Advertisement

அத்தியாயம்- 20

 

கண்க ளிரண்டுமம்புக் கணைபோல் நீண்டிருக்கும்
கையத் தனையகலங் காணுமடா
பெண்கள் மயக்குமவள் விரகப்பார்வை சிங்கி

பிடித்தால் மதப்பயலும் பெலப்பானோ

கறுப்பி லழிகியடா என்சிங்கி கறுப்பி லழகியடா…

 

– திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)

 

 

குந்தவை ஒரு முடிவுடன் எழுந்தாள், ஆதியின் நிதானமும் அர்ஷிதாவின் பொறுமையும் அவளை வியக்க வைத்ததில் அதை கடைபிடிக்க வேண்டுமென எண்ணியவள் நிதானமாய் யோசிக்க அவள் ஒரு முடிவெடுத்தாள்.

 

 

குளியலறை சென்று நீரை எடுத்து முகத்தில் அடித்து கழுவினாள். தலைவாரி பொட்டிட்டு ஆதிக்கு போன் செய்தாள். “சொல்லு குந்தவை வீட்டுக்கு சாப்பிட வரணுமா… என்று கிண்டலடித்தான் அவன்.

 

 

அவனின் பேச்சில் மனம் இன்னும் லேசானது போல் இருந்தது. “நீ ஏதோ சொல்ல வந்த நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன்… சொல்லு குந்தவை… என்றான்.

 

 

“நான் கோவில்க்கு போயிட்டு வந்திர்றேன்… அதை சொல்ல தான் கூப்பிட்டேங்க…

 

 

“நான் வந்து கூட்டிட்டு போகணுமா??

 

 

“இல்லைங்க பரவாயில்லை உங்களுக்கு வேலை இருக்கும்ல நீங்க பாருங்க… இங்க பக்கத்துல இருக்க கோவில் தான் நானே போயிட்டு வந்திடறேன்…

 

 

“ஹ்ம்ம் சரி குந்தவை பார்த்து போயிட்டு வா… நான் வரணும்ன்னா போன் பண்ணு சரியா…

 

 

“ஹ்ம்ம் சரிங்க… நான் சாவியை அர்ஷிகிட்ட கொடுத்திட்டு கோவில்க்கு கிளம்பறேன்… என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள். வீட்டை பூட்டி சாவியை எதிர்வீட்டில் படித்துக் கொண்டிருந்த அர்ஷிதாவை கூப்பிட்டு கொடுத்துவிட்டு அவர்களின் வீட்டிற்கு சென்றாள்.

 

 

“ஹேய் குந்தவை வாடா வா… இப்போ தான் நீயா நம்ம வீட்டுக்கு வந்திருக்க… நானே சாயங்காலம் வரலாம்ன்னு நினைச்சேன்… வா வா உனக்கு பிடிக்குமேன்னு பணியாரம் செஞ்சேன்… நீயே வந்திட்ட… என்றவர் அதை ஒரு தட்டில் வைத்து மகளுக்கு கொண்டு வந்து கொடுத்தார்.

 

 

அதே வீட்டில் எத்தனையோ முறை பணியாரம் சாப்பிட்டிருப்பாள்… ஏனோ திருமணத்திற்கு பின்னான அவள் தாயின் கவனிப்பு அவளுக்கு புதுமையாய் இருந்தது.

 

 

தன்னை தாங்குவது போல் இருந்தது அவளுக்கு, லேசாக கண்ணை கரிக்க கண்சிமிட்டி ஈரத்தை உள்ளுக்கிழுத்தாள். சூடான பணியாரத்தை உள்ளே தள்ளியவளுக்கு சூடாக காபி அருந்தவேண்டும் என்று தோன்றியது.

 

 

அவள் எண்ணி முடிப்பதற்குள் அவள் அன்னை காபியுடன் வந்து நின்றார். “இந்தாடா செல்லம் உனக்கு காபி சாப்பிட்டே சூடா பலகாரம் சாப்பிட பிடிக்கும்ல… என்று சொன்னதும் எதுவோ தொண்டையில் அடைத்தது அவளுக்கு.

 

 

காபியை பருகி முடித்தவள் வந்த வேலையை மறக்காமல் அவள் கேட்க வந்ததை கேட்டாள்… “அம்மா நம்ம சித்தப்பா ஒருத்தர் போலீஸா இருக்கார்லம்மா… அவர் சென்னையில தானே இருக்கார்… என்று ஆரம்பித்தாள்.

