Advertisement

அத்தியாயம் – 4

 

 

இருண்ட மேகஞ்சுற்றிச் சுருண்டு சுழியெறியுங்

கொண்டையாள் குழை
ஏறி யாடிநெஞ்சைச் சூறையாடும் விழிக் 

கெண்டையாள்
திருந்து பூமுருக்கி னரும்பு போலிருக்கும்

இதழினாள் வரிச்
சிலையைப் போல்வளைந்து பிறையைப் போலிலங்கு

நுதலினாள்

 

இருவருமாக ஓரோர் சிந்தனையில் அலுவலகம் வந்து சேர்ந்தனர். அமைதியாகவே அவரவர் வேலையை பார்க்க சட்டென்று நினைவு வந்தவனாய் ஜோதி மற்றவனை நோக்கியவன் “ஆதி…” என்றழைத்தான்.

 

 

“ஹ்ம்ம் சொல்லுடா… என்ன விஷயம்…”

 

 

“நான் ஒண்ணு சொன்னா கேட்பியாடா??”

 

 

“நீ என்ன சொல்லப் போறன்னு எனக்கு தெரியும்… அந்த பொண்ணு வழிக்கே நான் போக மாட்டேன்… அவ குமரிக்கு வந்தா நான் காஷ்மீர்ல இருப்பேன் போதுமா…”

 

 

“நான் ஒண்ணும் அப்படி எல்லாம் செய்ய சொல்லலை… எதுக்கு வீணா வம்பு அதான் சொன்னேன்…”

 

 

“நானும் அதுக்கு தான்டா சொல்றேன்… எதுக்கு வீண் வம்பு… அவ சங்காத்தமே வேணாம்… அவளை முதல் நாள் பார்த்தும் என் நிம்மதி போச்சு… இத்தனை வருஷம் கழிச்சு பார்த்தும் என் நிம்மதி போச்சு…”

 

 

“அவ எக்கேடு கெட்டா எனக்கென்ன, நான் என் வேலையை மட்டும் பார்க்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்…”

 

 

‘இவ நிஜமா சொல்றானா… இல்லை வேற மாடுலேஷன் எதுவும் இருக்கா… நம்பலாமா வேணாமா… நம்ம நண்பனாச்சே நம்புவோம்…’ என்று நினைத்துக் கொண்டான் ஜோதி.

 

 

அந்த வார சனிக்கிழமை மாலை வானதி அதே தெருவில் நான்கு வீடு தள்ளியிருக்கும் அவள் தோழியின் வீட்டிற்கு சென்றாள்… ஆதியின் வீட்டு எதிர்வீட்டில் தான் அவள் தோழி ரஞ்சிதா இருக்கிறாள்…

 

 

“ஹாய்டி ரஞ்சி…” என்று வாசலில் நின்றிருந்தவளை பார்த்து வானதி கத்த “வாடி குரங்கே… இப்போ தான் உனக்கு எங்க வீட்டுக்கு வர்றதுக்கு வழி தெரியுதா…”

 

 

“எத்தனை தரம் வாடி வாடின்னு சொல்லியிருக்கேன்… நான் உங்க வீட்டுக்கு எத்தனை தரம் வந்திருப்பேன்… சரி சரி உள்ள வா… அம்மா வானதி வந்திருக்கா…” என்று விடாமல் படாபட்டென்று பேசிக் கொண்டிருந்தாள்.

 

 

“கொஞ்சம் மூச்சு வாங்கேன்டி லூசி… இப்படி வாய் ஓயாம பேசிட்டே இருந்தா நெஞ்சு அடைச்சுக்க போகுது…”

 

 

“அதெல்லாம் அடைக்காது உள்ளே வா… என்ன சாப்பிடுற…”

 

 

“உன் வீட்டுக்கு சாப்பிட தான் நான் வந்தேனா… வா கொஞ்சம் பேசிட்டு இருக்கலாம்…”

 

 

“ஆமாடி எனக்கும் உன்கிட்ட பேசணும், வா நாம மேல போய் தனியா பேசுவோம்…” என்று கிசுகிசுத்தவள் “அம்மா நாங்க கொஞ்ச நேரம் மேல போய் பேசிட்டு இருக்கோம்… அப்படி துணியை மடிச்சு எடுத்திட்டு வந்திறேன்மா…”

 

“நீ எங்களுக்கு எதுவும் செஞ்சி வைம்மா நாங்களே கீழே வந்து சாப்பிட்டுக்கறோம்… நீ பாட்டுக்கு முட்டி வலியோட மாடிக்கு வந்திடாதே… அப்புறம் நான் தான் தைலம் தேய்ச்சு விடணும்…”

 

 

“அடிப்போடி சும்மா தொணதொணன்னு… எப்படிம்மா இவளை காலேஜ்ல வைச்சு சமாளிக்கறீங்க…” என்றுவிட்டு அவளின் அன்னை உள்ளே சென்றுவிட்டார்.

