Advertisement

அத்தியாயம்- 18

 

நேற்றைக்கெல் லாங்குளிர்ந்து காட்டி இன்று கொதிக்கும்

நித்திரா பாவிக்கென்ன போட்டி நடுவே இந்தக்
காற்றுக்கு வந்ததொரு கோட்டி விரகநோய்க்கு

மாற்று மருந்து முக்கண் மருந்தென்று பரஞ்சாட்டி

 

 

– திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)

 

 

கைபேசி அடிக்குமா என ஆதி அவ்வப்போது அதை பார்ப்பதும் வாசலை பார்ப்பதுமாய் இருந்ததை பார்த்த அர்ஷிதா குறுநகையுடன் சென்றுவிட்டாள்.

 

 

குந்தவையாக போன் செய்வாள் என்று தோன்றவில்லை அவனுக்கு, ‘ஏன் நானே போன் பண்ணா தான் என்ன… என் பொண்டாட்டி, நான் தானே கூட்டிட்டு போகணும்… இதுல என்ன கவுரவம்… என்றெண்ணி கைபேசியை எடுக்கவும் அது குந்தவையின் அழைப்பை காட்டவும் சரியாக இருந்தது.

 

 

அழைப்பை பார்த்தவனது மனம் மகிழ்ச்சியில் குதூகலித்தது. அவசரமாய் பொத்தானை அழுத்தி காதில் வைத்தான். “ஹலோ… என்றான் மகிழ்ச்சியான குரலில்.

 

 

“என்ன என்னை தனியா விட்டுட்டு போக எதுவும் ப்ளான் பண்ணுறீங்களா… என்றாள் அவன் மனையாள் மறுபுறம்.

 

 

‘ச்சே அவளும் நம்மை தான் தேடியிருக்கா, நான் தான் தப்பா நினைச்சுட்டேன்… என்று எண்ணி அவன் தலையை தட்டிக் கொண்டவன் “யாரு நானா இல்லை நீயா?? என்று கேட்டு அவளை வம்பிழுத்தான்.

 

 

“யாரு நானா சும்மா சமாளிக்காதீங்க… நீங்க எப்போடா போன் பண்ணுவீங்கன்னு நான் போனையே பார்த்திட்டு இருக்கேன்… நீங்க பண்ற மாதிரி தெரியலை… அதான் நானே பண்ணேன்…

 

 

“என்னை விட்டுட்டு போகலாம்ன்னு ப்ளான் பண்ணிட்டீங்க போல…ஒரு ரெண்டு நாள் தானே எங்க வீட்டுக்கு போயிருக்கேன்… நான் வந்து இருபத்திநாலு மணி நேரம் கூட ஆகலை அதுக்குள்ளே என்னை மறந்துட்டீங்க…

 

 

“யாரு நான் மறந்தேனா?? ஏன் சொல்ல மாட்டே, அம்மா வீட்டுக்கு போய் அதே இருபத்தி நாலு மணி நேரம் கூட முடியலை… இப்போ தான் புருஷனை தேடி போன் பண்ணியிருக்க…

 

 

ஆதியின் புருஷன் என்ற பேச்சில் அவளுக்கு நாணமாகிவிட அதை சமாளிக்கும் பொருட்டு “போதும் போதும் பேசினது எல்லாம்… எனக்கு ஆபீஸ்க்கு நேரமாச்சு… இப்போ வந்து கூட்டிட்டு போறீங்களா என்ன சொல்றீங்க…

 

 

“நான் ரெடியா தான் இருக்கேன், நீ வர்றியா இல்லை நான் வரணுமா…

 

 

“ஏன் பொண்டாட்டியை வந்து கூட்டிட்டு போக மாட்டீங்களோ…

 

 

“சரி போனை வை வர்றேன்… என்றவன் அவள் போனை வைப்பதற்குள் அவள் வீட்டின் முன் நின்றான்.

 

 

“குந்தவை கிளம்பலாமா?? என்றவனை சிரிப்புடன் பார்த்தாள்.

 

“உள்ள வாங்க… என்றவளிடம் “நேரமாச்சுன்னு சொன்னே, இப்போ உள்ள கூப்பிடுற…

 

 

“வந்து டிபன் சாப்பிட்டு போங்க…

 

 

“அதெல்லாம் வீட்டில சாப்பிட்டாச்சு, நேரமாச்சு கிளம்புவோம்… நான் ஈவினிங் வீட்டுக்கு வர்றேன் ஓகே வா… இப்போ கிளம்பலாம் தானே… என்றான்.

