Advertisement

அத்தியாயம் – 2

 

 

இந்திரை யோயிவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ மோகினியோ மன
முந்திய தோவிழி முந்திய தோகர முந்தியதோவெனவே
உயர்
சந்திர சூடர் குறும்பல வீசுரர் சங்கணி வீதியிலே
மணிப்
பைந்தொடி நாரி வசந்தவொய் யாரிபொற் பந்துகொண் டாடினளே

 

 

ஆதிக்கு மிகவும் பிடித்த பாடல் இது, ஏனோ அவன் எப்போதும் இதை முணுமுணுப்பான். காதலன் படத்தை பார்த்ததில் இருந்து அந்த பாடலே மனதில் ஓட ஆரம்பித்தது.

 

 

குற்றால குறவஞ்சியில் வசந்தமல்லி பந்து விளையாடும் அழகை புலவர் திருகூடராசப்பக் கவிராயர்  வர்ணிப்பது போன்ற பாடல் அது. பாடல் வந்த புதிதில் அதை எழுதியது இந்த கால கவிஞரே என்று எண்ணிக் கொண்டிருந்தவன் ஒரு முறை சங்கப்பாடல்கள் பற்றி ஆராய்ச்சியில் இறங்கிய போது அது குற்றால குறவஞ்சி பாடல் என்றறிந்தான்.

 

 

ஒரு செய்யுளுடன் இசை சேர்த்து பாடலாய் பாடும் போடும் போது சட்டென்று மனதில் பதிந்து விடுகிறது… அது போல் அவன் ரசித்த மேலும் சில பாடல் குனித்த புருவமும் மற்றும் மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாள்…

ஜோதியும் அர்ஷிதாவும் கூட அவனை கேட்பர் யார் உன் சுந்தரி என்று இருவருக்கும் எந்த பதிலும் சொல்லாமல் சிரித்துவிட்டு போய் விடுவான். ஏனோ காலையில் எழுந்ததிலிருந்து அந்த பாடலே மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

 

 

குளித்துவிட்டு வந்தவன் இளம் பீச் வண்ண கால் சட்டையை அணிந்துக் கொண்டவன் இளம் ரோஜா வண்ண முழுக்கை சட்டை எடுத்து அணிந்துக் கொண்டு முழுக்கை சட்டையை கால்பாகம் மடித்து விட்டுக் கொண்டான்.

 

 

சிகையை அழுத்தி வார சீப்பிற்குள் அடங்க மாட்டேன் என்று அடம் பிடித்த சிகையை ஜெல் தடவி அழுத்தி படிய வைத்தான். அர்ஷிதா அழைக்கும் குரல் கேட்க அவளை நோக்கி சென்றான்.

 

 

“என்ன அண்ணா… இன்னைக்கு என்ன விஷயம் பயங்கரமா கலக்குற மாதிரி தெரியுது… கேர்ள் பிரண்ட் செட் ஆகிட்டாளா… பார்க்க போறியா… என்கிட்ட சொல்லவே இல்லை…

 

 

“ஹேய் அர்ஷி அப்படி ஒண்ணு இருந்தா உன்கிட்ட சொல்ல மாட்டேனா… இந்த சட்டை ரொம்ப நாளா போடாம உள்ள இருந்திச்சு அதான் எடுத்து போட்டேன்… விசேஷம்ன்னு எல்லாம் எதுவும் இல்லைடா…

 

 

“எனக்கு லவ் பண்ணுறதுல எந்த விருப்பமும் இல்லை… ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கணும் அவ்வளோ தான்… உன் கல்யாணம் முடிஞ்சதும் நான் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன்…

 

 

“நீ தான் எனக்கு பொண்ணு பார்க்கணும்… ஓகே தானே… என்றவனை பார்த்து முறைத்தாள்… “அடப்பாவி அண்ணா உனக்கு பொண்ணு செட் ஆகிடுச்சான்னு ஒரு வார்த்தை தான் கேட்டேன்…

 

 

“அதுக்கு நீ எங்க சுத்தி எங்க வந்து நிற்குற… என் கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம்… நான் இப்போ தானே கடைசி வருஷம் படிச்சுட்டு இருக்கேன்… அப்புறம் ஒரு நாலு வருஷம் வேலை பார்க்கணும்… அப்புறம்….

