Advertisement

அத்தியாயம்- 22

 

பாவிதானே மதன்கணை ஏவினானே
காவில்மாங் குயில்கள்கூவிக் கூவியெனது
ஆவி சோருதுனை யாவியாவிக் கட்ட

இங்கே வாராய் என்கண்ணே யிங்கே வாராய்

 

 

– திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)

 

 

குந்தவையை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தவன் அவளிடம் எதுவும் பேசினானில்லை. ஏதோ யோசனையிலேயே இருந்தான், அவள் எதுவும் கேட்டால் மட்டுமே அவனிடத்தில் இருந்து பதில் வந்தது.

 

 

ஏதாவது அலுவலக வேலை பற்றிய சிந்தனையாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டவள் அதற்கு மேல் அவனை தொந்திரவு செய்யவில்லை.

 

 

மறுநாள் அலுவலகம் சென்ற போதும் சரி திரும்பி வந்த போதும் சரி ஆதி அமைதியாகவே வந்தான். குந்தவைக்கு தான் அவன் அமைதியும் அவளிடத்தில் அவன் பேசாமலிருப்பதும் கஷ்டமாக இருந்தது.

 

ஏனோ அவள் உள்மனது ரவியை பற்றி ஆதியிடம் சொல்லியிருக்க வேண்டும் என்று அவளை குடைந்து கொண்டிருந்தது வேறு அவளுக்கு கலக்கத்தை கொடுத்தது.

 

 

அன்று காலையில் இருந்தே ரவி அலுவலகத்தில் இல்லை என்பதால் குந்தவைக்கு சற்றே பதட்டமாக இருந்தது. ஒருவேளை இந்நேரம் அவனை சித்தப்பா அழைத்து சென்றிருப்பாரோ இல்லையோ என்று அதே எண்ணமாக இருந்தது.

 

 

நல்லவேளையாக அவள் சித்தப்பா அன்று மதிய வேளை அவளுக்கு அழைத்து ரவியை அவர்கள் கஸ்டடிக்கு எடுத்துவிட்டதாக சொல்லியிருந்ததில் அவளதுமனபாரம் முழுதும் குறைந்தது போல் இருந்தது.

 

 

அடுத்த நிமிடமே ஆதியின் அமைதியும் அவன் பேசாமலிருப்பதும் அவளுக்கு மீண்டும் ஒரு மனபாரத்தை கொடுக்க எப்போதும் போல் மனம் ஒரு பிரச்சனை முடிந்ததும் அடுத்ததை சுமக்க தயாராகியிருந்தது.

 

 

ஆதியின் பாராமுகமும் ரவியை பற்றி அவனிடத்தில் எப்படி சொல்வதென்ற குற்றவுணர்ச்சியுமாய் அவள் மனம் அலைகழித்தது. எட்டு மணிக்கு இரவு உணவு முடித்து ஆதி அவர்கள் அறைக்கு சென்றுவிட்டான்.

 

 

குந்தவையால் அவனிடம் பேசாமல் எதுவும் செய்ய முடியவில்லை. “அர்ஷி இதை பார்த்து எடுத்து வைச்சிடறியா… எனக்கு தலை வலிக்குது நான் போகட்டுமா??

 

 

“என்னண்ணி நீங்க செய்ன்னா நான் செய்ய போறேன்… நான் பார்த்துக்கறேன் நீங்க போய் ரெஸ்ட் எடுங்க… நீங்க போங்க அண்ணி… என்று சொல்லி குந்தவையை அனுப்பி வைத்தாள்.

 

 

குந்தவை அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தவள் ஆதி சயனித்திருந்ததை பார்த்ததும் அவன் உறங்கிவிட்டான் போலும் என்று நினைத்து வேதனையாக இருந்தது அவளுக்கு.

 

 

‘நாம பேச முன்னாடி தூங்கிட்டாரே… மணி இன்னும் ஒன்பது கூட ஆகலையே அதுக்குள்ள தூங்கியிருக்க மாட்டார் என்று எண்ணியவள் அவனருகில் சென்று கட்டிலின் விளிம்பில் அமர்ந்தாள்.

 

 

“என்னங்க… என்று அவள் இருமுறை அழைத்தும் பதிலிளில்லாமல் போக “உங்களுக்கு என் மேல எதுவும் கோபமா?? ஏன் இப்படி என்கிட்ட பேசாம இருக்கீங்க… எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு?? என்றவளின் குரல் தன் கட்டுப்பாட்டை மீறி உடைந்து கொண்டிருந்தது.

 

 

அவன் சட்டென்று எழுந்து அமர்ந்தான், ஆனாலும் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அமர்ந்திருந்தவனை கண்டவளுக்கு உள்ளே எதுவோ செய்தது.

 

 

எழுந்து ஒரமாக நின்றவள் அவன் முகத்தை நேருக்கு நேராக பார்த்தவாறே “நான் கேட்டுட்டே இருக்கேன் நீங்க அமைதியா இருக்கீங்க… என் மேல எதுவும் கோபமா இப்படி பேசாமலே இருக்கீங்க…

 

 

“எனக்கு உன் மேல என்ன கோபமிருக்க போகுது குந்தவை… என்று கேட்டவனின் மடியில் எப்போது வந்து அமர்ந்தாள் என்பதை அவளே அறியாள்.

 

 

அவள் பேசிக் கொண்டிருக்கும் போது கையை பிடித்து இழுத்து அமர வைத்திருப்பானா, அல்லது அவளாகவே அமர்ந்தாளா என்ற யோசனை அவளுக்கு இல்லை நமக்கு தான்.

 

 

“அப்போ ஏன் பேசாம இருக்கீங்க…

 

 

“நான் அப்படி எல்லாம் இல்லையே…

 

 

“இல்லை நீங்க அப்படி தான் இருக்கீங்க, நேத்துல இருந்து நீங்க என்கிட்ட சரியாவே பேசலை… என்றவளின் கைகள் அவன் கழுத்தில் மாலையாய் சுற்றியது.

 

 

அவள் ஆசையாய் வளைத்தாளோ இல்லை கீழே விழுந்து விடாமல் இருக்க  அவனை மாலையாய் சுற்றியதோ எதையுமே இருவரும் அறிந்து கொள்ள முற்படவில்லை.

