Advertisement

அத்தியாயம்- 21

 

பாதநோமே நொந்தால்மனம் பேதமாமே
பாதநோக நிற்ப தேது பாவமினிக்
கூதலோ கொடிது காதலோ கடினம்

இங்கே வாராய் என்கண்ணே யிங்கே வாராய்

 

 

– திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)

 

 

“சித்தப்பா… நீங்க… எதுக்கு… வீட்டுக்கு… என்றவள் அதிர்ச்சியாய் அவரை பார்த்தாள்.

 

 

“ஒண்ணுமில்லைம்மா உன் தம்பி ராகுல் சிஏ பண்ணிட்டு இருக்கான்ல ஒரு ஆடிட்டர்கிட்ட போய்ட்டு இருக்கான்… அதான் நம்ம மாப்பிள்ளைகிட்ட பழகினா நல்லாயிருக்குமேன்னு பார்த்தேன்…

 

 

“அதுக்கு தான் வீட்டுக்கு வர்றேன்னு சொன்னேன்ம்மா… நீ பயப்படுற மாதிரி எதுவுமில்லைடா…

 

 

சற்றே ஆசுவாசமானவள் “ஹ்ம்ம் சரிங்க சித்தப்பா வாங்க… நான் அவர்கிட்ட சொல்லி வைக்கறேன்… என்றவள் அவரிடம் விடை பெற்று கிளம்பினாள்.

அலுவலகம் சென்றதும் கல்பனாவின் கழுகு பார்வை அவளையே வட்டமிடுவதை அறிந்து கொண்டாள். வேண்டுமென்றே வாணியை அழைத்தாள்.

 

 

“வாணி… நாம ரெண்டு கான்டீன் போய் ஒரு காபி சாப்பிட்டு வருவோமா… என்று கூப்பிட கல்பனா அவர்களை நன்றாக நோட்டமிடுவது தெரிந்தது.

 

 

“கற்பகம், அனிதா, ரஞ்சனிக்கா, சம்மந்தம் சார் வாங்க எல்லாருமே போவோம்… என்று கல்பனாவை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே அழைத்தாள்.

 

 

எப்போதுமே யாரிடமும் அதிகம் பேசியிராதவள் தானாக வந்து பேசியதில் அவர்கள் வாயடைத்து போயினர். மரியாதைக்காக ஓரிருவர் ஆவலுடன் எழுந்தனர், இன்னும் சிலர் இல்லை என்று மறுத்தனர்.

 

 

“என் கல்யாணத்துக்கு ட்ரீட் கேட்டீங்கள்ள அதை தான் கொடுக்கறேன்… ப்ளீஸ் எனக்காக வாங்க… என்று அவள் தன்மையுடன் அழைக்கவும் அவர்களால் மறுக்க முடியவில்லை.

 

 

கரடி போல் வந்த கல்பனா “என்ன தேவி புதுசா ட்ரீட் எல்லாம் கொடுக்கற போல, நானில்லையா இந்த ட்ரீட்ல…

 

 

“கண்டிப்பா நீங்க இல்லாமலா கல்பனாக்கா நீங்களும் வாங்க… என்றாள் அவள்.

 

 

“எல்லோரும் ஒண்ணா கிளம்பிட்டா இங்க யாரு வேலை பார்க்கறது… நீயும் நானும் மட்டும் போயிட்டு வருவோம்… என்றார் கல்பனா.

 

 

“அதுக்கு பேரு ட்ரீட் இல்லைக்கா… என்றாள் அவளும் வெடுக்கென்று.

 

 

கல்பனாவின் பேச்சில் ஓரிருவர் வேலை இருக்கிறது என அமர்ந்து விட அவள் மற்றவர்களை அழைத்து கொண்டு சென்றாள். வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு வாங்கி வருவதாக சொல்லிவிட்டு சென்றாள்.

 

 

காபி சாப்பிடும் தருவாயில் வாணியை தனியே அழைத்து பேசினாள் குந்தவை. “என்ன வாணி எல்லாரும் என்ன சொல்றாங்க பேசினியா?? எல்லோரும் ஒத்துக்கிட்டாங்களா??