 

 

“அர்ஷிம்மா நீ இப்படி இழுத்தா என் கல்யாணம் எப்போ நடக்குறது… அச்சோ உனக்காக வெயிட் பண்ணா எனக்கு அறுபதாம் கல்யாணம் தான் நடக்கும் போல இருக்கே… என்று தலையில் கை வைத்தான்.

 

 

“அண்ணா நானும் அதே தான் சொல்றேன்… எனக்காக காத்திருக்காம சீக்கிரமே ஒரு பொண்ணை பார்த்து உன் கல்யாணத்தை முடிப்போம்… எனக்கு அப்புறமா நீயும் அண்ணியுமா சேர்ந்து பாருங்க…

 

 

“இந்த கதை எல்லாம் வேண்டாம், நான் சொன்னா சொன்னது தான் எனக்கு நூறு வயசு ஆனாலும் சரி உன் கல்யாணம் முடிஞ்சு தான் என் கல்யாணம்… இப்போதைக்கு நீ படிப்பை பாரு… எனக்கு கொஞ்சம் டிபன் கொடுக்கற உத்தேசம் இருந்தா அதையும் கொஞ்சம் பாரு…

 

 

“போண்ணா… நான் உன்னை சாப்பிட தான் கூப்பிட்டேன்… அதுக்குள்ள நீ ஏதேதோ பேசி என்னை குழப்பிட்ட… வா வந்து சாப்பிடு… என்று சொல்லியவள் அவனுக்கும் அவளுக்குமாய் இட்லியும் சாம்பாரும் ஊற்றிக் கொண்டு வந்தாள்.

 

 

சாப்பிட்டுவிட்டு இருவருமாக ஒன்றாகவே கிளம்ப அர்ஷிதாவின் ஸ்கூட்டி சர்வீஸ்க்கு சென்றிருப்பதால் அவளை ஏற்றிக் கொண்டு அவள் கல்லூரியில் சென்று விட்டு வந்தான்.

 

 

பின்னர் அலுவலகம் வந்து சேர ஜோதி இன்னும் வரவில்லை என்பதை மூடியிருந்த கதவு சொல்ல அவனே கதவை திறந்து உள்ளே சென்றான்… அன்று அவனுக்கு ஒரு முக்கிய வேலை இருந்தது.

 

 

சீதாராமன் குழுமத்தின் சார்பாக வருமான வரித்துறை அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது… அவர்கள் கொடுத்த விபரங்களை எல்லாம் பரிசோதித்தவன், மடிகணினியை உசுப்பி மேலும் சில தகவல்களை சேகரித்தவன் அதை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்தான்.

 

 

எல்லாவற்றையும் ஒரு கோப்பில் அடக்கிக் கொண்டு ஜோதிஷுக்காக காத்திருந்தான். அவனை வெகுநேரம் காக்க வைக்காமல் அவன் கையில் ஏதோ கோப்பை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தான்.

 

 

“என்னடா எங்க போனே இவ்வளவு நேரம்…

 

 

“டேய் அந்த முகப்பேர் கஸ்டமர் ராஜாவோட சேல்ஸ் டாக்ஸ் ரிடன்ஸ் சப்மிட் பண்ணிட்டு வர்றேன்டா… அதான் லேட்…

 

 

“ஜோ… நான் சொன்னா தப்பா எடுத்துக்காதேடா…

 

 

‘என்னடா என்பது போல் அவன் பார்க்க “இங்க பாரு இங்க சின்ன சின்ன வேலைகள் எல்லாம் இருக்கும்… அதாவது இந்த மாதிரி ரிடன்ஸ் சப்மிட் பண்ணுறது… பார்ம் வாங்கிட்டு வர்றது அது போல…

 

 

“நாம ஒரு ஆளு எடுத்துக்குவோம்டா… சின்ன சின்ன வேலைக்கும் நாமே போகணும்னு இல்லைடா என்றவனை பார்த்து ஜோ முறைத்தான்.

 

 

“ஆதித்யா… நமக்கு ஆள் வேண்டாம்ன்னு நான் சொல்லலை… ஆனா இப்போ வேண்டாம்… கொஞ்ச நாள் போகட்டும்டா… நாம இப்போ தான் தனியா ஒரு ஆபீஸ் போட்டு உட்கார்ந்திருக்கோம்….