 

 

“நான் எப்பவும் போல தான் இருக்கேன்… இதையே நான் திருப்பி சொல்லவா…

 

 

“விக்ரம் நான் எப்பவும் போல தான் இருக்கேன்… நீங்க தான் மாறிட்டீங்க… என்னோட எப்பவும் பேசிட்டு வருவீங்க, என்னை வம்பிழுப்பீங்க, இந்த ரெண்டு நாளா அமைதியா இருக்கீங்க…

“சொல்லுங்க விக்ரம் என் மேல கோபமில்லையே… நீங்க இப்படி இருக்கறது எனக்கு ஒரு மாதிரியா இருக்கு…

 

 

“எப்படி இருக்கு??

 

 

“ஓ…ன்னு அழணும் போல இருக்கு… என்றவளால் அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் அழுகை வந்துவிட அவன் கழுத்தில் முகம் புதைத்து அழுதாள். அதுவரை அடக்கி வைத்திருந்த அத்தனையும் வெடித்து சிதறி அவன் மேல் சாய்ந்து கதறியவளை தன்னிடம் இருந்து பிரித்தான்.

 

 

“குந்தவை இப்போ எதுக்கு இந்த அழுகை… என்றான் நிச்சலனமாக.

 

 

“ஏன்னு உங்களுக்கு புரியலையா… எனக்கு உங்களை பிடிச்சிருக்கு… நீங்க பேசலைன்னா எனக்கு இங்க வலிக்குது… என்று அவள் நெஞ்சை தொட்டுக் காட்டியவள் இடைவெளி இல்லாமல் அவனை இறுக்கிக் கொண்டாள்.

 

 

“இங்க பாரு நீ இப்போ அழ வேண்டிய அவசியமென்ன… எனக்கு உன் மேல கோபமெல்லாம் இல்லை… என்றதும் அழுகையினூடே நிமிர்ந்து அவனை பார்த்து முறைத்தாள்.

 

 

“நிஜமா தான் சொல்றேன் உன் மேல எனக்கு கோபமில்லை… கோபமிருந்தா இப்படி உன்னை தூக்கி மடியில போட்டுட்டு இருப்பேனா… என்றதும் தான் அவளுக்கு அவன் மடியில் இருக்கிறோம் என்பதே புரிந்தது.

 

 

இருந்தாலும் அவனை விட்டு விலக மனமில்லாதவள் அவனை மேலும் ஒண்டிக் கொண்டாள். “இப்போ நான் சொல்றதை நம்புறியா??

 

 

“நம்புறேன்… என்றவளின் மனபாரம் இறங்கியிருக்க அவளறியாமலே அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.திடிரென்று ஏதோ தோன்றியவளாக “ஆனா ஏன் உம்முன்னு இருந்தீங்க… எனக்கு கஷ்டமா இருந்திச்சு…

 

 

“அதெல்லாம் அப்புறம் சொல்றேன்… இப்போ நீ சொல்லு…

 

 

“என்ன சொல்லணும்??

 

 

“என்னை பத்தி உன் அபிப்பிராயம் சொல்லிட்ட, உன்னை பத்தி சொல்லலையே… நம்மளை பத்தி சொல்லலையே… என்றான் அவன்.

 

அவனிடம் இருந்து சற்றே விலகி அவனை பார்த்தாள். அவனிடம் எதையும் மறக்கக்கூடாது என்ற எண்ணம் எழ “விக்ரம் நான் ஒண்ணு சொல்லுவேன்… நீங்க என்னை தப்பா நினைக்கக் கூடாது… என்றாள் பீடிகையாக…

 

 

“சொல்லு நீ சொல்றதை கேட்க தான் நானும் காத்திட்டு இருக்கேன்… ஆனா நான் ஏன் உன்னை தப்பா நினைக்க போறேன்… அப்படி ஒண்ணு நடக்காது… நீ சொல்லு…

 

 

“ரவி பத்தி உங்க… என்று அவள் ஆரம்பிக்கவும் தன் கைக்கொண்டு அவள் வாயை பொத்தியவன் “எனக்கும் தெரியும் விடு…

 

 

அவள் நிமிர்ந்து அவனை ஆச்சரியமாய் பார்க்க “ஆமாம் தெரியும்…

 

 

“எப்படி??சித்தப்பா சொன்னாரா??

 

 

“அதுக்கு முன்னாடியே வாணி சொல்லிட்டாங்க… என்றவன் அன்றைய நிகழ்வை அவளிடம் விளக்கினான்.

 

 

“உங்களுக்கு என் மேல கோபமில்லையா?? நான் சொல்லலைன்னு…

 

 

“இல்லை குந்தவை கோபமில்லை, கொஞ்சம் வருத்தம் தான்… எனக்கு உன்னோட நிலைமை புரியுது… என்கிட்ட கூட சொல்ல முடியாத அளவுக்கு அந்த பரதேசி ஏதோ பேசி உன்னை கஷ்டப்படுத்தி இருக்கான்னு… எனக்கு அவன் மேல தான் கோபம் வந்திச்சு…

 

 

“சாரிங்க நான் சொல்லவே கூடாதுன்னு நினைக்கலை… உங்க கோபத்தை அன்னைக்கு தியேட்டர்ல பார்த்ததுல இருந்து ஒரு பயம் உங்ககிட்ட சொன்னா நீங்க சும்மா இருக்க மாட்டீங்கன்னு…

 

 

“அதுவும் இல்லாம அவ… அவன் பேசினது நடந்துகிட்டது எல்லாம் உங்க… உங்ககிட்ட என்னால சொல்ல முடியலை… ஆனா இன்னைக்கு எதையும் மறைக்க வேண்டாம்ன்னு நினைக்கிறேன்… என்றவள் நடந்த அத்தனையும் அவனிடம் பகிர்ந்தாள்.