 

“இல்லை குந்தவை எல்லாருமே பயப்படுறாங்க… நாம அவங்களை ரொம்பவும் போர்ஸ் பண்ண முடியாது… வேலை போய்டும் அதுக்கு பிறகு என்ன செய்யறதுன்னு எல்லாருக்குமே ஒரு பயமிருக்கு…

 

 

“இதை நான் எதிர்பார்த்தேன் வாணி… சரி நான் வேற மாதிரியே அவனை டீல் பண்ணிக்கறேன்… நாம எல்லாரும் சேர்ந்து நின்னு திருப்பி அடிச்சா அவனால தாங்க முடியாது… நான் அதை தான் செய்ய நினைச்சேன்…

 

 

“இருந்தாலும் நான் வேற ஏற்பாடு பண்ணியிருக்கேன்… பார்ப்போம் என்ன நடக்குதுன்னு… எல்லா பெண்களுக்கும் இந்த செக்சுவல் ஹாரஸ்மென்ட் பத்தி ஒரு விழிப்புணர்வு வேணும்…

 

 

“இப்படியே நாம எத்தனை நாளைக்கு தான் பயந்துட்டே இருக்கறது… வேலை போயிடுமேன்னு பயம், வெளிய தெரிஞ்சா அவமானம்ன்னு ஒரு பயம் எப்போ நாம இதிலிருந்து வெளிய வரப்போறோம்…

 

 

“என்னையும் சேர்த்து தான் வாணி சொல்றேன்… என்னோட கணவர்கிட்ட கூட என்னால சொல்ல முடியலை… என் காது கூசற அளவுக்கு பேசின அவனை நிக்க வைச்சு சாட்டையா அவன் தோலை உரிக்கணும் போல வெறி வருது எனக்கு… என்றவளின் கோபம் கட்டுக்கடங்காமல் தெரிந்தது.

 

 

“குந்தவை… குந்தவை… என்று அவளை உலுக்கினாள் வாணி.

 

 

“எனக்கு ஒண்ணுமில்லை வாணி… ஏதாச்சும் செய்யணும்… கண்டிப்பா செய்யணும்… நாம மாறணும், மாறியே ஆகணும்…என்று தனக்குள் புலம்புபவள் போல் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டிருந்தவளை அழைத்து சென்றாள் வாணி.

 

 

“குந்தவை அந்த கல்பனா நம்மையே பார்க்கறா, அவன்கிட்ட போய் எதுவும் சொல்லி வைக்க போறா… அவளை எதாச்சும் சொல்லி சமாளிக்கணும்…

 

 

“அதை நான் பார்த்துக்கறேன்… என்றவள் “என்ன கல்பனாக்கா எங்க ரெண்டு பேரையும் வைச்ச கண்ணு வாங்காம பார்த்திட்டு இருக்கீங்க… என்று கல்பனாவை பார்த்து கேட்டாள்.

 

 

“ஒண்ணுமில்லை நீங்க பேசிக்கவே மாட்டீங்களே இப்போ எப்படி நல்லா பேசிக்கறீங்க… என்ன விஷயம் என்ன பேசினிங்க… என்று எல்லாவற்றையும் ஒரே பேச்சில் கேட்டார்.

“நாங்க பேசிக்காம இருக்க நாங்க என்ன ஊமையா… ஹாய் பை சொல்ற போல தான் இப்பவும் பேசினோம்…

 

 

“அது சரி ஆனா என்ன விஷயம் பேசினீங்க… என்று கல்பனா அதிலேயே வந்து நின்றார்.

 

 

“கல்பனாக்குவுக்கு இருக்க அறிவுக்கு அவங்க ஓபாமாவுக்கு பிஏவா இருக்க வேண்டியவங்க… இங்க பாவம் நம்ம சாருக்கு பிஏவா இருக்காங்கன்னு நான் சொல்லிட்டு இருந்தேன்…

 

 

“வாணி என்னடான்னா கல்பனாக்கா இங்க இருக்கறதுனால தான் நாம எல்லாரும் இங்க நிம்மதியாவே இருக்க முடியுது அவங்க இல்லன்னா நம்ம ஆபீசே இல்லைன்னு சொல்றா என்ன வாணி…

 

 

‘இவ நிஜமா என்னை புகழ்ந்து பேசுறாளா இல்லை போட்டு பார்க்கறாளா… ஆனா இவ சொல்றதும் நல்லா தான் இருக்கு… இந்த ஆபீஸ்ல வந்து குப்பை கொட்டணும்ன்னு என்னோட தலையெழுத்து என்ன செய்ய… என்று மனதிற்குள் நினைத்து கொண்டவர் பெருமூச்சு விட்டுக் கொண்டார்.

 

 

“என்ன தேவி என்னை கிண்டல் பண்றியா??

 

 

“ச்சே என்னக்கா இப்படி பொசுக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க… உங்களை போய் அப்படி சொல்வேனா… நீங்க எனக்கு எவ்வளவு உதவி செஞ்சிருக்கீங்க… என்றாள்

 

 

மறுநாள் காலையில் சொன்னது போலவே அவளின் சித்தப்பா வீட்டிற்கு வந்தார். வாசலில் பைக் நிறுத்தும் சத்தம் கேட்டதும் யாரென்று எட்டிப் பார்த்தாள் அர்ஷிதா.