 

 

“இதை சின்ன வேலையா ஏன் நினைக்கணும்… எல்லாமே வேலை தான்… எல்லாமே அனுபவம் தான்… நாமே சில விஷயங்களை கவனிச்சா தான் அதை அடுத்தவங்களுக்கு சொல்லி தர முடியும்…

 

 

“நமக்கு எப்போ ஆள் வேணும்ன்னு சொல்றேன் அப்போ எடுத்துக்கலாம்… சரி நீ இன்கம் டாக்ஸ் ஆபீஸ் கிளம்பலையா… மணியாச்சே பத்தரை மணிக்கு நீ அங்க இருக்கணுமே… இங்க இன்னும் என்ன பண்ணுற…

 

 

“உனக்காக தான் காத்திட்டு இருந்தேன்டா… நான் கிளம்பறேன்… அப்புறம் டிஜிட்டல் சிக்னேச்சர் அப்ளை பண்ணி தரச்சொல்லி ஒரு கிளைன்ட் கேட்டிருந்தாங்கல அதோட டீடைல் எல்லாம் மேல எடுத்து வைச்சிருக்கேன்…

 

 

“சில கிளைன்ட்ஸ் சர்வீஸ் டாக்ஸ், டிடிஎஸ் ரிடன்ஸ் எல்லாம் பைல் பண்ணச் சொல்லி அனுப்பி இருக்காங்க நீ பார்த்துக்கோ… நான் கிளம்பறேன்… போகும் போது பைவ் ஸ்டார்ல காபி சொல்லிடறேன்… என்று சொல்லி கிளம்பினான்.

 

 

“என்னமோ பைவ் ஸ்டார் ஹோட்டல்ல காபி சொல்ற மாதிரி சொல்லிட்டு போறான் பாரு… தெரு முனையில சொல்லிட்டு போறேன்னு சொல்லாம சார் இப்படி சொல்லிட்டு போறார்… பந்தாவாம்… என்று நண்பனை நினைத்து சிரித்துக் கொண்டு உள்ளே சென்று அமர்ந்தான் அவன்.

 

 

உத்தமர் காந்தி சாலையை அடைந்தவன் யூ டர்ன் போட்டுக் கொண்டு திரும்ப ஒருவன் தவறாக வந்து அவனை இடித்துவிட, முழங்கையில் ஹான்ட்பாரில் இடித்துக் கொண்டு லேசாக தோல் கிழிந்து ரத்தம் வந்துக் கொண்டிருந்தது.

 

 

இன்னும் பத்து நிமிடத்தில் அவன் அந்த அதிகாரியின் முன் இல்லை என்றால் அவரை சமாளிக்க முடியாது என்று தோன்ற வழியிலேயே ஒரு கடையில் தண்ணீரை வாங்கி கையை சுத்தப்படுத்திக் கொண்டு ஒரு பிளாஸ்டர் வாங்கி போட்டுக் கொண்டு மடித்துவிட்டிருந்த சட்டை இறக்கிவிட்டு பொத்தானை மாட்டினான்.

 

 

வண்டியை எடுத்துக் கொண்டு ஆயக்கர் பவனுக்குள் நுழைந்தான். இடம் பார்த்து நிறுத்திவிட்டு புது ப்ளாக்கிற்குள் நுழைந்தான். அந்த அதிகாரியின் முன் சென்று உட்காரவும் அவர் முகத்தில் ஒரு திருப்தி புன்னகை…

 

 

அவர் கேட்ட தகவல்களை அந்த கம்பெனி சார்பாக கொடுத்தவன் அதற்குண்டான கோப்புகளையும் கொடுக்க அவருக்கு அவன் பதிலில் திருப்தி வந்திருந்தது.

 

 

அவரிடம் பேசிவிட்டு வெளியே வரவும் அந்த அதிகாரியின் உடனிருப்பவர் அவனுடன் வெளியில் வந்தார்… “சார்… அய்யா சொன்னது மறந்திடாதீங்க… அதை ஞாபகப்படுத்த தான் வந்தேன்…

 

 

“தெரியும் சார்… பார்த்து முடிச்சிடுறேன்… கொஞ்சம் குறைச்சிருக்கலாம் சார்… கொஞ்சம் பேசி பாருங்களேன்… நான் எதுனாலும் இங்க தானே சார் வர்றேன்… உங்க ஹெல்ப் எனக்கு எப்பவும் தேவை சார்… என்று அவருக்கு பதில் சொன்னவனுக்கு தன்னை யாரோ பார்ப்பது போல் தோன்றியது.