 

 

ரஞ்சிதா வானதியை இழுத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு விரைந்தாள். வானதி கேட்க வந்த விஷயத்தை அவள் கேளாமலே ரஞ்சிதாவே அவள் வாயால் சொல்ல ஆரம்பித்தாள்.

 

 

“ஹேய் லூசு ஒரு விஷயம் சொல்றேன் சொன்னேன்… என்னன்னு கேட்க மாட்டியா??”

 

 

“என்னடி என்ன விஷயம் சொல்லு??”

 

 

“எதிர் வீட்டில ஸ்மார்ட்டா ஒரு பையன் இருக்கான்டி… அவங்க ரொம்ப வருஷமா இங்க தான் இருக்காங்க போல… எதிர்வீட்டிலயே இருந்திருக்கேன்… இவ்வளோ நாளா நான் அவனை பார்க்காமலே இருந்திருக்கேன் பாரேன்…”

 

 

“இத்தனைக்கும் அவனோட தங்கச்சி கூட நான் நல்லாவே பேசுவேன்டி… பாவம் அவங்க அப்பா இவங்க சின்ன வயசா இருக்கும் போதே இறந்து போய்ட்டார் போல…”

 

 

“அம்மாவும் இப்போ தான் ஒரு ஆறேழு மாசம் முன்னாடி இறந்து போயிருக்காங்க… நாங்க இந்த ஏரியாவுக்கு வந்தே ஆறு மாசம் தானே ஆகுது… நீங்க வர்றதுக்கு கொஞ்ச நாள் முன்னாடி தானே நாங்க வந்தோம்…”

 

 

“அதான் சரியா பார்க்காம போயிட்டேன் போல… இப்போ தான் ஒரு வாரம் முன்னாடி அவனை பார்த்தேன்… ஆடிட்டரா இருக்கானாம்… செம பார்ட்டில அவன் மட்டும் ஓகே சொல்லிட்டா எப்படி இருக்கும்…”

 

 

“அடியே இதை சொல்ல தான் இன்னை கூப்பிட்டியா…”

 

 

“வேற எதை சொல்ல உன்ன கூப்பிட்டாங்களாம்… இப்போ காலேஜ் கடைசி வருஷம் வந்தாச்சு… அடுத்து மேரேஜ் தானே… அதான் இப்போவே சிந்திக்க ஆரம்பிச்சுட்டேன்… ஆடிட்டர்ன்னா சும்மாவா…”

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே எதிர் மாடியில் அர்ஷிதா துணிகளை எடுக்க மாடிக்கு வந்திருக்க ரஞ்சிதா அவளை பார்த்து கையை ஆட்டினாள்… பதிலுக்கு அவளும் ஆட்டினாள்…

 

 

“அர்ஷி இவ என்னோட பிரண்ட் வானதி…” என்றவள் வானதியை பார்த்து “வானதி அவ தான் அர்ஷிதா நம்மோட செட் தான், நம்ம டிகிரி தான் அவளும் ஆனா வேற காலேஜ்…” என்று சொல்ல பதிலுக்கு இருவரும் ஹாய் சொல்லிக் கொண்டார்கள்…

 

 

ரஞ்சிதாவிடம் சாதாரணமாக கேட்பது போல் அவளறிந்த தகவலை திரட்டிக் கொண்டு தோழியின் வீட்டிலிருந்து வெளியேறினாள் அவள். எதிர் வீட்டில் வாசலில் நின்றிருந்த அர்ஷிதா அவளை அழைத்தாள்.

 

 

வானதியும் அருகே சென்று என்னவென்று விசாரிக்க “உங்க பேரு ரொம்ப நல்லாயிருக்கு… நீங்களும் ரஞ்சிதாவோட காலேஜ் தானா…”

 

 

“ஆமாம்… உங்க பேரும் ரொம்ப அழகா மாடர்னா இருக்கு” என்றாள்.

 

 

“உள்ள வாங்க வெளிய வைச்சே பேசிட்டு இருக்கேனே”

 

 

“அச்சோ அதெல்லாம் வேண்டாம்… நான் கிளம்பணும்…”

 

 

“என்னை உங்க பிரண்டா நினைக்க மாட்டீங்களா… எங்க வீட்டுக்கு எல்லாம் வரமாட்டீங்களா…” என்று கூற வேறுவழியில்லாமல் அர்ஷிதாவின் வீட்டிற்குள் சென்றாள் வானதி.

