Advertisement

அத்தியாயம்- 19

 

வந்தாலிந் நேரம்வரச் சொல்லு வராதி ருந்தால்

மாலையா கிலுந்தரச் சொல்லு குற்றாலநாதர்
தந்தாலென் னெஞ்சைத் தரச்சொல்லு தராதி ருந்தால்

தான்பெண்ணா கியபெண்ணை நான்விடே னென்று. 

 

 

– திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)

 

 

குந்தவையின் மனம் சில நாட்களாய் நடந்த நிகழ்வுகளையும் அவள் குழப்பத்திற்கான காரணத்தையும் அசைபோட ஆரம்பித்தது.

 

 

ஏனோ சில நாட்களாகவே குந்தவையின் மனதை எதுவோ போட்டு அரித்துக் கொண்டேயிருந்தது. என்னவென்றே சொல்ல முடியாத ஒரு உணர்வு தோன்றியது.

 

 

அவள் வீட்டில் இருக்கும் போது தோன்றியிராத அந்த உணர்வு அலுவலகம் வந்ததும் அவளை தொற்றிக் கொள்ளும். அடிவயிற்றில் ஏதோ பிசையும் உணர்வு அது…

 

 

ரவி வேறு அடிக்கடி ஏதோ வேலைகள் கொடுத்து அவளை பெரும்பாலான நேரங்களில் அவள் அறையிலேயே இருக்க வைத்தான்.

அன்றும் அவள் அவன் அறையில் இருந்து அவன் கொடுத்த கோப்புகளை ஆராய்ந்து தேவையான குறிப்புகளை எடுத்துக் கொண்டிருக்க ரவி அவளுக்கு வெகு நெருக்கமாய் இருந்தது போன்ற ஒரு உணர்வு தோன்ற சட்டென்று திரும்பி பார்க்க அவனும் ஒரு கோப்பில் ஆழ்ந்திருப்பது தெரிந்தது.

 

 

‘ச்சே… எனக்கு ஏன் இப்படி எல்லாம் தோணுது… என்னை விரும்பினார் தான் அதுக்காக இவரை நாம தப்பா நினைக்க முடியுமா…

 

 

‘ஒரு தரம் பாவம் இவரை தப்பா நினைச்சு நாம அடிச்சது போதாதா… என்று எண்ணியவள் மீண்டும் கோப்புகளில் கவனம் பதித்தாள்.

 

 

ஒரு நாள் இப்படியிருக்க மற்றொரு நாளோ அவன் ஒரு கோப்பை கொடுக்கும் போது அவன் கைகள் நன்றாக அவள் மேனியில் பட்டது. சட்டென்று அவள் விலக அப்படியொன்று நடக்கவே இல்லாதது போல் அவன் கோப்பை டேபிளில் வைத்து சென்றிருந்தான்.

 

 

வேறொரு நாள் நின்றுக் கொண்டிருந்த அவளிடம் இருந்த கோப்பில் பேனாவினால் சுட்டிக் காட்டி சொல்லிக் கொண்டிருந்தவனின் பேனா தவறி கீழே விழ அதை எடுக்க போக வேண்டுமேன்றோ அல்லது தெரியாமலோ அவன் கை அவள் இடையில் பட்டது.

 

 

இதெல்லாம் அந்த வாரத்தில் அவ்வப்போது நடந்துக் கொண்டிருக்க எதுவோ சரியில்லை என்று எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு அவள் தேடிக் கொண்டிருந்ததற்கு அன்று விடை கிடைத்தது.

 

 

ரவி அன்று அலுவலகத்தில் இல்லை… ஒரு வேலையாக வெளியில் சென்றிருந்தான்… அவனிடத்தில் இருந்து குந்தவைக்கு அழைப்பு வந்தது. “ஹலோ சொல்லுங்க சார்… என்றாள்.

 

 

“தேவி, நீ ஏன் என்னை இன்னும் சார்ன்னு கூப்பிடுறே எப்பவும் போல சந்துருன்னு கூப்பிடலாம்ல… என்று அவன் கூற அவள் பேச்சை மாற்றும் பொருட்டு “என்ன விஷயமா சார் கால் பண்ணீங்க… என்றாள்.

 

 

“நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலை தேவி… நீ இன்னும் பழசை மறக்காம இருக்கேன்னு நினைக்கிறேன்… ஏதோ உன்னை விரும்பினதுனால நான் ஆதியை பத்தி உன்கிட்ட விசாரிச்சேன்… அதுவும் நீ நல்லாயிருக்கியான்னு தெரிஞ்சுக்க தான் விசாரிச்சேன்….