 

 

அவரிடம் பேசிக் கொண்டே அவன் திரும்பி பார்க்க யார் அவன் கண்ணில் படக்கூடாது என்று நினைத்தானோ அவளே அவன் கண்ணெதிரில் நின்றுக் கொண்டிருந்தாள்.

 

 

அவனை பார்த்ததுமே அவளுக்கு அடையாளம் தெரிந்திருந்தது… அவன் பேச்சை வெளியில் ஒரு வேலையாக வந்து நின்றிருந்தவள் கேட்டுவிட்டிருந்தாள்.

 

 

அதன் பொருட்டு அவன் மேல் இன்னமும் கோபமும் ஆத்திரமும் வெறுப்பும் ஒன்றாக தோன்ற தன்னை கண்டுக் கொண்டவனை நிமிர்ந்து கேவலமான ஒரு பார்வை பார்த்தாள்.

 

 

அவள் பார்வையை தன்னை மிகுந்த வெறுப்புடன் பார்ப்பதை கண்டுக் கொண்டவனுக்கு கோபம் உற்பத்தியாகத் தொடங்கியது… அவனருகில் நின்றிருந்தவரிடம் எதையோ பேசி சமாளித்தவன் அவசர அவசரமாக அவரிடம் விடைபெற்று அவளை நோக்கி வந்துக் கொண்டிருந்தான்.

 

 

அவளோ அவனை கண்டுக் கொள்ளாமல் தன் போக்கில் நடந்துக் கொண்டிருந்தாள். அருகில் நின்றிருந்த ஒருவரிடம் எதையோ கொடுத்துவிட்டு மீண்டும் அவள் அறைக்கு செல்ல முயல அவளெதிரில் வந்து நின்றான்.

 

 

“ஏய்…

 

 

“ஹேய் யாரு நீ??? எதுக்கு என்னை பார்த்து ஏய்ன்னு சொல்ற… என்றாள்

 

 

“ஏன் நான் யாருன்னு உன் கண்ணுக்கு தெரியலையா… எல்லாமே மறந்திடுச்சோ… என்று நக்கலாக கேட்டான்.

 

 

“உன்னை நினைச்சுட்டு இருக்க அளவுக்கு எல்லாம் நீ பெரிய ஆளு இல்லை… உன்னை மாதிரி ஒருத்தனை நான் இனி பார்க்கவும் விரும்பலை…

 

 

“ஆனா நான் உன்னை தான் பார்க்கணும்ன்னு விரும்பினேன்… நீ கொடுத்ததுக்கு நான் பதிலுக்கு கொடுக்க வேண்டாம்… அன்னைக்கு அத்தனை பேரு சூழ என்னை அடிச்ச வலி இன்னமும் எனக்கு மறக்கலை…

 

 

“அதுக்கு நீ கண்டிப்பா பதில் சொல்ல வேண்டி இருக்கும்… அன்னைக்கு அப்படி என்ன பெரிசா நடந்திருச்சுன்னு நீ அப்படி செஞ்சே… யாரையும் பேசவிடாம அடிக்கிறது தான் உனக்கு பழக்கமாச்சே…

 

 

“ஒரே நாள்ல ரெண்டு பேரை அடிச்சு காலேஜ்க்கே ஜான்சிராணியாகிட்ட, இத்தனை வருஷம் கழிச்சும் உன் போக்கு மாறவே இல்லை… அதே பார்வை, அதே குணம்… உனக்கு என்னை மறந்திருக்கலாம்…

 

 

“ஆனா எனக்கு மறக்கலை… வருவேன் மறுபடியும் வருவேன்… உன் கண்ணுல பட்டுட்டே தான் இருப்பேன்… உன்னை வெறுப்பேத்திட்டே தான் இருப்பேன்… என்னை மன்னிசுடுன்னு நீ கேட்கற வரை விட மாட்டேன்…இப்போ கிளம்பறேன்… bye… get ready my dear devil… என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

 

 

“டேய்… என்ற மரியாதையின்மை குரல் அவன் நடையை நிறுத்தியது. அவனை மரியாதையில்லாமல் கூப்பிட்டதற்காக அவள் கழுத்தை நெரிக்க வேண்டும் என்று தோன்றிய எண்ணத்தை சுற்றுப்புறம் உணர்ந்து அடக்கினான்.