 

 

ரவி அவளை பற்றி விமர்சித்ததை மட்டும் அவளால் அவனிடம் கூறவே முடியவில்லை. “நான் தான் எதுவுமே நீ சொல்ல வேண்டாம்ன்னு சொன்னேனே… இப்போ சொல்லிட்டு எதுக்கு பீல் பண்ணுற…

 

“ஆமா பேசிட்டே நீ எதுக்கு தள்ளிப் போன இப்போ… என்றவன் அவர்களுக்கு இடையில் இருந்த இடைவெளியை சுட்டிக்காட்ட அவள் நெருங்கி அமர்ந்தாள்.

 

 

“உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காட்டட்டுமா… இதை பார்த்து நீ சந்தோசப்படுவியான்னு எனக்கு தெரியாது ஆனா நிச்சயம் இதை பார்த்து உனக்கு ஒரு நிம்மதி கிடைக்கும்ன்னு எனக்கு தெரியும்

 

 

அவன் சொல்லி முடித்ததும் கட்டிலில் ஓரமாக வைத்திருந்த அவன் கைபேசியை எடுத்து அதிலிருந்த வீடியோ போல்டரை திறந்து கடைசியாக பதிவு செய்திருந்ததை காண்பிக்க அவள் விழி விரித்து பார்த்தாள்…

 

____________________

 

 

அதிகாலை வேளையிலேயே ரவியின் வீட்டு கதவு தட்டப்பட அவசரமாய் எழுந்து வந்தவன் வாசலின் நின்றவர்களை பார்த்ததும் புருவம் சுருக்கினான். “சொல்லுங்க… என்றான்.

 

 

“ரவிச்சந்திரன் நீங்க தானே?? என்றார் மிடுக்காய் நின்றிருந்தவர்.

 

 

“ஆமாம் நீங்க எல்லாம் எதுக்கு வந்திருக்கீங்க??

 

 

“உள்ளே போய் பேசலாமா… இங்க வாசல்ல எல்லாருமே பார்க்கறாங்க… என்றதும் அவசரமாய் கதவை முழுதாய் திறந்தவன் அவர்களை வரவேற்கும் விதமாய் தலையாட்டினான்.

 

 

“உங்க லேப்டாப் எங்க இருக்கு??? என்றார் உடன் வந்த மற்றுமொருவர்.

 

 

“இதெல்லாம் எதுக்கு சார் நீங்க கேட்கறீங்க?? நான் ஒரு கவர்மென்ட் எம்ப்ளாயி தெரியுமா?? என்றான்.

 

 

“உங்க டிபார்ட்மெண்ட்க்கு நாங்க தகவல் சொல்லியாச்சு… கொஞ்சம் கோஆப்பரேட் பண்ணுங்க… என்றதும் “சார் என்ன விஷயம்ன்னு சொல்லாம கோஆப்பரேட் பண்ண சொன்னா என்னனு நினைக்கிறது என்றான் அவனும் விடாமல்.

 

 

“நீ முதல்ல உன் லேப்டாப் கொண்டு வா சொல்றேன்… என்று அவர் ஒருமைக்கு தாவினார்.

 

 

கட்டிலின் மீதிருந்த மடிகணினியை கொண்டு வந்து அவர் முன் நீட்டினான். அதை உசுப்பி பார்த்தவர் “பாஸ்வோர்ட் யார் கொடுப்பா, உன் பாட்டனா?? என்றதும் அவன் முறைத்துக் கொண்டே மடிகணினிக்காய் கையை நீட்ட “நீ சொல்லு நான் போட்டுக்கறேன்… என்றார்.

 

 

அவன் சொல்லவும் அவர் அதை போட்டு உள்ளே நுழைந்து எதையோ தேடினார் அவர் தேடியது கிடைத்ததும் அவனிடம் திருப்பி “என்ன இது?? என்று ஒரு பதிவு செய்யப்பட்ட வீடியோவை காட்டினார்.

 

 

அதை பார்த்ததும் முகம் சிறுத்தவன் “இ… இது எப்படி என் லேப்டாப்ல… ஓ!!! மறந்திட்டேன் சார் இது எங்க ஆபீஸ் சிசிடிவி கேமராவோட பதிவு சார்… ஒரு காபி என் லேப்டாப்ல போட்டு வைச்சிருப்பேன்…

 

 

“ஆஹான்!!! அப்படியா சொல்றீங்க… என்றவர் மற்றொரு பதிவை எடுத்து காண்பித்தார் “அப்போ இது…

 

 

அது அவன் கைபேசியில் எடுக்க பட்டிருந்த வீடியோ பதிவு, அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. விஷயம் எப்படி வெளியே போயிருக்கும் யாருமே வெளியில் சொல்ல மாட்டார்களே… என்று யோசிக்க ஆரம்பித்தான்.

 

 

“என்ன ரவி என்ன சொல்லி எங்களை மழுப்பலாம்ன்னு யோசிக்கறீங்களா…எந்த யோசனையும் உங்களுக்கு வேண்டாம்… இந்த லேப்டாப் தவிர்த்து பென் டிரைவ், எக்ஸ்டர்னல் ஹார்ட் டிரைவ் எதுவும் வைச்சிருக்கீங்களா??

 

 

“இல்லை சார்… என்று அவன் அவசரமாய் மறுப்பதிலேயே அவன் பொய் கூறுகிறான் என்பது புரிய அருகில் நின்றிருந்தவர்க்கு கண்ணை காட்டினார் அவர்.

 

 

அவர் உள்ளே சென்று அவன் பையில் இருந்த பென் டிரைவ், எக்ஸ்டர்னல் ஹார்ட் டிரைவ் இரண்டையும் கொண்டு வந்து கொடுக்க அவனை பார்த்து முறைத்தவர் “போகலாமா?? என்றார்.

 

 

“நான் எதுக்கு இப்போ உங்க கூட வரணும்… என்றான் அவன்.

 

 

“நீயா வந்தா நல்லது, உன்னையெல்லாம் இங்க வைச்சு விசாரிக்க முடியாது… கிளம்பு விசாரணை முடிஞ்ச பிறகு உன் திமிர் பேச்செல்லாம் வைச்சுக்க… முதல்ல கிளம்பு எங்களோட… என்றவர் அவனை அழைத்துக் கொண்டு சென்றார்.