“அதை எதுக்குக்கா இப்போ நீ கேட்குற… என்றவாறே வந்த வானவன் அவளருகில் வந்து அமர்ந்தான். அவனுக்கு உள்ளூர லேசான ஒரு உதறல் இருந்தது… அக்கா ஏதோ பேசி மாமா வேறு கோபமாக பேசியிருக்கிறார்…

 

 

இவள் அதை மனதில் வைத்து போலீஸ் என்று கூறுகிறாளோ என்ற பயம் அவனுக்கு இருந்தது. குந்தவை ஒரேடியாக அப்படி செய்பவள் அல்ல என்றாலும் அவன் சற்றே கலக்கமாய் இருந்தான்…

 

 

அப்படி மாமா அவளை அதிகம் பேசியிருந்தால் இவள் அழுதிருப்பாளே தவிர இவ்வளவு கூலாக பணியாரம் சாப்பிட்டுக் கொண்டிருக்க மாட்டாள் என்று தோன்றிய பிறகே அவன் மனம் அமைதியடைந்தது.

 

 

அதன் பின்னே இயல்பானவன் அவள் தட்டில் இருந்த பணியாரம் ஒன்றை எடுத்து ஸ்வாகா செய்துக் கொண்டே “அக்கா கேட்கிறேன் என்ன பதில் சொல்லாம இருக்கே… என்றான்.

 

 

‘அச்சோ இவன் வீட்டில இருப்பாங்கறதை மறந்திட்டோமே… என்று எண்ணியவள் “அது ஒண்ணும்மில்லை வானவா என்னோட ஆபீஸ்ல கூட வேலை பார்க்கற பொண்ணுக்கு ஒரு சின்ன பிரச்சனை…

 

 

“அதான் நம்ம சித்தப்பாகிட்ட ஒரு ஆலோசனை கேட்டு அப்புறம் அது போல செய்யலாம்ன்னு ஒரு எண்ணம்…

 

 

“வேற ஒண்ணுமில்லையே… என்றவன் அவளை ஆழ்ந்து பார்க்க “இல்லை… என்று சொல்லி தலையாட்டினாள்.

 

 

“ஆனா அவரை எதுக்கு தொல்லை பண்ணுற, என்ன விஷயம்ன்னு சொல்லு…என் பிரின்ட் அப்பா போலீஸ் தான் நான் அவரை விசாரிச்சு சொல்றேன்… என்று குண்டை தூக்கி போட்டான் அவன்.

 

 

“அதெல்லாம் வேணாம், நான் சித்தப்பாகிட்ட பேசிக்கறேன்… அம்மா நீங்க அவரோட நம்பர் தாங்கம்மா…

 

 

“ஹேய் மந்தி நான் தான் சொல்றேன்ல…

 

 

“வானவா போதும் பேசாம இரு… நான் பார்த்துக்கறேன்… என்று அதட்டலாக பேசினாள்.

 

“அக்கா… என்று அவன் வாயெடுக்க “என்ன வானவா எப்போ பார்த்தாலும் அக்காவை எதிர்த்து எதிர்த்து சொல்லிட்டு… அவளுக்கு தெரியாததா உனக்கு தெரிய போகுது… அதெல்லாம் அக்கா பார்த்துக்குவா நீ பேசாம இரு… என்று அன்னை அதட்டல் போடவும் அவன் அமைதியானான்.

 

 

அவள் அன்னையிடம் அவரின் எண்ணை வாங்கிக் கொண்டு கிளம்பியவள் கோவிலுக்கு செல்வதற்குள் வாணி இருமுறை அவளை அழைத்து விட்டாள்.

 

 

கோவிலில் வாணியை பார்த்ததும் அவள் ஏதோ பேச வர “வாணி நாம முதல்ல சாமி கும்பிட்டு வந்திடுவோம்… என்று கூறியவள் அர்ச்சனை ஒன்றை வாங்கி கடவுளுக்கு அர்ச்சனை செய்து மனமார கடவுளை பிரார்த்தனை செய்த பின்னே வாணியை அழைத்துக் கொண்டு ஒரு ஓரமாக சென்று அமர்ந்தாள்.

 

 

“சொல்லு வாணி என்ன பேசணும் என்கிட்ட, எதுனாலும் நாம ஆபீஸ்லயே பேசியிருக்கலாமே…

 

 

“அது வந்து மேடம் அதெல்லாம் ஆபீஸ்ல பேச முடியாது… என்றவளை கையமர்த்தி தடுத்தாள் குந்தவை.

 

 

“என்னை பேர் சொல்லியே கூப்பிடு வாணி, நமக்கு கிட்டதட்ட ஒரே வயசு தான் இருக்கும்… என்றாள்.

 

 

“ஹ்ம்ம் சரி மேடம்… சாரி குந்தவை… அப்படி கூப்பிடலாம்ல… என்றாள்.

 

 

“தாராளமா கூப்பிடு…சரி ஏதோ சொல்ல வந்த அதை சொல்லு…

 

 

“நான் ஒண்ணு கேட்பேன், நீங்க அதுக்கு பதில் சொல்லணும்… கோபப்படக் கூடாது…

 

 

“என்னன்னு சொல்லு முதல்ல…

 

 

“நீங்க ரவி சார் பத்தி என்ன நினைக்கறீங்க??