 

 

“நீ சொல்றதுக்கு எல்லாம் நான் பயப்படுவேன்னு நினைக்காதே… உன்னால ஆனதை பார்த்துக்கோ… என்கிட்ட அன்னைக்கு வாங்கினதை நீ மறக்கலைன்னு நினைக்கிறேன்… மறுபடியும் வாங்கிடாதே…

அவளை கடந்து சென்றிருந்தவன் மீண்டும் அவளருகில் வந்தான், “நீ பயப்படுவேன்னு நான் சொல்லவே இல்லையே… உனக்கு அதெல்லாம் தெரியாதுன்னு எனக்கு தெரியும்…

 

 

“உனக்கு திமிர் உனக்கு தான் எல்லாம் தெரியும்ன்னு திமிர்… எப்பவும் எதையும் என்ன ஏதுன்னு விசாரிக்காம முட்டாள்தனமா முடிவெடுக்கறது தான் உனக்கு எப்பவும் பழக்கம்…

 

 

“அன்னைக்கு இப்படி தான் ரெண்டு பேரை அவமானப்படுத்தினே… இப்பவும் அதே செய்யற…

 

 

“நீ என்னமோ யோக்கியம் மாதிரி பேசாதே, அன்னைக்கும் நீ யோக்கியமானவன் இல்லை… இன்னைக்கும் உன்னை பார்த்தா உன் பேச்சை பார்த்தா அப்படி தெரியலை…

 

 

“நான் யோக்கியமா இல்லையான்னு உன்கிட்ட நிரூபிக்க எனக்கு எந்த அவசியமும் இல்லை… மரியாதை இல்லாம இனி டேய்ன்னு கூப்பிட்ட நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது… என்றவனின் குரல் மிகுந்த கோபத்துடன் இருந்தது.

 

 

அவன் முகம் கோபத்தில் சிவந்திருந்தது, அவன் உதடுகள் துடிக்க அவளை பார்த்து உறுமிவிட்டே அங்கிருந்து நகர்ந்தான்.

 

 

அவன் சென்றதும் ‘கடவுளே நீ எனக்கு நல்லது செய்யறியா கெட்டது செய்யறியா… ஒரே நாள்ல ரெண்டு பேரையும் பார்க்க வைச்சிட்டியே… ஒருத்தர் அமைதியின் சிகரமா இருக்கார்…

 

 

‘இவனோ எரிமலையா எகிறிட்டு போறான்… வார்த்தைகளை கக்கிட்டு போறான் என்று அவனை மனதார திட்டிக் கொண்டே உள்ளே சென்றாள்…

 

 

அவள் இருக்கையில் சென்று அமர்ந்தவளின் உள்ளம் உளைக்கலமாய் கொதித்தது… அவள் உள்ளம் குளிரச் செய்யவென வந்தவன் போல் சூரியனையும் சந்திரனையும் பெயரில் கொண்டவன் அங்கு வந்து அவள் முன் நின்றான்.

 

 

வெளிர் நீலத்தில் பொடி கட்டம் போட்ட முழுக்கை சட்டையை போட்டிருந்தவன் அதற்கு பொருத்தமான கால்சட்டை அணிந்து கம்பீரமாய் அவள் முன் நின்றதை கண்கள் படம் பிடித்துக் கொண்டிருந்தது.

“குந்தி… என்று அவன் அவளை அழைக்க “சார் குந்தவை… என்றாள்.

 

 

“ஓகே குந்தவை… என்ன வேலை என்னன்னு புரிஞ்சுதா… என்றவனுக்கு பதிலாய் ஆமாம் இல்லை என்பது போல் தலையை உருட்டிக் கொண்டிருந்தவளை பார்த்ததும் அவனுக்குள் சிரிப்பு வந்தது.

 

 

“புரியலைன்னா… புரியலைன்னு சொல்லுங்க… அதை விட்டு எல்லா பக்கமும் ஆட்டி வைக்காதீங்க… சரி இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க… முக்கிய வேலை இல்லைன்னா கொஞ்சம் உள்ள வாங்க…

 

 

“எனக்கு கொஞ்சம் பைல் எல்லாம் பார்க்கணும், அதை எப்படி குறிப்பெடுக்கணும் எல்லாம் சொல்லித் தர்றேன்… என்றுவிட்டு அவன் உள்ளே சென்றுவிட்டான்.