“வேறெந்த காரணமும் இல்லை தேவி… நான் உனக்கு எப்பவும் ஒரு நல்ல நண்பனா இருப்பேன்… நீ இப்படி என்கிட்ட இருந்து விலகி விலகி போறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு தேவி…

 

 

“ஒரு நல்ல நட்பை நான் இழந்திட்டேனோன்னு ரொம்பவும் வருத்தமாயிருக்கு… என்றவனின் குரல் உண்மையிலேயே வருத்தத்தை பிரதிபலிப்பதாக தோன்றியது.

 

 

குந்தவை அப்போதும் ஏதும் பேசினாலில்லை, “சரி தேவி நான் இவ்வளவு பேசியும் நீ என்னை நம்பலைன்னு தெரியுது… என்னை மன்னிச்சுடு, இன்னும் கொஞ்சம் நாள் என்னை பொறுத்துக்கோ நான் திரும்பவும் பெங்களூர் போயிடலாம்ன்னு இருக்கேன்…

 

 

“உன்னோட பாராமுகம் என்னை வேதனைப்படுத்துது… நான் என்ன வேலை கொடுத்தாலும் செய்யற, ஆனா நிமிர்ந்து என்னை ஒரு மனுசனா கூட பார்க்க மாட்டேங்குற…

 

 

“அப்படி எல்லாம் எதுவுமில்லை… என்றாள் மொட்டையாக.

 

 

அவள் பதில் பேசியதிலேயே அவன் மனம் அமைதியடைந்தது போல் பேசினான் அவன். “அப்போ நீ என்கிட்ட பழைய மாதிரி பேசுவியா… என்னை சந்துருன்னு கூப்பிடுவியா…

 

 

“பார்க்கலாம்… நீங்க ஏதோ வேலையா தானே கூப்பிட்டீங்க என்னன்னு சொல்லுங்க… என்றாள் பட்டும்படாமலும்.

 

 

“நீ சரியாகிடுவன்னு நான் நம்புறேன்… இதெல்லாம் ஆபீஸ்ல வைச்சு உன்கிட்ட பேச முடியலை… அதான் நான் வெளிய வந்த நேரத்துல உன்கிட்ட போன் போட்டு பேசறேன்…

 

 

“சரி எனக்கு ஒரு உதவி பண்ணு தேவி… என்னோட சிஸ்டம் ஆன் பண்ணி அதுல டெஸ்க்டாப்ல ஒரு போல்டர் இன்னைக்கு தான் கிரியேட் பண்ணது நேம் கூட ஆடிட்ன்னு இருக்கும்…

 

 

“அதை ஓபன் பண்ணிட்டு எனக்கு கூப்பிடு… சிஸ்டம் பாஸ்வோர்ட் xxxx… என்று சொன்னவன் டேபிள்ல என்னோட லேப்டாப் கூட இருக்கும்… அதையும் கொஞ்சம் ஓபன் பண்ணு…

 

“அதுல ஒரு போல்டர் ராமன்னு இருக்கும்… அது நேத்து நைட் வீட்டில ரெடி பண்ணது அதை என்னோட சிஸ்டம்ல மூவ் பண்ணிடு… அதை ஒரு பிரிண்ட் அவுட்டும் எடுத்து வைச்சிடு நான் வந்ததும் பார்க்கறேன்… என்று விட்டு போனை வைக்க அவளும் சரியென்று சொல்லி போனை அணைத்தாள்.

 

 

அவன் அறைக்குள் அவள் நுழைய போக கல்பனா அவளை அழைத்தார். “என்ன தேவி உள்ள எங்க போறே??

 

 

“சார் ஒரு டீடைல் எடுத்திட்டு போன் பண்ண சொன்னார்… அதான் போயிட்டு இருக்கேன்க்கா… என்னாச்சு அதுல உங்களுக்கு எதுவும் பிரச்சனையா?? என்று அவள் கேட்டுவைக்க அவர் முகம் மாறியது.

 

 

“ச்சேச்சேய் அப்படி எல்லாம் எதுவுமில்லை… நான் சும்மா தான் கேட்டேன், சார் இல்லையே நீ உள்ள போறியே அதான் என்னன்னு கேட்டேன். ஒரு வேளை அவர் வெளிய போனது தெரியாம போறியோன்னு பார்த்தேன்… வேற ஒண்ணுமில்லை… என்று சமாளித்தார்.

 

 

“காலையிலே வாணி சொன்னா சார் வெளிய போயிருக்கார்ன்னு… எனக்கு அப்போவே தெரியும்க்கா… தேங்க்ஸ்… என்றுவிட்டு அவள் உள்ளே சென்றாள்.

 

 

அவன் சிஸ்டம் அணைக்கப் படாமல் லாக் ஆப் மட்டுமே ஆகியிருந்தது. மீண்டும் அதை பாஸ்வேர்டு போட்டு லாகின் செய்தாள். லாகின் ஆனதும் திரையில் அவள் கண்ட காட்சியில் ஒரு நிமிடம் அவளுக்கு ஒன்றுமே ஓடவில்லை.