 

 

அவளும் பையை எடுத்துக் கொண்டு அவள் அன்னையிடம் விடைபெற்று வெளியில் வர அவரும் பின்னோடே வந்தார். இருவருமாக அவருக்கு தலையசைத்து அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

 

 

அன்று அவளை இரு முறை பார்த்திருந்தாலும் குந்தவை அருகில் இல்லாத அந்த இரவு அவனுக்கு உறக்கமேயில்லை… பொழுது விடிந்தும் விடியாததுமாக அவளுக்கு போனை செய்தான்.

 

 

“என்ன குந்தவை இன்னைக்கு வீட்டுக்கு வந்திடுவ தானே…

 

 

“என்னது இன்னைக்கா??? இன்னைக்கு எப்படி வரமுடியும்…

 

 

“ஏன் அதான் ரெண்டு நைட் முடிஞ்சு போச்சே இன்னும் என்ன பண்ணப் போறே?? என்றவனின் கேள்வியில் அவளுக்கு சிரிப்பு வந்தது.

 

 

“இன்னைக்கு செவ்வாய்க்கிழமை, இன்னைக்கெல்லாம் அனுப்ப மாட்டாங்க… நான் நாளைக்கு தான் வருவேன்… போதுமா??

 

 

“ஓ!!! என்றவன் ஏதும் பேசாமல் இருக்க “என்ன ஓ தானா… வேற ஒண்ணுமில்லையா?? என்றாள்.

 

 

“வேற என்ன சொல்ல, அதான் வரமுடியாதுன்னு சொல்லிட்டியே… என்றவனின் குரலில் வரமாட்டாளே என்ற ஆதங்கம் இருந்தது தெரிந்தது.

 

 

“என்னமோ நான் வேணுமின்னு வரமாட்டேன்னு சொன்ன மாதிரி சொல்றீங்க… அம்மா வீட்டில இருந்து செவ்வாய் வெள்ளி எல்லாம் அனுப்ப மாட்டாங்க… அதை தான் சொன்னேன்…

 

 

“என்னமோ பண்ணுங்க… என்று சலித்துக் கொண்டான் அவன்.

புதன்கிழமை அலுவலகம் விட்டு நேராக அவள் வீட்டிற்கே வந்துவிட ஆதி மகிழ்ந்து போனான். “இப்போவாச்சும் வந்தியே…

 

 

“நீங்க என்னை அவ்வளவு தேடினீங்களா??

 

 

“ச்சே ச்சே… சும்மா போரடிக்குதே நீ இருந்தா வம்பிழுக்கலாம்ன்னு தான்…

 

 

“அப்போ இந்த ரெண்டு நாளா எந்த வேலையும் பார்க்கலை, ஆடிட் வேலை அப்படியே பெண்டிங் வைச்சுட்டீங்க… அப்படி தானே… என்று அவள் கேட்கவும் ஆதியின் கைபேசி அழைத்தது.

 

 

அதை எடுத்து காதுக்கு கொடுத்தவன் “சொல்லுடா நல்லவனே… என்றான், அவன் பேசுவதிலேயே தெரிந்தது அழைப்பு ஜோதிஷிடம் இருந்து என்று… “வர்றேன்டா ஏன்டா இப்படி என் மானத்தை வாங்குற…

 

 

“வீட்டில கொஞ்சம் வேலை அதான் வர முடியலை… ஒரு ரெண்டு நாளைக்கு நீ அந்த வேலையை பார்க்க கூடாதா… சரி சரி இன்னைக்கு நைட் உட்கார்ந்து முடிச்சிடுவோம்… என்றுவிட்டு போனை வைத்தான்.

 

 

இப்போது குந்தவை அவனை முறைத்தாள். “இன்னைக்கு நைட் கொஞ்சம் வொர்க் இருக்கு குந்தவை நான் போகணும், கொஞ்சம் டிபன் மட்டும் செஞ்சு கொடேன்… எனக்கும் ஜோதிஷுக்கும்…என்றுவிட்டு அங்கிருந்து விட்டால் போதும் என்று ஓடியே போனான்.