 

 

அவளருகில் வந்த கல்பனா “என்ன தேவி சாரே நேரா வந்து உன்னை உள்ள வரச்சொல்லிட்டு போறார்… ஹ்ம்ம் பரவாயில்லை… அவருக்கு உன்னை பிடிச்சிருக்கு போல தான் அவரே நேரா வந்திருக்கார்…

 

 

“இங்க கல்யாணம் ஆகாம இருக்க எல்லா பொண்ணுங்களுக்கும் அவர் மேல ஒரு பார்வை இருக்கு, என்ன அவர் தான் அவங்களை பார்க்கவே மாட்டேங்குறார்… என்ன அதிசயமோ உன்கிட்ட மட்டும் தான் பேசி இருக்கார்… அதுவும் வந்த முதல் நாளே…

 

 

“ஏன்க்கா அப்படி சொல்றீங்க….

 

 

“தேவி இதுக்கெல்லாம் எதுக்கு பயப்படுற, அவரா இறங்கி வந்து பேசியிருக்கார் அவ்வளோ தான்… ஒரு வேளை நீ யதார்த்தமா இருக்கறது அவருக்கு பிடிச்சிருக்கும்… இதுக்கு மேல இதுல யோசிக்க ஒண்ணுமில்லை…

 

 

“அவர் கூப்பிட்டு ரொம்ப நேரமாச்சு… நீ உள்ள போ… வேலையை நல்லா கத்துக்கோ… நெறைய டிபார்ட்மெண்ட் எக்ஸாம் எல்லாம் எழுதி நீ பெரிய ஆபீசரா வா…

 

 

“தாங்க்ஸ்க்கா… முதல் நாள் ஆபீஸ் எப்படி இருக்குமோன்னு ஒரு பயமிருந்துச்சு… உங்களை பார்த்ததும் தான் மனசுக்கு நிம்மதியே… ரொம்ப தாங்க்ஸ்க்கா… நான் உள்ள போயிட்டு வர்றேன்… என்று அவள் சென்றதும் கல்பனா அவளையே ஒரு மார்க்கமாய் பார்த்துக் கொண்டிருந்ததை அவளறியாள்.

“எக்ஸ்க்யூஸ் மீ சார்… மே ஐ கமின் சார்…

 

 

“எஸ் கமின்… என்ற அவன் குரலில் உள்ளே நுழைந்தாள்…

 

 

“சார் வரச்சொல்லியிருந்தீங்க…

 

 

“ஹ்ம்ம் ஆமாம்… நான் வரச்சொல்லி ரொம்ப நேரமாச்சு இப்போ தான் வர்றீங்க…

 

 

“சார் அது வந்து… இல்லை சார் கல்பனா அக்காக்கிட்ட சொல்லிட்டு வந்தேன் சார்… அதான் லேட்… சாரி சார்…

 

 

“சார்… மறுபடியும் சாரி சார்…

 

 

“முதல் சாரி ஓகே… அதென்ன மறுபடியும் சாரி…

 

 

“அது… அது நேரம் வரும் போது சொல்றேன் சார்…

 

 

“அடிச்சதுக்கு சாரியா… இல்லை அடிவாங்கியவன் மேலதிகாரியாச்சேன்னு சாரியா…

 

 

“சார்…

 

 

“பழசு எல்லாம் விடுங்க… வந்த வேலையை பார்ப்போம்…

 

 

“அதில்லை சார்… நீங்க இன்னும் அதை மறக்கலை, ரொம்ப ரொம்ப சாரி சார்… அன்னைக்கு தெரியாம… வேணுமின்னு எல்லாம் செய்யலை சார்… என்னோட அவசரபுத்தி தப்பு தான் சார்…

 

 

“அதான் சொன்னேனே விடுங்கன்னு… திரும்பவும் ஏன் ஞாபகப்படுத்தறீங்க… வேலையை பார்ப்போமே… நாளைக்கு ஒரு முக்கியமான் ஹியரிங் இருக்கு… அதுக்கு கொஞ்சம் டீடைல்ஸ் எல்லாம் எடுக்கணும்… நெறைய நோட்டீஸ் எல்லாம் அனுப்ப வேண்டி இருக்கு… என்றவன் வேறு பேச்சு பேசாமல் வேலையை தொடர்ந்தான்.