 

 

எதிரிலிருந்தவளை ஆழ்ந்து நோக்கியவள் “அவரை பத்தி நான் நினைக்க என்ன இருக்கு…

 

 

“அதில்லை குந்தவை அவர் எப்படி நல்லவரா கெட்டவரா… அதை பத்தி அப்படி எதுவும் உங்க அபிப்பிராயம் என்ன???

 

 

“எனக்கு எந்த அபிப்பிராயமும் இல்லை வாணி… ஆனா நீயேன் இதெல்லாம் என்கிட்ட கேட்குற, எதுவா இருந்தாலும் நேரடியா பேசு… இப்படி சுத்தி வளைக்காதே…

 

 

“இவ்வளவு நேரம் நீ கேட்டே, இப்போ நான் கேட்கறேன்… அந்த ரவியை பத்தி நீ என்ன நினைக்கிற, அவர் நல்லவரா இல்லை கெட்டவரா… என்று வாணி கேட்டதையே அவள் திருப்பி படித்தாள்.

 

 

“குந்தவை… என்றவள் விழித்தாள் “சொல்லு வாணி நீ என்ன நினைக்கிற…

 

 

“நல்லவனில்லைன்னு நினைக்கிறேன்… என்று பட்டென்று உடைத்தாள்.

 

 

“எதை வைச்சு சொல்ற…

 

 

“ஐயோ குந்தவை ப்ளீஸ் நீங்க அவனை நம்பாதீங்க… இப்போலாம் அவன் உங்களை பார்க்கற பார்வையே சரியில்லை… உங்களுக்கு அடிக்கடி அவனோட ரூம்ல கூப்பிட்டு வேலை கொடுக்கறான்… புரிஞ்சுக்கோங்க… என்றாள்.

 

 

“வாணி நான் கேட்கிறது பதில் சொல்லு… உன்னை அவன் எப்பவாச்சும் மிரட்டினானா…

 

 

“அது… அதெல்லாம் இல்லை…

 

 

“உண்மையை சொல்லு வாணி…எனக்கு தெரியும் நான் பார்த்தேன், அந்த வீடியோ பதிவுல உன்னையும் நான் பார்த்தேன்… ஒரு நாலு மாசம் முன்ன அதாவது நான் வர்றதுக்கு முன்னாடி நடந்த விஷயம் இது…

 

 

“மதிய சாப்பாடு நேரத்துல உன்னை வேலை கொடுத்து உள்ள வரவைச்சு நீங்க நெருக்கமா இருக்க… என்று அவள் முடிப்பதற்குள் வாணியின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.

 

 

“குந்தவை அது உங்களுக்கு… எப்… எப்படி தெரியும்… நான் எந்த தப்… தப்பும் செய்யலை குந்தவை… அவன் வேணுமின்னே அப்படி எடுத்திருக்கான்… நான் யதார்த்தமா தான் போனேன்… என்றவள் அழுகையினூடே பேசினாள்.

 

“இங்க பாருங்க வாணி அழறதை முதல்ல நிறுத்துங்க… நாம அழறதுக்கு எதுவுமே இல்லை… எனக்கு ஒரு விஷயம் புரியலை, அவன் இது மாதிரி எத்தனை பொண்ணுங்களை டார்ச்சர் பண்ணியிருப்பான்…

 

 

“ஏன் யாருமே அவன் மேல புகார் எதுவும் கொடுக்கலை… நீங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்து அவர் மேல ஒரு புகார் கொடுத்திருக்கலாமே…

 

 

“எனக்கும் அப்படி தோணிச்சு குந்தவை ஆனா யாருமே ஒழுங்கா பேசவே மாட்டேங்குறாங்களே… அதுவும் இல்லாம எல்லாருமே கொஞ்சம் ஒரு மாதிரி என்றாள் வாணி.

 

 

குந்தவையின் யோசனை முதல் நாள் கல்பனா மற்ற பெண்கள் பற்றி சொல்லியதில் நின்றது. அதே யோசனையுடன் “ஏன் வாணி, ஒண்ணு யோசிச்சியா… கல்பனாக்கா மட்டும் எல்லார் கூடவும் பேசுறாங்க அதெப்படி…

 

 

“ஆமாம் குந்தவை நீங்க சொல்றதும் சரி தான்… நானும் இதை யோசிக்கவே இல்லை…

 

 

“வாணி நான் நினைக்கிறது சரின்னா கல்பனாக்காவும் அந்த ரவியோட ஆளா தான் இருக்கணும்… ஆனா ஏன் இப்படி பெண்ணுக்கு பெண்ணே எதிரியா இருக்காங்க…

 

 

“குந்தவை எனக்கு இப்போ தான் ஒண்ணு நினைவுக்கு வருது… நான் ஆபீஸ்ல சேர்ந்த புதுசுல எல்லார் பத்தியும் கல்பனாக்கா ஒரு விதமா தான் சொன்னாங்க… அதுல இருந்து நானும் யார்கிட்டயும் அவ்வளவா வைச்சுக்கிட்டது கிடையாது…

 

 

“என்கிட்ட மட்டும் நல்லா பேசறியே இப்போ எப்படி வாணி??