 

 

வானவன் வண்டியை நிறுத்த அதில் காக்கி உடை அணிந்தவர் இறங்கிக் கொண்டிருந்தார். இறங்கியவர் நேரே வாசலுக்கு வந்து நின்றவளை பார்த்தார். “குந்தவை… என்று அவர் ஆரம்பிக்க “எங்கண்ணி தான்…நீங்க…

 

 

அதற்குள் வண்டியை நிறுத்திவிட்டு வந்த வானவன் “இவர் எங்க சித்தப்பா தான்… வாங்க சித்தப்பா உள்ளே போவோம்…

 

 

“ஓ சாரிங்க மாமா உள்ள வாங்க… என்று சட்டென்று உரிமையாய் அழைத்தவளை புன்னகையுடன் பார்த்தார்.

“இருங்க அண்ணியை கூட்டிட்டு வர்றேன்… என்றவள் உள்ளே சென்று திரும்ப “அண்ணி குளிச்சுட்டு இருக்காங்க… இப்போ வந்திடுவாங்க… அண்ணா இப்போ வந்திடுவாங்க… என்று சொல்லிவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.

 

 

“யாருய்யா இந்த பொண்ணு?? என்றார் அவர்.

 

 

“என்ன சித்தப்பா உங்களுக்கு ஞாபகம் இல்லையா… மாமாவோட தங்கச்சி… என்றான் வானவன்.

 

 

“என்ன பண்ணிட்டு இருக்கா?? என்று அடுத்த கேள்வியை கேட்டார் அவர்.

 

 

“நம்ம வானதியோட செட்டு தான் காலேஜ் மூணாவது வருஷம் படிச்சுட்டு இருக்கா?? என்ன சித்தப்பா விசாரிப்பு பலமா இருக்கு ராகுலுக்கு பேச ஐடியாவா?? என்றான் வானவன் சிரித்துக் கொண்டே.

 

 

“பின்ன இருக்காதா, இப்படி பார்த்ததும் பிடிக்கிற பொண்ணை கேட்காம இருக்க முடியுமா… சரி மாப்பிள்ளை வரட்டும் பேசிப் பார்ப்போம் அவர் ஐடியா என்னன்னு…

 

 

“கேளுங்க கேளுங்க… நம்ம மாமா தான்… என்றவன் “சரி சித்தப்பா நீங்க பேசிட்டு வாங்க நான் காலேஜ் கிளம்பணும்… என்று எழுந்தான்.

 

 

“இருங்க எங்க கிளம்பிட்டீங்க… உங்களுக்கும் சேர்த்து தான் காபி போட்டேன்… என்ற அர்ஷி அவனிடம் ஒன்றை நீட்டிவிட்டு அவருக்கும் ஒன்றை கொடுத்தாள்.

 

 

“வானதி கிளம்பிட்டா வரச்சொல்லி சொல்லுங்க… நானும் கிளம்பிட்டேன்… என்றாள் அர்ஷிதா.

 

 

“சரிங்க அர்ஷி, அந்த வாலு இன்னும் பாத்ரூம்ல இருந்து வெளிய வரலை நான் போய் அவளை சீக்கிரம் கிளம்பி வரச் சொல்றேன்… என்று விட்டு குடித்து முடித்த காபி கோப்பையை அவளிடம் கொடுத்துவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டான்.

 

 

அதற்குள் ஆதி அங்கு வர “வாங்க மாமா… என்றான் சம்பிரதாயமாக, அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே குந்தவை அவசரமாக வெளியில் வந்திருந்தாள்.

 

இன்னமும் குளித்து முடித்த ஈரம் அவள் முகத்தில் தெரிந்தது, சித்தப்பா என்ன பேசுவாரோ என்று பதட்டமாய் அவள் வெளியில் வந்தது தெரிந்தது. “என்னங்க நேத்து நைட் சொன்னேனே ராகுல் பத்தி…

 

 

“இவங்க தான் சித்தப்பா… என்றவள் “சித்தப்பா ராகுல்க்கு ஏதோ கேட்கணும்ன்னு சொன்னீங்களே நான் நேத்தே அவர்கிட்ட சொல்லிட்டேன்… நீங்க பேசுங்க…நான் காபி எடுத்துட்டு வர்றேன்… என்று நகர்ந்தாள்.