 

 

அவன் வேலையை தொடங்கலாம் என்று சொன்னாலும் சட்டென்று அவளால் இயல்புக்கு வரமுடியவில்லை…

நிமிர்ந்து அவனை பார்க்க அவனோ வேளையில் கவனமாய் இருந்தான். அவளும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அவன் கூறும் வேலையை கவனமாக கேட்டுக் கொண்டு அதன்படி செய்து கொடுத்தாள்.

 

 

இப்போது வேலையில் அவள் முழுவதுமாய் முழ்கி இருக்க அவன் பார்வையோ தன்னையுமறியாமல் அவள் மேல் அடிக்கடி பாய்ந்து மீண்டுக் கொண்டிருந்தது.

 

 

வேலை முடிந்து அவள் எழுந்துக் கொள்ளவும் ஒரு சிறு தலையசைப்புடன் அவளுக்கு விடை கொடுத்தான்… வாயில் வரை சென்றவள் ஒரு முறை நின்று திரும்பி பார்க்க அவனும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

அவள் கண்கள் மீண்டும் மன்னிப்பை யாசிக்க அவனும் கண்களாலேயே ஒண்ணுமில்லை போய் வா என்பது போல் கூற அவள் தலையை ஆட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

 

 

வாயிலுக்கு வந்து அவள் ஸ்கூட்டி பெப்பை எடுக்கவும்… அவளருகே உரசுவது போல் ஒரு கார் வந்து நின்றது… ரவி தான் அங்கே நிறுத்தியிருந்தான். முதலில் யாரோ எவரோ என்று கோபம் வர ரவியை கண்டதும் வாயை மூடிக் கொண்டாள்.

 

 

“என்ன மிஸ். குந்தி பயந்துட்டீங்களா… பை சொல்ல தான் கூப்பிட்டேன்…

 

 

“சார்… குந்தி இல்லை சார்… குந்தவை…

 

 

“ஓ சாரி குந்தவை… எனக்கு உங்க பேரு குந்தின்னு ஞாபகத்துக்கு வருது… சாரி… உங்க முழு பேரு என்ன சொன்னீங்க.. குந்தவை தேவி தானே… ஓகே இனி நான் தேவின்னே கூப்பிடுறேன்…

 

 

“குந்தின்னு கூப்பிடுறதுக்கு அது எவ்வளவோ பரவாயில்லை… சரி தானே… அப்புறம் நான் பை சொன்னேன்… நீங்க எதுக்கு கண்ணை விரிச்சு இப்படி பார்க்கறீங்க… பதிலுக்கு பை சொல்ல மாட்டீங்களா…

 

 

“சார்… பை சார்… பை சார்… பை சார்… என்று திக்கினாள்.

 

 

“ஓகே தேவி… பை… பார்த்து போங்க… உங்க… உங்க வீடு எங்க…

 

 

“சார் எங்க வீடு அமிஞ்சிக்கரைல இருக்கு சார்…

 

 

“ஹ்ம்ம் ஓகே பை… என்றவன் காரை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான்.

 

 

‘ச்சே என்னாச்சு எனக்கு… ஆனா இவர் பேசுறது எல்லாம் நிஜம் தானா… எல்லாமே மறந்திட்டாரா… என்று யோசித்துக் கொண்டே வண்டியை எடுத்தவளுக்கு காலையில் கண்டவன் முகம் நினைவில் வர கோபம் எழுந்தது அவளுக்குள்…

____________________

 

 

மாலை எல்லா வேலையும் முடித்துவிட்டு அலுவலகம் சென்ற ஆதித்யாவுக்கு தலையை வலிப்பது போல் இருந்தது… காலையில் இருந்தே எல்லாம் தப்பாகவே போய் கொண்டிருப்பது போல் இருந்தது.