 

 

ரவி அவசரத்தில் கடைசியாக அவன் பார்த்துக் கொண்டிருந்ததை க்ளோஸ் பண்ணாமலே சென்றிருக்க அதை பார்த்தவள் தான் அப்படியே இருக்கையில் அமர்ந்து விட்டாள்.அதில் தெரிஞ்ச காட்சி வேறு ஒன்றுமல்ல வெளியில் இருந்த அறையில் சிசிடிவி கேமராவின் பதிவுகளே அவை.

 

 

அதில் இருந்த நான்கு விண்டோவில் அவன் கடைசியாக பார்த்துக் கொண்டிருந்தது அவளை தான் என்பதையும் அவள் அமர்ந்திருந்த இடம் இப்போது காலியாய் இருப்பதை காட்ட உடலில் ஒரு பயம் விரவி பரவியது.

 

 

மற்றதையும் அவள் அவசரமாய் பார்க்க முக்கியமாக வெளியில் அமர்ந்திருந்த பெண்களை மட்டுமே குறி வைத்தது போல் இருந்தது அந்த கேமரா.அங்கு அமர்ந்திருந்த பெண்களின் ஒவ்வொரு அசைவும் துல்லியமாக அதில் பதிந்ததை பார்த்தவள் தான் அதிர்ந்து போயிருந்தாள்.

அவர்களின் சேலை லேசாக விலகியிருந்தால் கூட அதை அவன் பெரிதாக்கி பார்க்க முடியும் அவ்வளவு தூரம் அது பெண்களின் புறம் திருப்பி வைக்கப் பட்டிருந்தது.

 

 

அவன் பொய் முகம் கழண்டு உண்மை சொரூபம் அவளுக்கு புரிந்தது, அவன் கானலாய் போனது அவளுக்குமே அதிர்ச்சியாய் இருந்தது. அவளிடம் காதல் சொன்னது எல்லாம் பொய்யாக இருக்கும் என்பதுரைத்தது அந்நேரம் அவளுக்கு.

 

 

‘ஐயோ இப்போ போன் பண்ணலைன்னா அவனுக்கு சந்தேகம் வருமே… என்று எண்ணியவள் அவசரமாய் அவனுக்கு அழைத்தாள். “ஹலோ சார் நான் உங்க சிஸ்டம் ஓபன் பண்ணிட்டேன்…

 

 

“அதுல அந்த போல்டர் ஓபன் பண்ணு தேவி… என்றான்.

 

 

“சார் அதுக்கு முன்ன ஒரு விஷயம் சார்… உங்க சிஸ்டம்ல சிசிடிவி கேமரா பேஜ் ஓபன்ல இருக்கு சார்…

 

 

“என்ன… ஓபன்ல இருக்கா… என்றவன் சற்றே அமைதியாக அவள் தொடர்ந்தாள்.

 

 

“சார் லாக்அவுட் ஆகியிருக்கு சார்… அதை க்ளோஸ் பண்ணிடவா… என்றாள்

 

 

“ஓ சரி சரி க்ளோஸ் பண்ணிடுங்க… என்று அவன் சொல்ல அவள் அவன் கேட்ட தகவல்களை தந்துவிட்டு அவன் மடிகணினியின் திறவுசொல்லையும் வாங்கிக் கொண்டு வைத்தாள்.

 

 

ரவி இதில் அறியாத ஒரு விஷயம் என்னவென்றால் குந்தவைக்கு கணினி அறிவு குறைவு என்று அவன் எண்ணியிருந்தான். அவள் வீட்டில் கணினி இருப்பதால் வானவனுடன் சேர்ந்து அவள் அதிகம் கற்றுக் கொண்டிருந்தாள்.

 

 

ஏனோ அவளுக்கு அவன் சிஸ்டத்தில் இருந்த வீடியோ பைல்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று தோன்ற அவசரமாய் சர்ச் ஆப்ஷன் சென்று வீடியோ பைல்களை மட்டும் சர்ச் செய்தாள்.

 

 

அந்த இடைவெளியில் அவன் மடிகணினியை உசுப்பி அவன் கேட்ட தகவல்களை அவள் பென்டிரைவ் உதவியுடன் காபி செய்து அவனுடைய சிஸ்டத்தில் போட்டு பிரின்ட் அவுட் எடுத்து வைத்தாள்.

மீண்டும் ஒரு எண்ணம் அவள் நெஞ்சில் உதிக்க அவன் மடிகணினியிலும் வீடியோ மற்றும் போட்டோவை தனித்தனியாக சர்ச் செய்தாள். அதில் வந்த நூற்றுக்கணக்கான பைல்களை பார்த்ததும் முதலில் ஒன்றும் புரியவில்லை.

 

 

பின்னர் அவற்றை தேதிவாரியாக பிரித்து பார்த்தாள். அதில் முதல் நாள் வரை இருந்த பதிவுகள் இருக்க அவள் குத்துமதிப்பாய் ஒன்றை திறந்தாள்.