 

 

வேலை இருக்கிறது என்று சொன்னானே என்பதற்காய் அவளும் அவசரமாய் இரவு உணவு தயாரித்து அவனுக்கு கொடுத்தாள். ஆதி அவர்கள் அறையில் இருந்து அவளை அழைக்கும் குரல் கேட்க அங்கு விரைந்தாள்.

 

 

“என்னங்க எதுக்கு கூப்பிட்டீங்க, டிபன் கட்டிட்டேன்… எப்போ கிளம்பணும்…

 

 

“இதோ கிளம்பிட்டேன்… என்றவன் சட்டென்று அவளை உள்ளே இழுத்து கதவை அடைத்தான். அவள் எதையும் யோசிக்கும் முன்னே அவள் இதழில் இதழ் பதித்துவிட்டு விடைபெற்று சென்றான்.

 

 

‘இவருக்கும் ரொம்ப குறும்பு கூடி போச்சு… என்று மனதிற்குள் அவனை செல்லமாக வைதாள். மறுநாள் எப்பொழுதும் போலவே அலுவலகம் சென்றவளுக்கு அன்றைய பொழுது நல்ல பொழுதாய் இல்லை என்பது அங்கு சென்ற பின்னே தெரிந்தது.

குந்தவையின் போக்கில் நான்கைந்து நாட்களாக மாற்றங்கள் இருந்ததை ஆதி கவனிக்க தவறியிருந்தான். அவன் வருடக் கடைசி கணக்குகளை முடித்துக் கொடுப்பதில் கொஞ்சம் ஆழ்ந்துவிட அந்த மாற்றம் அவன் கண்ணுக்கு புலப்படவில்லை.

 

 

இரண்டு நாட்களாய் அவனும் சரியாக வீட்டிற்கே வாராதிருந்தவன் வேலை எல்லாம் முடித்து அன்று ரிலாக்ஸ்டாக வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

 

 

குந்தவையின் அமைதியை முதலில் சாதாரணமாக எடுத்துக் கொண்டவனுக்கு வண்டியில் வரும் போது பேசிக் கொண்டே வருபவள்அமைதியாய் வருவதை அப்போது தான் உணர்ந்தான்.

 

 

‘என்னாச்சு இவளுக்கு ஏன் இப்படி அமைதியின் சிகரமா வர்றா…தினமும் இப்படி தான் வர்றா… நானும் ஏதோ வேலை நினைப்புல அதை கவனிக்காம விட்டுட்டேனே… சரி வீட்டுக்கு போய் என்னன்னு கேட்போம்… என்று எண்ணிக் கொண்டான்.

 

 

வீட்டிற்கு வந்ததும் அவளிடம் கேட்க வேண்டும் என்று எண்ணியவன் அதை கேட்க முடியாமல் போனது. குந்தவை தன் போக்கில் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தாள்.

 

 

ஆதிக்கு ஒரு முக்கிய அழைப்பு வந்திருக்க அதை பேசுவதிலேயே முனைப்பானவன் அவன் மடிகணினியுடன் அமர்ந்து கொண்டு யாருக்கோ எதையோ விவரித்துக் கொண்டிருந்தான்.

 

 

அவர்களுக்குள் எந்தவித பேச்சும் முழுதாக இல்லை என்று சொல்ல முடியாவிட்டாலும் பேச்சு வார்த்தை குறைந்தே போயிருந்தது. அந்த வார சனிக்கிழமை ஆதிக்கு வேலையிருந்ததால் அவன் கிளம்பி வெளியே சென்றுவிட்டான்.

 

 

முதல் நாள் அலுவலகம் விட்டு வீட்டிற்கு வந்ததில் இருந்தே குந்தவை அவள் அறையை விட்டு வெளியே வரவேயில்லை. ஏதோ யோசிப்பதும் தலையில் கை வைத்து அமர்வதுமாக இருந்தாள்.

 

 

ஆதி அவளை விட்டுவிட்டு வெளியே சென்றவன் வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வந்ததால் அவளை சரியாக கவனிக்கவில்லை. அப்போதும் என்ன பிரச்சனை என்று அவளிடம் அவன் கேட்காமலும் இல்லை.