 

 

“இங்க உட்காருங்க… ஒரு ரெண்டே நிமிஷம் ப்ளீஸ் எனக்காக நான் போட்ட காபியை நீங்க குடிக்கணும்… முதல் முறையா வந்திருக்கீங்க… ப்ளீஸ்” என்றுவிட்டு அவள் சமையலறை சென்று விட்டாள்.

 

 

அந்நேரம் உள்ளே வந்தவனை வானதி பார்க்க ‘ஓ இவர் தான் அவங்க அண்ணனா…’ என்று நினைத்துக் கொண்டிருக்க வானதியை பார்த்தவன் “யாரு நீ?? இங்க என்ன பண்ணுறா?? ஆளில்லாத வீட்டில நீ என்ன பண்ணுற??” என்று முறைத்தான்.

 

 

“ஹலோ நீங்க யாருங்க… வந்தீங்க… நீங்க பாட்டுக்கு கேள்வி கேட்குறீங்க… மரியாதைன்னா என்னன்னு உங்களுக்கு தெரியாதா???”

 

“யாரை கேட்குற?? என்னை என்னை பார்த்தா கேட்குறா…” என்றவன் சுற்று முற்றும் திரும்பி பார்க்க “நீங்க என்ன லூசா உங்களை பார்த்து தான் கேட்டேன்…”

 

 

“என்னது நான் லூசா…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அர்ஷிதா காபியுடன் வந்தாள். “ஜோதி அண்ணா நீங்க எப்போ வந்தீங்க… வாங்க வாங்க… இந்த காபியை எடுத்துக்கோங்க…”

 

 

‘என்னது ஜோதியா ரஞ்சி இவளோட அண்ணா பேரு ஆதின்னு தானே சொன்னா…’ என்று யோசித்தாள் வானதி.

 

 

“வானதி கொஞ்சம் லேட் ஆகிடுச்சு… இந்தாங்க எடுத்துக்கோங்க…” என்று கோப்பையை நீட்டினாள்.

 

 

“அர்ஷிம்மா யார் இது…”

 

 

“அண்ணா இவங்க என்னோட பிரண்ட் இந்த தெருவில தான் இருக்காங்க… ஒரு அஞ்சாறு வீடு தள்ளி…”

 

 

வானதி காபியை குடித்துவிட்டு விட்டால் போதும் என்று கிளம்ப, அவள் சென்று விட்டாள் என்று நினைத்துக் கொண்டு அர்ஷிதாவிடம் “யாரும்மா இது சரியான லூசா இருப்பா போலிருக்கு…”

 

 

“இவளுக்கு யாரு வானதின்னு பேரு வைச்சாங்க… சரியான வானரமா இருக்கா???” என்று அவன் சொல்லிமுடிக்க உள்ளே வந்தவன் அர்ஷிதாவை பார்த்தாள்.

 

 

“என்னோட பர்ஸ் இங்க விட்டுட்டேன்…” என்று எடுத்துக் கொண்டவள் ஜோதியை பார்த்து கடுமையாக முறைத்தவாறே சென்றாள்.

 

 

“ஏன்னா இப்படி சொன்னே… பாவம் அவ முகமே வாடிப் போச்சு… நீ இப்படி எல்லாம் பேச மாட்டியே… என்னாச்சு உனக்கு…” என்றாள் அர்ஷிதா. அவளுக்கு பதில் கூறாமல் அவளிடம் விடைபெற்று அவன் வெளியே கிளம்பிவிட்டான், வந்த வேலையை கூட மறந்தவனாய்…

 

 

ஒரு மாதம் கடந்த வேளையில் அவர்கள் அலுவலகத்தில் உட்கார்ந்திருந்த ஆதி கணினியில் ஏதேதோ தகவல் எல்லாம் ஒன்றாகி அதையெல்லாம் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டிருந்தான்.

“என்னடா எங்க கிளம்பிட்ட??” என்றவாறு அவனருகில் வந்தமர்ந்தான் ஜோதிஷ்… “என்னடா மறந்திட்டியா?? இன்னைக்கு சீதாராமன் கம்பனிது அடுத்த ஹியரிங்டா??”

 

 

“அதுக்கு தான் டீடைல் எடுத்திட்டு இருக்கேன்…” என்றவன் “என்னடா எதுக்கு அப்படி பார்க்குற??” என்றான் நண்பனின் முக மாற்றத்தை பார்த்து.