 

 

அதில் அவன் ஒரு பெண்ணுடன் வெகு நெருக்கமாய் இருப்பது போன்ற பதிவுகள் ஓடியது. அப்பெண் அவனருகில் அமர்ந்து எதையோ குனிந்து நோக்கிக் கொண்டிருக்க ரவி அவளுக்கு வெகு நெருக்கமாய் அமர்ந்திருந்தான்.

 

 

அதை மூடியவள் ஒரு மாதத்திற்கு முந்தைய பதிவு ஒன்றை திறந்து செய்து பார்த்தாள் அவள் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணொருத்தியின் வீடியோ பதிவு அது.

 

 

சிசிடிவியில் இருந்து அதை தனியாக எடுத்து பதிந்து வைத்த பதிவாக அது இருந்தது. மதிய உணவு இடைவெளியில் யாருமில்லை என்று அவர் புடவையை உதறி கட்டிக் கொண்டிருந்தார்.

 

 

அதை பார்த்ததும் பகீரென்றது அவளுக்கு, சட்டென்று கீழே வந்தவள் இரண்டு நாளைக்கு முந்திய பதிவை திறந்து பார்த்து மேலும் அதிர்ந்தாள்.

 

 

அவள் குனிந்து எதையோ பார்த்துக் கொண்டிருக்க ரவி அவளுக்கு மிக நெருக்கமாய் அமர்ந்து அவள் கன்னத்தில் முத்தமிடுவது போல இருந்தது அந்த பதிவு.

 

 

அதுமட்டுமில்லாமல் அவன் ஒரு கை உயர்ந்து அவளை அணைத்தது போலிருக்க அன்றைய நிகழ்வை கண் முன் ஓட்டிப் பார்த்தாள் அவள். வெகு அருகில் ரவி இருப்பது போன்று தோன்றிய கணம் அவள் திரும்பி பார்த்ததும் ரவி ஒரு கோப்பில் ஆழ்ந்திருந்ததும் அவள் நினைவுக்கு வந்தது.

 

 

‘இதையெல்லாம் எதற்கு எடுத்து வைத்திருக்கிறான், ஒரு வேளை இதைக்காட்டி மிரட்ட எண்ணியிருப்பானோ… என்று எண்ணியவள் அடுத்து இருந்த பதிவை பார்த்தாள்.

 

 

அதிலும் குந்தவையும் ரவியுமே இருந்தனர். பேனா கீழே விழுந்தது என்று எடுக்க கீழே குனிந்தவன் அதை எடுத்துக் கொண்டு வேண்டுமென்றே அவளை இடிப்பது அதில் தெரிந்தது.

குந்தவை அவன் தெரியாமல் இடித்துவிட்டான் என்று எண்ணி அவன் கேட்ட சாரிக்கு பரவாயில்லை என்று வேறு சொன்னது அந்த கணம் அவள் நினைவுக்கு வந்தது.

 

 

அங்கு இருக்க இருக்க அவளுக்கு தலையை வலிப்பது போல் தோன்றியது. சட்டென்று ஒரு யோசனை தோன்ற மடிகணினியில் இருந்த அத்தனை வீடியோ பைலையும் அவள் பென்டிரைவில் பதிய முயற்சி செய்தாள்.

 

 

அவள் பென்டிரைவ் வெறும் பதினாறு ஜீபி மட்டுமே இருந்ததால் இரண்டு மாதத்திற்கு முந்தைய பதிவுகள் மட்டும் எடுத்து பதிவு செய்து வைத்தாள்.

 

 

அவன் சிஸ்டத்தில் அவ்வளவாக வீடியோ எதுவும் இல்லை என்பதால் அதை அணைத்துவிட்டு அவன் மடிக்கணினியையும் முன் போல் இருந்த இடத்திலேயே வைத்து விட்டு வெளியில் வந்தாள்.

 

 

தலை வெகுவாய் கனத்தது அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் விழித்தாள். எந்த வேலையும் அவளால் நிம்மதியாய் பார்க்க முடியவில்லை.

 

 

மூன்று மணிக்கு மேல் ரவி வந்து சேர்ந்தான். அவனாய் அழைக்கும் வரை அவன் அறையை அவள் எட்டிக் கூட பார்க்கவில்லை. அவன் கேட்ட பிரின்ட்அவுட்டை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

 

 

“உட்காரு தேவி… என்றான்.