 

 

குந்தவை அவன் கேள்விக்கு எதுவுமில்லை என்ற பதிலை தர மேற்கொண்டு அவளிடம் நின்று பேச நேரமில்லாமல் போனதால் அவனும் எதுவும் கேட்கவில்லை.

 

 

குந்தவை ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்திருக்க அர்ஷிதா அவளை தேடி வந்தாள். “அண்ணி மதியத்துக்கு என்ன சமைக்கட்டும்…

 

 

“ஏதாச்சும் ஒண்ணு செய்… என்னை கேட்காதே… என்றாள்.

 

 

சற்று நேரத்தில் மீண்டும் வந்த அர்ஷிதாவோ “அண்ணி வெண்டக்காய் ப்ரை பண்ணிட்டு சாம்பார் வைச்சிடவா என்று வந்து நின்றாள்.

 

 

“நான் தான் சொன்னேன்ல எது வேணாலும் பண்ணு… என்னை கேட்காதே சரியா… என்று சிடுசிடுத்தாள்.

 

 

அர்ஷிதாவும் எதுவும் பேசாமல் உள்ளே சென்றவள் ஏதோ தோன்ற மீண்டும் வெளியில் வந்தாள். கேட்கலாமா வேண்டாமா என்று தனக்குள் யோசனை செய்தவள் “அண்ணி சிலிண்டர் ரெண்டு நாளைக்கு தான் வரும் போல நீங்க வேற சிலிண்டர்க்கு சொல்லிட்டீங்களா?? என்றாள்.

 

 

“உனக்கு இப்போ என்ன தான் பிரச்சனை எதுக்கு சும்மா அது இதுன்னு என்னை தொல்லை பண்ணிட்டு இருக்கே… கொஞ்ச நேரம் பேசாம எங்கயாவது போய் தொலையேன்… என்று கத்தினாள்.

 

 

அவள் பேசி முடிக்கவும் அப்போது தான் உள்ளே வந்த ஆதி வேகமாக அவளருகே வந்தான். “என்ன சொன்ன, திரும்ப சொல்லு…

 

 

குற்ற உணர்வுடன் சட்டென்று சோபாவில் இருந்து எழுந்து நின்றாள் அவள். “அண்ணா… என்ன கேட்குற நானும் அண்ணியும் சும்மா பேசிட்டு இருந்தோம்… என்று கூற திரும்பி அவளை முறைத்தான்.

 

 

“நீ கொஞ்சம் பேசாம இரு?? என்றவன் குந்தவையை நோக்கி “கேட்கிறேன்ல என்ன சொன்ன… பதில் சொல்லு… என்றான்.

 

 

அவளோ பேசாமடந்தையாய் நின்றிருந்தாள். “போனா போகுது சின்ன பொண்ணு விட்டு கொடுத்து போகணும்ன்னு நினைச்சா இப்படி தான் தலைக்கு மேல ஏறுவியா…

 

“வாய்க்கு வந்தது எல்லாம் பேசுவியா… என்ன சொன்ன அவ எங்கயாச்சும் போய் தொலையணுமா… நீ எங்கயாச்சும் போய் தொலை அப்போ தான் எல்லார்க்கும் நிம்மதி… என்று அவனும் பதிலுக்கு வார்த்தையை விட்டான்.

 

 

குந்தவையின் கண்களில் இருந்து மளமளவென்று கண்ணீர் வழிந்து நிற்காமல் ஓடியது. “போ என் கண்ணு முன்னாடி நிற்காதே எங்கயாச்சும் போ… என்றவன் அப்போது தான் அவள் விழி நிறைந்ததை பார்த்தான்.

 

 

அத்தோடு நிறுத்திக் கொண்டவன் தொப்பென்று சோபாவில் விழுந்தான். குந்தவை பதிலேதும் பேசாமல் நேராக அவர்கள் அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்து தலையணையை நனைக்க ஆரம்பித்தாள்.

 

 

“அண்ணா… என்று அழைத்தவாறே அர்ஷிதா அருகில் வந்து நின்றாள்.

 

 

“எதுக்குண்ணா இப்படி வார்த்தையை விடுற பாவம் அவங்க அழுதிட்டே போறாங்க…

 

 

“அவ பேசினது சரின்னு சொல்ல வர்றியா??

