடபிறந்தவ கல்யாணத்தை பத்தி பேசுறான்னா எதுவும் யோசிக்காம பேசுவானா… அவன் இவ்வளவு பொறுப்பா இருக்கான்னேன்னு நானே நிம்மதியா இருக்கேன்…”

 

 

“நீ எதுக்கு மேகலை அவனை குறை சொல்லிட்டு… ஒரு ஒரு வீட்டில அப்பனும் பிள்ளையும் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி அடிச்சுக்கறானுங்க… முறைச்சுக்கறானுங்க…”

 

 

“நம்ம புள்ளை நம்மை மதிச்சு குடும்பத்தை புரிஞ்சு பேசுறான்… இதை விட ஒரு மனுஷனுக்கு வேற என்ன வேணும்…” என்றவர் மகனின் பொறுப்பில் அகமகிழ்ந்து மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தார்.

 

____________________

 

 

“அர்ஷிம்மா…” என்று குரல் கொடுத்துக் கொண்டே வந்தார் ராஜராஜன். “மாமா எப்போ வந்தீங்க… வாங்க வாங்க… உட்காருங்க… அண்ணா மாமா வந்திருக்காங்க…” என்றாள் அர்ஷிதா…

 

 

“வாங்க மாமா… எப்படி இருக்கீங்க… அத்தை… விசாகன் எல்லாம் எப்படி இருக்காங்க…” என்று கேட்டுக் கொண்டே அவரருகில் வந்தமர்ந்தான் ஆதித்யா…

 

 

“எல்லாரும் நல்லாயிருக்காங்க… அர்ஷிம்மா நீ இங்க வா, எனக்கு காபி எல்லாம் அப்புறம் போட்டுக்கலாம்… நான் இன்னைக்கு இருந்து சாப்பிட்டு தான் போவேன்…”

 

 

“இப்போ ஒண்ணும் அவசரம் வேண்டாம்…” என்று சொல்லி அவளை அழைத்து தன்னருகே அமரவைத்துக் கொண்டார்.

 

 

“என்ன மாமா எதுவும் முக்கியமான விஷயமா… நீங்க பேசுறது எல்லாம் பார்த்தா அதுக்கு தான் வந்திருக்க மாதிரி இருக்கு…” என்றான் ஆதித்யா…

 

 

“ரொம்ப சரி தான்ப்பா… ஒரு முக்கியமான விஷயமா தான் நான் இங்க வந்தேன்… அதை நீ கிளம்ப முன்னாடி சொல்லணும்ன்னு தான் வந்தேன்…”

 

 

“என்ன விஷயம் மாமா சொல்லுங்க…”

 

 

“எல்லாம் கல்யாண விஷயம் தான்பா…”

 

 

“கல்யாணமா அதுக்கு இப்போ என்ன மாமா அவசரம்… அர்ஷு இன்னும் படிப்பு முடிக்கலையே… கடைசி வருஷமாச்சே… அது முடிச்சதும் அவளுக்கு முடிக்கலாம் மாமா…”

 

 

“உன் தங்கச்சிக்கு நீ சொன்ன மாதிரி முடிப்போம்ப்பா… நான் பேச வந்தது உன் கல்யாணத்தை பத்தி…”

 

 

“என்னது எனக்கு கல்யாணமா???”

 

____________________

 

 

ரவியின் வீட்டிற்கு பெங்களூரில் இருந்து அவன் அன்னை வந்திருந்தார். “என்னப்பா இன்னைக்கு எங்க கிளம்பிட்ட, இன்னைக்கு உனக்கு ஆபீஸ் லீவ் தானே…”

 

 

“ஆமாம்மா லீவ் தான் ஆனா எனக்கு வெளிய ஒரு வேலை இருக்கும்மா… நீங்க வீட்டில இருங்க… நான் வேலையை முடிச்சுட்டு சீக்கிரம் வந்திடறேன்ம்மா…”

 

 

“ஒரு பத்து நிமிஷம் இப்படி உட்காருப்பா… அப்புறம் வெளிய போகலாம்… நீ சரின்னு சொல்லிட்டா நானும் அதுக்கு வேலையை பார்ப்பேன்ல…”

 

 

“எதுக்கும்மா சரின்னு சொல்லணும்… என்னம்மா விஷயம்…”

 

 

“எப்பவும் பேசறது தான்ப்பா… எல்லாம் உன் கல்யாண விஷயம் தான்… நீ சரின்னு ஒரு வார்த்தை சொல்லிட்டா நான் மேற்கொண்டு நடக்க வேண்டியதை பார்ப்பேன்…”

 

“அம்மா உங்க ஆசை சீக்கிரமே நடக்கும்… நீங்க எனக்கு பொண்ணு தேடியெல்லாம் அலைய வேண்டாம்… எனக்காக நான் சொல்ற பொண்ணை நீங்க பொண்ணு கேட்டு போகணும்…”

 

 

“யாருப்பா அந்த பொண்ணு???”

 

 

“சீக்கிரமே சொல்றேன்ம்மா….”

Advertisement