 

 

“காபி எல்லாம் சாப்பிட்டேன்ம்மா… நான் மாப்பிள்ளைக்கிட்ட பேசிட்டு கிளம்பறேன்…

 

 

“சித்தப்பா அப்போ நீங்க டிபன் சாப்பிட்டு தான் போகணும், முதமுதல்ல வீட்டுக்கு வந்திருக்கீங்க…

 

 

“சரிம்மா சாப்பிடுறேன் இன்னொரு நாளைக்கு சரியா… நான் ஏற்கனவே வீட்டில சாப்பிட்டு தான் வந்தேன்… வயிறு டொம்ன்னு இருக்குடா…

 

 

“சரி சாப்பிட்டீங்கன்னு சொன்னதுனால விடறேன்… என்றவள் அவருக்கு கண்ஜாடை காண்பித்து உள்ளே நகர்ந்தாள்.

 

 

“சொல்லுங்க மாமா… என்றான் ஆதி அவர் கேட்க வரும்முன்.

 

 

“மாப்பிள்ளை இது என்னோட கார்ட், இதுல என்னோட போன் நம்பர் இருக்கு… நான் உங்ககிட்ட தனியா பேசணும் குந்தவை விஷயமா… இது குந்தவைக்கு தெரிய வேணாம்… என்று ரகசியம் பேசி அவர் கார்டை கொடுத்தார்.

 

 

அதை வாங்கிய ஆதி அவன் சட்டை பையில் திணிக்க அவர் தொடர்ந்தார் “மாப்பிள்ளை என்னோட பையன் ராகுல் விஷயமா தான் வந்தேன்… அவன் சிஏ பைனல் பண்ணிட்டு இருக்கான்…

 

 

“உங்க கூட இருந்தா அவனும் கத்துக்குவான்னு தான் உங்ககிட்ட கேட்கலாம்ன்னு வந்தேன்…

 

 

“அதனாலென்ன மாமா, ஆனா ராகுல்க்கு என்கிட்ட இருந்து கத்துக்கறது விட என்னோட சீனியர்கிட்ட நெறைய கத்துக்கலாம் மாமா… நானே இன்னமும் அங்க தான் கிளாஸ் எல்லாம் எடுக்கறேன்…

 

 

அவர் ரொம்ப நல்ல மாதிரி, அவர்கிட்ட நெறைய கத்துக்கலாம்… என்னோட வயசு அவரோட அனுபவம்… நீங்க என்ன சொல்றீங்க…

 

 

“நீங்க இவ்வளவு தூரம் சொல்லும் போது அது தப்பாயிருக்காது, நான் நாளைக்கே அவனை வரச் சொல்றேன் மாப்பிள்ளை… உங்ககிட்ட பேசினதுல ரொம்ப சந்தோசம் மாப்பிள்ளை….

 

 

“அப்புறம் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்… உங்க தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்க்கறீங்களா??

 

 

“இல்லை மாமா இன்னும் பார்க்க ஆரம்பிக்கலை… வரன் எல்லாம் வந்திட்டு தான் இருக்கு, அவளோட படிப்பு முடியட்டும் அப்புறம் பார்க்கலாம்ன்னு யோசிக்கறேன் மாமா…

 

 

“ஓ!!! சரி சரி.. சரிங்க மாப்பிள்ளை அப்போ நான் கிளம்பறேன்… குந்தவையை கூப்பிடுங்க சொல்லிட்டு கிளம்புறேன்… என்றதும் ஆதி அவளை அழைக்க அவள் வெளியில் வந்தாள்.

 

 

“சரிம்மா நான் கிளம்பறேன்… என்றவர் அர்ஷிதாவிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினார். அவர் சென்றதும் குந்தவை அவனருகில் வந்தவள் “சித்தப்பா என்ன சொல்லிட்டு போறார்… என்றாள்.

 

 

“அர்ஷிக்கு மாப்பிள்ளை பார்க்கறோமான்னு கேட்டுட்டு போறார்…

 

 

“ஏனாம்???

 

 

“அதை நீ அவர்கிட்ட தான் கேட்கணும்…

 

 

“நீங்க என்ன சொன்னீங்க…

 

 

“அவ படிப்பு முடியவும் தான் பார்க்க ஆரம்பிக்கணும்ன்னு சொன்னேன்…

 

 

“சரியா தான் சொல்லி இருக்கீங்க… அவ கொஞ்ச நாள் வேலைக்கு போறதுன்னா போகட்டும்… என்றதும் ஆதியின் முகத்தில் அப்பட்டமான மறுப்பு தெரிந்தது.

 

 

“இல்லை வேண்டாம், அவ வேலைக்கு எல்லாம் போய் கஷ்டப்பட வேண்டாம்… என்றான்.