 

 

“நான் சரின்னும் சொல்லலை தப்புன்னும் சொல்லலை… அவங்க என்னை தானே பேசினாங்க நீ எதுக்குண்ணா அவங்களை சத்தம் போட்டே…

 

 

“அப்போ உன்னை பேசினா நான் கேட்கா கூடாதுன்னு சொல்றியா?? அவ திமிர் எடுத்து அப்படி பேசுவா என்னை பார்த்திட்டே இருக்க சொல்றியா??

 

 

“அண்ணா அவங்க பேசினதை நான் தப்பாவே எடுத்துக்கலை… நம்ம அம்மா திட்டினா நாம கோபப்படுவோமா, இல்லை தானே… அவங்க எனக்கு அம்மா மாதிரி தான்… நான் அப்படி தான் நினைக்கிறேன்… ப்ளீஸ் அண்ணா இனி இப்படி எல்லாம் பேசாதீங்க…

 

 

“அண்ணி பேசினது சரியோ தப்போ ஆனா நீயும் அவங்களை பேசின தானே… அது மட்டும் சரியா… உனக்கொண்ணு தெரியுமா… இப்போ தான் அண்ணியோட தம்பி வந்துட்டு போறாங்க…

 

 

“நீ சத்தம் போடுறதை பார்த்திட்டு அப்படியே போய்ட்டாங்க… என்னை பேசும் போது உனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்குமோ அப்படி தானேண்ணா அண்ணியை நீ சத்தம் போடும் போது அவங்களுக்கும் கஷ்டமா இருக்கும்…

 

“அண்ணி தான் ஏதோ மனசு சரியில்லாம இருக்காங்க… நீயும் வீட்டில சரியா இருக்கறது இல்லை… அவங்ககிட்ட பக்குவமா பேசுறதை விட்டு இப்படி எகிறி குதிச்சா என்னாகும்…

 

 

“நீங்க ரெண்டு பேரும் சண்டை போடுறதையே என்னால தாங்க முடியாது… அந்த சண்டையே எனக்காகன்னு நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்குண்ணா… என்று அவள் வருந்தி பேசவும் ஆதிக்கு அவன் பேசியது தவறு என்று புரிந்தது.

 

 

“சரிம்மா நான் இனி இப்படி பேசலை… என்று சொல்லிக் கொண்டே எழுந்தவன் “சாப்பாடு ஆச்சா… என்றான்.

 

 

“இல்லைண்ணா இதோ செஞ்சிடறேன்… என்று அவள் திரும்ப “வேண்டாம்மா நான் போய் வாங்கிட்டு வர்றேன்…அவ காலைல இருந்து சாப்பிட்டாளா இல்லையா… என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு.

 

 

“அதை ஏன் என்கிட்ட கேட்குற, உன் பொண்டாட்டி தானே நீயே போய் கேட்டுக்கோ… என்று நமுட்டு சிரிப்பு சிரித்துவிட்டு அவள் இடத்தை காலி செய்தாள்.

 

 

ஆதி சாப்பாடு வாங்க வெளியே செல்லவும் அர்ஷிதா குந்தவையின் அறைக்கு சென்றாள். “அண்ணி காபி சாப்பிடுறீங்களா?? என்று கேட்க சட்டென்று எழுந்து அமர்ந்தாள் குந்தவை.

 

 

அர்ஷியை பார்த்து அவளுக்கு குற்றவுணர்வாகிவிட “சாரி அர்ஷிம்மா… என்றாள். “நா… நான் ஏதோ யோசனையில அப்படி பேசிட்டேன்…

 

 

“அண்ணி என்கிட்ட நீங்க சாரி எல்லாம் கேட்க வேண்டாம்… எனக்கு உங்க மேல எந்த கோபமும் வருத்தமும் இல்லவே இல்லை அண்ணி… எங்கம்மா போன பிறகு அவங்க இல்லாம நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்…

 

                                                                  

“அண்ணா உங்களை கல்யாணம் பண்ணி கூட்டி வந்தபிறகு அம்மாவே திரும்ப வந்திட்டாங்கன்னு நினைச்சு நான் சந்தோசமா இருக்கேன் அண்ணி… உங்களை அம்மாவா தான் நான் நினைக்கிறேன்…

 

 

“என்னை திட்டவோ கோவிக்கவோ உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு அண்ணி… என்றவளை அப்படியே கட்டிக் கொள்ள வேண்டும் போல் தோன்ற அவளை அணைத்துக் கொண்டு கண்ணீர் உகுத்தாள்.