அவனை விசாரணைக்கு எடுத்த பின் ஒருவர் வந்து அவனை சந்தித்தார். “நீ தான் ரவியா??

 

 

“அதான் தெரியுதுல்ல சும்மா நீயா?? நீயான்னு ஒரு ஒருத்தரா வந்து கேட்டா என்ன அர்த்தம்… என்றவனின் பேச்சில் திமிரும் ஆணவமும் கலந்திருந்தது.

 

 

“நான் இளவேல் (குந்தவையின் சித்தப்பா) டிஎஸ்பி…

 

 

“அதுக்கென்ன சார் பண்ணணும் இப்போ…

 

 

“இந்த வீடியோலாம் எடுத்து என்ன பண்ணுறதா இருந்த??

 

 

“அதெல்லாம் ஒரு பாதுகாப்புக்காக எடுத்து பதிஞ்சு வைச்சது… எங்க டிபார்ட்மெண்ட் கேள்வி கேட்டா அதுக்கு நான் பதில் சொல்லிக்கறேன்… நீங்க தேவையில்லாம ஏதேதோ சொல்லி என்னை குற்றவாளி ஆக்காதீங்க…

 

 

“அப்போ இந்த செல்போன்ல எடுத்தது எல்லாம் யாரோட பாதுகாப்புக்குடா எடுத்த ப்ளடி ராஸ்கல்…

 

 

“ஹலோ கொஞ்சம் மரியாதையா பேசுங்க…

 

 

“பேசலைன்னா என்னடா செய்வ??

 

 

“நான் யாருன்னு தெரியாம பேசிட்டு இருக்கீங்க…

 

 

“நீ யாரு எப்பேர்பட்ட தில்லாங்கடி எல்லாம் தெரிஞ்சு தான் பேசறோம்… என்ன பெங்களூர்ல ஒரு பெரிய அரசியல் செல்வாக்கு உள்ள வீட்டில நீ பொண்ணு எடுத்தா நீ பெரிய ஆளாடா…

 

 

“உன் கதை அந்த பொண்ணு வீட்டிலையும் நாறிபோச்சு, வந்திட்டு இருக்கா… நீ நாயா பேயா அலைஞ்சு லவ் பண்ணுறேன்னு சுத்தி சுத்தி வந்து ஒரு பொண்ணுக்கு பிராக்கெட் போட்டியே அனுவர்ஷினி…

 

 

“வர்றா இங்க இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவா உன் மூஞ்சில காரித்துப்ப… உன் அம்மா அப்பா எல்லாரும் வர்றாங்க… உன் வருங்கால மாமனாரும் வர்றார்…

 

 

இப்போது அவன் முகத்தில் ஈயாடவில்லை… இதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சென்ற முறை பெங்களூர் சென்றிருந்த போது தான் அனுவர்ஷினி அவன் காதலை ஏற்றுக் கொண்டு அவர்கள் வீட்டில் பேசி நிச்சயமும் நடந்து முடிந்திருந்தது அவனுக்கு…

 

 

இப்படி குண்டை தூக்கி போடுவார்கள் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. டிஎஸ்பி இளவேல் ஆதிக்கு அழைத்தார், “மாப்பிள்ளை கொஞ்சம் ஆபீஸ் வந்திட்டு போங்க… என்று சொல்லி விபரமுரைக்க அவனும் அங்கு சென்றான்.

 

 

“எங்க மாமா இருக்கான்??

 

 

“உள்ள ரூம்ல உட்கார வைச்சிருக்கேன் மாப்பிள்ளை… நீங்க சொன்ன மாதிரி அவனை பத்தி விசாரிச்சு நேத்தே எல்லார்க்கும் தகவல் கொடுத்திட்டோம்… இனியாச்சும் அவன் திருந்துறானான்னு பார்ப்போம்…

 

 

“தேங்க்ஸ் மாமா… அப்புறம் மாமா நான் அவனை பார்க்கலாமா??

 

 

“போங்க மாப்பிள்ளை போய் பாருங்க…

 

 

“மாமா அவன் கன்னம் வீங்கினா என்கிட்ட கேட்பீங்களா…

 

 

“மாப்பிள்ளை… என்று அதிர்ந்தவரை “பரவாயில்லை மாமா அதுக்காக என் மேல நீங்க கேஸ் போடுறதுன்னா போட்டுக்கோங்க… என் ஆத்திரம் தீர அவனை ஒரு ரெண்டு அடி கூட அடிக்கலன்னா என் மனசு ஆறாது… என்றவன் உள்ளே சென்றான்.

 

 

ரவி அங்கு ஆதியை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. அவனை பார்த்ததும் எல்லாம் குந்தவையின் வேலையாக இருக்கும் என்று சடுதியில் அவன் எண்ணத்தில் உதித்தது. ‘இருடி உன்னை பார்த்துக்கறேன்… என்று மனசுக்குள் கருவிக் கொண்டான் அவன்.

 

 

“என்ன சார் இங்க என்ன பண்ணுறீங்க?? என்று சாதாரணம் போல் அவன் அருகில் சென்று அமர ரவி குழம்பிப் போனான்.

 

 

“இல்லை சும்மா இங்க ஒரு வேலை… என்றவன் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டான்.

 

“அதான் சார் என்ன வேலையா வந்திருக்கீங்க…

 

 

“ஏதோ வேலையா வந்திருக்கேன்டா அதையெல்லாம் உன்கிட்ட சொல்ல எனக்கு அவசியமில்லை… நீ வந்த வேலையை பார்த்திட்டு கிளம்பி போ… என்று ஆத்திரமாக பதில் கூறினான் அவன்.

 

 

“வேலை பார்க்க தான் வந்தேன்… அப்புறம் சொல்லு என் குந்தவைகிட்ட என்ன சொன்ன??

 

 

“என்ன என்ன கேட்டே??

 

 

“நொன்னை கேட்டேன்… காதுல விழலையாடா உனக்கு… கேட்டதுக்கு பதில் சொல்லுடா முதல்ல என்று ஆதி அவனைவிட அதிகமான கோபத்துடனும் மெதுவான குரலிலும் கேட்டான்.