 

 

“அப்போ நான் மட்டும் போகலாமா??

 

 

“உன்னை நான் போகவே சொல்லலையே… நான் வேணாம்ன்னு சொல்லியிருந்தா நீ வேலையை விட்டிருப்பியா??

 

 

“ஏன் வேலையை விடணும்??

 

 

“இதை தான் சொல்லியிருப்பன்னு எனக்கு தெரியும் அதான் நான் எதுவும் சொல்லலை… பெண்கள் வேலைக்கு போறது தப்புன்னு நினைக்கிற ஆள் இல்லை நான்…

 

 

“அப்போ ஏன் அப்படி சொன்னீங்க??

 

 

“இங்க பாரு பேசிட்டே இருந்தா வார்த்தை போயிட்டே இருக்கும்… எல்லாமே தப்பர்த்தமா தெரியும்… எனக்கு லேசுல ஒண்ணு வேணாம்ன்னு தோணாது… அப்படி தோணிட்டா நான் அதை செய்யறதும் இல்லை… என்று சொல்லிவிட்டு அவர்கள் அறைக்கு சென்றான்.

 

 

பின்னோடு வந்தவள் விடாமல் “இப்போ என்ன வேணாம்ன்னு உங்களுக்கு தோணுது… என்றவளை தன்னருகில் இழுத்து அணைத்தவன் அவள் இதழை தன்னிதழ் கொண்டு மூடினான்.

 

 

சில நிமிடங்களில் அவளை விட்டவன் “கேட்டியே என்ன வேணாம்ன்னு தோணிச்சுன்னு… இப்போ நீ பேச வேணாம்ன்னு தோணிச்சு… உன் வாயை அடைச்சா என்னன்னு தோணிச்சு… என்றவன் அவளை நோக்கி புன்சிரிப்பு சிரிக்க அவள் பதில் பேசமுடியாமல் நாணத்துடன் நின்றாள்.

 

 

“சரி தான் நீ இன்னைக்கு ஆபீஸ் கிளம்பற ஐடியால இல்லை போல… இங்கயே நிக்க போறதா உத்தேசமா… நான் போய் வண்டி எடுக்கறதுக்குள்ள வந்திடுவியா… இல்லை… என்றவன் மீண்டும் அவள் இதழை நோக்க “நான் கிளம்பிட்டேன்… என்றவள் அவனுக்கு முன் வெளியே சென்று நின்றாள்.

 

 

வண்டியில் செல்லும் போது “ஏன் இப்படி பண்ணீங்க?? என்றாள்

 

 

“என்ன செஞ்சேன்??

 

 

“தெரியாதா உங்களுக்கு??

 

 

“தெரிஞ்சுக்க தான் கேக்குறேன்…

 

 

“நீங்க வம்பு பண்றீங்க…

 

 

“நீ வீம்பு பண்ணுற??

 

 

“நான் எதுவும் கேட்கலை…

 

 

“அப்போ நான் பதில் சொல்றேன்… என்றவன் அமைதியாய் இருக்க அவளும் அமைதியாகவே இருந்தாள்.

 

 

“என்ன அமைதியா இருக்க??

 

 

“என்ன பேச??

 

 

“நீ என்னை ரொம்ப காக்க வைக்கிற, அதான் அதை ஈடு கட்ட இதெல்லாம் செய்ய வேண்டி இருக்கு…நீ லேட் பண்ண பண்ண நீ தான் கஷ்டப்படுவ…

 

 

“நான் என்ன பண்ணணும்ன்னு நினைக்கறீங்க??

 

 

“நீ ஒண்ணும் பண்ண வேணாம், என்கிட்ட பேசு மனசுவிட்டு பேசு…

 

 

“என்ன பேசணும்??

 

 

“உன்னை பத்தி பேசு, என்னை பத்தி பேசு… இல்லை நம்மளை பத்தி பேசு… நீயா என்னைக்கு என்கிட்ட வர்றேன்னு பார்க்கறேன்… என்று அவள் இறங்கியதும் அவன் சொல்ல அவள் அமைதியாய் நின்றாள்.

 

 

“என்னாச்சு… முகமெல்லாம் வாடிப் போச்சு… இப்போ தானே உன்னை கூல் பண்ணேன்… இங்க பப்ளிக்கா இருக்கே… எப்படி கூல் பண்ணுவேன்… என்று சுற்றுமுற்றும் அவன் பார்க்கவும் அவள் இறுக்கம் குறைந்து அவனை பார்த்தாள்.