“அண்ணி நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?? என்ற அர்ஷிதாவை குந்தவை நிமிர்ந்து பார்த்தாள்.

 

 

“சொல்லு அர்ஷி…

 

 

“உங்களுக்கு எதுவும் பிரச்சனையா அண்ணி?? எதுவா இருந்தாலும் மனசுவிட்டு பேசுங்க அண்ணி… உள்ளுக்குள்ளயே வைச்சு புழுங்காதீங்க…என்ன பிரச்சனைன்னு நீங்க என்கிட்ட சொல்லணும்ன்னு அவசியமில்லை…

 

 

“ஆனா யார்கிட்டயாச்சும் ஒருத்தர்கிட்ட சொல்லுங்க… அந்த பிரச்சனையை தீர்க்கவாச்சும் ஒரு வழி கிடைக்குமில்லை… நான் சொன்னது எதுவும் தப்பா இருந்தா மன்னிச்சுடுங்க அண்ணி…

 

 

“நீ வானவன் மாதிரியே பேசற அர்ஷி… ஒண்ணுமில்லை ஒரு சின்ன விஷயம் தான், அதை நான் சரி பண்ணிடுவேன்… நீ போ போய் எக்ஸாம்க்கு படி, நான் போய் சமைக்கிறேன்… என்றாள்.

 

 

“அண்ணி சமையல் எல்லாம் வேண்டாம்… அண்ணா நமக்கு சாப்பாடு வாங்கிட்டு வர்றேன்னு சொல்லிட்டாங்க… பொண்டாட்டியை திட்டினதுனால எங்கண்ணா சாப்பாடு வாங்கி கொடுத்து சமாதானப்படுத்த பார்க்குறார்… என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

 

 

ஆதியின் பேச்சில் மனம் லேசாகிவிட அவள் கவலையெல்லாம் தற்காலிகமாய் தடைப்பட்டு ஆதியை நினைக்க ஆரம்பித்தாள். முகம் தானாய் புன்னகையை பூசிக்கொண்டது.

 

 

ஆதி வீட்டிற்கு வரவும் அர்ஷியை தேடினான். சமையலறையில் ஏதோ உருட்டிக் கொண்டிருந்தவள் வெளியே வர “எங்க உங்கண்ணி??என்றான்.

 

 

“உள்ள இருக்காங்க…

 

 

“ஏன் மகாராணிக்கு நான் கூப்பிடுறது காதுல விழலையோ எழுந்து வரமுடியாதா?? என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே அவள் வெளியில் வந்தாள்.

 

 

“இந்தா அர்ஷிம்மா சாப்பாடு… என்று அவள் கையில் கொடுத்து விட்டு அவர்கள் அறைக்கு சென்றான் அவன்.

 

அழுது வீங்கியிருந்த குந்தவையின் முகத்தை பார்த்ததும் சங்கடமாகி போனது அவனுக்கு. அர்ஷிதாவுக்கு மாடல் எக்ஸாம் இருப்பதால் படிக்க வேண்டும் என்று சொல்லி அவசரமாக சாப்பிட்டுவிட்டு ரஞ்சிதாவின் வீட்டிற்கு சென்றுவிட்டாளவள் இருவருக்கும் தனிமை கொடுத்து.

 

 

ஆதியை இப்போது அவள் தான் சாப்பிட அழைக்க வேண்டும், சற்று நேரம் நின்று அவனிடம் என்ன பேச என்று யோசித்தவள் அவர்கள் அறையை நோக்கிச் சென்றாள்.

 

 

“சாப்பிட வாங்க… என்று அவள் கூறியதும் இதற்கு முன் அவள் இதே போல் அவனை சமாதானப்படுத்த வந்த அந்த நாள் அவன் நினைவிற்கு வந்தது. அவள் கையை பிடித்து தன்னருகில் அமர வைத்தான்.

 

 

“உனக்கு என்ன பிரச்சனை குந்தவை… என்கிட்ட சொல்ல மாட்டியா?? ஆபீஸ் எதுவும் பிரச்சனையா உனக்கு?? என்றதும் அவள் முகம் வாடியது.