 

 

“இந்தாங்க சார்… என்று அவன் கேட்டதை அவனிடம் நீட்டினாள். அவன் முகத்தை கூட அவளுக்கு பார்க்க பிடிக்கவில்லை. இதுவே பழைய குந்தவையாய் இருந்தால் ஒருவேளை அவனை அடித்திருப்பாளோ…

 

 

“என்ன தேவி நான் பேசிட்டே இருக்கேன்… நீ பேசாமலே இருக்கே…

 

 

“ஒண்ணுமில்லை சார்… இந்தாங்க நீங்க கேட்டது எல்லாம் இதில இருக்கு… என்றுவிட்டு அவள் திரும்பி போகப் பார்க்க எழுந்து அவளருகில் வந்தவன் “தேவி நாம கொஞ்சம் தனியா பேசணுமே…

 

 

“இப்போ தனியா தானே இருக்கோம்… என்று இயல்பாய் காட்டிக் கொண்டு அவளும் பதில் கொடுத்தாள்.

“இந்த தனிமை இல்லை வேற தனிமை… என்றவன் எழுந்து இப்போது அவளருகில் வந்திருந்தான். அவள் சற்று நகர போக “தேவி… என்றவன் அவள் கையை பிடித்தான்.

 

 

“சார் கையை விடுங்க…விடுங்க… என்று அவள் சொல்லியும் அவன் விடாமல் இருக்க தன்னையும் மீறி அவன் மேல் இருந்த கோபம் வெளிப்பட “கையை விடுடா பொறுக்கி… என்றவள் அவன் கையை உதறினாள்.

 

 

“இது தான் சரி… அப்புறம் என்னை பத்தி உனக்கு ஏதும் சந்தேகம் வந்திருக்கும்ன்னு தோணிச்சு…அதை உறுதிப்படுத்திக்க தான் இப்படி செஞ்சேன்… நான் நினைச்சது சரி தான்…

 

 

“அப்போ நான் சிசிடிவில என்ன பார்த்தேன்னு நீ பார்த்திட்ட சரிதானே… என்று அவன் கேட்கவும் அவளும் நிமிர்வுடன் ஆம் என்று தலையாட்டினாள்.

 

 

“ஏன் உனக்கு என்ன பிரச்சனை எதுக்கு இந்த மாதிரி கீழ்த்தரமான வேலை எல்லாம் செய்யற, உன்னை நான் எவ்வளவு பெரிய உயரமான இடத்தில வைச்சிருந்தேன்…

 

 

“நீ எவ்வளவு நல்லவன்னு நினைச்சுட்டு இருந்தேன்… நீ ஏன் இப்படி இருக்கே… என்று அதுவரை மரியாதை கொடுத்து பேசியிருந்தவள் அந்த மரியாதையை கைவிட்டாள்.

 

 

“நான் கெட்டவன்னு யார் சொன்னது, நீயே அப்படி நினைச்சா நான் என்ன பண்ண முடியும்…

 

 

“இப்போ காலையில நீ பார்த்ததுக்கு என்ன அர்த்தம்… ஏன் என்கிட்ட இப்படி நடந்துக்கற… என்றாள்…

 

 

“இது ஆபீஸ் நான் இங்க எல்லாமே பேச முடியாது… எனக்கு உன்கிட்ட இன்னைக்கே பேசியாகணும்… இன்னைக்கு நீ வீட்டுக்கு போனதும் நான் உனக்கு போன் பண்றேன்…

 

 

“அதை நான் எடுத்து பேசுவேன்னு உனக்கு என்ன அவ்வளவு நிச்சயம்… என்றாள்.

 

 

“நீ பேசலைன்னா நஷ்டம் எனக்கில்லை உனக்கு தான்… என்றவன் அவளருகே வந்து அவன் மொபைலை ஆன் செய்து ஒரு வீடியோ பதிவை காண்பித்தான்.

அந்த பதிவு ஏற்கனவே குந்தவை அவன் மடிகணினியில் பார்த்தது தான் ஆனால் அவன் அதை எடிட் செய்து குந்தவையும் அவனும் வெகு நெருக்கமாய் இருப்பது போல் சித்தரித்திருந்தான்.

 

 

கொதித்தெழுந்தவள் அதை வேகமாக அழிக்க முற்பட அவன் அமைதியாய் சிரித்துக் கொண்டு நின்றான். “என்ன அழிச்சிட்டியா… இப்போ திருப்தியா… என்னோட எக்ஸ்டர்னல் ஹார்டிஸ்க்ல ஒரு காபி இருக்கு…அதை என்ன செய்வ, வீட்டில இருக்க என்னோட சிஸ்டம்லயும் ஒரு காபி  இருக்கு அதை என்ன செய்வ… என்று அடுக்கினான்.

 

 

“ஏன்டா இப்படி பண்ற எதுக்குடா இப்படி எல்லாம் பண்ற உனக்கு என்ன தான்டா வேணும்… என்று ரௌத்திரமாய் சீறினாள் அவள்.