 

 

“அது… உங்களை பத்தி கூட அவங்க என்கிட்ட தப்பும் தவறுமா சொல்லி வைச்சிருக்காங்க… ஆரம்பத்துல நானும் உங்களோட அவ்வளவு பேசினது இல்லை… நீங்க ரவி சாரை வளைச்சு போட பார்க்கறீங்க இப்படில்லாம் பேசினாங்க…

 

 

“இவ்வளவு பேசினாளா அவ… என்ற குந்தவை இப்போது கல்பனாவிற்கு கொடுத்திருந்த மரியாதையை விட்டாள்…

 

 

“அதுக்கு பிறகு நீங்க ஒரு முறை நான் பண்ண தப்புக்கு அழுதுட்டு இருக்கும் போது, அதை உடனே சரி பண்ணி என்னை பார்த்து சினேகமா சிரிச்சுட்டு போனீங்க… அதுல இருந்து உங்களை தப்பாவே என்னால நினைக்க முடியலை…

 

 

“ஆனாலும் உங்ககிட்ட நான் அப்பவும் வந்து பேசினதில்லை… நீங்க கல்யாணம் ஆகி வந்தீங்க தெரியுமா… அண்ணாவை எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி பேசினீங்கள்ள… அதெல்லாம் ரொம்ப பிடிச்சுது…

 

 

“அண்ணாவும் பார்க்க நல்ல மனுஷனா தெரிஞ்சார்… உங்களை என்னால ஒரு துளிகூட சந்தேகப்பட முடியலை… அதுக்கு பிறகு தான் ரவி சார் உங்ககிட்ட நடந்துக்கற முறையை நான் கவனிச்சேன்…

 

 

“அதைப்பத்தி உங்ககிட்ட எச்சரிக்கை பண்ண தான் இன்னைக்கு உங்களை வரவே சொன்னேன்… என்றாள் வாணி.

 

 

“வாணி இந்த கல்பனா எப்படி அதை பத்தி உனக்கு தெரியுமா??

 

 

“குந்தவை நான் சொல்றேன்னு நினைக்காதீங்க… முதல்ல அவங்க ரொம்ப நல்ல மாதிரி அப்படி இப்படின்னு நானும் எல்லார் போலவும் நினைச்சேன்… ஆனா அன்னைக்கு அண்ணா ஆபீஸ் வந்திருக்கும் போது அவங்க ரொம்ப அண்ணாகிட்ட வழிசலா பேசினது பிடிக்கலை…

 

 

“அதுக்கு முன்னாடியும் அவங்க நெறைய பேர்கிட்ட அப்படி பேசியிருக்காங்க… அப்போலாம் எனக்கு எதுவும் தோணினது இல்லை… ஆனா அண்ணா வந்திருக்கும் போது அவங்க பேசினது எனக்கு சுத்தமா பிடிக்கலை… என்று அவள் அதிருப்தியை அப்பட்டமாய் வெளிபடுத்தினாள் அவள்.

 

 

குந்தவைக்கும் அந்த தினம் நினைவு வந்தது… சென்ற வாரத்தில் ஒரு நாள் ஆதி ஏதோ வேலையாக வந்திருந்தவன் அவளை பார்த்து செல்ல வந்திருந்தான். அப்போது கல்பனா அவனை இழுத்து பிடித்து பேசிக் கொண்டிருந்ததை அவளறிவாள்.

 

 

“ஏன் குந்தவை சார் உங்களை எதுவும் மிரட்டினாரா??

 

 

குந்தவை அவன் அவளிடத்தில் பேசியதை சொல்ல அதிர்ச்சியுடன் அவள் மற்றவளை பார்த்தாள். “என்ன சொல்றீங்க அவன் இந்தளவுக்கு உங்ககிட்ட பேசியிருக்கான்…

“நீங்க எப்படி இவ்வளவு அமைதியா இருக்கீங்க… அண்ணாகிட்ட எல்லாம் சொல்லிட்டீங்களா??