அவளை இறக்கி விட்டதும் யோசனையானவன் நேரே அவளின் சித்தப்பாவை காணச் சென்றான். காலையில் அவர் வந்து சென்றதில் இருந்து அவள் முகம் வாடியது போல் தோன்றியதினால் தான் அவளை இயல்பாக்க அவளை வம்பிழுத்தான்.

 

 

அலுவலகம் வந்ததும் மீண்டும் முகம் வாடியவள் கண்டு அவன் சிந்தனை பலவாறாக சென்றுக் கொண்டிருந்தது. வாசலில் வண்டியை விட்டு அவரை அவன் லேப்டாப் பேக்கை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

 

 

அவர் கார்டை காண்பித்து பார்க்க வேண்டும் என்று சொல்ல அவர்கள் அவனை உள்ளே அனுப்பினர். கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றவனை “வாங்க மாப்பிள்ளை… என்ற குரலில் இயல்பாக அழைத்தார் அவர்.

 

 

“உட்காருங்க… என்று இருக்கையை காட்ட அதில் அமர்ந்தவன் “சொல்லுங்க மாமா என்ன விஷயம்?? என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

 

 

“இதை குந்தவை தான் உங்ககிட்ட சொல்லியிருக்கணும், இப்போ கூட அவ சொல்ல வேண்டாம்ன்னு தான் சொன்னா… எனக்கு அது சரியா படலை… அதான் உங்களை வரச்சொன்னேன்… என்றவர் இன்னமும் பூடகமாகவே பேசிக் கொண்டிருந்தார்.

 

 

“என்ன விஷயம் மாமா ரவி விஷயமா?? என்று அவன் பட்டென்று உடைக்கவும் இப்போது அவர் அயர்ந்து போனார்.

 

 

“எப்படி மாப்பிள்ளை உங்களுக்கு தெரியும்… குந்தவை சொல்லிட்டாளா?? என்றார் ஆச்சரியமாக.

 

 

“அவ சொல்லலை மாமா… அவளோட தோழி வாணி மூலமா எனக்கு தெரியும்… என்றவன் அன்றைய நாளை நினைவு கூர்ந்தான்.

 

____________________

 

 

ஆதி ஒரு முக்கிய வேலையாக வருமானவரி அலுவலகத்திற்கு சென்றிருந்தான்.

 

 

யாரோ ஒரு பெண் அவனையே பார்ப்பதை கண்டதும் ‘ச்சே யாரு இந்த பொண்ணு அந்த கல்பனா மாதிரியே பார்த்து வைக்கிறா… என்று யோசித்துக் கொண்டே அவளை கடந்து சென்றான்.

அவள் அவனிடம் “ஒரு நிமிஷம்… என்று சொல்ல அவன் திரும்பி பார்த்தான். “சொல்லுங்க யார் நீங்க?? என்றான்.

 

 

“அண்ணா என்னை உங்களுக்கு அவ்வளோ ஞாபகம் இருக்காது… நான் குந்தவை மேடத்தோட தான் வேலை செய்யறேன்… என்றாள்.

 

 

அப்பெண் அண்ணா என்றதுமே ஆதி சமாதானமடைந்துவிட்டான் இவள் கல்பனா போல் பெண் அல்ல என்ற முடிவுக்கும் வந்துவிட்டான். “சொல்லும்மா என்ன விஷயம்?? என்றான்.

 

 

“அச்சோ அண்ணா அந்த கல்பனா இங்க வந்துட்டாங்க… நான் உங்ககிட்ட பேசுறது பார்த்தா என்ன ஏதுன்னு கேட்பாங்க… அண்ணா உங்க நம்பர் சொல்லுங்க ப்ளீஸ் நான் உங்களுக்கு அப்புறம் போன் பண்றேன்… என்றதும் அவன் சொன்ன நம்பரை அவள் கைபேசியில் பதிந்து முடிக்கவும் கல்பனா அருகில் வந்து கொண்டிருக்கவும் சரியாக இருந்தது.

 

 

“அண்ணா நீங்க குந்தவை மேடத்தை பார்க்க வந்ததா சொல்லிடுங்க… இல்லன்னா அவங்க என்னை கேள்வி கேட்டுட்டே இருப்பாங்க… என்று கூற அவன் என்ன தான் நடக்கிறது என்பது போல் பார்த்தான்.

 

 

அதற்குள் அருகில் வந்திருந்த கல்பனாவின் பார்வை ஆதியிடமும் கேள்வி வாணியிடமும் இருந்தது. “என்ன கல்பனா இங்க என்ன பண்ணிட்டு இருக்க?? இவரோட உனக்கென்ன பேச்சு??

 

 

“அக்கா அவங்க குந்தவை மேடம் பார்க்க வந்திருக்காங்க… அதான் என்கிட்ட கேட்டுட்டு இருந்தாங்க… என்றாள்.