 

 

“இப்போதைக்கு எனக்கு வேண்டியது நீ… நீ தான் வேணும்… கல்யாணத்துக்கு முன்னாடி ஏனோதானோன்னு டிரஸ் பண்ணிட்டு வருவ… பார்க்க சுமாரா வேற தெரிஞ்ச… சரி எப்பாவாச்சும் ஒரு முறை தொட்டு பார்த்திடணும் அப்படின்னு நினைச்சு தான்… உன்கிட்ட லவ் பண்ணுற மாதிரி சீன் போட்டேன்…

 

 

“நீ என்னடான்னா என்கிட்ட சிக்காம அவன்கிட்ட சிக்கிட்ட… அது கூட நல்ல விஷயம் தான்… அப்புறம் இன்னொரு விஷயம் கேள்விபட்டேன் நீ இன்னும் கைப்படாத ரோஜான்னு… என்று அவன் சொல்லிக் கொண்டே போக “சீய்… என்றவள் அவன் பேச்சை தாளமுடியாமல் வெளியே சென்று விட்டாள்.

 

 

அவள் வீட்டிற்கு வந்ததும் ஆதி வேலையிருப்பதாக வெளியே சென்றிருந்தவன் வர தாமதமாகியிருக்க குந்தவை பென்டிரைவில் இருந்த அனைத்து வீடியோ பதிவுகளையும் பார்த்து அயர்ந்து போயிருந்தாள்.

 

 

அந்த நினைவிலேயே இருந்தவள் அடுத்து ரவி அவளுக்கு அழைப்பானே எப்படி எடுத்து பேச என்ன பேச என்ற குழப்பத்தில் அவள் அறையிலேயே அடைந்திருந்தாள்.

 

 

இதோ இன்று அந்த குழப்பத்திலும் யோசனையிலும் தான் அர்ஷிதாவை திட்டி என்னனென்னமோ நடந்துவிட்டது. ஒரு வாரமாக நடந்த நிகழ்வுகளை அசை போட்டு அவள் முடிக்கவும் அவள் கைப்பேசி அழைத்தது.

 

 

ஆதி கிளம்பி சென்ற பின்னே வாணி அவளுக்கு அழைத்து முக்கிய விஷயம் பேச வேண்டும் என்றும் அன்று கோவிலுக்கு வருமாறும் சொல்லிவிட்டு வைத்திருந்தாள்.

இப்போது யாராய் இருக்கும் என்று யோசனையாய் பார்க்க அழைத்தது வேறு யாருமல்ல ரவி தான், அழைப்பை ஏற்று அதை காதுக்கு கொடுத்தாள்.

 

 

“என்ன தேவி என்னையே நினைச்சுட்டு இருக்கியா…

 

 

“டேய் வேண்டாம்… என்கிட்ட மரியாதையா பேசு… பழசு நினைச்சு பாரு, என்கிட்ட அடி வாங்கினது உனக்கு மறந்து போச்சா… என்றாள்.

 

 

“என்னது அடி வாங்குனதா… ஹேய் உனக்கு அந்த கதை முழுசா தெரியாதுல்ல… இரு சொல்றேன்… அன்னைக்கு நீ அடிச்சிருக்கலைன்னாலும் நான் அந்த வேலையை விட்டு போயிருப்பேன்…அது தெரியுமா உனக்கு…

 

 

‘என்ன… இவன் என்ன சொல்றான்… என்று யோசித்தவள் அவன் அடுத்து என்ன சொல்லுவான் என்று காதை தீட்டியிருந்தாள். “அப்படின்னா நீ என்ன சொல்ல வர்றே…

 

 

“உண்மையாவே அன்னைக்கு நீ அடிச்சதுக்கு எனக்கு கோவமே வரலை… ஒரு வேளை அது வேற சந்தர்ப்பமா இருந்தா நடக்கறதே வேற… ஆனா அன்னைக்கு நீ அடிச்சது எனக்கு சாக்கா போச்சு…

 

 

“அதை வைச்சு தான் நான் வேலையை விட்டு போறேன்னு போயிட்டேன்… அப்படி தான் எல்லாரும் நினைச்சுட்டு இருந்தாங்க… நீ உட்பட…

 

 

“கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு, ஏன் இப்படி அரைகுறையா உளர்ற…

 

 

“அன்னைக்கு நான் தற்செயலா தான் உன்னை அந்த வழி போக விடாம தடுத்தேன்… நீ அடிச்சது நான் உன்னை தொட்டுட்டேன்னு அதெல்லாம் சரி தான்…

 

 

“ஆனா நான் வேலையை விட்டு போனது செகண்ட் இயர் படிக்கிற ஒரு பொண்ணை தொட்டதுனால தான்… என்று அவன் சொன்னதை கேட்டு அவளுக்கு இன்னும் அயர்வாக இருந்தது.