 

 

“சரி விடு… நான் இனி எதுவும் உன்னை கேட்கலை… நான் உன்னை திட்டினது தப்… என்று அவன் முடிப்பதற்குள் அவள் அவன் வாயை பொத்தினாள்.

 

 

“நான் பண்ண தப்புக்கு நீங்க ஏன் சாரி கேட்கறீங்க… வேணாமே, நமக்குள்ள இந்த சாரி எப்பவும் வேண்டாமே… என்று கூறியவளை மென்மையாய் பார்த்தான்.

 

 

அவளும் அவனை பார்க்க ஏனோ அவள் பார்வை எதையோ அவனிடம் யாசிப்பது போல இருந்தது அவனுக்கு. அவளை ஊடுருவும் விதமாய் அவள் தேடுவதை கண்டுபிடிக்கும் நோக்குடன் அவன் பார்க்க அவன் பார்வையில் அவள் தலை தாழ்ந்தாள்.

 

 

மெல்ல அவளை நிமிர்த்தியவன் “என்கிட்ட நீ எதுவும் எதிர்பார்க்கறியா?? என்றான் நேரடியாக.

 

 

அவள் புரியாமல் அவனை பார்த்தாள், எதுவும் இல்லை என்று மூளை சொன்னாலும் அவள் மனம் அவனிடம் எதையோ எதிர்பார்த்து காத்திருந்ததை அவளால் உணரமுடிந்தது.

 

 

அது என்னவென்று அவளால் உணரமுடியாததால் அமைதியாக அவனையே பார்த்தாள். இருகைகளாலும் அவள் முகத்தை தாங்கியவன் “ஐ லவ் யூ குந்தவை… என்றான்.

‘இது தான் அது… இதை தான் நான் எதிர்பார்த்தேன் என்று அவள் மனம் குதியாட்டம் போட்டது. இதயம் வெளியே வந்து விழுந்து விடும் போல் எம்பி குதித்தது.

 

 

அவன் கூறியது கேட்டதும் மனம் முழுக்க மகிழ்ச்சியில் துள்ள அவள் மனதின் எதிர்பார்ப்பை அப்போது தான் அவளும் உணர்ந்தாள்.அவன் கூறிய ஒரு ஒரு வார்த்தையும் ரீங்காரமாய் அவள் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.

 

 

“இது தானே உன்னோட மனசு எதிர்பார்க்குது… நான் சொல்லிட்டேன் இப்போ உனக்கு சந்தோசமா… நமக்குள்ள நடந்த எதுவும் இப்போஎனக்கு ஞாபகமில்லை…நீ… நீ மட்டும் தான் எனக்குள்ள இருக்க…

 

 

“உன்னை பலநாள் திட்டியிருக்கேன், இப்போ தான் புரியுது… நீ எப்பவோ என் மனசுக்குள்ள வந்திட்டன்னு… போனதை பத்தி எனக்கு எந்த விளக்கமும் தேவையில்லை…

 

 

“இந்த நிமிஷம் நிஜம், நான் இப்போ சொன்னது நிஜம்… நான் உன்னை விரும்பறது நிஜம்… நீ எதிர்பார்த்ததை நான் சொல்லிட்டேன்… நீயும் இதையே சொல்லணும்ன்னு நான் எதிர்பார்க்கலை…

 

 

“நீ உன் மனசுவிட்டு என்கிட்ட பேசணும்ன்னு தான் நான் எதிர்பார்க்கறேன்… ப்ளீஸ் குந்தவை என்னை ரொம்ப காக்க வைக்காம உன்னோட மனசை திறந்து பேசு…உனக்கு என்னை பிடிச்சிருக்குன்னு எனக்கு தெரியும்…

 

 

“அதை உன் பார்வையும் என் அக்கறையும் எனக்கு எப்பவோ சொல்லிடுச்சு…அதை உன் வார்த்தை சொல்லணும்ன்னு கூட நான் எதிர்ப்பார்க்கலை… என்னமோ நீ என்கிட்ட வாய்விட்டு மனசுவிட்டு பேசணும்ன்னு நானும் எதிர்பார்க்கறேன்…

 

 

“நாம நெறைய பேசியிருக்கலாம், ஆனா நாம ஆத்மார்த்தமா பேசினது இல்லை… நமக்குள்ள கண்ணுக்கு தெரியாத ஒரு நூலிழை அளவு இடைவெளி இருக்குன்னு தோணுது… உன் மனசு கேட்டது என் மனசுக்கு புரிஞ்ச மாதிரி என்னோட மனசு கேட்கிறதை நீ புரிஞ்சுக்கணும்….