 

 

“இல்லை அன்னைக்கு மாதிரி எதுவும் கலாட்டா பண்ணிற மாட்டியே…”

 

 

“டேய் அதான் அன்னைக்கே சொல்லிட்டேனே நான் அவ வழிக்கு போக மாட்டேன்னு… அப்புறம் ஏன்டா என்னை நம்பமாட்டியா…”

 

 

“சரி… சரிடா நம்புறேன்… நீ போயிட்டு வா… நான் எதுவும் ஹெல்ப் பண்ணவா… வேணுமின்னா நான் அந்த ஹியரிங் அட்டென்ட் பண்ணவா…” என்று ஜோதிஷ் கூற ஆதித்யா அவனை முறைத்தான்.

 

 

“சரி நீயே போயிட்டு வா… நான் எதுவும் கேட்கலை…”

 

 

“நான் நம்ம சாரோட போறேன் இன்னைக்கு… அவருக்கும் ஒரு வேலை இருக்காம்… அதுனால நீ என்னை பத்தி கவலைப்பட வேண்டாம் ஓகேவா…” என்றவன் நண்பனிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.

 

 

குந்தவைக்கு ரவி ஏதோ முக்கிய வேலை கொடுத்திருக்க அவள் அந்த தகவல்களை சரிபார்த்துக் கொண்டிருந்தாள். அவ்வப்போது அவனிடம் சந்தேகம் கேட்பதும் தேவையான தகவல் எடுப்பதுமாக இருந்தாள்.

 

 

ஆதித்யா அவரின் சீனியர் ஆடிட்டர் நாராயணனுடன் சென்று அந்த துறை அதிகாரியை பார்த்துவிட்டு வேலை முடித்து வெளியில் வந்தனர். நாராயணன் அடுத்து ரவிச்சந்திரனை பார்த்துவிட்டு செல்ல வேண்டும் என்று கூறினார்.

 

 

“யார் சார் ரவிச்சந்திரன் புது ஆபீசரா??”

 

 

“ஆமாம்ப்பா வந்து கொஞ்ச மாசம் தான் ஆச்சு… அந்த நந்தினி இண்டஸ்ட்ரீஸ் ஆடிட் அவர் தான் பார்க்கறார்ப்பா… அதான் ஒரு வார்த்தை என்ன ஏதுன்னு கேட்டுட்டு போய்டலாம்ன்னு…”

 

 

“சார் அப்போ முதல்ல இருந்த ஆபீசர் மாறிட்டாரா… ரொம்ப நல்ல மனுஷன் சார் அவரு…” என்று அவருடன் வளவளத்துக் கொண்டே அனுமதி பெற்று அந்த அறைக்குள் நுழைந்தனர்.

 

 

ரவியை பார்த்ததும் “சார் நீங்க எப்படி இங்க…” என்றான் ஆதித்யா.

 

 

“ஏன் நான் இங்க இருக்க மாட்டேனா…” என்று சிரித்தான் ரவி.

 

 

“அப்படியெல்லாம் இல்லை சார்… ஒரு ஆர்வத்துல கேட்டேன் சார்…”

 

 

“என்ன ஆதி உனக்கு சாரை ஏற்கனவே தெரியுமா…” என்றார் நாராயணன்.

 

 

“தெரியுமாவா… என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க, சார் தான் காலேஜ்ல எங்களுக்கு மேனேஜ்மெண்ட் அக்கௌன்ட்ஸ் எடுத்தார்…”

 

 

“ஓ அப்படியா!!!” என்று ஆச்சரியம் காட்டினார் நாராயணன்.

 

 

“ஆதி காலேஜ் வேலை எல்லாம் சும்மா கொஞ்ச நாள் பார்த்தது, நான் அப்போவே கவர்மென்ட் ஜாப்க்கு தான் ட்ரை பண்ணிட்டு இருந்தேன்… டிபார்ட்மெண்ட் எக்ஸாம் எல்லாம் எழுதினேன்…”

 

 

“இப்போ இங்க இருக்கேன், இவ்வளோ நாள் பெங்களூர் இன்கம்டாக்ஸ் ஆபீஸ்ல தான் இருந்தேன்… இப்போ தான் இங்க ட்ரான்ஸ்பர் ஆகி வந்தேன்…”

 

 

“சூப்பர் சார்… ரொம்ப சந்தோசம் உங்களை இங்க பார்த்ததில…” என்றான் ஆதித்யா…

 

 

“அப்புறம் ஆதி நீ என்ன பண்ணுற…”

 

 

“நான் ஆடிட்டரா இருக்கேன் சார்… காலேஜ்ல நீங்க பாடம் எடுத்தீங்க… என்னோட ஆடிட் ட்ரைனிங் எல்லாம் நாராயணன் சார் தான்…”