 

 

“காலேஜ் பொறுத்தவரை நான் பட்டும்படாமலும் தான் பெண்கள்கிட்ட நடந்துப்பேன்… எல்லாரையுமே தொட்டு பார்த்திருக்கேன்… என்ற அவன் கூற “டேய்… என்று அவள் பல்லைக்கடிக்க “தேவி நான் அந்த அர்த்ததுல சொல்லலை… என் கை வேணுமின்னே அவங்க மேல பட்டதை சொன்னேன்…

 

“ஆனா அதெல்லாம் யதேச்சையா நடந்தா போல தான் எல்லாருக்கும் தோணும்…. எனக்கு மட்டும் தான் தெரியும் அது யதேச்சை இல்லைன்னு…ஆனா அந்த பொண்ணு நிலா ரொம்ப அழகு அவ வேணுமின்னு தோணிச்சு…

 

 

“அதான் ஒரு ட்ரிக் பண்ணி அவளை லவ் பண்ணுற மாதிரி நடிச்சு அப்புறம் இத்தியாதி இத்தியாதி தான்… அது தான் கொஞ்சம் பிரச்சனையாகிடுச்சு, அவ எப்படியோ எவிடென்ஸ் ரெடி பண்ணிட்டா…

 

 

“என்னை மிரட்ட ஆரம்பிச்சா, அதான் அங்க இருந்து எப்படி கிளம்புறதுன்னு யோசிச்சுட்டே இருந்தேன்… நல்ல வழியா நீ வந்த என்னை அடிச்ச நான் அது தான் சாக்குன்னு வேலையை விட்டு போயிட்டேன்…

 

 

“அதுக்கு அப்புறம் கூட அந்த நிலா என்னை தேடி தான் வந்தா, நான் எப்படியோ சமாளிச்சுட்டேன்… அது வேற கதை வேற ட்ராக் அது உனக்கு தேவையில்லை…

 

 

“அதனால தான் நான் எப்பவும் உன்னை நினைச்சு சிரிச்சுட்டே இருப்பேன்… எவனுக்காச்சும் அவனை கை நீட்டி அடிச்ச பொண்ணு மேல கோவத்துக்கு பதிலா நன்றி சொல்ல தோணுமா சொல்லு…

 

 

“ஆனா உன் விஷயத்துல எனக்கு அப்படி தோணிச்சு… சரி இப்போ நடக்கற விஷயத்துக்கு வருவோம்…

 

 

“எனக்கு நீ வேணும்… எப்போ எங்கன்னு நீயே சொல்லு… என்னோட வீடு நமக்கு ரொம்ப வசதியா இருக்கும்… யாருமேயில்லை… நான் மட்டும் தான் தனியா இருக்கேன்…

 

 

அவன் பேச பேச கண்ணீர் அவள் விழிகளில் பெருக்கெடுக்க அவன் முன் கோழையாய் கண்ணீர் சிந்த விரும்பாதவள் அதை துடைத்தெறிந்தாள். “நான் இன்னொருத்தர் பொண்டாட்டி… மரியாதையா பேசு… அவர்க்கு தெரிஞ்சுது உன்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவார்… என்றாள்.

 

 

“ஓஹோ, அப்படியா அவன் என்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவானா, எங்க பண்ண சொல்லு பார்ப்போம்… நாம நெருக்கமா இருக்க வீடியோ என்கிட்ட இருக்கு….

 

 

“அதை காமிச்சாலே பய உன் மேல தான் சந்தேகப்படுவான்… நீ வேற என்னை பத்தி அவன்கிட்ட எதுவுமே சொல்லவே இல்லையா… அதுனால அவனுக்கு உன் மேல தான் சந்தேகம் வரும்…ஆனா ஒண்ணு தேவி எனக்கு உன்கிட்ட பிடிச்சது என்ன தெரியுமா… நீ இன்னொருத்தன் பொண்டாட்டிங்கறது தான்…

 

 

“நேத்து சொன்னேனே கல்யாணத்துக்கு முன்னாடி ஏனோதானோன்னு இருந்தன்னு… கல்யாணத்துக்கு பிறகு அன்னைக்கு வந்தியே நல்லா தலை நெறைய பூ வைச்சுட்டு… நெத்தில அழகா குங்குமம் வைச்சுட்டு புதுத்தாலி கழுத்துல மின்ன வந்தியே… என்னால மறக்கவே முடியாது அன்னைக்கு…

 

 

“என்னவொரு அழகு, இன்னமும் என் கண்ணு முன்னால நிக்குற… கூட அந்த கடன்காரனை கூட்டி வராம இருந்திருந்தா அப்படியே உன்னை லட்டு மாதிரி தூக்கி சாப்பிட்டிருப்பேன்…

 

 

“டேய் போதும் நிறுத்துடா பொறுக்கி… எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு… நீ வரைமுறை மீறி பேசிட்டு இருக்க… நான் நடவடிக்கை எடுத்தா நீ என்னாவேன்னே உனக்கே தெரியாது…. என்று சத்தமாய் பேசினாள்.