 

 

“அந்த நாளுக்காக நான் காத்திட்டு இருப்பேன் உனக்காக… ஐ லவ் யூ குந்தவை… என்றவனின் குரல் இவ்வளவு மென்மையாய் இருக்குமா என்று வியந்து அவள் அவனை பார்த்தது. “கொஞ்சம் இடைவெளி குறைக்க முயற்சி பண்ணறேன்… என்றவனை விழியகல பார்த்தாள்.

கையில் தாங்கியிருந்த அவள் முகத்தினருகே அவன் முகத்தை கொண்டு வந்தவனின் அதரங்கள் அவள் இதழை பற்றியது. பசி என்பதை மறந்த அந்த இரு ஜீவனும் தங்கள் ஜீவனே அந்த முத்தத்தில் என்பது போல் இருந்தனர்.

 

 

அவனுடைய கைபேசி அடித்து அவர்கள் மோன நிலையை கலைக்க அவளை விட மனமில்லாமல் வெகு நிதானமாக அவன் இதழை பிரித்தான். அதற்குள் அவன் கைபேசி அடித்து ஓய்ந்திருக்க நிம்மதியுடன் மீண்டும் அவள் இதழை தேடி குனிய அவன் கைபேசி அழைப்பை மீண்டும் தொடர்ந்தது.

 

 

ஒரு பெருமூச்சுடன் அதை எடுத்து காதில் வைத்தான். ஏதோ பேசிவிட்டு அவன் திரும்பி வர குந்தவை அதே நிலையிலேயே கட்டிலில் அமர்ந்திருந்தாள். ஒரு சிரிப்புடன் அவளை பார்த்தவன் “எனக்கு பசிக்கலை, உனக்கு… என்று சொல்லி கண்ணடித்தான்.

 

 

வெட்கம் வந்து அவள் முகத்தை செம்மையுற அவசரமாக எழுந்து வெளியில் சென்றாள். வாசலை அடைந்தவள் திரும்பி அவனை பார்த்து “சாப்பிட வாங்க… என்று கூற அவனோ “மறுபடியுமா, நான் ரெடி நீ ரெடியா என்றவன் உதட்டை குமித்து முத்தமிடுவது போல் காட்டி கண்சிமிட்டினான்.

 

 

குந்தவை அனைத்தும் மறந்தவளாய் அவனை பற்றிய சிந்தனை மட்டுமே நெஞ்சு முழுவதும் பரவியிருக்க மனம் லேசாகியிருந்தது. காற்றில் பறப்பது போன்ற உணர்வு தோன்ற பின்னோடே ஆதி வந்தான்.

 

 

“சாப்பிடலாமா… என்று அவன் கேட்க அவள் அவனை திடுக்கிட்டு பார்த்தாள்.

 

 

“சாப்பாடு தான் சாப்பிடலாமான்னு கேட்டேன்… வா… என்றவாறே அவள் கையை பற்றிக் கொண்டு டைனிங் டேபிளுக்கு சென்றான். இருவரும் சாப்பிட்டு முடிக்கவும் ஆதி வேலையிருப்பதாக சொல்லிவிட்டு கிளம்பி சென்றுவிட அவள் மீண்டும் தனித்து விடப்பட்டாள்.

 

 

அப்போது அவளுக்கு அழைப்பு வர ஒரு இறுக்கத்துடன் அதை எடுத்து பேசிவிட்டு வைத்தவளின் முகம் மீண்டும் கவலையை தத்தெடுத்தது. முன்பு போல குழப்பமாக இல்லாமல் இப்போது நிதானமாக யோசிக்க ஆரம்பித்தாள்.

 

 

ஆதியின் நினைவில் மனம் அவன் மேல் கொண்டிருந்த அன்பில் அவன் பேசியிருந்ததில் அவள் மனத்தைரியம் கொண்டாள். அந்த தைரியம் கொடுத்த தெம்பில் அவள் குழப்பத்தை தீர்க்கும் வழியை மனம் யோசிக்க ஆரம்பித்தது…

 

Advertisement