 

 

மூவரும் பொதுவாக பேசிக் கொண்டிருந்துவிட்டு பின்னர் வந்த வேலையை பற்றி பேச ஆரம்பித்தனர். வேலை முடிந்து கிளம்பும் தருவாயில் ரவி நினைவு வந்தவனாக “ஆதி நம்ம காலேஜ் பொண்ணு ஒருத்தியும் இங்க தான் இப்போ வேலை பார்க்குறா…”

 

 

“அனேகமா உனக்கு அவளை தெரிஞ்சாலும் தெரிஞ்சிருக்கும்… ஒரு வேளை நம்ம காலேஜ்ல பார்த்திருப்ப… இரு வரச்சொல்றேன்…” என்றவன் குந்தவைக்கு அழைத்தான்.

 

 

“தேவியை கொஞ்சம் வரச் சொல்லுங்க…” என்று சொல்லிவிட்டு அவன் வைக்க ஆதியோ ‘அய்யோ இந்தாளு வேற நம்ம காலேஜ் பொண்ணுன்னு சொல்றாரே… ஒருவேளை அந்த அவளா இருக்குமோ…’

 

 

“எக்ஸ்க்யூஸ் மீ சார்…” என்று உள்ளே நுழைந்தாள் அவள்.

 

 

“தேவி இவர் ஆதித்யா நம்ம காலேஜ் தான் படிச்சார்… அநேகமா உங்களுக்கு சீனியரா இருந்திருப்பார்… பார்த்திருக்கீங்களா இவரை…” என்றவன் “ஆதி இவங்க தான் நான் சொன்னேன்ல தேவி நம்ம காலேஜ் தான்…”

 

 

ரவி சொல்லி முடிக்கவும் “நான் இவங்களை பார்த்ததே இல்லை சார்… இவங்க நம்ம காலேஜ் தான் படிச்சாங்களா…” என்றான் அவன்.

 

 

“ஓ!! நீங்க பார்த்ததில்லையா சரி சரி ஆதி… உங்களுக்கு தெரிஞ்சிருக்குமோன்னு நினைச்சேன்… ஏதாச்சும் வேணும்னா நான் இங்க இல்லைன்னா நீங்க இவங்ககிட்டயே கேட்டுக்கலாம்… சார் நீங்களும் தான்…” என்று இருவருக்குமாக கூற பொதுவாக பேசி விடைபெற்றுக் கொண்டு அவர்கள் கிளம்பினர்.

 

 

கிளம்புமுன் ஆதி பிறர் அறியாமல் அவளை எரிப்பது போல் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். ‘திமிர் பிடிச்சவன் என்னை தெரியாதாமா இவனுக்கு, வாங்குன அடி மறந்திருச்சு போல…’

 

 

‘திரும்பவும் கொடுத்த மறந்தது எல்லாம் ஞாபகத்துக்கு வந்திரும்… தெரிஞ்சுக்கிட்டே தெரியாத மாதிரி எதுக்கு சொல்லிட்டு போறான்… வாயை திறந்தாலே பொய்…’

 

 

“என்ன தேவி?? என்னாச்சு?? ஏன் ஒரு மாதிரி இருக்கே??”

 

 

“இல்லை சார் அதெல்லாம் ஒண்ணுமில்லை… நல்லா தான் இருக்கேன்… நேரமாச்சு சார் நான் கிளம்பறேன்…” என்றவள் அவள் கைப்பையை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள்.

 

 

நுங்கம்பாக்கம் சிக்னலை கடக்கும் போது தான் அவள் ஒன்றை கண்டாள்.

அவளுடைய வண்டியை தொடர்ந்து ஆதித்யா வந்து கொண்டிருந்தான். ‘இவன் எதுக்கு என்னை பாலோ பண்ணுறான்’ என்று  நினைத்தவள் அவனும் அவளும் ஒரே தெருவில் தான் இருக்கிறார்கள் என்பதை மறந்தே போனாள்.

 

 

‘ஒருவேளை என்னை பழி வாங்க தான் பின்னாடியே வர்றானோ… அன்னைக்கே சொன்னானே இனிமே உன்னை வெறுப்பேத்திட்டே இருப்பேன்னு… கடவுளே இவன்கிட்ட இருந்து என்னை காப்பாத்து…’ (கடவுளுக்கு கேட்குமா இவள் குரல்!!)

 

 

அவள் தலையில் ஹெல்மெட் போட்டிருந்ததால் அவனுக்கு அவளை அடையாளம் தெரியவில்லை… அவனோ ஹெல்மெட்டை கழற்றி முன்னில் வைத்துவிட்டு ஹாயாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான்.