 

 

“உன்னால என்னை ஒண்ணுமே பண்ண முடியாது… நான் எப்பவும் எங்கயும் யாரும் என்னை சந்தேகப்படுற மாதிரி நடந்துக்கவே மாட்டேன்… காலேஜ்லையே நான் எப்படின்னு நெறைய பேருக்கு தெரியாது…

 

 

“அதுனால தான் நான் வேலையை விட்டு போனப்ப அவ்வளவு பீல் பண்ணாங்க… இங்க அதுக்கும் மேல நல்ல பேரு சம்பாதிச்சு வைச்சிருக்கேன்… அதை உன்னால அசைக்க கூட முடியாது…

 

 

“அதுக்கும் மேல நெறைய விஷயமிருக்கு, அதெல்லாம் உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்லை எனக்கு… உனக்கு ஒரு வாரம் டைம் தர்றேன்… அடுத்த வாரம் சனிக்கிழமை நீ என் வீட்டில இருக்கணும்…

 

 

“பொறுக்கி நாயே எப்படிடா உன்னால இப்படி கூசாம பேச முடியுது… உனக்கு கூட பிறந்தவங்கன்னு யாருமே இல்லையா…

 

 

“எப்படி டார்லிங் சரியா சொன்னே, எனக்கு அப்படி யாருமேயில்லை டியர்… பொதுவா பொண்ணுங்களை தொட்டு பார்த்து சந்தோசப்படுறவன், அவ்வளவு சீக்கிரம் நான் எந்த பொண்ணையும் தொட நினைக்க மாட்டேன்…

 

 

“உண்மையாவே நான் ரொம்ப நல்லவன் தேவி… மாற்றான் தோட்டத்து மல்லிகை எல்லாம் தொட்டதே இல்லை…

“அப்புறம் ஏன்டா என்னை மட்டும் இப்படி கேட்குற, நான் விக்ரமோட வைப் உனக்கு ஏன் இப்படி எல்லாம் தோணுது…

 

 

“பட் யூ ஆர் சம்திங் ஸ்பெஷல் பேபி… நீ அந்த ஆதியோட பொண்டாட்டின்னு எனக்கும் தெரியும்… என்னமோ அன்னைக்கு உன்னை பார்த்ததுல இருந்து எனக்கு கிறுகிறுத்து போச்சு… எனக்கு ஒரு சந்தேகம் இருந்துச்சு நீயும் அவனும் ஒண்ணா இருந்திருக்க மாட்டீங்கன்னு…

 

 

“ஏன்னா அன்னைக்கு காலேஜ்ல நடந்த விஷயம் எனக்கும் தெரியும்… அதையும் ஆதி அன்னைக்கு நம்ம ஆபீஸ்க்கு வந்தப்ப நான் உன்னை அறிமுகப்படுத்தினேனே ஞாபகமிருக்கா, அன்னைக்கு என்னடான்னா அவன் உன்னை பார்த்ததேயில்லைங்கற மாதிரி பேசினான்…

 

 

“அதெல்லாம் வைச்சு ஒரு சின்ன கணக்கு போட்டு பார்த்தேன்… உன்கிட்ட பலவிதமா கேட்டு பார்த்தும் ஒரு பிரயோஜனமும் இல்லாம போச்சு… ஆனா நீ மறுக்க மறுக்க எனக்கு உங்களுக்குள்ள உறவு இல்லைன்னு தோணிட்டே இருந்திச்சு…

 

 

“அப்புறம் தான் தெரிஞ்சுக்கிட்டேன், உனக்கும் அவனுக்கும் எப்பவும் செட் ஆகாதுன்னு… நீ இன்னும் பிரெஷ்ன்னு, அதான் உன்னையே சுத்தி சுத்தி வந்தேன்…

 

 

“எப்போடா எப்போடான்னு தவிச்சுட்டு இருந்தேன்… இப்போ தான் சரியான சந்தர்ப்பம் கிடைச்சுது… சீக்கிரம் தயாரா இரு டார்லிங்… அடுத்த சனிக்கிழமை மறந்திடாதே… என்று சொல்லி வைத்து விட்டான் அவன்.

 

 

அவன் பேச்சில் குந்தவைக்கு நிதானம் தவறிக் கொண்டிருந்தது. தன்னை மீறி வழிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைத்தாள். கண்ணை மூடி யோசிக்க ஆதியின் முகம் கண்களுக்குள் வந்து போனது.

 

 

அர்ஷிதா சற்று முன்பு அவளிடம் பேசியதை யோசித்து பார்த்தாள், அவரிடம் சொல்லி விடலாமா என்று தோன்றிய எண்ணம் தோன்றிய வேகத்திலேயே அழிந்து போனது.

 

 

வானவனிடம் சொல்லலாம் என்றால் அவன் தன்னை தான் குற்றம் சொல்வான், ஆனாலும் இந்த வீடியோ விஷயம் இதை எப்படி காட்ட முடியும்… யோசித்து யோசித்து தலையை வலித்தது அவளுக்கு….

Advertisement