 

 

“நீ போ நான் கூட்டிட்டு வர்றேன்… என்ற கல்பனாவிடம் “எனக்கு வழி தெரியும் நான் போய்க்கறேன்… என்று மூக்குடைத்துவிட்டு அவன் குந்தவையை பார்க்க சென்றான்.

 

 

திடிரென்று அவன் வந்து நின்றதும் குந்தவைக்கு ஒன்றுமே புரியவில்லை. “என்ன ஷாக் ஆகுற, இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன்… சரி அன்னைக்கே கேட்டியே, அதான் உன்னை பார்க்கலாம்ன்னு வந்தேன்… என்றான்.

 

 

அவளை பார்த்துவிட்டு அவன் கிளம்பிவிட கொஞ்ச நேரத்தில் வாணியிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. “ஹலோ அண்ணா நான் வாணி பேசறேன், இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி ஆபீஸ்ல பார்த்தீங்களே…

 

“சொல்லும்மா என்ன விஷயம், ஏதோ பேசணும்ன்னு சொன்னியே??

 

 

“அண்ணா அது வந்து…

 

 

“சொல்லும்மா…

 

 

“அண்ணா இங்க எங்களோட சார், அதான் ரவி சார் நல்ல மாதிரி இல்லை… அவர் மேடமை பார்க்கற பார்வையே சரியில்லை… ஏதோ தப்பா மனசுக்கு படுது… அதை பத்தி உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லி வைக்கலாம்ன்னு தான் நான் போன் பண்ணேன்…

 

 

“ஏம்மா நீ இதை பத்தி குந்தவைகிட்ட பேசிட்டியா??

 

 

“இல்லண்ணா நான் அவங்ககிட்ட சனிக்கிழமை நேர்ல பார்த்து இதை பத்தி பேசலாம்ன்னு இருக்கேன்… நீங்க கொஞ்சம் அவங்களை பார்த்துக்கோங்க…

 

 

“ரொம்ப தேங்க்ஸ்ம்மா என்னை கூப்பிட்டு சொன்னதுக்கு… ஆனா உனக்கு குந்தவை பத்தி தெரியாது… அவன் தப்பா பார்த்தாலே அவ சும்மா இருக்க மாட்டா… அவன் கன்னம் ரெண்டும் பழுக்க வைக்காம இருக்க மாட்டா…

 

 

“நீ அதிகம் கவலைப்பட வேண்டி இருக்காது… இருந்தாலும் நீ குந்தவைகிட்ட இதை பத்தி பேசு… அப்படி அவளுக்கு ஒரு பிரச்சனைன்னா நானும் பார்த்திட்டு சும்மா இருக்க மாட்டேன்… என்றான் அவன்.

 

____________________

 

 

“சோ உங்களுக்கு முதல்லயே அவங்க தோழி மூலமா தெரிஞ்சிருக்கு… ஆனா மாப்பிள்ளை உங்களுக்கு எந்தளவுக்கு தெரியும்ன்னு எனக்கு தெரியலை… குந்தவை என்கிட்ட சொன்னதை நான் உங்ககிட்ட சொல்லிடறேன்….

 

 

“நீங்க அப்புறமா என்ன பண்ணலாம்ன்னு சொல்லுங்க… இது குந்தவை கொடுத்த பென் டிரைவ்… என்று அவர் கொடுக்கவும் அவன் முகம் யோசனையை சுமந்தது.

 

 

அதை வாங்கி உடனே அவன் மடிகணினியை உசுப்பி அதிலிருந்தவற்றை காபி செய்தான். “மாப்பிள்ளை நீங்க அதை அப்புறம் பாருங்க… என்றவர் குந்தவை கூறியவற்றை கூறி முடித்தார்.

 

அவர் பேசப்பேச அவனுக்கு கோபம் வருவதை அவரால் நன்றாக உணரமுடிந்தது. “இப்போ நீங்க பாருங்க… என்றதும் அவன் அந்த வீடியோ பதிவுகளை பார்க்க ஆரம்பித்தான்.

 

 

எல்லாமே பார்க்கக் முடியாது என்பதால் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிளிக் செய்து பார்த்தவன் கடைசியாக இருந்த பதிவை பார்த்ததும் கொதித்து போனான். மடிகணினியை மூடி வைத்துவிட்டு அமைதியாய் இருந்தான்.

 

 

“சொல்லுங்க மாப்பிள்ளை என்ன பண்ணலாம்… என்றார்.

 

 

“நீங்க என்ன பண்ணலாம்ன்னு இருக்கீங்க மாமா??