 

 

“நான் ஏன் பயப்படணும் வாணி… தப்பு பண்ணிட்டு அவனே தைரியமா இருக்கான்… நான் தான் எந்த தப்புமே பண்ணலையே…

 

 

“இருந்தாலும் குந்தவை நீங்க இதை பத்தி அண்ணாகிட்ட சொல்லிட்டீங்களா… சொல்லலைன்னா சொல்லிடுங்க அவங்க உங்களுக்கு சப்போர்ட்டா இருப்பாங்க…

 

 

“அவர்கிட்ட நான் இன்னும் எதுவும் சொல்லலை வாணி… அவர்க்கு ரொம்ப கோபம் வரும்… இந்த விஷயம் தெரிஞ்சா தேவையில்லாத ரசாபாசம் ஆகிப் போகும்… அதுவும் இல்லாம அவன் என்னை எடுத்த போட்டோ பார்த்தா அவர் கொலைவெறி ஆவார்…

 

 

“அப்போ சொல்ல போறதில்லையா குந்தவை… நீங்க சொல்லாம இருக்கறது வேற தேவையில்லாம பின்னாடி எதுவும் பிரச்சனையை கொண்டு வந்திட போகுது…

 

 

“நான் இந்த பிரச்சனை முடிஞ்சதும் அவர்கிட்ட சொல்லிடுவேன்… இப்போ வேணாம் என்னால அவரை பார்த்து இதெல்லாம் சொல்ல முடியாது… ஒரு தரம் சொல்லி அவர் கோபப்பட்டதே போதும்… என்றவள் அவர்கள் சினிமாவிற்கு சென்ற தினத்தை நினைவு கூர்ந்தாள்.

 

____________________

 

படம் பார்த்துக் கொண்டிருந்த தருவாயில் குந்தவை இயல்பாய் இல்லாமல் ஒருவாறு நெளிந்து நெளிந்து அமர்வது கண்ணில் பட்டது ஆதிக்கு…

 

 

“என்னாச்சு ஏன் இப்படி இருக்க??

 

 

“இல்லை… அது… அது வந்து…

 

 

“என்னாச்சுன்னு சொல்லு??

 

 

“யாரோ பின்னால் கை வைக்குறாங்க… கால் வைக்குறாங்க… என்று அவள் சொல்லவும் ஆதி எழ முற்பட “ப்ளீஸ் கொஞ்சம் சும்மாயிருங்க… இப்போ எழுந்தா தேவையில்லாம எல்லாருக்கும் டிஸ்டர்ப் ஆகும்…

 

“அதுக்கு என்னை சும்மா இருக்க சொல்றியா… எவன் அவன்னு எனக்கு தெரிஞ்சே ஆகணும்… என்றவனின் விழிகள் இருளிலும் ரௌத்திரத்தை பிரதிபலிக்க குந்தவை அயர்ந்து போனாள்.

 

 

இருவருமே வெகு நிதானமான குரலிலேயே பேசிக் கொண்டிருந்ததாலும் சுவாரசியமான படம் என்பதாலும் யாரும் இவர்களை கவனிக்கவில்லை… ஆதி மீண்டும் எழ முற்படவும் இடைவேளை விடவும் சரியாய் இருந்தது.

 

 

மனதிற்குள் ஏதோ எண்ணியவனாய் குனிந்து குந்தவையிடம் “நீ மட்டும் இங்க உட்காரு… நான் எல்லாரையும் அழைச்சுட்டு போறேன்… அவன் யாருன்னு நான் பார்க்கணும்… என்றுவிட்டு அனைவரையும் அழைத்துக் கொண்டு வெளியில் சென்றான்.

 

 

“மாமா அக்கா வரவேயில்லை… சரி நான் கூட்டிட்டு வர்றேன்… நீங்க போங்க… என்றவன் மீண்டும் அவர்கள் இருப்பிடம் நோக்கி வர பின்னிருக்கையில் யாருமேயில்லை.

 

 

அவர்கள் சீட்டிற்கு மூன்று இருக்கை முன்னால் வழியில் ஒருவன் நின்றுக் கொண்டு குந்தவையை பார்ப்பது போல் தெரிந்தது அவனுக்கு. அவனை கண்டும் காணாமல் வந்தவன் குந்தவை அருகில் வந்தான்.

 

 

அவளோ சேலையை இழுத்து போர்த்திக் கொண்டு அமர்ந்திருந்தாள். “என்னாச்சு… எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்க… என்றான்.

 

 

“இல்லை அது… என்று அவள் மீண்டும் இழுக்க “சும்மா அது இதுன்னு இழுக்காதே… அங்க நிக்கறவன் உன்னையே பார்த்திட்டு இருக்கானே. அவன் எதுவும் தொல்லை பண்றானா… என்றான்

 

 

“ஹ்ம்ம் ஆமாம் நீங்க எழுந்து போன கொஞ்ச நேரத்துலயே இங்க வந்து நிக்கறான்… அப்படி இப்படி நகராம என்னை பார்த்துட்டே இருக்கான்… என்றவள் தவிப்பாய் அமர்ந்திருப்பது புரிந்தது அவனுக்கு.

 

 

ஆதி அவள் அருகில் வந்து அமரவுமே அங்கு நின்றிருந்தவன் நகர்ந்து சென்றான். ஆதியும் பின்னோடு எழுந்து சென்றவன் வரும் போது கையில் ஐஸ்கிரீமுடன் வந்து சேர்ந்தான்.