 

 

‘போலீஸ் ரூல்ஸ் கூட மதிக்கமாட்டான் போல, திமிர் பிடிச்சவன்… இவன் வீட்டுக்காச்சும் அடங்குவானோ இல்லையோ தெரியலையே…’ என்று தன் போக்கில் யோசித்துக் கொண்டே வந்தவள் பின்னால் வந்த வண்டியை கவனிக்கவில்லை.

 

 

அவள் வளைவில் திரும்ப பின்னால் வந்த வண்டி அவளை இடித்துவிட்டு போனது… மயக்கத்திற்கு சென்று கொண்டிருந்தவள் கண்டது அவளை கடந்து சென்ற ஆதித்யாவை தான்…

 

 

‘சொன்னது போலவே செய்துவிட்டான்’ என்று எண்ணிக் கொண்டே மயங்கினாள் அவள். அக்கம்பக்கமிருந்தோர் அவளை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்க கையிலும் காலிலும் சிராய்த்துஆங்காங்கே லேசாக ரத்தமாக இருந்தது.

 

 

மருத்துவர் காயத்திற்கு மருந்திட்டு ஒரு டிடியை போட்டுவிட்டார். அவள் கீழே விழுந்த அதிர்ச்சியில் மயக்கமுற்றிருப்பதாக மருத்துவர் கூற சற்று நேரத்தில் அவள் கண் விழித்திருந்தாள்.

 

 

அவளருகில் ஒரு பெண்மணி நின்றிருக்க அவளை மருத்துவமனையில் சேர்த்தஅவருக்கு நன்றி கூறினாள். அவரும் அவளிடம் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார்.

 

 

லேசான காயமென்பதால் மருந்து மாத்திரையை மட்டும் கொடுத்து அன்றே அனுப்பினர். வானவன் மருத்துவமனையில் பிஸியாக இருக்கும் நேரமென்பதால் அவனை விடுத்து வானதிக்கு அழைத்தவள் அவளுக்கு மட்டும் விபரமுரைத்து உடனே மருத்துவமனைக்கு வரச்சொன்னாள்.வானதி வருவதற்கு முன் வானவன் அங்கு வந்து சேர்ந்தான்.

 

 

“டேய் நீ எப்படிடா இங்க வந்தே, நான் வானதியை தானே வரச்சொன்னேன்… நீ உன் வேலை எல்லாம் விட்டுட்டு இங்க வந்தியா…”

 

 

“போன் வந்துச்சு நானே பதறி போய் உன்னை பார்க்க வந்தா ஏன் வந்த எதுக்கு வந்தேன்னு கேட்குற, வானதிக்கு போன் பண்ணி நான் சொல்லிக்கறேன்… நீ என்னோட வா…” என்றவன் ஒரு ஆட்டோவை நிறுத்தி அவளை ஏற்றிவிட்டு அவள் ஸ்கூட்டி பெப்பில் ஏறி அமர்ந்தவன் ஆட்டோவின் பின்னாலேயே சென்றான்.

 

 

வீட்டிற்கு வந்ததும் “என்னாச்சு வண்டி ஓட்டும் போது ஒழுங்கா ஓட்ட மாட்டியா… கண்ணை என்ன புடதியிலா வைச்சுட்டு இருந்த…” என்று திட்டினான் வானவன்.

 

 

“டேய் வானு ஏன்டா திட்டுற… எல்லாம் அந்த ஆதித்யாவால வந்திச்சுடா…” என்றவள் நடந்ததை விவரிக்க வானவனோ “எல்லாம் உன் கற்பனை, அவர் எதுக்கு உன்னை பாலோ பண்ண போறார்…”

 

 

“அவருக்கு வேலையே இல்லையா என்ன… அவர் வீடும் நம்ம தெருவுல தான் இருக்குன்னு அன்னைக்கு நீ சொன்னதை மறந்திட்டியா… அதுனால கூட அவர் நீ வந்த வழியில வந்திருக்கலாம்…”

 

 

“சரி நீ சொன்ன மாதிரியே வைச்சுக்குவோம்… ஆனா என்னை இடிச்சது இவனோட வண்டி தான்டா அது எனக்கு நல்லா தெரியுமே… பாவி என்னை இடிச்சு கீழ விழ வைச்சுட்டு அப்படியே போய்ட்டான்…”

 

 

“அன்னைக்கு ஆபீஸ் வந்தப்பவும் உன்னை சும்மா விடமாட்டேன்னு சொன்னான்… சொன்ன மாதிரியே தானே செஞ்சிட்டான்… அதுக்கு என்ன சொல்லப் போற…”