 

 

“என்னது உன் குந்தவையா… அவ எப்பவும் தேவி தான்டா எனக்கு… எனக்கு முன்னாடி நீ முந்திட்ட அதனால அவ உனக்கு பொண்டாட்டி ஆகிட்டா… கொஞ்சம் தாமதிச்சிருந்தா… என்று அவன் முடிக்குமுன்னே அவனை ஓங்கி அறைந்தான் ஆதி.

 

 

“டேய்… என்று பதிலுக்கு கையை ஓங்கியவனை மற்றொரு கரம் கொண்டு தடுத்தான் அவன்.

 

 

ஆதி கேளாமலே ஆத்திரத்தில் இருந்த ரவி குந்தவையை பற்றி அவன் மனதில் நினைத்தது எல்லாம் கொட்டி விட ஆதிக்கு வந்த ஆத்திரத்தில் எழுந்து ஓங்கி மீண்டும் அவனை அறைந்தான்.

 

 

அவன் அடித்ததில் அவன் வாயில் இருந்து ரத்தம் லேசாய் கசிய அதற்குள் இளவேல் உள்ளே வந்தார். “என்ன மாப்பிள்ளை ரத்தம் வரவைச்சுட்டீங்க… என்று ஆதியை பார்த்து கேட்டதும் ரவி நிமிர்ந்து ஆதியையும் அவரையும் பார்த்தான்.

 

 

“என்னடா பார்க்கற, குந்தவை என் அண்ணன் பொண்ணு உன்னோட வீடியோல அவ இருக்கறதை பார்த்து நான் தான் மாப்பிள்ளைகிட்ட சொன்னேன்…

 

 

“மாமா இவனுக்கெல்லாம் எதுக்கு விளக்கம் கொடுத்திட்டு இருக்கீங்க… ஒரு வாரமா என் பொண்டாட்டியை நிம்மதியா தூங்க விடாம பண்ணிட்டான்…

“இவனையெல்லாம் கொல்லணும் மாமா… என்ன திமிர்ல இப்படி நடக்கறான்னு தெரியலை… வேலைக்கு வர்ற பொண்ணுங்கன்னா இளக்காரமாடா உனக்கு… என்று உறுமினான் ஆதி.

 

 

“மாப்பிள்ளை போதும் நீங்க கிளம்புங்க நான் பார்த்துக்கறேன்… அவங்க ஆளுங்க எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்க… என்று அவர் ஆதியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

 

____________________

 

 

ஆதி ரவியை அடிப்பது போல் இருந்த அந்த வீடியோ பதிவை பார்த்ததும் அவளறியாமலே கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க இருகைகளாலும் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டு அவன் மார்ப்பின் மீது சாய்ந்துக் கொண்டு மௌனமாய் கண்ணீர் பெருக்கினாள்.

 

 

“ஹேய் இங்க பாரு குந்தவை, ப்ளீஸ் என்னை பாரு… இப்படி பிடிச்சிக்கிட்டா நான் எப்படி உன்னை பார்க்கிறதாம்… குந்தவை… இப்போ எதுக்கு அழற

 

 

“நீ ரொம்ப தைரியசாலின்னு நான் நினைச்சுட்டு இருக்கேன்… நீ இப்படி எதுக்கு அழற சொல்லு… ரவியை எவ்வளவு சாதுரியமா மாட்டிவிட்டு நீ ஜெயிச்சிருக்க, கொஞ்சம் பாரு என்னை… என்று அவன் பலவிதமாய் கெஞ்சவும் தான் அவள் நிமிர்ந்தாள்.

 

 

“நான் வேணும்ன்னா அந்த ரவியை ஜெயிச்சிருக்கலாம்… ஆனா நீங்க என்னை ஜெயிச்சிட்டீங்க… என்றவள் நிமிர்ந்து அவன் கன்னத்தில் மீண்டும் முத்தமிட்டாள்.

 

 

“இங்க வேணாம் செல்லம்… இங்க கொடு… என்று அவன் உதட்டின் மீது கை வைத்து சொல்ல குந்தவை அவனை செல்லமாய் தட்டிவிட்டு அவன் மேல் சாய்ந்துக் கொண்டாள்.

 

 

“குந்தவை இன்னும் ஒண்ணு, அந்த கல்பனாகிட்ட ஏன் நம்மளை பத்தி எல்லாம் நீ சொன்னே??

 

 

“என்ன சொல்றீங்க?? நான் எதுவும் சொல்லலையே…

 

 

“இல்லை நம்மை பத்தி நீ ஏதோ சொல்லியிருக்க அவங்க தான் ரவிகிட்ட எல்லாமே சொல்லியிருக்காங்க… இந்த கல்பனா ஒரு பணப்பேய், காரியவாதி, அதனால தான் அவளை ரவி யூஸ் பண்ணிக்கிட்டான்…உங்க எல்லார் பத்தியும் அவளுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு… யாரை எங்க அடிக்கணும்ன்னு அவங்க யோசிச்சு தான் அடிச்சிருக்காங்க…

 

 

“நீங்க கல்பனாகிட்ட ரொம்ப பேச வேணாம்ன்னு சொன்னதுல இருந்து நான் அவங்ககிட்ட எதுவுமே பேசறதில்லை… அதுக்கு முன்னாடி ஒரே ஒரு தரம் நான் உங்களை பத்தி ஆபீஸ்ல பேசியிருக்கேன்…

 

 

“அது கூட அவங்க ஏதோ அவங்க வீட்டில நடந்த கதையை பத்தி சொல்ல பதிலுக்கு நானும் ஏதோ பேசிட்டு இருந்தேன்… நான் என்ன பேசினேன்னு கூட எனக்கு ஞாபகமில்லை…

 

 

“ஆனா நான் அளவோட தான் அவங்ககிட்ட பேசினேன்… ஒரு வேளை அவங்களா யூகம் பண்ணி ரவிகிட்ட அடிச்சு கூட விட்டிருக்கலாம்… என்றாள் அவள்.

 

 

“ஆமா கல்பனாவுமா அங்க இருந்தாங்க… என்றாள் அவனை பார்த்து.