 

 

இடைவேளை முடியவும் எல்லோரும் வந்து அமர்ந்தனர். “ஒண்ணுமில்லை பயப்படாதே குந்தவை… என்றவன் அவள் கையை தனக்குள் இறுக்கிக் கொண்டான். படம் முடியும் வரையும் கூட அவன் கையை விடவில்லை… படம் முடிந்து ஆட்டோவில் ஏறும் வரை அவள் கையை விடாது பிடித்திருந்தான் அவன்.

 

 

அவர்கள் எழுந்து வெளியே வரும் போது தான் குந்தவை அவனை கவனித்தாள், இடைவேளை நேரத்தில் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் கன்னம் வீங்கி ஒரு ஓரத்தில் வெளியே அமர்ந்திருந்தான்.

 

 

அவள் திரும்பி ஆதியை பார்க்க அவனோ எதுவுமே நடக்காதது போல் அமைதியாயிருந்தான்.

 

____________________

 

 

அவள் அன்றைய நினைவில் இருந்து தன்னை மீட்டவள் “வாணி இப்போ நீ எனக்கு உதவி பண்ணணும்…

 

 

“சொல்லுங்க குந்தவை நான் கண்டிப்பா செய்யறேன்… நம்ம ஆபீஸ்ல இருக்க எல்லா பெண்களையும் ஒண்ணா சேர்க்கணும்… எல்லாருமே சேர்ந்து அவன் மேல புகார் கொடுத்தா தான் நடவடிக்கை எடுப்பாங்க…

 

 

“நாம ரெண்டு பேரும் சேர்ந்து அவங்களை ஒண்ணு திரட்டணும்… சரியா வாணி…

 

 

“குந்தவை அது சரியா வரும்ன்னு எனக்கு தோணலை…

 

 

“ஏன் அப்படி சொல்ற வாணி…

 

 

“அவங்க எல்லாரும் நடுத்தர வர்க்கத்துல இருந்து வேலைக்கு வர்றவங்க, அவன் ஏற்கனவே எல்லாரையும் மிரட்டி இருப்பான்… என்னையும் மிரட்டியிருக்கான்…

 

 

“நான் எதுவும் வெளியே சொன்னா அந்த வீடியோவை நெட்ல போட்டிருவேன்னு சொல்லியிருக்கான்… என்னால இந்த வேலையை விட்டு போக முடியலை…

 

 

“கவர்மென்ட் வேலையாச்சேன்னு வீட்டில வேலை விடவேண்டாம்ன்னு சொல்றாங்க… என்னோட குடும்ப சூழ்நிலை நானும் வேலைக்கு போக வேண்டிய கட்டயாத்துல இருக்கேன்…

“இவன் எப்படியும் இன்னும் ஒரு ரெண்டு மூணு வருஷத்துல ட்ரான்ஸ்பர் ஆகிடுவான் அது வரைக்கும் பொறுத்துக்குவோம்ன்னு அமைதியா இருக்கேன்… என்னை போல தான் எல்லாருமே நினைப்பாங்க… அதுக்கு தான் சொன்னேன் குந்தவை…

 

 

“வாணி என்னோட நிக்க நீங்க முதல்ல தயாரா இருக்கீங்களா…

 

 

“உங்க தைரியம் பார்த்து நான் பிரமிச்சு தான் போறேன் குந்தவை… எனக்கு ஒரு தெம்பு வந்திருக்கு, கண்டிப்பா நான் உங்க கூட இருப்பேன்…

 

 

“அது போதும் வாணி… நாம முதல்ல எல்லார்கிட்டயும் பேசி பார்ப்போம்… நமக்கு நேரம் குறைவா தான் இருக்கு… இன்னைக்கே உனக்கு தெரிஞ்சவங்ககிட்ட நீ பேசு…

 

 

“நான் ஆபீஸ்க்கு திங்கள்கிழமை வருவேன்ல அப்போ பேசி பார்க்கறேன்… எனக்கொண்ணும் இந்த விஷயம் பெரிசில்லை, நான் வேலையை விட்டு போக எனக்கு அஞ்சு நிமிஷம் ஆகாது….

 

 

“நான் வேலைக்கு போய் தான் ஆகணும்ன்னு அவர் நினைக்க மாட்டார்… இந்த பிரச்சனையில இருந்தும் என்னால வெளிய வர முடியும் ஆனா இதெல்லாம் நான் தப்பிக்கிற வழி மட்டும் தான்…

 

 

“நாம எல்லாருமே அவன்கிட்ட இருந்து தப்பிக்கணும், இனி ஒரு தரம் இப்படி ஒரு தப்பு பண்ண அவனுக்கு தோணக்கூடாது… அதுக்காக தான் பார்க்கறேன்… என்றவன் குந்தவையின் பேச்சில் நிஜமான கோபமும் அக்கறையும் தெரிந்ததை வாணி உணர்ந்தாள்.