 

 

“குந்தவைகிட்ட பேசிட்டேன், அங்க அவளை தவிர வேற யாருமே நேரடியான புகார் கொடுக்க மாட்டாங்க போல தெரியுது… எல்லாருமே குடும்ப சூழல், வேலை போய்டுமோன்னு பயப்படுறாங்க…

 

 

“சோ இதை சைபர்கிரைம் குற்றமா தான் எடுத்து நாங்க காதும் காதும் வைச்ச மாதி விசாரிக்க முடியும். அவன் வேலை பார்க்கறது அரசாங்க உத்தியோகம் அப்படிங்கறதால நாங்க டிபார்ட்மெண்ட்க்கு சொல்லிடுவோம்…

 

 

“அந்த ஆபீஸ்ல லீகலா அவங்களும் நடவடிக்கை எடுப்பாங்க… அவனுக்கு சட்டப்படி தகுந்த தண்டனை கிடைக்கும்…

 

 

“என்ன மாமா பெரிசா தண்டனை கிடைக்கும் ஒரு ஐஞ்சு வருஷம் இல்லை ஏழு வருஷம் இப்படி தானே உள்ள போடுவீங்க… என்றவனின் குரலில் ஆற்றாமை இருந்தது.

 

 

“நம்மோட சட்டம் அப்படி தானே இருக்கு. அவனுக்கு பதவி உயர்வு, சம்பளம் உயர்வு இதெல்லாம் கட் பண்ணுவாங்க… அதிகப்பட்சமா இதனால அவன் வேலை போகலாம்…அவனுக்கு ஐம்பதாயிரம் வரை அபராதம் விதிப்பாங்க…

 

 

“சரி மாமா நீங்க சட்டப்படி என்ன செய்யணுமோ அதை செய்ங்க…

 

 

“என்ன மாப்பிள்ளை இப்படி சொல்லிட்டீங்க??

 

 

“வேற என்ன சொல்ல மாமா, அதான் குந்தவை சொல்லிட்டாளே யாருக்கும் எந்த பிரச்சனையும் வராம செய்யணும்ன்னு… அப்புறம் என்ன மாமா செய்ய முடியும்…என்ன குந்தவை இந்த பிரச்சனையை பத்தி என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்…

 

 

“மாப்பிள்ளை அவளோட நிலைமை…

 

 

“புரியுதுங்க மாமா, என்கிட்ட கூட சொல்ல முடியாத அளவுக்கு அவளுக்கு மனவேதனை இருக்குன்னா அவன் எவ்வளவு பேசியிருக்கணும்… நீங்க என்ன பண்ணணுமோ அதை பண்ணுங்க…

 

 

“ஆனா ஒண்ணு அவனை நான் பார்க்கணும்… குந்தவை என்கிட்ட சொல்ல முடியாத அளவுக்கு அவன் என்ன பேசினான்னு எனக்கு தெரிஞ்சாகணும் மாமா… அதை மட்டும் நீங்க எனக்காக பண்ணுங்க… என்றான் அவன்.

 

 

அவன் இவ்வளவு அமைதியாய் இருந்ததே அவருக்கு சற்று வியப்பு தான், “சரி மாப்பிள்ளை… இன்னைக்கு ஈவினிங் இல்லைன்னா நாளைக்கு காலையில அவன் இங்க இருப்பான்…

 

 

“எப்போ அவனை இங்க கூட்டிட்டு வந்தாலும் முதல்ல உங்களுக்கு சொல்லிடறேன் போதுமா…

 

 

“தேங்க்ஸ் மாமா… குந்தவைகிட்ட எனக்கு தெரியாதா மாதிரியே சொல்லிடுங்க… அவளா எப்போ சொல்றாளோ அப்போ சொல்லட்டும்… என்றவனின் பார்வையில் வலி இருந்ததை அவரால் உணரமுடிந்தது.

 

 

‘இந்த பொண்ணு இவரை பத்தி சரியா புரிஞ்சுக்காம சொல்ல வேணாம்ன்னு சொல்லிடுச்சே… மாப்பிள்ளை பாவம் வருத்தமா போறார்…

 

 

“மாப்பிள்ளை உங்களுக்கு குந்தவை மேல எதுவும் கோபமில்லையே??

 

 

“இல்லை மாமா எனக்கு அவ மேல கோபமெல்லாம் இல்லை… வருத்தம் தான் என்கிட்ட ஷேர் பண்ணிக்கலைன்னு வருத்தம் தான் இருக்கு… சரிங்க மாமா நான் கிளம்பறேன்… என்று விட்டு அங்கிருந்து கிளம்பினான்….

Advertisement