 

 

“இல்லை அவங்க இதுல நேரடியா சம்மந்தப்படலை… அதுனால அவங்க வரலை…

 

 

“அவங்களையும் சும்மா விடக்கூடாது ஆபீஸ்க்கு போனதும் வைச்சுக்கறேன் அவளுக்கு, சரியான பச்சோந்தி அவ, ரவியை பத்தி சொல்லி அவளை மிரட்டி வைச்சா தான் அவளெல்லாம் அடங்குவா… என்று கறுவினாள் குந்தவை.

 

 

“சரி இப்போ சொல்லுங்க நீங்க ஏன் உம்ன்னு இருந்தீங்க… என்று முதலில் ஆரம்பித்த இடத்திற்கு வந்தாள் அவள்.

 

 

“நான் உம்ன்னு எல்லாம் இல்லை கம்ன்னு தான் இருந்தேன்…

 

 

“இந்த எதுகை மோனை எல்லாம் வேண்டாம் என்னனு சொல்லுங்க…

 

 

“நான் கம்ன்னு இருக்க போய் தானே நீ கும்ன்னு என் மேல சாய்ஞ்சுருக்க… என்று சொல்லி அவளை வம்பிழுத்தான் அவன்.

 

 

“போங்க பேசாதீங்க… சும்மா என்னை கிண்டல் பண்றீங்க…

 

 

“கிண்டல் எல்லாம் பண்ணலை குந்தவை நிஜமா தான் சொல்றேன்… சரி நீ சொல்லு எப்போலருந்து பிடிக்காம இருந்த என்னை உனக்கு பிடிச்சுது… அதுவும் அன்னைக்கு ஒரு நாள் என்னை பார்த்திட்டு குடிக்காரன்னு வேற திட்டினியாமே…

 

 

“இதெல்லாம் அந்த வானவன் வந்து போட்டு கொடுத்தானா அவனை… என்று பல்லைக் கடித்தாள்…

 

 

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு…

 

 

“சொல்லாம எங்க ஓடிப் போகப் போறேன்… இங்க தானே இருக்க போறேன்…அதுக்கு முன்ன நீங்க எனக்கு பதில் சொல்லுங்க…

                                                  

 

“என்ன சொல்லணும்??

 

 

“நான் உங்களை தப்பாவே ஒவ்வொரு முறையும் நினைச்சிருக்கேன்… அதெல்லாம் மீறி உங்களுக்கு எப்படி என்னை பிடிச்சுது…

 

 

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம நீ என்னை கேள்வி கேட்குறியா??

 

 

“சொல்லுங்க ப்ளீஸ்… எனக்கு தெரியணும்… இல்லன்னா தலையே வெடிச்சுடும்…

 

 

“நான் அன்னைக்கு சொன்னது தான் எனக்கு எப்போ பிடிக்க ஆரம்பிச்சுதுனே தெரியலை… ஆனா முதல்லயே எனக்கு உன்னை பிடிச்சிருக்கணும்ன்னு தோணுது…

 

 

“ஆனா அப்போ நீ அப்படி செஞ்சதுனால நான் அதை வெறுப்புன்னே நினைச்சுட்டு இருந்திருக்கேன்… நம்ம காலேஜ் முடிச்சு இத்தனை வருஷத்துல ஒரு நாள் கூட உன்னை நினைக்காம நான் தூங்கினதே இல்லை…

 

 

“ஓ!!! உங்களுக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா???

 

 

“முழுசா கேட்டுட்டு சொல்லு… எப்போ தூங்கினாலும் நீ அடிச்சது மட்டும் தான் ஞாபகத்துக்கு வரும்…உனக்கு ஒரு விஷயம் தெரியாது, ஆனா நீ அதுக்கும் என்னை தான் காரணமா நினைச்சுட்டு இருக்கன்னு எனக்கு தெரியும்…

“நம்மை கல்யாணம் முடிஞ்ச பிறகு வானவன் அதை பத்தி ஒரு முறை என்கிட்டே சொல்லி இருக்கான்…

 

 

“என்னது அது?? எதை பத்தி சொல்றீங்க???

 

 

“அன்னைக்கு ஒரு நாள் உங்க ஆபீஸ்க்கு ரவியை பார்க்க வந்தேன் ஞாபகமிருக்கா… உன்னை பார்த்திருக்கியான்னு கேட்டதுக்கு நான் கூட பார்த்ததேயில்லைன்னு சொன்னேனே…

 

 

“அதெப்படி எனக்கு மறக்கும் நல்லா ஞாபகமிருக்கு… அதுகென்ன இப்போ??

 

 

“அன்னைக்கு நீ வண்டில போகும் போது ஒரு சின்ன ஆக்சிடென்ட் நடந்துச்சே…

 

 

“அட ஆமாங்க மறந்துட்டேன்… நீங்க தானே இடிச்சுட்டு போனீங்க??? என்றதும் ஆதி அவளை முறைத்தான்.

 

 

“நீ பார்த்தியா?? நான் இடிச்சதை நீ பார்த்தியா?? எவனோ இடிச்சுட்டு போனதுக்கு எனக்கு நல்ல பேரு உன்னையெல்லாம் வைச்சு என்ன செய்யறது… எவ்வளோ அறிவு உனக்கு…

 

 

“நீங்க திட்டுறீங்களா, பாராட்டு பத்திரம் வாசிக்கறீங்களா??

 

 

“ஓ உன்னை பாராட்டுறேன்னு வேற நினைச்சியா??