 

 

“நான் ஒரு முயற்சி பண்ணிட்டு இருக்கேன்… அவனை எப்படி சரி பண்ணுறதுன்னு பார்க்கறேன்… சரி வாணி நீ எதுவும் கவலைப்படாதே தைரியமா இரு… அவனை ஒரு கை பார்த்திடலாம்…கிளம்புவோமா… என்றவள் எழுந்து நின்றாள்.

 

 

இருவரும் கிளம்பி தத்தம் வீடுகளுக்கு சென்றனர். இரவு உணவு முடிந்து படுத்ததும் ஆதி உறங்கும் வரை பார்த்திருந்த குந்தவை அவனை நெருங்கி அவன் நெஞ்சின் மீது சாய்ந்துக் கொண்டாள்.

 

 

இப்போது தான் அவளுக்கு நிம்மதியாய் இருக்க உறக்கமும் அவளை தழுவியது… காலையிலே கண் விழித்துவிட்ட ஆதி அவன் மேல் சாய்ந்து படுத்திருந்தவளை ஆச்சரியமாய் பார்த்தான். அவளாய் வந்து படுத்திருக்கிறாளா, இல்லை தெரியாமல் வந்து படுத்துவிட்டாளா என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

 

 

எப்படி இருந்தாலும் அவள் இப்போது அவனருகில் படுத்திருப்பது அவனுக்குமே சுகமாய் தானிருந்தது. இவ்வளவு நெருக்கமாய் படுத்திருந்தவளை பார்த்ததும் அமைதியாய் இருக்க அவனால் முடியவில்லை.

 

 

குனிந்து அவள் நெற்றில் கன்னத்தில் முத்தமிட்டவன் பின் அவள் இதழிலும் முத்தமிட்டு எழுந்தான். அவன் குளியலறை சென்றிருக்க மெதுவாய் அவன் சென்றதை உறுதிபடுத்தி விழித்த குந்தவை முகமெங்கும் அவன் கொடுத்த முத்தத்தின் ஈரத்தை உணர்ந்தாள்.

 

 

மனம் அமைதியாய் இருக்க அவளும் எழுந்துக் கொண்டாள். இன்று அவள் சித்தப்பாவை சந்திக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள், அலுவலக நாட்களில் காலையும் மாலையும் ஆதி எப்படியும் உடன் வருவான்.

 

 

எங்கும் செல்ல முடியாது, இன்றும் கூட அவள் வெளியில் கிளம்பினால் ஆதியும் உடன் வரவே செய்வான்… ஆனால் வெளியில் செல்ல வேண்டுமே என்ன செய்ய என்று யோசித்தவள் மறுநாள் உணவு இடைவெளியில் அவரை சந்திக்க முடிவு செய்தாள்.

 

 

திங்களன்று அவள் அலுவலகம் செல்ல ரவியிடம் மதிய உணவு இடைவேளை வெளியே செல்ல ஒரு மணி நேரம் பர்மிஷன் வாங்கி கொள்ள அவனோ அவளை வித்தியாசமாய் பார்த்தான்.

 

 

“என்கிட்ட இருந்து தப்பிக்க எதுவும் ப்ளான் பண்ணுறியா பேபி… அப்படி எதுவும் உன்னால செய்ய முடியாது… ஆமா எதுக்கு பர்மிஷன் எல்லாம் கேட்குற, என்னா விஷயம்…

 

 

“ஒரு விசேஷம் அதுக்கு போகணும்…

 

 

“சரி போயிட்டு வா… நமக்கு ஒரு விசேஷம் இருக்கு அதை மறந்திடாதே…

 

 

“உன்னை கொன்னுடுவேன்டா…

 

 

“உணர்ச்சிவசப்படாதே பேபி அது தான் நடக்கும்… சரி நீ கிளம்பு…

 

“நீ ரொம்ப கஷ்டப்படுவ இப்படி பேசினதுக்கு…

 

 

“சரி பட்டுக்கறேன் பரவாயில்லை… என்று நக்கலாய் அவன் பதில் கொடுக்க அவள் வெளியே சென்றாள்.

 

 

காலையிலேயே அவள் சித்தப்பாவிற்கு போன் செய்து பேசிவிட்டாள் அவள் வருவதாய், அன்று அவருக்கு ஆப் என்பதால் அவர் வீட்டில் தான் இருப்பதாய் சொல்ல ஆட்டோவில் ஏறியவள் அவர் வீடு நோக்கி சென்றாள்.

 

 

அலுவலகம் வந்ததுமே வாணியிடம் கல்பனா அறியாமல் அவள் பேச அவளும் எல்லோரிடமும் பேசிவிட்டு மாலை சொல்வதாகக் கூறினாள்.