 

 

“உனக்கு நல்லா தெரியுமா அவர் தான் இடிச்சார்ன்னு…”

 

 

“நல்லா தெரியும், நான் கீழ விழுந்ததுமே இடிச்சது யாருன்னு தான் பார்த்தேன்… உண்மையிலேயே என்னை வேற யாரும் தெரியாம இடிச்சிருந்தா அப்படியே விட்டு போயிருப்பாங்களா…”

 

 

“இவன் தான் அப்படி செய்வான்… எனக்கு நல்லா தெரியும்…” என்று அடித்து பேசினாள்… “சரி விடு, நீ போய் ரெஸ்ட் எடு… அம்மா கோவிலுக்கு போயிருக்காங்க வந்ததும் சொல்லிடாதே… நானே சொல்லிக்கறேன்…”

 

 

“ஹ்ம்ம் சரிடா…” என்றவள் அவளறைக்கு சென்றாள்… ஏனோ அவளுக்கு ரவியின் ஞாபகம் வந்தது. கூடவே அன்று ஆதியை அவன் அறிமுகப்படுத்தியதும் ஞாபகம் வந்தது.

 

 

சம்மந்தமேயில்லாமல் மனம் இருவரையும் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருந்தது. எதற்கு இந்த ஆராய்ச்சி என்று யோசிக்காமலே ஆராய்ந்துக் கொண்டிருந்தாள் அவள்.

 

 

அவளறையை எட்டிப் பார்த்த வானவனுக்குள் யோசனை குமிழியிட்டது. ‘இவ இப்படியே கண்டதை யோசிக்கிறது சரியில்லை…’ என்ற முடிவுக்கு வந்தவன் இதை பற்றி தந்தையிடமும் தாயிடமும் வேறு மாதிரி பேச முடிவெடுத்தான்.

 

 

வீட்டிற்கு வந்த ஆதிக்கு ஆயாசமாக இருந்தது, வந்ததும் கால்களை நீட்டி சோபாவில் அமர்ந்தவன் பின்னால் அக்கடாவென்று சாய்ந்துக் கொண்டான். அவனருகில் வந்த அர்ஷிதா “என்னண்ணா இன்னைக்கு ரொம்ப வேலையா??” என்றாள்.

 

 

“ஹ்ம்ம் ஆமாம்டா ஒரு காபி கிடைக்குமா…” என்றான்.

 

 

“இதோ எடுத்திட்டு வர்றேன்…” என்றவள் அடுத்த ஐந்து நிமிடத்தில் காபியுடன் அவன் முன் நின்றாள்… “தாங்க்ஸ்டா…” என்றவன் அதை பருகியதும் சற்றே தெம்பு வர நிமிர்ந்து அமர்ந்தான்.

 

 

“அண்ணா என்ன இது சட்டை எல்லாம் அழுக்கா இருக்கு…”

 

 

“அது ஒண்ணுமில்லை அர்ஷு… ஒரு சின்ன ஆக்சிடென்ட்…”

 

 

“என்னது ஆக்சிடென்டா?? என்னண்ணா சொல்ற??”

 

 

“ஒண்ணுமில்லைம்மா நான் குளிச்சுட்டு கொஞ்சம் வெளிய போயிட்டு வர்றேன்…” என்றவன் அவளுக்கு பதிலுரைக்காமல் வேகமாக அவன் அறைக்குள் சென்று குளியறைக்குள் புகுந்துக் கொண்டான்.

 

 

குளித்து வேறு உடை மாற்றிக் கொண்டு வந்தவன் அர்ஷிதா எதுவும் கேட்கும் முன் அங்கிருந்து நகர்ந்தான்.

 

 

அன்று குந்தவை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்றிருந்தாள். கடவுளை தரிசனம் செய்துவிட்டு ஒரு ஓரம் சென்று அவள் அமரவும் யாரோ தன்னை பார்ப்பது போன்ற உணர்வு அவளுக்கு தோன்றியது.