 

 

“ஹ்ம்ம் அதெல்லாம் இருக்கட்டும்… என்னன்னு சொல்லுங்க?? அன்னைக்கு இடிச்சது நீங்கன்னு தான் நான் உங்களை திட்டுட்டு இருந்தேன்…

 

 

“நீ என்னைக்கு தான் என்னை திட்டாம இருந்தே… நான் உன்னை இடிச்சது நானில்லை… ஆனா நீ கீழ வண்டியோட விழுந்ததை உன்னை தாண்டி போகும் போது பார்த்தேன்…

 

 

“முதல்ல அப்படியே போயிடலாம்ன்னு தான் தோணிச்சு… அப்புறம் தான் மனசு கேட்கலை, நமக்கு தெரிஞ்ச பொண்ணாச்சேன்னு நான் தான் உன்னை பக்கத்துல இருக்க ஆஸ்பிட்டல்ல சேர்த்தேன்…

 

 

“அங்க இருந்த ஒரு அம்மாவை கெஞ்சி உனக்கு துணை வைச்சுட்டு உன் போன்ல இருந்து உன் தம்பி நம்பரை எடுத்து அவனுக்கு போன் பண்ணி விபரத்தை சொன்னேன்… உன்னோட வண்டியையும் கொண்டு வந்து ஆஸ்பிட்டல்ல நிறுத்தினேன்…

 

 

“உன் தம்பிகிட்ட பேசும் போது யாருன்னு சொல்லக் கூடாதுன்னு நினைச்சேன்… மறந்து போயி என்னோட பேரை அவன்கிட்ட சொல்லிட்டேன்… அவன் வந்து எனக்கு போன் போடவும் நான் சாவியை அந்தம்மாகிட்ட கொடுத்திட்டு கிளம்பிட்டேன்…

 

 

“நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் அவன் ஒரு தரம் சொன்னான்… நீ அந்த ஆக்சிடென்ட்க்கு கூட நான் தான் காரணம்ன்னு நினைச்சுட்டு இருந்தியாம்…

 

 

“அவனுக்கு நல்லவேளையா என்னை பத்தி முதல்லயே நீ நல்ல விதமா(?) சொல்லி வைச்சிருந்ததால உன்கிட்ட நான் தான் காப்பாத்தினேன்னு சொல்லலை…

 

 

“ஏங்க முதல்லயே சொல்லியிருக்கலாமே அவன், நீங்களாச்சும் அன்னைக்கு ஆஸ்பிட்டல் இருந்திருந்தா எனக்கு உங்களை புரிஞ்சிருக்கும்… என்றாள் அவள்.

 

 

“எப்படி எப்படி நான் அங்க இருந்திருந்தா நீ என்னை பத்தி புரிஞ்சிருப்ப… நல்லா சொன்னே போ… என்னை பார்த்ததும் தாம் தூம்ன்னு குதிச்சிருப்ப, எதுக்கு வம்புன்னு தான் நான் கிளம்பிட்டேன்…

 

 

“அதுக்கு பிறகு நீ என்னை பஸ்ல வைச்சு அடிச்சப்ப கொலைவெறி வந்துச்சு… அவ்வளவு கோபம் எனக்கு… ஒரு தப்பு செஞ்சு அதுக்கு தண்டனைன்னா கொஞ்சம் மனசு சாந்தமாகும்… செய்யாத தப்புக்கு நீ அடிச்சதும் கஷ்டமா தான் இருந்திச்சு…

 

 

“முதல்ல இருந்த ஆத்திரம் கோபம் எல்லாம் நாளாக நாளாக கொஞ்சமா கொஞ்சமா மறக்க ஆரம்பிச்சேன்… ஆனா அப்போ கூட உன்னோட நினைப்பு எனக்கு வந்திட்டே இருக்கும்…

 

 

“ஒரு வேளை எனக்கு உன்னை பிடிச்சதால அந்த நினைப்பு வந்திருக்கலாம்ன்னு அப்புறம் தான் ரியலைஸ் பண்ணேன்… நம்ம கல்யாணம் அது எப்படி நடந்திச்சுன்னு உனக்கு தெரியும்…

 

 

“உன்னோட போட்டோ கூட நான் பார்க்கவே இல்லை… கல்யாணத்தன்னைக்கு தான் உன்னை பார்த்தேனே… முதல்ல இவளான்னு கோபம் வந்தாலும் மனசுக்குள்ள ஏதோ ஒரு நிம்மதி வந்தது தான் உண்மை…

 

 

“அதுக்கு பிறகு நடந்தது தான் உனக்கே தெரியுமே… நான் எப்படி அவ்வளவு அமைதியா உன்னை ஹாண்டல் பண்ணேன்னு எனக்கே என் மேல ஆச்சரியம் தான்… உன் மேல இருந்தது கோபமும் வெறுப்பும் இல்லைன்னு கொஞ்சம் கொஞ்சமா உணர்ந்தேன்…

 

 

“அதெல்லாம் என் கண்ணை மறைச்சதுல உன் மேல வந்த லவ்வை நான் அப்போ உணராம இருந்திருக்கேன்… எப்படியோ இன்னைக்கு நீ எனக்கு கிடைச்சிருக்க… நான் எவ்வளோ சந்தோசமா இருக்கேன் தெரியுமா…

 

 

“ஒரு முறை உங்க ஆபீஸ்க்கு வந்திட்டு உன்னை பார்க்காம வந்திட்டேன்னு என்கிட்ட கேட்டியே… அப்போ தான் தோணிச்சு நீ ஒண்ணும் ரொம்பவும் கரடுமுரடானவ இல்லைன்னு…

 

 

“நான் உன்னை பார்க்க வந்திருக்கணும்ன்னு உனக்கு ஆசை இருந்தாலும் அதை நீ நாசுக்கா கேட்ட விதம் எனக்கு பிடிச்சுது… அதுக்கு பிறகு தான் நான் உன்னை கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சுக்க ஆரம்பிச்சேன்…

 

 

“சரி என்னை கதை சொல்ல சொல்லிட்டு நீ பேசாம இருக்கே… நான் எல்லாமே சொல்லிட்டேன்… இப்போ நீ சொல்லு குந்தவை… என்றான்.

 

 

“எனக்கும் உங்களை மாதிரி தான் எப்போ உங்களை பிடிக்க ஆரம்பிச்சுதுன்னு எனக்கு சத்தியமா தெரியலை… ஆனா இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் நடந்திச்சு… நீங்க ஏதோ மந்திரம் போட்டுட்டீங்க அதான் நான் இப்படி மாறி போயிட்டேன்…

 

 

“நான் இப்படி ஆவேன்னு கல்யாணத்துக்கு முன்னாடி யாராச்சும் சொல்லியிருந்தா??

 

 

“அவங்க கன்னம் பழுத்திருக்கும் அதானே…

 

 

“என்னை நல்லா புரிஞ்சு வைச்சுருக்கீங்க…

 

 

“பின்ன ரெண்டு தரம் உன்கிட்ட வாங்கியிருக்கேனே சும்மாவா..