 

 

என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்று யோசனையுடனே அவள் செல்ல வண்டி அவர் வீட்டு வாயிலில் நின்றதும் இறங்கியவள் ஆட்டோவிற்கு காசு கொடுத்துவிட்டு உள்ளே சென்றாள்.

 

 

“வாம்மா தேவி எப்படி இருக்க?? தனியாவா வந்த உன் புருஷன் எங்க?? என்றார் அவளின் சித்தி.

 

 

“அவர் ஆபீஸ் போயிருக்கார் சித்தி நான் மட்டும் தான் வந்தேன்… சித்தப்பா இல்லையா?? என்றாள்

 

 

“உள்ள தான் இருக்கார், நீ வருவேன்னு சொன்னார்… வாம்மா…

 

 

“சித்தி ராகுல் எப்படியிருக்கான், என்ன படிக்கிறான்…

 

 

“நல்லாயிருக்கான்ம்மா, என்னவே சிஏவாம் அதை தான் படிக்கிறான்…

 

 

“ஓ பரவாயில்லை சித்தி நல்ல விஷயம்… என்றவள் உள்ளே வரவும் “வாம்மா எப்படி இருக்க என்றார் சித்தப்பா.

 

 

பரஸ்பர நலம் விசாரிப்புக்கு பின் அவளை அவர் அலுவல் அறைக்கு அழைத்துச் சென்றார். “என்னம்மா என்ன பிரச்சனை, மாப்பிள்ளையோட…

 

 

“சித்தப்பா அதெல்லாம் இல்லை… இது வேற பிரச்சனை, அது… என்றவள் தயங்கிக் கொண்டே ரவியை பற்றி அனைத்தும் ஒன்றும் மறைக்காமல் அவரிடம் கூறினாள்.

“சித்தப்பா இது… இது… அவன் எடுத்த வீடியோ பதிவு… அவனோட சிஸ்டம்ல இருந்து நான் எல்லாம் காபி பண்ணிட்டேன்… அவனை எதாச்சும் செய்யணும் சித்தப்பா…

 

 

“அவன் யார் வழிக்கும் வரவே கூடாது… ஆனா சித்தப்பா இதுல எந்த பொண்ணுக்கும் எந்த பிரச்சனையும் வரக் கூடாது…அவளையே ஆழமாய் நோக்கியவர் “மாப்பிள்ளைக்கு எல்லாம் தெரியுமாம்மா… என்றதும் அவள் கண்ணில் இருந்து மளமளவென்று கண்ணீர் பெருக்கெடுத்தது.

 

 

“தெரியாது சித்தப்பா யாருக்குமே தெரியாது… அவர்… அவர்கிட்ட நான் எப்படி சித்தப்பா இந்த வீடியோ பத்தி சொல்ல முடியும்… அந்த ராஸ்கல் பேசினது கேட்ட எனக்கே கூசுது… அவர்கிட்ட சொன்னா அவர் அவனை கொன்னே போடுவார் சித்தப்பா…

 

 

“நான்… அவன்… நெருக்கமா இருக்க வீடியோ எல்லாம் இருக்கு சித்தப்பா… என்ன தான் தப்பு என் பேர்ல இல்லைன்னாலும் அதை பார்த்தா அவர் தாங்க மாட்டார்…

 

 

“தப்பும்மா நீ அவர்கிட்ட கண்டிப்பா இதை பத்தி சொல்லணும்… உனக்கு தயக்கமா இருந்தா நான் வேணும்ன்னா சொல்றேன்…

 

 

“சித்தப்பா ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோங்க… என… எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு, இதை நான் எப்படி ப்ளீஸ் சித்தப்பா… என்றவள் அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை மொத்தமும் அழுது தீர்த்தாள்.

 

 

“விடுடா, சரி விடு… நீ எதுவும் மாப்பிள்ளைகிட்ட சொல்ல வேண்டாம்… நானும் சொல்லலை போதுமா… அந்த ரவியை எப்படி என்ன பண்ணணும்ன்னு நான் பார்த்துக்கறேன்…ன்னும் ரெண்டு நாள்ல அவன் இங்க இருக்க மாட்டான், போதுமா…

 

 

“சித்தப்பா நீங்க அவனை என்ன பண்ணப் போறீங்க… அவனால யாருக்கும் எப்பவுமே இது போல பிரச்சனை வரக்கூடாது சித்தப்பா…

 

 

“சரிம்மா நான் பார்த்துக்கறேன் நீ கவலைப்படாம போ சரியா… ஆமாம்மா மாப்பிள்ளை ஆடிட்டரா தானே இருக்கார்…என்றவரிடம் “ஆமா சித்தப்பா… என்று அவள் கூற “சரிம்மா நாளைக்கு நான் உங்க வீட்டுக்கு வர்றேன்… என்றார் அவர்…

 

Advertisement