 

 

அப்போது தான் ஜோதிஷ் உள்ளிருந்து வந்தான்… “என்னடா வேலை எல்லாம் முடிஞ்சுதா…

 

 

“ஹ்ம்ம் இன்கம் டாக்ஸ் வேலை ஓரளவு முடிஞ்சுதுடா… மத்த வேலை எதுவும் முடியலை… அந்த சேல்ஸ் டாக்ஸ் வேலை அப்படியே நிக்குது… அந்தாளு காசு ரொம்ப எதிர் பார்க்கறார்… அன்னைக்கு என்னமோ நான் பண்ணித்தரேன்

 

 

“ஒண்ணும் பிரச்சனையில்லைன்னு மண்டையை மண்டையை ஆட்டிட்டு இன்னைக்கு காசு பத்தலை மேல வேணும்ன்னு கேட்கிறான்டா… இதை போய் நம்ம கிளைன்ட்கிட்ட சொல்ல முடியுமா…

 

 

“ஏற்கனவே இவ்வளவு தான் அமௌன்ட்ன்னு சொல்லி அதை வாங்கியும் கொடுத்தாச்சு… இந்தாளு இப்படி பண்ணா என்னடா செய்யறது… நமக்கு கெட்ட பேரு ஆகிடாது… என்று புலம்பினான் ஆதித்யா.

 

 

“எல்லாத்துக்கும் அவ தான்டா காரணம்… அந்த விளங்காதவ இன்னைக்கு என் கண்ணுல பட்டு தொலைச்சுட்டா… அன்னைக்கு அவளை பார்த்ததுக்கு அடி வாங்கினேன்…

 

 

“அவமானப்பட்டேன்… யாரும் பார்க்காம ஓடி ஒளிஞ்சேன்… இன்னைக்கு அவளை பார்த்த பிறகு ஒரு வேலையும் உருப்படியா முடியலைடா…

 

 

“என்னடா ஆதி சொல்ற… யாரை பார்த்தே என்ன விஷயம்.. என்றவன் அப்போது தான் அவன் கையில் ரத்தக்கறை இருப்பதை பார்த்தான்…

“டேய் இதென்னடா… முதல்ல அதை சொல்லு…

 

 

“இது காலையில ஒருத்தன் தப்பா வந்து இடிச்சிட்டான்டா… அப்போ கையில அடிப்பட்டிருச்சு…

 

 

“இது ஒண்ணுமில்லைடா சரியா போய்டும்… நான் இன்னைக்கு பார்த்தது அந்த திமிர் பிடிச்சவளை தான்டா… அன்னைக்கு காலேஜ்ல வைச்சு என்னை அடிச்சாளே அவளை தான்…

 

 

“இன்னைக்கு கூட எவ்வளோ திமிரா பேசுறா தெரியுமா அவ… என்றவன் அவர்கள் உரையாடலை நண்பனிடம் கூறினான்…

 

 

“எனக்கென்னமோ தப்பு உன் பேர்ல தான்னு தோணுது…

 

 

“நான் என்னடா தப்பு பண்ணேன்… நான் ஒரு வேலையா போனேன்… அதுல அவளுக்கு என்ன வந்துது என்னை எதுக்கு அப்படி கேவலமா பார்க்குறா…

 

 

“என்னமோ கொலைகாரனையும்… கொள்ளைக்காரனையும் பார்த்த மாதிரியில்லை பார்த்து வைச்சா… சரியா சொல்லணும்ன்னா என்னை காமகொடூரன் ரேஞ்சுக்கு பார்த்து வைச்சா…

 

 

“என்னை பார்த்தா அப்படியாடா தெரியுது… ச்சே… இவளை போய் திரும்ப பார்த்தேனே… என்று புலம்பி தீர்த்தான்…

 

 

“சரி விடு மச்சி… வா இன்னைக்கு ஒரு பீர் சாப்பிடுவோம்… நீ கூல்லாகிடுவ….

 

 

“டேய் மச்சி நீ தான்டா என் நண்பன்… மச்சி அந்த டயலாக் சொல்லேன்…

 

 

“டேய் வேணாம்டா… நீ என்னை நாளைக்கு வரைக்கும் அதே டயலாக் சொல்ல சொல்லுவா… அந்த படத்துல அந்த வசனத்தை சொன்னவன் என்னபாடு பட்டிருப்பான்னு நான் ஏற்கனவே அனுபவிச்சிருக்கேன் மச்சி…

 

 

“ஜோ… ப்ளீஸ் ஜோ எனக்காக ஒரே ஒரு முறை சொல்லுடா…

 

 

“பிரிண்ட் பீல் ஆகிட்டாப்புல ஒரு பீர் சொன்னா கூல்லாகிடுவாப்புல… என்று இதற்கு தானே ஆசைப்பட்டாய் பட பேமஸ் வசனத்தை சொல்ல ஆதி இயல்புக்கு திரும்பினான்…

Advertisement