 

 

“ஏங்க சும்மா அதை ஞாபகப்படுத்திட்டு நானே சிறுபிள்ளைத்தனமா அப்படி செஞ்சுட்டேன்… இப்போ நினைச்சா எனக்கே கஷ்டமா இருக்கு… ஏதோ நீங்க காலேஜ்ல விளையாட்டா பண்ணதை நான் சீரியஸா எடுத்து அடிச்சிட்டேன்…

 

 

“அடியே உனக்கு மாத்தி வழி சொன்னது ஒரு தப்பா அதுக்கா என்னை பதம் பார்த்தே…

 

 

“என்னது மாத்தி வழி சொன்னீங்களா போற வழியில ஒரு குழியை வெட்டி அதுல என்னை விழ வைக்க பார்த்தவர் தானே நீங்க…

 

 

“ஹேய் என்ன சொல்ற, சத்தியமா எனக்கு அங்க குழி இருக்கற விஷயம் எல்லாம் தெரியாது…

 

 

“நிஜமாவே தெரியாதா…

 

 

“தெரியாது, ஏதோ நீ வழி தேடிட்டு இருந்தியே உன்னை கொஞ்சம் ஓட்டுவோமேன்னு உனக்கு தப்பா வழி காமிச்சது தவிர நான் எந்த தப்பும் பண்ணலை… அப்புறம் குந்தவை அந்த பஸ்ல நடந்தது கூட…

 

 

“எனக்கு தெரியுங்க அன்னைக்கு நீங்க வேணும்ன்னு என் மேல வந்து விழுந்திருக்க மாட்டீங்கன்னு… உங்களை பத்தி நல்லவிதமா நான் யோசிக்க ஆரம்பிச்சப்பவே அது எனக்கு புரிஞ்சு போச்சு…

 

 

“என்னை மன்னிச்சுடுங்க… நான் வேணுமின்னே உங்களை அடிக்கலை… எல்லாம் என்னோட முன்கோபம் தான் காரணம்…சின்ன வயசில எங்க வீட்டில வானவனும் வானதியும் பிறந்த பிறகு நான் பெரிய பொண்ணு பொறுப்பான பொண்ணுன்னு சொல்லி சொல்லியே என்னை தனியாக்கிட்டாங்க…

 

 

“நீ பெரியவ எப்பவும் விட்டுக் கொடுக்கணும்ன்னு சொல்லி சொல்லி நான் எப்பவும் வானுக்காகவும் வானதிக்காகவும் எனக்கு பிடிச்சது எல்லாம் விட்டு கொடுத்திடுவேன்…

 

 

“ஆனா வெளிய யாருக்காகவும் நான் எதையும் விட்டுக் கொடுத்ததில்லை… எனக்கு எல்லாம் தெரியும் நான் செய்யறது எல்லாம் சரின்னு ஒரு பிடிவாதம் எல்லாமே எனக்கு உண்டு…

 

 

“அந்த பிடிவாத்ததுல தான் காலேஜ் முதல் நாள் அன்னைக்கு யார்கிட்டயும் விசாரிக்காம நின்னேன்… நீங்களா வந்து எந்த கிளாஸ் போகணும்ன்னு கேட்டீங்க, அப்புறம் நடந்தது உங்களுக்கு தெரியும்…

 

 

“இந்த வானு இருக்கானே அவனுக்கு வானவன்னு பேரு வைச்சதுக்கு பதில் வால்அவன்னு பேரு வைச்சிருக்கலாம்… எப்போ பார்த்தாலும் வால் பிடிச்ச மாதிரி என்னோடவே ஒட்டிட்டு திரிவான்…

 

 

“அவனுக்கு ரொம்ப மோப்ப சக்தி அதிகம்… நான் என்ன பண்ணாலும் அதை ஈசியா கண்டுபிடிச்சுடுவான்… எதுக்கு இப்போ சிரிக்கறீங்க… என்றாள் பேச்சை இடையில் நிறுத்தி.

 

 

“பின்ன உன் தம்பியை ஒரு நாய் ரேஞ்சுக்கு பேசினா எனக்கு சிரிப்பு வராம என்ன செய்யும்…

 

 

“என்னது என் தம்பி நாயா… நான் எப்போ அப்படி சொன்னேன்…

 

 

“இதோ சொன்னியே மோப்ப சக்தி அதிகம்ன்னு அதான் சொன்னேன்…

 

 

“ஆனா அவன் ரொம்ப நல்லவன், என்னை பத்தி யோசிக்கிறேன்னு எப்பவும் எனக்காக கவலைப்பட்டுட்டே இருப்பான்… இப்பவும் இந்த விஷயம் அவனுக்கு தெரியாது… தெரிஞ்சா வருத்தப்படுவான்…

 

 

“அவன்கிட்ட சொல்லாம இருக்கறதும் மனசுக்கு கஷ்டமா இருக்கு…

 

 

“அடடா போதும் குந்தவை… இவ்வளவு நேரம் என்கிட்டே சொல்லலைன்னு பீல் பண்ணே… இப்போ உன் தம்பியா… என்னை பத்தி கொஞ்சம் யோசிக்க மாட்டியா??

 

 

“டெய்லி நைட் மட்டும் நீ கட்டிப்பிடிச்சு தூங்க நான் என்ன உன் தலையணையா… அப்போ மட்டும் தான் மேடம்க்கு என் ஞாபகம் வருமோ??

 

 

“அது அது எப்படி உங்களுக்கு தெரியும்…

 

 

“எல்லாம் தெரியும்… தூக்கத்துல உன்னை எத்தனை முறை உனக்கு முத்தம் கொடுத்திருப்பேன் தெரியுமா??

 

 

“இது வேறயா?? என்று அவள் கூறவும் அவர்கள் அறைக்கதவு தட்டப்படவும் சரியாக இருந்தது…

 

 

“இப்போ இந்த நேரத்துல யாரு கதவை தட்டுறாங்க?? என்று சலித்துக் கொண்டே எழுந்தான் ஆதி….

Advertisement