 

 

அவள் திரும்பி பார்க்க “என்ன தேவி என்னையா தேடுற…” என்று வந்தவன் ரவியே தான்… “இல்லை… இல்லை சார்… யாரோ தெரிஞ்சவங்க போல இருந்திச்சி… அதான் பார்த்திட்டு இருந்தேன்…”

 

 

“இங்க உட்காரலாமா…” என்று அவன் கேட்க “உட்காருங்க சார்…” என்றாள் அவள்…

 

 

“ஏன் தேவி நான் உங்களுக்கு தெரிஞ்சவன் இல்லையா…”

 

 

“அய்யோ நான் அந்த அர்த்ததுல சொல்லலை சார்… எங்க வீட்டு பக்கத்துல உள்ளவங்க போல இருந்திச்சி அதான் பார்த்தேன்… என்ன சார் கோவிலுக்கு வந்திருக்கீங்க… எதுவும் பலத்த வேண்டுதலா…”

 

 

அவள் முகத்தை ஆராய்ந்தவன் அவள் கண்களை நோக்கிக் கொண்டே “ஹ்ம்ம் வேண்டுதல் தான் பெரிய வேண்டுதல் தான்… மனசுக்கு பிடிச்ச ஒரு கோரிக்கையை கடவுள் முன்னாடி வைச்சிருக்கேன்…”

 

 

“கண்டிப்பா நடக்கும் சார்… இந்த ஈசன் ரொம்ப சக்தி வாய்ந்தவர், நான் நினைச்சது எல்லாமே நடந்திருக்கு… எல்லாத்துக்கும் காரணம் இந்த கபாலி தான்…” என்றாள்.

 

 

“தேவி உனக்கு ரொம்ப ஞாபக மறதியோ??” என்று சம்மந்தமேயில்லாமல் அவன் கேள்வி கேட்க அவளோ திருதிருவென்று விழித்தாள்.

 

 

“ஏன் சார் அப்படி கேட்குறீங்க… நீங்க கொடுத்த வேலை எதாச்சும் முடிக்காம விட்டுட்டேனா… சொல்லுங்க சார் நாளைக்கு ஆபீஸ் போனதும் முடிச்சு கொடுத்திர்றேன்…” என்றாள் அவசரமாக.

 

 

“நான் அதை சொல்லலை… நீ இப்படி தொடர்ந்து சார் சார்ன்னு கூப்பிடுறது எனக்கு பிடிக்கலை… அன்னைக்கே சொன்னேன் நீயும் சந்துருன்னு கூப்பிடுறேன்னு சொன்னே…”

“ஆனா இன்னமும் ஒரு முறை கூட நீ என்னை அப்படி கூப்பிடவே இல்லை…” என்றவனின் குரலில் ஏக்கம் இருந்தது போல் இருந்தது அவளுக்கு.

 

 

“சாரி சார்… சாரி சந்துரு சார்… சாரி சந்துரு…” என்று உளறிக்கொட்டினாள் அவள்.

 

 

“எப்படியோ சந்துருன்னு கூப்பிட்டீங்க… அப்புறம் நான் என்ன கோரிக்கை வைச்சேன்னு நீங்க என்கிட்ட கேட்கவேயில்லையே…”

 

 

“வேண்டுதல் எல்லாம் வெளிய சொன்னா பலிக்காது சா… சந்துரு…” என்றாள்.

 

 

“ஆனா இந்த கோரிக்கையை வேண்டுதலை வெளிய சொல்லலைன்னா தான் பலிக்காது…” என்றான் அவன் பதிலுக்கு.

 

 

“என்ன சந்துரு சொல்றீங்க… அப்படி என்ன வேண்டுதல் அது…”

 

 

“எனக்கு ஒரு பொண்ணை… இல்லை நான் சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு நினைக்கிறேன்… மனசுக்கு பிடிச்ச பொண்ணு மனைவியா வரணும்ன்னு தான் வேண்டுதல் வைச்சேன்…”

 

 

“ஓ!!!……”

 

 

“என்ன தேவி ஓன்னு கேட்டு அமைதியாகிட்டீங்க…”

 

 

“வேற என்ன சார் சாரி சந்துரு கேட்கணும்…”

 

 

“அந்த மனசுக்கு பிடிச்ச பொண்ணு யாருன்னு கேட்கணும்…” என்று அவன் கூறியதும் அவள் உடலில் சட்டென்று ஒரு குளிர் பரவியது… ‘அய்யோ என்னை பிடித்திருக்கிறது என்று சொல்லிவிடுவானோ…’

 

 

‘அப்படி சொன்னால் நான் என்ன செய்வேன்’ என்று யோசித்தவளுக்கு கை கால் எல்லாம் உதற ஆரம்பித்தது. அவனிடம் இருந்து தப்பிக்கும் பொருட்டு  “ஓகே சந்துரு நேரமாச்சு.. நான் கிளம்புறேன்…” என்றவள் எழுந்து நின்றாள்.

 

 

“தேவி என்னாச்சு எதுக்கு இவ்வளவு அவசரம்… கொஞ்சம் நில்லு…” என்று சொல்லி அவள் கையை பிடித்தான். அவள் கைகள் சில்லிட்டு போய் நின்றாள்…

Advertisement